வாசிப்பு- கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

இந்தப் புத்தக கண்காட்சியில் 2000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கினேன்.என் தம்பி ஏற்கனேவே வாங்கியதை படிக்கவில்லை இதை வேறு ஏன் வாங்கிகுவிக்கிறாய் என்று கேட்டான்.நான் உங்கள் கொற்றவை குறித்து கூறினேன்.கொற்றவை வாசிக்க பெரும் ஆர்வம் கொண்டு தேடினேன்.எங்கும் கிடைக்கவில்லை,பிறகு நீங்கள் உங்கள் இணையத்தில் அது இந்தடிசம்பர் மாதம் வெளிவரும் என்று கூறியிருந்ததால்இந்த கண்காட்சியில் கண்டிப்பாக கிட்டும் என நினைத்திருந்தேன்(முதல் நாள் கிடைக்கவில்லை மேலும் ஒரு நாள் சென்று வாங்கி வந்தேன்).

தமிழ்ச் சூழலில் சில புத்தகங்கள் ஒருமுறை பதிப்பித்து தீர்ந்துவிட்டால்
அடுத்த பதிப்பு 25 ஆண்டுகள் கழித்து கூட வரலாம் என்று கூறினேன்.சிரித்து கொண்டு சரி என்றான்.உங்கள் நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தது ‘காடு’ தான்.அதற்கான காரணம் மிகச்சிறியது,(இதல்லாம் ஒரு காரணமா என்று கூட உங்களுக்கு
தோன்றலாம்).ஒரு முறை திற்பரப்பு அருவியில் குளித்து விட்டு ,களியலில் ஒரு கடைக்குள்சென்று ஒரு பொருள் வாங்க சென்றேன்.
அங்கு ஒரு பெண்ணை பார்த்தேன், இன்று வரை நான் பார்த்த பெண்களில் மிகஅழகானவள் அவள்தான்.

அவளின் அழகு திகைப்பூட்டியது.இன்று வரை அவள் கண்களை மறக்க முடியவில்லை.நாங்கள் கேட்ட பொருள் இல்லாததால் திரும்பி விட்டோம். களியல் முக்கில்நின்று கொண்டு மீண்டும் செல்லலாமா என்று 1 மணி நேரம் சிந்தித்துகொண்டிருந்தேன்.
சென்றால் என்ன பொருளை கேட்பது என்று தெரியவில்லை.(அது ஒரு போட்டோ ஸ்டுடியோ).என் நண்பன் என்னுடன் இருந்தான். அவனிடம் கூறினேன் “மக்கா அவா மட்டும்சரினு சொல்லட்டும்ல அவளுக்க காலுல விழுந்து கடக்கம்ல”.

சென்னையில் வேலை பார்பதால் வேறு வழி இன்றி திரும்பிவிட்டேன்.இரண்டு மாதம் கழித்து மீண்டும் அந்த கடைக்கு சென்றேன் வேறு ஒரு பெண்நின்று கொண்டிருந்தாள்.ஓர் ஆண்டு ஆன பின்பும் அவள் கண்கள் மட்டும் அடிக்கடி வந்து தொல்லை செய்யும்.அவளை பார்த்த பின்பு இங்கு சாப்ட்வேர் நிறுவனத்தில் ஜீன்ஸ் , தி ஷர்ட்என்று திரியும் பேரழகிகளை எல்லாம் மிக சாதாரணமாக ஒரு பார்வை கூடபார்க்காமல் கடந்து செல்ல முடிகிறது.அவள் நினைவு வரும் போது ஒரு வெறுமை வந்து உள்ளத்தை வாட்டும்.இந்தஅண்டத்திற்கு அப்பால் என்ன என்று
சிந்தித்தால் வருமே ஒரு வெறுமை அதே வெறுமை.காடு நாவலில் வரும் மலையத்திபெண் அவளே தான்.(இவள் மிகவும் வெள்ளை நிறத்தி).

எனினும் தங்கள் நாவலில் என்னை மிகவும் பாதித்தது கன்னியாகுமரி தான். அதைஒரேயடியாக வாசித்து முடித்து விட்டேன்.(ஒரே இரவில்).அடுத்த நாள் வேலை ஓடவில்லை.வடபழனி போக்குவரத்து சைகையை சுற்றி காரணமின்றிநடந்து கொண்டிருந்தேன்.நீண்ட மடல் எழுதி உங்கள் நேரத்தைவீனாக்கிருந்தால் மன்னிக்கவும். கொற்றவை படித்துவிட்டு மீண்டும் எழுதுகிறேன்.

அன்புடன்
கோ ஜெயன்

அன்புள்ள ஜெயன்,

பலசமயம் படைப்புகள் நம்மை என்ன செய்கின்றன என்று நம்மால் சொல்ல முடிவதில்லை. உண்மையில் நம் அகம் என்பது ஒரு படிமக்கட்டமைப்பு. இலக்கியப்படைப்புகள் நம்முள் உறையும் அந்தப் படிமக்கட்டமைப்பை சிதறடித்து விடுகின்றன. மாற்றி அமைத்துவிடுகின்றன. ஆகவேதான் நாம் நிம்மதி இழக்கிறோம். வெறுமையை உணர்கிறோம்

ஆனால் பல்லிடுக்கு துகளை துழாவும் நாக்கு போல நம் சிந்தனை அந்த கலைந்த அகத்தை நிலையில்லாமல் வருடிக்கொண்டே இருக்கிறது. நாம் அதைச்சுற்றியே மானசீகமாக வாழ்கிறோம். அந்தக் கலைவை நாம் திருப்பி அடுக்கிக் கொண்டோமென்றால், மீண்டும் நம் சிந்தனைகளை தொகுத்துக்கொண்டோமென்றால், நாம் அந்நாவலின் பாதிப்பை பெருமளவும் கடந்து விட்டோமென பொருள்

ஆனால்; அதற்குள் நம் அகம் கொஞ்சம் மாறியிருக்கும். கொஞ்சம் முன்னகர்ந்திருக்கும். அந்த ஆக்கத்தின் பங்களிப்பு அதுவே

ஜெ

வணக்கம் ,

ஒரு புத்தகக் கடையில் (odyssey , landmark) காலம் கழிப்பது எனக்கு மிகவும் பிடித்த பொழுது போக்கு . அந்த தனிமையும் / புத்தகங்கள் வரிசைபடுத்திய விதமும் பார்க்கவே அலாதியாய் இருக்கும் . சில நேரங்களில் நான் இந்த கடைகளில் புத்தகங்களை (impulsive) அதிகம் பணம் குடுத்து கூட வாங்குவது உண்டு , flipkart.com இதே புத்தகங்களை பெரும்பாலும் குறைந்த விலைக்கு விற்கிறது . நம்மை சொக்கவைக்கும் உணர்வு புத்தகங்களுக்கு உண்டு , an ecstatic feeling . It gives feel of the life and times around us . A slight glance , gives a birds eye of view on the what the world is doing .

புத்தகங்களைப் பொறுத்த வரையில் toyota lean management வேலைக்கு ஆகாது . எப்பொழுதும் ஒரு 10 அல்லது 15 புத்தகங்கள் வீட்டில் படிக்காமல் இருப்பது வழக்கம் .

நீங்கள் சொன்னதுப் போல் நானும் புத்தகங்களை என் அருகாமையில் வெய்த்துக்கொல்வேன் . ஒரு புத்தகத்தை வாங்கி படித்தப் பின்னர் இன்னொன்றை வாங்குவேன் என்று சொல்லும் பலர் தொடர்ந்துப் படிப்பது இல்லை என்பதே எதார்த்தம் . ஒரு புத்தகம் பல நேரங்களில் பல புத்தகங்களுக்கு வழி வகுக்கும் , அந்த நேரங்களில் சில புத்தகங்கள் வாசிப்பு வரிசையில் பின்தங்கிப் போகும் .

புத்தகக் கண்காட்சிகளில் ஒரு சில எதார்த்த பிரச்சனைகள் உண்டு , உதாரணம் பெரும்பாலான கடைகள் டெபிட்/கிரெடிட் கார்ட்களை ஒத்துக்கொள்வதில்லை .

இணையத்தில் தமிழ் புத்தகங்கள் விற்க்கும் தளங்கள் இன்னும் அவ்வளவு தேர்ச்சி அடையவில்லையோ என்றுப் படுகிறது .

புத்தகங்களை வாசகர்கள் விமர்சனம் செய்யவும் , அதை பற்றி விவாதிக்கவும் ஒரு வாசிப்பு குழுமம் (reading community ) அமைய வேண்டும் . goodreads.com போன்ற வெப்சைட் ஒன்று தமிழ் சூழலுக்கு இன்றைய தேவை .

நன்றி
அசோக்

அன்புள்ள அசோக்

நன்றி

புத்தகங்களுக்கான பல இணையதளங்கள் உள்ளன. உடுமலை.காம் அபப்டிபப்ட்ட ஒன்று .ஆனால் அவை நீடிக்கவேண்டுமென்றால் இன்னமும் வாசிப்பு பரவலாகவேண்டும். இன்னமும் நிதிச்சுழற்சி தேவை

ஜெ

அன்புள்ள ஜெ,
நலமாக இருகிறீர்களா……

ஆம். புத்தகங்கள் மத்தியில் இருப்பது ஒரு அலாதியான அனுபவம். புத்தகக் கண்காட்சிக்கு மூன்று முறை சென்றிருந்தேன். நீங்கள், ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், பாரதியார், கி.ரா, கந்தசாமி, மௌனி, சு.ரா மற்றும் வர்ஜினியா வூல்ப் என்று வாங்கி வந்திருக்கிறேன்.

வாசிப்பு மற்றும் கண்காட்சி பற்றி எனக்குள் வளர்ந்த கருத்துக்களை பிரதிபலிக்கும் வண்ணமாக அமைந்திருக்கிறது உங்களின் இக்கட்டுரை. நீங்கள் சொல்வது போல் ஒரே சமயத்தில் குறைந்தது இரு வேறு புத்தகங்களை படிக்கிற பழக்கம் இருக்கிறது. ஒரு வாசகனுக்கு வாசிக்கும் போது ஒரு எழுத்தாளனோடு ஏற்படுகிற உறவு அலாதியானது, அந்தரங்கமான உரையாடல்களும் அதில் அடக்கம். என் மனதிற்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து கொண்டதைவிட உங்கள் எழுத்துகளோடு பகிர்ந்து கொண்டிருக்கும் நெருக்கம் மிக அதிகம்; இயல்பாகவே அவ்வாறு அமைகிறது. தூங்குவதற்கு முன் உங்கள் வலைத்தளத்தில் ஒரு இடுகையாவது வாசிப்பது வழக்கம் ஆகிவிட்டது.

நன்றியுடன்,
வள்ளியப்பன்

அன்புள்ள வள்ளியப்பன்,

இணையத்தின் வாசிப்புச் சாத்தியங்கள் பல. அது கையருகே உள்ளது. அது நாம் வழக்கமாக வேலைசெய்யும் இடமும் கூட. அதற்காக நேரம் ஒதுக்கவேண்டியதில்லை.

ஆனால் இணையவாசிப்பு பல எல்லைகள் கொண்டது. பெரும்பாலும் வேகவாசிப்புக்காகவே அது உள்ளது

இந்த இணையதளம் அப்படி ஆகக்கூடாது, புத்தகவாசகர்களுக்கானதாக மட்டுமே இருக்கவேண்டும் என பிடிவாதமாக இருக்கிறேன். சிறிய எளிய கட்டுரைகளை வெளியிடாமைக்குக் காரணம் அதுவே

இன்னும் பலகாலம் புத்தகங்களே நமக்கான வாசிப்புவடிவமாக இருக்கும்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

இந்த புத்தக கண்காட்சியில் தங்களது கீழ்க்கண்ட நூல்களை வாங்கினேன்.

1 . கொற்றவை
2 . இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்
3 . இந்தியஞானம்
4. கொடுங்கோளூர் கண்ணகி [மொழியாக்கம்]
5 .கமண்டல நதி – நாஞ்சில்நாடன் படைப்புலகம்
6 சங்கச் சித்திரங்கள் [சங்க இலக்கிய அறிமுகம்]
7 கண்ணீரைப் பின்தொடர்தல்[ இருபத்திரண்டு இந்தியநாவல்கள்]

சிறிய நூல்களை முதலில் படிக்கலாமென்று “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” ஆரம்பித்து இருக்கிறேன். இடையிடையே கமண்டல நதியும் படித்து வருகிறேன்.

இன்று முழுதும் தங்கள் கீதை விளக்கக் கட்டுரைகள் படித்தேன். மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். தங்களின் கீதை உரை நூல் முழுதும் இந்த வருடம் எதிர் பார்க்கலாமா?

அன்புடன்,
கணேஷ் பாபு,
சிங்கப்பூர்

அன்புள்ள கணேஷ்,

இந்தவருடமே அசோகவனம் கீதை இரண்டையும் முடிக்கவேண்டுமென்பது எண்ணம்

பார்ப்போம்

ஜெ

முந்தைய கட்டுரையானைடாக்டர்- கடிதங்கள் மேலும்
அடுத்த கட்டுரைசாமியாரின் கதை