அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
‘வரலாறு, பண்பாடு, நாம் எனும் கற்பனை‘ கட்டண உரையின் தலைப்பு மிகவும் ஆர்வமூட்டுகிறது. சமூக ஊடங்களைக் கண்டு மிரண்டுபோய் தமிழ்நாட்டின் முதன்மை தினசரிகள், வார இதழ்கள், தொலைக்காட்சிகள் அவற்றில் வருபவற்றை எடுத்துப்போட்டு அவற்றின் அளவேதான் தமது தரமும் என்று காட்டிவரும் வேளையில் உண்மையில் நாட்டம் கொண்டவர்கள் இந்தபக்கம் வரவும் என்று தனித்து நிற்கும் உண்மையான உழைப்பிலும் தங்கள் சொந்த இயல்பான நேர்மையிலும் விளைந்த தங்கள் உறுதி என்னை உவகை கொள்ளச்செய்கிறது.
தோளில் பையுடன் கையில் ஒரு குச்சியுடன் ஒருவர் குப்பைகளின் நடுவே கடந்து சென்று கொண்டிருந்தார். குச்சியின் முனையில் பெரிய காந்தக்கல் ஒன்று இணைத்து வைத்திருந்தார். அவர் குச்சியை நீட்டிச் செல்ல குப்பைகளில் சிக்கி இருந்த இரும்புப் பொருட்கள் அதில் ஒட்டிக்கொண்டது, அவற்றை மட்டும் பிரித்து எடுத்து தன் பையில் போட்டுக்கொண்டார். இரும்பை வெளியே எடுப்பது மட்டுமே அவர் வேலை. குப்பைக் கிளறிக்கொண்டிருக்க வேறு பலர் இருக்கிறார்கள். அந்த காந்தம் பொருத்திய குச்சியைப் போல இந்த உரைநிகழ்வுகள் என்று எண்ணுகிறேன்.
அன்புடன்
விக்ரம்
கோவை
அன்புள்ள ஜெ
கோவை கட்டண உரை அறிவிப்பைக் கண்டேன். தொடர்ச்சியாக அனைத்து ஊர்களிலும் இந்தக் கட்டண உரையை நிகழ்த்திக்கொண்டிருக்கிறீர்கள். நேர்த்தியான, தரமான உரைகளுக்கு இன்று எங்கும் ஒரு வரவேற்பு உண்டு என்பதை இது நிறுவுகிறது. நல்ல உரைகேட்க மக்கள் காசுகொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள், பேசத்தான் ஆளில்லை என்பது நிறுவப்படுகிறது. இனிமேல் மக்கள் விரும்புகிறார்கள், ஆகவே நகைச்சுவையை மட்டும் பேசிவிட்டுச் செல்கிறோம் என்று எவரும் சொல்லக்கூடாது.
இந்த உரைகள் அனைத்திலும் தொடர்ச்சியாக ஒரு தீம் விளைந்து வருகிறது என நினைக்கிறேன். உங்கள் சென்னை உரையை கேட்டேன். நீங்கள் ஒர் இலக்கியவாதியாக அந்த எல்லைக்குள் நின்றபடியே இலக்கியம்வழியாகவே தத்துவம் – சமூகவியல் இரண்டையும் பேசுகிறீர்கள் .அது முக்கியமான ஒரு தன்னடக்கம். அதன் வழியாக ஒரு பார்வையை பேசிப்பேசியே திரட்டிக்கொள்கிறீர்கள். தேர்ந்த வாசகர்களின் ஒரு வட்டம் உங்களுடன் கூடவே வரச்செய்கிறீர்கள். அது மிகமிக முக்கியமான ஒரு பரிமாற்றம்
வாழ்த்துக்களுடன்
எஸ்.ராகவன்