திராவிட இயக்கம்- ராஜ் கௌதமன்

திராவிட இயக்க இலக்கியம் – சாதனைகளும் மிகைகளும்

திராவிட இயக்க இலக்கியம்- முடிவாக…

அன்புள்ள ஜெ

சமஸ் அவர்களின் கட்டுரையை மறுத்து எழுதியிருந்தீர்கள். ராஜன் குறை, ராஜ் கௌதமன் போன்றவர்களின் கட்டுரையைச் சுட்டிக்காட்டி அவற்றுடன் விவாதிக்கும்படி சமஸ் அறைகூவியிருந்தார். நீங்கள் பதில்சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

என்.திவாகர்

***

அன்புள்ள திவாகர்,

நான் எவரிடம் விவாதிப்பது என்பதை நானே முடிவுசெய்வேன். என் நேரம் எனக்கு முதன்மையானது. விவாதம் சரியா பிழையா என முடிவுசெய்யவேண்டியவர்கள் வாசகர்கள். நான் ராஜன்குறையிடம் விவாதிப்பதில்லை. 2003ல் நான் மு.கருணாநிதி அவர்களின் இலக்கியத்தகுதி பற்றி பேசியபோது அன்று சன் டிவி ஊழியராக இருந்த மாலன் திராவிட இயக்கத்திற்காகவும் கருணாநிதிக்காகவும் களமாடினார். நான் அவரை பொருட்படுத்தவே இல்லை. ஏனென்றால் மாலன் யார் என எனக்குத்தெரியும் – இன்று எல்லாருக்கும் தெரியும். ராஜன் குறை யார் என எனக்கு முப்பதாண்டுகளுக்கும் மேலாக  நன்றாகவே தெரியும்.தொழில்முறை வக்கீல்களிடம் விவாதிப்பது வெட்டிவேலை. அதிலும்  அடிப்படைகளைப் புரிந்துகொள்ளும் திராணியற்ற அசட்டுவக்கீல் என்றால் விவாதிப்பது பித்துக்குளித்தனம்.

[மார்க்ஸியமா, திராவிடமா, நக்ஸலிசமா, தமிழ்த்தேசியமா, பார்ப்பனிய எதிர்ப்பா, இந்துத்துவமா எதுவானாலும் ஐயங்கார்களிடம்தான் விவாதிக்கவேண்டும் என்பதைப்போல அபத்தச்சூழல் திராவிடத் தமிழகம் தவிர வேறெங்காவது இருக்குமா? வஹாபிய ஐயங்காரிசம் ஒன்று மட்டும்தான் இப்போது இல்லை. கொஞ்சநாளில் அதுவும் வந்துவிடும்.]

*

திராவிட இயக்கம் பற்றிய ராஜ் கௌதமனின் கருத்தாக தி ஹிந்து பிரசுரித்துள்ள – சமஸ் மேற்கோள்காட்டும் – அக்கட்டுரை 1995 வாக்கில் அவர் எழுதியது. அன்று அவர் இருந்த கருத்துநிலை அது. அச்சூழலைப் புரிந்துகொள்ள ஒரு பின்னணி அறிதல் தேவை. 1991ல் அம்பேத்கர் நூற்றாண்டு . அதை ஒட்டி 1981 முதல் பத்தாண்டுக்காலம் அம்பேத்கரின் கருத்துக்களை இந்தியா முழுக்க கொண்டுசெல்லும் திட்டம் ஒன்று மகாராஷ்டிரத்தில் உருவானது. கர்நாடகத்தில் டி.ஆர்.நாகராஜ் அதன் முகமாக திகழ்ந்தார். அது மகாராஷ்டிரத்திலிருந்து குஜராத்துக்கும் கர்நாடகத்திற்கும் சென்றது. அரசியலில் தலித் எழில்மலை போன்றவர்களும் இலக்கியச் சூழலில்  தமிழவன், அ.மார்க்ஸ் போன்றவர்களும் அதைப்பற்றிப் பேசலாயினர். தலித் என்னும் சொல் இங்கே வந்தது. அம்பேத்கர் குறித்த ஆய்வுகள் உருவாயின. ஊருக்கு ஊர் அம்பேத்கர் படிப்பகங்கள் உருவாயின. அம்பேத்கர் சிலைகள் திறக்கப்பட்டன.

அதையொட்டி அம்பேத்கரையும் பெரியாரையும் இணைத்து, ஈவேரா அவர்களை ஒருபடி மேலாக நிறுத்தி, சொல்லப்போனால் அம்பேத்கர் ஒரு குட்டிப்பெரியார் என்னும் கோணத்தில் பேசும் ஒரு தரப்பு மெல்ல உருப்பெற தொடங்கியது. நுணுக்கமான சொல்லாடல்கள் வழியாக இது கட்டமைக்கப்பட்டது.அம்பேத்காரியத்திற்கு பதிலாக, அம்பேத்காரியத்துடன் இணைத்து பெரியாரியம் என்னும் சொல் பயிலத்தொடங்கியது.  1991 ல் சோவியத் ருஷ்யா உடைந்ததும் புரட்சியில் நம்பிக்கையிழந்த இடதுசாரி அமைப்புகளில் இருந்து வெளியேறியவர்கள் பெரியாரியம் நோக்கிச் சென்றனர். எஸ்.வி.ராஜதுரை போன்றவர்கள் அப்போதுதான் புதுப்பெரியாரியர்களாக தோன்றினர்.

அந்த சிந்தனை அலையின் உருவாக்கமே மிகக்குறுகிய காலம் மட்டும் வெளிவந்த நிறப்பிரிகை. அதில் இருந்த இரு தலித்துக்கள் ரவிக்குமாரும், ராஜ் கௌதமனும். விரைவிலேயே அவர்கள் அதிலிருந்து அகன்றனர் தமிழகத் தலித் சிந்தனை அதன்பின்னரே உருவானது. தலித் இயக்கங்கள் தோன்றி வலுப்பெற்றன. ரவிக்குமாரும் ராஜ் கௌதமனும் அவற்றுடன் இணைந்து பணியாற்றினர். ரவிக்குமார் ஈவேரா மேல் மிகக்கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

நிறப்பிரிகையில் எஞ்சிய இடைநிலைச் சாதியினர் பெரியாரியர்களாக நீடிக்க அவர்களை தலித் சிந்தனையாளர்கள் விமர்சித்து நிராகரித்தனர். பெரியாரியர்களின் செயல்பாடுகள் நுட்பமாக  அம்பேத்காரை மறைக்கும் தன்மை கொண்டிருந்தன. அம்பேத்கரை முதன்மைத்தலைவராக ஏற்பதற்கான தயக்கமே அவற்றின் உண்மையான உள்ளீடு.  தலித் முன்னோடிகளின் நூல்கள் அச்சேறியது, தலித் முன்னோடிகள் பண்பாட்டில் பேசுபொருள் ஆனது, தலித் இலக்கியம் உருவானது எல்லாமே பின்னர் அந்த பெரியாரிய அலையில் இருந்து பிரிந்து தலித் இயக்கம் உருவானபோதுதான்.

.ஈவேரா அதுவரை திராவிட இயக்கத்தின் பழைய முகங்களில் ஒன்றாகவே இருந்தார். திராவிட இயக்கத்தின் முகமாக அன்று இரு கட்சியினராலும் நிறுத்தப்பபட்டவர் அண்ணாத்துரைதான். அதுவும் கட்சிச்சூழலில் மட்டும். நிறப்பிரிகை காலகட்டத்தில்தான் அறிவியக்கச் சூழலில் ஈவேரா ஓர் முதன்மை ஆளுமையாக முன்வைக்கப்பட்டடார்.  ஈவேராவுக்கு சிந்தனையாளரின் நிறம் அளிக்கப்பட்டது . அதைச் செய்தவர்கள் முன்னாள் இடதுசாரிகள். அதுவரை அறிவுச்சூழலில் ஈவேராவை முன்வைத்துப்பேசிய ஓர் ஆளுமைகூட இருக்கவில்லை அதில் முதன்மையானவர்கள் அ.மார்க்ஸும் எஸ்.வி.ராஜதுரையும். வியப்பிற்குரிய செய்தி, அந்தச் சொல்லாடல்களில் பெரியாரியர்களால் அண்ணாத்துரை மிகஎதிர்மறையாகவே பேசப்பட்டார். ஈவேராவின் ‘கலக’ச்சிந்தனைகளை வாக்குவங்கி அரசியலுக்காக மழுங்கடித்தவர் என்னும் கோணத்தில். இன்று அண்ணாத்துரை மகத்தான சிந்தனையாளராக மீட்டு எடுக்கப்படுகிறார். அதே ஓய்வுபெற்ற மார்க்ஸியர்கள் கிளம்பி வருகிறார்கள்.

ராஜ் கௌதமன் நிறப்பிரிகையுடன் இருந்த காலகட்டத்தில் எழுதியது அக்கட்டுரை.ராஜ் கௌதமன் நிறப்பிரிகை காலகட்டத்தைக் கடந்தபின்புதான் அவருடைய அழுத்தமான ஆய்வுநூல்கள் அனைத்தும் வெளிவந்தன. அந்த ஆய்வுநூல்களில் ராஜ் கௌதமன் திராவிட இயக்கம் உருவாக்கிய பழந்தமிழ்ப்பொற்காலம் என்ற கருத்து எப்படி ஒரு நவீன ஃபாஸிஸத்தின் அடிப்படையை கட்டமைத்தது என்று ஆராய்கிறார். அது உண்மையில் எவருடைய பொற்காலம் என்று வினவுகிறார். பொற்காலங்களைக் கட்டமைக்கும் அந்தப் பார்வையில் உள்ள இடைநிலைச் சாதிய உள்ளடக்கம் என்ன என்றும் மிக மிக விரிவாக எழுதுகிறார்.

தன் ஆய்வுநூல்களில் ராஜ் கௌதமன் சங்க காலம் முதல் இங்கெ தொடர்ந்து வளர்ந்து வந்த  சாதியக் கட்டமைப்பு, ஒடுக்குமுறை , அதற்குரிய கருத்துநிலைகள் ஆகியவற்றை எடுத்துக் காட்டுகிறார். அவ்வகையில் தமிழ்ப்பண்பாடு உருவாக்கிய அறம் என்னும் கருத்து எப்படி ஒடுக்குமுறைக் கருவியாக ஆகியது என விவரிக்கிறார். திருக்குறள் குறித்த திராவிட இயக்கத்தின் வாசிப்பை அவர் அந்நோக்கில் மிகக் கடுமையாக நிராகரிக்கிறார். தலித்துக்கள் மீதான ஒடுக்குமுறையின் வரலாற்றை சங்ககாலம் முதல் எழுதி கொண்டுவரும் ராஜ் கௌதமன் அந்த உண்மையை மறைத்து திராவிட இயக்கத்தால் உருவாக்கப்படும் பொற்காலக் கனவு என்பது இன்றைய சாதிய ஒடுக்குமுறையை நியாயப்படுத்தவே என வாதிடுகிறார்.

சமஸ் எடுத்துக்கொடுத்திருக்கும் அக்கட்டுரையிலுள்ள பார்வையை மறுக்கும் வலுவான வாதங்களை ராஜ் கௌதமனே அவருடைய பிற்கால நூல்களான பாட்டும் தொகையும் பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச சமுக உருவாக்கமும், ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும், தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு,கலித்தொகை-பரிபாடல்: ஒரு விளிம்புநிலை நோக்கு, ஆரம்பகட்ட முதலாளியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும் போன்ற நூல்களில் விரிவாகப் பேசியிருக்கிறார்.

ராஜ் கௌதமன்  திராவிட இயக்கத்தின் தமிழ்ப்பெருமித உருவாக்கத்தை நிராகரித்துத்தான் தலித் அரசியலை முன்வைத்தார். திராவிட இயக்கத்தை அவர் இடைநிலைச்சாதிகள் அதிகாரத்தின்பொருட்டு பழந்தமிழ்ப்பெருமிதம், திராவிட இனவாதம்  என்னும் அடையாளத்தை உருவாக்கிக்கொண்ட அரசியல்நிகழ்வாகவே மதிப்பிடுகிறார். அந்தக் காரணத்தாலேயே அவர் அவர்களால் விமர்சிக்கப்பட்டார், புறக்கணிக்கப்பட்டார்.

இன்று ஒரு தேவைக்காக அவருடைய ஒரு பழைய கட்டுரையின் ஒரு பகுதியை எடுத்துப் பிரசுரித்து அவருடைய கருத்து அது என சொல்லி வாதிடும்படி அறைகூவுகிறார்கள். இது எப்போதுமே திராவிட இயக்கத்தின் வழிமுறை. கீழ்வெண்மணி வரலாறு முதல் எப்போதுமே இந்தத் திரிப்பை அவர்கள் செய்து வருகிறார்கள். [கீழ்வெண்மணி – பிறிதொரு போலிவரலாறு,தி ஹிந்து –நாளிதழ் அறத்தின் சாவு]  மாறாக சிற்றிதழ் மரபு என்பது நேர்மையாகவும் முழுமையாகவும் ஓரு சிந்தனையாளனின் கருத்தை எதிர்கொள்வதுதான். உண்மையில் நான் முன்வைக்க விழைவது இந்த வேறுபாட்டைத்தான்

தொண்ணுறுகளில் ராஜ் கௌதமன் எழுதிய கலகமையநோக்கு கொண்ட கட்டுரைகளை மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறேன். அப்போதும் அவருடைய நண்பனாக, மாணவனாகவே இருந்தேன். 2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது ராஜ் கௌதமனுக்கு அளிக்கப்பட்டது. அப்போது உருவான விவாதங்களிலும் அவருடன் முரண்படும் இடங்களை முழுமையாகவே குறிப்பிட்டோம். விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்ட மேடையிலேயே ஏற்பும் மறுப்புமாகவே அவருடைய கருத்துக்கள் பேசப்பட்டன. [அதை ராஜ் கௌதமனே  ‘திடீர்னு கடிச்சும் வைப்பான், நம்பமுடியாது இவனை’ என மேடையில் என்னைப்பற்றி நையாண்டியாகக் குறிப்பிட்டார்]

ஆ.சிவசுப்ரமணியம் அவர்களை நேரில் கண்டால் அவர் தமிழ் இந்துவுக்குக் கொடுத்துள்ள அந்த பேட்டியைப் பற்றி விவாதிக்க நேர்ந்தால், ஐயா சென்ற முப்பதாண்டுகளாக திராவிட இயக்கம் உருவாக்கிய பொற்காலக் கனவுகளின் அரசியல்மோசடித்தனத்தை உங்கள் நூல்களில் மார்க்ஸியநோக்கில் விமர்சனம் செய்திருந்தீர்கள். அக்கருத்துக்களை முழுமையாக திரும்பப்பெற்றுக்கொண்டுதான் இக்கருத்துக்களை வந்தடைந்தீர்களா என்று கேட்பேன். அவர் ஒன்று அறிந்திருப்பார், நான் சமஸ் போல அவர் பெயரை மட்டும் தெரிந்துகொண்டு பேசவருபவன் அல்ல. அவர் எழுதிய அத்தனை நூலையும் வாசித்துவிட்டுப் பேச வருபவன் என்று.

இந்த முரணியக்க நோக்கையும் முழுமையான அணுகுமுறையையுமே நான் முன்வைக்க விரும்புகிறேன். இதில் நம்பிக்கை கொண்டவர்களிடம் மட்டுமே விவாதிப்பேன். அரசியல்நோக்கில் சிலம்பமாடும் வெட்டித்தர்க்கங்களுடன் பேசுவது வீண்வேலை. எவரும் விவாதம் வழியாக கருத்தை மாற்றிக்கொள்வதில்லை.  வாசகர்களுக்கு உண்மை தெளிவாகவே தெரியும். விவாதம் அதுவரை மட்டுமே.

ராஜ் கௌதமனின் அக்கட்டுரையை வைத்து அவர் திராவிட இயக்கம் பற்றிக் கொண்டிருக்கும் கருத்தை மதிப்பிடாதீர்கள். இந்த வெட்டிப்பிரசுரிக்கும் மோசடிகளை புரிந்துகொள்ளுங்கள். அவருடைய பெருநூல்களை முழுமையாக வாசியுங்கள்

ஜெ

***

கீழ்வெண்மணி – பிறிதொரு போலிவரலாறு,

வாஞ்சி,தி ஹிந்து, டி .ஆர்.வெங்கட்ராமன்

தி ஹிந்து –நாளிதழ் அறத்தின் சாவு

வாஞ்சி -இந்துவின் மன்னிப்புகோரல்

வாஞ்சி,தி ஹிந்து, டி .ஆர்.வெங்கட்ராமன்

முந்தைய கட்டுரைஅனோஜனின் யானை- கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி