எழுதுதல்-கடிதங்கள்

மரியாதைக்குரிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு ,

வணக்கம்.நான் திருமதி.சுஜாதா.அவள் விகடனில் என் சில கவிதைகள் வெளியாகியுள்ளன.ஜல்லிக்கட்டில் முரட்டுக்காளைகளுக்கிடையே சும்மா தமாசுக்காகக் கன்றுக்குட்டிகளையும் ஓடவிடுவார்கள்.இப்பவே ஓடிப் பழகட்டும் என்பார்கள்.அது மலங்கமலங்க விழித்தபடித் தட்டுதடுமாறிக் கூட்டதிற்க்கிடையே ஓடும்.ஆனாலும் ரசித்து ஆர்ப்பரிக்கும் கூட்டம்.அப்படித்தான் என் எழுத்துக்களைப் பாராட்டுகிறார்கள் தோழிகள்.

ஒரு கதையை எழுதி அவள் விகடனுக்கு அனுப்பிவிட்டு,படபடப்போடு காத்திருக்கிறேன்.என் இரண்டாவது கதையையும் எழுதிமுடிக்கவிருக்கும்
வேளையில் தங்களின்’ எழுதும் கலை ‘ புத்தகத்தை வாசிக்கும் இனிய சந்தர்ப்பம் கிடைத்தது.சிறுகதை எழுதுவது எப்படி என்ற தங்களின் விளக்கங்களைப் படித்து முடித்த நிமிடம் முடிவாகிப்போனது என் முதல் சிறுகதையே ஒரு சவலைக்குழந்தை என்று.சற்று எனக்குப் பாதை புரிபட்டிருக்கிறது.

ஆனாலும் எனக்கு ஒரு குழப்பம்.சிறுகதையின் முக்கிய அடையாளம் அதன் ‘திருப்பம் ‘ என்று கூறியிருக்கிறீர்கள்.திருப்பங்கள் அற்ற அன்றாட நிகழ்வை கதையாகச் சொல்லக்கூடாதா? என் முதல் கதையில் ஒரு விலைமகளின் ஒரு நாள் நிகழ்வை பதிவு செய்திருக்கிறேன்.இதில் என்ன திருப்பம்,எப்படி கொண்டுவருவது என்று ஒன்றும் புரியாமல்
மண்டை குழம்பி ,சரி ஆனது ஆகட்டும் என்று காரணகர்த்தா தங்களிடமே கேட்டு விடலாம் என்று ஒரு குருட்டு தைரியத்தில் மெயில் அனுப்புகிறேன்.

ஒரு தேர்ந்த ,மூத்த எழுத்தாளரைத் தொடர்பு கொள்ளும் முறையா இது ?மரியாதை குறைவாக செயல்படுகிறேனா? எனக்குத் தெரியவில்லை.ஆனால் நீங்கள் ஒரு குழந்தையைக் கையாளும் பொறுமையுடன் எனக்கு பதில் தருவீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது .தங்களின் விலைமதிப்பற்ற நேரத்தை நான் வீணடிப்பதற்காக என்னை மன்னிக்கவும்.பாதை புரியாமல் நிற்கும் எனக்கு தூரத்து சிறு ஒளியாய் தங்கள் பதில் கிடைக்க வேண்டி எதிர்பார்த்து…..

என்றும் மரியாதையுடன்,
சுஜாதா செல்வராஜ்,
பெங்களூர்.

அன்புள்ள சுஜாதா,

சிறுகதை என்பது ஒரு குறிப்பிட்ட வகையான இலக்கிய வடிவம். அது முடிவில் அல்லது உச்சத்தில் தன்னுடைய திறப்பை வைத்துக்கொண்டிருக்கிறது. அது இல்லாமல் எழுதினால் அது வேறுவடிவம். சிறுகதை அல்ல.

ஏன் சிறுகதை அப்படி இருக்கிறதென்றால் நவீன வாசகன் கதையை வாசிக்கையிலேயே முடிவை நோக்கி மானசீகமாகச் சென்று விடுகிறான் என்பதனாலேயே. எதிர்பாராத முடிவு அவனை வியக்க அதிர நெகிழச்செய்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும்

அந்தத் திருப்பம் மிக மௌனமானதாக, பூடகமானதாக இருக்கலாம். நவீன சிறுகதைகளில் அந்தத் திருப்பத்தை கவித்துவமான ஒரு குறியீடாக மட்டுமே சொல்லி நிறுத்துவதும் உண்டு.

ஒரு கதை வாசகன் மனத்தில் மேலும் வளர வேண்டும். எழுத்தில் இருப்பதை விட வாசகன் கற்பனைசெய்து அடைவதற்கு நிறைய இருக்கவேண்டும். அதுவே நல்ல கதை, அதற்காகவே ’வாசக இடைவெளி’ என்ற ஒன்று இலக்கியத்தில் விடப்படுகிறது. ஆசிரியர் சொல்லாத, வாசகன் ஊகித்துக்கொள்ளக்கூடிய மௌனங்கள். அவற்றைச் சிறப்பாக உருவாக்குவதே நல்ல கலையின் நுட்பம். சிறுகதையில் அப்படி உருவாவது முடிவின் திருப்பம் மூலமே

நானெழுதிய ‘நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்’ என்ற நூல் உங்களுக்கு உதவியாக இருக்கலாம். அதில் உள்ள பட்டியலில் உள்ள சிறந்த கதைகளை வாசியுங்கள்.

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

என்னை நினைவிருக்கும் என்று நினைக்கிறன். ஒரே ஒரு முறை உங்கள் இணைய தளத்தில் ஒரு எதிர் வினையில் தொடர்பு கொண்டிருந்தேன். இப்பொழுது அது தொடர்பாக எதுவும் சொல்வதற்கில்லை :). உங்களின் நிறைய எழுத்துக்கள் அந்த எண்ணத்தை மாற்றி விட்டன.

சமீப காலமாக உங்கள் இணைய தளத்தை தொடர்ந்து வசிக்கும் பழக்கம் ஏற்பட்டு விட்டது (என் மனைவி மொழியில் கூறினால், “நான் வர வர ரொம்ப கெட்டு போய் விட்டேன்”). ஆயிரம் உந்துதல்கள் இருந்தாலும், ஆயிரம் எண்ணங்கள் மனதில் ஓடினாலும் அவற்றை எளிமையாக கீழ்வரும் கேள்விக்குள் அடக்கலாம். “எல்லாரும் இந்த இலக்கியம் இலக்கியம்னு சொல்றீங்களே (றாங்களே என்றும் வாசிக்கலாம் :)..), அப்படி என்றால் என்ன?”.

மிகத் தெளிவாகக் கூறுவதென்றால், ‘எனக்குச் சாதாரண (உங்கள் மொழியில், வெகு ஜன பத்திரிக்கை போன்ற விகடன், குமுதம்…..இதழ்களில் வரும்) கதைகளுக்கும் நீங்கள் இலக்கணம் என்று கூறும் கதைகளுக்கும் உள்ள வேறுபாடு புலப்படவில்லை. நான் நிறைய வாசிக்கும் பழக்கம் உடையவனில்லை. ஆனால் நீங்கள் கூறும் வெகு ஜன பத்திரிகைகளை சுமார் 12 வருடங்களாக முடிந்தவரை படித்து கொண்டு இருக்கிறேன். உங்கள் தளத்தை பார்த்து கெட்டுப் போய், உங்கள் புத்தகம் இரண்டும் வாங்கி இருக்கிறேன் (அது புதிதா பழையதா என்று கூட எனக்கு தெரியாது) “விசும்பு” மற்றும் “வாழ்விலே ஒரு முறை “. இரண்டுமே சிறு கதை தொகுப்புதான் (நாவல் வாங்குவதற்கு பயமாக இருக்கிறது, முதலில் இதைப் புரிந்து கொண்டு பிறகு வாங்கலாம் என்றும் எண்ணம்).

நீங்கள் கூறும், ‘வாசிப்பு சிந்தனைக்கு விடுதலை அளிக்கிறது’, ‘வாசிப்பு கற்பனையை தூண்டி மேன்மை ஆக்குகிறது’ என்பது எல்லாம் நாவல்களுக்குதானா?. எனக்கு ஏன் அப்படி ஒரு உணர்வும் தோன்றவில்லை… என் நண்பன் சொல்கிறான், அறிவால் வாசிக்காமல் இதயத்தால் வாசிக்க வேண்டுமாம். ஒரு வேளை இன்னும் நிறைய பயிற்சியும், படிப்பும் வேண்டுமா? அல்லது அடிப்படையில் நான் ஏதும் தவறு செய்கிறேனா? என்றும் புரியவில்லை.

இந்த வாசிப்பும், இலக்கியம் என்றால் எப்படி இருக்கும் என்ற ஒரு தேடலும் உங்கள் “நவீன இலக்கியம் ஒரு அறிமுகம்” புத்தகத்தை நண்பன் வீட்டில் அரைகுறையாக படித்ததில் இருந்து ஆரம்பித்தது… ஆகையால் இதை தீர்த்து வைக்க வேண்டிய முழு கடமையும் உங்களுக்கு உண்டு :)…

அடிப்படையில் மிக எளிதாக எனக்கு ஒரு யோசனை கூறுங்கள். இலக்கியத்தையும் அதன் சுவையையும் நான் உணர வேண்டுமானால், நான் எங்கு ஆரம்பிக்க வேண்டும்.

என்னை பார்த்து நானே சிரித்து கொண்டு எழுதிய கடிதம் இது…தொனியில் ஏதேனும் தவறு இருந்தால் பொறுத்து மன்னிக்கவும்.

இவண்,

காளிராஜ் கு

அன்புள்ள காளிராஜ்,

நீங்கள் இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள். வாசிப்பு என்பது ஒரு பழக்கம்தான். பிடிவாதமாக தொடர்ந்து வாசியுங்கள். உங்களுக்கே இயல்பாக வேறுபாடு புலப்படும். இலக்கியம் தெளிவாகும். அப்படியெல்லாம் ஒன்றும் பெரிய மர்மம் இல்லை.

உங்கள் சிக்கல் என்னவென்றால் நீங்கள் வார இதழ்கதைகளுக்கு மிகவும் பழகிவிட்டிருக்கிறீர்கள். ஆகவே நல்ல கதைகள் உங்களுக்குச் சட்டென்று உறைக்காது. அவற்றை கதைகளாகவே வாசிக்கும் வழக்கம் வந்திருக்கும்

நல்ல கதைகள் வாழ்க்கைமேல் ஒரு விசாரணையை முன்வைக்கின்றன. அந்த விசாரணையில் நேர்மையாக இருக்கின்றன. ஒரு கருத்தைச் சொல்ல வாழ்க்கையை செயற்கையாக சித்தரிப்பதில்லை. உங்களை மகிழ்விப்பதற்காக எதையும் உருவாக்குவதில்லை. எது வாழ்க்கையோ அதை ஆசிரியனின் அக அனுபவத்தை ஒட்டி அவை முன்வைத்து மேலே சிந்திக்கும்படி உங்களிடம் கோருகின்றன

என்னுடைய ‘நவீனத்தமிழிலக்கிய அறிமுகம்’ உங்களுக்கு உதவக்கூடும்

ஜெ

அன்புள்ள ஜெ.,

என் தந்தை நிலப்பிரபுத்துவ விழுமியங்களை முதன்மையாகக் கொண்டவர். நீங்கள் எழுதியதை எல்லாம் படித்து விட்டு அவரிடம் முதலாளித்துவம், பிரபுத்துவம் என்றெல்லாம் விவாதித்துக் கொண்டிருந்தேன்.
என் அம்மா பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு ‘ஜெயமோகன் எழுதினதை எல்லாம் படிச்சுட்டு கண்டபடி உளறிக்கிட்டு இருக்காதே’ என்றார். எப்படித்தான் கண்டுபிடிக்கிறாய்ங்களோ… :)

பிகு: உங்களின் ஒரு எழுத்தைக் கூட என் வீட்டில் படித்ததில்லை (எம்ஜியார் சிவாஜி தவிர)

நன்றி
ரத்தன்

ரத்தன்,

பழைய ஆனந்தவிகடன் ஜோக்

‘என்னை பாத்தா காலம்பற அரைபுட்டி வெளெக்கெண்ணே குடிச்சது மாதிரி இருக்கா?’

‘இல்லியே வழக்கம்போலத்தானே இருக்கீங்க’

ஜெ

===============

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

இந்த சிறியவனின் வேண்டுளுக்கு அனுமதியளித்த தங்களுக்கு மிக்க நன்றி.

இந்த மின்னஞ்சலுடன் நான் எழுதிய ‘புரிந்த விஷயமும்,பிரிந்த ஒருவனும்’ என்ற சிறுகதையை தங்களின் பார்வைக்கு

அனுப்புகிறேன்.அதில் எனது நடை சரியானதுதானா….தமிழை நான் பயன்படுத்தும் விதம் சரிதானா…..என்னென்ன தவறுகள் செய்திருக்கிறேன் என்பதை தயை கூர்ந்து விளக்கவும். நானும் சில கதைகள் எழுதி திருப்தியில்லாமல் எழுதுவதைக் கொஞ்சம் நிறுத்திவிட்டேன்.ஆனாலும் என் மனதில் எழுத வேண்டும் என்ற ஆசை அடங்க மறுக்கிறது.எதையாவது எழுதிவிடுகிறேன். ஆனால்,அது எனக்கே பிடிக்கவில்லை.இதனால் வரும் மன அழுத்தம் என்னை வதைக்கிறது.தங்களின் வழிகாட்டுதல் மூலம் அதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.

இப்படிக்கு,

தங்களிடம் நன்றியுள்ள வாசகன் ,

சே.உ ராஜா முகம்மது.

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் தங்களுக்கு அனுப்பிய சிறுகதையைப் வாசித்தீர்களா…..?

புத்தகக் கண்காட்சியில் இயக்குனர் மணிரத்னத்துடன் தங்களைப் பார்த்தேன்.உங்களிருவரிடமும் பேச முயற்சித்தேன்.ஆனால்

அதற்குள் இருவரும் சென்று விட்டீர்கள்.புத்தகக் கண்காட்சியின் பொருட்டே, நான் தங்களிடம் என்னுடய சிறுகதையைப் பற்றிக் கேட்கவில்லை.

நான் எந்த விஷயங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதை எனக்கு விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இங்கனம்,

தங்களிடம் நன்றியுள்ள வாசகன்,

சே.உ ராஜா முகம்மது.

அன்புள்ள ராஜா முகம்மது

பொதுவாக எந்த எழுத்தாளருக்கும் இந்தவகையான கடிதங்கள் சிரமமானவை. கதைகளை வாசித்து கருத்துச் சொல்ல ஆரம்பித்தால் அதுவே பெரும் வேலையாக ஆகிவிடும். மேலும் நீங்கள் அக்கதையை எழுதிய தளத்தில் நிற்கிறீர்கள். அதைப்பற்றி நான் என்ன விமர்சனம் சொன்னாலும் உங்களால் அதை புரிந்துகொள்ள முடியாது. அவை சொற்களாகவே இருக்கும். நீங்கள் நல்ல கதைகளை வாசித்து நீங்களே அடுத்த கட்டத்துக்கு வந்துவிட்டால் எவரும் சொல்லாமலேயே நீங்கள் செய்யும் பிழைகள் புரியும்

உங்களின் இந்தக்கதை விகடன் வகையானது. அக்கதைகளைப்பார்த்து அந்த பாணியில் எழுத முயன்றது. அவ்வகை கதைகள் மேல் எனக்கு ஆர்வமோ அடிப்படையான மதிப்போ இல்லை. அவை வாழ்க்கையைப்பற்றிய ஒரு பாவனையை மட்டுமே மேற்கொள்கின்றன.அக்கதைகளை ஒட்டி நீங்கள் எழுதினீர்கள் என்றால் நீங்கள் செல்லும் பாதை வேறு. என் பாதை வேறு.

தரமாக எழுதவேண்டும் என்றால் முதலில் தரமான நல்ல கதைகளை நிறைய வாசியுங்கள். என்னுடைய ‘நவீனத்தமிழிலக்கிய அறிமுகம்’ நூல் உங்களுக்கு உதவலாம். அதில் உள்ள சிறுகதைப்பட்டியலில் உள்ளகதைகளை வாசியுங்கள். இலக்கியம் எழுத வந்தால் நீங்கள் அந்த பட்டியலில் நிற்கவேண்டும் அல்லவா?

உங்கள் சிறுகதை சிறுகதைக்குரிய வடிவத்தைஅ டையவில்லை. சிறுகதை என்பது அனுபவக்குறிப்போ கருத்துச்சொல்லுதலோ அல்ல. அந்த வடிவத்தைப்பற்றி நான் என்னுடைய ‘எழுதும் கலை’ நூலில் விரிவாகவே பேசியிருக்கிறேன்

வாசியுங்கள். எழுதுங்கள். எழுதுவதை இதழ்களுக்கு [விகடனுக்கு அல்ல. காலச்சுவடுக்கும் உயிர்மைக்கும் உயிரெழுத்துக்கும்] அனுப்புங்கள். அவர்களால தேர்வுசெய்யப்பட்டு அச்சாவதை ஒரு சவாலாகக் கொள்ளுங்கள். அவர்களின் நிராகரிப்பில் இருந்து மேலே செல்ல முயலுங்கள்

வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரைகதைகள், கடிதங்கள்
அடுத்த கட்டுரைகதைகள், கடிதங்கள்