கெத்தேல் சாகிப் என்றால் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். திருவனந்தபுரம் சாலை பஜாரில் இப்போது ஸ்ரீபத்மநாபா தியேட்டர் இருக்கும் இடத்திற்கு அருகில் அந்தக்காலத்தில் அவரது சாப்பாட்டுக்கடை இருந்தது. அறுபது எழுபதுகளில் அங்கே சாப்பிடாதவர்கள் திருவனந்தபுரத்தில் இருந்தால் அவர்கள் சைவச் சாப்பாட்டுக்காரர்களாக இருப்பார்கள்.
எழுபத்திஎட்டில் கெத்தேல் சாகிப் சாவது வரை கடை நடந்தது. இப்போதும் மகன் பல இடங்களில் கடையை நடத்துகிறார். அதே இடத்தில் அவரது உறவினர்கள் கடை நடத்துகிறார்கள். இப்போதும் அங்கே மீன்கறிக்கும் கோழிக்குழம்புக்கும் அதே சுவைதான். இப்போது முபாரக் ஓட்டல் என்று பெயர். இன்றும் கூட்டம்கூட்டமாக வந்து காத்துக்கிடந்து சாப்பிடுகிறார்கள். முபாரக் ஓட்டலில் சாப்பிட்டால்தான் திருவனந்தபுரம் வந்ததாகவே ஆகும் என நம்பும் அசைவப்பிரியர்கள் கேரளம் முழுக்க உண்டு. ஆனால் கெத்தேல் சாகிப் சோற்றுக்கடை வேறு ஒரு விஷயம், சொன்னால்தான் புரியும்.
இன்றுகூட முபாரக் ஓட்டல் ஒரு சந்துக்குள் தகரக்கூரை போட்ட கொட்டகையாகவே இருக்கிறது. அன்றெல்லாம் அது ஓலை வேய்ந்த பதினைந்தடிக்கு எட்டடி கொட்டகை. மூங்கிலை கட்டி செய்த பெஞ்சு. மூங்கிலால் ஆன மேஜை. கொட்டகை நான்குபக்கமும் திறந்து கிடக்கும். வெயில்காலத்துக்கு சிலுசிலுவென காற்றோட்டமாக இருந்தாலும் மழையில் நன்றாகவே சாரலடிக்கும். கேரளத்தில் மழைக்காலம்தானே அதிகம். இருந்தாலும் கெத்தேல் சாகிபின் ஓட்டலில் எந்நேரமும் கூட்டமிருக்கும்.
எந்நேரம் என்றா சொன்னேன்? அவர் எங்கே எந்நேரமும் கடை திறந்து வைத்திருக்கிறார்? மதியம் பன்னிரண்டு மணிக்கு திறப்பார். மூன்றுமணிக்கெல்லாம் மூடிவிடுவார். அதன்ப்பின்பு சாயங்காலம் ஏழுமணிக்கு திறந்து ராத்திரி பத்து மணிக்கு மூடிவிடுவார். காலை பதினோரு மணிக்கே கடையின் முன்னால் ஒட்டுத்திண்ணையிலும் எதிர்ப்பக்கம் ரஹ்மத்விலாஸ் என்ற தையல்கடையிலும் கரு.பழ.அருணாச்சலம் செட்டியார் அண்ட் சன்ஸ் மொத்தப்பலசரக்கு வணிகம் கடையின் குடோனின் வாசலிலும் ஆட்கள் காத்து நிற்பார்கள். பாதிப்பேர் மாத்ருபூமியோ கேரளகௌமுதியோ வாங்கிவந்து வாசிப்பார்கள். கெ.பாலகிருஷ்ணனின் சூடான அரசியல் கட்டுரைகளைப்பற்றி விவாதம் நடக்கும். சமயங்களும் வாக்கேற்றமும் உண்டு.
எல்லாம் சாகிப் கடையை திறப்பதற்கு அறிகுறியாக வாசலில் தொங்கவிடப்பட்டிருக்கும் சாக்குப்படுதாவை மேலே தூக்கி சுருட்டி வைப்பதுவரைதான். கூட்டம் கூட்டமாக உள்ளே போய் உட்கார்ந்துவிடுவார்கள். கெத்தேல் சாகிப் ராட்சதன் போல இருப்பார். ஏழடி உயரம். தூண்தூணாக கைகால்கள். அம்மைத்தழும்பு நிறைந்த பெரிய முகம். ஒரு கண் அம்மைபோட்டு கலங்கி சோழி போல இருக்கும். இன்னொரு கண் சிறிதாக சிவப்பாகத் தீக்கங்கு போல. தலையில் வெள்ளை வலைத்தொப்பி. மீசையில்லாத வட்டத்தாடிக்கு மருதாணி போட்டு சிவப்பாக்கியிருப்பார். இடுப்பில் கட்டம்போட்ட லுங்கி அதன்மேல் பட்டையான பச்சைபெல்ட். மலையாளியானாலும் கெத்தேல் சாகிப்புக்கு மலையாளம் பேசவராது. அரபிமலையாளம்தான். அவரது குரலையே அதிகம் கேட்க முடியாது. கேட்டாலும் ஓரிரு சொற்றொடர்கள் மட்டுமே. ‘பரீன்’ என்று அவர் கனத்த குரலில் சொல்லி உள்ளே சென்றால் ஆட்கள் பெஞ்சுகளில் நிறைந்துவிடுவார்கள்.
அழைக்கவே வேண்டியதில்லை. உள்ளே இருந்து கோழிக்குழம்பும், பொரித்த கோழியும், கொஞ்சுவறுவலும், கரிமீன் பொள்ளலும், மத்திக்கூட்டும் எல்லாம் கலந்து மணம் ஏற்கனவே அழைத்துக்கொண்டிருக்கும். நானும் இத்தனை நாள் சாப்பிடாத ஓட்டல் இல்லை. கெத்தேல் சாகிபின் சாப்பாட்டு மணம் எப்போதுமே வந்ததில்லை. வாசுதேவன் நாயர் ‘அதுக்கு ஒரு கணக்கு இருக்குடே. சரக்கு வாங்கிறது ஒருத்தன், வைக்கிறது இன்னொருத்தன்னா எப்பவுமே சாப்பாட்டிலே ருசியும் மணமும் அமையாது. கெத்தேல் சாகிப்பு மீனும் கோழியும் மட்டுமில்ல அரிசியும் மளிகையும் எல்லாம் அவரே போயி நிண்ணு பாத்துத்தான் வாங்குவார். குவாலிட்டியிலே ஒரு எள்ளிடை வித்தியாசம் இருந்தா வாங்க மாட்டார். கொஞ்சு அவருக்குன்னு சிறையின்கீழ் காயலிலே இருந்து வரும். பாப்பீன்னு ஒரு மாப்பிளை புடிச்சு வலையோட அதுகளை தண்ணிக்குள்ளேயே போட்டு இழுத்துக்கிட்டு தோணி துழைஞ்சு வருவான். அப்டியே தூக்கி அப்டியே சமைக்க கொண்டுபோவாரு சாகிப்பு.. மக்கா நேர்மையா இருந்தா அதுக்குண்டான ருசி தன்னால வரும் பாத்துக்கோ’
என்ன செய்வாரோ, அவர் கடையில் சாப்பிட்ட பதினைந்தாண்டுகளில் ஒருநாள்கூட ஒரு சாப்பாட்டுப்பொருள்கூட மிகச்சிறந்த ருசி என்ற நிலையில் இருந்து கீழே வந்ததே இல்லை. அதை எப்படிச் சொல்லி விளக்குவதென்றே தெரியவில்லை. நேர்மை மட்டுமல்ல. கணக்கும்கூடத்தான். சாகிப் கடையில் குழம்பும் பொரியலும் எப்போதும் நேராக அடுப்பில் இருந்து சூடாக கிளம்பி வரும். வரும் கூட்டத்தை முன்னரே கணித்து அதற்கேற்ப அடுப்பில் ஏற்றிக்கொண்டிருப்பார். அவரும் அவரது பீபியும் இரு பையன்களும் இரண்டு உதவியாளர்களும்தான் சமையல். அவர்கள் அனைவரும் சாகிப்புக்கு கட்டுப்பட்டவர்கள். அவர் மூக்காலேயே ருசி கண்டுபிடிப்பார். ஆனால் இதெல்லாம் சும்மா சொல்வதுதான். அங்கே ஒரு தேவதை குடிகொண்டிருந்தது என்றுதான் சொல்லவேண்டும்.சரி, தேவதை இல்லை, ஜின். அரேபியாவில் இருந்து வந்த ஜின் அல்ல, மலபாரில் ஏதோ கிராமத்தில் பிறந்து கல்லாயிப்புழையின் தண்ணீர் குடித்த ஜின்.
கெத்தேல் சாகிப்பின் பூர்வீகம் மலபாரில். யூசஃபலி கேச்சேரி எழுதிய ‘கல்லாயி புழ ஒரு மணவாட்டி’ என்ற பாட்டு ஒலிக்கக் கேட்டபோது அவரது மகன் ‘ஞம்ம பாப்பான்றே பொழயல்லே’ என்றார். மற்றபடி அவரைப்பற்றி தெரியாது. அவர் பேசுவதேயில்லை. அவரை யாராவது மனவசியம் செய்து பேசவைத்தால்தான் உண்டு. பஞ்சம்பிழைக்க வந்த குடும்பம். சிறுவயதிலேயே சாகிப் தெருவுக்கு வந்துவிட்டார். இருபது வயதுவரை கையில் பெரிய கெட்டிலுடன் டீ சுமந்து விற்றுக்கொண்டிருந்தார். அந்தப்பெயர் அப்படி வந்ததுதான். அதன்பின் சாலையோரத்தில் மீன் பொரித்து விற்க ஆரம்பித்தார். மெல்ல சப்பாட்டுக்கடை. ’கெத்தேல் சாகிபின் கையால் குடிச்ச சாயாவுக்கு பிறகு இன்னைக்கு வரை நல்ல சாயா குடிச்சதில்லே’ என்று அனந்தன் நாயர் ஒருமுறை சொன்னார். சாட்சாத் கௌமுதி பாலகிருஷ்ணனே சாகிப் கையால் டீ குடிக்கக் கழக்கூட்டத்தில் இருந்து சாலை பஜாருக்கு வருவார் என்றார்கள்.
சாகிப்புக்கு ஒரு குறையும் இல்லை. அம்பலமுக்கில் பெரிய வீடு. கூட்டுக்குடும்பம். நகரில் ஏழெட்டுக் கடைகள். மூன்று பெண்களை கட்டிக்கொடுத்துவிட்டார். மூன்று ’புதியாப்ள’களுக்கும் ஆளுக்கொரு கடை வைத்து கொடுத்திருந்தார். எல்லாம் ஓட்டலில் சம்பாதித்தது என்று சொன்னால் ஆச்சரியப்படமாட்டீர்கள். ஆனால் அவரது வியாபாரமுறையைச் சொன்னால் ஆச்சரியப்படத்தான் செய்வீர்கள். சாகிப் சாப்பாட்டுக்குக் காசு வாங்குவதில்லை. டீ விற்ற காலம் முதலே உள்ள பழக்கம். கடையின் முன்னால் ஒரு மூலையில் சிறிய தட்டியால் மறைக்கப்பட்டு ஒரு தகர டப்பா உண்டியல் வைக்கப்பட்டிருக்கும். சாப்பிட்டு விட்டுப் போகிறவர்கள் அதில் எவ்வளவு வேண்டுமானாலும் போடலாம். யாரும் பார்க்கப்போவதில்லை. போடாமலும் போகலாம். எத்தனை நாள் போடாமல் போனாலும், எவ்வளவு சாப்பிட்டாலும் கெத்தேல் சாகிப் அதை கவனிக்கவே மாட்டார்.
தெருவில் சட்டைபோடாமல் காக்கி நிக்கரும் வட்டத்தொப்பியுமாக அலைந்த டீப்பையனாக இருக்கும்போதே கெத்தேல் சாகிப் அப்படித்தான். ஒரு சின்ன டப்பா அவர் அருகே இருக்கும், அதில் விரும்பினால் காசு போட்டால் போதும். விலைகேட்கக் கூடாது, சொல்லவும் மாட்டார். ஆரம்பத்தில் சில சண்டியர்களும் தெருப்பொறுக்கிகளும் வம்பு செய்திருக்கிறார்கள். அதில் காகிதங்களை மடித்து போட்டிருக்கிறார்கள். அந்த டப்பாவையே தூக்கிக்கொண்டு போயிருக்கிறார்கள். மாதக்கணக்கில் வருடக்கணக்கில் சும்மா டீ குடித்திருக்கிறார்கள். கெத்தேல் சாகிப்புக்கு அவர்களின் முகம் கூட நினைவிருப்பது போல தெரியாது.
ஒரே ஒருமுறை கெத்தேல் சாகிப் ஒருவனை அறைந்தார். வெளியூர்க்காரி ஒருத்தி, சாலையில் மல்லி மிளகு சீரகம் புடைத்து கூலி வாங்கும் ஏழைப்பெண், எங்கோ தமிழ்நாட்டு கிராமத்தில் இருந்து பஞ்சம்பிழைக்க வந்தவள், டீ குடித்துக்கொண்டிருந்தாள். அன்று புகழ்பெற்ற சட்டம்பி கரமன கொச்சுகுட்டன்பிள்ளை ஒரு டீக்குச் சொல்லிவிட்டு அந்தப் பெண்ணை பார்த்தார். என்ன நினைத்தாரோ அந்தப் பெண்ணின் முலையைப் பிடித்துக் கசக்க ஆரம்பித்தார். அவள் அலற ஆரம்பித்ததும் உற்சாகவெறி ஏறி அவளை அப்படியே தூக்கிக் கொண்டு ஓரத்துச் சந்துக்குள் செல்லமுயன்றார். கெத்தேல் சாகிப் ஒன்றுமெ சொல்லாமல் எழுந்து கொச்சுகுட்டன்பிள்ளையை ஓங்கி ஓர் அறை விட்டார். சாலைமுழுக்க அந்தச் சத்தம் கேட்டிருக்கும். குட்டன்பிள்ளை காதும் மூக்கும் வாயும் ரத்தமாக ஒழுக அப்படியே விழுந்து பிணம் போல கிடந்தார். கெத்தேல் சாகிப் ஒன்றும் நடக்காதது போல மேற்கொண்டு டீ விற்க ஆரம்பித்தார்.
குட்டன்பிள்ளையை அவரது ஆட்கள் தூக்கிக் கொண்டு சென்றார்கள். பதினெட்டு நாட்கள் ஆஸ்பத்திரியில் கிடந்தவர் பின்னர் எழுந்து நடமாடவே இல்லை. காது கேட்காமலாகியது. தலை எந்நேரமும் நடுங்கிக் கொண்டிருக்கும். அடிக்கடி வலிப்பு வந்தது. ஏழு மாசம் கழித்து கரமனை ஆற்றில் குளிக்கையில் வலிப்பு வந்து ஆற்றுக்குள் போனவரை ஊதிப்போன சடலமாகத்தான் எடுக்க முடிந்தது. ஒரு மாப்பிள்ளை எப்படி குலநாயரை அடிக்கலாம் என்று கிளம்பி வந்த கும்பலை சாலை மகாதேவர் கோயில் டிரஸ்டி அனந்தன் நாயர் ‘போயி சோலி மயிரை பாருங்கடே. நியாயத்த விட்டு களிச்சா சிலசமயம் துலுக்கன் கையாலே சாவணும்னு இருக்கும், சிலசமயம் எறும்பு கடிச்சும் சாவு வரும்…’ என்று சொல்லிவிட்டார். அவர் சொன்னபின்னர் சாலை பஜாரில் மறு பேச்சு இல்லை.
நான் முதன்முதலாக கெத்தேல் சாகிப் கடைக்குச் சாப்பிட வந்தது அறுபத்தியெட்டில். என் சொந்த ஊர் கன்னியாகுமரி பக்கம் ஒசரவிளை. அப்பாவுக்கு கோட்டாற்றில் ஒரு ரைஸ்மில்லில் கணக்குப்பிள்ளை வேலை. நான் நன்றாக படித்தேன். பதினொன்று ஜெயித்ததும் காலேஜில் சேர்க்க வேண்டும் என்றார்கள். அப்பாவின் சம்பாத்தியத்தில் அதை நினைத்துக்கூட பார்த்திருக்கக் கூடாது. ஆனால் சொந்தத்தில் ஒரு மாமா திருவனந்தபுரம் பேட்டையில் இருந்தார். ஒரு சுமாரான அச்சகம் வைத்திருந்தார். அவர் மனைவிக்குத் தாழக்குடி. எல்லாம் ஒன்றுக்குள் ஒன்றுதான். அப்பா என்னை கைபிடித்துக் கூட்டிக்கொண்டு பஸ் ஏறி தம்பானூரில் இறங்கி பேட்டை வரை நடத்திக் கொண்டுசென்றார். நான் பார்த்த முதல் நகரம். தலையில் வைத்த தேங்காயெண்ணை முகத்தில் வியர்வையுடன் சேர்ந்து வழிய கணுக்கால்மேலே ஏறிய ஒற்றைவேட்டியும் பானைக்குள் சுருக்கி வைத்த சட்டையும் செருப்பில்லாத கால்களுமாக பிரமை பிடித்து நடந்து போனேன்.
மாமாவுக்கு வேறு வழி இல்லை. அவரைச் சின்ன வயதில் அப்பா தூக்கி வளர்த்திருக்கிறார். யூனிவர்சிட்டி காலேஜில் ஆங்கில இலக்கியம் படிக்க சேர்ந்துகொண்டேன். அப்பா மனநிறைவுடன் கிளம்பிச் சென்றார். ஒரு ரூபாயை என் கையில் வைத்து ‘வச்சுக்கோ, செலவு செய்யாதே. எல்லாம் மாமன் பாத்து செய்வான்’ என்று சொன்னார். ’இந்தா சுப்பம்மா, உனக்கு இவன் இனிமே மருமோன் மட்டுமில்ல. மகனுமாக்கும்’ என்று கிளம்பினார். மாமனுக்கு மனம் இருந்ததா என்பது எனக்கு இன்றும் சந்தேகம்தான். மாமிக்கு கொஞ்சம்கூட மனமில்லை என்பது அன்றைக்குச் சாயங்காலம் சாப்பிடும்போதே தெரிந்தது. எல்லாரும் அப்பளம் பொரியல் சாம்பாருடன் சாப்பிடும்போது என்னை அழைக்கவில்லை. சாப்பிட்டு முடித்தபின்னர் அடுப்படியில் ஒரு அலுமினிய பாத்திரத்தில் எனக்கு தண்ணீர்விட்ட சோறு அதிலேயே விடப்பட்ட குழம்புடன் இருந்தது.
அவமானங்களும் பட்டினியும் எனக்குப் பழக்கம்தான். எல்லாவற்றையும் பொறுத்துப்போனேன். பொறுத்துப்போகப்போக அவை அதிகமாக ஆயின. வீட்டில் எல்லா வேலைகளையும் நானே செய்ய வேண்டும். கிணற்றில் இருந்து குடம்குடமாக தண்ணீர் பிடித்து வைக்க வேண்டும். வீட்டை தினமும் கூட்டிப்பெருக்கவேண்டும். அவளுடைய இரு பெண்களையும் பள்ளிக்கூடம் கொண்டுசென்று விடவேண்டும். மூத்தவள் ராமலட்சுமி எட்டாம் கிளாஸ். அவளுக்கு கணக்குச் சொல்லிக்கொடுத்து அவள் வீட்டுப்பாடத்தையும் செய்துகொடுக்கவேண்டும். இரவு சமையலறையை கழுவிவிட்டு படுக்கவேண்டும். இவ்வளவுக்கும் எனக்கு அவர்கள் கொடுத்தது திண்ணையில் ஓரு இடம். இரண்டுவேளை ஊறிய சோறும் ஊறுகாயும். எந்நேரமும் மாமி அதிருப்தியுடன் இருந்தாள். வீட்டுக்கு வரும் ஒவ்வொருவரிடமும் என்னைப்பற்றி புலம்பினாள். நான் உண்ணும் சோற்றால் அவர்கள் கடனாளி ஆகிக்கொண்டிருப்பதாகச் சொன்னாள். நான் புத்தகத்தை விரிப்பதைப்பார்த்தாலே அவளுக்கு வெறி கிளம்பி கத்த ஆரம்பிப்பாள்.
நான் எதையும் அப்பாவுக்கு எழுதவில்லை. அங்கே வீட்டில் இன்னும் இரு தம்பிகளும் ஒரு தங்கையும் இருந்தார்கள். பாதிநாள் ரைஸ்மில்லில் அரிசி புடைப்பவர்கள் பாற்றிக் கழித்து போடும் கருப்பு கலந்த குருணைஅரிசியை கஞ்சியாகக் காய்ச்சித்தான் குடிப்போம். ஓடைக்கரையில் வளரும் கொடுப்பைக்கீரை குழம்பைத்தான் என் நினைவு தெரிந்த நாள்முதல் தினமும் சாப்பிட்டு வந்தேன். தேங்காய்கூட இல்லாமல் கீரையை வேகவைத்து பச்சைமிளகாய் புளி போட்டு கடைந்து வைத்த குழம்பு. பலசமயம் பசிவேகத்தில் அந்த மணமே வாயில் நீரூறச் செய்யும். என்றாவது ஒருநாள் அம்மா துணிந்து நாலணாவுக்கு மத்திச்சாளை வாங்கினால் அன்றெல்லாம் வீடெங்கும் மணமாக இருக்கும். அன்றுமட்டும் நல்ல அரிசியில் சோறும் சமைப்பாள். நாள் முழுக்க தியானம் போல மத்திக்குழம்பு நினைப்புதான் இருக்கும். எத்தனை முயன்றாலும் மனதை வேறெங்கும் செலுத்த முடியாது. அம்மா கடைசியில் சட்டியில் ஒட்டிய குழம்பில் கொஞ்சம் சோற்றைப் போட்டு துடைத்து பிசைந்து வாயில் போடப்போனால் அதிலும் பங்கு கேட்டு தம்பி போய் கையை நீட்டுவான்.
கல்லூரிக்கு ஃபீஸ் கொடுக்க வேண்டியிருந்தது. பலமுறை சுற்றி வளைத்து மாமாவிடம் சொன்னேன். கடைசியில் நேரடியாகவே கேட்டேன். ‘உங்கப்பாவுக்கு எழுதிக்கேளு…இங்க தங்கி சாப்பிடத்தான் நான் சொல்லியிருக்கேன்…’ என்றார். அப்பாவுக்கு எழுதுவதில் அர்த்தமே இல்லை என்று தெரியும். ஒருவாரம் கழித்து என்னை காலேஜில் இருந்து நின்றுவிடச் சொல்லிவிட்டார்கள். ஃபீஸ் கட்டியபிறகு வந்தால் போதும் என்றார்கள். நான் பித்துப்பிடித்தவன் போல அலைந்தேன். தம்பானூர் ரயில் நிலையத்திற்குச் சென்று நாளெல்லாம் இரும்புச்சத்தத்தைக் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தேன். விதவிதமாக ஆயிரம் முறை தண்டவாளத்தில் விழுந்து செத்தேன். அப்போதுதான் என்னுடன் படித்த குமாரபிள்ளை என்ற மாணவன் ஒரு வழி சொன்னான். என்னை அவனே கூட்டிக்கொண்டு சென்று சாலையில் கெ.நாகராஜப் பணிக்கர் அரிசி மண்டியில் மூட்டைக்கணக்கு எழுதும் வேலைக்குச் சேர்த்து விட்டான். சாயங்காலம் ஐந்து மணிக்கு வந்தால்போதும். இரவு பன்னிரண்டு மணிவரை கணக்கு எழுதவேண்டும். ஒருநாளுக்கு ஒரு ரூபாய் சம்பளம். நாற்பது ரூபாய் அட்வான்ஸ்காகக் கொடுத்தார். அதைக்கொண்டு சென்று ஃபீஸ் கட்டினேன்.
தினமும் வீடு சென்று சேர ஒருமணி இரண்டுமணி ஆகும். காலையில் ஏழுமணிக்குத்தான் எழுந்திருப்பேன். காலேஜ் இடைவெளிகளில் வாசித்தால்தான் உண்டு. ஆனாலும் நான் நல்ல மாணவனாக இருந்தேன். வகுப்புகளில் கூர்ந்து கவனிக்கும் வழக்கம் எனக்கிருந்தது. நேரம்தான் போதவில்லை. யூனிவர்சிட்டி காலேஜில் இருந்து செகரட்டரியேட் வழியாக குறுக்காகப் பாய்ந்து, கரமனை வழியாக சாலை பஜாருக்கு போக முக்கால்மணி நேரமாகிவிடும். சண்முகம்பிள்ளை கடைசி கிளாஸ் எடுத்தாரென்றால் நாலரை மணிவரை கொண்டு போவார். நான் போவதற்கு தாமதமானால் பரமசிவம் கணக்கு பார்க்க வந்து அமர்ந்துவிடுவான். அதன்பின் போனாலும் பிரயோசனமில்லை. வாரத்தில் நான்குநாட்கள்தான் சரக்கு வரும். அதில் ஒருநாள் போனால் வாரத்தில் கால்பங்கு வருமானம் இல்லாமலானதுபோல.
முதல் மாசம் எனக்கு பணமே தரப்படவில்லை. வரவேண்டிய பதினைந்து ரூபாயையும் பணிக்கர் முன்பணத்தில் வரவு வைத்துவிட்டார். நான் காலை எழுந்ததும் மாமி என் முன்னால் ஒரு நோட்டுப்புத்தகத்தை கொண்டு வைத்துவிட்டு போனாள். புரட்டிப்பார்த்தேன். பழைய நோட்டு. நான் வந்த நாள்முதல் சாப்பிட்ட ஒவ்வொருவேளைக்கும் கணக்கு எழுதப்பட்டிருந்தது. ஒருவேளைக்கு இரண்டணா கணக்குப் போட்டு மொத்தம் நாற்பத்தெட்டு ரூபாய் என் பற்றில் இருந்தது. எனக்கு தலை சுற்றியது. மெதுவாக சமையலறைக்குப் போய் ‘என்ன மாமி இது?’ என்றேன். ‘ஆ, சோறு சும்மா போடுவாளா? நீ இப்ப சம்பாரிக்கிறேல்ல? குடுத்தாத்தான் உனக்கும் மரியாத. எனக்கும் மரியாத’ என்றாள். ‘கணக்கு தப்பா இருந்தா சொல்லு, பாப்பம். நான் அப்பமே இருந்து ஒரு நாள் விடாம எழுதிட்டுதான் வாறேன்’
நான் கண்கலங்கி தொண்டை அடைத்து பேசாமல் நின்றேன். பின்பு ‘நான் இப்டீன்னு நினைக்கலை மாமி…எனக்கு அவ்ளவொண்ணும் கெடைக்காது. ஃபீஸ் கட்டணும். புக்கு வாங்கணும்…’ என்றேன். ‘இந்த பாரு, நான் உனக்கு என்னத்துக்கு சும்மா சோறு போடணும்? எனக்கு ரெண்டு பெண்மக்கள் இருக்கு. நாளைக்கு அதுகளை ஒருத்தன்கிட்ட அனுப்பணுமானா பணமும் நகையுமா எண்ணி வைக்கணும் பாத்துக்கோ. கணக்கு கணக்கா இருந்தா உனக்கும் மரியாத. எனக்கும் மரியாத’ நான் மெல்லிய குரலில் ‘இப்ப எங்கிட்ட பணமில்லை மாமி. நான் கொஞ்சம் கொஞ்சமா குடுத்திடறேன்’ என்றேன். ‘குடுப்பேன்னு எப்டி நம்பறது?’ என்றாள். நான் ஒன்றும் சொல்லவில்லை. அன்று மாலையே நான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன். நேராக பணிக்கரின் குடோனிலேயே வந்து தங்கிவிட்டேன். பணிக்கருக்கும் இலவசமாக வாட்ச்மேன் கிடைத்த சந்தோஷம். மாமி என் முக்கியமான புத்தகங்களை பணத்துக்கு அடகாக பிடித்து வைத்துக்கொண்டாள்.
சாலையில் நான் சந்தோஷமாகவே இருந்தேன். கரமனை ஆற்றில் குளியல். அங்கேயே எலிசாம்மா இட்லிக்கடையில் நான்கு இட்லி. நேராக காலேஜ். மதியம் சாப்பிடுவதில்லை. சாயங்காலம் வேலைமுடிந்தபின்னர் ஒரு பொறை அல்லது டீ குடித்துவிட்டு படுத்துவிடுவேன். கணக்கில் ஒருவேளை உணவுதான். எந்நேரமும் பசி இருந்துகொண்டே இருக்கும். எதை யோசித்தாலும் சாப்பாட்டு நினைவில் வந்து முடியும். குண்டான ஒருவரை பார்த்தால் கண்ணை எடுக்கவே முடியாது. எவ்ளவு சாப்பிடுவார் என்ற நினைப்புதான். சாலைமகாதேவர்கோயில் வழியாகச் செல்லும்போது பாயச வாசனை வந்தால் நுழைந்துவிடுவேன். இலைக்கீற்றில் வைத்து தரப்படும் பாயசமும் பழமும் ஒருநாள் இட்லி செலவை மிச்சப்படுத்திவிடும். சாஸ்தாவுக்கு சுண்டல், இசக்கியம்மைக்கு மஞ்சள்சோறு என அடிக்கடி ஏதாவது கிடைக்காமலிருக்காது. ஆனாலும் எனக்கு பணம் போதவில்லை. முன்பணத்தை அடைத்து முடிப்பதற்குள் அடுத்த காலேஜ் ஃபீஸுக்கு கேட்டுவிட்டார்கள். இதைத்தவிர மாதம் ஐந்துரூபாய் வீதம் சேர்த்து கொண்டுபோய் மாமிக்கு கொடுத்தேன். பரீட்சைக்கு முன்னாலேயே புத்தகங்களை மீட்டாகவேண்டும்.
நான் மெலிந்து கண்கள் குழிந்து நடமாட முடியாதவனாக ஆனேன். கணக்கு போட்டுக்கொண்டிருக்கும்போது சட்டென்று கிர்ர் என்று எங்கோ சுற்றிச்சுழன்று ஆழத்துக்குப் போய் மீண்டு வருவேன். வாயில் எந்நேரமும் ஒரு கசப்பு. கைகால்களில் ஒரு நடுக்கம். பேட்டை வரை காலேஜுக்கு நடப்பதற்கு ஒருமணிநேரம் ஆகியது. என் கனவெல்லாம் சோறு. ஒருநாள் சாலையில் ஒரு நாய் அடிபட்டு செத்துக்கிடந்தது. அந்த நாயின் கறியை எடுத்துக்கொண்டுபோய் குடோன் பின்பக்கம் கல்லடுப்பு கூட்டி சுட்டு தின்பதைப்பற்றி கற்பனை செய்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எச்சில் ஊறி சட்டையில் வழிந்து விட்டது அன்று.
அப்போதுதான் கூலி நாராயணன் சொன்னான், கெத்தேல் சாகிப் ஓட்டலைப்பற்றி. பணம் கொடுக்கவேண்டாம் என்பது எனக்கு நம்பமுடியாததாக இருந்தது. பலரிடம் கேட்டேன், உண்மைதான் என்றார்கள். இருந்தால் கொடுத்தால்போதுமாம். எனக்கு தைரியம் வரவில்லை. ஆனால் கெத்தேல் சாகிப் ஓட்டலைப்பற்றிய நினைப்பு எந்நேரமும் மனதில் ஓடியது. நாலைந்துமுறை ஓட்டலுக்கு வெளியே சென்று நின்று பார்த்துவிட்டு பேசாமல் வந்தேன். அந்த நறுமணம் என்னை கிறுக்காக்கியது. நான் பொரித்த மீனை வாழ்க்கையிலேயே இருமுறைதான் சாப்பிட்டிருக்கிறேன். இருமுறையும் சொந்தத்தில் ஒரு பண்ணையார் வீட்டில்தான். ஒருவாரம் கழித்து மூன்று ரூபாய் திரண்ட பின் அந்தப் பணத்துடன் கெத்தேல் சாகிப் ஓட்டலுக்குச் சென்றேன்.
சாகிப் ஓட்டலை திறப்பது வரை எனக்கு உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. ஏதோ திருட்டுத்தனம் செய்ய வந்தவனைப்போல உணர்ந்தேன். கும்பலோடு உள்ளே போய் ஓரமாக யாருமே கவனிக்காதது போல அமர்ந்துகொண்டேன். ஒரே சத்தம். சாகிப் புயல்வேகத்தில் சோறு பரிமாறிக்கொண்டிருந்தார். கவிழ்க்கப்பட்ட தாமரை இலையில்தான் சாப்பாடு. ஆவி பறக்கும் சிவப்புச் சம்பாச் சோற்றை பெரிய சிப்பலால் அள்ளி கொட்டி அதன்மேல் சிவந்த மீன் கறியை ஊற்றினார். சிலருக்கு கோழிக்குழம்பு. சிலருக்கு வறுத்தகோழிக்குழம்பு. அவர் எவரையுமே கவனிக்கவில்லை என்றுதான் பட்டது. அதன் பிறகு கவனித்தேன், அவருக்கு எல்லாரையுமே தெரியும். பலரிடம் அவர் எதையுமே கேட்பதில்லை. அவரே மீனையும் கறியையும் வைத்தார். ஆனால் யாரிடமும் உபச்சாரமாக ஏதும் சொல்லவில்லை. அவரே பரிமாறினார். இரண்டாம்முறை குழம்பு பரிமாற மட்டும் ஒரு பையன் இருந்தான்.
என்னருகே வந்தவர் என்னை ஏறிட்டுப் பார்த்தார். ‘எந்தா புள்ளேச்சன், புத்தனா வந்நதா?’ என்றார். என்னை வெள்ளாளன் என்று எப்படி கவனித்தார் என்று வியந்து பேசாமல் இருந்தேன். சோற்றைக் கொட்டி அதன் மேல் குழம்பை ஊற்றினார். ஒரு பெரிய பொரித்த சிக்கன் கால். இரண்டு துண்டு பொரித்த மீன். ‘தின்னு’ என்று உறுமியபின் திரும்பிவிட்டார். அதற்கு எப்படியும் மூன்று ரூபாய்க்குமேல் ஆகிவிடும். என் கைகால்கள் பதற ஆரம்பித்தன. சோறு தொண்டையில் அடைத்தது. சட்டென்று திரும்பிய சாகிப் ‘நிங்ங அவிடே எந்து எடுக்கிணு? தின்னீன் பிள்ளேச்சா’ என்று ஒரு பயங்கர அதட்டல் போட்டார். அள்ளி அள்ளி சாப்பிட்டேன். அந்த ருசி என் உடம்பெல்லாம் பரவியது. ருசி ! கடவுளே, அப்படி ஒன்று உலகில் இருப்பதையே மறந்து விட்டேனே. என் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டி வாய் வரைக்கும் வழிந்தது.
ஒரு சின்ன கிண்டியில் உருகிய நெய்போன்ற ஒன்றுடன் கெத்தேல் சாகிப் என்னருகே வந்தார். என் சோற்றில் அதைக்கொட்டி இன்னும் கொஞ்சம் குழம்பு விட்டு ‘கொழச்சு திந்நோ ஹம்க்கே…மீன்கொழுப்பாணு’ என்றார். ஆற்றுமீனின் கொழுப்பு அது. அதன் செவிள்பகுதியில் இருந்து மஞ்சளாக வெட்டி வெளியே எடுப்பார்கள். கறிக்கு அது தனி ருசியைக் கொடுத்தது. அதிகமாகச் சாப்பிட்டு பழக்கமில்லாததனால் ஒரு கட்டத்தில் என் வயிறு அடைத்துக்கொண்டது. சட்டென்று இன்னும் இரு சிப்பல் சோற்றை என் இலையில் கொட்டினார் சாகிப். ‘அய்யோ வேண்டாம்’ என்று தடுக்கப்போன என் கையில் அந்த தட்டாலேயே கணீர் என்று அறைந்து ‘சோறு வச்சா தடுக்குந்நோ? எரப்பாளி..தின்னுடா இபிலீஸே ’ என்றார். உண்மையிலேயே கையில் வலி தெறித்தது. எழுந்திருந்தால் சாகிப் அடித்துவிடுவார் என்று அவரது ரத்தக் கண்களைக் கண்டபோது தோன்றியது. சோற்றை மிச்சம் வைப்பது சாகிப்புக்குப் பிடிக்காது என்று தெரியும். உண்டு முடித்தபோது என்னால் எழ முடியவில்லை. பெஞ்சை பற்றிக்கொண்டு நடந்து இலையை போட்டு கை கழுவினேன்.
அந்த பெட்டியை நெருங்கியபோது என் கால்கள் நடுங்கின. எங்கோ ஏதோ கோணத்தில் கெத்தேல் சாகிப் பார்த்துக்கொண்டுதான் இருப்பார் என்று தோன்றியது. ஆனால் அவர் வேறு ஆட்களை கவனித்துக்கொண்டிருந்தார். பலர் பணம் போடாமல் போனார்கள் என்பதை கவனித்தேன். சிலர் போட்டபோதும் சாதாரணமாகத்தான் இருந்தார்கள். நான் கை நடுங்க மூன்று ரூபாயை எடுத்து உள்ளே போட்டேன். ஏதோ ஒரு குரல் கேட்கும் என முதுகெல்லாம் காதாக , கண்ணாக இருந்தேன். மெல்ல வெளியே வந்தபோது என் உடலே கனமிழக்க ஆரம்பித்தது. சாலை எங்கும் குளிர்ந்த காற்று வீசுவதுபோல் இருந்தது. என் உடம்பு புல்லரித்துக்கொண்டே இருக்க எவரையும் எதையும் உணராமல் பிரமையில் நடந்துகொண்டிருந்தேன்.
நாலைந்து நாள் நான் அப்பகுதிக்கே செல்லவில்லை. மீண்டும் இரண்டு ரூபாய் சேர்ந்தபோது துணிவு பெற்று கெத்தேல் சாகிபு கடைக்குச் சென்றேன். அவர் என்னை அடையாளம் கண்டுகொண்டார் என்பது அதேபோல கொழுப்பைக் கொண்டுவந்து ஊற்றியபோதுதான் தெரிந்தது. அதே அதட்டல், அதே வசை. அதேபோல உடல்வெடிக்கும் அளவுக்கு சாப்பாடு. இம்முறை பணத்தை நிதானமாகவே போட்டேன். மீண்டும் மூன்றுநாட்கள் கழித்து சென்றபோது என் கையில் ஏழு ரூபாய் இருந்தது. அன்றுமாலை நான் அதை மாமிக்குக் கொண்டு கொடுக்கவேண்டும். அதில் இரண்டு ரூபாய்க்குச் சாப்பிடலாம் என நினைத்தேன். இரண்டணாவுக்கு மேல் சாப்பிடுவதென்பது என்னைப்பொறுத்தவரை ஊதாரித்தனத்தின் உச்சம். ஆனால் ருசி என்னை விடவில்லை. அந்நாட்களில் என் கனவுகளில்கூட கெத்தேல் சாகிப் ஓட்டலின் மீன்குழம்பும் கோழிப்பொரியலும்தான் வந்துகொண்டிருந்தன. ஏன் , நோட்டுப்புத்தகத்தின் பின்பக்கம் ஒரு கவிதைகூட எழுதி வைத்திருந்தேன். உட்கார்ந்து சாப்பிட்டு எழுந்து சென்றபோது பணம் போடாவிட்டால் என்ன என்ற எண்ணம் வந்தது
அந்த நினைப்பே வயிற்றை அதிரச்செய்தது. மேற்கொண்டு சாப்பிடவே முடியவில்லை. பந்தை தண்ணீரில் முக்குவதுபோல சோற்றை தொண்டையில் அழுத்தவேண்டியிருந்தது. கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. எழுந்து கைகழுவி விட்டு கனத்த குளிர்ந்த கால்களை தூக்கி வைத்து நடந்தேன். சிறுநீர் முட்டுகிறதா, தலை சுழல்கிறதா, மார்பு அடைக்கிறதா ஒன்றும் புரியவில்லை. பேசாமல் பணத்தை போட்டுவிடலாம் என்று தோன்றியது. மெல்ல நடந்து உண்டியல் அருகே வந்தேன். அதை தாண்டிச்செல்ல முடியவில்லை. காதுகளில் ஒரு இரைச்சல். சட்டென்று ஏழு ரூபாயையும் அப்படியே தூக்கி உள்ளே போட்டு விட்டு வெளியே வந்தேன். வெளிக்காற்று பட்டதும்தான் என்ன செய்திருக்கிறேன் என்று புரிந்தது. அரைமாத சம்பாத்தியம் அப்படியே போய்விட்டது. எத்தனை பாக்கிகள். கல்லூரி ஃபீஸ் கட்ட எட்டு நாட்கள்தான் இருந்தன. என்ன செய்துவிட்டேன். முட்டாள்தனத்தின் உச்சம்.
மனம் உருகி கண்ணீர் வந்துகொண்டே இருந்தது. ,மிக நெருங்கிய ஒரு மரணம் போல. மிகப்பெரிய ஏமாற்றம் போல. கடைக்குச் சென்று அமர்ந்தேன். இரவுவரை உடம்பையும் மனத்தையும் முழுக்க பிடுங்கிக்கொள்ளும் வேலை இருந்ததனால் தப்பித்தேன். இல்லாவிட்டால் அந்த வெறியில் ஏதாவது தண்டவாளத்தில்கூட தலைவைத்திருப்பேன். அன்றிரவு தோன்றியது, ஏன் அழவேண்டும்? அந்த பணம் தீர்வது வரை கெத்தேல் சாகிப் ஓட்டலில் சாப்பிட்டால் போயிற்று. அந்நினைப்பு அளித்த ஆறுதலுடன் தூங்கிவிட்டேன்.
மறுநாள் மதியம் வரைத்தான் காலேஜ். நேராக வந்து கெத்தேல் சாகிப் ஓட்டலில் அமர்ந்து நிதானமாக ருசித்து சாப்பிட்டேன். அவர் கொண்டு வந்து வைத்துக்கோண்டே இருந்தார். கொஞ்சம் இடைவெளி விட்டால்கூட எழப்போகிறேன் என நினைத்து ‘டேய், வாரித்தின்னுடா, ஹிமாறே’ என்றார். சாப்பிட்டுவிட்டு கைகழுவி பேசாமல் நடந்தபோது உள்ளே கெத்தேல் சாகிப் கேட்டால் சொல்லவேண்டிய காரணங்களை சொற்களாக்கி வைத்துக்கொண்டிருந்தேன். அவர் கவனிக்கவே இல்லை. வெளியே வந்தபோது ஏமாற்றமாக இருந்தது. சட்டென்று அவர் மேல் எரிச்சல் வந்தது. பெரிய புடுங்கி என்று நினைப்பு. தர்மத்துக்கு கட்டுப்பட்டு எல்லாரும் பணம் போடுவதனால் இவன் பெரிய தர்மவானாக தோற்றமளிக்கிறான். ரம்சானுக்கு சக்காத்து கொடுப்பவர்கள் பணத்தைக் கொண்டுவந்து உண்டியலிலே போடுவதனால் பிழைக்கிறான். சும்மாவா கொடுக்கிறான்? இப்படி கிடைத்த பணம்தானே வீடும் சொத்துமாக ஆகியிருக்கிறது? போடாவிட்டால் எதுவரை பொறுப்பான். பார்ப்போமே. அந்த எரிச்சல் எதனால் என்று தெரியவில்லை. ஆனால் உடம்பு முழுகக் ஒரு தினவுபோல அது இருந்துகொண்டே இருந்தது.
அந்த எரிச்சலுடன்தான் மறுநாள் சென்று அமர்ந்தேன். கெத்தேல் சாகிப் கேட்கமாட்டார் என நான் அறிவேன். ஆனால் அவர் பார்வையில் நடத்தையில் ஒரு சிறிய மாற்றம் தெரிந்தால்கூட அன்றுடன் அங்கே செல்வதை நிறுத்திவிடவேண்டும் என நினைத்துக்கொண்டேன். கொஞ்சம் அதிகமாக உபசரித்தால்கூட அவருக்கு கணக்கு இருக்கிறது, கவனிக்கிறார் என்றுதானே அர்த்தம். ஆனால் கெத்தேல் சாகிப் அவரது வழக்கமான அதே வேகத்துடன் பரிமாறிக்கொண்டிருந்தா. கொழுப்பு ஊற்றினார். ‘கோழி தின்னு பிள்ளேச்சா’ என்று ஒரு அரைக்கோழியை வைத்தார். பின்னர் மீன் வைத்தார். அவர் இந்த உலகில்தான் இருக்கிறாரா? உண்மையிலேயே இது ஒரு மாப்பிளைதானா இல்லை ஏதாவது ஜின்னா? பயமாகக்கூட இருந்தது. கடைசியாகச் சோறு போட்டு சாப்பிடப்போனபோது கெத்தேல் சாகிப் கறி பொரித்த மிளகாய்க்காரத்தின் தூளையும் கொஞ்சம் கருகிய கோழிக்காலையும் கொண்டு வைத்தார். நான் அதை விரும்பிச் சாப்பிடுவதை வெளியே காட்டிக்கொள்ளக்கூடாது என எப்போதும் முயல்வேன். ஆனால் அவருக்கு தெரிந்திருந்தது ஆச்சரியமளிக்கவில்லை.
அந்த காரத்தை சோற்றில் போட்டுப்பிசைந்தபோது சட்டென்று மனம் ததும்பி விட்டது. கண்ணீரை அடக்கவே முடியவில்லை. என் வாழ்நாளில் எவருமே எனக்கு பரிந்து சோறிட்டதில்லை. ஆழாக்கு அரிசியைக் கஞ்சி வைக்கும் அம்மாவுக்கு அந்த கடுகடுப்பும் வசைகளும் சாபங்களும் இல்லாவிட்டால் எல்லாருக்கும் பங்கு வைக்கவே முடியாது. நான் நிறைந்து சாப்பிடவேண்டும் என எண்ணும் முதல் மனிதர். எனக்கு கணக்கு பார்க்காமல் சாப்பாடு போடும் முதல் கை. அன்னமிட்ட கை என்கிறார்களே, அந்திமக் கணம் வரை நெஞ்சில் நிற்கும் அன்னையின் கை என்கிறார்களே. தாயத்துகட்டிய மணிக்கட்டும், தடித்து காய்த்த விரல்களும் ,மயிரடர்ந்த முழங்கையும் கொண்ட இந்த கரடிக்கரமல்லவா என் தாயின் கை? அதன்பின் நான் கெத்தேல் சாகிப்புக்கு பணமே கொடுத்ததில்லை. செலவென நினைத்து கொடுக்காமலிருக்கவில்லை என்று என் நெஞ்சை தொட்டுச் சொல்ல முடியும். அது என் அம்மாவின் சோறு என்பதனால்தான் கொடுக்கவில்லை. ஒன்றிரண்டல்ல முழுசாக ஐந்து வருடம் ஒரு பைசா கூட கொடுத்ததில்லை.
தினமும் ஒருவேளை அங்கே சாப்பிடுவேன். மாலை அல்லது மதியம். அதுவே எனக்கு போதுமானதாக இருந்தது. மேற்கொண்டு ஒரு நான்கு இட்லி போதும். என் கைகால்கள் உரம் வைத்தன. கன்னம் பளபளத்தது. மீசை தடித்தது. குரல் கனத்தது. நடையில் மிடுக்கும் பேச்சில் கண்டிப்பும் சிரிப்பில் தன்னம்பிக்கையும் வந்தன. கடையில் என் இடம் கிட்டத்தட்ட மானேஜருக்கு நிகரானதாக ஆகியது. சரக்குகளை வரவு வைத்து தேவைக்கு ஏற்ப எடுத்து கொடுப்பது முழுக்க என்பொறுப்புதான். படிப்புச்செலவுபோக ஊருக்கும் மாதம் தோறும் பணம் அனுப்பினேன். நான் பீஏ யை முதல்வகுப்பில் முதலிடத்தில் வென்றபின் யூனிவர்சிட்டி கல்லூரியிலேயே எம்ஏ படிக்கச் சேர்ந்தேன். சாலையில் அருணாச்சலம்நாடார் கடைமேல் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டேன். ஒரு நல்ல சைக்கிள் வாங்கிக்கொண்டேன்.
ஒவ்வொரு நாளும் கெத்தேல் சாகிப்பின் கையால் சாப்பிட்டேன். மெதுவாக பேச்சு குறைந்து அவர் என்னை பார்க்கிறாரா என்ற சந்தேகம்கூட வர ஆரம்பித்தது. ஆனால் என் இலைமேல் அவரது கனத்த கைகள் உணவுடன் நீளும்போது தெரியும் அது அன்பே உருவான அம்மாவின் கை என்று. நான் அவர் மடியில் பிறந்து அவரிடம் முலையுண்டவன் என்று. தம்பி சந்திரன் பதினொன்று முடித்துவிட்டு டிரைவிங் லைசன்ஸ் எடுத்து அரசு போக்குவரத்துக் கழகத்தில் சேர்ந்தபோது வீட்டுக் கஷ்டம் குறைந்தது. நான் அவ்வப்போது வீட்டுக்குப் போவேன். அம்மா நல்ல அரிசி வாங்கி மீன்குழம்பு வைத்து அவளே பரிமாறுவாள். ஆனால் எத்தனையோ காலமாக நீண்டு நின்ற வறுமை. அவளுக்கு பரிமாறத்தெரியாது. ஒரு கண் எப்போதும் பானையில் இருக்கும் சோறையும் சட்டியில் இருக்கும் குழம்பையும் கணக்குபோடுவதை தவிர்க்க தெரியாது. அகப்பையில் அவள் சோறோ குழம்போ அள்ளினால் அரைவாசி திரும்ப கொட்டிவிடுவாள். இன்னும் கொஞ்சம் குழம்பு என்றால் அவளுடைய அகப்பை சில சொட்டுகள் தான் அள்ளும். கையோ மனமோ குறுகிவிட்டது. சாளைப்புளிமுளமும் சம்பா அரிசி சோறும் அவள் அள்ளி வைக்கையில் நான் நாலாவது உருண்டைச் சோறில் வயிறு அடைத்த உணர்வை அடைவேன். அந்த சோற்றை அள்ளி வாயில் போடுவதே சலிப்பாக தெரியும். பலவீனமாக ’சாப்பிடுடா’ என்பாள் அம்மா. தலையசைத்து முகம் கழுவிக்கொள்வேன்.
எம்.ஏ யில் பல்கலைக்கழகத்தில் இரண்டாமிடத்தில் வந்தேன். உடனே அதே யூனிவர்சிட்டி கல்லூரியில் விரிவுரையாளராக வேலை கிடைத்தது. ஆணை கைக்கு வந்த அன்று மதியம் நேராக கெத்தேல் சாகிப் கடைக்குத்தான் போனேன். கடை திறக்கவில்லை. நான் பின்பக்கம் சென்றேன். சாக்குப்படுதாவை விலக்கிப் பார்த்தேன். பெரிய உருளியில் கெத்தேல்சாகிப் மீன்குழம்பை கிண்டிக்கொண்டிருந்தார். முகமும் கைகளும் சிந்தனையும் எல்லாம் குழம்பில் இருந்தன. அது ஒரு தொழுகை போல. அவரை கூப்பிடுவது சரியல்ல என்று தோன்றியது. திரும்பி விட்டேன். மதியம் கெத்தேல் சாகிப் என் இலைக்கு சோறு போடும்போது நிமிர்ந்து அவர் முகத்தைப்பார்த்தேன். அதில் எனக்கான எந்த பார்வையும் இல்லை. சொல்லவேண்டாம் என்று தோன்றியது. அந்தச் செய்திக்கு அவரிடம் எந்த அர்த்தமும் இல்லை.
சாயங்காலம் ஊருக்குச் சென்றேன். அம்மா மகிழ்ச்சி அடைந்தாளா என்றே தெரியவில்லை. எதையும் கவலையாகவே காட்டும் முக அமைப்பு அவளுக்கு. அப்பா மட்டும் ‘என்னடா குடுப்பான்?’ என்றார். ‘அது கெடைக்கும்…’ என்றேன் சாதாரணமாக. ‘ என்ன, எரநூறு குடுப்பானா?’ என்றார் . நான் அந்த கேள்வியில் இருந்த அற்பத்தனம் மிக்க குமாஸ்தாவைக் கண்டுகொண்டு சீண்டப்பட்டேன்.’ அலவன்ஸோட சேத்து எழுநூறு ரூபா…’ என்றேன். அப்பாவின் கண்களில் ஒரு கணம் மின்னி மறைந்த வன்மத்தை இறுதிக்கணம் வரை மறக்கமுடியாது. மாதம் இருபது ரூபாய்க்குமேல் சம்பளமே வாங்காமல் ஓய்வுபெற்றவர் அவர். தம்பிதான் உண்மையான உற்சாகத்துடன் துள்ளினான். ‘நீ இங்கிலீஷிலேதானே கிளாஸ் எடுக்கணும்…உனக்கு அப்டீன்னா நல்லா இங்கிலீஷ் பேசத்தெரியும் இல்ல? துரை மாதிரி பேசுவே இல்ல?’ என்று ததும்பிக்கொண்டே இருந்தான். அம்மா கோபத்துடன் ‘துள்ளுறது சரி, உள்ள பணத்தை சேத்து கீழ உள்ள கொமருகளை கரையேத்துற வழியப்பாருங்க’ என்றாள்.
தார்மிகமான ஒரு காரணத்தை கண்டுகொண்டபின் அவளுடைய ஆங்காரம் அவ்வழியாக வெளிவர ஆரம்பித்தது. ‘துள்ளினவள்லாம் எங்க கெடக்கான்னு கண்டேல்ல? தாழக்குடிக்காரிய அன்னைக்கு சம்முவம் கல்யாணத்திலே பாத்தேன். பூஞ்சம்புடிச்ச கருவாடு கணக்காட்டுல்லா இருந்தா…என்னா ஆட்டம் ஆடினா பாவி…சாமி நிண்ணு குடுக்கும்லா?’ என்றாள். ’ஏட்டி, நீ என்ன பேசுகே? இந்நா நிக்கானே உனக்க மவன், அவ போட்ட சோத்திலேல்லா படிச்சு ஆளானான்? நண்ணி வேணும் பாத்துக்க. நண்ணி வேணும்…’ என்றார் அப்பா. ‘என்ன நண்ணி? இம்பிடு சோறும் கொளம்பும் போட்டா. அதுக்கு உள்ளத கணக்கு போட்டு அவ மூஞ்சியிலே விட்டெறிஞ்சா போருமே…இல்லேண்ணா நாளைக்குப்பின்ன வேற கணக்கோட வந்து நிப்பா வாசலிலே, எளவெடுத்த சிறுக்கி’ அம்ம சொன்னாள் . அப்பா ‘சீ ஊத்த வாய மூடுடீ’ என்று சீறி எழ சண்டை எழுந்தது
மறுநாள் தாழக்குடிக்குப் போனேன். மாமா இறந்து இரண்டு வருடங்களாகிவிட்டிருந்தது. திடீரென்று ஒரு காய்ச்சல். நான்தான் ஆஸ்பத்திரியில் கூடவே இருந்தேன். ஈறில் ஏற்பட்ட காயம் வழி இதயம் வரை பாக்டீரியா சென்று விட்டது. மூன்றாம்நாள் இரவில் போய்விட்டார். காடாத்து முடிந்து அச்சகக் கணக்குகளைப்பார்த்தோம். இரண்டாயிரம் ரூபாய் வரை கடன் இருந்தது. கட்டிட உரிமையாளர் அச்சகத்தை காலிசெய்யவேண்டும் என்று சொன்னார். இயந்திரங்களை விற்று கடனை அடைத்தபின் மாமி எஞ்சிய மூவாயிரம் ரூபாய் பணத்துடன் தாழக்குடிக்கே வந்துவிட்டாள். அவள் வீட்டு பங்குக்கு கொஞ்சம் நிலம் இருந்தது. ஒரு வீட்டை ஒத்திக்கு எடுத்துக் கொண்டாள். ராமலட்சுமி பதினொன்றுக்கு மேல் படிக்கவில்லை. சின்னவள் எட்டாம் வகுப்பு. மாமி ஆடிப்போய்விட்டாள். நாள்செல்ல நாள்செல்ல பணம் கரைந்து அந்த பீதி முகத்தில் படிந்து அவள் மெலிந்து வறண்டு நிழல்போல ஆவதைக் கண்டேன். ஊருக்கு வரும்போது சென்று பார்த்து மரியாதைக்காக கொஞ்சம் பேசிவிட்டு மேஜையில் ஒரு பத்து ரூபாய் வைத்துவிட்டு வருவேன்.
வீட்டில் மாமி இல்லை. ராமலட்சுமி மட்டும்தான் இருந்தாள். அவளும் கொஞ்சம் புகைபடிந்ததுபோலத்தான் இருந்தாள். ஒரு அங்கணமும் திண்ணையும் சமையல்சாய்ப்பும் மட்டும்தான் வீடு. சுருட்டப்பட்ட பாய்கள் கொடியில் தொங்கின. தரை சாணிமெழுகப்பட்டிருந்தது. சிறிய மேஜை மேல் ராணிமுத்து நாவல். ராமலட்சுமி கொல்லைப்பக்கம் வழியாக வெளியே போய் பக்கத்துவீட்டில் இருந்து சீனியோ டீத்தூளோ வாங்கி வந்து எனக்கு கறுப்புடீ போட்டுக்கொடுத்தாள். மேஜை மேல் டம்ளரை வைத்துவிட்டு கதவருகே சென்று பாதி உடல் மறைய நின்றுகொண்டாள். நான் அவள் வகிடை மட்டும்தான் பார்த்தேன். அவள் சூட்டிகையான பெண். ஆனால் கணக்கு மட்டும் வரவே வராது. திருவனந்தபுரத்தில் அவளுக்கு கூட்டு வட்டியை மட்டும் நான் இருபதுநாளுக்குமேல் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். என்ன பேசுவதென்று தெரியவில்லை. அவள் வேறு யாரோ ஆக இருந்தாள்.
பத்து நிமிடம் கழித்து எழுந்துகொண்டேன். ‘வாறேன்’ என்றேன். ‘அம்மை வந்திருவா’ என்றாள் மெல்லிய குரலில். ‘இல்ல வாறேன்…’ என்றபின் மேஜையில் ஒரு ஐம்பது ரூபாய் தாளை எடுத்து வைத்துவிட்டு வெளியே வந்தேன். ஊடுவழியில் நடக்கும்போது எதிரே மாமி வருவதைக் கண்டேன். அழுக்கு சேலையை சும்மாடாக சுற்றி வைத்து அதில் ஒரு நார்ப்பெட்டியை வைத்திருந்தாள். என்னை சாதாரணமாக பார்த்து அரைக்கணம் கழித்தே புரிந்துகொண்டாள். ‘அய்யோ மக்கா’ என்றாள். பெட்டியை நான் பிடித்து இறக்கி வைத்தேன். அதில் தவிடு இருந்தது. எங்கோ கூலிக்கு நெல்குற்ற போகிறாள். தவிடுதான் கூலி. அதை விற்கக் கொண்டுபோகிறாள் போல.‘வீட்டுக்கு வா மக்கா’ என்று கையை பிடித்தாள். ‘இல்ல. நான் போகணும். இண்ணைக்கே திருவனந்தபுரம் போறேன்…’ என்றபின் ‘வேல கெடைச்சிருக்கு…காலேஜிலே’ என்றேன். அவளுக்கு அது சரியாக புரியவில்லை. வறுமை மூளையை உரசி உரசி மழுங்கடித்துவிடுகிறது.
சட்டென்று புரிந்துகொண்டு ‘அய்யோ…என் மக்கா.. நல்லா இரு…நல்லா இருடே’ என்று என் கையை மீண்டும் பற்றிக்கொண்டாள். ‘உனக்கொரு வேலை கிடைச்சபிறவு கேக்கலாம்னு இருந்தேன். கேக்க எனக்கு நாதியில்லே மக்கா. இந்நான்னு தர என் கையிலே கால்சக்கரம் இல்லை. பாத்தியா, கண்டவனுக்கு நெல்லுக்குத்தி குடுத்து கஞ்சிகுடிக்கிறோம்… தவிடு விக்கலேன்னா அந்திப்பசிக்கு பச்சத்தவிடையாக்கும் திங்கிறது மக்கா…ஆனா நல்ல காலத்திலே நான் உனக்கு சோறு போட்டிருக்கேன். என் கையாலே கஞ்சியும் பற்றும் குடிச்சுத்தான் நீ ஆளானே. எட்டுமாசம் தினம் ரெண்டு வேளைன்னாக்கூட அஞ்ஞூறு வேளை நான் உனக்கு சோறும் கறியும் வெளம்பியிருக்கேன் பாத்துக்கோ. அதெல்லாம் உனக்க அம்மைக்கு இப்ப தெரியாது. அந்த நண்ணி அவளுக்கில்லேண்ணாலும் உனக்கிருக்கும்… மக்கா ராமலெச்சுமிக்கு உன்னை விட்டா ஆருமில்லே. சவத்துக்கு ராத்திரியும் பகலும் உனக்க நினைப்பாக்கும்…அவளுக்கு ஒரு சீவிதம் குடு ராசா…திண்ண சோத்துக்கு நண்ணி காட்டேல்லேண்ணா அதுக்குண்டான கணக்க நீ சென்மசென்மாந்தரமா தீக்கணும் பாத்துக்கோ’
அவளிடம் விடைபெற்று பஸ்ஸில் ஏறியபோது வேப்பங்காய் உதட்டில் பட்டது போலக் கசந்தது. வாயே கசப்பது போல பஸ்ஸில் இருந்து துப்பிக்கொண்டே வந்தேன். நேராகத் திருவனந்தபுரம் வந்தேன். வேலைக்குச் சேர்ந்து அந்த புதிய பொறுப்பின் பரபரப்பிலும் மிதப்பிலும் மூழ்காமல் இருந்திருந்தால் அந்தக்கசப்பை உடம்பெங்கும் நிறைத்து வைத்திருப்பேன். முதல்மாதச் சம்பளம் வாங்கியதும் அம்மாவுக்குப் பணம் அனுப்பியிருந்தேன். அம்மா பதில் கடிதத்தில் ’சுப்பம்மா வந்து உன் அப்பாகிட்டே பேசியிருக்காள். உங்க அப்பாவுக்கும் அரை மனசுதான். அது நமக்கு வேண்டாம் கேட்டியா? அவங்க செய்ததுக்கு நூறோ ஆயிரமோ அந்தக்குட்டி கல்யாணத்துக்கு குடுத்திருவோம். நாம யாருக்கும் சோத்துக்கடன் வச்சமாதிரி வேண்டாம். இப்பம் நல்ல எடங்களிலே கேக்கிறாங்க. நல்லாச் செய்வாங்க. பூதப்பாண்டியிலே இருந்து ஒரு தரம் வந்திருக்கு. பாக்கட்டுமா’ என்று கேட்டிருந்தாள். இரவெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன். சலித்துப்போய் தூங்கிவிட்டேன். காலையில் மனம் தெளிவாக இருந்தது. அம்மாவுக்கு ‘பாரு. பொண்ணு கொஞ்சம் படிச்சவளா இருக்கணும்’ என்று எழுதிப் போட்டேன்.
முதல் மாதமே கேண்டீன் சாமிநாத அய்யர் நடத்திய இருபதாயிரம் ரூபாய் சீட்டு ஒன்றில் சேர்ந்திருந்தேன். மாதம் ஐநூறு ரூபாய் தவணை வரும். அதை நாலாயிரம் ரூபாய் தள்ளி ஏலத்தில் எடுத்தேன். பதினாறாயிரம் ரூபாய் மொத்தமாக மாத்ருபூமி நாளிதழ்தாளில் சுருட்டி கையில் கொடுத்துவிட்டார். எல்லாமே நூறு ரூபாய்க்கட்டுகள். அத்தனை பணத்தை நான் என் கையால் தொட்டதில்லை. ஒருவிதமான திகில் கைகளைக் கூச வைத்தது. அறையில் கொண்டு வந்து வைத்து அந்த நோட்டுக்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். இத்தனை பணத்தை என் கையால் நான் சம்பாதிப்பேன் என எப்போதும் எண்ணியதில்லை. அதைவைத்து திருவனந்தபுரத்தில் புறநகரில் ஒரு சிறிய வீட்டைக்கூட வாங்கிவிடமுடியும். கொஞ்ச நேரத்தில் அந்தப்பணம் என் கைக்கும் மனதுக்கும் பழகிப்போன விந்தையை நினைத்துப் புன்னகைத்துக்கொண்டேன்.
மதிய நேரம் கெத்தேல் சாகிப் கடைக்குப்போனேன். கடை திறந்ததும் உள்ளே சென்று உண்டியலில் பணத்தை போட ஆரம்பித்தேன். பெட்டி நிறைந்ததும் கெத்தேல் சாகிபிடம் வேறு பெட்டி கேட்டேன் .’டா அமீதே பெட்டி மாற்றெடா’ என்றார். பையன் பெட்டியை மாற்றிவைத்ததும் மீண்டும் போட்டேன். மொத்தப்பணத்தையும் போட்டபின் கைகழுவிவிட்டு வந்து அமர்ந்தேன். கெத்தேல் சாகிப் இலைபோட்டு எனக்குபிரியமான கொஞ்சு பொரியலை வைத்தார். சோறு போட்டு குழம்பு ஊற்றினார். அவரிடம் எந்த மாறுதலும் இருக்காதென்று எனக்கு நன்றாக தெரிந்திருந்தது. ஒரு சொல் இல்லை. அப்பால் இரு பையன்கள் ஒண்டியது போல அமர்ந்திருந்தார்கள். வெளிறிய நாயர் பையன்கள். சத்தற்ற பூசணம்பூத்த சருமம். வெளுத்த கண்கள். கெத்தேல் சாகிப் அள்ளி வைத்த கறியை முட்டி முட்டி தின்றுகொண்டிருந்தார்கள். கெத்தேல் சாகிப் இன்னொரு துண்டு கறியை ஒருவனுக்கு வைக்க அவன் ‘அய்யோ வேண்டா’ என்று எழுந்தே விட்டான். கெத்தேல் சாகிப் ‘தின்னுடா எரப்பாளிடே மோனே’ என்று அவன் மண்டையில் ஓர் அடி போட்டார். பலமான அடி அவன் பயந்து அப்படியே அமர்ந்துவிட்டான். கண்ணில் காரத்தூள் விழுந்ததோ என்னவோ, அழுதுகொண்டே சாப்பிட்டான்.
கெத்தேல் சாகிப் மாறி மாறி கோழியும் குழம்பும் மீனும் கொஞ்சுமாக பரிமாறிக்கொண்டிருந்தார். நான் எதிர்பார்த்தது அவரது கண்களின் ஒரு பார்வையை. நானும் ஒரு ஆளாகிவிட்டேன் என்று என் தாய்க்கு தெரியவேண்டாமா இல்லையா? அனால் அவரது கண்கள் வழக்கம்போல என்னை சந்திக்கவேயில்லை. மீண்டும் மீன்கொண்டுவைக்கும்போது கனத்த கரடிக்கரங்களைப் பார்த்தேன். அவை மட்டும்தான் எனக்குரியவைபோல. அவை என் வயிற்றை மட்டுமே அளவெடுக்கும்போல.
அன்று ஊருக்கு கிளம்பிச்சென்றேன். ராமலட்சுமியை அடுத்த ஆவணியில் திருமணம்செய்து கூட்டிவந்தேன்.