மத்துறு தயிர் [சிறுகதை] – 1

பேராசிரியரை அழைத்துவரக் குமார் கிளம்பியபோது என்னையும் அழைத்தார். ‘வாங்க, சும்மா ஒருநடை போய்ட்டு வந்திருவோம்… இங்க இருந்தென்ன செய்ய போறிய? ’. நான், ’அருணா வர்ரதா சொல்லியிருக்கா. வர்ரப்ப இங்க இருக்கலாமேன்னு…’ என இழுத்தேன். ‘ஆமா நீங்க இருந்து ஆரத்தி எடுக்கணும்லா…சும்மா வாங்க’ என்று அவரே காரின் கதவைத் திறந்து வைத்தார். நான் ஏறிக்கொண்டதும் ‘ பெண்டாட்டி மேலே பக்தி வேணும். அதுக்காக கூடிப்போயிரப்பிடாது…’ என்றார்

காரைக்கிளப்பியபடி ‘எதுக்கு சொல்றேன்னா இந்தமாதிரி ஒரு நல்ல நிகழ்ச்சிக்கு வாறப்ப பேராசிரியர் ஒருமாதிரி நல்ல மூடிலே இருப்பாரு…அப்ப பேசுத பேச்சு ரொம்ப நல்லா இருக்கும். நீங்க அதைக் கேக்கணும்’ என்றார் குமார். ‘அந்தம்மா கூடவே வருமே அல்லேலூயான்னுட்டு…’ குமார், ‘இல்ல வரேல்ல. அவங்கள ஸ்டீபன் சார் வண்டியிலே வரச்சொல்லியாச்சு. இந்த வண்டி அவங்களுக்கு தலை சுத்துதுண்ணு அவங்களே சொன்னாங்க. செரி, அம்பாசிடர்லே வாங்க அது தலைசுத்தாதுல்லான்னு நானும் சொன்னேன்…நீங்க பதமாட்டுப் பேச்சைக் கம்பராமாயணம் பக்கம் கொண்டு வந்திருங்க. ஏசு,பைபிள்னு ஒரு வார்த்தை வாயிலே வந்திரப்பிடாது. ஓடை வழிமாறி ஒழுகிரும்..’ குமார் நிதானமாக வண்டியை ஒட்டினார்

‘இப்ப மூணு மணிதானே ஆவுது. நிகழ்ச்சி ஆறுக்குல்ல?’ என்றேன்.’இப்பமே லேட்டுன்னாக்கும் எனக்க கணக்கு. இப்ப பேராசிரியர் காலக்கணக்குகெல்லாம் அந்தால போயாச்சு. காலையா சாயங்காலமா ஒண்ணும் நெனைப்பில்ல. அதுக்கு ஏத்தாமாதிரி வல்லவனும் கேறி வந்து இருந்து பேச ஆரம்பிப்பான். எளவு, யாரு என்ன பேசினாலும் சின்னப்புள்ள மாதிரி உக்காந்து கேட்டுட்டு இருப்பாரு. நாம போயி குளிக்க வச்சு, ஜிப்பா வேட்டி போடவச்சு கூட்டிட்டு வரணும்…’ நான் சிரித்து ‘குளிப்பாட்டணுமா?’ என்றேன். ‘போறபோக்கப்பாத்தா அதும் தேவைப்படும்ணாக்கும் நினைக்கேன்’

வண்டி புன்னைவனம் முக்கு திரும்பும்போது ‘சஜின்கிட்ட ஒரு காரியம் சொல்லியிருந்தேன். ’லே, உனக்கு காரியங்கள் பாத்து நடத்துத துப்புண்டா இல்லியாண்ணு இதவச்சுத்தான் பாப்பேன்’னு சொன்னேன்… ‘ என்றார் குமார். நான் ‘அவருக்கு இண்ணைக்கு காலேஜ் உண்டுல்ல?’ என்றேன். ‘உண்டு. நேத்து ராத்திரி தான் இந்தக் காரியம் ஞாபகம் வந்தது. இது நாம சமாளிக்கக்கூடிய காரியமில்லை. லே கெளம்பிவாலேன்னு சொன்னேன். காலம்பற எட்டரைக்கே வந்து நிக்கான். செரின்னு அக்காவீடு வரை ஒரு சோலியா அனுப்பிட்டு இப்பம் ஹாலிலே பிடிச்சு நிறுத்தியிருக்கேன்… தமிழ்வாத்தியாராட்டு இருந்தாலும் நல்ல பயதான். பாப்பம்’

நினைத்ததுபோலவேதான், திண்னையில் பேராசிரியார் வேட்டி மட்டும் கட்டி, பல்லியின் அடிப்பக்கம் போன்ற வெளிறிச்சுருங்கிய சின்ன உடலுடன் உட்கார்ந்து ’கெக் கெக்’ என்று சிரித்துக்கொண்டிருந்தார். எதிரே ஒருவன் சட்டை போடாத மயிரடர்ந்த கரிய உடலுடன் மரத்தூணை தழுவிக்கொண்டு உட்கார்ந்து உரத்த குரலில் பேசினான். ‘இஞ்சேருங்க, இந்நா கெடக்கு. லே, இது நீக்கோலிலேண்ணு நான் சொல்லுதேன். பெய என்னண்ணாக்க தெங்கிலே கேறி இருக்கான்…அண்ணா அண்ணான்னு ஒரு நெலவிளி…லே பாம்பு தெங்குமேலே நல்லா கேறும் பாத்துக்கோண்ணேன். ஏசுவே ஏசுவேண்ணு கரையுதான்…’ எங்களை பார்த்ததும் நிறுத்திக்கொண்டான்

பேராசிரியர் ‘குமாரு, என்னடே விசேசங்க? பிள்ளையள்லாம் சொவமா இருக்கா?’ என்றார் ‘இவன் சொல்லுகத கேட்டியா? பாம்பு பனைகேறுமாம். அக்கானி எடுக்குமாண்ணு தெரியேல்ல ஹஹஹ’ என்றார். குமார் என்னிடம் மெல்ல ‘சுத்தமா ஞாபகம் இல்ல, பாத்துக்கிடுங்க’ என்றபின் ‘கெளம்பல்லியா?’ என்றார். பேராசிரியர் பதற்றம் அடைந்து ‘அய்யோ மறந்துபோட்டேன் கேட்டியாடே.. இண்ணைக்கு ஞாயித்துக்கெழமைண்ணே தெரியல்லை. கோயிலுக்கு போறத மறக்குத காலம் வந்தாச்சு பாத்துக்கோ’ குமார் கொஞ்சம் எரிச்சலுடன் ‘இண்ணைக்கு ஞாயித்துக்கெழம இல்ல‘ என்றார். ‘இல்லியா?’ என்றார் பேராசிரியர் சந்தேகமாக. ’ஆமா’ .அவர் யோசித்து பலவீனமாக, ‘ஞானராஜுக்க மெவளுக்கு கல்யாணமாக்கும் இல்லியா?’. ‘அது சித்திரையிலே. இப்ப மாசியாக்கும்…’ என்று குமார் அமர்ந்துகொண்டார்

நான் அருகே இருந்த திண்ணையில் அமர்ந்தேன். பேராசிரியர் என்னைப்பார்த்து பிரியமாக புன்னகை செய்ததும் அவர் என்னை வேறு யாரோவாக எண்ணுகிறார் என்று தோன்றியது. அவர் ‘பாஸ்டர் எப்ப வந்திய?’ என்று கேட்டதும் நான் புன்னகை புரிந்தேன். குமார் ‘இன்னைக்கு குமரிமன்றம் நிகழ்ச்சியாக்கும். நீங்க வாறிய…’ என்றார். பேராசிரியர் வியந்து முகம் மலரச்சிரித்து ’அதாக்கும் சங்கதி இல்லியா? டெய்சி போறப்ப சொல்லிட்டு போனா. அவன் என்ன சொல்லிட்டு போனான்னு மறந்துட்டேம்டே குமாரு.. ‘ என்று என்னை பார்த்தார். ‘இது ஜெயமோகன். கதைகள் எளுதுகாருல்லா?’ பேராசிரியர் சட்டென்று என் கைகளைப் பற்றிக்கொண்டு ‘அய்யோ…நேத்தாக்கும் நான் மாடன் மோட்சம் படிச்சது. அதாக்கும் கதை. கிளாஸிக்கு. குமாரு நீ படிச்சிருக்கியா? ’ குமார் ‘படிச்சிருக்கேன். நீங்க குளிக்கல்லேல்லா? குளிச்சுட்டு கெளம்பத்தான் நேரம் செரியா இருக்கும்…’ என்றார்

அவரது பேத்தி வந்து எட்டிப்பார்த்து புன்னகை செய்தார். ‘வெந்நி போடுதியா?’ எனக் குமார் கேட்டார். ‘சொல்லேல்லியே’ என்றாள் அவள். ‘போட்டிரு…இப்பம் கெளம்பணும்’ அவள் உள்ளே சென்றதும் அந்த ஆள் ‘..பின்னயாக்கும் ரெசம், அது பாம்பில்லே கேட்டியளா?’ என்று ஆரம்பித்தார். ‘பின்னே?’ என்றார் பேராசிரியர் பேராவலுடன். ‘லே போலே..போ போ ‘என்று குமார் அவனை அதட்டி கிளம்பச்செய்தார். அவன் முகத்தால் கிளம்புகிறேன் என்று சைகை காட்டி எழுந்து சென்றான். ‘எங்கயாக்கும்டே குமாரு நிகழ்ச்சி?’ என்றார் பேராசிரியர் ‘அசிசி பள்ளிக்கூடத்திலே. நம்மா ஜில்லாவிலே உள்ள எல்லா ரைட்டர்ஸும் உண்டு.எல்லாரையும் பச்சைமால் கௌரவிக்கிறாரு’

பேராசிரியர் சிரித்துக்கொண்டு ‘அதுக்கு நான் என்னத்துக்குடே? ’என்றார். நான் ‘நீங்க ஒரு ரைட்டருக்க ஓனருல்ல?’ என்றேன். பேராசிரியர் வெடித்துச்சிரித்து புரைக்கேறி தடுமாறினார். ‘கேட்டியாடே குமாரு, ரைட்டரை வளர்த்துதது கஷ்டமாக்கும் பாத்துக்கோ…’ என்று மீண்டும் சிரித்தார். நான் அவரை அப்போதே கம்பராமாயண மனநிலைக்குள் இட்டுச்செல்ல முடிவு செய்து, ஏற்கனவே யோசித்து வைத்திருந்த பாடலை எடுத்தேன். ’நேத்து கம்பராமாயணத்திலே ஒரு பாட்டு படிச்சப்ப உங்கள நினைச்சுகிட்டேன்’ என்றேன்.

பேராசிரியர் முகம் நெகிழ்ந்தது. ‘கம்பனை படிச்சேளா? நேத்தா? அது ஒரு சுப முகூர்த்தம் பாருங்க. அப்டி சட்டுன்னு நம்ம கை அங்க போயிடாது. போக வைக்கிறது அவனாக்கும். இப்ப நாம கம்பராமாயணம் பேச ஆரம்பிச்சாச்சுல்லா, இந்த இங்கிண அவன் வந்து நிக்கான். என்னால அவன் நிக்கதை ஃபீல் பண்ண முடியுது…. அவன் சாகாப்பெருங்கவியில்லா? மானுடம் கண்ட மகாகவியில்லா…’ என்று பரவசம் கொண்டு , புருவங்கள் மேலே வளைய ‘என்ன பாட்டு?’ என்றார்

நான் அந்தப்பாடலைச் சொன்னேன்.

மத்துறு தயிர் என வந்து சென்று இடை
தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுறும்
பித்து, நின் பிரிவினில் பிறந்த வேதனை
எத்தனை உள? அவை எண்ணும் ஈட்டவோ?

’பாட்டை இப்டிச் சொல்லப்படாது, பாடணும். இதை ஆபேரியிலே மொள்ளமா பாடிப்பாருங்க…’ அவர் பாடலை உருக்கமாகப் பாடினார். முகத்தில் தளர்ந்த தசைகள் உணர்ச்சிகளால் கொடித்துணிகள் காற்றிலாடுவது போல நெளிந்தன. ‘என்னான்னு சொல்லிப்போட்டான் பாத்தேளா? நின் பிரிவினிற் பிறந்த வேதனை. பிரிவுக்கு இணையான வேதனை உண்டா? ஏன்னா மனுஷன் தனியாளு இல்ல கேட்டேளா? ஒவ்வொரு மனுஷனும் இன்னொருத்தர் கூட ஒட்டியிருக்கான். அவன் இன்னொருத்தர்கூட ஒட்டிக்கிட்டிருக்கான். கையும் காலும் வெரலும் உடம்பிலே ஒட்டிக்கிட்டிருக்கது மாதிரி மனுஷன் மானுடத்தோட ஒட்டிகிட்டிருக்கான். பிரிவுங்கிறது அந்த பெரிய கடலிலே இருந்து ஒரு துளி தனிச்சுப்போறதாக்கும். சாவும் பிரிவும் ஒண்ணு. எல்லா பிரிவும் சின்னச்சின்னச் சாவாக்குமே…’

பேராசிரியர் குரலில் முதுமையின் நடுக்கம் மறைந்து உணர்ச்சியின் வேறுவகை நடுக்கம் குடியேறுவதை கவனித்தேன். குரல் ஓங்கி ஒலித்தது. கொஞ்சம் கிரீச்சிடக்கூடிய மென்குரல். ‘வேதனை எத்தனை உள, அவை எண்ணும் ஈட்டவோங்கிறான் பாருங்க. மானுடனுக்கு வேதனைன்னா ஒண்ணு ரெண்டு இல்ல. முடிவே கெடையாது. விதவிதமாட்டு. நிமிசத்துக்கு நிமிசம் ஒண்ணுன்னு…அவை எண்ணும் ஈட்டவோ.. அவற்றையெல்லாம் எண்ணிப்பாக்க முடியுமா? வேண்டியவங்கள பிரிஞ்சுட்டான்னு சொன்னா அம்பிடு வேதனையும் ஒருத்தனுக்கே வந்திரும் …கர்த்தரே…மனுஷனை இத்தனை வேதனைய வச்சு நீர் சுத்தப்படுத்தி உம் காலடிக்குக் கொண்டு செல்றீரே.. எல்லா துக்கமும் உமது கருணை தானே ஏசுவே..’

நான் கவனமாகப் பேச்சை நகர்த்தினேன். ‘புலன்கள் தள்ளுறும் பித்து’ன்னு எதைச்சொல்றான்னு புரியுது. அந்த அளவுக்கு பிரிவோட துக்கம் இருந்தா ஐம்புலன்களும் சரிஞ்சிரும். ஆனா ’மத்துறு தயிர் என வந்து சென்று இடை தத்துறும் உயிரோடு’ன்னு ஏன் சொல்றான்? மத்தாலே கடையற மாதிரி உயிர் அலைக்கழியுதுங்கிறான். சரி, அதை வந்துசென்றுன்னு ஏன் சொல்றான். இடை தத்துறும் உயிர்னா மத்திலே கடையறப்ப வந்தும்போயும் நடுவிலே கிடந்து தத்தளிக்கிற உயிர். அதான் புரியல்லை. மத்தால கடையறப்ப எது அப்டி வந்தும் போயும் இருக்கு?’

’கம்பன் மகாகவி. மகாகவிகள்லாம் சின்னப்பிள்ளைங்க மாதிரி. சும்மா ஸெரிபெரலாட்டெல்லாம் யோசிக்க மாட்டாங்க. கண்ணால கண்டதைத்தான் சொல்லுவாங்க. செரி, அவன் எங்க சொல்றான், அவன் ஒரு கிறுக்கன்லா? அவன் நாக்கில இருக்கற சரஸ்வதில்லா சொல்லுகா…’ பேராசிரியர் சொன்னார். எழுந்து நின்று தயிர்கடைவதுபோல கையால் நடித்தார். ‘மத்தால கலயத்திலே தயிர் கடையற காட்சிய நாம கற்பனையிலே பாக்கணும். கலயம்தான் உடல் .உயிர்ங்கிறது அதுக்குள்ள இருக்கிற தயிர். மத்து அந்தத் துன்பம். துன்பம் உயிரைப்போட்டு கடையுது. கடையற தயிர் எப்டி இருக்கும் பாத்திருக்கேளா? ஒருபக்கமாட்டு சுத்திச்சுழன்று நொரையோட மேலேறி இந்தா இப்ப தளும்பி வெளியே பாஞ்சிரும்னு வரும். உடனே மத்து அந்தப்பக்கமாட்டு சுத்தும். அந்தப் பக்கமாட்டும் அது வெளிய சாடீரும்னு போயி உடனே இந்தப்பக்கமாட்டு சுத்தும். ஒரு செக்கண்டு நிம்மதி கெடையாது. நுரைச்சு பதைஞ்சு …மனுஷனோட பெருந்துக்கமும் அதேமாதிரித்தான். அந்த அலைக்கழிப்பு இருக்கே அதாக்கும் கொடுமை. இதுவா அதுவா, இப்டியா அப்டியான்னு. வாழவும் விடாம சாகவும் விடாம… அதைச் சொல்லுதான் கம்பன்’

நான் அந்தக்காட்சியை கண்டுகொண்டிருந்தேன். பேராசிரியர் ‘அது மட்டுமில்லை. அவன் சொல்லு ரெண்டுபக்கமும் முனையுள்ள வாளாக்கும். முந்தின பாட்டப் பாத்தியளா?’ நான் அதை நினைவுகூரவில்லை. ‘நீ சொல்லுடே குமாரு’ . குமார் வெட்கி சிரித்து ‘ஓர்மையில்லை’ என்றார். ’நீ வெளங்கினே.. அண்னைக்குமுதல் இண்ணைக்கு வரை அந்த லெச்சணம்தான்.. என்னத்தை படிச்சியோ என்னமோ’ . பேராசிரியர் அவரே சொன்னார் ‘சோகம் வந்து உறுவது தெளிவு’ ன்னு அந்த பாட்டு ஆரம்பிக்குது கேட்டேளா? அந்த பாட்டுக்க அடுத்ததுதான் இது. மத்தால தயிரைக்கடைஞ்சா வெண்ணை வரும். துக்கத்தைக் கடைஞ்சாக்க வாறது தெளிவு. பால்கடலை கடைஞ்சுல்லா அமுதம் எடுத்தாங்க. அமுதம்னா சாகாமை. அதாக்கும் நான் சொன்னது துக்கம் ஏசுவுக்க காலடியிலே போய் சேருறதுக்குண்டான வழின்னு…டே, இப்பம் நீ சர்ச்சுக்கு போறதுண்டா?’

குமார் ‘போவணும்’ என்றார். ‘நீ வாழ்ந்தே…அண்ணைக்கும் இண்ணைக்கும் ஒரே முகரையாக்குமே..’ . பேத்தி வந்து ‘தண்ணி சுட்டாச்சு’ என்றார். பேராசிரியர் எழுந்து ‘குளிச்சுட்டு வாறண்டே குமாரு..’ என்றார். குமார் பேத்தியிடம் ‘வேட்டி ஜிப்பா எடுத்து வையி. ஒரு நிகள்ச்சிக்காக்கும் போறது’ என்றார். பேராசிரியர் ‘நிகள்ச்சியிலே எல்லா பயகளும் வருவானுகளாடே?’ என்றார். ‘எல்லாரும் உண்டு. கார்லோஸ், பெருமாள் எல்லாரும் வாறாங்க’ என்றார் குமார். ‘ராஜம் வாறானா?’ என்றார் பேராசிரியர். குமார் கொஞ்சம் தயங்கி ‘வருவாரு’ என்றார். ‘அவனப் பாக்கணும்டே…போனவாரம் ஒரு சொப்பனம். அந்த பயலுக்கு ஒரு பிரைஸ் கிட்டுது. கவிதைக்கோ நாவலுக்கோ. தெரியேல்ல. பிரைஸ் குடுக்கியது நேருவாக்கும்…’

நான் சிரித்து ‘நேருவா?’ என்றேன். பேராசிரியர் ’சொப்பனமாக்குமே…நேரு இப்பம் என்னை மாதிரிக் கதர் உடுக்கிறவங்களுக்க சொப்பனத்திலே இல்ல இருக்காரு? நேரு இவனுக்கு பிரைஸ் குடுக்காரு. இவன் நல்லா வெளுத்த ஜிப்பாவெல்லாம் போட்டு நல்ல ஸ்டைலாட்டு போயி வாங்கிட்டு மைக்கு முன்னால வந்து நின்னு நன்றி சொல்லுகான்…அவன் எனக்க பேரைச் சொல்லுகான். லே குமாரபிள்ள பேரச் சொல்லுலே…குமாரபிள்ளைய விட்டுட்டேலேன்னு நான் கெடந்து சத்தம் போடுதேன். அவன் கேக்கேல்ல. சபையிலே ஆரும் கேக்கேல்ல.. அப்பம் முழிப்பு வந்து போட்டு’ என்றார். பெருமூச்சுடன் ‘அவன பாக்கணும்டே குமாரு. என்னமோ இனிமே அவனை பாத்துக்கிட முடியாதுன்னு ஒரு நெனைப்பு மனசிலே , கேட்டியா?’

‘குளிச்சுட்டு வாங்க.நேரமாச்சு’ என்றார் குமார். பேராசிரியர் ‘இப்பம் வந்திருதேன்..’ என்று உள்ளே சென்றார். குமார் என்னிடம் ‘இப்பம் கொஞ்ச நாளா எப்ப பேசினாலும் ராஜத்தைப்பத்தியாக்கும் பேச்சு. அடிக்கடி கனவும் வருது’ என்றார். நான் ‘ஏன்?’ என்றேன். ‘அதுபின்ன, வழிதவறின ஆடாக்குமே.. எடையன் அதைத்தானே நெனைப்பான்?’ நான் புன்னகை செய்தேன்.

’போனவருசம் ராமசாமி மக கல்யாணவிருந்துக்கு போனப்ப ராஜத்த பாத்தாரு… நானும் கூட உண்டு அப்பம். ரோட்டிலே இவரு எறங்கிற நேரம் அவர் எதுக்கால வந்திட்டாரு. நான் ராஜத்தை பாக்கலை. இவராக்கும் முதலிலே பாத்தது. ‘அது நம்ம ராஜமாக்குமே’ன்னு கேட்டாரு. ராஜம் இவர எதிர்பாக்கல்லை.சட்டை முளுக்க அழுக்கு. தலையில மண்ணு. கட்டயன்வெளை கோபாலனும் அவருமாச் சேந்து எங்கியோ போயி நல்லா குடிச்சு கீழ விளுந்து அப்டியே எந்திரிச்சு வாறாங்க… ‘ராஜம் நீயாலே மக்கா?’ன்னு இவரு கேட்டதும் ராஜம் அப்டியே தரையிலே உக்காந்து தலையிலே கைய ரெண்டையும் வச்சுகிட்டார். கோபாலன் ஆடிகிட்டே ‘ஸ்மால் டிரிங்கு. ஒன்லி விஸ்கி’ன்னு என்னமோ சொல்லுதாரு. ராஜம் தேம்பிதேம்பி அழுவுதார். நான் ‘வாங்கன்னு’ கூட்டிட்டு வண்டியிலே ஏத்திட்டேன். ‘அவன ஆஸ்பத்திரிக்கு கொண்டு போடே, அவனுக்கு உடம்பு செரியில்லே’ன்னு வண்டியிலே கிடந்து அனத்துதாரு. குடிக்கிற ஆளுகளைப் பேராசிரியர் அதிகம் பாத்ததில்லே…இந்த மாதிரி குடி நெனைச்சே பாத்திருக்க மாட்டாருல்லா…’ குமார் சொன்னார்.

‘ராஜம் இப்டீன்னு ஊருக்கே தெரியுமே’ என்றேன் ‘அது பேராசிரியருக்கு இருபத்தஞ்சு வருசமா தெரியுமே… ஆனா இது இந்த ஓவியமா இருக்கும்னு தெரியாது… அதைச் சொன்னேன். ராஜம் இப்பிடி ஆனது பேராசிரியர்ருக்க கண்ணுக்கு முன்னாலயில்லா? அவரு ராஜத்தை வெளியே கொண்டுவர என்னெனமோ செஞ்சிருக்காரு… அந்த குட்டிக்க காலிலே விழப்போனாருல்லா?’ . ‘எந்தக்குட்டி?’ என்றேன். குமார் ‘அது போட்டு , இப்பம் அதைப்பற்றி என்னவாக்கும் பேச்சு?’ என்றார். ‘இல்ல, சொல்லுங்க’ என்றேன்.குமார் ‘நான் சஜினை வரச்சொன்னதே ராஜத்தை கொண்டுவந்து ஒருமாதிரி நிதானமா பேராசிரியர் முன்னால நிறுத்துறதுக்காக்கும். ஒரு மூணுமணிக்கு கூட்டிட்டுபோயி நல்ல லார்ஜ் ஒண்ணு வாங்கி குடுக்கச்சொன்னேன்’

‘அய்யோ’ என்றேன். ‘காரியம் இருக்கு. காலையிலே இருந்தே குடிக்கல்லேண்ணா நிக்க மாட்டார். மூணுமணிக்கு குடிச்சா அஞ்சுக்குள்ள எறங்கிரும். நேரா கொண்டுபோயி ராமசாமி வீட்டுக்குள்ள கேற்றி முகம்கழுவி நல்ல சட்டை வேட்டி மாத்தி அப்டியே கூட்டிட்டு வந்து முன்னால நிப்பாட்டிட்டு விட்டுட்டோம்னா சோலி தீந்துது. ஒரு நல்ல வேட்டியும் சட்டையும் கொண்டு போயி வச்சிருக்கு…’ என்றார். ‘சஜின், உங்க சிஷ்யனாக்குமே… செய்வான்’ என்றேன். ’நல்ல பையன். ஆனா சொன்ன புக்கிலே பாதிதான் படிப்பான்…சொல்லிட்டே இருக்கணும்’ என்றார் குமார்.

‘ராஜம் உங்க பேச்மேட்டா??’ என்றேன். ‘எனக்கு ஒருவருசம் சீனியர். நான் சேர்ந்தப்ப அவருதான் பேராசிரியர்ருக்கு ஆல் இன் ஆல். அப்ப எப்டி இருப்பாரு தெரியுமா? இங்கல்லாம் சில கோயிலிலே பனந்தடியிலே தூணு போட்டிருப்பான். முத்தின பனந்தடிய நல்லா தேச்சு எடுத்தா கருங்கல்லு தேச்சது மாதிரி மின்னும்….அதுமாதிரி இருப்பாரு.. ஊரிலே அடிமுறை படிச்சிருக்காரு. மகாராஜா காலகட்டத்திலே கரமொழிவு நெலம் குடுக்கப்ப்பட்ட கரைநாடார் குடும்பமாக்கும். கையும்காலும் சும்மா இறுகிக் கனத்து இருக்கும். தலைமுடிய நீட்டி வளத்து பின்னாலே போட்டிருப்பாரு.. மீசைய நல்லா கூர்மையா முறுக்கி சுருட்டி வச்சிருப்பாரு… ஆளைப்பாத்தாச் சரித்திர நாவலிலே வாற கதாபாத்திரம் மாதிரி இருக்கும். நான் முதலிலே பாத்தப்ப கொஞ்சம் பயந்துட்டேன். அட்மிஷன் போட்டு டிபார்ட்மெண்டிலே போயி கிளாஸிலே ஜாயின் பண்ணினதும் பேராசிரியர் ‘ராஜம் இவனை என்னண்ணு கேளுடே’ன்னாரு. பேராசிரியரப் பாத்தா பாவமா இருந்தது. சின்ன உருவம் பாத்தியளா. இவரு ஒருமாதிரி இடும்பன் மாதிரி நிக்கிறாரு. இடைக்கிடைக்கு மீசைய முறுக்கிறதும் உண்டு’

‘பிறகு?’ என்றேன் ‘நான் பயந்துட்டு வெளியேவே நின்னேன். ராஜம் வெளியே வேந்து ‘வே வாருமே சாயா குடிப்போம்’னு விளிச்சாரு. சாய குடிக்கப்போறப்ப ‘எங்கயாக்கும் வீடு?’ன்னு கேட்டாரு. தெரியுமே. ராஜம் எப்பவுமே மெள்ள, நமக்கு மட்டும் கேக்கிறமாதிரித்தான் பேசுவாரு. அந்த குரலை கேட்டப்பம் தெரிஞ்சுபோச்சு இந்தாளு மனசிலே மனுஷங்களுக்க அழுக்குகள் ஒண்ணுக்குமே இடமில்லைன்னு. அப்டியே கெட்டிப்பிடிக்கணும்னுட்டு பொங்கிட்டு வந்தது…’

நான் புன்னகைசெய்து ‘ஆமா…எனக்கும் அண்ணாச்சியை பாக்கிறப்ப எல்லாம் தொட்டு பேசணும்னு தோணியிருக்கு’ என்றேன். ’ராஜம் அன்னைக்கும் இன்னைக்கும் கள்ளமில்லாத்த ஆளாக்கும். ஒருத்தர் மேலேயும் வெறுப்போ கோபமோ பொறாமையோ ஒண்ணும் கெடையாது. எப்பவும் பேராசிரியர் மனசிலே ராஜம்தான் நம்பர் ஒண். ஆரம்பத்திலே ஒரு இது எனக்கும் இருந்தது. என்ன இப்டி இருக்கேன்னு. பிறவு அது அப்டித்தான்னு தெரிஞ்சுகிட்டேன். ராஜம் பேராசிரியர் மனசிலே இருக்கிற எடத்திலே இனி ஒரு மனுஷனும் ஏறி இருக்க முடியாது. அங்க அவருக்கச் சொந்த பிள்ளைக கூட இல்ல. ஏசு இப்பம் பூமிக்கு வந்தாருன்னு வைங்க, சட்டுன்னு ’இந்தாலே ராஜம் இங்க வா’ன்னு அவரைத்தான் முதல்ல கூப்பிட்டு அறிமுகம் செஞ்சு வைப்பாரு..’

’அண்ணாச்சி பிஎச்டி முடிக்கல்ல இல்லியா?’ என்றேன். ‘எங்க? அதுக்குள்ள தீ பற்றி பிடிச்சுப்போட்டுதே..’என்றார் குமார். ‘என்ன தீ?’ குமார் கொஞ்சம் தயங்கியபின் ‘…ராஜம் எப்பவுமே ரொம்ப இளகின ஆளாக்கும். சிவாஜிகணேசனுக்க பிராப்தம்னு ஒரு படத்தை பாத்துட்டு தியேட்டரிலேயே கதறிகூப்பாடு போட்டு அழுது தியேட்டர்காரனுக லைட்டப்போட்டு என்னன்னு பாத்திருக்கதா கேள்விப்பட்டிருக்கேன். அப்டிப்பட்டவரு திடீர்னு லவ்வுலே விழுந்துட்டாரு..’ நான் அதை ஊகித்துவிட்டிருந்தேன். ‘அப்டியா? ஆளு யாரு?’ ‘அதெல்லாம் இப்ப எதுக்கு? அவ ஒரு நாயருபொண்ணு. பெரிய ஃபேமிலி. இங்க்லீஷ் படிச்சிட்டிருந்தா. ஆளைச்சொன்னா உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். அவ அண்ணன் இப்பம் மலையாளத்தில ஒரு ரைட்டராக்கும். எக்ஸ்பிரஸிலே வேல பாத்தான்…’

‘ஓ’ என்றேன். ‘அந்தால அத விடுங்க…’ என்றார் குமார். ‘அந்த வயசிலே லவ்வுன்னா என்ன, சின்னப்புள்ளைக பொம்மை எடுக்கிறது மாதிரித்தானே? பாக்கதுக்கு வித்தியாசமா இருந்தா அதுதான் வேணும்னு தோணிடும். வேற எங்கயும் இல்லாததுன்னா பின்ன அது இல்லாம இருக்கமுடியாதுன்னு தோணிடும்…’’

‘அண்ணாச்சியோட கண்ணு ரொம்ப அழகா இருக்கும். அவரு கனிஞ்ச மனுஷர்னு அந்த கண்ணிலேயே தெரியும். மனசிலே ஒரு நல்லதன்மை உள்ள எந்த பொண்ணும் அந்த கண்ணைப் பாத்தா ஆசைப்பட்டிருவா’ என்றேன். குமார் ‘சொல்லப்போனா, கன்னி வயசிலே எல்லா பொண்ணுகளுக்கும் மனசு முழுக்க நல்லதன்மைதான் இருக்கும்… இது பிஞ்சிலே இனிச்சு பழுக்கிறப்ப புளிக்க ஆரம்பிக்கிற கனின்னு பேராசிரியர் ஒருவாட்டி சொன்னாரு… அவ இவர அந்த ஈர்ப்பிலேதான் காதலிக்க ஆரம்பிச்சிருப்பா. ராஜம் பாக்க இரும்பா இருந்தாலும் உள்ள ஐஸ்கிரீமாக்கும். சட்டுன்னு விழுந்துட்டார். இவருக்கு ஒண்ணுக்கும் ஒரு கணக்கும் கெடையாது. பிரியத்துக்கா கணக்கு வச்சுகிட போறாரு? அப்பல்லாம் ராஜத்தைப் பாத்தா எப்டி இருப்பாரு தெரியுமா? சர்ச்சிலே ஆராதனை நடக்குறப்ப பின்வரிசையிலே சில பாவப்பட்ட முகங்கள் அப்டியே மெழுகுதிரி மாதிரி உருகி வழிஞ்சிட்டிருக்கும். அதே மாதிரி.. அந்தக்குட்டி அந்த பிரியத்திலே விழுந்துபோட்டா. காலுதவறி ஆத்துவெள்ளத்திலே விழுற மாதிரி. அவ்ளவுதூரம் போகணும்னு அவளும் நினைச்சிருக்க மாட்டா…ஒண்ணும் செய்ய முடியாம ஆயிட்டா’

‘பிறவு?’ என்றேன். ‘பிறவு என்ன? அது ஒரு சொப்பனம். அதிலே இருந்து வெளியே வந்துதானே ஆகணும்? அவ அம்மைக்கும் அப்பாவுக்கும் விஷயம் தெரிஞ்சப்ப கூப்பிட்டு நாலு சாத்து சாத்தினாங்க. அவ சட்டுன்னு கண்ணத் தெறந்து வெளியே சாடிட்டா. இவரால முடியல்லை. அவ கிட்ட பேசக்கூடாதுன்னு அவளே சொல்லிட்டா. ராஜம் பண்பானவரு. அவ அப்டி சொன்னதுக்குமேலே ஒருநாள் அவகிட்ட ஒரு சொல்லு பேசினதில்லை. அவ போற வாற பாதையிலே நின்னுட்டு பாத்துட்டே இருப்பார். ராத்திரி முழுக்க அவ ஹாஸ்டலுக்கு வாசலிலே அவ ஜன்னலைப்பாத்துட்டு நிப்பார். தூக்கமில்லை. சாப்பாடு இல்லை. கேட்டா பேசறதில்லை. அவருக்க துக்கத்தப் பாத்து தாங்கமுடியாம பேராசிரியர் அவரே போயி அந்த குட்டிகிட்டே பேசினாரு. என் பிள்ளைய கொன்னுடாதேன்னு கையெடுத்து கும்பிட்டிடுருக்காரு. அவ அழ ஆரம்பிச்சிட்டா. அவ அப்பா வந்து பேராசிரியர ரூமுலே போயி பாத்து இனி ஒரு வார்த்தை மிச்சமில்லாம பேசிட்டாரு. நீ வாத்தியாரா இல்ல கல்யாணபுரோக்கரான்னு கேட்டத நானே கேட்டேன்.’

‘பேராசிரியர் ரூமிலே தலை குனிஞ்சு உக்காந்திருந்தாரு… கண்ணுலே இருந்து கண்ணீரா சொட்டுது. அப்ப்டி அழுறமாதிரி என்ன பேசினான்னு எனக்கு ஒரே கொதிப்பு. தாயளிய போயி வெட்டிப்போட்டிரணும்னு நினைச்சேன். ‘எனக்க பிள்ளைக்கு இனி கெதி இல்லியா’ன்னு பேராசிரியர் சொன்னப்பதான் அவரு ராஜத்த நெனைச்சு அழுறாருன்னு தெரிஞ்சுது…எனக்கும் கண்கலங்கிபோட்டுது.’ குமார் சொன்னார். ’அந்தாலெ அந்த குட்டிய டிசி வேங்கி கொண்டுபோயி வேற எங்கயோ சேத்தாங்க. பூனாவிலேயோ பரோடாவிலேயோ…ஒருநாளு ராஜம் வந்தா அவ இல்லேண்ணு தெரிஞ்சுது. வேட்டிய தூக்கி கட்டிகிட்டு கிறுக்கன் மாதிரி மைதானத்தில ஓடி பின்னால போயி மரதடியிலே முட்டி விழுந்து அங்கேயே கெடந்திருக்காரு. அதுக்கு பிறகு அவரு அவளப் பாக்கல்லை. அவளும் பத்திருபது வருசம் கழிச்சுத்தான் திருவனந்தபுரத்துக்கு வேலையா வந்தா’

’அண்ணைக்குத்தான் ராஜத்த நாலு பயக்க கூட்டிட்டு போயி சாராயத்த வாங்கி ஊத்தினது.அதுக்கப்றம் ராஜம் படுகுழி நோக்கி சறுக்கி போய்ட்டே இருந்தாரு. குடிகாரர் ஆகறதுக்கு அதிகமொண்ணும் நாளாகல்லை. ஒரு பதினஞ்சுநாளு. முழுக்க முங்கியாச்சு. ஆரும் ஒண்ணும் செய்யமுடியாது. சொல்லியாச்சு, காலைப்பிடிச்சு அழுதாச்சு. அவருக்க அப்பா ஒருதடவை முத்தாலம்மன் கோயிலிலே கைய வெட்டி ரெத்தத்தை கோயில் படியிலே ஊத்தி ‘இந்தாடீ குடி ..குடி..என் பிள்ளைய எனக்கு திருப்பிக்குடுடீ மூதி’ன்னு சொல்லி சத்தம் போட்டு அழுதிருக்காரு… இனிமே அதைப்பத்தி ஒண்ணும் சொல்லுகதுக்கில்லை…’

[மேலும்]

முந்தைய கட்டுரைசோற்றுக்கணக்கு முடிவு-ஒருகடிதம்
அடுத்த கட்டுரைமத்துறு தயிர் [சிறுகதை] – 2