வானோக்கி ஒரு கால் – கடிதம்

வானோக்கி ஒரு கால் – 2

வானோக்கி ஒரு கால் -1

அன்புநிறை ஜெ,

தங்கள் பயண அனுபவங்கள் அனைத்துமே அவ்விடங்களுக்கு மானசீகமாகக் கடத்தி அந்த மனநிலையையும் உள்ளூர தொட்டு எழுப்பிவிடுபவை. எனினும் இந்த ‘வானோக்கி ஒரு கால்’ சற்று அதிகமாகவே நிலைகுலைய வைத்தது.

இத்தகைய ஒரு தனிமையின் அலைதலுக்கு இத்தலைப்பு மேலும் செறிவைக் கூட்டி விடுகிறது. அல்லது அனைத்தையும் சொல்வதற்கு இந்தத் தலைப்பே போதுமென்பது போல. ‘வானோக்கி ஒரு கால்’, ‘வானோக்கி ஒரு கால்’ என உள்ளம் அரற்றியபடி இருக்கிறது.

முதல் முறை வாசித்த போது வெண்முரசின் இடைவெளியில் எழும் வெறுமையை பரவித் துழாவி தங்கள் அகம் பற்றியெடுத்து சேகரிக்கும் படிமங்கள் என்று தோன்றியது. விதைகள் தூவப்பட்ட மண் சில நாளில் மென்பசுமை கொண்டு துளிர்ப்பதைப் பார்ப்பது போல இத்தவிப்புகளுக்குப் பிறகு நிலம் கிழித்தெழும் வெண்முரசை வாசிப்பது ஒவ்வொரு முறையும் பேரனுபவம். குருஷேத்திரப் போர் முடிந்த களம் கண் முன் தெரிகிறது.

இரண்டாவதாக காட்சிகள். வாசித்த பல மணிநேரம் பின்னரும் இதன் காட்சிகளால் நிரம்பியிருக்கிறது சென்ற இரு தினங்கள். பலகாலம் வாழ்ந்த நிலத்தின் நினைவுகளென, காண வேண்டும் என ஏங்கும்  எதிர்காலக் கனவுகளென, இரண்டும் கலந்து காலம் கலைந்து கிடக்கிறது.

வெறும் பாறையாக நிற்கும் பேரருவி, ஓய்ந்து கிடக்கும் குற்றாலம், யாருமற்ற விடுதிகள், ஆளொழிந்த ஆலயமண்டபங்கள், வெறித்து நிற்கும் தெய்வங்கள் என அகம் புறத்தில் தற்குறிப்பேற்று நிற்கிறது. நீரே இல்லாத பேரருவி நீர் பெருகும் அருவியை விட சத்தமாகத் தன் இருப்பை உணர்த்துவது, அபஸ்வர நாதஸ்வரம் (முரண்! – அநாதஸ்வரம்) நினைவுறுத்தும் கந்தர்வர்கள், ஆள் மறந்த ஆலயத்தில் ஊற்றெடுக்கும் கங்கையின் நினைவு என இந்தத் தனிமை எவ்வகையிலோ ஒரு நிறைவை நினைவுறுத்துகிறது.
தனிமை எப்போதும் வற்றாத கிணறு. எத்தனையோ முறை எழுதப்பட்ட பின்னரும் ஊறி நிறைகிறது. இந்த ஒரு பதிவிலேயே தனிமை அடர்ந்து சொட்டும் எத்தனை எத்தனை படிமங்கள் தருணங்கள்.

இலஞ்சி – எட்டு தலைமுறை முன் என முன்னோர் வாழ்ந்த மண்; இன்னும் சென்றதில்லை. மலைகள் குளிர்ந்து நீலமாகி சூழ்ந்திருந்தன என வாசித்தபோது ஆமென மனது அதை ஒரு கணம் முன்னர் உணர்ந்தது போல சிலிர்த்தது.

“பலர் ஏறியிறங்கும்போது ஒவ்வொரு படியும் தனித்தனியாக தெரிவதுபோலவும் எவருமே இல்லாதபோது படிகள் ஒற்றை துணியின் மடிப்புகள் போல தெரிவதாகவும் கற்பனை செய்துகொண்டேன்”. ஏறுவதற்கும் இறங்குவதற்கும் பாதங்களற்ற இடங்களில் படிகளின் பொருள் என்ன? ஒரு நுண்பகடி போல.

அரவமற்ற ஆலயங்களில் காத்திருக்கும் தெய்வங்களின் தனிமை. எல்லையற்ற பெருவெளியில் கோள்கள் சுற்றி வருவதன் தனிமை, ஒவ்வொரு அணுவிலும் சுற்றிவரும் நுண்துகள்களின் தனிமையைவிட எவ்விதத்தில் பெரியது.

“கல்லால் ஆன காடு. தெய்வங்கள் அதற்குள் புலிகள்போல் யானைகள்போல் மான்கள்போல் மறைந்திருக்கின்றன. குரங்குகள்போல தூண்களில் சிற்பங்கள்”. – ஆயிரங்கால் மண்டபம் சிறுகதை நினைவில் வந்தது. கலைஞனது பிணையில் கட்டுண்ட தெய்வங்கள்.

காலால் வான்சுட்டி நின்றாடும் சிவன். நேர் எதிரில் மன்மதனும் ஆன கண்ணன். கிராதத்தில் சிவனுருவென நின்று கண்ணனைப் போருக்கழைக்கும் அர்ஜுனன் நினைவெழுந்தது.

பேரிலியாய் ஊரிலியாய் அலைந்து இந்த ஆலயங்களில் எல்லாம் நின்று எனது, எனது, என் மூதாதையின் கனவிது எனவே என்னுடையதும் கூட என மனம் தவிக்க அள்ளிக் கொள்ளத் தோன்றுகிறது.

“இடக்கால் எடுத்து சுழற்றி வலக்கால் சுட்டுவிரல் நுனியில் நின்று சுழன்றாட பறந்தது புலித்தோல். சிறகென எழுந்து சுழன்றது சடைத்திரள். தூக்கிய கால் குத்தென எழுந்து தலைக்குமேல் ஒரு மையத்தில் நிலைக்க சுழன்று சுழன்று வெறும் சுழிப்பென ஆகி  அவன் விழியிலிருந்து மறைந்தான்.” – கிராதம்

இன்று இரவில் அலை அடங்காது மீண்டும் மேலெழுந்து வந்தது ஊர்த்துவ சிற்பம். எது இவ்வளவு அலைக்கழிக்கிறது என்பதன் அறிதல் குளிர்போலத் தாக்கியது.

ஊளையிடும் குடிகாரர்கள் சூழ நீர் நாட்களின் நினைவைப் பொழியும் அருவி, அபஸ்வர நாதஸ்வரம் காதில் விழ கந்தல் ஆடை அணிந்து மானுடனின் சிறுமைகளை சில்லறைகளை பார்த்திருக்கும் தெய்வம், பெருஞ்செயல்கள் ஆற்றிவிட்டு சங்கிலியால் கைகள் பிணைக்கப்பட்ட நாயக்க மன்னர் சிலை – எத்தனையோ சத்தங்களுக்கும் வெற்றிரைச்சலுக்கும் மத்தியில் மலரும் வெண்முரசும், தொடர்ந்து நிகழ்த்தும் உரைகளும், இலக்கியப் பயிற்சிகளும், புதிய வாசகர் சந்திப்புகளும், இலக்கிய முகாமும், இவை அனைத்துக்கும் முன்னர் சிதறும் சில்லறைகள் என கந்தலாடை என வினையாற்றும் எளிய மனிதர்களும் என எண்ணிக் கொண்டேன்.

‘அத்தனை உயரம் வரை கீழிருக்கும் ஒரு சொல்லும் வந்தடையவில்லை’ – வானோக்கி எழுந்த கால் எனில்,
‘விடுதியில் தங்கவேண்டும் என்றால் கையில் பை இருக்க வேண்டும்’, ‘எப்படியும் திரும்பியாகவேண்டும். அதுவரை சென்றுகொண்டே இருக்கவேண்டியதுதான்’. – தரையில் ஊன்றியிருக்கும் இன்னொரு கால்.

சில நாட்கள் முன்பு மனிதர்களுடனும் அப்பாலும் என்ற தங்கள் பதிவின் ஈற்று வரி:

“இங்கே இந்தக் கூச்சல்கள், பூசல்கள் நடுவேதான் இருக்கிறேன். உண்மையில் முயன்று இங்கே என்னை இருத்திக்கொள்கிறேன். இயல்பாக நான் இருப்பது இங்கே அல்ல. அங்கே இவர்கள் எவரும் இல்லை. அங்கிருந்துதான் எழுதிக்கொண்டிருக்கிறேன். ஒருநாள் அங்கே எழுதாமல் அமர்ந்திருப்பேன்.”

“ஒருகால் இங்கிருந்து எழுந்துவிட்டது” என்ற இக்கட்டுரையின் இறுதி வரி அதைக் கிளர்த்தி இவ்விரவில் விழி நிறைகிறது.

மிக்க அன்புடன்,
சுபா

***

முந்தைய கட்டுரைலஷ்மி மணிவண்ணனுக்கு ஷோபா..
அடுத்த கட்டுரைஅறிபுனை- விமர்சனப்போட்டி