லக்ஷ்மி சரவணக்குமாரின் கொமோரா குறித்து… சுரேஷ் பிரதீப்

உதிரி மனிதர்கள் அல்லது விளிம்பு நிலையினர் குறித்தான கரிசனம் பின் நவீனத்துவத்தின் இலக்கிய பாவனைகளில் ஒன்றாக இருக்கிறது. தலித் இலக்கியத்தின் எழுச்சிக்கும் நிலைகொள்ளலுக்கும் பிறகு எந்தவிதமான பொது அடையாளங்களுக்குள்ளும் சுருக்க இயலாத அமைப்பு ரீதியான பலங்களும் இல்லாத மனிதர்களின் மீது புத்தாயிரத்தின் இலக்கியம் அக்கறை கொள்ளத் தொடங்கி இருப்பதாகப்படுகிறது. விளிம்பு நிலையினர் என்ற வகைப்படுத்தலின் மீதான கவனத்தில் இருந்தே லஷ்மி சரவணக்குமாரின் இந்த நாவல் எழுதப்பட்டுள்ளதாக எடுத்துக் கொண்டு நாவலை வாசிப்பது சரியாக இருக்குமென்று நினைக்கிறேன்.

தகப்பனின் அரவணைப்பும் பாதுகாப்பும் கிடைக்காதவனாக வளரும் கதிர் என்ற திறுவனின் அல்லாட்டங்களும் தகப்பனின் மீதான அவனது வன்மமுமே நாவலின் கதைக்களத்தை கட்டமைக்கிறது. கதிரின் அப்பாவான அழகர்சாமியின் இளமைப்பருவம் கம்போடியாவில் நிகழ்கிறது. கம்போடிய நாட்குறிப்புகள் என சில அத்தியாயங்கள் வழியாக போல்பாட்டின் ராணுவம் கம்போடியாவை கைப்பற்றுவதும் கைவிடுவதும் சொல்லப்படுகிறது என்றாலும் நாவலின் மைய இழை கதிர் என்ற சிறுவன் இளைஞனாவதும் அழகர்சாமி குடும்பத்துக்கு இழைத்த துரோகத்துக்கென அவனை பழிவாங்க நினைப்பதும்தான்.

தந்தையை கொல்ல நினைக்கும் மகன் எந்தவித நியதிகளுமற்ற தந்தை என்பது ஒரு நிரந்தர பேசுபொருளாகவே இலக்கியத்தில் நீடிக்கும்போல. கரமசோவ் சகோதர்கள் நாவலின் திமித்ரி-பியோதர் பாவ்லோவிட்ச் ஒரு ஆரம்பகால உதாரணம். தந்தையை நெருங்கவும் விலகவும் முடியாத மகனின் ஒருவித உளவியல் வன்மத்தை இந்த நாவல் தொட்டிருக்கலாம். கதிர் என்ற சிறுவனின் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளின் வழியே அவன் உள்ளம் அடையும் சிதைவுகளையும் மீட்புகளையும் தொட்டிருக்கலாம். ஒருபால் உறவு மணம் கடந்த பாலுறவு காமத்தில் செயல்படும் அதிகாரம் என பாலுறவு சித்தரிப்புகளில் பல நுண்மைகளை இப்படைப்பு தொட்டிருக்கலாம்.

கதிர் பார்க்கும் சாதாரண வேலைகள் வழியாக உதிரி மனிதர்களின் வாழ்வியலை காட்சிப்படுத்தி இருக்கலாம். ஆனால் எல்லாமும் வெறும் “லாம்”களாகவே நின்று விட்டிருக்கின்றன. எந்தவிதமான சித்தரிப்பு நுட்பங்களும் இல்லாத வறட்சிய்ன மொழி அக விசாரணைகளாக சொல்லப்படாமல் வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டுக்காகவே எழுதப்பட்டிருக்கின்றனவோ என்று எண்ணவைக்கும் பாலுறவுச் சித்தரிப்புகள் தொடர்புறுத்தல்களுக்கு சாத்தியங்கள் இல்லாத சம்பவ கோர்ப்புகள் என இந்த பெரிய நாவல் வாசித்து முடித்தபோது பெரும் ஆயாசத்தைத் தந்தது.

ஒரு தீவிர பாவனையையும் அரசியல் மற்றும் மனிதாபிமான தளங்களில் பேசப்படும் விஷயங்களையும் இணைத்துக் கொண்டால் ஒரு படைப்பு இலக்கிய அந்தஸ்து பெற்றுவிடும் இச்சூழலில் இதுபோன்ற கரிசன பாவனை கொண்ட படைப்புகளின் பெறுமானத்தை மதிப்பிட வேண்டியிருக்கிறது. தந்தை மகன் உறவின் ஆதார சிக்கல்களோ விளிம்பு நிலையினர் உண்மையில் எதிர்கொள்ளும் சிக்கல்களோ நாவலில் எங்குமே பேசப்படவில்லை. இவ்வளவு பெரிய நாவலில் நினைவில் நிற்கும்படியான ஒரு சித்தரிப்போ பாத்திரமோ இல்லையென்பது தமிழ் நாவல்களின் செல்திசை மீதான அச்சத்தை கூட்டுகிறது.

சுரேஷ் பிரதீப் 

முந்தைய கட்டுரைலான்ஸர் பாரக்
அடுத்த கட்டுரையட்சிப்பாலை