எடுத்த கால் – கடிதம்

எடுக்கப்பட்டது ) வெளியே (நான் எடுத்தது )

 

வானோக்கி ஒரு கால் –1

வானோக்கி ஒரு கால் – 2

அன்புள்ள ஜெயமோகன் ,

 

தங்களின் “வானோக்கிஒரு கால்” வாசித்தேன். “கால்தூக்கி நின்றாடும் பைரவம்” –  நல்லதொரு வரி.

 

மதுரை மீனாக்ஷி ஆலயத்தில் நெடிதுயர்ந்த ஊர்த்வதாண்டவருக்கு நல்ல வெள்ளை வேட்டி கட்டி விட்டு(மேல்நோக்கிய காலுக்கும் தான்) மானம் காத்த நல்ல உள்ளங்களை கெட்ட வார்த்தையால் திட்டி அம்மாவின் கோவத்துக்கு ஆளாகி  “தெய்வ விக்கிரகத்துக்கு வஸ்திரம் சாத்துறது எல்லாம் ஒரு வேண்டுதல்” போன்ற நல்லுபதேசங்களை பெற்றேன்.

 

தோசைக்கல்  வாங்க புது மண்டபத்துக்குள்  சென்றால்  அங்கும் நின்றான் ஊர்த்வன் – மார்பணியும்  ஆரங்களும் இடையணியும் கச்சையுமாக. ஒரு பொட்டு திருநீறோ சந்தனமோ கூட இல்லை. பேச்சின்றி விக்கித்து நோக்கிக்கொண்டிருக்கையில், பூ விற்கும் ஒரு பாட்டி, தன் கூடையிலிருந்து ஒரு இனுக்கு கிள்ளி அவன் காலில் தூக்கிப் போட்டுவிட்டு அரைக்கணத்துக்கும் குறைவாக விழி மட்டும் மூடி வணங்கிச் சென்றாள்.  அவள் உயரத்திற்கும் – தலைச்சுமையால் நிமிராமல் – நடந்து கொண்டே அவள் வீசியதும் அது அவன் தாளில் சரியாக அமர்ந்ததும்  – என் நினைவில் நெடு நாளாக இருந்த ஒரு சித்திரம்.

 

இங்கே இந்தளவில், உங்கள்  நல்ல மனநிலையைக் கெடுக்காமல் நிறுத்திக்கொள்ளத்தான் நினைக்கிறன். இருந்தும் கீழுள்ளவைகளைக்  கூறாமலிருக்க முடியவில்லை. மன்னிக்கவும்.

 

“இது என்ன நிர்வாணமாகவா  இருக்கிறது, கல்லிலேயே வேட்டி  இருக்கு பாரு, இவ்வளவு வேலைப்பாடுகளைத்தான் நீங்க வேட்டி கட்டி மறைக்கிறீங்க” என்ற போதும் அம்மாவிடமிருந்து பதில் இல்லை. வீட்டிற்குத் திரும்ப புதுக்கோட்டை பேருந்திலேறி மதியவேளை தூக்கம் போட்டு எழுந்து திருப்பத்தூரில்  வழக்கம் போல வெள்ளரிப் பிஞ்சு வாங்கித் தின்று கொண்டிருந்த போது சொன்னாள், “ஆமாடா, நீ சொன்னது கரெக்ட். எங்கப்பாகூட அம்மனுக்கு மட்டும் தான் புடவை சாத்துவா, ஏன்னா விக்ரகத்து மார்ல துணி இருக்காதுன்னு. லிங்கத்துக்கெல்லாம் மாலை மட்டும் தான்”

உள்ளே (இணையத்தில் எடுக்கப்பட்டது )

 

 

சமீப காலமாகத்தான், பக்தி எல்லைமீறி / என்ன செய்வதென்று தெரியாமல் –  நாம் இவ்வாறு  அதீதமாக செய்து கொண்டிருக்கிறோம்.

 

எனது சொந்த அனுபவங்களின் படி யோசித்தால், இது ஒரு” முதலில்  வந்தது முட்டையா  கோழியா” போல சுழல்ப்புதிர் தான்.

 

1988 இல் எனது அம்மாவின் மாமா கிராமத்தில் சிவன் கோவிலுக்கு பின்புறம் வீடுகட்டி குடிபெயர்ந்தோம். கோவில் சிதிலமான நிலையில் – பூசனையோ பக்தர்களோ ஏதுமின்றியே இருந்தது. அம்மாவின் மாமா தான் கோவில் பூசகர்.ஆனால் தினப்படி பூசையெல்லாம் இல்லை. புரவலரோ அரசு உதவியோ ஏதுமில்லை.  எப்போதாவது போய் விளக்கேற்றிவிட்டு வருவார். அவ்வளவு தான். பக்தர்கள் என்று யாரும் வருவதில்லை. ஆளரவம் குறைந்ததால், நாய்கள் குட்டி போடுவது கோயிலுள் தான்.

 

தொடர்ச்சியான மனுக்களுக்குப் பிறகோ அல்லது தானாகவோ 2004 இல் அரசு அனுமதியும் நிதியும் கிடைத்தது.திடீரென பெரிய மனிதர்கள் (கட்சி பேதமின்றி) உள்ளே வந்தனர். திருப்பணி என்ற பெயரில் கோவில் கீழ்மேலானது.தரையிலிருந்து ஐந்தடி உயரத்திலிருந்த கோவில் தளம் ஓரடியாக மண் போட்டு மூடி  மேடேற்றப்பட்டது.  ஓரடிக்கு ஓரடி சதுரத்தில் வரிசையாக செதுக்கப்பட்ட பல சிற்பங்கள்  – நடன மாதர், அர்ஜுனன் , பேன் பார்க்கும் குரங்கு ,கண்ணப்ப நாயனார் சிற்பம், திருக்கோகர்ணம் பசு புலி கதைச்சிற்பம்  – எல்லாம் இப்போது இம்மண்ணுக்குக் கீழே.

 

தரமான கருங்கலில் செதுக்கப்பட்ட பல சிற்பங்களுடன் நின்ற தூண்கள் வெள்ளை சுண்ணாம்பு பூசப்பட்டது. கோயிலுக்கு கோபுரமில்லை. “சிவன் கோவில்ன்னு   தெரியனுமில்ல” என்று சிவகுடும்பம்  கான்கிரீட்டில் செய்யப்பட்டு படிக்குமேல் பதிக்கப்பட்டது. அதிலுள்ள அம்மை அவளைக் கண்ணாடியில் காணும் வரை தான் இந்த உலகம் இருக்குமென்று  முழுமையாக நம்புகிறேன். அவ்வளவு அழகான வேலைப்பாடு.

 

2007 இல் குடமுழுக்குகுப் பிறகு, இப்பொழுதெல்லாம் தினம் பூசனை. பிரதோஷ தினங்களில் கோவில் முழுக்க ஆட்கள்.  இப்போது “சங்கடாந்தர சதுத்தி”  எல்லாம் பறக்கிறது. நீயாச்சு உன் நாய்க் கோவிலாச்சுன்னு என்று வெளியூருக்கு வேறு வேலைக்குச்  சென்ற அவர் மகன் இப்போது காவி வேட்டி கட்டிக்கொண்டு பூசனை (போல் ஏதோ ஒன்று) செய்கிறார்.

 

ஆகம சடங்கு அப்படி இப்படி இருக்கலாம், அதனாலொன்றுமில்லை. ஆனால், ஆட்களுக்கு ஒன்றும் குறையக்கூடாது. அர்ச்சனை செய்தால் அவருக்கு மாலை போடவேண்டும். ஐந்து பேர் கூட வந்தால் , தலையில் பரிவட்டம் கட்டி மாலை போடவேண்டும்.

 

அளவில் சிறிய சிவலிங்கம் –  ஆனாலும் என்ன? எட்டுமுழ வேட்டியை நாலைந்து சுற்று சுற்றி அணிகிறார்.  “பட்டைக்கரை முன்னால செங்குத்தா நிக்கணும் சாமி” என்ற பக்தரின் கருத்துக்கு மறுநாளே செவிசாய்க்கிறார்.அங்கவஸ்திரத்தை அணிந்து நாகம் தரிப்பதா இல்லை மாற்றி நாகத்தை மூடி அணிவதா என்று நாளும் குழப்பம்.

 

வடிவான அம்மன் சிலை. இடமுலை நிமிர்ந்து வலமுலை சற்று தாழ்ந்து ஒயிலான சிரிப்பு நன்றாகத் தெரியுமாறு சற்று படிந்த மூக்குமாக ஒளிவிடும் அழகி. செதுக்கப்பட்ட ஆரங்கள், ஒட்டியாணம், தோள்வளை, கைவளை எல்லாம் உண்டு. இப்பொழுதெல்லாம் ஜிகினாத் துணிப்பாவாடையால் முழுவதுமாக மூடப்பட்டு (கருப்பையா டைலர்ட்ட கொடுத்தா நாடா வைச்சு தைச்சு கொடுத்துருவான் அப்படியே கழுத்தோட பின்னால முடிஞ்சுட்டா போதும் ),  சந்தனத்தால் முகம் பூசப்பட்டு மையாலோ, கரியாலோ வரையப்பட்ட புருவங்களும் , நீட்டப்பட்ட பொய் முக்கில் மூக்குத்தியும் புல்லாக்கும் அணிந்து, கிட்டத்தட்ட காது வரை இழுக்கப்பட்ட  வாயோடு (அம்மனுக்கு நல்ல சிரிச்ச முகம்), சரியாகப் பொறுத்தப்படாத திருவாச்சியை தன்  இடையில் சேர்த்து கட்டிக்கொண்டு  நிற்கிறாள்.என்னம்மா இது என்று கேட்டால், மேக்கப் முகத்தை கலைத்து கையில் வைத்துக் கொண்டு சிரிக்கும் தசாவதாரம் கமலைப் போல் சங்கடமாகச் சிரிக்கிறாள்.

 

உண்மையில் இப்போது கோவிலில் வருமானமுண்டு. எவ்வளவெனில்,  வருமானமில்லாததால் விலகிச் சென்ற தலைமுறை, இப்போது உள்ளே வர முட்டி மோதுகிறது. விலகிச் சென்றதால் உண்டான தகுதிக்குறைவை என்னென்னவோ செய்து மறைக்க முயல்கிறது. அதீதமாக செய்து அசிங்கமாக வெளிப்படுகிறது. புதுப்புது வரலாறுகளை தீட்டுகிறது. மன்மதன் ராமராகும் வித்தை உங்களுக்கே தெரியும்.  தகுதியானவரை நியமிக்க குலமுறை உரிமை தடுக்கிறது. பெரும் அரசியல். தெரிந்து வேடமிட்டால் மீட்புண்டு. என்றாவது வேடம் களைந்து நிற்கலாம். என்னவென்றே தெரியாமல் / தகுதியே இல்லாமல் என்ன வேண்டுமானாலும் செய்வேன் – அதற்கு ஒரு விளக்கமும் அளிப்பேன் நீ அதைக் கேள்வி கேட்கக்கூடாது – கேட்டால் சாதி ஒற்றுமை குறித்து பாடம் என்ற அளவில் தான் உள்ளது.

 

இப்போது பூசனை செய்யும் மகனிடம் பேசுவதற்கு ஏதுமில்லை. ஏதுமேயில்லை. அவர் தந்தையிடம் கேட்டால் அவர் எளிமையாக ஒன்றேயொன்று  தான் கேட்கிறார். “மாப்ள, இப்படி ஜோடனையெல்லாம் போட்டாத்தான் வர்றாங்க. கோயில்ல தினம் விளக்கெரியறது. இல்ல மாட்டேன்னு சொல்லி, பழைய மாதிரி நாய் குட்டி போடவிடலாம். என்ன செய்யலாம் சொல்லு? ”

 

சுழல்ப்புதிர்.

 

 

என்றென்றும் அன்புடன்,

மூர்த்தி

டாலஸ்

முந்தைய கட்டுரைகோவை கட்டண உரை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைநீரின்றி அமையாது – காளிப்பிரசாத்