திராவிட இயக்க இலக்கியம் – சாதனைகளும் மிகைகளும்

பாரதிதாசன்

திராவிட இயக்க எழுத்துக்களை பற்றிய விவாதத்தின் தொடர்ச்சியாகப் பல கடிதங்கள் வந்தன. வழக்கமான வசைகளுக்கு அப்பால் உண்மையிலேயே திராவிட இயக்கத்தின் பங்களிப்பென்ன என்பதை அறியவிரும்பும் வினாக்கள் ஆர்வமூட்டின. அந்த வாசகர்களுக்காக இக்குறிப்பு.

இன்று திராவிட அரசியல்சார்ந்த சில எழுத்தாளர்களால் ஒரு கருத்துத்தரப்பு உருவாக்கப்படுகிறது. அதாவது, திராவிட இயக்கம் ’எளியமக்களின்’ வாழ்க்கையை எழுதியது. அதுவரை நவீன இலக்கியம் என்பது கற்றவர்களுக்கும் மேல்தட்டினருக்கும் உரியதாக இருந்தது. திராவிட இயக்கமே எளியமக்களை, அடித்தள மக்களை இலக்கியத்தில் எழுதிக்காட்டியது. திராவிட இயக்க எழுத்தாளர்களே எழுதவந்த முதல் சாமானியர்கள். அது அன்றிருந்த சாதி, மதம், சமூகமேலாதிக்கம் ஆகியவற்றுக்கு எதிரான கலக இலக்கியமாக இருந்தது. திராவிட இலக்கியத்தின் ஓங்கிய குரல் பிரச்சாரத்தன்மை இதெல்லாம் இந்த இயல்பால் வந்தவை. அவற்றை உயர்மட்டத்தவர்தான் அழகியலில்லாதவை என்கிறார்கள். எளியமக்களை எழுதியவை என்பதனால் அவை கலைப்படைப்புக்களே -– இத்தரப்பு சுழற்றிச் சுழற்றி முன்வைக்கப்படுகிறது. நேரடியாக திராவிட இயக்க எழுத்துக்களை வாசித்த இளைய தலைமுறை வாசகர்கள் சிலரே. வரலாறு அறிந்தவர் அதனினும் சிலர். ஆகவே இவ்வினாக்கள் எழுகின்றன

சி.என் அண்ணாத்துரை

எளியோரின் இலக்கியமா? எதிர்ப்பிலக்கியமா?

திராவிட இயக்க எழுத்துக்களைப் பற்றி எழுதப்படுவன பெரும்பாலும் கட்சி அல்லது சாதிச்சார்புநிலை கொண்ட விதந்தோதுதல்கள் மட்டுமே. ஆய்வுத்தகுதியோ ரசனைநிலைபாடோ அற்றவை. போற்றிப்பாடல்கள் இல்லாமல், பெரியார் பேரறிஞர் முதல் தெற்குச்சூரியன் வரை அடைமொழிகள் இல்லாமல் அவர்களால் சிந்திக்கமுடியாது. விமர்சனரீதியான அணுகுமுறைக்கு முற்றிலும் எதிரானது இந்த அடைமொழிப்பார்வை. நவீன இலக்கியத்தில் எவரும் புதுமைப்பித்தனை சிறுகதை மன்னன் என்று சொல்வதில்லை. நவீன இலக்கிய முன்னோடியாக புதுமைப்பித்தனை முன்னிறுத்தும் என் நூல் அவருடைய கலைக்குறைபாடுகளையே பாதிப்பங்கு பேசுகிறது [நவீன இலக்கிய முன்னோடிகள்- நற்றிணை பிரசுரம்] விமர்சனநோக்கோ அடிப்படை வாசிப்போ இல்லாத ஒற்றைவரிகள் என்றே திராவிட இயக்க எழுத்தாளர்களைப் பற்றிய மேலேசொன்ன கருத்துக்களை மதிப்பிட இயலும்.

சி.என்.அண்ணாத்துரை முதல் மு.கருணாநிதி வரை திராவிட இயக்க எழுத்துக்களில் பெண்கள் சித்தரிக்கப்பட்டிருக்கும் விதத்தில், அவர்களின் கண்ணகிXமாதவி என்னும் எதிரீட்டிலிருக்கும் திகைக்கவைக்கும் பழமைவாதமே இருபதாம்நூற்றாண்டுச் சிந்தனையில் தமிழில் முன்வைக்கப்பட்ட ஆகப்பிற்போக்கான கருத்து. நான் அவற்றை ஓரளவு சுட்டி எழுதியிருக்கிறேன். அவர்களின் எழுத்துக்கள் பெரும்பாலும் தாசிகளைச் சுற்றியே அமைந்திருந்தன. ஆனால் தாசிகளை அன்றிருந்த வடுவூர் துரைசாமி அய்யங்கார் முதலியோர் பார்த்த அதே பழைமையான ஒழுக்கவிமர்சன நோக்கிலேயே அணுகினார்கள். அவர்களுக்கு மாறாக கண்ணகி போன்ற கதைமாந்தரை முன்வைத்தனர்.அந்தக் கண்ணகி ஓர் ஆணின் கருத்தியலுக்குக் கட்டுப்பட்டு, காதலுக்கு அடிமைப்பட்டுச் செயல்படுபவளாகவே அவர்களால் காட்டப்பட்டாள்.

கா. அப்பாத்துரை

திராவிட இயக்க எழுத்தாளர்களின் படைப்புலகில் தலித்துக்கள் சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம் தந்திரமான மேட்டிமைவாதம்தான். ஒருவாசகன் எழுப்பவேண்டிய எளிமையான கேள்வி, அவர்களின் ஆக்கங்களில் தலித் கதைநாயகனாக வந்ததுண்டா என்பதே. அதுவே பெரிய தொடக்கமாக அமையும். சிற்றிதழ்சார்ந்த இலக்கியத்தில், முற்போக்கு இலக்கியத்தில் தலித் கதைநாயகர்கள் முதன்மை இடம்பெறு அரைநூற்றாண்டுக்குப் பின்னராவது திராவிட இயக்க எழுத்தாளர்களின் ஆக்கங்களில் தலித் வாழ்க்கை வந்ததா என்று மட்டும் பார்த்தால்போதும்.

பெரும்பாலும் திராவிட இயக்க எழுத்தாளர்களின் எழுத்துக்கள் வேளாளர், முதலியார் கதைகள். பிற்படுத்தப்பட்டோரே அரிது. ஏராளமான படைப்புக்கள் பழந்தமிழ்ச்சூழலை மிகையாக்கி, அவற்றின் மறவர்பெருமையை, வேளாளர்பெருமையை தமிழர்ப்பெருமையாக காட்டும் ஆக்கங்கள். சி.என்.அண்ணாத்துரையின் கதைகளில் முதன்மையானதாக பலராலும் சுட்டிக்காட்டப்படும் ‘செவ்வாழை’ என்னும் கதை மலையாளத்தில் சங்ஙம்புழா கிருஷ்ணபிள்ளை எழுதிய ’வாழக்குல’ நீள்கவிதையை பெரும்பாலும் வரிக்குவரி தழுவி மீண்டும் எழுதப்பட்டது. [முன்னரே கா. அப்பாத்துரையால் அக்கவிதை தமிழாக்கம் செய்யப்பட்டது என்றும் சி.என்.அண்ணாத்துரை அது தழுவல் என்னும் குறிப்புடன்தான் அதை முதலில் வெளியிட்டார் எனச் சொல்லப்பட்டது.]

 

முடியரசன்

அடித்தள மக்களின் வாழ்க்கையை திராவிட இயக்கம் எழுதியது என்பதைப்போல அப்பட்டமான பொய் ஏதுமில்லை. அடித்தளமக்களின் வாழ்க்கையை அவர்கள்நோக்கில் எழுதும் மரபு தொடங்கியது புதுமைப்பித்தனிடம். துன்பக்கேணிதான் அதற்கு தொடக்கம். அதன்பின்னர் அடித்தள மக்களின், தலித்துக்களின், அதற்கும் கீழே விளிம்புநிலையில் வாழ்பவர்களின் வாழ்க்கையை எதியவர்கள் முதன்மையாக இடதுசாரி எழுத்தாளர்கள். அதற்கு அடுத்தபடியாக சிற்றிதழ்மரபு சார்ந்த தமிழ் படைப்பாளிகள். திராவிட இயக்கப் படைப்பாளிகள் அல்ல.

எளியோரின் குரலை எழுதியவை இவ்விரு இலக்கியப்போக்குகளும் மட்டும்தான். புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, கு.அழகிரிசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், கரிச்சான்குஞ்சு, ஆ.மாதவன், பூமணி, ஹெப்ஸிபா ஜேசுதாசன், தோப்பில் முகமதுமீரான், கோணங்கி, சோ.தருமன், மு.சுயம்புலிங்கம், பாரததேவி, ஜோ.டி.குரூஸ் என நீளும் இருபது முதன்மைப்படைப்பாளிகளின் ஆக்கங்களையாவது ஒரு வாசகர் எடுத்துப் பார்க்கலாம்.

தேவநேயப் பாவாணர்

கே.முத்தையா, டி.செல்வராஜ், மேலாண்மைப் பொன்னுச்சாமி, லட்சுமணப்பெருமாள், பவா செல்லத்துரை,  என நீளும் முற்போக்கு இலக்கிய மரபின் படைப்பாளிகளின் எழுத்தையும் வாசிக்கலாம். 1940 களில் இருந்து இவர்கள் எழுதத் தொடங்கியதே தமிழக அடித்தளமக்களின் வாழ்க்கை. அவர்கள் அடித்தளச் சூழலில் இருந்து வந்தவர்களும்கூட. இவ்விரு சாராருக்கும் வெளியே அடித்தள மக்களின், விளிம்புநிலைமக்களின் வாழ்க்கையை இங்கே எவரும் எழுதவில்லை.

திராவிட இயக்க எழுத்தை கலக இலக்கியம், அடித்தள இலக்கியம் என்பதும் அப்பட்டமான பொய். அவர்களின் அரசியலை முன்வைப்பதற்கான ஒரு செயற்கைக் களத்தையே அவர்கள் உருவாக்கினர். அதில் அத்தனை கதைமாந்தரும் நாடகத்தன்மை கொண்டவை, உண்மைக்கு அணுக்கமில்லாதவை. சிற்றிதழ்சார்ந்து உருவாகி வந்த நவீனத்தமிழிலக்கியத்துடன் ஒப்பிடுகையில் திராவிட எழுத்துக்கள் மிகமிகப் பழமையான ஒழுக்கவாதநோக்கும். தூய்மை வாதமும் பிற்போக்குத்தன்மையும் கொண்டவை. அதற்குக் காரணம் அவர்களின் பழைமைவழிபாடு மற்றும் பொற்காலத்தேடல்.

 

மு சி பூர்ணலிங்கம்பிள்ளை

திராவிட இயக்கம் இங்கிருந்த மரபான அற, ஒழுக்கநெறிகளை எவ்வகையிலும் எதிர்த்தது அல்ல. மாறாக அவற்றை புதியவடிவில் முன்வைத்தது அது. அதை அவர்களின் முன்னோடிகள் எழுதிய பார்வதி பீஏ. வெள்ளிக்கிழமை போன்ற ஆக்கங்களில் வெளிப்படையாகவே காணலாம். ஏனென்றால் அவர்கள் முன்வைத்தது ஒரு தமிழ்பழைமையைத்தான். புதிய உலகை அல்ல.

திராவிட இயக்கத்தவர் எதிர்த்தது இங்கிருந்த பிராமணிய மேலாதிக்கத்தை மட்டுமே. அந்த பிராமணிய தொன்மங்களும் ஆசாரங்களும் ஒழுக்கவியலும் அறவியலும் அவர்களின் மதம் உருவாகி வந்த தொல்பழங்காலத்தில் அடித்தளம் கொண்டவை. ஆகவே அவை பழங்குடித்தன்மை கொண்டவை. அவற்றை பிராமணியச் சிந்தனையாளர்கள் பலவாறாக மழுப்பி, மறுவிளக்கம் கொடுத்து, மறைத்து ஒரு கட்டமைப்பை உருவாக்கியிருந்தனர். அந்தக் கட்டமைப்பைத்தான் திராவிட இயக்கத்தவர் தாக்கி உடைத்தனர்.

 

சுரதா

அதற்கு அவர்கள் கையிலெடுத்தது ஒப்புநோக்க சற்று காலத்தால் பிந்தையதும் மேம்பட்ட செவ்வியல்பின்னணி கொண்டதுமான பழந்தமிழ்ப் பண்பாட்டின் தொன்மம், ஆசாரம், ஒழுக்கம், அறம் ஆகியவற்றைத்தான். பிராமணர்கள் முன்வைத்த புராணங்கள், தொன்மங்களை அன்றுமுதல் இன்றுவரை எந்தக்கோணத்தில் திராவிட இயக்கம் எதிர்கொண்டது என்று நோக்கும் ஓர் ஆய்வாளர் இதை தெளிவாகக் காணமுடியும். மிகநேரடியான ஒழுக்கநோக்குதான் அது. மிகவும் பழைமைவாத அணுகுமுறை கொண்டது. இன்றைய பெண்நிலைவாதப் பார்வைக்கு அருவருப்பை ஊட்டுவது.

உதாரணமாக குந்தியை, பாஞ்சாலியை திராவிட இயக்கம் எப்படி முத்திரைகுத்தியது என்று நோக்கலாம். அவர்களை ‘தேவடியாள்’களாகவே அவர்கள் முத்திரைகுத்தினர். ராவணனால் கவரப்பட்ட சீதையே ‘கற்பிழந்தவள்’ என்றனர். கண்ணகி சீதை ஒப்பீடு என்பது அன்றைய திராவிட இயக்கத்தின் முக்கியமான பேசுபொருள்.  பிராமணர்களின் புராணங்களில் உள்ள ‘ஆபாசத்தை’ சுட்டிக்காட்டுவதே அவர்களின் வழி. ஆபாசம் என்னும் கருத்தே ஒழுக்கம், தூய்மை என்னும் இரு அடிப்படைகளில் அமைந்தது. குந்தி, பாஞ்சாலி போன்ற தொன்மங்கள் மானுடச் சமூகநெறிகள் உருவாகிவந்த தொடக்க காலத்தைச் சேர்ந்தவை, அவற்றை ஆபாசமாக பார்ப்பது விக்டோரிய ஒழுக்கவியல் என்பதையெல்லாம் புரிந்துகொள்பவர்கள் அல்ல திராவிட இயக்கத்தவர்.

அதாவது திராவிட இயக்கத்தவர் எழுதியது ‘கலகம்’ அல்ல. அது மரபின் தொன்மையான ஒரு பகுதியை சற்றே புதிய இன்னொரு பகுதியைக்கொண்டு எதிர்ப்பதே. இரண்டுமே இரண்டுவகை மரபுவாதங்கள், பழைமைநோக்குகள்

 

எஸ்.எஸ்.தென்னரசு

மெய்யான கலகம் நிகழ்ந்தது சிற்றிதழ்ச்சூழலில்தான். மேலே குறிப்பிட்ட திராவிட இயக்க எழுத்துக்களுடன் எம்.வி.வெங்கட்ராமின் நித்யகன்னியை ஒப்பிட்டுப்பார்க்கலாம். கற்பு, தூய்மை, புனிதம் என நிறுவப்பட்ட அனைத்தையும் மீறிச்செல்லும் மெய்யான படைப்புக்கலகம் அது. அந்தக் கலகம் தொடங்கியது புதுமைப்பித்தனின் சாபவிமோசனம், அகலிகை போன்ற ஆக்கங்கள் வழியாக

திராவிட இயக்கத்தவர் பாலியல்தொழிலாளர் குறித்து எழுதியதையும் ஜி.நாகராஜன் எழுதியதையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். பசித்தமானுடம் போன்ற ஒன்றை திராவிட இயக்கத்தவர் எழுதக்கூடுமா என எண்ணிப்பார்க்கலாம். ஆ.மாதவனின் சாலைத்தெருவின் வாழ்க்கையின் முழுமையான ஒழுக்கமின்மையின் உலகை ஒருமுறை நோக்கலாம். தன் சாதிய- சமூகப் பின்னணியின் அனைத்து கட்டுப்பாடுகளையும் மீறிச்சென்று எழுதிய தி.ஜானகிராமனின் அம்மாவந்தாள் போன்ற ஒரு நாவலை எந்தத் திராவிட இயக்க எழுத்தாளராவது எழுதமுடியுமா, எவரேனும் தங்கள் சொந்தச் சாதியின்மேல் சிறு விமர்சனத்தையாவது முன்வைத்திருக்கிறார்களா என்றுஆராயலாம். கலகம் என்றால் என்ன என்றுபுரியும்.

என்றாவது இலக்கிய ஆய்வாளர்கள் இவற்றை மேலும் விரிவாக எழுதக்கூடும். நான் அவ்வப்போது எழுதியிருக்கிறேன், ஆனால் நவீனத்தமிழிலக்கிய மேதைகளைப் பற்றியே இங்கே பெரிதாக எழுதப்படவில்லை என்னும்போது இவர்களை ஆராய்வது மிகைப்பணி என்று படுகிறது

 

பண்பாட்டுப் பங்களிப்பு 

 

திராவிட இயக்கத்தவரின் அரசியல் பங்களிப்பை இங்கே பேசவில்லை. அவர்கள் செயல்பட்ட தளம் பண்பாட்டுஅரசியல் என்பதனால் அவர்களின் அரசியலும் பண்பாடும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை. ஆகவே அவர்களில் நேரடியாக அரசியலை எழுதிய குத்தூசி குருசாமி போன்றவர்களை தவிர்க்கிறேன். ஈ.வே.ரா அவர்களை அரசியல்விமர்சகராகவே கருத்தில்கொள்கிறேன்.

திராவிட இயக்கத்தவரின் பண்பாட்டுப் பார்வையை வடிவமைத்த நான்கு முன்னோடிகள் மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளை, இ.மு.சுப்ரமணிய பிள்ளை , கா.அப்பாத்துரை மற்றும் தேவநேயப் பாவாணர். இவர்கள்தான் தமிழ் மரபிலக்கியத்திலிருந்து மதத்தை அகற்றி ஒரு பொதுத்தமிழ் மரபை கட்டமைத்தவர்கள். தமிழ்ப்பெருமித வரலாற்றை உருவாக்கியவர்கள். தங்கள் முன்னோடிகளாக மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை போன்ற சைவ அறிஞர்களை கொண்டிருந்தார்கள். இவ்வரிசையில் சேராத, ஆனால் குறிப்பிடத்தக்க ஒருவர் கைவல்யம். [இவர் பெயர்தான் தேவதேவனுக்கு அவருடைய தந்தையாரால் போடப்பட்டது] அவர் தமிழ்ச்சித்தர் மரபுக்கும் திராவிட இயக்கத்துக்குமான ஒரு தொடர்பை உருவாக்கியவர்.

 

இலக்குவனார்

 

அடுத்த கட்ட அறிஞர்களில் சி.இலக்குவனார், சாமி சிதம்பரனார், ந.சஞ்சீவி ஆகியோரை குறிப்பிடவேண்டும். முன்னோடிகள் உருவாக்கிய ஒரு கருத்தியல்தரப்பை வளர்த்தெடுத்தவர்கள் இவர்கள். இவர்களனைவருமே விரிவான மரபிலக்கிய விமர்சனங்களும் விளக்கங்களும் எழுதியிருக்கிறார்கள். கவிதைகளும் எழுதியிருக்கிறார்கள். இவர்களின் பங்களிப்பு கருத்தியலை உருவாக்கியவர்கள் என்றவகையிலேயே. இறுதியாகச் சுட்டிக்காட்டப்படவேண்டியவர் பெருஞ்சித்திரனார். அவருடைய தமிழ்ப்புலமை பழையபாணியிலானது எனினும் தனித்தமிழியக்கத்தின் இறுதி ஆளுமை அவரே.

திராவிட இயக்க எழுத்தாளர்களின் பங்களிப்பு என்ன? அணிமொழி [ Rhetoric] என ஒன்று எந்தத் தொன்மையான மொழியிலும் உருவாகி வந்திருக்கும். அது பழைய கற்பனாவாத இலக்கியத்தின் ஒருபகுதியாக இருக்கும்.தமிழ் வளமான அணிமொழித் தொடர்கள் கொண்ட தொல்மொழி. அதை சைவ எழுச்சியில் உருவாகிவந்த மேடைப்பேச்சாளர்கள் நவீனச் சூழலுக்குக் கொண்டுவந்தனர். அந்த மரபை பரப்பியல்தளத்திற்குக் கொண்டுசென்றனர் திராவிட இயக்கத்தவர். அதுவே அவர்களின் முதன்மைப் பங்களிப்பு.

 

சாமி சிதம்பரனார்

இங்கிருந்த எளியமனிதர்களைப் பொறுத்தவரை அதுவரை அவர்கள் பேச்சுத்தமிழை மட்டுமே அறிந்திருந்தனர். பரவலாக இருந்த தெருக்கூத்து போன்ற கலைவடிவங்கள்கூட பேச்சுமொழியையே கையாண்டன. தூயதமிழ் கற்றோரின் செல்வமாகவே இருந்தது. ஆகவே தமிழின் எழிலும் தொன்மையும் பெருவாரியான தமிழர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. சைவ-வைணவ மதப்பேருரைகளின் தமிழ்கூட சிறிய வட்டத்திற்குள் புழங்கியது.

திராவிட இயக்கம் தன் அணிமொழியினூடாக தமிழின் அழகை விரிவாக அனைத்து மக்களிடமும் கொண்டுசென்றது. பேச்சுமொழிக்கு அப்பால் இருந்த தமிழின் பெருமைமிக்க மரபை, இலக்கியவிரிவை அது தமிழ்மக்கள் அறியச்செய்தது. அதற்கு ஐம்பதாண்டுகளுக்கு முன்னரே தமிழின் மறுமலர்ச்சி உருவாகியிருந்தது. திராவிட இயக்கம் அதை மக்கள்மயமாக்கியது. தமிழ்ப்பற்று தமிழ்ப்பெருமிதம் என்பது ஒரு பொதுவான உணர்வாக ஆகியது அவர்களால்தான்.

கைவல்யர்

அத்துடன் ஒரு மக்கள்த்திரளுக்கு சீர்மொழியை அளிப்பதென்பது ஒரு பெரும் பண்பாட்டுப் பணி. அதை தமிழியக்கம் தொடங்கிவைத்தது, அதைப் பரவலாக்கியது திராவிட இயக்கம். வட்டாரவழக்கு பெரும் பண்பாட்டு மரபு கொண்டது, ஆழமானது. ஆனாலும் அது மக்களை வட்டாரங்களாகப் பிரிக்கிறது. எல்லைகடந்து அனைவரையும் ஒருங்குதிரட்டுவதில்லை. சீர்மொழி எளிய மக்களைச் சென்றடைகையில் மிகப்பெரிய ஆற்றலை அவர்கள் அடைகிறார்கள். மையப்பெரும்போக்கில் அவர்கள் இணைகிறார்கள்.

இங்கே மதம் சீர்மொழியில் அமைந்திருந்தது. சீர்மொழி அறிந்தவர்கள் அதன் வழியாக மத அதிகாரத்தைக் கையாண்டார்கள். மக்களாட்சியின் அதிகார அமைப்புகள்கூட சீர்மொழியிலேயே அமைந்திருக்கும். சீர்மொழி என்பதே தன்னளவில் ஓர் அதிகாரம். சீர்மொழியை மக்கள்மயமாக்கியதன் வழியாக திராவிட இயக்கம் தமிழகத்தின் அடித்தளமக்களிடையே மக்களாட்சியின் அதிகாரத்தைப் பரவலாக்கியது. மத அதிகாரத்தை நோக்கி அவர்கள் செல்லவைத்தது.

 

விந்தன்

அடித்தளமக்கள் எத்தனை ஆர்வத்துடன் ஆவேசத்துடன் சீர்மொழி நோக்கி வருகிறார்கள், அது அவர்களை எப்படி பெருமிதமும் தன்னம்பிக்கையும் கொண்டவர்களாக ஆக்குகிறது என்பதை இன்றும் காணலாம். திராவிட இயக்கம் உருவான ஐம்பதாண்டுகளில்தான் தமிழகத்து நாட்டார்த்தெய்வங்கள் கூட சீர்மொழியில் புகழ்மொழிகளைச் சூடிக்கொள்ளலாயின.ஒரு திராவிட இயக்கமேடையில் ‘தலைவர்களே பொதுமக்களே’ என பேசத் தொடங்கும் அடித்தளத்து இளைஞர் ஒருவர் பல்லாயிரமாண்டுகளாக மொழிக்குள் சிறைப்பட்டிருந்த ஒரு தரப்பிலிருந்து சிறகுமுளைத்து எழுந்தவர். அதுவே திராவிட இயக்கத்தின் முதன்மைப் பண்பாட்டுப் பெருஞ்சாதனை. அதன்பொருட்டு சி.என்.அண்ணாத்துரை அவர்களுக்குத் தமிழகம் கடன்பட்டுள்ளது.

திராவிட இயக்கம் உருவாகிவந்த காலகட்டம் இந்தியாவில் அச்சு,காட்சி ஊடகங்கள் வல்லமை அடைந்து வந்த வரலாற்றுமுனை. பொதுக்கூட்டம் என்னும் தொடர்புவடிவம் எழுச்சிகொண்ட தருணம். அவர்கள் அதைப் பயன்படுத்திக்கொண்டனர். தமிழக மக்களில் ஒருபகுதியினருக்கு தமிழ் தாய்மொழி அல்ல. புழக்கத்தேவைக்கு அப்பால் அவர்களுக்குத் தமிழ் தெரியாது. திராவிட இயக்கம் உருவாக்கிய தமிழுணர்வு அவர்கள் அனைவரையும் தமிழ்நோக்கி ஈர்த்தது. தமிழ் தமிழகத்தை இணைக்கும் பொதுவுணர்வாக ஆகியது.

 

ந.சஞ்சீவி

ஏற்கனவே நிகழ்ந்திருந்த தமிழியக்கத்தின் மூன்று கிளைகளையும் மக்கள்வயமாக்கினார்கள் திராவிட இயக்கத்தவர். தனித்தமிழ் இயக்கம், தமிழிசை இயக்கம், தமிழ்ப்பதிப்பியக்கம் ஆகியவற்றை மேலும் விரிவடையச்செய்தனர். தமிழியக்கத்தின் ஆக்கபூர்வமான பாதிப்பு திராவிட இயக்கம் இல்லையேல் இத்தனை விரிவானதாக இருந்திருக்காது. தமிழிசை இயக்கம் மெல்லத் தேய்வடைந்தாலும் திராவிட இயக்கத்தால் தனித்தமிழியக்கம் மேம்பட்டது. தமிழ்ப்பதிப்பியக்கம் திராவிட இயக்கத்தின் பங்களிப்பால் குவியம் கொண்டு திருக்குறள், சிலப்பதிகாரம், சங்க இலக்கியம் மீதான ஒரு கூட்டுவாசிப்பை உருவாக்கியது.

இன்று நான் தூயதமிழில் எழுதும் ஓர் எழுத்தாளன். தமிழில் எழுதுபவர்களிலேயே என்னுடைய நடையே தூயதமிழ்நடை – குறிப்பாக கொற்றவை, வெண்முரசு போன்றவை. என்னுடன் ஒப்பிடுகையில் சி.என்.அண்ணாத்துரையும் மு.கருணாநிதியும் மிகமிக சம்ஸ்கிருதக் கலப்பு மிக்க நடையில் எழுதியவர்கள். ஆனால் தூயதமிழில் எழுதவேண்டும் என்னும் விழைவு, அனைத்திற்கும் தமிழ்க்கலைச்சொற்களை உருவாக்கவேண்டும் என்னும் துடிப்பு நவீனத்தமிழிலக்கியச் சூழலில் உருவானதே திராவிட இயக்கத்தின் செல்வாக்கால்தான். எழுபதுகளுக்குப் பின்னர் உருவான அலை அது. நான் அதன் மூன்றாம்தலைமுறை. அதன்பொருட்டு தனித்தமிழ் இயக்க முன்னோடிகளுக்குக் கடன்பட்டிருக்கிறேன். அதைப் பரவலாக்கிய சி.என்.அண்ணாத்துரை அவர்களுக்கும்.

 

தமிழ்ஒளி

இந்தப் பண்பாட்டுப் பங்களிப்புகளைக் கருத்தில்கொண்டே நான் திராவிட இயக்கம் பற்றிப் பேசுகிறேன். அது முதன்மையாகப் பரப்பியக்கம். ஆகவே அது சிந்தனைகளை எளிமைப்படுத்தி ஒற்றைவரிக்கூச்சல்களாக ஆக்கும். அனைத்து நுட்பங்களையும் அழிக்கும். திராவிட இயக்கத்தில் இருந்த ஆழ்ந்த ஆய்வுப்புலம் இல்லாத எளிய வரலாற்றுப் பார்வைகள்,  பண்பாட்டுத்தளத்தில் அவர்கள் உருவாக்கிய எதிரீடுகள் அறிவார்ந்த பெறுமதி அற்றவை. அழிவுப்போக்கு கொண்டவையும்கூட. உதாரணமாக, தமிழ்ப்பண்பாட்டின் கலைவெற்றிகளான நம் ஆலயங்களை, சிற்பங்களைப் பற்றிய அதன் பார்வையைச் சொல்லலாம். தமிழ்ப் பண்பாட்டின் வெற்றியாகிய  பக்திஇயக்கம் பற்றிய அதன் வரலாற்றுணர்வு இல்லாத சிறுமைப்படுத்தும் நோக்கைச் சுட்டிக்காட்டலாம்

திராவிட இயக்கத்தின் மிகையுணர்ச்சியும் செயற்கைநடையும் நவீன இலக்கியத்திற்கு நேர் எதிரானவை. அதன் தனிமனித வழிபாட்டு நோக்கு அறிவியக்கச் செயல்பாடுகளுக்கு மாறானது. ஆகவே நவீன இலக்கியவாதியாக அவ்வியக்கத்தை நான் நிராகரிக்கிறேன். ஆனால் எப்போதும் அதை சீரார்ந்த ஏற்பு மறுப்புகளுடன் தர்க்கபூர்வமாகவே அணுகுகிறேன். அதிலுள்ள ஒரு கலைவெற்றியைக்கூட கருத்தில்கொள்ளாது தவறவிடுவதில்லை

 

மு வரதராசனார்

இலக்கியப் பங்களிப்பு

படைப்புசார்ந்து திராவிட இயக்க எழுத்து கலைவெற்றியை அடைவது அவர்களின் அடிப்படை இயல்புகளான பழந்தமிழ்வாழ்க்கை பற்றிய கனவு முன்வைக்கப்படுகையில், அதற்குரிய அணிமொழி சரியாக இணைந்துகொள்கையில் மட்டுமே. இவ்வியல்பு உரைநடைக்கு ஒத்துப்போவது அல்ல. ஆகவே புனைகதை, புதுக்கவிதை இரண்டிலும் சொல்லும்படியான பங்களிப்பு ஏதும் திராவிட இயக்கத்தில் செயல்பட்ட படைப்பாளிகளிடமிருந்து வரவில்லை. விலக்காகச் சொல்லத்தக்கது எஸ்.எஸ்.தென்னரசு அவர்களின் படைப்புலகு. அவருடைய கோபுரகலசம் ஒரு குறிப்பிடத்தக்க படைப்பு. சேதுநாட்டுச் செல்லக்கிளி மற்றும் சில சிறுகதைகளையும் சுட்டிக்காட்டலாம்.

மு.கருணாநிதி அவர்களின் வெள்ளிக்கிழமை போன்ற  சமூகப்படைப்புக்களில் அந்த மொழி பொருந்தவில்லை. ஆனால் ரோமாபுரிப்பாண்டியன் அந்த பழந்தமிழ்க் கனவை உருவாக்க முயலும் ஆக்கம். ஆனால் தொடர்கதையாக வந்து, சமகால அரசியலை உள்ளிழுத்துக்கொண்டமையால் வடிவ ஒருமையே இலலாத ஆக்கமாக நின்றுவிட்டது அது. பொன்னர்சங்கர் போன்ற நாட்டார்ப்புலம் கொண்ட ஆக்கங்களில் அந்த அணிமொழி பொருந்தவில்லை. சி.என் அண்ணாத்துரை அவர்களின் பார்வதி பீ.ஏ போன்ற படைப்புக்கள் புனைவுத்தன்மைகூட அற்றவை. மொழியும் அவருடைய கட்டுரைகளில் உள்ள அளவுக்குக் கூட அணிநடை கொண்டது அல்ல.

 

வேழவேந்தன்

திராவிட இயக்க அணுக்கம் இல்லாதவர், அவ்வரசியலை எழுதாதவர் என்றாலும் மு.வரதராசனாரை அழகியல்சார்ந்து திராவிட இயக்கத்தவர் என்று வரையறைசெய்வதே என் வழக்கம். அவருடைய நாவல்களாகிய கள்ளோ காவியமோ, கரித்துண்டு ஆகியவை திராவிட இயக்க எழுத்தின் சிறந்த மாதிரிகளாகக் கொள்ளலாம். மு.வரதராசனார் அணிமொழியை கைக்கொள்ளவில்லை. சீர்மொழியை புனைவுக்குப் பயன்படுத்தினார். திராவிட இயக்கம் முன்வைத்த அரசியலைப் பேசவில்லை, அவர்கள் வலியுறுத்திய தமிழ்ப்பழைமைசார்ந்த அறத்தையும் ஒழுக்கத்தையும் முன்வைத்தார். அவை சீரான வாசிப்புத்தன்மை கொண்டவை. ஒருவகையான அறப்ப்பிரச்சார நூல்கள்.

நாடகங்களில் அணிமொழிக்கு ஓர் இடமுண்டு. திராவிட இயக்கத்தினரின் நாடகங்களில் சி.என்.அண்ணாத்துரையின் சிவாஜி கண்ட இந்துராஜ்யம் அந்த நடை வெளிப்பட்ட படைப்பு. மு.கருணாநிதி அவர்களின் அணிநடை வெளிப்பட்டவை பராசக்தி, மந்திரிகுமாரி போன்ற திரைப்படங்களுக்கு எழுதப்பட்ட உரையாடல்கள்தான். அவற்றின் மக்கள்செல்வாக்கு ஒருபக்கம் இருந்தாலும் அவை நவீன இலக்கியத்திற்குரிய இயல்புகள் கொண்டவை அல்ல. பரப்பிலக்கியத்தின் வகைமைக்குள் மட்டுமே வருபவை. பிரச்சாரத் தன்மை கொண்டவை. அவர்களும் அதற்குமேல் இலக்கு கொண்டிருக்கவில்லை. திராவிட இயக்கம் உருவாக்கிய நாடகங்களில் தலையாயது புலவர் ஆ.பழனி அவர்கள் எழுதிய அனிச்ச அடி என நான் எண்ணுகிறேன்.

குலோத்துங்கன்

திராவிட இயக்க எழுத்தாளர்களில் சாலை இளந்திரையன் அவர்களின் புனைகதைகள் குறிப்பிடத்தக்கவை அல்ல. ஆனால் அவர் தொடர்ச்சியாக இலக்கியத் திறனாய்வுக் கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். நவீன இலக்கியம் சார்ந்தும் கூரிய கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். மரபிலக்கியம் சார்ந்து புலவர் ஆ.பழனி உருவாக்கிய விமர்சன அணுகுமுறை பின்னாளில் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் அவரையும் திராவிட இயக்க இலக்கியக் கோட்பாட்டாளர்களில் முதன்மையானவராகச் சுட்டவேண்டும். மு.வரதராசனாரின் சங்க இலக்கிய ஆய்வுகளையும் சற்று விரிந்த எல்லைக்குள் திராவிட இயக்க அணுகுமுறைகொண்டவை என வகுக்கலாம்.

இந்த மரபில் திராவிட இயக்கத்தவர் சொல்லமறந்துவிடுவார்கள் என்றாலும் நான் ஒருவரை முதன்மையாகச் சொல்வேன். விந்தன். அவர் சி.என்.அண்ணாத்துரையை ஏற்காமல் ஈ.வே.ரா அவர்களுக்கு அணுக்கமானவராக இருந்தவர் என்பதனால் தி.மு.கவினரால் பெரிதும் கண்டுகொள்ளப்படவில்லை.. திராவிட இயக்கம் உருவாக்கிய அரசியலெதிர்ப்பின் கூரிய பகடிக்குரல் விந்தனுடையதுதான். திராவிட இயக்கத்திலிருந்துகொண்டு புதுமைப்பித்தனின் நடை, அழகியலை உள்வாங்கிக்கொண்டவர். சொல்லப்போனால் திராவிட இயக்க எழுத்தாளர்களில் இன்றைய வாசிப்பிலும் மிளிரும் எழுத்து அவருடையது மட்டுமே. அவருடைய பாலும்பாவையும், பசிகோவிந்தம் என்பவை அவர் செயல்பட்ட இருவகை எழுத்துக்களின் சிறந்த மாதிரிகள்.  சென்ற ஆண்டு விந்தனின் நூற்றாண்டு. ஒரு தனிவாசகர் அவருடைய நூல்களை மறுபதிப்பாகக் கொண்டுவந்தார். அவரை நினைவுகூர்ந்து நான் எழுதியிருந்தேன். வேறு எவரும் எழுதியதாகத் தெரியவில்லை.

 

ம இலெ தங்கப்பா

தமிழில் பிரச்சார இலக்கியத்திற்கு ஒரு மரபு உண்டு. பாரதியின் சிறுகதைகள், வ.ரா, ராஜாஜி, அகிலன், நா.பார்த்தசாரதி  போன்றவர்களின் ஆக்கங்கள், ஏராளமான முற்போக்கு எழுத்துக்கள் பிரச்சார எழுத்துக்களாகவே வகைமைப் படுத்தப்படுகின்றன. அவற்றை நவீனஇலக்கியத்தின் வட்டத்திற்குள் சேர்ப்பதில்லை. அவை அவற்றின் நோக்கத்தால் மட்டுமே கவனத்திற்குரியவை. சி.என்.அண்ணாத்துரை, மு.கருணாநிதி ஆகியோரின் ஆக்கங்கள் அத்தகையவை. முன்னோடியான திராவிட இயக்கப் பிரச்சார படைப்பு மூவாலூர் ராமாமிருதத்தம்மையாரின் தாசிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்.

சி.என்.அண்ணாத்துரைக்கு நவீன இலக்கியம் எந்த இடத்தை அளித்ததோ அதையே ராஜாஜிக்கும் அளித்தது என்பதை நோக்கினால் அதன் அளவுகோல்களைப் புரிந்துகொள்ள முடியும். சி.என்.அண்ணாத்துரை ‘பிராமணிய’ நோக்கால் புறக்கணிக்கப்பட்டார் என்பவர்கள் எந்த அடிப்படையில் ராஜாஜி அண்ணாத்துரைக்கு அளிக்கப்பட்ட இடம்கூட அளிக்கப்படாமல் விலக்கப்பட்டார் என்பதை உசாவ வேண்டும். இத்தனைக்கும் சி.என்.அண்ணாத்துரையை விட மேம்பட்ட சிலகதைகளை ராஜாஜி எழுதியிருக்கிறார்.

 

சாலை இளந்திரையன்

திராவிட இயக்கத்தின் சாதனை எங்கே?  நவீனமரபுக்கவிதையில் அதன் சாதனை உள்ளது என நினைக்கிறேன். திராவிட இயக்கத்தின் அணிமொழி சரியாக இயைந்துபோகும் இடம் அதுவே. அதன் கற்பனாவாதத் தன்மை அணிநடைக்கு உகந்தது. பாரதிதாசன் அதன் தொடக்கப்புள்ளி. அந்த நிரையில் முடியரசன் ஒரு முதன்மையான கவிஞர் என நினைக்கிறேன். அடுத்தபடியாக வேழவேந்தனும் சுரதாவும் குறிப்பிடத்தக்கவர்கள். ஒரு நெகிழ்வான நோக்கில் குலோத்துங்கன், மா.இலெ.தங்கப்பா ஆகியோரையும் அவ்வரிசையில் சேர்க்கலாம்.

இவ்வரிசையில் திராவிட இயக்கத்தவரால் சேர்க்கப்படாத ஒருவர், அழகியல் மற்றும் கொள்கை சார்ந்து சேர்க்கப்பட்டாகவேண்டியவர் தமிழ்ஒளி.  முற்போக்கு இலக்கியமரபுடன் அணுக்கமானவர் என்றாலும் அவருடைய நிலைபாடு திராவிட இயக்கம் சார்ந்தது. தனிப்பட்ட இயல்பிலிருந்த கட்டற்ற தன்மை, குடிப்பழக்கம் மற்றும் நேரடி அரசியல் ஈடுபாடின்மை போன்றவற்றால் தமிழ்ஒளி திராவிட இயக்கத்தவரால் எவ்வகையிலும் பொருட்படுத்தப்படவில்லை. அவருடைய மாதவிகாவியம் திராவிட இயக்க இலக்கியங்களில் மிக முக்கியமானது..

 

புலவர் ஆ பழனி

ஆனால் சிற்றிதழ்சார்ந்த நவீனத்தமிழிலக்கியவாதிகள் நவீனமரபுக்கவிதையை பாரதிகாலகட்டத்துக்குப் பின்னர் உள்ளத்தால், அழகியலால் நெடுந்தொலைவு கடந்துவிட்டனர். அவர்களில் எவருமே அந்தத்  தளத்தில் ஆர்வம் கொண்டவர்கள் அல்ல. சொல்லப்போனால் எண்பதுகளில் மரபிலக்கிய ஈடுபாடு கொண்ட நவீனத்தமிழிலக்கிய விமர்சகனாக நான் உள்ளே நுழைந்தபோதுதான் நவீன மரபுக்கவிதையை  கருத்தில்கொண்டு முடியரசன் வேழவேந்தன் ஆகியோரைப்பற்றி எழுதினேன். அவர்களை நவீன இலக்கியத்திற்குள் சேர்க்கமுடியாது. ஆனால் தமிழிலக்கியமரபில் அவர்களுக்கு தவிர்க்கமுடியாத இடம் உண்டு.

முடியரசன், வேழவேந்தன், சுரதா, தமிழ்ஒளி நால்வருமே பாரதிதாசனின் வழித்தோன்றல்கள். கவிதைத்திறன் என்றுபார்த்தால் பாரதிதாசனைவிட மேம்பட்டவர்கள். அணிமொழிக்கு இன்றியமையாதது தங்குதடையற்ற ஒழுக்கு. அது பாரதிதாசனிடம் குறைவு. இவர்களிடம் அது இருந்தது. தமிழில் அணிமொழி இயல்பான ஒழுக்கை அடைந்தது தமிழ்ஒளியின் மாதவிகாவியத்திலும் முடியரசனின் பூங்கொடியிலும்தான். இவற்றைப்பற்றி சுருக்கமாக எழுதியிருக்கிறேன். விரித்து எழுதவேண்டும்.

 

 

பெருஞ்சித்திரனார்

 

இங்கே அரசியல்தலைவர்களையே மாபெரும் படைப்பாளிகளாக பரணிபாடி ஏத்துகிறார்கள். அந்த அதிகார வழிபாடு திராவிட இயக்க உளநிலைகளில் மையமானது. நிறுவனங்களின் அரசியல்நோக்கம் சார்ந்து இது நிகழ்கிறது. ஆனால் அதன் விளைவாக மேலே சொன்ன திராவிட இயக்கப் படைப்பாளிகளே மறக்கப்பட்டுவிடுகிறார்கள்.ஒருவகையில் திராவிட இயக்க இலக்கியத்திற்கே தீங்கை விளைவிப்பது இந்த வெளியிலிருந்து செலுத்தப்படும் மதிப்பீடுகள்.

திராவிட இயக்கத்தின் பங்களிப்பு என்பதை  ஒரு முழுமையான நோக்கில், வாசித்து மதிப்பிட்டு, ஏற்பு மறுப்புகளுடன் எழுதவேண்டும் என்பதே நவீனச்சிந்தனையில் ஆர்வமும் பயிற்சியும் உள்ளவர்களின் தரப்பாக இருக்கும். க.பூரணசந்திரன் போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள்.  வெறும் வாய்ச்சவடால்களும் போற்றிப்பாடல்களும் இலக்கியத்திற்கு புறம்பானவை.

கண்ணகியும் மாதவியும்
கசப்பெழுத்தின் நூற்றாண்டு – விந்தன் பற்றி
மு.வ பற்றி ஒரு மதிப்பீடு
புரட்சிப்பத்தினி
திராவிட இயக்க இலக்கியம் – க பூரணசந்திரன் விமர்சனம்   
எஸ்.எஸ்.தென்னரசு பற்றி…
தேவநேயப் பாவாணர் விக்கி
முந்தைய கட்டுரைஈரோடு விவாதப்பயிற்சிப் பட்டறை – புகைப்படங்கள்- அய்யலு ஆர் குமாரன்
அடுத்த கட்டுரைதிருவிழாவிலே…