மயில்கழுத்து [சிறுகதை] – 2

முதல்பகுதி [தொடர்ச்சி]

ராமன் வந்து உற்சாகமாக ’கெளம்பலாமா பாலு?’ என்றார். அவர் அடுத்த இருபதுநிமிடப்பிறவி அடைந்துவிட்டார் என்று நினைத்து பாலசுப்ரமணியன் புன்னகை செய்தார். ’அண்ணா பாட்ட கேட்டு மூணு மாசம் ஆறது. ஒருகாலத்திலே அண்ணா கூடவே காரிலே போயி ஒவ்வொருகச்சேரியா ஒக்காந்து கேக்கறது…அவருக்குன்னு ஒரு கூட்டம் இருந்துண்டே இருக்கு. அவரு மதுரை ஸ்கூல்னா. தெக்க ஒரு கூட்டமே இருக்கு அவருக்கு’

அக்ரஹாரத்துக்கு அப்பால்தான் கோயிலின் மைதானம். அங்கே நாதஸ்வரம் கேட்டது. ‘பிள்ளைவாள்’ என்றார் ராமன் பரவசமாக. ‘படுபாவி, அவன் கையிலே இருக்கறது நாகஸ்வரமா வேற எதுவுமா?நாசமா போக..கொல்றானே…மனுஷன மெழுகா ஆக்கிடறானே’ பாலசுப்ரமணியன் மெதுவாக தலையாட்டிக்கொண்டே நடந்தார். ‘தாயோளி, சாகமாட்டானா…’ என்று ராமன் அரற்றினார். ’இந்த பிளேட்டு தேயறமாதிரி அண்ணா கேட்டிருப்பார்’ என்றார் சாமிநாதன் ‘பாலு இதிலே மூணாம் சரணத்திலே மெதுவா எறங்குவான் பாருங்க…அம்பாள்முன்னாடி நம்ம தலைய தாழ்த்துவோமே அதே மாதிரி…தாயளி பிரம்மராட்சதன். என்ன சொல்றீங்க?’ அவர் எப்போது ஒருமையில் கூப்பிடுவார் என்று பாலசுப்ரமணியன் யோசித்தார். அவருக்குள் ஒரு கணக்கு இருக்கும் போல.

அக்ரஹாரம் காலியாகக் கிடந்தது. வீட்டுத்திண்ணைகளில் வைக்கப்பட்டிருந்த அகல்விளக்குகளும் பிறைவிளக்குகளும் வரிசையாக ஒளிவிட்டு அக்ரஹாரத்தை மெல்லிய சிவப்பு வண்ணத்தால்இரவின் கரிய திரையில் தீற்றியிருந்தன. ஒருபூனை மட்டும் திண்ணையில் அமர்ந்து மய்யாவ் என்று சொல்லிக்கொண்டிருந்தது. தெருவில் வாழைமட்டைகள் சிதறிக்கிடந்தன. ஒரு திண்ணையில் வயோதிகர் ஒருவர் ‘ஆரு?’ என்றார்.

அக்ரஹாரத்தைக் கடந்து கோயில் முகப்பை அடைந்ததும் அத்தனை கூட்டத்தை கண்டு பாலசுப்ரமணியன் ஆச்சரியம் கொண்டார். எப்படியும் இரண்டாயிரம் பேர் இருக்கும். அவர்கள் அனைவரும் வெறும் மண்ணில் அமர்ந்து ஒலிப்பெருக்கியில் ஒலித்த நாதஸ்வர இசையைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். பிரமை பிடித்த முகங்கள் இருளில் கொத்துக்கொத்தாகத் தூரத்து கத்தரிக்காய்விளக்குகளின் ஒளியில் தெரிந்தன.

சாமிநாதனைப்பார்த்ததும் நாயக்கரின் ஆட்கள் ஓடிவந்தார்கள். ஒரு குடுமிக்கார ஆசாமி ‘நாக்காலி போட்டிருக்குதுங்கய்யா’ என்றார். ‘நாக்காலி வேணாமே..இப்டியே தரையிலே ஒக்காந்துக்கலாமே’ என்றார் ராமன். ‘அவருக்கு தேவைப்படும்ணா …நீங்க ஒண்ணு’ என்றார் சாமிநாதன் . பாலசுப்ரமணியன் புன்னகை புரிந்தார். ‘வேட்டி அழுக்காகாமெ சங்கீதம் கேக்கறதனாலத்தான் நீங்க ராமநாதன்லே நிக்கிறீங்க’ என்றுசொல்லி ராமன் சிரித்தபின் ‘சரி…உங்க இஷ்டம்.சொகுசாத்தான் கேப்போமே’ என்றார்

மரநாற்காலிகளை பக்கவாட்டில் ஓரமாக போட்டார்கள். பாலசுப்ரமணியன் அமர்ந்துகொண்டார். ராமன் ‘கச்சேரிக்கு முன்னாடி ஒரு பரபரப்பு வருதே அது சாதாரணம் கெடையாது. குடிக்கிறவாளுக்கு சாராய வாசனை வந்தா வருமே அத மாதிரி…ஏன் பாலு’ என்றார். ‘நேக்கு அப்டி தோண்றதில்லை’ ‘எதைப்பத்தியாவது தோணியிருக்கா? அட்லீஸ்ட் மொத ராத்திரிக்காவது…’ பாலசுப்ரமணியன் சிரித்தார்.

எதிர்ப்பக்கமிருந்து சுப்பு அய்யர் அவரது குழுவினருடன் வேகமாக வருவது தெரிந்தது. ‘அண்ணாவுக்கு எறங்கிடுத்து. கிரீன் ரூமிலே ஏத்திக்கறதுக்கு பாய்ஞ்சு வர்ரார்’ என்றார் சாமிநாதன் . ‘சும்மார்ரா…இந்தப்பக்கம்லாம் நாயக்கர் தேவர்னு பிராமணபக்தி உள்ள ஆட்கள். தப்பா நெனைச்சுண்டுரப்போறா’ என்றார் ராமன்.

வாத்தியக்காரர்கள் கூட்டமாக பின்பக்கம் வழியாக மேடைக்கு ஏறினார்கள். மேடையில் இருவர் மைக்குகளை பொருத்தி பூபூ என ஊதிப்பார்த்தார்கள். இருளில் இருந்து இருவர் நாற்காலியை நோக்கி வந்தார்கள். நாயக்கரும் சந்திராவும். பாலசுப்ரமணியன் திரும்பி ராமனைப் பார்த்தார். அவர் அபப்டியே உறைந்தது போலிருந்தார்.

சந்திரா புடவை சரசரக்க வந்து பாலசுப்ரமணியன் அருகே அமர்ந்தாள். ‘என்ன ஒக்காந்தாச்சா?’ என்றபடி அமர்ந்துகொண்டாள். அவள் இன்னொரு புடவை மாற்றியிருந்தாள். அதுவும் நீலம்தான். ஆகாய நீலம். அதன் சரிகைப்பகுதியின் வேலைப்பாடு பிரமிப்பூட்டும்படி இருந்தது. அவள் அதை சுருட்டிக்கொண்டு அமர்வது மயில் தோகையைக் சுழற்றி அடங்குவதுபோல தோன்றியது. புடவையின் நுனியா அல்லது அதன் காற்றா தன்னை தொட்டது என்று பாலசுப்ரமணியன் வியந்துகொண்டார். இதமான தாழம்பூ மணம். முகப்பவுடரின் மணம். இன்னும் என்னென்னவோ மணம்.

சந்திரா கழுத்தை திருப்பியபோது பாலசுப்ரமணியன் தன் நெஞ்சில் ஒரு கன்றுக்குட்டி உதையை உணர்ந்தார். அத்தனை நளினமாக ஒரு பெண் கழுத்தை திருப்பமுடியுமா என்ன? ஓர் அசைவு ஒரு மாபெரும் கலைநிகழ்வாக ஆகமுடியுமா என்ன? எப்படி அதை வார்த்தையாக்குவது? மயில்திரும்புவதுபோல. மயில் கழுத்தை திருப்புவதை மட்டும் வார்த்தையாக்கிவிட முடியுமா? எத்தனை பொருளற்ற வார்த்தைகள். ஒரு சொல்லமுடியாமையை இன்னொரு சொல்லமுடியாமையால் ஈடுகட்டுகிறோம்.

மேடையில் வாத்தியக்கலைஞர்கள் அமர்ந்துவிட்டார்கள். மிருதங்கமும் வயலினும் மெல்ல முனகியும் சன்னமாக அதிர்ந்தும் கச்சேரிக்கு தயாராகிக்கொண்டிருந்தன. பெரிய சமுக்காளத்தை கொண்டு வந்து மடித்துப் போட்டு அதன்மேல் ஒரு பட்டுத்துண்டை ஒரு பையன் விரித்தான். ஒரு பெரிய வெள்ளி கூஜா கொண்டுவந்து வைக்கப்பட்டது. அதற்குள் தேன்மணமுள்ள கான்யாக் பிராந்தியில் கொஞ்சமாக சோடா சேர்த்து வைத்திருப்பார்கள் என்று ராமன் சொல்லியிருக்கிறார். பிரான்ஸில் இருந்து மாதம்தோறும் கொண்டுவந்து கொடுப்பதற்கு அவருக்கு ரசிகர்கள் உண்டு.

சந்திரா திரும்பி பாலசுப்ரமணியன் கையை தொட்டு ‘சாப்பிட்டுட்டேளா?’ என்றார். அவளுடைய தொடுகை பாலசுப்ரமணியன் உடலை அதிரச்செய்தது. அரைக்கணம் அவர் ராமனை பார்த்து திரும்பி ‘ஆச்சு’ என்றார். தொட்ட கையை எடுக்காமலேயே ‘ராத்திருக்கு அடை செஞ்சிருக்கா…கச்சேரி முடிஞ்சதுக்கு பிறகு சாப்பிடலாம்னு…நான் ராத்திரி சாப்பிடறதில்லை’ என்றாள். ‘நேக்கும் ராத்திரி அடை புடிக்காது’ ‘ஹெவி’ என்று சந்திரா சொன்னாள். அவள் தன் கையின் தொடுகையை எடுக்கவேண்டும் என பாலசுப்ரமணியன் தவித்தார். மெல்ல தன் கையை விலக்கிக்கொள்ள முயன்றார். ஆனால் கையை அசைக்கவே முடியவில்லை.

மேடையில் சுப்பு அய்யர் வந்து அமர்ந்தார். அவர் வரும்போதே கூட்டத்தில் பெரும் கைத்தட்டல் ஒலி எழுந்தது. அமர்ந்ததும் அது இன்னும் மேலே சென்றது. அவர் இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கைத்தட்டல் ஓய்வதற்காக காத்து நின்றார். பின் புன்முறுவலுடன் கூஜாவை திறந்து வெள்ளிடம்ளரில் திரவத்தை ஊற்றினார். சட்டென்று முன்வரிசையில் இருந்து பலமான கைத்தட்டல்கள் எழுந்தன. டம்ளரை கூட்டத்தை நோக்கி தூக்கி ’சியர்ஸ்’ மாதிரி உதடசைத்துவிட்டு இருவாய் குடித்தார். அதை ஓரமாக வைத்துவிட்டு வயலின்காரரைப் பார்த்தார். சட்டென்று ஒரு பார்வை வந்து சந்திராவை நீவிசென்றது என பாலசுப்ரமணியன் உணர்ந்தார்

’ம்ம்ம்’ என மெல்லிய குரலில் முனகினார். விழாக்கச்சேரிகளில் அவருக்கு சம்பிரதாயம் என ஏதும் கிடையாது. எந்த வரிசையுயிலும் எப்படியும் பாடுவார். என்ன பாடுவார் என்பது அவருக்கே அங்கே அமரும்வரை தெரியாது. அந்த திகிலில் வயலின்காரரும் மிருதங்கக்காரரும் அமர்ந்திருக்க தம்புராபோடும் ஆசாமி உல்லாசமாக கூட்டத்தைப்பார்த்து பல்லைக்காட்டி சிரித்துக்கொண்டிருந்தார். கச்சேரி என்பது அவருக்கு ஒரு அரசன் தன் பிரஜைகளிடம் ஆடும் விளையாட்டு போல. ‘நாநாநா’ என்றார் சுப்பு அய்யர் மீண்டும்.

சாமிநாதன் ’அண்ணா இப்ப அஷ்டபதியிலே ஆரம்பிக்க போறார்..’ என்றார். ’டேய் இது முருகன் கோயில்டா…’ என்றார் ராமன். ’அவருதான் கிறுக்கனாச்சே’ என்றார் சாமிநாதன். ‘எப்டி தெரியும்?’ என்றார் பாலசுப்ரமணியன். அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்துதான் பாடுவார் என்றுஅவர் நினைத்திருந்தார். ‘தெரியும்…அவ்ளவுதான்…ரொம்ப நாளா கேக்கிறோமே..கொஞ்சம் அவர்கூட ஓடமாட்டோமா?’ என்று சொல்லி சாமிநாதன் புன்னகைசெய்தார்


‘யா ரமிதா வனமாலினா சகி யா ரமிதா…’
என்று சுப்பு அய்யர் ஆரம்பித்தார். கூட்டமெங்கும் ஒரு சிறிய ஆச்சரிய அலை சென்றது. பிரிவாற்றாமையின் தாபமும், கொந்தளிப்பும், தவிப்பும், அவ்வப்போது கசப்பும், அனைத்துமே ஒரு பெரும்பரவசமாக ஆகும் உச்சமுமாக அந்தப்பாடல் கூட்டத்துக்கு மேல் விரிந்திருந்த இருட்டுக்குள் பரவி மெல்லிய கண்காணா மழையாக பெய்தது.

சம்பந்தமே இல்லாமல் சட்டென்று ’கிருஷ்ணா நீ பேகனே பாரோ’. உடனே ஏன் என்றே தெரியாமல் ’தூண்டில்புழுவினைப்போல் வெளியே சுடர்விளக்கினைப்போல்’ அப்படியே ’நகுமோ மோ கனலே’. என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறதென பாட்டின் போதையிலிருந்து வெளியே வந்தபோது ஒரு நிமிடம் பாலசுப்ரமணியன் உணர்ந்தார். வயலின் முனகிக்கொண்டிருந்தது. மிருதங்கத்தை சுத்தியால் தட்டிக்கொண்டிருந்தார். தாபம்தான். அத்தனை பாடல்களும் தாபம். வரமாட்டாயா, கைவிட்டுவிட்டாயா, எங்கிருக்கிறாய், ஏன் என்னை நினைப்பதில்லை… ஆம் என தண்ணென்று ஒலித்தது மிருதங்கம்

பாலசுப்ரமணியன் படபடப்புடன் எதிர்பார்த்தபாட்டு அடுத்து வந்தது ’அலர்ஸர பரிதாபம்’ . அம்மா மடியில் அமர்ந்து இளமையில் கேட்ட சுவாதிதிருநாள் பாட்டு. பழமையான சுருட்டி. ஓடைநீரில் இழையும் நீர்ப்பாம்பு. கண்ணாடியில் வழுக்கும் மண்புழு. மிதந்து மேற்கில் மறையும் தனிப்பறவை. தனிமை இத்தனை மகத்தானதா? குரூரமாக கைவிடப்படுதல் இத்தனை தித்திப்பானதா? முற்றாக தோற்கடிக்கப்படுவதில் மாபெரும் வெற்றியொன்றிருக்கிறதா என்ன? சட்டென்று எரிச்சலும் நிம்மதியின்மையும் எழ பாலசுப்ரமணியன் தன் கையை பின்னுக்கிழுத்துக்கொண்டார். இரவின் பிரம்மாண்டமான கரிய கூரையை ஏறிட்டுப்பார்த்தார். முடிவில்லாத ஒளித்துளைகள். மின்னும் அழியா விழிகள். ஏன் இங்கு இப்படி இருக்கிறேன்? எந்த மகத்தான புரியாமைகளால் விளையாடப்படுகிறேன்?

விசும்பல் ஒலி கேட்டு பாலசுப்ரமணியன் திரும்பிப் பார்த்தார். ராமன் மார்பில் இரு கரங்களையும் கூப்பி கண்களிலிருந்து கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார். இறகுதிர்த்து விண்ணில் நீந்தியது பறவை. சிறகுகள் ஒவ்வொன்றாக உதிர பறவை மட்டும் மேலே சென்றது. பறவையை உதிர்த்துவிட்டு பறத்தல் மட்டும் மேலே சென்றது. வானமென விரிந்த வெறுமையில் இருத்தலென எஞ்சிய ஒரே ஒரு ஒலிக்கோடு நெளிந்து நெளிந்து தன்னைத்தானே கண்டு வியந்தது. இங்கே இங்கே என்றது. என்றும் என்றது. இந்தக்கணம் மட்டுமே என அங்கே நின்றது.

சட்டென்று நாற்காலி அசையக்கேட்டு பாலசுப்ரமணியன் அறுபட்டு திரும்பிப்பார்த்தார். கைப்பிடிமீதாகச் சரிந்து விழுந்துக்கிடந்தார் ராமன். சாமிநாதன் ‘சத்தம்போடாதீங்கோ’ என்று பாலசுப்ரமணியனிடம் கிசுகிசுப்பாகச் சொல்லிவிட்டு ’…அண்ணா அண்ணா’ என்றார். ராமன் மூர்ச்சையாகியிருந்தார். ‘டேய் தூக்குடா’ என்றபோது பின்னால் அமர்ந்திருந்த நாயக்கரின் வேலைக்காரன் ராமனை அப்படியே தூக்கி விட்டான். ‘யாரும் கவனிக்காமே அப்டியே ஸ்டேஜ்பின்னடி இருட்டுக்குள்ள கொண்டு போயி நேரா பங்களாவுக்கு கொண்டு போயிரு’ அவன் அவரை குழந்தையை போல தூக்கிக் கொண்டு சென்றான்

தரையில் ராமனின் மூக்குக் கண்ணாடி விழுந்து கிடந்ததை பாலசுப்ரமணியன் எடுத்துக்கொண்டார். அவரும் பின்னால் சென்றார். திரும்பி பார்க்கையில் சந்திரா நாயக்கரிடம் ஏதோ சாதாரணமாக பேசுவது கேட்டது. இருட்டுக்குள் விரைந்து ஓடவேண்டியிருந்தது. முன்னால் சென்றவன் அத்தனை வேகமாக அவரைக்கொண்டு சென்று திண்ணையில் படுக்கவைத்தான். ‘என்னாச்சு?’ என்றார் பாலசுப்ரமணியன் . ஒண்ணுமில்லே…சங்கீதம் கேக்கறச்ச அபூர்வமா இப்டி ஆயிடுவர்…’ என்றார் சாமிநாதன்

முகத்தில் நீர் தெளிக்கப்பட்டு விசிறப்பட்டதும் ராமன் விழித்துக்கொண்டார். அர்த்தமற்ற வெறித்த பார்வையுடன் கொஞ்ச நேரம் அப்படியே படுத்திருந்தார். ’காபி சாப்பிடுங்கோண்ணா’ என்றார் சாமிநாதன். ‘வேணாண்டா’ ‘சாப்பிடுங்கோன்னுல்ல சொல்றேன்?’ என்ற அதட்டலுக்குப் பணிந்து இருகைகளாலும் வாங்கி குடித்தார். அவருக்கு அப்போது அது மிகமிக வேண்டியிருந்தது என்று தெரிந்தது.

ராமன் எழுந்து அமர்ந்தார். ’சட்டைய கழட்டிடறேனே.. ரொம்ப நனைஞ்சுடுத்து…’ என்றார் ‘டேய் நான் பயமுறுத்திட்டேனாடா?’ ‘அதெல்லாம் இல்ல…யாரும் பாக்கலை’ ‘அண்ணா கவனிச்சிருப்பர். அவரு கண்ணு அப்டி’ என்றார் ராமன். நாயக்கர் வந்து ‘சரியாயிட்டாரா? என்னாச்சு?’ என்றார். ’ஒண்ணுமில்லே… ஒரு களைப்பு…எந்திரிச்சிட்டார்’ என்றார் சாமிநாதன். பின்பு ‘அண்ணா நான் நாயக்கர்வாளோட போறேன்… பேசிண்டிருங்கோ’ என்று சொல்லி ‘வாங்கோ நாயக்கர்வாள்…கச்சேரி எப்டி. தெய்வகானம் என்ன?’ என்று இருளுக்குள் சென்றார்

‘என்ன மாதிரி மனுஷன்…’ என்றார் ராமன் ‘இப்ப நான் ஆசைப்படறது உங்க கிட்ட தனியா பேசத்தான்னு சூட்சுமமா தெரிஞ்சுகிட்டான் பாத்தேளா’ என்றார். பாலசுப்ரமணியன் புன்னகை செய்தார். ‘அண்ணா எனக்கு விடைய சொல்லிட்டார்…எனக்கு வழிகாட்டிட்டார்…அவரு கந்தர்வன். வானத்திலே இருந்து அவர் வழியா தெய்வஞானம் எறங்கி வருது…அவரோட சீக்கு புடிச்ச ஒடம்பும் மனசும் அதைத்தாங்கலே…அதான் குடிக்கறார்…’. பாலசுப்ரமணியன் மேலே கேட்கும் மனநிலையில் கன்னத்தில் கைவைத்து காத்திருந்தார்.

‘நீங்க கேட்டேளே, நான் தோத்துட்டேனான்னு. தோத்து கேவலப்பட்டு சீரழிஞ்சுட்டேன்.மண்ணுல கால வைக்கவே முடியாதவனா ஆயிட்டேன். எங்கூரிலெ பங்காளி தோட்டத்து மரத்த கொத்தி நவச்சாரத்த புதைச்சு வைப்பாங்க . வெஷம் குருதியிலே ஏறி எலையும் தளிரும் வேரும் விழுதும் எல்லாம் வெஷமாகி மரம் அப்டியே காய ஆரம்பிக்கும். காஞ்சுகாஞ்சு உலந்து தீப்பட்டதுமாதிரி பொசுங்கி நிக்கும்…அந்தமாதிரி எனக்குள்ள ஏறிட்டுது வெஷம்… மூணு வருஷமா எரிஞ்சு கரிஞ்சுட்டிருக்கேன் பாலு…’

‘ம்’ என்றார் பாலசுப்ரமணியன். ‘இப்ப அண்ணா சொல்லிட்டார். என்ன சொன்னார்னு என்னால சொல்ல முடியலை. ஆனா எனக்குள்ள இந்த வெஷமில்லேன்னா நான் யாரு, வெறும் சோத்துப்பிண்டமில்ல? இந்த வெஷம் ஏறி எரியறதனாலேதானே என் வெரல்நுனியெல்லாம் சங்கீதமா அதிருது… என் மனசிலே இந்த வேதனையெல்லாம் சங்கீதம்தானே? ஒளறிண்டிருக்கேனா? சொல்ல முடியல பாலு. நான் இதுநாள் வரை சொல்லமுடியலேன்னுதான் சொல்லிண்டே இருக்கேன். அதான் என்னோட எழுத்து.முடியல பாலு…நெஞ்சு முட்டுது. வாங்கடீ ஒலகத்திலே உள்ள அத்தன பேரும் வாங்கடீ. உங்க வெளையாட்டயும் வெஷத்தையும் முழுக்க எம்மேலே கொட்டுங்கடீன்னு எந்திரிச்சு நின்னு கத்தணும்போல இருக்கு. என்னை குளுந்து போக விடாதீங்க. என்னை பற்றி எரிய விடுங்க ’ சட்டென்று முஷ்டியால் தன் மார்பை அறைந்தார் ராமன். ‘எரியறது…எரியறது’ என்றார்.

பின்பு தலையை ஆட்டிக்கொண்டு தொடர்ந்தார் ‘நான் எரிஞ்சு எரிஞ்சு கரிக்கட்டயா போறதுக்குன்னு பொறந்தவனாக்கும்…முடியல பாலு…என்னால முடியல…இன்னிக்கே செத்துப்போய்டுவேன் போல இருக்கு…என்பக்கத்திலே இருந்துக்கோ…நீ என் தம்பி மாதிரி…நான் விட்டுட்டு வந்த எல்லாமே உங்கிட்ட இருக்கு. நான் போகாத எடமெல்லாம் உங்கிட்ட இருக்கு…நீ வேற ஆளு… செதுக்கி எடுத்தது மாதிரி இருக்கே…உன்னைப்பாக்கறச்ச நெறைவா இருக்க்கு. நான் அன்னன்னைக்கு வாழறவன். அப்பப்ப செத்து பொழைக்கிறவன் . என்னை கொல்றதுக்குன்னே சங்கீதம் இருக்கு…முடியலை பாலு…பத்து பிறவிக்கு வேண்டியத இந்த பித்த உடம்ப வச்சுண்டு அள்ளியாறது…முடியலை ‘

சொற்கள் காலியானவர் மாதிரி ராமன் அமைதியானார். தூரத்தில் அலர்ஸார பரிதாபம் என்று வயலின் கொஞ்ச ஆரம்பித்தது. ஒலி காற்றில் பறக்கும் சரிகை போல அலைபாய்ந்தது. ‘மயில்கழுத்து நெறம் என்னை ஏன் இழுக்குதுன்னு கேட்டியே. அதிலே வெஷமிருக்கு பாலு. ரகசியமா மின்னிண்டிருக்கற மயில்கழுத்துநெறம் மாதிரி ஆலகாலத்துக்கு பொருத்தமான நெறமென்ன சொல்லு. என்னா ஒரு நெறம்! எங்கியோ காட்டுக்குள்ள ஒரு ராஜநாகம் மயில்கழுத்து நெறத்திலே இருக்கு. கண்டிப்பா இருக்கு. நான் அதை சொப்பனத்திலே பாத்திருக்கேன்.நிலா வெளிச்சத்திலே நீலமா அது வழியறது. அலர்ஸர பரிதாபம்னு சுருட்டியிலே நெளியறது…இப்ப அங்க அந்த மலைக்கு மேலே குளிரிலே தனிமையிலே நெளிஞ்சுண்டிருக்கு…நான் பாக்கறேன் அதை. ஒளறிண்டிருக்கேன் மறுபடியும்…ஆனா எப்டி சொல்றது சொல்லு. எனக்கு ஞானமும் மோட்சமும் ஒண்ணும் வேணாம். அழகு போரும். அழகோட வெஷம் என்னை எரிய வச்சாலும் சரி.. எனக்கு இன்னமும் அழகு வேணும். கால்வெரல் நுனி முதல் தலைமயிர் எழை வரை நெறைஞ்சிருக்கிற ஜீவனோட பேரழகு இருக்கே அது வேணும்… அழகுன்னா என்னதுன்னு இப்ப அண்ணா பாடிக்காட்டிட்டார். அழகு அவகிட்டயா இருக்கு? என் தாபத்திலே இருக்கு பாலு. எனக்குள்ள தீயா எரியற இந்த தாபத்தில இருந்துதான் நான் பாக்கற எல்லா அழகும் பொறந்து வருது…அந்தா தாபத்தையே புழிஞ்சு புழிஞ்சு வைக்கறாரே மனுஷன்…அந்த தாபம் என்ன மனுஷ தாபமா? இன்னது வேணுங்கிறதுக்கான தாபமா? கெடையாது. அது தாபம், அவ்ளவுதான். பிரபஞ்சம் முழுக்க நிறைஞ்சிருக்கிற பிரம்ம தாபம்… அதுக்கு வேற ஒரு காரணமும் வேணாம்…பாடிக்காட்டிட்டாரே மனுஷன்…’

’நான் ஜாஸ்தி பேசறேன்னுதானே நெனைக்கறே? நேக்கு காவேரி ஓடினா போராதுடா…கரைய ஒடைக்கணும். ஊருக்குள்ள பூந்து வீடு தெரு கோயில் கொளமெல்லாம் ஒண்ணாயிடணும்…குப்பையும் செத்தையும் கோயில்மாலையும் எல்லாம் சேர்ந்து அதிலே மெதந்து சுழிச்சாகணும்… அதுக்குத்தானே நான் பொறந்திருக்கேன். இந்த பிறப்ப குடுத்தாச்சு… இந்த வேதன இன்னும் எனக்கு வேணும் பாலு. இன்னமும் வெஷம் வேணும். கடிச்சுண்டு போற பாம்பெல்லாம் என் குருதியிலே ஒரு சொட்டத்தான் கொண்டு போயிருக்கு. அதுலே ஒவ்வொரு துளியும் சங்கீதம்னா? சுத்த சங்கீதம். காதாலே கேக்கிற சங்கீதம் இல்லே… இப்ப இந்தா அண்ணா இன்னமும் அதேதான் பாடிண்டிருக்கார். அலர்ஸர பரிதாபம்…என்ன மாதிரி நெளிஞ்சு வழியறது! பாலு இந்த தாபத்த வச்சுண்டு சுவாதி எப்டி ராஜாவா இருந்தார்? எங்க ராஜாவா இருந்தாங்கிறே? சரிதான் உருகி உருகி முப்பத்திமூணு வயசிலே பொருங்கிச் செத்தான்…நான் இருந்துண்டிருக்கேன்… ஆனா இருக்கிற வரைக்கும் எரிஞ்சுண்டுதான் இருப்பேன்…அண்ணா பாடுறாரே, இப்ப அவரு மட்டுமே கேக்கற ஒரு சங்கீதம் அங்க மேடைக்குமேலே நிறைஞ்சிருக்கு பாலு. அதான் என் ரத்ததிலே ஓடுது…அதான் என்னை எரிய வைச்சிட்டிருக்கு…போரும்…இதான் நம்ம பிறவி…இது போரும்’

கண்களை மூடிப் படுத்திருக்கும் ராமன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார் பாலசுப்ரமணியன். முகம் முழுக்க ஒரு பரவசம் நிறைந்திருப்பதாகப் பட்டது. பின்பு மெல்ல முகத்தசைகள் விடுபட்டு தளர அமைதி நிறைந்தது. பெருமூச்சுடன் நிமிர்ந்து ‘ஏன் பாலு போறப்ப நாம திருச்செந்தூர் வழியா போலாமே’ என்றார். ‘நாகர்கோயில் வந்துட்டா போறேள்? இப்டியே சுப்பு அய்யர் கூட போறதா சொன்னேளே’ ’இல்லே…திருச்செந்தூர் போகணும்னு தோணறது. ஒண்ணுமில்லே, திருச்செந்தூரிலே ஒரு மயில்கழுத்து பட்டு வாங்கி சாத்தணும்… நூத்தம்பது ரூபாயிலே கெடைக்கும்ல?’ ‘அது பாத்துக்கலாம்…யாருக்கு?’ ‘வள்ளிக்குதான்…நீலம்னா அது காட்டோட நெறம்ல? தெய்வானைக்குன்னா மாம்பழ நெறம்னு சொல்லுவாங்க’ ‘பண்ணிடலாம்’ என்றார் பாலசுப்ரமணியன்.

இருவரும் சற்று நேரம் அபப்டியே அமர்ந்து தொலைவில் சுப்பு அய்யரின் ஆலாபனையை கேட்டுக்கொண்டிருந்தார்கள். முற்றத்தில் விழுந்து கிடந்த வேப்பமர இலைகளின் நிழல்விளையாடலும் தூரத்து கட்டிடங்களின் மங்கிய சுவர்வெண்மையும் அப்பால் அக்ரஹாரத்தின் விளக்குகளின் செவ்விதழ்களும் சுருட்டியாக இருந்தன. காற்று சுருட்டியை மெல்ல அசைத்து நடமிடச்செய்தது. சுப்பு அய்யர் ஓய்ந்து வயலின் மட்டும் ரீங்கரித்து அடங்கி சிறு கனைப்புகளும் கலைசல் ஒலிகளும் அரங்கினரின் கூட்டொலியின் முழக்கமும் எழுந்தபோது பாலசுப்ரமணியன் அவரது குரலைப்பற்றிய பிரக்ஞையை அடைந்தார். அது இசைவாணனின் குரலே அல்ல. குழறும் உச்சரிப்பு. வரிகளை ஆங்காங்கே விட்டுவிட்டு பாடும்முறை. ஆலாபனையேகூட கோலத்துக்கு புள்ளி வைப்பதுபோல அங்கு தொட்டு இங்கு ஊன்றி தாவிச்செல்வதுதான். ஆனால் கோலத்தை மனது போட்டுக்கொள்கிறது. நட்சத்திரங்கள் கரடியாக, பாயும் குதிரைகளாக ஆவது போலவா?

ராமன் மெல்லிய குரட்டை ஒலியுடன் தூங்கிக்கொண்டிருந்தார். திண்ணை அகலமில்லை, விழுந்துவிடுவாரா என பாலசுப்ரமணியன் நினைத்தார். ஆனால் சிறிய திண்ணைகளில் சமன்செய்து தூங்குவது தஞ்சாவூரில் வழக்கம்தான். சுப்பு அய்யர் அடுத்த பாடலுக்குச் சென்றார். ’ப்ரோவ பாரமா?’ பாலசுப்ரமணியன் எழுந்து கழிப்பறைக்குச் சென்றார். பெரிய வீட்டின் கடைசிக்கோடியில் தனியாக ஒரு பாதை இணைத்து அதன் மறு எல்லையில் கழிப்பறை கட்டப்பட்டிருந்தது. விளக்கு குமிழ் எங்கே என்று தெரியவில்லை. தேடிப்பார்த்தபின் இருட்டிலேயே உள்ளே சென்றார்.

கால்கழுவிக்கொண்டிருக்கும்போது ‘அலர்ஸர பரிதாபம்’ என்று அவர் முணுமுணுத்ததை அவர் கேட்டார். சரேலென கடற்பாறையை அறைந்து, தழுவி, பூச்சொரிந்து, மூடி, வழியும் அலை போல சுப்பு அய்யர் பாடிய அந்த ஒட்டுமொத்த ஆலாபனையையும் அவர் கேட்டார். மனம்பொங்கி விசும்பிவிட்டார். கண்களில் இருந்து கண்ணீர் வழிய அதன்மேல் குளிர்ந்த நீரை அள்ளி அள்ளி விட்டு கழுவினார். தொண்டையை இறுக்கியதை, நெஞ்சை அடைத்ததை அழுத்தி உள்ளே செலுத்தி அதன் மேல் மூச்சு விட்டு மூச்சு விட்டு ஆற்றி அடங்கியபின் கைக்குட்டையால் முகத்தை அழுத்தி துடைத்து பெருமூச்சுடன் முன்வராந்தா நோக்கி நடந்தார்.

=====================================================

1 Wine comes in at the mouth
And love comes in at the eye;
That’s all we shall know for truth
Before we grow old and die.
I lift the glass to my mouth,
I look at, and I sigh.’

முந்தைய கட்டுரைமயில்கழுத்து [சிறுகதை]-1
அடுத்த கட்டுரைஉலோகம்- பாதி விலையில்! – பத்ரி சேஷாத்ரி