மூடர்களின் நாக்கு

அன்புள்ள ஜெ,

நான் உங்கள் தளத்தின் வாசகன். நீங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டிருக்கிறேன். உங்கள் பல வாசகர்களுடன் தொடர்பிலும் இருக்கிறேன். இன்று உங்கள் வாசகர்களாக இருந்து எழுத்தாளர்களாக எழுந்தவர்கள் பலர் உள்ளனர். பலர் தங்கள் அளவிலேயே இலக்கிய இயக்கங்களாகச் செயல்படுகிறார்கள்.  இலக்கிய விவாதங்களை ஒருங்கிணைக்கிறார்கள். நூல்களை வெளியிடுகிறார்கள். இந்தத் தளத்தில்தான் தமிழில் வெளிவரும் முக்கியமான நூல்களைப் பற்றி, உலக இலக்கியப்படைப்புகளைப் பற்றி உங்கள் வாசகர்கள் எழுதும் ஆழமான கடிதங்களும் கட்டுரைகளும் வெளிவருகின்றன. பொருளியல் கட்டுரைகள் வெளியாகின்றன. உங்கள் வாசகர்களின் பயணங்கள், கலைரசனைச்செய்திகள் வெளியாகின்றன.  இந்தத் தளத்திற்கு வெளியே இந்த தரத்திற்கு ஒரு குறிப்பைப் பார்க்கவேண்டுமென்றால்கூடத் தேடித்தான் செல்லவேண்டும் . இங்கே வெளிவருவதுபோன்ற ஒரு கடிதத்தையே முகநூலில் எழுதும் எவரும் எழுதுவதில்லை. இலக்கிய அழகியல் பற்றிய பேச்சே இன்றைக்கு இந்த  வட்டத்திற்குள் மட்டும்தான் உள்ளது என்றுகூட தோன்றுகிறது. உங்கள் நிகழ்ச்சிகளுக்கு வந்த அத்தனை எழுத்தாளர்களும் அவர்களின் நூல்களை படித்துவிட்டுப் பேசும் இத்தனை வாசகர்களை எங்குமே கண்டதில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் இணையத்தில் உங்களை வசைபாடும் கும்பல் அனேகமாக அனைவருமே [சமீபத்தில் சமஸ்] உங்கள் வாசகர்களை அறிவற்ற வழிபாட்டுக்கும்பல் என்று தவறாமல் முத்திரை குத்துகிறது. அது இடதுசாரி ஆனாலும் சரி வலதுசாரி ஆனாலும் சரி. இவர்கள் எவர் என்று பார்த்தால் வாசிக்கும் வழக்கமே இல்லாதவர்கள். இலக்கியம், தத்துவம் கலை வரலாறு எதுபற்றியும் அறிமுகம் கூட இருப்பதில்லை. கட்சி அரசியல் சினிமா ஆகிய இரண்டையும் பற்றி திரும்பத்திரும்பப் பூசலிட்டுக்கொண்டிருப்பார்கள். சிலர் ஏதாவது மொக்கை கவிதைகளும் எழுதியிருப்பார்கள். இந்த மொண்ணைகளிடம் என்ன பேச்சு என்றுதான் பெரும்பாலான இலக்கியவாசகர்கள் இவர்களிடம் விவாதிக்கச் செல்வதில்லை.  இவர்களால் இந்த இணைய தளத்தில் உங்கள் வாசகர்கள் இலக்கியம், வரலாறு, கலை பற்றி எழுதும் எதையாவது வாசித்துப்புரிந்துகொள்ளமுடியுமா என்று பார்த்தால் முடியாது

இவர்களுக்கு இந்த தன்னம்பிக்கை எப்படி வருகிறது என்றுதான் ஆச்சரியமாக இருக்கிறது. அந்தத் தன்னம்பிக்கையை எவராலும் குலைக்க முடியாது. அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று காட்டினாலும்கூட அவர்கள் கூச்சப்படுவதுமில்லை. ஆச்சரியமாகவே இருக்கிறது.

சுந்தர்

***

அன்புள்ள சுந்தர்

இந்தக் கூட்டம் என்றும் உள்ளது. இதே கேள்வியை நான் சுந்தர ராமசாமியிடம இதே ஆச்சரியத்துடன் கேட்டதும் நினைவுள்ளது.

நான் எழுதவரும்போது முகநூல் எல்லாம் இல்லை. ஆனால் அன்றும் இடதுசாரிகள், திராவிட இயக்கத்தவர் மிகுந்த தன்னம்பிக்கையுடன், பிற அனைவரையும் எள்ளி நகையாடி கருத்துச் சொல்வார்கள். பிறரை திருத்தியமைக்க, வழிகாட்ட முற்படுவார்கள். எல்லாவற்றையும் விளக்குவார்கள்.  ‘நல்லா யோசிச்சுப்பாருங்க’ என்றும் ‘கொஞ்சம் புரிஞ்சுகிடுங்க’ என்றும்தான் பேசுவார்கள். மார்க்ஸியர்களுக்கு அவர்களுடைய கலைச்சொற்கள் மேலதிக நம்பிக்கையை அளிக்கும்.

ஒரு தோழர் ஒருமுறை அ.கா.பெருமாளுக்கு கல்வெட்டு வாசிப்பைப் பற்றி வகுப்பெடுத்தார். அந்த தோழருக்கு கல்வெட்டு என்றால் ஆலயச்சுவர்களில் அல்லது பாறைகளில் கல்லில் எழுதப்பட்டிருக்கும் என்பதே தெரியவில்லை. அவர் அதை கற்பலகை என நினைத்திருந்தார். சோழர்காலக் கல்வெட்டுக்கள் இன்றைய தமிழில் அமைந்திருக்காது என்பதும் தெரியவில்லை. ஆனால் அ.கா.பெருமாள் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் என்று தெரியும்

தோழரின் அறியாமையைச் சுட்டிக்காட்டி அவரை நிறுத்த நான் முயன்றேன். ஆனால் நான் சொன்னது அவரை எவ்வகையிலும் கூச்சமோ தளர்ச்சியோ அடையச் செய்யவில்லை.  அவர் மேலதிகத் தன்னம்பிக்கையுடன் பேச ஆரம்பித்தார். அப்போதுதான் நான் சுந்தர ராமசாமியிடம் மனமுடைந்து அந்த வினாவை எழுப்பினேன்.

சுந்தர ராமசாமி சொன்னார், அந்த உளநிலை மதத்திற்குரியது.  மதத்தில் இருந்து அது கட்சிகள், கொள்கைகள், கோட்பாடுகளுக்கும் வருகிறது. மதம் என்பது உறுதியான நம்பிக்கையால் ஆனது. அத்தகைய உறுதியான நம்பிக்கை தான் மெய்யைச் சென்றடைந்துவிட்டதாக ஒருவரை நம்பச் செய்கிறது. அதன் அடிப்படையில் உலகிடம் பேசுவதற்கும் உலகையே சீர்திருத்துவதற்கும் அவர் முயல்கிறார். எதிர்ப்பு மாற்றுக்கருத்து எதையும் தன் நம்பிக்கைக்கு எதிரான ‘சோதனை’ என்றே எடுத்துக்கொள்கிறார். மேலும் வெறிகொண்டு வாதிடுகிறார். தன் அனுபவங்கள் வழியாக அவரே உடைந்து அதிலிருந்து வெளிவராதவரை அவருக்கு மீட்பில்லை.

நம்மூர் கிறித்தவப் போதகர்களை சரியான உதாரணமாகச் சுட்டிக்காட்டலாம். பைபிளின் நூறு வசனங்களுக்கு அப்பால் அவர்களுக்கு ஏதும் தெரியாது. ஆனால் உலகிலுள்ள பிறர் அத்தனைபேரும் ‘அஞ்ஞானிகள்’தான். அறியாமையில் உழலும் மந்தைகள்தான். எந்த வகை அறிவார்ந்த விவாதமும் அவர்களை சென்றடையாது, அவையெல்லாமே சாத்தானின் சொற்களாகவே காதில் விழும். இங்கே இந்துவெறியை முன்வைப்பவர்களும் சரி பிற கட்சிகளின் அடிமாட்டுத் தொண்டர்களும் சரி, அனைவருமே இதே நிலையில்தான் இருக்கிறார்கள்.

அறியாமை அளிக்கும் தன்னம்பிக்கைக்கு அளவே இல்லை. நாராயணகுரு சொன்னதுபோல ‘அறிவுக்கு எல்லையும் எதிர்ப்பும் உண்டு. அறியாமைக்கு இரண்டும் இல்லை’ [அறிவினு அதிருண்டு எதிருண்டு. அறிவிலாய்மைக்கு ரண்டுமில்ல] அது ஒரு கோட்டைபோல நின்று காக்கிறது. அதிலும் இதழாளர்கள் எதையும் எழுத ஊடகம் இருப்பதனாலேயே உலகை வழிநடத்தும் பொறுப்பிலிருப்பதாக எண்ணிக்கொள்கிறார்கள் [சமஸ் நான் எப்படி நல்ல மனிதனாக வாழ்வது என அறிவுறுத்திருந்தார். சோட்டா இதழாளனின் வழிகாட்டு அருளுரை பெறுவது இங்கே பெரியமனிதர்களுக்குரிய தலையெழுத்து. என்னையும் பெரியமனிதராக ஆக்கிவிட்டார்கள் போல]

ஆனால் ஒன்று கவனியுங்கள். மதம் கொள்கை எதுவானாலும் இது தொண்டரின் உளநிலை மட்டுமே. தலைவர்களோ சிந்திப்பவர்களோ இந்த மிகையான தன்னுறுதி கொண்டிருப்பதில்லை. அவர்களுக்கு மாற்றுத்தரப்பு தெரியும். அதைச் செவிகொள்ளவும் பழக்கமிருக்கும்.

இணையத்தில் சிலகாலம் முன்னர் ஒருவர் ஒரு முகநூலர் ‘ஜெமோ வாசகரிடம்’ பேசியதை எழுதியிருந்தார். அதை ஒருவர் எனக்கு அனுப்பியிருந்தார். அவரை  நான் வாசித்திருக்கிறேன். சற்றே தாராளமாக அவரை மதிப்பிட்டால் ஒருவகை  ‘நயத்தகு மடையர்’ என்று சொல்லலாம்.  அதாவது கலைச்சொற்கள் தெரியும். அவர் எழுதியதன் சாரம், அந்த ஜெமோ வாசகர் அசட்டுத்தனமாக பேச இந்த மேதை அவரை கருணையுடன் மன்னித்து விட்டாராம். இதனூடாக அவர் தனக்கு ஒரு இடத்தைக் கற்பனைசெய்கிறார். அந்த இடத்தை அவருக்கு எவரும் அளிக்கப்போவதில்லை என்று தெரியுமளவுக்குக்கூட  அவருக்கு கூர்மை இல்லை.

இன்னொரு வகை அசடுகள் உண்டு. இந்த மடையர்களின் முத்திரையை அஞ்சி ‘எனக்கு ஜெமோ கிட்ட கருத்துவேறுபாடு உண்டு ஆனா…’ என ஆரம்பிப்பவர். எனக்கு இந்தவகையினர் மீது எந்த மதிப்பும் இல்லை. உண்மையான கருத்துவேறுபாடு என்பது நேருக்குநேர் எழுவது. அது சொல்பவரின் ஆளுமையின் ஒரு பகுதி. என் நண்பர்களில் பாதிப்பேர் என்னுடன் முரண்பட்டு விவாதிப்பவர்களே. அவர்கள் வந்தடைந்த கருத்துநிலை அது. அதற்குப்ப்பின் ஓர் அறிவுப்பயணம் உள்ளது

உதாரணமாக, பாலா. அவருடைய அரசியல் பொருளியல் கருத்துக்களில் எதையேனும் எப்போதேனும் நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேனா என்றே ஐயமாக இருக்கிறது . அவர் கட்டுரைகளில் பாதியை நான் என் தளத்தில் பிரசுரம் செய்துமிருக்கிறேன்.நண்பர் சிங்கப்பூர் சரவணன் விவேகானந்தன், டோக்கியோ செந்தில் போன்ற திராவிட இயக்க ஆதரவாளர்களும் ராஜமாணிக்கம் போன்ற தீவிர இந்துத்துவர்களும் அடங்கியதே என் நட்பு வட்டம். விவாதங்கள் நிகழும். ஆனால் இவர்கள் எவரும் எங்கும் ‘நான் அவரோட வாசகர்தான் ஆனா…’ என ஆரம்பிக்கும் நிலையில் இல்லை. ஒருவர் தன் கருத்துகுறித்த தன்னம்பிக்கை கொண்டிருந்தார் என்றால் அவருக்கு அடையாளங்கள் முத்திரைகள் குறித்த தயக்கம் இருக்காது.

இங்கே சிந்திப்பவர்கள் எதிர்கொள்ளவேண்டிய முதல் ஆயுதமே மூடர்களின் தன்னம்பிக்கைதான்

ஜெ

முந்தைய கட்டுரைஈரோடு விவாதப்பயிற்சி முகாம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅறிவியல் சிறுகதைப்போட்டி முடிவுகள்