கேள்வி பதில் – 64

மொழிபெயர்ப்புக்கும் மொழியாக்கத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? கிட்டத்தட்ட திரைப்படங்களில் dubbing மற்றும் ரீமேக் படங்களுக்கான வித்தியாசம் போன்றதுதான் இதுவும் என்று நினைத்துவந்திருக்கிறேன்.

— ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.

மொழியாக்கம் மொழிபெயர்ப்பு ஆகிய சொற்கள் பெரும்பாலும் ஒன்றுபோலவே கையாளப்படுகின்றன. ஆனால் Translation என்பதை மொழியாக்கம் என்றும் Transliteration ஐ மொழிபெயர்ப்பு என்றும் சொல்லலாம் என்று படுகிறது. மூலமொழியில் உள்ள படைப்பூக்கத்தை மற்ற மொழிக்குக் கொண்டுவருவது மொழியாக்கம். மூலத்தில் உள்ள சொற்களுக்குச் சமானமான சொற்களைக் கொண்டு அதே மொழியமைப்பை இன்னொரு மொழிக்குக் கொண்டுவருவது மொழிபெயர்ப்பு.

மூன்றாவதாக ஒன்றும் உண்டு. சுதந்திர மொழிபெயர்ப்பு. மூலத்தில் உள்ள அடிப்படைக்கூறுகளை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றமொழியில் அவற்றைப் படைத்துக் காட்டுவது இது.

பொதுவாகப் பலரும் இவற்றில் ஏதேனும் ஒன்றைச் சிறந்த அல்லது சரியான வழியாகக் கொண்டு பிறவற்றை எள்ளி நிராகரிப்பது வழக்கம். ஆனால் மொழியின் தன்மைகளையும் படைப்பியக்கத்தின் நுட்பங்களையும் அறிந்தவர்கள் இவை ஒவ்வொன்றுக்கும் அதற்கே உரிய பயன் உள்ளது என்றே எண்ணுவார்கள்.

கவிதைகள், சட்டம், அறிவியல் போன்ற துறைகளின் தேற்றங்கள் முதலியவற்றைச் சொல்லுக்குச் சொல்லாக மொழிபெயர்க்கலாம். அப்போது சொற்றொடர்ச் சிக்கல்கள் உருவானாலும் அவற்றை நாம் உள்வாங்கிக் கொள்ள இயலும். மேலும் புதியவகையான சொற்றொடர்களின் இயல்தகவுகளை நாம் இதன் மூலம் நம் மொழிக்குக் கொண்டுவருகிறோம். சமானமான மொழிகளிலிருந்தும் மொழிபெயர்ப்புகளை நிகழ்த்தலாம்.

முதல் வகைக்கு உதாரணம். எம்.யுவன் மொழிபெயர்த்த ஜென் கவிதை ஒன்று [பெயரற்ற யாத்ரீகன். ஜென் கவிதைகள் உயிர்மை பதிப்பகம்]

Should someone ask
Where Sokan went
Just say
He had some business
In the other world
[ Yamazaki Sokan ]

எங்கே போனான் சோக்கன் என
எவராவது கேட்டால்
இதை மட்டும் சொல்லுங்கள்
“வேறொரு உலகத்தில்
கொஞ்சம்
வேலையிருந்தது அவனுக்கு”

இரண்டாவது உதாரணம்:

ஈற்றப்புலி நோற்றுகிடக்கும் ஈறன் கண்ணு துறந்நும்
கரிநாகம் வாலில்சுற்றும் புரிகம் பாதி வளச்சும்
நீறாய வனத்தின் நடுவில் நில்ப்பூ காட்டாளன்
நெஞ்சத்தொரு பந்தம் குத்தி நில்ப்பூ காட்டாளன்
[மலையாளம். கிராதவிருத்தம். கடம்மனிட்ட ராமகிருஷ்ணன்]

இதை நான் [தற்கால மலையாளக் கவிதைகள். இரண்டாம் பதிப்பு காவ்யா சென்னை ]

“வேங்கைப்புலி காத்து கிடக்கும் ஈரக் கண்கள் திறந்தும்
கருநாகம் வாலில் சுழலும் புருவம் பாதி வளைத்தும்
நீறான வனத்தின் நடுவில் நிற்பான் காட்டாளன்
நெஞ்சில் ஒரு பந்தம் நட்டு நிற்பான் காட்டாளன்”

என மொழிபெயர்ப்பு செய்தேன்.

சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பு பலசமயம் படைப்பின் அனைத்து அழகுகளையும் இல்லாமலாக்கிவிடும். காரணம் ஒவ்வொரு மொழிக்கும் அதன் தனித்தன்மைகள் மூன்று தளங்களில் உள்ளன.

1] சையமைப்பு
2] சொற்றொடர் அமைப்பு மற்றும் சொற்புணர்ச்சி
3] படிமத்தன்மை.

ஒரு மொழியின் தனித்தன்மை இன்னொரு மொழியில் அப்படியே கொண்டுவரப்பட இயலாது. அத்தனித்தன்மை நம் மனதில் எழுப்பும் உணர்ச்சியை மொழி பெயர்ப்பும் எழுப்பும்படி செய்யலாம். அதுவே படைப்பூக்கத்தை மொழியாக்கம் செய்வதாகும். படைப்பிலக்கியங்களை அப்படித்தான் மொழியாக்கம் செய்யவேண்டும்.

குறிப்பாக முற்றிலும் வேறுபட்ட மொழிக்குடும்பங்களைச் சேர்ந்த மொழிகளுக்கிடையே ஆக்கங்களை பரிமாறும்போது மிகுந்த கவனம் தேவை. ஆங்கிலத்தின் சொற்றொடர் அமைப்பில் எழுவாய் அதன் தொடக்கமுனையாக இருப்பதில்லை. தமிழுக்கு அதை மொழியாக்கம் செய்யும்போது ஏறத்தாழ தலைகீழாகத்திருப்பி எழுவாய் மனதில் பதியும்படி மொழியாக்கம் செய்யவேண்டும். எழுவாய் மையமாக இல்லாத காரணத்தால் ஆங்கிலத்தில் கூட்டுச்சொற்றொடர்களை குழப்பமில்லாமல் உருவாக்கியபடியே செல்லலாம். தமிழில் ஆங்கிலக் கூட்டுச் சொற்றொடர்களை அப்படியே மொழிபெயர்ப்பு செய்தால் குழப்பம்தான் எஞ்சும்.

உதாரணமாக இச்சொற்றொடரைப் பாருங்கள், “மேலும், இன்னும் சுருக்கமான தெளிவான வரையறுக்கப்பட்ட வகையில் அறப்பழத்தொன்மை அனுபவம் ஆனது ரைடர் கேஹார்டுக்கு ‘அவள்’ என்ற படைப்புத்தொடர் ஒன்றின் மூலக்கருத்தை அமைத்துத் தருகின்றது, பெனாய்டுக்கு, குறிப்பாக, எல் அட்லாண்டையிலும் கியூபினுக்கு டை ஆனிடியர் சேய்ட் டிலும் [இதன் இன்றியமையாமையை நாம் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது] கோய்ட்ட்சுக்கு தாஸ் ரெய்ச் ஓஹ்னேவ்மிலும் பார்லாச்சுக்கு டெர் டொடெ டாக்லிலும் அவ்வாறே மூலக்கருத்தை இந்த அனுபவம் வழங்குகிறது.

[‘உளவியலும் இலக்கியமும்’, சி.ஜி.யுங் கட்டுரையின் தமிழாக்கம். முனைவர் பேரா.தெ.கல்யாணசுந்தரம் மொழிபெயர்த்த ‘விமரிசனம் என்னும் மொழி’ [வாணி பதிப்பகம் கோவை வெளியீடு] நூலில் இருந்து]

இதன் முக்கியச் சிக்கல் மூலச்சொற்றொடர் ‘அப்படியே’ தமிழ்ச்சொற்களாக மாற்றப்பட்டுள்ளது என்பதே. ஆகவே மொழியாக்கத்தில் நாம் நம் மனதில் அப்படைப்பு உருவாக்கும் அனுபவத்துகே நேர்மையாக இருக்கவேண்டுமே ஒழிய அதன் மொழியமைப்புக்கு அல்ல. நான் ரால்ப் வால்டோ எமர்சனை மொழியாக்கம் செய்தபோது [இயற்கையை அறிதல், தமிழினி பதிப்பகம்] எமர்சனின் உத்வேகமும் அவ்வப்போது கவிதையைச் சென்று தொடும் தீவிரமும் கொண்ட மொழியை தமிழில் அனுபவமாக்க வேண்டுமென எண்ணினேன். அவரது சொற்றொடர்கள் சிறு சிறு இணைப்புகள் கொண்ட நீளமான அமைப்பு கொண்டவை. அப்படியே மொழியாக்கம் செய்தால் சிக்கலான தமிழ்ச் சொற்றொடரே உருவாகும். ஆகவே அவரது சொற்றொடர்களை சிறு சொற்றொடர்களாக உடைத்து மொழியாக்கம் செய்தேன். பல மதிப்பீடுகளில் அம்மொழிபெயர்ப்பில் எமர்சனின் ஆன்மீக எழுச்சி தெரிகிறது என்று சொல்லப்பட்டது. [அச்சுப்பிழைகள் சில வந்து விட்டன என்றாலும்].

ஒரு குறிப்பிட்ட மொழியிலும் சூழலிலும் எழுதப்பட்ட ஒரு ஆக்கத்தை இன்னொரு மொழிக்கும் சூழலுக்கும் கொண்டுவரும்போது சிலசமயம் கடுமையான தொடர்புறுத்தல் பிரச்சினைகள் எழலாம். அந்த ஆக்கத்தின் சாரமான சில விஷயங்கள் மட்டுமே நம் மொழிக்கும் சூழலுக்கும் தேவையானவையாகவும் புரிந்துகொள்ளக் கூடியனவாகவும் இருக்கலாம். உதாரணங்கள், சொல்நுட்பங்கள், உள்ளர்த்தங்கள் போன்ற பல விஷயங்கள் நமக்கு மிகவும் அன்னியமானவையாக இருக்கலாம். அந்நிலையில் சுதந்திர மொழிபெயர்ப்பே உகந்தது. உதாரணமாக உளப்பகுப்பாளரான ழாக் லக்கானின் கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்தால் அவை வெறும் சொற்களாக மட்டுமே இருக்கும். அவை பலவகையான மொழிவிளையாட்டுகள் மற்றும் உட்குறிப்புகள் கொண்ட சிக்கலான ஆக்கங்கள். விளக்கம் இல்லாமல் என்னைப்போன்ற வெளியாளுக்குப் புரியாதவை.

இந்நிலையில் தேவையற்ற நுட்பங்களையும் மொழிவிளையாட்டுகளையும் தவிர்த்துவிட்டு முக்கியமான தளத்தை மட்டும் சுதந்திரமாக மொழியாக்கம் செய்யலாம். ஆனால் படைப்பிலக்கியங்களைச் சுதந்திர மொழியாக்கம் செய்யலாகாது. காரணம் அவை குறிப்பிட்ட மையமோ சாரமோ கொண்டவையல்ல. வெளிப்பாட்டுமுறை மூலமே படைப்புகள் தங்கள் பாதிப்பை நிகழ்த்துகின்றன. அவற்றை முற்றிலும் சுதந்திரமான படைப்பூக்கத்துடன் மறு ஆக்கம் செய்யலாம், அது தழுவல் எனப்படுகிறது. ஆகவே யாருக்காக என்ன நோக்கத்துக்காக செய்கிறோம் மொழிபெயர்க்கிறோம் என்ற தெளிவே தமிழாக்க நிகழ்வுகளின் எந்த வகைத் தேவை என்பதைத் தீர்மானிக்கவேண்டும். உருவாக்க எண்ணும் விளைவே முக்கியம்.

இங்கே ஒரு வினா எழலாம். படைப்பை மொழியாக்கம் செய்வதற்குப்பதில் படைப்பின் மீதான ஒரு வாசிப்பை நாம் மொழியாக்கம் செய்யலாமா என்பதே அது. அதாவது மொழிபெயர்ப்பாளனின் கோணத்தை மொழி பெயர்ப்பின்மீது சுமத்தலாமா? உண்மையில் எல்லா மொழிபெயர்ப்புகளும் மொழிபெயர்ப்பாளனின் வாசிப்புகளே. மொழிபெயர்ப்பாளனின் கோணம் சொல்லுக்குச்சொல் மொழிபெயர்ப்பில்கூட தவிர்க்கப்படக் கூடியதல்ல. அதற்குப் பல காரணங்கள்.

மூல மொழியில் உள்ள சொல்லுக்கு நிகரான ஒரு சொல்லை மொழிபெயர்ப்பில் போடுகிறோம். ஆனால் இரு சொற்களுக்கும் இடையே நுட்பமான பல்வேறு வேறுபாடுகள் இருக்கும். Chastity என்ற சொல்லைக் கற்பு என்று தமிழ்ப்படுத்தலாம். ஆனால் இருவேறு பண்பாடுகளைச் சேர்ந்த இருவகை மன உருவகங்களை அவைச் சுட்டுகின்றன இல்லையா? ஆகவே மொழிமாற்றம் என்பது எப்படியானாலும் ஒரு வகை நகல் உருவாக்கம் மட்டுமே.

மூலமொழியில் உள்ள ஒரு சொல்லுக்குச் சமானமாக பற்பல சொற்கள் இருக்க ஒன்றை மொழிபெயர்ப்பாளன் தெரிவு செய்வதிலேயே அவனது சொந்த வாசிப்புக் கோணம் வந்து விடுகிறது. சொற்களை இணைப்பது பிரிப்பது ஆகியவற்றிலும் அவனது கோணம் செயல்படுகிறது. உதாரணமாக மேலேசொன்ன எம்.யுவன் மொழிபெயர்த்த கவிதையை

எங்கே போனான் சோக்கன் என
எவராவது கேட்டால்
இதை மட்டும் சொல்லுங்கள்
“கொஞ்சம்
வேலையிருந்தது அவனுக்கு,
வேறொரு உலகத்தில் “

என்று மொழிமாற்றம் செய்தால் பொருளில் நுட்பமான மாற்றம் நிகழ்கிறதல்லவா? ‘வேறு ஒரு உலகத்தில்’ என்பதை ‘மற்ற உலகத்தில்’ என்று மொழிபெயர்த்தால் பெரிய மாற்றம் ஏற்பட்டு விடுகிறதல்லவா?

ஆகவே ‘சரியான‘ மொழிபெயர்ப்பு என்பது ஏதும் இல்லை. நல்ல மொழிபெயர்ப்புதான் உள்ளது. பயனுள்ள மொழிபெயர்ப்பு, அழகிய மொழிபெயர்ப்பு என அதை இரண்டாகப் பிரிக்கலாம்.

முந்தைய கட்டுரைகேள்வி பதில் – 62, 63
அடுத்த கட்டுரைகேள்வி பதில் – 65, 66