அன்புள்ள ஜெ
சென்ற ராயப்பேட்டை புத்தக கண்காட்சியில் வாங்கிய மனைமாட்சி நாவலை சென்றமாதத்தில் ஒரு ரயில் பயணத்தில் தான் படித்து முடித்தேன். செம்பருத்தி மெர்க்குரிப்பூக்கள் வரிசையில் வைக்கவேண்டிய படைப்பு. திஜா பாலகுமாரன் வரிசையில் இந்த தலைமுறைக்கு இது எனத் தோன்றியது..
மொத்தம் மூன்று வகைகள். ஒவ்வொன்றிலும் இழையாக ஓடும் இரு கதைகள் என ஆறு கதைகள். அனைத்துமே கணவன் மனைவி என்ற ஒன்றில் பிண்ணப்பட்டிருக்கின்றன. ஆண்பெண் உறவுச் சிக்கல் என பொதுமைப்படுத்தலாகாது. கணவன் மனைவி என்கிற குறிப்பிட்ட உறவினிடையே அலைபாயும் கதைகள்
இவ்வுறவு என்பது ஏற்கனவே திரைப்படங்களில் இருவர் உள்ளம் முதல் ஓகே கண்மனி வரை பலகோணங்களில் அலசப்பட்ட கதைக்களம். வாசகனுக்கு அறிமுகமாகி பின் சலித்தும் போன ஒன்று. ஆகவே, இந்நாவல் தனக்குத் தெரிந்த ஒன்று என்று நம்பி உள்ளே செல்லும் வாசகனை ஏமாற்றி விளையாடுகிறது. இது சராசரி வாசகனை மனதில் வைத்து அவருக்கு ஒரு திருப்தியையோ ஆசுவாசத்தையோ அளிக்கக்கூடிய ஒரு திருப்புமுனைத் தருணமோ ஒரு உச்சகட்ட காட்சியோ வைத்து எழுதப்படவில்லை என்பதை நாவல் படித்து முடித்தவுடன்தான் உணரமுடிகிறது. அதில் ஆசிரியரின் பங்கும் உண்டு. நாவலின் வேகமான நடை முக்கியகாரணம் அது எதையும் யோசிக்கவிடுவதில்லை.
நீரின்றி அமையாது உலகு
சாந்தி — தேங்கி நிற்கும் ஆழமான மேட்டூர் அணை. உடைப்பெடுத்தால் யார் என்னவென பார்க்காமல் எக்கணமும் சீறிப்பாய்ந்துவிடும் ஆங்காரம்…
ராஜம் –> சாந்தமான மகாமக புண்ணிய தீர்த்தம்..
மதுமதி –> அலைபாய்ந்து சீறிப்பிரிந்து இறுதியில் கடல் சேரும் பூம்புகார் காவிரியின் சீற்றம்
மங்கை– ஆர்ப்பரிக்காத தாமிரவருணி.அரவணைத்துக்கொள்ளும் பாபநாசம்..உலகை உணர்ந்தறிந்த ஞானம்
விநோதினி:- தட்டுத்தடுமாறும் அமராவதியின் சஞ்சலம்
கலைவாணி :- ஊர் மக்கள் மீதான கருணையால் தானழுக்காகி கலங்கிநிற்கும் பவானி.
இவர்களனைவருக்கும் பொருந்திவரும் விஷயம் ஒன்றுதான். அனைவருமே பாசங்கு அற்றவர்கள். தன்னளவில் நேர்மையானவர்கள். ஒளிவுமறைவு அற்றவர்கள்.
சராசரியான பல பெண்கள் நாவலில் வருகிறார்கள். அவர்களுடன் ஒப்பிட்டே இவர்களை அறியமுடியும். காயத்ரி ரம்யா ஆகியோர்களைவிட சாந்தி எவ்வகையில் மேன்மையானவள்? மங்களா அங்கையற்கண்ணியைவிட ராஜம் எங்கு முக்கியபாத்திரமாகிறாள் என்பதை எண்ணிப்பார்த்தால் எளிதில் விளங்கும் ஒன்று இது..
இணையான நிகழ்வுகள் இருந்தாலும் ஜோதி மற்றும் லதாவை விட வாணி கதையே சொல்லவேண்டிய ஒன்று என ஆசிரியர் முடிவெடுப்பது ஏன் என்பதில் இருக்கிறது இது. அதுபோலத்தான் விநோதினி கதையும்.. இந்த ஆறுகதைகளில் எளிய ஒன்றாகவும் எளிதில் ஊகிக்கக்கூடிய ஒன்றாகவும் இருப்பது இதுதான்..காரணம் அந்தளவிற்கு பெரும்பான்மையான நலவிரும்பிகளால் சூழப்பட்ட அவளது உலகம்..
இரண்டாம் கதையில் வரும் மதுமதியின் அம்மாவின் வாழ்க்கை நாவலுக்கான இன்னும் சிறப்பான தருணங்களைக் கொண்டில்லாமல் இல்லை. இதனோடு இழைந்துவரும் மங்கையின் வாழ்வில் ஒருநாள் சந்திக்கும் அந்த விலைமாதுவும் அவள் மகளும் ( விலைச்சிறுமி?) கூட.. அதுதான் மங்கை ஞானமடையும் தருணமாக வருகிறது.. அனைவருக்கும் கேலிப்பொருளான மகாதேவனோடு அனுசரித்து அவளிருப்பது ஏன் என்பதற்கான விடை.
ஆண் பாத்திரங்களைப் பற்றியும் குறிப்பிடலாம்.. நாவலில் குரூரமோ கோபமோ கொண்ட ஆண்களே இல்லை. பெண்களை தங்களின் உடல் வலிமையால் எதிர்கொள்ளும் ஆண் என யாரும் இல்லை. மங்கையை கடத்திச்செல்லும் கடன்காரர்கள் உட்பட. நாவலில் முன்கோபி என பயங்காட்டப்படும் ரங்கநாதனுமே மங்கையின் தோளில் சாய்ந்து அழுகிறான்..இல்லறத்தில் கணவன் மனைவி மீது செலுத்தும் வன்முறை அல்லது புறக்கணிப்பு பற்றிய சித்தரிப்புகளும் இல்லை. சொல்லப்போனால் பாவம் ஆம்பளப்பையன இப்படி அடிக்கிறாளே..ஆணைக்கண்டால் பேயும் இரங்காதா..அப்பாவி மனுசன்.. எனும் அளவில் ஆகிவிடுகிறது நிலமை. விஜயசாந்தி படங்களில் வரும் நாயகர்கள்போல பாவப்பட்ட ஜீவன்களாக வந்து போகின்றனர்.
முழுக்க முழுக்க பெண்களே ஆடும் விளையாட்டாகத்தான் இது இருக்கிறது
கதை மாந்தர்கள் அனைவரும் ஒருவித நடுத்தர வர்கத்தினர் அல்லது மேல் நடுத்தரவர்கத்தினர். எது நடந்தாலும் பரவாயில்லை என்று நேரடி உணர்ச்சியை வெளிப்படுத்துபவர்களோ அல்லது அனைத்தையும் சமாளிக்கலாம் எனும் தைரியமோ அற்ற ஒரு நடுத்தரவர்க்க குழப்பவாதிகள். அதுவுமே அவர்களின் தயக்கமாக இருக்கலாம்.
ஆனால் அந்த ஆண்கள் யாரும் பெண்களளவிற்கு உண்மையானவர்களாகவும் இல்லை..அடிவாங்கும் தியாகுவின் மனதில் ரம்யா பற்றிய எண்ணம் உண்டா இல்லையா.. மகாதேவன் சாஸ்திரிகளிடம் இறுதியாக கேட்பது… கண்ணன் தனது லீலைகளை வாணியிடம் சொல்லாமல் மறைப்பது என. ஏன் அந்த சாஸ்திரியோ வியாசரோ என யாரையுமே சொல்லமுடியவில்லை. நாவல் முடிந்ததும் தன்னியல்புடன் வெளிப்படும் மகாதேவன் மட்டுமே ஆண்களில் நினைவில் நிற்கிறான்.
நாவலின் வர்ணனைகளையும் நடையையும் தனியாக குறிப்பிடவேண்டும். தியாகுவும் மகாதேவனும் ஆனந்தகுமாரும் அறிமுகமாகும் தருணங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
ஒரு வாசகனாக, நான் உணர்ந்த ஒரு மனத்தடை என்னவெனில்,
ஏற்கனவே சொன்னது போல, பலவகையில் நமக்கு அறிமுகமான தளம் என்பதால், மாலைமதி நாவல்களோ, விசுவோ கேபாலசந்தரோ அந்த 7 நாட்களோ அல்லது மெளனராகமோ இடைவந்து குழப்பக்கூடும்..அல்லது இப்படி நிகழக்கூடும் எனும் ஊகிப்பை அளிக்கக்கூடும்..அதைத்தாண்டித்தான் இதை அணுகவேண்டியிருக்கிறது. இப்பொழுதும் அது போன்ற ஒன்றை மீண்டும் படிக்கவியலாது. ஆனால் மனைமாட்சியை ஒரே மூச்சில் வாசிக்க முடிகிறதன் காரணமும் அதுதான்.
அறுநூறு பக்க நாவலை ஒருநாளில் வாசிக்க வைக்கும் நடையும், கதாபாத்திரங்களுக்கான இயல்புகளுமே, முக்கிய பாத்திரங்கள் -உப பாத்திரங்கள், நிலம் மற்றும் சூழல் பற்றிய வர்ணனைகளும் குறிப்புகளுமே இந்நாவலை அவற்றிலிருந்து உயர்த்துகின்றன. வேறுபடுத்துகின்றன.
பேசாப்பொருளை பேசத்துணிவது ஒரு தைரியமான முயற்சி. ஆனால் அதற்கும் மேல் தைரியம் மிக்க ஒன்று ஏற்கனவே பலர் பேசிய ஒன்றிலிருக்கும் விடுபட்ட ஒன்றை பேசுவது. இன்னும் நுணுக்கமாக ஆராய்வது. அந்தவகையில் மனைமாட்சி ஒரு முக்கியமான நாவலாக எழுந்து நிற்கிறது
அன்புடன்
R.காளிப்ரஸாத்