‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-2

குருக்ஷேத்ரத்தின் தெற்குக்காட்டில் அந்தி அணைந்த பின்னர் சிதைச்சடங்குகள் தொடங்குவதற்கான முரசொலி எழத்தொடங்கியதும் கௌரவப் படைகள் ஒலியடங்கின. குருதிமணம் கொண்ட காற்று மெல்லிய சுழல்களாக கடந்துசென்றது. புண்பட்டவர்களை மருத்துவநிலைகளுக்கு கொண்டு சென்று சேர்த்துவிட்டு திரும்பிச்சென்ற சகடங்களின் ஓசை ஓய்ந்தது. தெற்குக்காடு நோக்கி சென்றுகொண்டிருந்த சுடலைச்சகடங்களின் ஒலிகள் கேட்டுக்கொண்டிருந்தன. முரசு முழக்கமும் கொம்புக்கூவலும் இணைந்த ஓசை காற்றில் கிழிந்து பறந்தது. போரின் முதல்நாள் அவ்வொலி எழுந்தபோது அது என்ன என்று பெரும்பாலானவர்களுக்கு புரியவில்லை. அதை உண்டாட்டுக்கான அழைப்பு என்றோ, வேறேதோ ஆணை என்றோ எண்ணிக்கொண்டார்கள். தொடர்ந்து கொம்புகள் ஒலிக்கத் தொடங்கியபோதுதான் அதிலிருந்த வேறுபாடு அவர்களின் செவிகளுக்கு உறைத்தது. தாளமும் சுதியும் இறங்குகதியில் இருந்தன. அது இறப்புச்சடங்குகளுக்குரியது என உணர்ந்ததுமே அனைவரும் அமைதியாயினர்.

தெற்கு எல்லையில் பரவிய அந்த ஓசையின்மை உருகிய மெழுகு இறுகுவதுபோல படைகளை நிலைக்கச் செய்தது. சற்றுநேரத்தில் இருபக்கப் படைகளும் விழிகள் வெறிக்க, உதடுகள் நிலைக்க, கைகள் ஓய அவ்வோசையைக் கேட்டு அமர்ந்திருந்தார்கள். படைகளை முற்றாகத் தழுவி பரந்து அவர்களின் தலைக்குமேல் எழுந்து நின்றது அவ்வோசை. வேறு எவரை நோக்கியோ எவரோ கூவி அறிவிக்கும் செய்தி. அவர்கள் அனைவரையும் ஆளும் தெய்வமொன்றின் ஓசை. அது ஒரு மாபெரும் கரிய பறவை. அதன் சிறகோசையும் கூவலும். பின்னர் அவர்கள் நடுவே அமர்ந்து சூதன் அதை “விண்ணிலிருந்து எழும் அழைப்பு. எப்போதும் அது ஒலித்துக்கொண்டிருக்கிறது. குருக்ஷேத்ரம் அதை நம் செவிக்குரியதாக்குகிறது” என்றான். “கேளுங்கள் வீரர்களே, அது நீத்தோருக்கு நாம் அளிக்கும் விடை. நீத்தோர் நம்மிடம் பேசும் சொற்களும் அதில் கலந்துள்ளன. ஒவ்வொரு முரசொலித்துடிப்பின் இடைவெளியிலும். ஒவ்வொரு கொம்புக்கேவலின் நடுவிலும். அதை செவிகூர்க!”

அந்த ஓசை விரைவில் நிலைக்கவேண்டும் என அவர்கள் விழைந்தனர். பின்னர் “போதும்! போதும்! போதும்!” என அகம் தவித்தனர். இதோ இதோ இதோ என எண்ணி காலத்தை எடையென உணர்ந்து சலித்தனர். ஓயாதா என ஏங்கினர். ஓய்க ஓய்க என தலையை பாறையில் அறைந்துகொள்வதுபோல அதன்மேல் மோதினர். இறுதியான கேவலோசையுடன் அது நின்றதும் இறுகிநின்ற தசைகள் தளர நாண் தொய்ந்த பாவைகள் என அமைந்தனர். அது மிகச்சிறு பொழுதே ஒலித்தது என அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால் அப்போது ஒரு முழு வாழ்க்கையையே வாழ்ந்து மீண்டிருந்தனர். முழுப் படையும் விடுபட்டு மண்ணிலமைவது பெரும்நுரைப்பரப்பு குமிழியுடைந்து மறைவதுபோல ஒட்டுமொத்தமான அசைவெனத் தெரிந்தது.

முதல்நாள் அதை காவல்மாடம் மீது நின்று நோக்கிக்கொண்டிருந்த பூரிசிரவஸ் அருகே நின்றிருந்த காவலர்தலைவனிடம் “படை என்பது ஓர் உடல் என இப்போதே அறிந்தேன். ஒரு முழுப்படையும் ஒற்றை நீள்மூச்சை விடுவதைக் கண்டேன்” என்றான். காவலர்தலைவன் அவன் அதை தனக்கென்றே சொல்லிக்கொள்கிறான் என உணர்ந்து மறுமொழி உரைக்கவில்லை. அவன் காவல்மாடத்திலிருந்து இறங்கிக்கொண்டிருந்தபோதே படைகள் மீளத்தொடங்கின. அழுத்தி வளைக்கப்பட்ட வில் நிமிர்வதுபோல அந்தத் தொய்வுநிலையிலிருந்து அவர்கள் தங்களை மீட்டுக்கொண்டார்கள். உரத்த குரலில் பேசிச்சிரித்தனர். கூச்சலிட்டனர். சிலர் எழுந்து கைதட்டி பாடி ஆடினர். உணவு பரிமாறுவதற்கான முரசொலி எழுந்ததும் மொத்தப் படையே பெருமுழக்கம் எழுப்பியது. வீரர்கள் அறியாது தங்களுக்கு உகந்தவர்களை நோக்கி செல்ல படைவிரிவு உருமாறியது. அந்த அசைவு ஒரு பறவை சிறகை விரித்தடுக்கிக்கொள்வது போலிருப்பதாக பூரிசிரவஸ் எண்ணினான்.

அவன் புரவியில் படைகள் நடுவே சென்றபோது எங்கும் சிரிப்பும் கொண்டாட்டமுமாக படைப்பெருக்கு கொந்தளித்துக்கொண்டிருந்தது. அவன் ஒவ்வொரு முகமாக நோக்கியபடி சென்றான். களித்துக் கூத்தாடுபவர்கள். கலங்களை எறிந்து பிடிப்பவர்கள். “சிரிப்பின் வழியாக அச்சத்தையும் ஐயத்தையும் துயரையும் அகற்றிவிடமுடியுமா என்ன? பேதைகள்!” என அவன் சொல்லிக்கொண்டான். ஒரு வீரன் வாளை மேலே தூக்கி வீசி அதன் கூர்முனையை வாயால் கவ்வினான். சூழ்ந்திருந்தோர் கூச்சலிட்டனர். “மிகப்பெரிய ஒன்றை நோக்கி அறைகூவுகிறார்கள். அதை எள்ளி நகையாடுகிறார்கள்” என்று பூரிசிரவஸ் சொல்லிக்கொண்டான். “அதை எவ்வகையிலும் சிறிதாக்கிவிட இயலாது என இவர்கள் அறிந்துமிருக்கிறார்கள். இது வெறும் நடிப்பு. இச்சிரிப்பு ஓர் அணித்திரை.” ஆனால் துரியோதனனின் குடிலை சென்றடைந்தபோது அவன் எண்ணம் மாறிவிட்டிருந்தது. “ஆம், சிரிப்பு என்பது உள்ளிருக்கும் நீர்ப்பெருக்கொன்றின் நுரை. அந்த நீர் எதையும் கழுவிக்களைந்துவிடும். எதிலிருந்தும் மீட்டுவிடும்” என்று சொல்லிக்கொண்டான். படையினர் அன்றுநிகழ்ந்த போரையே மறந்துவிட்டிருந்தனர். வலியை, இறப்பை ஆழத்திலும் எண்ணியிராதவர் போலிருந்தனர். அவர்கள் தங்களை அதற்கு முற்றளித்துவிட்டிருந்தனர்.

ஆனால் ஒவ்வொருநாளும் அந்த இடுநிலத்து முரசொலியின் எடையும் குளிரும் ஏறிக்கொண்டே இருந்தது. அதை ஒருமுறையேனும் கனவில் காணாதவர் அங்கில்லை. அணுக்கமானவர்கள் இறக்கநேர்ந்ததும் அது பன்மடங்கு இருள்கொண்டது. புண்பட்டு மருத்துவநிலையில் படுத்திருக்கையில் விண்ணின் எக்காளமாகவே ஒலித்தது. நாட்கள் செல்லச் செல்ல அது விண்ணிலிருந்து முகில்கள் கரும்பாறையென்றாகி அவர்கள்மேல் பொழிவதுபோல இறங்கியது. ஒவ்வொரு முறையும் அவர்கள் அவ்வொலியைக் கேட்டு ஓசையடங்கிச் சுருண்டனர். பின்னர் விடுபட்டு கூச்சலுடன் எழுந்தனர். அந்தத் தாளத்தை தங்கள் உணவுக்கலங்களில் எழுப்பினர். வாயால் கொம்போசையை உருவாக்கினர். களியாட்டுக்களில் அவர்கள் மீளமீள இறப்பை நடித்தனர். கள்மயக்கில் ஒருவன் நினைவழிந்தால் அவனை செத்த உடலென வைத்து வாயில் அரிசியிட்டு வெண்கூறை போர்த்தி விறகடுக்கிச் சிதையேற்றி விளையாடினர். அவன் எழுந்து சினந்தபோது அவனை பேயெனக் கருதி அஞ்சுவதாக நடித்து களிக்கூத்திட்டனர்.

ஆனால் சென்ற பதினாறு நாட்களில் இல்லாதபடி அன்று முரசொலி முழங்கி கொம்பொலி தேம்பி அமைந்த பின்னரும் அமைதி நீடித்தது. அன்று படைகள் மிகக்குறுகிவிட்டிருந்தன. அழிந்தவற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறியபடை ஒன்று குருக்ஷேத்ரத்தின் வடமேற்கு மூலையில் தொகுக்கப்பட்டிருந்தது.  . குருக்ஷேத்ரத்தின் புகையை அள்ளி காற்று அலையலையென விரித்தது. சென்று சுழன்று மீண்ட காற்றில் சுடலைத்தாளம் வலுத்து மீண்டும் தாழ்ந்தது.

குழந்தைபோல எழவிருக்கும் ஓசைக்காக செவிகளை முன்மடித்துக் காத்திருந்த இளைய யானை ஒன்று பொறுமையிழந்து “ர்ராங்?” என்று வினவியது. அதற்கு பிற யானைகள் மறுமொழி சொல்லவில்லை. தன் ஒலியை தானே உரக்கக் கேட்டு திகைப்படைந்து சுற்றிலும் நோக்கியபின் பிழைசெய்துவிட்டோமோ என எண்ணிய அந்த யானை அதை மறைக்கும்பொருட்டு அருகிலிருந்த மூத்த யானையின் பின்பக்கம் தன் கொம்புகளால் விளையாட்டாக குத்தியது. கொட்டிலின் தலைவியான முதிய பிடியானை முரசுத்தோலில் கோல் உரசிச்சென்றதுபோன்ற மெல்லிய ஒலியில் அதை அதட்ட துதிக்கையைச் சுருட்டியபடி பின்னடைந்து தன் முன் போடப்பட்டிருந்த உப்புநீர் தெளித்த வைக்கோலை அள்ளிச் சுருட்டி வாய்க்குள் திணித்து மெல்லத் தொடங்கியது. பிற யானைகள் அதை நோக்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தமையால் அதன் அசைவுகள் செயற்கையாக இருந்தன. தலையை மிகையாக ஆட்டி கழுத்துமணியை ஒலிக்கவிட்டது.

தெற்குச் சுடலைக்காட்டை நோக்கி அரசக்கொடி பறக்கும் முதன்மைத்தேர் செல்ல அதைச் சூழ்ந்து வேலும் வில்லுமேந்திய காவலர்களின் புரவிகள் சென்றுகொண்டிருந்தன. அதை வெறித்த விழிகளுடன் கௌரவப் படைவீரர்கள் நோக்கினர். தேர்த்தட்டில் துரியோதனன் நின்றிருக்கக் கண்டும் எவரும் வாழ்த்துரைக்கவில்லை. துரியோதனன் கைகளை மார்பில் கட்டியபடி நிமிர்ந்த தலையுடன் நின்றிருந்தான். தேரின் அசைவுகளுக்கேற்ப அவன் உடல் உலைவுகொள்ளவில்லை. காற்றில் ஒழுகிச்செல்வதுபோல் அவன் தெரிந்தான். வெண்ணிற மேலாடை மட்டும் அணிந்து தலையணியோ கவசங்களோ இன்றி தோன்றினான். எல்லைக்காவல்மாடமொன்றில் எரியத்தொடங்கியிருந்த பந்தவெளிச்சத்தை அவன் கடந்துசென்றபோது அவன் வெட்டுரு கூரிய மூக்கும் இறுக ஒட்டிய உதடுகளும் நிமிர்ந்த முகவாயுமாக அழகிய கருங்கல்சிலை எனத் தெரிந்தது. தலைக்குழல்களும் மீசையும் இமைமயிர்களும்கூட தெளிவாக துலங்கின. அவன் விழிகளில் அனல்துளி தெரிந்தணைவதுபோல தோன்றியது. அவன் நீள்நிழல் இப்பாலிருந்த காவலர்மாடத்தின் பலகைப்பரப்புமேல் விழுந்து சென்றது.

அவன் முன்பு எப்போதையும்விட அழகு கொண்டிருப்பதாக கௌரவ வீரர்கள் எண்ணினர். அவனுருவில் வேறேதோ தெய்வம் களமெழுந்துவிட்டதோ என்ற ஐயத்தை மீண்டும் கொண்டனர். சென்ற சிலநாட்களாகவே அந்த ஐயம் கௌரவப் படைகளில் இருந்தது. அது முதலில் மெல்லிய குரலில் உரையாடல்களில் சொல்லப்பட்டது, பின்னர் அதை சொல்வதை அவர்கள் அஞ்சி தவிர்த்தனர். ஆகவே அவர்களுக்குள் அது வளர்ந்தது. அவர்கள் அவனை கனவுகளில் கண்டனர். காகக்கொடியும் கரிய ஆடையும் அனலெரியும் விழியுமாக அவன் கழுதைமேல் அமர்ந்திருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த நிலத்தின் உருளைக்கற்களனைத்தும் தலையோடுகள். பற்கள் வெண்கற்களென பரவியிருந்தன. அவன் முன் நிழல்தொகைகள் என தெய்வங்கள் வந்து பணிந்துகொண்டிருந்தன. வானில் ஏழு முனிவர்களும் நடுங்கிக்கொண்டிருந்தனர்.

அவன் கடந்துசென்ற பின்னர் அவர்கள் நீள்மூச்செறிந்தனர். அவனுடைய தேர் படையெல்லை கடந்து தென்சுடலைக் காட்டுக்குள் மறைந்ததும் ஒவ்வொருவராக மீண்டும் நீள்மூச்செறிந்தனர்.

 

 

துரியோதனனின் தேர் வந்து நின்றதும் படைவீரர்கள் ஓடிவந்து அவனை சூழ்ந்துகொண்டார்கள். தலைமைக் காவலன் வாழ்த்துரை இன்றி பணிந்து “ஒருக்கங்கள் நிகழ்கின்றன” என்றான். துரியோதனன் தேரிலிருந்து இறங்கி வெற்றுவிழிகளால் அந்தச் சுடலைக்காட்டை சுற்றி நோக்கியபடி நடக்க வீரர்கள் படைக்கலங்கள் ஓசை எழுப்பாமலிருக்க அவற்றை உடலுடன் அழுத்திப்பற்றியபடி உடன் சென்றனர். அரசனுடன் அணுக்கக்காவலர் எழுவர் மட்டுமே வந்திருந்தார்கள். துரியோதனன் சீரான நடையுடன் செல்ல அவர்களின் நடையும் அறியாது அவ்வண்ணம் மாறிவிட்டிருந்தது. அச்சூழலில் அந்த நடை அச்சமூட்டும் விந்தைத்தன்மையை கொண்டிருந்தது. சுடலைக்காட்டுக்குள் பந்தங்கள் ஏற்றப்பட்டுவிட்டிருந்தன. ஆயினும் விழிதுலங்கும் வானொளியும் இருந்தது. அவர்களின் இரும்புக் குறடொலிகளை காட்டின் செறிவு எதிரொலித்தது.

சுடலைப்பணியாளர் பெரிய கூட்டுச்சிதைகளை ஒருக்கிக்கொண்டிருந்தார்கள். அவை மரங்களை அடுக்கிக் கட்டப்பட்ட வீடுகள் போலிருந்தன. விறகால் உருவாக்கப்பட்ட படிகளின் மேல் தொற்றி ஏறி மேலே சென்று அங்கே அரக்குப்பலகைகளை வைத்தனர். அடுக்கப்பட்டுக்கொண்டிருந்த சிதைகளின் மேல் நின்றிருந்தவர்கள் கீழிருந்து வீசப்பட்ட விறகுகளைப் பற்றி அதே விசையில் சுழற்றி வைக்க அவை சீராக அடுக்குகொண்டன. வீசுபவர்கள் “இதோ” என மூச்சொலியுடன் சொல்ல “வருக!” என மேலே நின்றவர்கள் சொல்லி அதை பற்றினர். அந்த உரையாடல் அப்பகுதியின் அமைதியில் ஓங்கி ஒலித்தது. துரியோதனன் நின்று ஒரு பெருஞ்சிதையை பார்த்தான். அது நீள்சதுரமாக விறகுகள் ஒன்றுடன் ஒன்று படிந்து சீராக உருவாகிக்கொண்டிருந்தது. பல குருவிகள் சேர்ந்து கட்டும் பெரிய குருவிக்கூடு போலிருந்தது. பணியின் ஒழுங்கு உள்ளத்தை ஆட்கொண்டிருந்தமையால் அரசன் நோக்கி நிற்பதை அவர்கள் உணரவில்லை. துரியோதனன் மீண்டும் நடந்தான்.

அரக்கும் நெய்யும் குங்கிலியமும் தேவதாருப்பிசினும் இணைந்த மணம் நிறைந்திருந்த சிதையருகே அவன் சென்றதும் அங்கே வீரர்கள் சிலர் அவனைக் கண்டு உடல்மொழி மாறினர். ஆணையிட்டபடி நின்றிருந்த இளைய அமைச்சர் சுப்ரதர் அதைக் கண்டு விழிதிருப்பி அவனைக் கண்டு பதறி வணங்கியபடி ஓடி அருகே வந்தார். அங்கே வரவேற்போ வாழ்த்தோ ஒலிக்கலாகாது என நாவை நினைவு கட்டுப்படுத்த என்ன சொல்வது என தவித்து கைவீசி சிதையை சுட்டிக்காட்டி “இன்னும் சற்றுப்பொழுதில் முடிந்துவிடும்” என்று தணிந்த குரலில் சொன்னார். அவர் குரல் அவருக்கே அயலாக ஒலித்தது. துரியோதனனின் இமைகளில்கூட அசைவு ஏதும் தெரியவில்லை. அவன் சிதையை வெறித்து நோக்கிக்கொண்டிருந்தான். ஆனால் நோக்கை உளமறிவதை முகம் காட்டவில்லை. சுப்ரதர் தொண்டையைக் கனைத்து “இளவரசருக்கு செய்தி சென்றிருக்கிறது. இளவரசரும் அரசியும் இங்கு அருகே சிறுநகர் சிபிரத்தில்தான் இருக்கிறார்கள்” என்றார்.

“அரசர் இங்கே வந்ததும் இளவரசர் சம்பாபுரிக்குச் செல்வதாக இருந்தார். ஆனால் அந்நாளே அரசி அங்கே வந்துவிட்டார். அவருக்கு தீக்கனவு வந்து வருகுறி சொன்னது என்கிறார்கள். அவர்கள் அங்கிருப்பது நன்றாக ஆயிற்று. உடனே கிளம்பி இங்கு வர இயல்கிறது” என்று சுப்ரதர் தொடர்ந்தார். “சிவதருடன் இளவரசரும் அரசியும் கிளம்பிவிட்டதாக செய்தி வந்தது. அங்கிருந்து அவர்கள் வந்து சேர்வதற்கு இரவுப்பொழுது முழுதும் தேவையாகும்.” துரியோதனன் விழிப்பு கொண்டவனாக “நீர் யார்?” என்றான். சுப்ரதர் ”நான் அங்கநாட்டின் சிற்றமைச்சனாகிய சுப்ரதன். விண்நிறைந்த அமைச்சர் உத்தானகரின் முதல் மைந்தன்” என்றார். துரியோதனன் அதை கேளாதவன்போல தலையசைத்தான். பின்னர் “ஹரிதர் வருகிறாரா?” என்றான். “இல்லை, அரசே. அவரே இப்போது சம்பாபுரியை ஆள்கிறார். சிவதருடன் அரசியும் இளவரசரும் வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றார். துரியோதனன் தலையசைத்தான். சிதையொருங்குவதை கைகளை நெஞ்சில் கட்டியபடி நோக்கி நின்றிருந்தான்.

அந்தத் தருணத்தின் இறுக்கம் சுப்ரதரை பதற்றம் கொள்ளச் செய்தது. அதை வெல்லும் பொருட்டு மீண்டும் பேசினார். “அறுசுவை அன்னங்களும் ஏழுவகை நறுமணங்களும் எட்டுவகை மங்கலங்களும் ஒன்பது அருமணிகளும் பத்துவகை மலர்களும் பன்னிருவகை விறகுகளும் பேரரசர்களின் சிதையில் வைக்கப்படவேண்டும் என்பது மரபு. நூல்களிலிருந்து ஆய்ந்து தேர்ந்து அனைத்தும் வந்தாகவேண்டும் என சிதையொருக்குபவர்களிடம் ஆணையிட்டேன். அவற்றில் பெரும்பாலானவை வந்துவிட்டன. எஞ்சியவை வந்துகொண்டிருக்கின்றன” என்றார். துரியோதனன் சிதையை இமையசையாது நோக்கியபடி நின்றதைக் கண்டபோது அவனை அங்கிருந்து அகற்றிக் கொண்டுசெல்லவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. அதில் மானுடருக்கில்லாத ஓர் இயல்பு இருந்தது. மானுடரால் விளங்கிக்கொள்ள முடியாத எவ்வுணர்வும் அச்சமூட்டுவதே.

வெறுமனே பேசுவதற்காகவே அவர் தொடர்ந்து பேசினார். “விஷ்ணுகிராந்தி, அருகு, முயல்செவி, திருதாளி, செறுளை, நிலப்பனை, கைதோன்றி, பூவாம்குறுந்தல், மூக்குற்றி, உழிஞை என பத்து மலர்களை சொல்கிறார்கள். அவற்றை இவ்வேளையில் எங்கே தேடுவது என்று தெரியவில்லை. ஆனால் சிதைப்பணியாளன் கீர்த்திமான் அவற்றை வேதியர் சிலர் பறித்து நிழலில் உலரச்செய்து நீற்றில் இட்டு பாளையில் பொதிந்து பாதுகாத்து வைத்திருப்பதுண்டு என்றான். உடனே சென்று அவற்றை வாங்கிவரும்படி ஆணையிட்டேன். ஏழுபேர் சென்றிருக்கிறார்கள்” என்றார். “ஒன்பது அருமணிகளும் இங்கேயே இருந்தன. பன்னிரு விறகுகளும் இக்காட்டிலிருந்தே எடுக்கப்பட்டுவிட்டன.” நெடுநேரமாக அவர் அங்கே பேசாமலேயே இருந்தார். பேசாதபோது சொற்கள் துளித்துளியாகத் தேங்கி அகம் எடைகொண்டுவிடுகிறது. அது சிறுநீர் கழிப்பதுபோலிருப்பதாக எண்ணி உளம் விலக்கிக்கொண்டார்.

அந்தப் பேச்சு விரிய விரிய அச்சூழல் அவருக்களித்த அனைத்து இறுக்கங்களிலிருந்தும் அவரை விடுவித்தது. தன் எண்ணங்கள் வெளியே சொற்களென வந்தபோது ஒழுங்கும் பொருளும் கொண்டிருந்ததை கண்டார். “எட்டு மங்கலங்கள் இடத்துக்கு இடம் வேறுபடுவன. அரண்மனை மங்கலங்கள் வேறு கான்மங்கலங்கள் வேறு. சுடலை மங்கலம் ஒன்று இருக்க இயலுமா? சுடலைக்கு ஏது மங்கலம்? ஆயினும் மூதாதையர் எங்கும் இறைவனை கண்டவர்கள். அனைத்துமங்கலனாகிய இறை இல்லாத இடமில்லை எனத் தோன்றியது. ஆகவே மூத்த சுடலைப்பணியாளரை வரவழைத்து உசாவினேன். சிதைமங்கலங்கள் என எட்டு இருப்பது இப்போதுதான் தெரிந்தது. பேரரசர்களுக்கு மட்டுமே அவை வைக்கப்படுகின்றன” என்றார். “ருத்ரவிழிக்காய், சிதைச்சாம்பல், எருக்கமலர், புலித்தோல், மான்கொம்பு, மழு, உடுக்கை, திருவோட்டில் நன்னீர் என எட்டு என்பதை அறிந்தேன். அவை ஒருங்கிவிட்டன.”

துரியோதனன் திரும்பி “அவர் உடல் எங்குள்ளது?” என்றான். அந்த நேரடி வினாவால் திகைத்த சுப்ரதர் “இங்கே… ஆனால் இங்கே இல்லை. அங்கே தெற்குமுனையில்… அங்கே சில சடங்குகள் எஞ்சியிருக்கின்றன” என்று பதறினார். “நான் அங்கே செல்லவேண்டும்” என்று துரியோதனன் சொன்னான். குரல் தணித்து, உடல் வளைத்து “அரசே, அங்கே மேலும் சில சடங்குகள் உள்ளன. அவை நிகழ்ந்துகொண்டிருக்கின்றன” என்று சுப்ரதர் சொன்னார். “பொதுவாக களம்பட்டவர்களை நீராட்டுவதும் புத்தாடை அணிவிப்பதும் வழக்கமில்லை. கவசங்களையும் படைக்கலங்களையும் மட்டுமே கழற்றுவார்கள். அணிகளின்றி படைக்கோலத்திலேயே அவர்கள் விண்ணேகுவார்கள். பேரரசர்களுக்கு மட்டுமே அணியாடைகளுடன் அரசகோலத்தில் சிதையேறும் முறை கடைபிடிக்கப்படுகிறது.” துரியோதனன் ”எங்கே?” என்றான். “வருக, காட்டுகிறேன்!” என்று சுப்ரதர் முன்னால் சென்றார்.

செல்லும்போதே “இவ்வண்ணம் முன்னரே அரசர் வந்து நோக்கும் முறைமை உண்டா எனத் தெரியவில்லை. வாழ்விலும் இறப்பிலும் அரசர்கள் முறைமைகளுக்கு கட்டுப்பட்டவர்கள். ஓர் அரசர் பிறிதொருவரை சந்திப்பது எந்நிலையிலும் ஓர் அரசநிகழ்வு. நெறிநின்று இயற்றப்படவேண்டியது” என்றார். துரியோதனன் ஒன்றும் சொல்லாமல் நடக்க “இங்கே மூத்த அமைச்சர்கள் என எவருமில்லை. நான் மட்டுமே உள்ளேன். எனக்கு இத்தகைய தருணம் இதுவே முதல்முறை” என்றார். அதை கேளாதவனாக துரியோதனன் “அங்கா?” என கைசுட்டிக் காட்டினான். அங்கே குறுங்காட்டின் புதர்களுக்கு அப்பால் பந்தங்களின் வெளிச்சம் தெரிந்தது. புதர்களின் முட்கள் அந்தச் செவ்வொளியில் புதைந்தவைபோல் கூர்கொண்டு தெரிந்தன. “ஆம், அங்குதான்” என்றார் சுப்ரதர். “ஆனால் அங்கே தாங்கள் செல்ல முறைமை உண்டா எனத் தெரியவில்லை. நான் வேண்டுமென்றால் உசாவிவிட்டுச் சொல்கிறேன். அப்பால் அஸ்தினபுரியின் சிற்றமைச்சர் விகிர்தர் இருக்கிறார்.”

அவர் சொற்களை செவிகொள்ளாமல் கனவிலென துரியோதனன் நடக்க அவர் பதறிய கால்களுடன் உடன் சென்றார். திரும்பி ஏவலனிடம் அரசர் அங்கே செல்வதை முன்னரே சென்று சொல்லும்படி கையசைவால் ஆணையிட்டார். ஒருங்கிக்கொண்டிருந்த சிதைகள் நடுவே சென்ற ஒற்றையடிப்பாதையில் துரியோதனன் நடந்தான். அத்திரிகளும் கழுதைகளும் சகடங்கள் ஒலிக்க மரக்கட்டை போட்டு உருவாக்கப்பட்ட பாதைகளினூடாக விறகுக்கட்டுகளைச் சுமந்து வந்துகொண்டிருந்தன. அப்பால் பெரிய பாதையில் வண்டிகளில் விறகும் அரக்குக்கட்டிகளும் வந்து இறங்கின. பணியாட்கள் எவரும் ஓசையெழுப்பவில்லை. ஆகவே அவர்களின் உடலசைவுகள் நிழலசைவுகளுடன் கலந்துவிட்டிருந்தன. அணுகும்போது அவர்களின் மூச்சுகளும் விலங்குகளின் இளைப்பாறல் ஓசைகளும் கலந்தொலித்தன. கொய்தெடுக்கப்பட்ட தலைகளை பனையோலைகளில் கட்டி கொண்டுவருவதுபோல அரக்குப்பொதிகள் உளமயக்கு அளித்தன.

கால்தயங்கி துரியோதனன் நின்றான். அவன் மூச்சு இறுகுவதை உடலசைவாகவே காணமுடிந்தது. சுப்ரதர் “இங்குதான்…” என்றபின் அவன் நின்றுவிட்டதை அறிந்து தானும் நின்றார். அவன் அங்கேதான் நின்றான், ஆனால் பின்திரும்பிவிட்டவன்போல் உடலில் ஓரு நுண்ணசைவு வெளிப்பட்டது. ”அரசே” என்றார் சுப்ரதர். அவன் அதை கேட்கவில்லை. அவர் “நான் சென்று பார்க்கிறேன். அணிசெய்யும் சடங்குகள் முழுமையடையவில்லை என்றால்…” என்றார். “தாங்கள் இப்போது சென்று பிறகு வரலாம். நான் செய்தியை அறிவிக்கிறேன்.” ஆனால் துரியோதனன் மீண்டு அவரை பொருட்படுத்தாமல் முன்னால் சென்றான். “தாங்கள் சற்றே ஓய்வெடுத்தபின் வருவதற்குக்கூட பொழுதுள்ளது” என்றபடி சுப்ரதர் பின்னால் நடந்தார்.

குறுங்காட்டுக்குள் புதர்களை வெட்டி உருவாக்கப்பட்ட நீள்வடிவ முற்றத்தில் தரையில் மரவுரிமேல் வெண்பட்டு விரிக்கப்பட்டு அதில் கர்ணனின் உடல் படுக்கவைக்கப்பட்டிருந்தது. சுடலைப்பணியாளர் அவன் உடலை நறுமண நீரால் கழுவி அணிசெய்துகொண்டிருந்தார்கள். அவன் உடலில் பாய்ந்திருந்த அம்புகளைப் பிடுங்கி புண்களில் கஸ்தூரியும் கோரோசனையும் புனுகும் அரக்குடன் கலந்த பிசின் வைத்து மூடி வெண்பட்டுநாடாவால் கட்டி அதன்மேல் ஆடைகளை அணிவித்திருந்தனர். இருவர் இடையில் நீள்கச்சென சுற்றப்பட்ட பொன்னூல் பின்னிய வெண்பட்டாடையின் முனைகளைப் பிடித்து அமைத்து பொன்னூசிகளைக் கொண்டு தைத்துக்கொண்டிருந்தனர். அவர்களின் கைத்தொடுகைக்கு அசைந்த அவன் உடலில் உயிர் இருப்பதுபோலத் தோன்றியது.

துரியோதனன் அவன் முகத்தை கூர்ந்து நோக்கிக்கொண்டு மெல்ல அருகணைந்தான். அவன் அருகே சென்றதும் சூழ அமர்ந்திருந்த அனைவரும் எழுந்தனர். நின்றிருந்தவர்களும் விலகினர். துரியோதனன் கர்ணனுடன் தனியாக என நின்றிருந்தான். பெரும்பாலும் கர்ணனுடன் தனித்திருக்கையில் அவன் உரையாடுவதில்லை. கர்ணன் மீசையை சுட்டுவிரலால் நீவி முறுக்கியபடி உடல்சரித்து கால்களை நீட்டி விழிசாய்த்து நிலம்நோக்கி அமர்ந்திருப்பான். கைகளை மார்பில் கட்டியபடி நேர்முன்னால் நோக்கியபடி அவன் சீர்நிலை கொண்ட உடலுடன் அமர்ந்திருப்பான். துச்சாதனன் அவர்களின் அமைதியை அறிவான். உள்ளே வந்ததும் தாழ்ந்த குரலில் “மூத்தவரே” என்பான். இருவரும் ஒரே கணம் இடம் மீள்வார்கள். “ஆம்” என்று துரியோதனன் சொல்வான். பின்னர் பேசத்தொடங்கும்போது இருவரும் ஒன்றையே எண்ணிக்கொண்டிருந்ததை அவன் உணர்வதுண்டு. சொல்லில்லா வெளியொன்றில் அவர்கள் பேசிக்கொண்டதைப்போல.

காற்றில் ஒளி அசைய கர்ணனின் முகம் உயிர்கொண்டு ஏதோ சொல்லெழுவதுபோல் உளம்திடுக்கிடச் செய்தது. விழிகள் மூடியிருந்தன என்றாலும் சற்றே விலகி வெண்பற்களின் கீழ்விளிம்புநிரையைக் காட்டிய உதடுகளில் புன்னகை இருப்பதாகத் தெரிந்தது. இறந்தவர்களின் உடல்களிலிருந்து உடனடியாக வெளியேறி உடலை வெறும் ஊன்பொதியாக மாற்றும் ஒன்று அவனிடம் தங்கிவிட்டதுபோலத் தோன்றியது. அவன் இறந்த பின்னர் நாவிதர் அவன் முகத்தை மழித்திருந்தனர். பச்சைப்பாசி படர்ந்த கருங்கல் சிலை எனத் தெரிந்தன அவன் கன்னங்கள். பெருமல்லர்களுக்குரிய உறுதியான கழுத்திலும் விரிந்தகன்ற தோள்களிலும் வேர்நரம்பு கிளைவிரித்து இறங்கிய கைகளிலும் உயிரின் மிளிர்வு இருந்தது.

துரியோதனனால் விழிகளை விலக்க இயலவில்லை. என்ன கருமை என்னும் எண்ணம் எழுந்தது. மணிக்கருமை என அவனைப்பற்றி பாவலர் பாடுவதுண்டு. இருட்கனி என்றார் ஒரு தென்னகப் பாணர். அக்கருமையை அவன் எப்போதும் நோக்கி வியந்தது உண்டு. ஆனால் அப்போது மேலும் காரொளி கொண்டுவிட்டதுபோலிருந்தது அவன் உடல். கடுவெளியெங்கும் அணுவிடை விடாது நிறைந்திருக்கும் இருளின் வண்ணம் முழுத்துச் சொட்டிய துளி. இருள்வேழத்தின் விழி. அவன் சூதர்களின் சொற்களை தன்னுள் இருந்தென கேட்டுக்கொண்டிருந்தான். கர்ணன் சம்பாபுரியின் அரண்மனையில் அமர்ந்திருந்தான். “ஆரா அழகென்பது அமைந்த நீளுடல். அள்ளி வழங்கி வேள்விக் கனல்கொண்ட விரி கைகள்!” அவன் முன் அமர்ந்து பாணன் பாடிக்கொண்டிருந்தான். “பொன்னொளிர் நெஞ்சே உன் கவசமென்றாகியது” அவன் மெல்லிய விதிர்ப்பை உணர்ந்தான். கர்ணனின் மார்பில் அவன் அனல்பரப்பென சுடர்கொண்டிருந்த பொற்கவசத்தைக் கண்டான்.

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைமாறுதலின் இக்காலகட்டத்தில்…
அடுத்த கட்டுரைசென்னை கட்டண உரை குறித்து…. அகரமுதல்வன்