தமிழ் இலக்கிய உலகில் மிக அண்மையான காலத்தில் அதிகமான வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்த இலக்கிய நிகழ்வாக ஆகுதி நடத்திய இலக்கிய பெருவெளி தொடரின் முதல் நிகழ்வே அமைந்திருந்தது.இந்நிகழ்வில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் மரபை விரும்புவதும் வெறுப்பதுவும் எப்படி? என்ற தலைப்பில் ஆற்றிய கட்டண உரையை கேட்பதற்கு கிட்டத்தட்ட ஐந்நூறு பேர் கூடினர்.நிகழ்வு தொடங்கும் நிமிஷம் வரையும் விமர்சனங்கள் ஒரு தரப்பினரால் சமூக ஊடகங்களில் முன்வைக்கப்பட்டன.இவ்வாறன புறச்சவால்களின் மீது ஆகுதிக்கொரு தனிப்பிடிப்பு இல்லாமலில்லை.அதனது இலக்கிய செயற்பாட்டிற்கு சவால்கள் எப்போதும் ஒரு ஊக்கமருந்து.ஒரு நிகழ்வின் வெற்றிக்கு அதன் மீது தொடுக்கப்படும் சவாலும் பங்கு செலுத்துகின்றது.இந்த நிகழ்வின் பாரிய வெற்றியிலும் அதுவே நடந்தது.
சென்னை அடையாறில் உள்ள டி.என் ராஜரத்தினம் பிள்ளை கலையரங்கத்தில் மார்ச் இரண்டாம் திகதி சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு கூட்டம் தொடங்கியது.இலக்கியஆர்வலர்களும்,வாசகர்களும் நிறைந்திருந்த அரங்கின் மேடையில் நான் முகவுரை நிகழ்த்தினேன்.இலக்கியத்தின் சத்தறிந்த பெருமளவிலான கூட்டத்திடையே எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களை மேடைக்கு அழைத்தேன்.
தமிழ்மொழியின் எழுத்துலகில் ஒரு அசாதாரண உழைப்பை நிகழ்த்திய சமகாலத்தின் மாபெரும் படைப்பாளியான ஜெயமோகன் இந்த மேடையில் ஆற்றவிருக்கும் உரை;ஒரு வரலாற்றின் தொடக்கமென அறிவித்தேன்.கட்டணஉரையைக் கேட்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த நூற்றுக்கணக்கான இலக்கிய அன்பர்கள் தமது செவிகளை ஆயிரமாயிரமாய் பெருக்கியபடி காத்திருந்தனர்.
மரபை விரும்புவதும் வெறுப்பதுவும் எப்படி என்ற தலைப்பில் ஜெயமோகன் உரையாற்ற தொடங்கினார்.ஒருமித்த எதிர்பார்ப்போடு ஆரம்பிக்கப்பட்ட தமிழ்இலக்கிய உரைகளில் இதுவும் ஒன்று எனலாம். வழமையான மேடைப்பேச்சின் தொனியோ,ஏற்ற இறக்க மாற்றங்களோ இல்லாமல் ஒரு நவீனத்தன்மை பொருந்திய உரையாக அது தொடங்கிய சில நிமிஷங்களிலேயே தீவிரம் பெற்றது.சரியாக ஒரு மணித்தியாலத்தில் முதற்பாதி உரை நிறைவு பெற்றுதேநீர் இடைவேளை விடப்பட்டது.இருபது நிமிடங்களுக்கு பின்னர் மீண்டும் தொடங்கியது இரண்டாவது பாதி உரை.அரங்கம் மீண்டும் தன்னை ஆயிரம் செவிகளுக்குள் நிறைத்துக்கொண்டது.மரபின் குளம்படிகள் ஆயிரம் புரவிகளின் வேகத்தோடு வரலாற்றின் புழுதியை எழுப்பியது.நாம் எத்தனை வகையான மரபுகளை நமது ஜீவிதத்தில், பண்பாட்டில், அரசியலில் என எல்லாவற்றிலுமாக கொண்டிருக்கிறோமென அந்த உரை செழுமையுடன் தன்னை வளர்த்துக்கொண்டிருந்தது.நமது மரபுகளை கைவிட்டு மேற்கத்தேயே மரபுகளில் தேயும் நம் முட்டாள்தனங்களை அந்த உரை வலிக்காமல் சாட்டை கொண்டு விளாசியது.உரையை ஜெயமோகன் முடித்த கணத்தில் எழுந்த கரவொலி வான் திறந்து இறங்கும் பறவைகளின் சிறகடிப்பை போல ஒருவித பரவசஒலியாய் சில நிமிடங்கள் நீண்டிருந்தது.அது தந்த புத்துணர்ச்சி தமிழ் இலக்கிய ஊழியத்திற்கே.
இலக்கிய உபாசனை கொண்ட ஒருவரால் தான் அவ்வாறானதொரு ஆழ்மனத்திடை பொங்கி பிரவகிக்கும் உரையினை கொஞ்சமும் சலிப்புத்தட்டாமல் தரமுடியுமென ஒரு வாசகர் என்னிடம் சொல்லிச் சென்றார்.இவ்வாறான கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்துங்கள் என்று ஒரு வயோதிகப் பெண்மணி என்னை ஆசிர்வதித்தார்.
நான் இந்தநிகழ்வை நடத்துவதற்கு எழுந்த விமர்சனங்களைத் தாண்டியும் எழுந்த இலக்கியச் சத்துள்ள பாராட்டுதல்கள் என்னை வியப்பிலாழ்த்தியது.கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் அவர்கள் நிகழ்வு குறித்து எழுதிய சிறிய பதிவு அதில் அடக்கம்.மேலும் இந்தநிகழ்விற்கு உறுதுணையாக இருந்த தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மதிப்புமிகு ம.இராசேந்திரன் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.நிகழ்வில் எதிர்பாராத விதமாக வருகை தந்திருந்த இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் வசந்தபாலன், இயக்குநர் தனசேகர் ஆகியோர் நிகழ்வின் முழுமைக்கும் இருந்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழின் இளம் படைப்பாளிகளான கவிஞர் மண்குதிரை, எழுத்தாளர் நரன் , எழுத்தாளர் கவிதைக்காரன் இளங்கோ ஆகியோர் வருகை தந்திருந்தனர்.மேலும் இந்நிகழ்வில் இணை அனுசரணை வழங்கிய நிவேதனம் உணவகம் மற்றும் ஊடக அனுசரணை வழங்கிய சுருதி தொலைக்காட்சிக்கும் எப்போதும் போல தோழமை வணக்கம்.
ஆகுதியின் இலக்கியப் பெருவெளி தொடரின் இரண்டாவது நிகழ்வில் உரையாற்ற போவது யார்? என இப்போதே ஆர்வம் எழுந்த கேள்விகள் வந்த வண்ணம் இருக்கின்றன.மிகவிரைவில் இலக்கியப்பெருவெளியின் அடுத்தநிகழ்வு குறித்த அறிவிப்பு வெளியாகும்.
[கணையாழியில் வெளிவந்த கட்டுரை]