«

»


Print this Post

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-3


ஓசை கேட்டு துரியோதனன் திரும்பிப்பார்த்தான். அப்பால் மண்சாலையில் வந்துநின்ற அத்திரிகள் இழுத்த வண்டியிலிருந்து இறக்கி செவிவளையங்களுக்குள் மூங்கில் செருகி நான்கு பணியாளர்களால் தூக்கிவரப்பட்ட பெரிய மரப்பெட்டியில் அங்கநாட்டின் எழுகதிர் முத்திரை இருந்தது. சுப்ரதர் “நல்லவேளையாக அரசர் வரும்போதே தனது அணிகளை எல்லாம் கொண்டுவந்திருந்தார். இல்லையேல் அவற்றை சம்பாபுரியிலிருந்து கொண்டுவரவேண்டியிருந்திருக்கும்” என்றபின் அதிலிருந்த பொருந்தாமையை உணர்ந்து “ஆனால் அது இயல்வதல்ல. அரசரே கொண்டுவந்திருந்தமையால்…” என்றபின் அது மேலும் பொருத்தமல்லாமல் ஆவதை உணர்ந்து நிறுத்திக்கொண்டார். அந்த சொல்லாச்சொல்லின் தவிப்பு வெளிப்பட்ட உடலுடன் மேலாடையை சீரமைத்துக்கொண்டார்.

பெட்டியை இறக்கி வைத்ததும் பணியாளர் விலகி நின்றனர். உடன்வந்த காவலர்தலைவன் சுப்ரதரை நோக்கி வந்து தலைவணங்கினான். அவன் அளித்த தாழ்க்கோலை வாங்கிய சுப்ரதர் விழிகளை மூடிக்கொண்டு அதன் தண்டை கைகளால் வருடி அதன் முழைகளையும் புள்ளிப்பள்ளங்களையும் கொண்டு கணக்கிட்டு அதன் திறவுநெறியை உணர்ந்து விரலால் எண்ணி அதை கணக்கிட்டு தாழ்துளைக்குள் செலுத்தி முன்னும் பின்னும் என ஏழுமுறை வெவ்வேறு திசைகளில் சுழற்றி அதை திறந்தார். அதன் உட்புறம் செம்பட்டு வேய்ந்திருந்தது. மென்மரத்தாலான பகுப்புகளுக்குள் வெவ்வேறு பெட்டிகள் இருந்தன. உள்ளிருந்து தங்கத்தகடு வேய்ந்த அணிமூடியிட்ட வெள்ளிப்பெட்டிகளை வெளியே எடுத்து வைத்தார். அனைத்தும் அங்கநாட்டின் எழுகதிர் முத்திரை கொண்டிருந்தன. ஒவ்வொன்றாக அவற்றின் மேல் இருந்த முழைகளையும் பள்ளங்களையும் தொட்டு எண்ணி அதன்படி தாழ் சுழற்றித் திறந்தார்.

உள்ளிருந்து அருமணிகள் பதிக்கப்பட்ட நகைகளை எடுத்து வெளியே விரிக்கப்பட்ட வெண்பட்டின்மேல் வைத்தார். செவ்வைரங்கள் பந்தச்செம்மையில் நிறமிலா விண்மீன்கள் எனவும் செங்குருதித்துளிகள் எனவும் மாறிமாறி விழிமாயம் காட்டின. அவை வைக்கப்பட்டபோது எழுந்த மெல்லிய குலுங்கல் ஒலி உலுக்கும் கூர் கொண்டிருந்தது. நாகக்குழவியின் நச்சுப்பல் என. அங்கிருந்த அனைவரின் விழிகளும் உணர்வுமாற்றம் கொண்டன. அது இடுகளம் என்பதை, சிதைகாத்துக்கிடப்பவன் அரசன் என்பதை, நோக்கி நிற்பவன் பேரரசன் என்பதை முற்றாக மறந்து பெருஞ்செல்வத்தில் குடிகொள்ளும் இருள்தெய்வங்களால் அவர்கள் முற்றாக ஆட்கொள்ளப்பட்டார்கள். வாய்க்குள் எண்ணியபடி அணிகளை எடுத்துவைத்துக்கொண்டிருந்த சுப்ரதர் தன்னைச் சூழ்ந்திருந்த நோக்குகளை உடலால் உணர்ந்து திடுக்கிட்டு மேலே நோக்கி ஏவலன் ஒருவனின் விழிகளை சந்தித்து திகைத்தார். விழிகளைச் சுழற்றி அத்தனை நோக்குகளையும் சந்தித்து அவையனைத்தும் ஒன்றுபோலிருப்பதை கண்டார். நூறு விழிகளுடன் கொடுந்தெய்வமொன்று எழுந்தருளியிருப்பதாக.

அச்சம் குளிர் என அவரை மெய்ப்புகொள்ளச் செய்தது. முதலில் அங்கிருந்து எழுந்து ஓடவே விழைந்தார். அதுவரை இயல்பாக தன் கைகளால் அந்த அருமணிகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தவர் அவை விரல்களிலிருந்து நழுவுவதை, வியர்வைகொண்டு தன் கை நடுங்குவதை தாடை இறுகி பற்கள் கிட்டித்திருப்பதை உணர்ந்தார். மூச்சை இழுத்து சீர்ப்படுத்தி விட்டார். நழுவிய மேலாடையை இழுத்துவிட்ட அசைவு அவரை நிலைமீளச் செய்தது. அங்கிருந்து எழுந்து விலகிவிட வேண்டும், மீளநோக்காமல் சென்றுவிடவேண்டும் என்று மட்டும்தான் அவருடைய உள்ளம் ஏங்கியது. பின்னர் மீண்டும் நிமிர்ந்து அவ்விழிகளை நோக்கினார். இம்முறை அச்சமும் தயக்கமும் இன்றி ஒவ்வொரு நோக்காக சந்தித்தார். அவர் நோக்குவதையே அவை அறியவில்லை. நாகநஞ்சு ஏற்று உயிர்பிரியும் கணத்தில் இருப்பவர்கள்போல விழி வெறித்து தசைகள் இழுபட்டு நகைப்பென ஓர் சுளிப்பு முகத்தில் தோன்ற நின்றிருந்தனர். அவர் நீள்மூச்சுடன் தன்னை எளிதாக்கிக் கொண்டார்.

நூற்றெட்டு ஒளிர்வைரங்கள் கொண்ட தோளிலையை எடுத்து வைத்தபோதுதான் அவர் ஒன்றை உணர்ந்தார். ஒருகணம்கூட அந்த அணிகள் தனக்கு எவ்வகையிலும் ஈர்ப்பை அளிக்கவில்லை. உள்ளத்தால்கூட அவர் அவற்றை அணிந்து நோக்கவில்லை. உறைகனவின் ஆழம்கூட அவற்றை உரிமைகொள்ளவில்லை. அவை அவர் நோக்கில் கல்லுக்கும் சோழிகளுக்கும் நிகரான வெற்றுப்பொருட்களாகவே தோன்றின. அவற்றை மீண்டும் எடுக்கையில் கூர்ந்து நோக்கினார். அவை அழகென்றும் தெரியவில்லை. மலர்களையும் இலைகளையும் அழகிய கூழாங்கற்களையும் வடிவமாற்று செய்யமுயன்றவைபோல, அவ்வழகை அடையாமல் நகைப்புக்குரியனவாகவே நின்றுவிட்டவைபோலத்தான் தோன்றின. இவர்கள் எதை காண்கிறார்கள்? நானறியா தெய்வமொன்றால் ஆட்கொள்ளப்பட்டுவிட்டார்களா? அந்த தெய்வத்திடமிருந்து என்னைக் காப்பது எது? என் முப்புரி நூலா? நான் பெற்ற மந்தண காயத்ரியா?

இளமையில் இணையகவை கொண்ட சிறுவர்கள் ஆற்றில் நீந்திவிளையாடி, வில்பயின்று கானாடி மகிழ்ந்திருக்கையில் சுவடிகளுடன் நூல்நவிலச் செல்லநேர்ந்ததை எண்ணி அவர் வருந்தியதுண்டு. ஆகவே உளமூன்றி கற்கவில்லை. கற்றவை உரியபோது நினைவில் மீளவுமில்லை. அவர் தன் ஆழுள்ளத்தில் சம்பாபுரியிலிருந்து தப்பி ஓடி ஒரு வணிகனாக அலைவதைப் பற்றி, ஷத்ரியனாக வில்லும் வேலும் பயின்று விளையாடி வாழ்வதைப் பற்றி கனவு கண்டார். தந்தை அவரை அரண்மனைப்பணிக்கு சேர்த்துவிட்டார். ஆனால் அவர் அமைச்சுத்தொழிலை விரும்பிச் செய்யவில்லை. சொற்கள் உரியவகையில் நாவிலெழவில்லை. ஆற்றவேண்டிய அனைத்தும் அரை மாத்திரை பிந்தியே நெஞ்சில் தோன்றின. ஆகவே அவர் முந்தைய முதன்மை அமைச்சரின் மைந்தராக இருந்தும் அவருக்கு உரிய இடம் அமையவுமில்லை. அரண்மனையிலும் அந்தணர் மன்றிலும் இளிவரலுக்குரியவராகவே அவர் எஞ்சினார்.

ஒருமுறை அவர் தந்தை நீராடச் செல்லும் வழியில் அவர் உள்ளத்தை உணர்ந்தவராக அணுக்கமுறப் பேசினார். “தன்னை யானை என்று உணர்வதே அந்தணர் அடையவேண்டிய முதல் புரிதல் என்று உணர்க!” என்றார். அவர் எண்ணியிராமல் பேசத்தொடங்கியமையால் சுப்ரதர் திகைத்து நோக்கினார். அவர் கூற வருவதென்ன என்று அவருக்கு புரியவில்லை. தந்தை “காட்டின் முதன்மை ஆற்றலை கொண்டிருந்தாலும் யானைக்கு எவரையும் கொன்றே வாழவேண்டும் என்னும் ஊழ் இல்லை. காட்டையே உண்ணமுடியும் என்பதனால் வேட்டையாடும் பொறுப்பும் அதற்கில்லை” என்றார். “பழிகொள்ளாது வாழ இயலுமென்னும் வாழ்வைப்போல் பிறவிக்கொடை ஏதுமில்லை, மைந்தா. சினமும் வஞ்சமும் விழைவும் கொள்ளாது வாழும் வாய்ப்புள்ளவன் அந்தணன். ஆகவே அவற்றை அடையும் அந்தணன் பெரும்பழி சேர்த்துக்கொள்வான் என்று உணர்க!” அவர் “நான் அவ்வாறு…” என முனக தந்தை அவர் தலையைத் தொட்டு “நீ அவ்வாறு என நான் கூறவில்லை. நீ நினைவுகொள்வதற்கான சொல் இது. என்றேனும் உன் முன் இது முளைத்தெழுந்து நிற்கும்” என்றார்.

அவர் தந்தையின் தொடுகையால் மெய்ப்பு கொண்டார். அவரை தந்தை தொட்டுப்பேசிய அரிய தருணங்களில் ஒன்று அது. தொட்ட கணங்கள் எவற்றையும் அவர் மறக்கவில்லை. மறக்காதிருக்கும்பொருட்டே அவர் தொட்டார் போலும். “கேள் மைந்தா, விழைந்தும் அடைந்தும் வைசியரும் ஷத்ரியரும் வாழ்வை அறிகிறார்கள். துறந்தும் கடந்தும் அந்தணன் அறிகிறான். பத்து கைகளால் கைலாயத்தை வேர்கெல்லி தூக்கிய ராவணமகாப்பிரபுவே ஆனாலும் வாழ்நாளெல்லாம் வென்றெடுக்கக்கூடுவன சிறிதே. துறப்பவனோ ஒற்றைச் சொல்லால் இவ்வுலகையே அகற்றிவிடலாம். வெல்வதற்கு மிகமிக எளிய வழி இது. ஒருநாள் நீ அதை உணர்வாய்!” அருகிருந்து அக்கணத்தில் சொன்னதுபோல் அச்சொற்கள் நினைவிலெழ தந்தையை எண்ணி சுப்ரதர் உளம்பணிந்தார். “ஆம், அந்தணன் என பிறக்கும் நல்லூழ் எனக்கு அமைந்தது” என்று எண்ணியபடி எழுந்தபோது அவர் உடலும் முகமும் மாறிவிட்டிருந்தன. காவலர்தலைவனிடம் “அணியர் வந்துள்ளனரா?” என்றார். அவ்வினாவின் தன்மையால் அனைவரும் அறுபட்டு நிலம் மீண்டனர். இருள் கரிய திரையென அறுந்துவிழுந்தமைவதுபோல அங்கே எழுந்திருந்த தெய்வம் அகன்றது.

காவலர்தலைவன் புதிய பணிவுடன் “வந்துள்ளனர், அடிகளே. அங்கே காத்து நின்றிருக்கின்றனர்” என்றான். “அவர்களை வரச்சொல்க… அரசரை அவர்கள் அணிசெய்யட்டும். அவர் உயிருடன் அணிகொள்ளும்போது சொல்லப்படும் அனைத்து முறைச்சொற்களும் உரைக்கப்படவேண்டும். அனைத்து ஒப்புதல்களும் பெறப்படவேண்டும். அரியணையில் அவைக்கொலு கொண்டு அமர்ந்திருக்கும் முழுதணித் தோற்றம் அமையட்டும். வழக்கமாக கண்ணேறு தவிர்ப்பதற்காக வைக்கப்படும் அணிக்குறை தேவையில்லை. அணிமுழுமை நிகழ்க!” என்றார். அவர்கள் ஓசையின்றி தலைவணங்கி விலகினர். பிறர் அங்குள்ள பணிகளில் ஈடுபடலாயினர். சுப்ரதர் துரியோதனனிடம் “அரசே, நெறிகளின்படி இறந்தவர்களின் முகங்களை கூர்ந்து நோக்கலாகாது. அத்துடன் இங்கே அரசர் அணிசெய்துகொள்ளும்போது பிறர் உடனிருப்பதும் முறையல்ல. தாங்கள் உடனே இங்கிருந்து செல்லவேண்டும்” என்றார்.

அவருடைய குரலில் இருந்த ஆணை துரியோதனனை உளம்மாறச் செய்தது. “நான் இங்கிருக்க விழைகிறேன், அமைச்சரே… அங்கருடன் நானும் இருந்தாகவேண்டும்” என்றான். சுப்ரதர் “நீங்கள் இங்கே அரசர் என நோக்கி நிற்கலாகாது… அதற்கு என் ஒப்புதல் இல்லை” என்றார். துரியோதனன் மன்றாட்டாக “என்னால் இங்கிருந்து விலகிச்செல்ல இயலாது. நான் அங்கிருக்க இயலாதவனாக இங்கே வந்தேன்” என்றான். ஒருகணம் சுப்ரதர் தயங்கினார். துரியோதனன் மேலும் நெகிழ்ந்த குரலில் “உங்கள் அறிவின் கனிவைக் கொண்டு எனக்கு ஒரு வழிகாட்டுக, அந்தணரே!” என்றான். சுப்ரதர் சற்று விழிதாழ்த்தி எண்ணியபின் “ஆம்” என்றார். “அந்தணன் நெறிகளை உணர்வுகளால் மதிப்பிடவேண்டியவன் என்பார் என் தந்தை” என்று சொல்லி அப்பால் நோக்கினார். அங்கே எவரையோ பார்ப்பவர்போல. பின்னர் “உங்கள் அரசக் கணையாழியை கழற்றி என்னிடம் அளித்துவிட்டு இங்கே அமர்க! ஏவலனாக அரசருக்கு நீங்களும் அணியும் ஆடையும் சூட்டுக! அது முறையே” என்றார். “ஆம், அவ்வாறே” என்று பரபரப்புடன் சொன்ன துரியோதனன் அரசக்கணையாழியை கழற்றி நீட்டினான்.

“அதை நிலத்தில் இடுக! நான் அதை பெற்றுக்கொள்ளலாகாது” என்றார் சுப்ரதர். துரியோதனன் அதை நிலத்தில் இட அவர் அதை எடுத்துக்கொண்டார். தன் இடைக்கச்சையில் அதை சுருட்டி இறுக்கிக் கட்டியபின் “செய்க!” என்றார். பின்னர் அப்பால் வந்துகொண்டிருந்த வண்டிகளை நோக்கி கைவீசி ஆணையிட்டபடி விலகிச் சென்றார்.

 

சுப்ரதர் திரும்பிச்சென்றதும் துரியோதனன் கைகால்கள் பதற கால்மடித்து அமர்ந்தான். “நான் என்ன செய்யவேண்டும், பணியாளர்தலைவரே?” என்றான். “அணியர்கள் வருகிறார்கள்” என்றார் பணியாளர் தலைவர். அப்பாலிருந்து ஏழு அணியர்கள் முதிய அணியர் தலைமையில் வந்து முதலில் கர்ணனை பணிந்தபின் துரியோதனனிடம் தலைவணங்கினர். “நான் அரசக்கணையாழி களைந்து அணியனாக இங்கு அமர்ந்துள்ளேன். நான் செய்யவேண்டுவதென்ன?” என்றான் துரியோதனன். முதிய அணியர் “அரசருக்குரிய அணிகளை நாங்கள் அணிவிக்கிறோம். அரசர் முன்னர் எவ்வண்ணம் அவற்றை அணிந்திருந்தாரோ அவ்வாறு. ஒவ்வொன்றும் எங்கனம் எங்கே இருக்கவேண்டும் என அவருக்கு எண்ணங்கள் இருந்தன, அதற்குரிய ஆணைகளும் எங்களுக்குண்டு” என்றார். துரியோதனன் தயங்க அணியர்தலைவர் “நீங்கள் விழைந்தவாறு அணிவியுங்கள். ஒவ்வாதன உண்டு என்றால் நாங்களே கூறுகிறோம்” என்றார்.

துரியோதனன் நடுங்கும் கையை நீட்டி ஒரு கங்கணத்தை எடுத்தான். கர்ணனின் கையை மெல்லப்பற்றி தூக்கி அதை அணிவிக்க முயன்றான். அவன் கையை துரியோதனன் தன் இரு கைகளாலும்தான் தூக்கமுடிந்தது. கர்ணனின் கை மிகப் பெரியதென அவன் அறிந்திருந்தான். எடையாலும் அளவாலும் அவன் பீமனைவிடவும் பெரியவன். ஆனால் அவனுடைய உயரம் அதை மறைத்துவிட்டிருந்தது. எப்போதேனும் கதையை தூக்கிச் சுழற்றும்போது மட்டும்தான் அவன் பேருடலன் என்பது நினைவை அறையும். இளம் அணியர்கள் இருவர் தங்கள் கைகளால் கர்ணனின் கையை தூக்கிக்கொள்ள துரியோதனன் அந்தக் கங்கணத்தை மணிக்கட்டைச் சுற்றி கட்டி அதன் ஆணியை திருகிச் செலுத்தி இறுக்கினான். கையை மீண்டும் நிலத்தில் வைத்தபோது அவன் உள்ளம் அது உடனே எழுந்து வந்து தன்னைத் தொடும் என அறியாமலேயே எதிர்பார்த்தது. பின்னர் அவன் நெஞ்சு உடையுமளவுக்கு ஏக்கம் கொண்டான். ஆனால் விழிகள் நீர்கொள்ளவில்லை. உடலில் எந்த மெய்ப்பாடும் எழவில்லை. உதடுகள் மட்டும் அழுந்தி இறுகியிருந்தன.

“அரசே” என்றான் அணியன். அவனிடமிருந்து அனல்துளி சூடிய கணையாழி ஒன்றை வாங்கியபின் துரியோதனன் கர்ணனை நோக்கிக்கொண்டு அசையாமல் அமர்ந்திருந்தான். தன் கையில் அக்கணையாழி நீட்டி நின்றிருப்பதை உணர்ந்து விழிப்புகொண்டு அதை அணிவிக்க நீட்டி பின் தழைத்துக்கொண்டான். அதை கர்ணனுக்கு அணிவிக்க தன்னால் இயலாது என்று தோன்றியது. எழுந்து விலகிச்செல்லவேண்டும் என எண்ணினான். ஆனால் வேறெவரோ உள்ளிருந்து உந்தியதுபோல மீண்டும் கணையாழியை நீட்டி கர்ணனின் விரலில் அணிவித்தான். அவன் விரல்கள் உருண்டு நீண்டு கருநாகக் குழவிகள் போலிருந்தன. அவன் நோக்கை திருப்பிக்கொண்டு விரல்களில் அதை சுழற்றிச் செலுத்தினான். பெருமூச்சுடன் தளர்ந்து கைகள் நிலத்தில் விழுந்து நிலைகொள்ள அமர்ந்திருந்தான்.

அணியர்கள் “அரசே, கணையாழி” என்றும் “செம்மலர் கங்கணம், அரசே” என்றும் “சிறுபூ சுட்டி அணிவிக்கலாம் அல்லவா?” என்றும் கர்ணனிடம் வழக்கம்போல சொல்லாடியபடி அணிசெய்துகொண்டிருந்தார்கள். கர்ணனின் உடல் களமுற்றத்தில் வண்ணப்பொடிகளால் ஓவியம் உருவாகி வருவதுபோல் அணிதிரண்டுகொண்டிருந்தது. கால்களில் கழல். கால்விரல்களில் ஆழிகள். தொடைச்செறி. இடையில் சல்லடம். கச்சை. அதன்மேல் குறங்குசெறி. மார்பில் ஆரங்கள். மாலைகள். தோள்வளைகள். தோளிலைகள். கங்கணங்கள். வளைகள். கணையாழிகள். அவன் மீண்டும் கர்ணனின் முகத்தை பார்த்தான். எப்போதும் அவன் அவையில் அங்கிருப்பதுபோலவும் அகன்றுநிலைகொள்வதுபோலவும் அறிந்ததுபோலவும் ஆர்வமற்றதுபோலவும் காட்டி அமர்ந்திருக்கும் அதே முகம். அவன் பிறிதொரு கணையாழியை எடுத்தான். அதை அணிவிக்கையில் உள்ளூர மெல்லிய உவகை ஒன்று எழுந்தது. அவன் அவ்வாறு கர்ணனை தடையிலாது தொட்டதில்லை. தொடுக என்னும் ஆணையுடன் அவ்வுடல் அங்கே கிடந்தது.

அகவை முதிர்ந்த பின்னர் அவன் கர்ணனை இயல்பாக தொடுவதே இல்லை. அறியாமல் தொடும்போது அத்தொடுகையை சற்றே நீட்டிப்பது வழக்கம். அது இயல்பான நீட்டிப்பல்ல என இருவரும் அறிந்திருந்தார்கள். மீதூரும் உணர்ச்சிகளின்போது சிலமுறை பாய்ந்து தழுவிக்கொண்டதுண்டு. அவ்வண்ணம் களிப்போ துயரோ எல்லை கடக்கையில் அருகிருப்பவர்களில் கர்ணனை நோக்கியே அவன் எப்போதும் பாய்வான். தழுவி இறுக்கி கூச்சலிட்டுச் சிரித்து தோள்களில் அறைந்து கொண்டாடிக்கொண்டிருக்கையில் ஒருகணம் இருவரும் ஒருவரை ஒருவர் உணர்ந்து நாணுற்று விலகிக்கொள்வார்கள். பின்னர் ஒருவரை ஒருவர் நோக்குவதை, நேர்ச்சொல் எடுப்பதை தவிர்ப்பார்கள். அவர்கள் தொட்டுக்கொள்ளும் நாளில் தம்பியர் உவகைக்கூச்சலிடுவார்கள். அன்று முழுக்க அரண்மனையில் களிக்கொந்தளிப்பு நிறைந்திருக்கும்.

அவன் அன்று முழுமைக்கும் பிறிதொருவனாக இருப்பான். இரவில் மஞ்சத்தில் படுத்து துயிலுக்கு உடல் தளர்த்திக்கொள்ளும்போதுதான் தன் முகத்தசைகள் புன்னகையில் விரிந்து உதடுகள் நீண்டிருப்பதை உணர்வான். அகல்சுடர் அணைப்பதுபோல முகத்திலிருந்து அப்புன்னகையை அவிப்பான். அதன் ஒளி உள்ளத்தில் நிறைந்திருக்கும். துயில் வந்தமரும் இமைகளுக்கு அப்பால் அவ்வொளியை அவன் நோக்கிக்கொண்டிருப்பான். மறுநாள் ஆழத்திலிருந்து எழுந்து வரும் முதல் எண்ணமாக அந்தப் புன்னகையே இருப்பதை எண்ணி வியப்பான். அந்த நாளை சித்தத்தில் ஓட்டியபடி அவன் படுத்திருப்பான். பானுமதியை நாடாத நாட்களில் அவன் தம்பியருடன் துயில்வதே வழக்கம். அகவை கடந்த பின்னர் அவன் அகத்தளம் செல்வது மாதமொருமுறையே என்றாயிற்று. அவன் எழுவதற்கு முன்னரே துச்சாதனன் எழுந்து அவனுக்கு அருகே காத்து நின்றிருப்பான். அருகே ஏவலர் நறுமணநீரும் வாய்மணமும் மரவுரிகளுமாக காத்திருப்பார்கள். துச்சாதனனின் முகத்தில் அவன் தன் புன்னகையை காண்பான். அவன் முகத்தை தன் ஆடிப்பாவை என்றே அவன் உணர்வதுண்டு.

கர்ணனுக்கு அவன் அணிவித்த அத்தனை நகைகளும் உரிய இடத்திலேயே சென்றமைந்தன. ஒருமுறைகூட அணியர் மாற்று சொல்லவில்லை. அவன் கர்ணனை முழுதணிக்கோலத்தில் சிலமுறையே நோக்கியிருந்தான். நோக்குகையில்கூட விழியூன்றியதில்லை. அது பிழையென எண்ணுபவன்போல ஒருகணம் நோக்கிவிட்டு திரும்பிக்கொள்வான். பானுமதி அவன் கையைப் பற்றி “நன்கு விழிநட்டு நோக்குங்கள். எவரும் குறைசொல்லப்போவதில்லை. மண்ணில் கதிரோன் எழுந்ததுபோல் பேரழகு கொண்டிருக்கிறார் அங்கர்” என்பாள். அவன் கையை விடுவித்துக்கொண்டு வேறுபக்கம் நோக்குவான். ஆனால் அவன் அணிகள் அனைத்தையும் உள்ளம் அறிந்திருக்கிறது. அவ்வண்ணம் அவனை விருஷாலிகூட நோக்கியிருப்பாளா?

தலையணிகள், குண்டலங்கள் என கர்ணன் அணிகொண்டபடியே இருந்தான். நோக்கியிருக்கவே அவன் விண்ணிலிருந்து இழிந்த தேவன் என மாறினான். துரியோதனன் எழுந்து விரல்களைக் கோட்டி முறித்தபடி கர்ணனை நோக்கினான். சற்றுமுன் அவன் கண்ட அந்த செம்பொற்கவசம் அந்த அணிகளால் மறைக்கப்பட்டிருக்கிறதா? அணிப்பெட்டியுடன் சகடம் வந்து நின்ற ஒலி கேட்டு அவன் சற்று விழிதிருப்பியதும் அது புதர்களினூடாக வந்து விழுந்த செவ்வொளியாக மாறியது. அதை பார்த்தோமா விழிமயக்கா என அவன் திகைத்து நின்றிருந்தபோது அப்பால் சென்ற வண்டிகளால் ஒளி மறைக்கப்பட்டது. நோக்கின் சரடால் கட்டப்பட்டிருந்த விழிகள் விடுபட்டன. அவன் நீள்மூச்செறிந்தபடி தன் உடலை எளிதாக்கிக்கொண்டான். “இன்னும் சில அணிகள் உள்ளன, சுயோதனரே” என்றார் அணியர். துரியோதனன் தலையசைத்தான்.

சிறிய பவள மணி ஒன்றை எடுத்தபடி அணியர் “ஒப்புநோக்க சிறியவை இவ்வணிகள். பெரும்பாலும் இவற்றை எவரும் நோக்குவதில்லை. ஆகவே எளிய அணியர் இவற்றை உளம் கூராமல் ஒத்திசைவு கூடாமல் அணிவித்துவிடுவதுண்டு. அணியர்களாகிய நாங்கள் இன்னொரு அணியரின் கைத்திறன் நோக்குகையில் முதலில் இதைத்தான் பார்ப்போம்” என்றார். “விண்ணில் தேவர்களிலும் விழிக்கூர் கொண்ட அணியர்கள் இருக்கக் கூடும்” என்றார் இன்னொரு அணியர். முதிய அணியர் புன்னகை செய்து “அணியர்களின் தேவர்கள் அங்கிருப்பார்கள். முழுதணிக்கோலத்தில் எழுந்தருள்பவர்களை வரவேற்பதற்காக அவர்கள் வந்து நின்றிருப்பார்கள்” என்றார். “இங்கே கலை தகைந்து விண்புகுந்து தேவர்களான நம் முன்னோர்கள் அவர்கள்.”

கர்ணனுக்கு வழக்கமாக அணிசெய்பவர்கள் அவர்கள். அவன் களம்பட்ட துயர்தான் அவர்கள் வரும்போது முகங்களில் நிறைந்திருந்தது. வழிதோறும் அழுதமையால் விழிகள் சிவந்து இமைகள் தடித்திருந்தன. முகம் வீங்கி உதடுகள் கருமைகொண்டு நோயுற்றவர்போல் தோன்றினர். முதலில் அணிகளை எடுத்து வைத்தபோது அவர்களின் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. ஆனால் அணிக்கலை வழியாக அவர்கள் பிறிதொருவரானார்கள். அதன் முழுமையை அன்றி பிறிதெதையும் அவர்கள் அப்போது அறியவில்லை. “நாமும் விண்ணேகுவது உறுதி” என்றார் இளைய அணியர். “அணிசெய்வது எவருக்கும் ஆகும். அணிகள் சென்று பொருந்தும் பேரழகு கொண்ட உடலர் அமைவது அரிதினும் அரிது. அங்கர் தேவர்கள் மண்ணில் நிகழ்ந்த தோற்றம் கொண்டவர். ஒவ்வொரு அணியும் அதை யாத்தவர் எண்ணியதென்ன என்பதைக் காட்டுவது அவரில் அமைகையிலேயே.”

“அணியோடு அணிசேர்ந்து ஒற்றை அணியென்றாவதே அணிமுழுமை. ஒவ்வொரு அணியிலும் பிறிதொரு அணி சென்றுசேரும் ஓர் இடம் உள்ளது. ஒவ்வொரு அணியும் பிறிதொன்றுடன் இணைந்து மேலும் பெரிய அணியொன்றை அமைக்கிறது. அமைவதற்குரிய இடம் ஒன்றே. அணிகளின் மாயம் என்னவென்றால் எங்கு அமைந்தாலும் அழகென்றே அவை காட்டும். உகந்த இடத்தில் அமைந்தாலொழிய முழுமைகொள்ளாது. சுயோதனரே, அணி என்பது முழுமைக்கு ஒரு அணுவிடை மட்டும் முன்னரே நின்றுவிட்ட அழகுப்பொருள்” என்றார் அணியர். “அணிமுழுமை என்பது பொருள்களினூடாக பொருளுக்கு அப்பாற்பட்ட ஒன்றைச் சென்று தொடுவது. பொருட்களனைத்தையும் அது பொருளல்லாமல் ஆக்கிவிடுவது. அது இங்கு நிகழும். ஆணழகின் முழுமைகொண்ட உடல். அவருக்கு குறை இன்றி அணிபூட்ட வாய்ப்பு. தெய்வங்களின் தருணம் இது.”

அச்சொற்கள் துரியோதனனை ஆறுதல்படுத்தின. அவனே அதை விந்தையாக உணர்ந்தான். இறுதி ஆழி ஒன்றை எடுத்த அணியர் “தெய்வங்களே” என்றார். பின்னர் கண்களை மூடியபடி கைநீட்டி அதை கைபோனபோக்கில் அணிவித்தார். “என்ன?” என்று துரியோதனன் கேட்டான். “ஓர் அணிகலனை அவ்வாறு கைபோனபடி கண்நோக்காது அணிவிக்கவேண்டும் என்பது நெறி. அதை தெய்வங்கள் ஆற்றவேண்டும். அதுவும் அணிப்பிழை இன்றி அமையவேண்டும்.” அவர் கர்ணனை நோக்கிபடி சிலகணங்கள் விழிநிலைத்தபின் நீள்மூச்செறிந்து “ஆனால் அணிநிறைவு கொண்டது என்றால் அந்த ஆழி எங்கு சென்று அமைந்தாலும் அது உரிய இடமாகவே இருக்கும்” என்றார்.

“பிழையுண்டோ என நோக்குக!” என மூத்த அணியர் இளையோருக்கு ஆணையிட்டார். அவர்கள் பேசாமல் விழிநட்டு நின்றனர். “எஞ்சுவதென்ன?” என்று அவர் மீண்டும் கேட்டார். “நெட்டிமுறிப்பதற்குள் நோக்குவதே கணக்கு. தெய்வங்களிடம் ஒப்படைத்துவிட்டால் பின் இக்கலை நம்முடையதல்ல.” அணியர் ஒன்றும் சொல்லவில்லை. “ஒன்றுமில்லையா?” என்றார் முதிய அணியர். மூச்சொலியுடன் கலைந்த இளையோன் ஒருவன் “எவரும் முழுதும் நோக்கவில்லை, ஆசிரியரே. ஒன்று நோக்க அதுவே விழிமுன் திகழ்கிறது. இவ்வழகை நோக்கி முடிக்க எவர் விழிக்கும் இயலாது” என்றான். “நான் ஒரு கணையாழியை மட்டுமே நோக்கினேன். அதுகொண்டிருக்கும் அக்குழைவுக்கு அப்பால் இனி இப்புவியில் நான் நோக்கி மகிழ வேறேதுமில்லை.”

“அவ்வண்ணமென்றால் நிறைவுறுக!” என்றார் அணியர். கைகளைச் சேர்த்து நெட்டிமுறித்து “நிறைவுறுக! தெய்வங்கள் இவ்வழகை தான்கொள்க! மூத்தோர் மகிழ்க! தேவர்கள் மகிழ்க! இப்புவியில் அழகென எழுந்த அனைத்தும் மகிழ்க! ஆம் அவ்வாறே ஆகுக!” என்றார். அவர் விரல் எலும்புகளின் ஓசை தெளிவாகக் கேட்டது. கைகளை கால்முட்டில் ஊன்றி மெல்ல எழுந்து “தெய்வங்களே” என்றார். பின்னர் தன் கையை மும்முறை விரித்துக்காட்டி “இது என் முழுமை. இனி இக்கலை என் கைகளுக்கு இல்லை. அறிக தெய்வங்கள்” என்றார். “ஆம்! ஆம்! ஆம்!” என்று அவர் மாணவர்கள் கூவினர். பின்னர் அவர்கள் அனைவருமே மும்முறை விரல்விரித்து தங்கள் கலையை கையொழிந்தனர்.

கர்ணனை நோக்கி நின்றிருந்த துரியோதனன் நீள்மூச்செறிந்தான். அங்கு படுத்திருப்பவன் அவன் அறிந்த கர்ணன் அல்ல. அவனாக உருக்கரந்து தன்னுடன் உறைந்தவன். அவன் ஆடை என அக்கரவுரு களைந்து மீண்டுவிட்டிருக்கிறான். அவன் அந்த அழகுருவையே நோக்கிக்கொண்டிருந்தான். விழிகள் தவித்துத் தவித்து அதன்மேல் அலைந்தன. மின்னும் அணிகள். வைர இமைப்புகள். பவளக்குருதி. மரகதத் தளிர். வைடூரியத் துளிகள். வடித்து பொருத்தி இழைத்து தொகுத்து செதுக்கி அமைத்தவை. மலர்களை தளிர்களை கொடிகளை விழிகளை இறகுகளை கூழாங்கற்ளை நடிப்பவை. ஆனால் அவை இணைந்து மலரோ தளிரோ கொடியோ விழியோ இறகோ கூழாங்கல்லோ அல்லாமலாகிவிட்டிருந்தன.

அவன் உள்ளம் ஆழ்ந்த அமைதி கொண்டிருந்தது. முற்றிலும் துயரிலா நிலை. அதை அவன் நினைவறிந்த நாள் முதல் ஒருபோதும் உணர்ந்ததில்லை. அழகு கொந்தளிக்கச் செய்கிறது. எளிய அழகு உவகையால். பேரழகு துயரால். இறைமையின் அழகு இன்மையையே எஞ்சவிடுகிறது. அவன் உடல் மட்டும் மெய்ப்புகொண்டபடியே இருந்தது. முதிய அணியர் “நாம் முழுதணிக்கோலத்தை பார்ப்பதில்லை, சுயோதனரே. நாம் அணியணியாக பார்த்தவர்கள். நம் உள்ளம் இன்னமும் இவ்வணிகளை தனித்தனியாகவே நோக்குகிறது. ஒன்றுடன் ஒன்று இணைத்து விளையாடிக்கொண்டிருக்கிறது. கணத்திற்கொரு காட்சி சமைத்துக்கொள்கிறோம்” என்றார்.

அணியர் தன் கையிலிருந்த வெண்கல மணியை முழக்கினார். அப்பால் விலகி நின்றிருந்த ஏவலர்கள் உடலசைந்தனர். சுப்ரதர் அங்கிருந்து “பணிநிறைவுற்றதல்லவா?” என்றபடி அருகணைந்தார். இயல்பாக அவர் நோக்கு நின்றிருந்த துரியோதனனையே நாடியது. பின்னர் கீழே தழைந்து கர்ணனை நோக்கியது. சுடர் திடுக்கிடுவதுபோல ஓர் அசைவெழ நிமிர்ந்து பேருரு ஒன்றை நோக்குபவர்போல் விழிதூக்கி “கதிரோன்!” என்று அவர் சொன்னார். கைகளைக் கூப்பியபடி மெல்லிய நடுக்குடன் “துறந்தோன். கடந்தமைந்தோன்” என்றார்.

வெண்முரசு விவாதங்கள்

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/120122