ஈரோடு விவாதப் பயிற்சிப் பட்டறை- கடிதங்கள்

ஈரோடு விவாதப் பயிற்சிப் பட்டறை

 

அன்புள்ள ஜெ

ஈரோடு விவாத பயிற்சிப் பட்டறை பற்றி படிக்கும்போது ஒரு இனம் தெரியாத ஆனந்தம் பொங்கி விரிகிறது. அதிலும் இத்தனை இளைய முகங்களைப் பார்க்கும் போது, தற்போதைய சாதி, இன, மத பேதங்களைத் தூண்டும் வெறுப்பு மொழிகள் நிறைந்த பிரசார சூழலில், பாலைவனத்தில்  பசுஞ்சோலை கண்டது போல ஒரு பரவசம்.

விவாதம் என்பது வெற்றி பெற வேண்டுவது ; அப்படி முடியாவிட்டால் கத்தி கூப்பாடு போட்டு எதிரணியை பேச விடாமல் செய்வது என்று மட்டுமே நமது இளைய சமுதாயத்திற்கு காட்டப்பட்டு வரும் இந்த தொல்லைக்காட்சி யுகத்தில், தன்னுடைய / மற்றவருடைய கருத்துக்கண்ணோட்டங்களை அலசி ஆராய்ந்து, தெளிந்து, தேவைப்பட்டால் தன் கருத்துகளையும் மாற்றி அமைத்துக்கொள்ள உதவும் ஒரு வழிமுறையே விவாதம் என்று சுட்டிக்காட்டும் இந்தப் பட்டறை ஒரு நல்ல தொடக்கம். நன்றிகள், வாழ்த்துகள். ( கதிரணைதல் – அருமையான சொல்!)

இதைப் படித்து முடித்த பரவசத்திலிருந்து மீள்வதற்குள்ளாகவே இன்னொரு நற்செய்திச் சுட்டி வந்தது. பாக்கிஸ்தானை சேர்ந்த காஸி மன்னன் என்பவர் அமெரிக்காவில், வாஷிங்டனில் கிட்டத்தட்ட ஒரு “சோற்றுக்கணக்கு” ஓட்டலை கடந்த ஐந்து ஆண்டுகளாக நடத்தி வருவதைப் படித்தேன். வீடற்ற மக்களின் பசியைப்போக்க அவர் தன்னளவில் முயற்சிப்பது சற்று கெத்தேல் சாகிப்பை நினைவூட்டியது. நெகிழ்ந்தேன். ஒரு பெரிய வித்தியாசம்: மன்னனுக்கு, யார் காசு கொடுக்காமல் சாப்பிடுகிறார்கள் என்று தெரியும்.

மனிதம் தழைக்கும் என்ற நம்பிக்கை மீண்டும் துளிர்விடுகிறது.

அன்புடன்

ராமசுப்ரமணியன்

தேக்கம்பட்டு.

இணையதளம் https://radiopublic.com/ramsthekkampattu-6LXgpo

அன்புள்ள ஜெ

 

ஈரோடு விவாதப்பட்டறை படங்களைப் பார்த்தேன். அத்தனை இளைஞர்களைக் கண்டது நான் காண்பது உண்மையா என்ற சந்தேகத்தையே உருவாக்கியது. பெரும்பாலும் ஒரு மாநாடு மாதிரியே நடந்து முடிந்திருக்கிறது. புத்தகக் கடைகள், கைவினைப்பொருள் கடைகள் எல்லாம் இருந்திருக்கின்றன.

 

இந்தமாதிரியான மாநாடுகளில் உரையாடப்படுவது எதுவானாலும் நமக்குச் சமானமான மனம் கொண்டவர்களைச் சந்திப்பதென்பது மிகமிக உற்சாகம் அளிப்பது. மிக நெருக்கமான நண்பர்களை இங்கேதான் கண்டுகொள்கிறோம். அவர்களுடன் பேச இப்போது இணையம் என்ற வாய்ப்பும் உள்ளது

 

ஒருபக்கம் விவாதங்களில் ஈடுபடுகிறீர்கள். இன்னொருபக்கம் எழுதிக்குவிக்கிறீர்கள். இன்னொருபக்கம் இப்படி ஓர் இயக்கமாகவே செயல்படுகிறீர்கள். வாழ்த்துக்கள்

 

சந்தானகிருஷ்ணன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-7
அடுத்த கட்டுரைதென்காசி- கடிதங்கள்