அனோஜனின் யானை- கடிதங்கள்

யானை – அனோஜன் பாலகிருஷ்ணன் சிறுகதை

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

அனோஜன் பாலகிருஷ்ணன் அவர்களின் யானை கதை படித்தபின் துண்டு காட்சிகளாகவே மனதில் பதிகிறது. அல்லது படிமங்களாக அவற்றை இவ்வாறு தொகுத்துகொள்கிறேன்.

இக்கதை அறிதலின் ஒரு வழி பாதையாகத்தான் தோன்றுகிறது. போரின் விளைவுகளாக அல்ல. இரண்டு வெசாக் தினங்கள் (புத்த பௌர்ணமி), முதலில் யானை பார்ப்பதின் உற்சாகம் ஆனால் பார்க்க முடியவில்லை, முடிவில் கூண்டிற்குள் யானை, சுயந்தன் பொருட்ட்படுதாமல் பார்க்கிறான். ஆனால் வெசாக் பௌர்ணமி அறிதலின் நாளும்தான். ஆது சுயந்தன் யானை காணும் தினமாக வருகிறது. அந்த பிக்குவும் கனவில் தீயென எழுகிறார். “விண்ணிலிருந்து விடுபட்டு வந்த மின்னல் கீற்று” கணத்தில் ஏற்படும் அறிதலை குறிக்கிறதா. அது என்ன என வாழ்நாள் முழுவதும் இழப்பின் மூலம் அறிகிறான்.

அவன் வரையும் யானையின் சித்திரம் இப்படி வருகிறது. “நீண்ட வெள்ளைத்தாளை மேசை லாட்சிக்குள்ளிருந்து வெளியே எடுத்துவைத்தார். அதில் வண்ணங்கள் தாறுமாறாகப் பூசப்பட்டு இருந்தன” . ஒரு படிமமாக யானையல்லாமல், யானையின் விளைவினால் ஆன ஓவியம். இது தேவதேவனின் வார்த்தைகளில்

அப்பேர்ப்பட்ட கானகத்தைக் காட்டு விலங்கை

நான் கண்டதில்லை எனினும்

கண்டிருக்கிறேன் வேறு எங்கோ எவ்விதமோ

முறியும் பெருங்கிளைகள்

சாயும் குறுமரங்கள்

சிக்கித் தவிக்கும் உயிரினங்கள்

சரிந்த புதர்கள்

நடுவே

திடமாக

எதையோ

பூமியில் ஊன்றி விதைத்துப் போகும்

ஒரு விரல் போல்

யானை ஒன்று நடந்து செல்வதை

சுயந்தனின் மனதில் அந்த யானை ஊன்றி விட்டு செல்லும் விதை வளர்கிரது, ஒரு தாமரை மலராகவா?

அன்புடன்

ஆனந்தன்

பூனா

***

அன்புள்ள ஜெ

அனோஜன் பாலகிருஷ்ணனின் யானை கதையை வாசித்தேன். ஒரு மையப்படிமத்தை விளக்க முற்படாமல் குறைந்தபட்ச வார்த்தைகளில் சொல்லி நிறுத்திவிட அவரால் முடிந்திருப்பது நிறைவளிக்கிறது. சமீபத்தில் வாசித்த நல்ல கதைகளில் ஒன்று. சிறுகதைக்கு இப்படிப்பட்ட நீளமான கதைச்சரடு மிகமிக எதிரான ஒன்று. ஆனால் இந்தக்கதை எளிதாக எல்லா சரடுகளையும் இணைத்துப்பின்னி ஒரு ஒழுக்குள்ள கதையை உருவாக்கியிருக்கிறது. அந்தக் கதைகள் வழியாக யானை என்ற படிம்ம் ஓடிவந்து முடிவை அடைகிறது. நம் மனதில் வளர்கிறது. நான் அதை வளரும் இருட்டு என்றுதான் அர்த்தப்படுத்திக்கொண்டேன்

கே.எஸ்.நாராயண்.

***

முந்தைய கட்டுரைஉளநலன்
அடுத்த கட்டுரைதிராவிட இயக்கம்- ராஜ் கௌதமன்