«

»


Print this Post

வாழ்நீர் – கடலூர் சீனு


நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு. சாது நிகமானந்தா குறித்த நூல்- வாங்க

 

நீர் நெருப்பு – ஒரு பயணம்

 

 

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து 

உள்நின்று உடற்றும் பசி.

 

வள்ளுவர்.

 

 

சில வாரம் முன்பு சிவகாசியில் குலதெய்வம் கோவில் கொடைக்கு சென்றிருந்தோம். விடுதியின் குளிர்பதன  அறைக்குள் நுழைந்த கணம், ஆரோ ஏழோ படிக்கும் தம்பிமகன் குளியலறைக்கு  ஓடிச் சென்று, உள்ளே குழாயை அருவியாக திறந்து விட்டு நீரினடியில் நின்றான் . குளிர் நிலத்தில் பிறந்து வளர்ந்தவன் இந்த துவக்க வெயிலுக்கே துவண்டுவிட்டான். தண்ணீர் கொட்டும் ஓசை கேட்ட மறு கணம் வெளியிலிருந்த்து அவன் அம்மா குரல் கொடுத்தாள்.

 

”தம்பி இது நம்ம ஊரு மாதிரி கிடையாது. நீ குளிக்கிற தண்ணி இங்க பத்து பேருக்கு குடிக்கிற தண்ணி. புரிஞ்சிக்கோ சீக்கிரம் வெளிய வா”

 

அவனுக்கு புரிந்ததோ, அல்லது இயல்பான கீழ் படிதலோ நீர் கொட்டுவதை உடனே நிறுத்தி விட்டான்.  புவனமெங்கும் நீர்  பெண்களின் பாடுகளுடன் இரண்டறக் கலந்து கிடக்கிறது. [இங்கே அசோகமித்திரன் நினைவு இயல்பாகவே எழுகிறது].சாத்தூர் கோவில்பட்டி இன்று முற்றிலும் நிலத்தடி  நீர் இழந்து போன பகுதிகள் என தமிழ் நிலத்தில் எத்தனை பேர் அறிவார்கள் ?

 

தமிழ் நிலத்தில் குறைந்துகொண்டே வரும் நிலத்தடி நீருக்கு இணையான சிக்கல் நீர் மாசுபாடு. மாசுபட்ட நீர் என்பது குடிக்க,பாசனம்,மறு சுழற்சி என எதற்குமே பயன்படாது. திருப்பூர் அருகே ஒரத்தப்பாளையம் சென்றால் அதன் சாட்சியத்தை காணலாம். இந்த உலகின் மொத்த நீரில் பத்து சதமானம் மட்டுமே நன்னீர்.  அதில் பத்து சதமானம் மட்டுமே உலக உயிர்கள் அனைத்தும் பயன்படுத்தும் வகையில் கிடைக்கும் நீர் என்கிறது ஒரு புவியியல் துணிபு.

 

உலக உயிர் மொத்தமும் துய்க்கும் நீரளவில் பாரத நிலம் கொண்ட நீரளவு எவ்வளவு? அதில் தமிழ் நிலம் கொண்ட அளவு எவ்வளவு என கணக்கிட்டால் இங்கே இன்று தமிழ் நிலத்தின் மக்கள் தொகைக்கு ஒப்பிட்ட ஒவ்வொரு சொட்டு குடிநீரும் எவ்வளவு முக்கியம் என்பது சற்றேனும் விளங்கும்.  பத்து பேருக்காக எஞ்சி நிற்கும் இந்த கையளவு நீரில்தான் இன்று விஷம் கலந்திருக்கிறோம் என்பதற்கு ஒரத்தப்பாளையம் சாட்சி. பல்லாயிரம் கோடி அந்நிய நிதி ஈட்டித் தரும் பின்னலாடைத் தொழில் என பெருமிதம் பேசுவது விடுத்து,எதை கொடுத்து எதை வாங்குகிறோம் என ஒரு கணம் அவதானித்தால் அதிர்ச்சியாகிப் போவோம்.

 

லண்டனை சேர்ந்த புவியியலாளர் தோனி ஆலன் விர்சுவல் வாட்டர் எனும் கருதுகோளை இரண்டாயிரத்து எட்டில் சர்வதேச அரங்குகளில் முன்வைத்து  அதன்படி உலகநாடுகள் பலவும் இப்போது கைக்கொள்ளும்  முக்கியமான பொருளாதார சீரமைப்பு நடவடிக்கை ஒன்றுக்கு அடித்தளமிட்டார். அவரது கருதுகோளினை சுருங்க உரைப்பின் இவ்வாறு சொல்லலாம். நீங்கள் உண்ணும் ஒரே ஒரு தக்காளி உருவாகி வர, இருபது காலன் தண்ணீர் தேவை. எனவே நீங்கள் இப்போது உண்பது ஒரே ஒரு தக்காளி மட்டுமல்ல,இருபது லிட்டர் நிலத்தடி நீரையும்தான்.

 

ஆக ஒரு புத்திசாலி நாடு என்ன செய்யும்? தக்காளியை இறக்குமதி செய்வதன் வழியே,தனது நாட்டின் நிலத்தடி நீரை காப்பற்றிக் கொள்ளும். பாரதம் போன்ற புத்தி குறைந்த தேசம் என்ன செய்யும்? உலகிலேயே தக்காளி ஏற்றுமதியில் முதலிடம் நாங்களே என மார்தட்டும். தக்காளி ஒரு எளிய உதாரணம் மட்டுமே. இதே அலகை திருப்பூருக்குப் போட்டுப் பார்த்தால், ஒரு பனியன் அந்த வடிவத்தை அடையும் வரை அது கொள்ளும் நீரின் அளவு ஐந்தாயிரம் காலன். உபரியாக கழிவாக வெளியேறும் வண்ணக் கலவை நீர், எஞ்சி உள்ள குடி நீரில் கலந்து,அதையும் பயன்படுத்த இயலா நிலைக்கு உருமாற்றும். அதன் தோற்றமே ஒரத்தப்பாளையம்.

 

ஆப்ரிக்காவின் பல பகுதி இந்த விர்சுவல் வாட்டர் ஏற்றுமதியில் தனது நீராதாரத்தை இழந்து, பூஜ்ய நிலை பிரகடனம் எனும் நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை பல சூழலியல் கட்டுரைகள் தெரிவிக்கிறது. அந்த பட்டியலில் பாரதமும் சேரும் நிலை,மிக வேகமாக நமது அறியாமையாலும், அரசாங்கத்தின் திராணி இன்மையாலும், வணிகப் பேராசையாலும், உருவாகிக்கொண்டு இருக்கிறது.

 

இந்நிலைக்கு எதிரான மௌன முழக்கமொன்று,இமயத்தின் அடிவாரத்தில்,கங்கைத் தீரத்தில் எழுந்திருக்கிறது. அதை எழுப்பியவர் பெயர் சாது நிகமானந்தா. சிவானந்தா சரஸ்வதி குரு அவர்களின், ஹரித்துவார் மாத்ரி சதன் ஆசிரமத்தின் துறவி அவர்.  அரசாங்கத்தாலும் நீதியமைப்பாலும் பெரிதாக கண்டு கொள்ளப்படாத, கங்கைப் படுகை ஆதாரங்கள் கொள்ளையடிக்கப்படுவதை [மணலுக்கு மாற்றாக கேட்பாரற்ற  கங்கைப் படுகை கற்கள் கொள்ளையடிக்கப்பட்டு  அரைத்து விற்கப்டுவதை போல]   எதிர்த்து கடந்த கால் நூற்றாண்டாக போராடி வரும் ஆசிரமத் துறவியர் வரிசையின் ஒரு கண்ணி நிகமானதா.

 

நிகமானந்தா, ஜி டி அகர்வால், இதை எழுதும் இக்கணம் போராடிக்கொண்டிருக்கும் ஆத்மா போனாந்த் போன்ற துறவியர் நிறையையும், அவர்கள் வாழ்க்கை குறிப்பையும்,அவர்கள் அங்கு வந்து சேர்ந்த கதையையும், அவர்களின் மாத்ரி சதன் ஆசிரமத்தையும்,அவர்களின் போராட்டம் குறி வைக்கும் மையத்யும், அவர்கள் எதிர்கொள்ளும் இடரையும் குறித்த சிற்றறிமுகம் ஒன்றை அளிக்கிறது, ஸ்டாலின் பாலுச்சாமி எழுதி, குக்கூ குழந்தைகள் வெளி வெளியீடான நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு . எனும் குறுங் கட்டுரை நூல்.

 

வேதகாலம் துவங்கி இன்று வரை, இந்துப் பண்பாட்டில் நீர் வகிக்கும் பங்கு வலிமையானது. நீர் எனும் குறியீட்டை மட்டும் நீக்கிவிட்டால் இந்துப் பண்பாட்டின் ஆழமே கூட  இல்லாமல் போய்விடும் என்று கூட சொல்லிவிட முடியும்.  சோழமண்டலத்தின் பெரும்பாலான கோவில்களின் ராஜ கோபுரத்தின் வாயிலில் இருமருங்கும் நின்று வரவேற்பவர்கள் கங்கை யமுனை அன்னையர். இந்தியக் களத்தின் அனைத்து அலகுகளிலும் கலந்திருக்கும் கங்கை,தன்னைத் தான் புனர் நிர்மாணம் செய்துகொள்ளும், இயற்கைக் கட்டமைப்பை ரசாயனங்களின் கலப்பால், இழந்து, அதன் படுகை வெளி   கொள்ளை போவதை, பொது சமூக இருளுக்குள் மறைந்து போகும் இதை  வெளிச்சமிட, தடுக்க இந்தத் துறவியர் கைக்கொண்ட ஆயுதம் சத்தியாக் கிரகம். உணவை ஒழித்து உடலை ஒடுக்கி உயிரைக் கரைத்துக் கொள்வது.

 

அரசதிகாரம், சட்டப்போராட்டம், உள்ளிட்ட அனைத்தும் கைவிட்ட நிலையில், இந்த விழிப்புணர்வை பொது மனதில் தூண்டும் வகையில்  நிகமானந்தா இந்தப் போராட்டத்தை கைக்கொண்டார்.  பல நாள் தொடர் உண்ணாவிரதம் வழியே உயிர் துறந்தார். அவர் உயிர் துறந்த கணம் அந்தப் போராட்டத் தழலை அடுத்த துறவி மேற்கொண்டார், அவருக்குப் பின் ஜி டி அகர்வால் அந்த ஜோதியை எடுத்துக்கொண்டு முன்சென்றார். அவர் உயிர் பிரிந்த அக்கணமே அந்த ஆசிரமத்தின் அடுத்த துறவி இருபத்தி ஐந்து வயதே நிரம்பிய ஆத்மா போனாந்த் உண்ணாவிரதத்தில் அமர்ந்து விட்டார்.

 

இந்து மதக் காவலர், பாரத நிலத்தின் எவ்வுயிர்க்கும் ரட்சகன், கங்கைக் கரையில் மக்கள் மத்தியில், தான் எழுதி இயக்கிய நாடகத்தில், கங்கைக் கரையை தூய்மை செய்த பணியாளர்கள் காலை கழுவி பூஜை செய்யும் பாரதப் பிரதமராக நடித்துக் கொண்டிருந்த அந்த நாள், ஆத்மபோனாந்த் தனது உண்ணா நிலையின்  நூறாவது நாளில் இருந்தார். இதை எழுதிக்கொண்டிருக்கும் இக் கணம், இந்த நாள் அவர் உயிர் ? நானறியேன்.

இந்தச் சிறுநூலில் கண்டிருத்த தகவல் ஒன்றினை பின்தொடர்ந்து, இந்தக் காணொளியை வந்தடைந்தேன். லிசா சபினா இயக்கிய சத்யாக்ரகம் உண்மையின் ஆற்றல் எனும் இந்த ஆவணப் படம், கங்கைக் கரை சூழலையும், மாத்ரி சதன் ஆசிரமத்தையும், அதன் செயல்பாடுகளையும்,நிகமானந்தா அவர்களின் உண்ணா நோன்பு நிலையின் இறுதிப் பேட்டியும் சில நாட்கள் உடனிருந்து பதிவு செய்திருக்கிறது.

 

ஆசிரமவாசிகள்  சாதுக்கள் மீது அறிமுகமற்றோர் நிகழ்த்தும் தாக்குதல் படமாக்கப் பட்டிருக்கிறது. உண்ணா நோன்பிருந்து சக்தியற்று படுத்திருக்கும் நிகமானந்தா தலைமாட்டில் அவரது  குரு அமர்ந்திருக்கும்  சித்திரம் ….எந்த உணர்வு கொந்தளிப்பும் இன்றி, தன்னை தனது உயிரை அம்பென்றாக்கி செலுத்தும் சீடன். அவர் அருகே அவரது குரு. தெரியவில்லை…நாளையே எதுவும் மாறலாம், அந்த ஆசிரமத் துறவியர் எந்த அந்நிய நாட்டின் கைக் கூலிகள் என்று புலனறிந்து கட்டுரை மழை பொழிய நேரலாம்.அனைத்துக்கும் வெளியே அழியா உண்மையென அவர்களின் உயிர்த் தியாகம்.

 

வரலாற்றில் காந்தி போன்றோர் ஒரு புறம். சென்றவாரம் திருமலையில் ஒரு சமணத் துறவி உண்ணா நோன்பு வழியே தனது வாழ்வை நிறைவு செய்தார். இவர்களைப் போன்றோர் மறுபுறம். திபெத் விடுதலை வேண்டி எரிந்தடங்கிய துறவியர் நிறை. இதற்க்கெல்லாம் என்ன பொருள் ? தெரியவில்லை. உயிரை சமர்பித்து இந்த நூலின் துறவியர் மன்றாடுகின்றனரா அல்லது எச்சரிக்கின்றனரா ? அறியேன்   இந்தச் சிறு நூல் பெண்கள் வசம் பரவ வேண்டும். அவர்கள் அறிவார்கள் இதன் பொருளை.  இரண்டு ஆக்சிஜன் மூலக் கூறும் ஒரு ஹைட்ரஜன் மூலக் கூறும் இணைந்தால் தண்ணீர் என மனனம் செய்து கொண்டிருக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கு, தான் உணர்ந்ததை அவர்கள் சொல்லித் தருவார்கள். நீரெல்லாம் கங்கை என்பது இந்தியத் தொல்வாக்கு. அந்த நீர் அணுவின் இரண்டு ஆக்சிஜன் கூறுகளில் ஒன்று, இத்தகு துறவியர் பிராண மூச்சால் ஆனது என்று அவர்கள் வழியே குழந்தைகள் புரிந்து கொள்வார்கள்.

 

இல்லம்தோரும், இல்லப் பெண்கள் கைகளில் சேர்ந்து ,அவர்களின் குழந்தைகளுக்கு சொல்லப்படவேண்டிய கதை இந்த நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு என்று வாழ்ந்து போன மனிதர்களின் கதை.

 

கடலூர் சீனு

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/119856/