«

»


Print this Post

திராவிட இயக்க இலக்கியம்- முடிவாக…


 

திராவிட இயக்க இலக்கியம் – சாதனைகளும் மிகைகளும்

அன்புள்ள ஜெமோ,

 

நவீனத் தமிழிலக்கியத்தில் பார்ப்பனியமே இல்லை என்கிறீர்களா என்ன? அதைச் சுட்டிக்காட்டுவது தவறு என்கிறீர்களா? விமர்சனம் செய்வதில் என்ன தவறு என்றுதான் கேட்கவிரும்புகிறேன். உங்கள் நியாயங்கள் புரிந்தாலும் இந்த சந்தேகம் எஞ்சியிருக்கிறது. இங்கே எல்லாவற்றிலும் சாதியம் ஒளிந்திருக்கிறது. உதாரணமாக நான் செந்தில் என்ற பெயர்கொண்ட ஒரு பார்ப்பனரைக்கூட இதுவரைப் பார்த்ததில்லை. ஆறுமுகம், முருகன், பழனி போன்ற பெயர்கள் கூட அவர்களிடம் இல்லை. கார்த்திக், சுப்ரமணியன் சாதாரணம். காரணம் அவர்கள் தமிழ்ப்பெயரை வைத்துக்கொள்ள மாட்டார்கள். இந்தப் பண்பாட்டு நுட்பங்கள் பேசப்படவேண்டாமா?

டி.செந்தில்குமார்

 

அன்புள்ள செந்தில்குமார்,

 

நான் நவீனத்தமிழிலக்கிய முன்னோடிகளைப் பற்றி ஏழு நூல்கள் எழுதியிருக்கிறேன். அவை ஒற்றைத் தொகுதியாக நற்றிணை வெளியீடாக வந்துள்ளன. அவற்றில் பிராமண எழுத்தாளர்களின் – மேலும் குறிப்பாக ஸ்மார்த்த எழுத்தாளர்களின் – சமூகவியல் தன்மைகள், அழகியல்நோக்குகள் என விரிவாகவே விவாதித்திருக்கிறேன். மௌனி, .லா.ச.ரா, கு.ப.ராஜகோபாலன் ஜானகிராமன் ஆகியோரை அந்தக்கோணத்தில் ஆராய்ந்திருக்கிறேன். அதற்காக அவ்வட்டாரத்தில் வசைபாடவும்பட்டிருக்கிறேன். அந்த கோணத்தில் எந்தத் திராவிட இயக்கத்தவரும் நவீனத்தமிழிலக்கிய ஆய்வைச் செய்ததில்லை

 

ஆனால் அது இலக்கிய ஆய்வு. இலக்கிய ஆய்வில் எதுவுமே விலக்கல்ல. ஆனால் அது இலக்கியநோக்கம் கொண்டிருக்கவேண்டும். ஒட்டுமொத்தமாகவே நவீனத் தமிழிலக்கியத்தை பார்ப்பனியம் என முத்திரைகுத்துவது அந்தப் பேரியக்கத்தைச் சிறுமைசெய்வது. தகுதியற்றவர்களை செயற்கையாக மேலே தூக்க தகுதியானவற்றைக் கீழிறக்குவது. அது இலக்கியச் செயல்பாடு அல்ல. அதன்பின் பெருநிறுவனமும் முதலீடும் இருக்கையில் அது ஒருவகை பண்பாட்டு அழிப்புச் செயல்பாடு.

ஜெ

 

அன்புள்ள ஜெ

 

திராவிட இயக்க இலக்கியம் பற்றிய விவாதத்தைப் பார்த்தேன். தமிழகத்தில் இலக்கியம் மற்றும் அறிவியக்கத்திற்கும் திராவிட இயக்கத்திற்கும் சென்ற ஐம்பதாண்டுகளாக எந்தத் தொடர்பும் இல்லை. அந்த இயக்கமே 1940களில் தொடங்கி 70களில் முடிந்துவிட்டது. இன்று அதில் வாசிக்கும் வழக்கம்கொண்ட எவருமில்லை. அவர்களைப்பற்றி அவர்களே எழுதும் நூல்களே எந்தத்தரத்தில் இருக்கின்றன என்று பாருங்கள். அவர்களில் எவர் குறிப்பிடும்படி எழுதியிருக்கிறார்கள் என்பதையே உங்களைப்போன்றவர்கள் சொல்லவேண்டியிருக்கிறது

 

இன்று அந்த இயக்கம் வெறும் அரசியல்கட்சியாக மாறிவிட்டது. ஒருபக்கம் சாதாரணமான குடும்ப அரசியல். மற்றபக்கம் அடிமையரசியல். அதன் உறுப்பினர்களுக்குக்கூட அதைப்பற்றி வேறேதும் தெரியாது. இந்தச்சூழலில் இன்றைக்கு அவர்களுக்கு ஒரு ‘கொள்கை நிறம்’ தேவையாகிறது. ஆகவே அறிவுஜீவிகளை வாடகைக்கு எடுத்து எழுதச்செய்கிறார்கள்.. இந்த அறிவுஜீவிகள் எவரும் அந்த இயக்கம் வழியாக உருவானவர்கள் அல்ல. அவர்கள் பெரும்பாலும் இடதுசாரி அறிவியக்கத்தைச் சேர்ந்தவர்கள்.. அல்லது நவீனஇலக்கியத்தைச் சேர்ந்தவர்கள். அப்படித்தான் அறிமுகமாகி கவனம் பெற்றிருப்பார்கள் . அதை அங்கே கொண்டுசென்று செலவாணியாக்கிக்கொள்கிறார்கள். இவர்கள் அவர்களுக்கு தேவையான சிலவற்றைக் கொடுக்கிறார்கள். பெரும்பாலும் அது ஒருவகை ஊடகக் கவனம் மட்டுமே.

 

இவ்வாறு உருவாக்கப்படும் இந்தக்குரலுக்கு அறிவியக்கத்தில் என்ன மரியாதை உருவாக முடியும் என நினைக்கிறீர்கள்? வாசிப்பவர்கள் இன்னொரு பக்கம் இருக்கிறார்கள். அவர்களிடம் எந்த விளக்கமும் சொல்லவேண்டியதில்லை. வாசித்துப்பாருங்கள் என்று மட்டும் சொன்னாலே போதுமானது.

 

ஆர்.பாஸ்கர்

 

 

அன்புள்ள பாஸ்கர்

 

அமைப்புசார்ந்த ஊடகவல்லமை என்பது கருத்தியல்செயல்பாடுகளில் மிகப்பெரிய சக்தி. ஈவேரா அவர்களை அவ்வாறு பெருநிதிச் செலவில் கட்டி எழுப்பினார்கள். எண்பதுகளில் அம்பேத்கர் நூற்றாண்டு விழாவை ஒட்டி அம்பேத்கர் இங்கே ஒரு அறிவடையாளமாக எழுந்தபோது அதை நிழலால் மூடும்பொருட்டு உருவாக்கப்பட்டது ஈவேராவின் பிம்பம். பெரும்பாலும் அது மிகைப்படுத்தப்பட்டது. ஆனால் அது தொடங்கியபோது அதனால் என்ன நிகழும் என எவரும் கணித்திருக்கவில்லை.அதன் சாதிய உட்கணக்குகளும் புரிந்துகொள்ளப்படவில்லை. இன்று தமிழகத்தின் இடைநிலைச்சாதியினரின் பொது அடையாளமாக, திருவுருவாக ஈவேரா ஆகிவிட்டிருக்கிறார். இப்போது சி.என்.அண்ணாத்துரை, மு.கருணநிதி இருவரையும் அதேவகையில் அமைப்பு- நிதி வல்லமையுடன் நிறுவ முயல்கிறார்கள். ஒரு கருத்துச்சூழலில் அதிகாரத்தால் நிறுவப்படும் எந்த திருவுருவும் எதிர்மறை விளைவையே உருவாக்கும்.

 

இன்று இடதுசாரி அறிவியக்கம் நசித்துக்கொண்டிருக்கிறது. பேருருக்கொண்ட ஓர் அமைப்பு சிதைந்து துண்டுகளாக ஆவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்தத்துண்டுகளிலிருந்து இந்தப் திராவிட இயக்க மீட்பாளர்கள்  தங்கள் புதிய வழக்கறிஞர்களை தெரிவுசெய்துகொண்டிருக்கிறார்கள். இன்று இடதுசாரிகளில் மார்க்ஸிய தத்துவப்பயிற்சி கொண்டவர்கள், அரசியல்கோட்பாட்டு அறிஞர்கள் அருகிவிட்டனர். புதியதலைமுறையினரில் எவருமில்லை. மார்க்ஸியர்கள் ஐம்பதாண்டுகளாக உருவாக்கி எடுத்த தத்துவார்த்தமான தர்க்கங்களும் அதற்கான மொழியும் முழுமையாகவே அழிந்துவிட்டிருக்கின்றன. இடதுசாரிகளும் திராவிட இயக்கத்தவருக்குரிய பரப்பியக்க மொழியில்,தெருப்பூசலின் தரத்தில் பேசுவதையே நாம் காண்கிறோம். மார்க்ஸியத்தைவிட இடைநிலைச்சாதி உளநிலையை உள்ளீடாகக் கொண்ட திராவிட அரசியலே அவர்களில் பலருக்கு ஈர்ப்புடையதாக உள்ளது. அவர்கள் தங்கள் இயக்கம் முன்பு திராவிட இயக்கத்தின் பரப்பு அரசியலுக்கு எதிராக முன்னெடுத்த பெரும் கருத்துப்போரைப் பற்றி ஏதும் அறியாதவர்களாக இருக்கிறார்கள்.

 

இன்னொரு பக்கம் வலதுசாரி வெறுப்பரசியல் வலுப்பெற்று வருகிறது. நீங்கள் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் மக்கள் வலதுசாரி மதவெறி அரசியலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். [திராவிட இயக்கத்தின் இன்றைய கொழுந்தான தி.மு.க ஒரு இஸ்லாமிய வேட்பாளரைக்கூட தேர்தலில் நிறுத்தவில்லை என்பதை காணலாம். மேடைப்பேச்சு வேறு, களநிலவரம் வேறு என அவர்கள் அறிவார்கள்] இடதுசாரிகளும் திராவிட இயக்கத்தவரும் எல்லா வலதுசாரி அரசியலுக்கும் எதிராக நிலைகொள்வதை விடுத்து இந்து வலதுசாரி அரசியலுக்கு எதிராக இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களைக்கூட ஆதரிக்கும் நிலைக்குச் சென்றுவிட்டமைதான் இந்து வலதுசாரி வெறிக்கு அடிப்படையான உணர்வுநிலைகளை உருவாக்குகிறது. தேர்தலரசியலின் கட்டாயத்தால், வாக்குவங்கிக்காக திராவிட இயக்கத்தவரும் மார்க்ஸியரும் சிறுபான்மை மத அடிப்படைவாதம் என்ற புலிவாலில் பிடித்திருக்கின்றனர். விடவும் முடியாது, பிடித்திருக்கவும் இயலாது. வலதுசாரி அடிப்படைவாத வெறிக்கு எதிராக திராவிட இயக்கமும் அதற்கு நேர் எதிரான இடதுசாரிகளும் கைகோர்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் முரண்பாடுகளை மழுங்கடித்துக்கொள்கிறார்கள்.

 

இச்சூழலில் இத்தகைய முன்னெடுப்புக்கள் எதிர்பாராத விளைவுகளையே உருவாக்கும். அரசியலில் அது எதைவேண்டுமென்றாலும் உருவாக்கட்டும். ஆனால் சிந்தனைத் தளத்தில் திராவிடப் பரப்பரசியலை நோக்கி அனைத்து வலதுசாரி அல்லாதவர்களையும் குவியச்செய்துவிடும். விளைவாக விமர்சன அணுகுமுறை, தர்க்க அணுகுமுறை, அழகியல்நோக்கு ஆகியவற்றை இழந்து திராவிட அரசியலின்  ஒற்றைப்படையாக்கல், வெறுப்பரசியல், போற்றிப்பாடடி கலாச்சாரத்திற்கு அனைவரையும் கொண்டுசென்றுவிடும். திராவிடப் பரப்பரசியல் வலதுசாரிவெறிக்கு எதிரான  இன்றியமையாத விசையாக புரிந்துகொள்ளப்படும். உண்மையில் அது மண்குதிரை, பெருவெள்ளத்தை தாங்காது என்பது மறக்கப்படும். சொல்லப்போனால் மதவெறி அரசியலுடன் தேவைக்காக தயங்காமல் கைகோத்துக்கொள்ளும் தன்மை கொண்டது அது  .

 

இன்று இடதுசாரிகள் வரிசையில் நின்று பெரியார், அண்ணா, கலைஞர் என கூச்சலிட்டு கும்பிட ஆரம்பித்திருக்கிறார்கள். ஜீவாவும் பாலதண்டாயுதமும் கல்யாணசுந்தரமும் மறக்கப்பட்டுவிட்டனர். நா.வானமாமலையும் கைலாசபதியும் எவராலும் மேற்கோள் காட்டப்படுவதில்லை. அவர்கள் அனைவருக்கும் மேலாக ஈவேராவும் அண்ணாத்துரையும் ஏன் மு கருணாநிதியும் தூக்கிவைக்கப்படும் சூழல் நிலவுகிறது. திராவிட பரப்பரசியலே வெற்றியை அளிப்பது, இடதுசாரிகளின் இயங்கியல் நோக்கு அல்ல என்றஎண்ணம் இடதுசாரி எழுத்தாளர்கள் நடுவே பரவலாகிவிட்டிருக்கிறது. இது சிந்தனைத்தளத்தில் மிகப்பெரிய அழிவு இவற்றுக்கிடையேயான  முரண்பாடுகளை கூரிழக்கச் செய்பவர்கள் இடதுசாரி சிந்தனைகளை இனவாத, சாதிவாத அரசியலுக்குள் கொண்டுசெல்கிறார்கள். எஞ்சியிருக்கும் ஒரே சிறுவட்டம் நவீன இலக்கியத்தில் திகழ்வது. அதை திராவிட இயக்கத்தவர் அவர்களுக்குத் தெரிந்த சாதியவாத முத்திரை குத்தி சிறுமைசெய்து ஒழிக்கமுயல்கிறார்கள். அதற்கு இடதுசாரிகள் ஒத்து ஊதுகிறார்கள்

 

இப்போதே இங்கே அழகியலையோ தத்துவத்தையோ பேசுபவர்கள் இருமுனைகளிலும் வசைகளை மட்டுமே கேட்கவேண்டிய நிலைமையில் இருக்கிறார்கள் .அரசியல்களத்தில் நிகழும் இந்த தளக்குறுகலின் உடனடி நடைமுறைவிளைவு என்னவாக இருந்தாலும் இலக்கியத்தில் கருத்தியக்கத்தில் நீண்டகால அளவில் பேரழிவுதான் விளையும். இந்த வெறிபிடித்த இருமுனைப்படுத்தலின் நடுவே, வசைகள் சிறுமைப்படுத்தல்கள் ஒற்றைப்படையாக்கல்கள் திரித்தல்களிலிருந்து தப்பி,  இலக்கியம், தத்துவம் ஆகியவை சார்ந்து நேர்மையான கருத்துச்செயல்பாடுகளுக்கான ஒரு சிறுகளமாவது இங்கே எஞ்சியிருக்கவேண்டும். அவர்கள் இந்த போற்றிப்பாடடிகளை ஒட்டி ஜாலரா தட்ட முனையாமல் இங்கே முன்னோடிகளால் நிறுவப்பட்ட விமர்சனப்பார்வையை தக்கவைக்க முயலவேண்டும். இங்குள்ள எல்லா முரண்பாடுகளும் பேணப்படவேண்டும்.  இந்த திரள்கருத்துக்கள் உருவாக்கும் முத்திரைகளில் இருந்து இந்தச் சிறிய அறிவியக்கம் காக்கப்படவேண்டும். ஒரு நூறுபேர் எஞ்சினாலே போதும்.

 

ஜெ

 

திராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்?-1

திராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்? 2

கீழ்வெண்மணி – பிறிதொரு போலிவரலாறு

திராவிட இயக்க இலக்கியம் – ஒரு வினா

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/119956

2 pings

  1. திராவிட இயக்கம்- ராஜ் கௌதமன்

    […] திராவிட இயக்க இலக்கியம்- முடிவாக… […]

  2. திராவிட இயக்கம்- கடிதங்கள்

    […] திராவிட இயக்க இலக்கியம்- முடிவாக… […]

Comments have been disabled.