ஈரோடு விவாதப்பயிற்சி முகாம் -கடிதங்கள்

ஈரோடு விவாதப் பயிற்சிப் பட்டறை

அன்புள்ள ஜெ ,

 

நன்றாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது ஈரோடு விவாத பட்டறை. எப்படி விவாதிப்பது என்று இதுவரை பள்ளியிலும்,கல்லூரியிலும்.வேலை செய்யும் இடத்திலும் சொல்லி கொடுத்ததில்லை. நாமே அனுபவத்தில் கற்றுக் கொண்டால் தான் உண்டு.  ஆனால் அதில் நிறைய போதாமைகள் உள்ளன. அப்படி இருக்கையில் விவாதத்தை முறையாக பயிற்சி கொடுத்த உங்களுக்கு முதலில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

 

ராஜகோபாலன் மற்றும் செந்தில்குமார்   விவாதத்தின் அடிப்படை கருத்துக்களை அழகாக  சொல்லி கொடுத்தார்கள் .  நீங்கள் எவற்றை விவாதிக்க வேண்டும்,  எவற்றை விவாதத்திலிருந்து தவிர்க்க வேண்டும் என்று தெளிவாக புரியும்படி விளக்கினீர்கள். முதல் நாள் மாலையில் நடந்த விவாத போட்டி  ஒரு தனி சிறப்பு. எல்லோரும் ஆர்வமாக பங்கேற்றார்கள் .அதில் உள்ள குறை நிறைகளை நீங்கள் சுட்டி காட்டும்போது நாங்களும் நிறைய கற்று கொண்டோம்.

 

இரண்டு நாளாக நீங்கள் மேடையில் மட்டுமில்லாமல் , காலை நடையிலும் , இடைவேளையிலும் , இரவு தூங்கும் நேரம் வரை தொடர்ந்து வாசர்களோடு உரையாடுகிறீர்கள். வாசகர்களுக்கு அறிவை கடத்த வேண்டும் என்ற உங்களது ஆர்வம்  பிரம்மிப்பாகவே இருக்கிறது.

 

விவாதத்தின் திறமையை அடுத்த கட்டத்திற்கு செல்ல ,மீண்டும் ஒரு பயிற்சி பட்டறை  நீங்கள் நடத்தவேண்டும் என்று ஒரு கோரிக்கையை  இந்த நேரத்தில் வைக்கிறேன்.

 

ஒருங்கிணைப்பாளர்களுக்கும் ,நிகழ்ச்சியில் கலந்து கொள்ள  வாய்ப்பு  கொடுத்ததிற்கும் மிக்க  நன்றி

 

இப்படிக்கு

தி .செந்தில் குமார்,

கோவை

 

 

அன்புள்ள ஆசிரியருக்கு,

 

பணிவான வணக்கங்கள். சமீபத்தில் நடந்த ‘விவாத பயிற்சி பட்டறையில்’ பங்கு கொண்டு பயன்பெற்றவர்களில் நானும் ஒருவன். அவ்விரு நாட்களில் நான் பெற்றவற்றையும் உணர்ந்தவற்றையும் இக்கடிததத்தில் சொல்ல நினைக்கிறேன்.

 

1.தொடர் அமர்வுகள் தன் இயல்பில் கொண்டிருந்த ஒழுங்கும் தீவிரமும் பிரம்மிக்க வைத்தன. கடந்து போன ஒவ்வொரு நிமிடமும் ஏதோ ஒன்றை எடுத்து கனத்துச் சென்றது. விடுமுறை நாட்களில் வெறுமனே கழிந்து கொண்டிருந்த என் நிமிடங்களெல்லாம், அந்த இரு தினங்களில் என்னைப் பார்த்து திகைத்து நின்றதை உணர்ந்தேன்.

 

2.சனி மாலையில் நடைபெற்ற பயிற்சி விவாதம் ஒரு சிறந்த நிகழ்வு. கேட்டு உணர்த்தவற்றை அக்கணமே நடைமுறை படுத்தி, தவறுகளை திருத்திக்கொள்ள வழி செய்தது.

 

3.இது போன்ற சந்திப்புகள் பல இலக்கிய நட்புகளை உருவாக்கித் தருகிறது. அயல் மாநில பொது இடங்களில் ஒரு மொழி பேசும் மக்கள் சட்டென நண்பர்கள் ஆகிவிடுவதைப் போல உங்கள் வாசகர்கள் ஒரு சந்திப்பிலேயே நண்பர்கள் ஆகிவிடுகிறோம்,  நாங்கள் படிக்கும் மொழி ஒன்று என்பதால். பல சமயங்களில் பிற வாசகரும் என்னில் ஒருவராகவே தோன்றுகிறார். ஏனெனில் என்னை போன்றே அவரையும் என்றோ ஒரு சமயம் ‘அறம்’ ஓங்கி உலுக்கியிருக்கும், ‘நான் இந்துவா?’ தட்டி எழுப்பியிருக்கும், தளத்தில் வரும் பதிவுகள் ஒரு நிறைவை அளித்திருக்கும்.

 

ஈரோடு புதிய வாசகர் சந்திப்பு,  சென்னை கட்டண உரை, ஈரோடு விவாத பயிற்சி பட்டறை என இவ்வருடம் இலக்கியத்தோடு பயணிக்கிறது. அதற்கான தளம் அமைத்துக் கொடுத்த ஆசிரியருக்கும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களுக்கும் என் நன்றிகள். புதிய வாசகரான எனக்கும் பொறுப்புகள் உள்ளன என்று உங்களுடனான ஒவ்வொரு சந்திப்பும் மறைமுகமாக சொல்லிச் செல்கின்றன.

 

இப்படிக்கு,

சூர்ய பிரகாஷ்

சென்னை

முந்தைய கட்டுரைஓநாயும் புல்லும்- சௌந்தர்
அடுத்த கட்டுரைமூடர்களின் நாக்கு