(மூலம்: ராமச்சந்திர குஹா. தமிழில்: பாலா)
தமிழக முதல்வரின் பொருளியல் ஆலோசனைக் குழுவில் இணைக்கப்பட்டுள்ள ஜீன் ட்ரெஸ் பற்றிய கட்டுரை. மறுபிரசுரம்.ராஞ்சியில் மிகப் புகழ்பெற கிரிக்கெட் வீரர் ஒருவர் வசிக்கிறார். அவர் முன்னோர்கள் உத்தாரக்கண்ட் மாநிலத்திலிருந்து புலம்பெயர்ந்து அங்கு வந்தவர்கள். அதே போல, ராஞ்சியில், புலம்பெயர்ந்து வந்த இன்னொரு மனிதரும் வசிக்கிறார். கிரிக்கெட் வீரரைப் போலவே, தன் துறையில் புகழ் பெற்ற மனிதர். அவரைப் போலவே ஒரு தனித்துவ சிந்தனை கொண்டவர். கிரிக்கெட்டர் தன் திறன் மூலம் கோடிக்கணக்கான இந்தியர்களை தொடர்ந்து மகிழ்வித்து வந்திருக்கிறார். இவரோ, கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்வாதாரத்தை மேம்பட வைத்திருக்கிறார். அவர்களை கொடிய வறுமையின் பிடியில் இருந்து மீட்டிருக்கிறார். இவர் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத்திட்ட உருவாக்குதலில் மிக முக்கிய பங்கு வகித்தவர். பின்னர், அதன் சட்ட வரைவை உருவாக்குதலிலும், அந்த திட்ட நிறைவேற்றத்தைத் தொடர்ந்து கண்காணித்தலிலும் பங்கு பெற்றவர். தகவலறியும் சட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் போன்ற சட்ட உருவாக்கங்களிலும் தன் பங்களிப்பைச் செய்தவர்.
ஃபிப்ரவரி மாதத் துவக்கத்தில், உளவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்ற ராஞ்சி சென்றிருந்தேன். எம்.எஸ்.தோனி ஊரில் இல்லை என எனக்குத் தெரியும். இருந்திருந்தாலும், நாங்களிருவரும் சந்தித்துப் பேசிக் கொள்ள அதிக விஷயங்கள் இல்லை. ஆனால், ராஞ்சியின் அந்த இன்னொரு முக்கிய மனிதரைச் சந்திக்க விரும்பினேன். முன்னெச்சரிக்கையாக, அவர் ராஞ்சியில் இருப்பதை உறுதி செய்து கொண்டு, அவரைப் பார்க்கச் சென்றேன். இருவருமே தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருப்பவர்கள். எம்.எஸ்.தோனி, தன் தொழிலுக்காக உலகமெலாம் விமானத்தில் பறக்கிறார். இவரும், தன் தொழிலுக்காக இந்தியாவெங்கும் பஸ்களிலும், ரயில்களிலும் பயணிக்கிறார். இரவுகளில், நல்ல விடுதிகளில் தங்காமல், கிராமக் குடிசைகளில் தங்கிக் கொள்கிறார்.
நான் ஜான் ட்ரெஸை இதற்கு முன்பு பலமுறை சந்தித்திருக்கிறேன். 1990 களின் துவக்கத்தில், முதன் முறை சந்தித்த போது, லண்டன் பொருளாதாரப் பள்ளியில் (London School of Economics) பயிற்றுவித்துக் கொண்டிருந்தார். தொழிலாளிகள் வாழும் பகுதியில், ஒரு வசிப்பிடத்தில் தங்கியிருந்தார். அடுத்த முறை, 90களின் இறுதியில் சந்தித்த போது, தில்லிப் பொருளாதாரப் பள்ளியில் (Delhi School of Economics) பயிற்றுவித்துக் கொண்டிருந்தார். தில்லியின், திமர்ப்பூர் என்னும் சேரியில் தங்கியிருந்தார். 2000 த்தின் துவக்கத்தில் மூன்றாவது முறையாக அவரை பெங்களூரில் சந்தித்தேன். சந்திப்பின் முடிவில், அவரை ரயில் நிலையம் கொண்டு விடச் சென்றேன். அங்கிருந்து, தமிழகச் சத்துணவுத் திட்டத்தைப் பற்றிய ஆய்வுக்காக, தமிழகத்தின் சிறு கிராமங்களுக்குப் பயணம் செல்வதாகத் திட்டமிட்டிருந்தார். இன்னொரு முறை, ஒரிஸ்ஸா ஆதிவாசிக் கிராமத்துக்குச் சென்றிருந்தேன். நான் அந்தக் கிராமத்தை அடைவதற்குக் கொஞ்சம் முன்னர்க் கிளம்பி, கால்நடையாகத் தன் ஒரு வாரப் பயணத்தைத் துவங்கியிருந்தார். ஒருமுறை, தில்லியில் எங்கள் சந்திப்பை ரத்து செய்துவிட்டு, ப்ரஸ்ஸல்ஸ் பறந்தார். அப்போது, அவர், இந்தியக் குடியுரிமையை பெறும் முயற்சியில் இருந்தார். இந்தியக் குடியுரிமை பெறும் சிரமங்களை விட, பெல்ஜியக் குடியுரிமையை ரத்து செய்ய, பெல்ஜிய அதிகாரிகளை ஒப்புக் கொள்ள வைப்பது, அவருக்கு அதிக சிரமமாக இருந்தது.
இதுபோன்ற அவ்வப்போதையச் சந்திப்புகளுக்கிடையே, நானும் அவரும் தொடர்ந்து சம்பாஷனையில் இருந்தோம். ஒருவர் மற்றவரின் எழுத்துக்களை படித்து, கருத்துக்களை, விமரிசனங்களைப் பரிமாறிக் கொண்டோம். இருவருமே, அரசுகள் வெறுமே சந்தைப் பொருளாதாரத்தோடு நின்று விடாமல், தன்பங்களிப்பையும் செய்து, சந்தைப் பொருளாதாரத்தின் எதிர்மறை விளைவுகளை சமன் செய்ய வேண்டும் என்னும் கருத்தில் ஒன்றுபட்டோம். சமன் செய்ய வேண்டும் என்னும் கருத்தில், அவர் (என்னை விட) அதிகமாக அரசின் பங்கு இருக்க வேண்டும் என்னும் கருத்தைக் கொண்டவர்.
ஜான் ட்ரெஸ் என்னை விட ஒரு வயது இளையவர். நாங்கள் இருவருமே எங்கள் முனைவர் பட்டங்களை இந்தியாவில் பெற்றவர்கள்; இருவருமே இந்தியாவில் பணிபுரிந்து, இந்தியாவைப் பற்றி அதிகம் எழுதியவர்கள். இந்த ஒற்றுமைகளைத் தவிர, எங்கள் வாழ்க்கைப் பாதைகள் மிகவும் மாறுபட்டவை; ராஞ்சியில் அவரைச் சந்திக்க விரும்பியதற்குக் காரணம், அவரது வாழ்க்கை வரலாற்றைப் பற்றிக் கொஞ்சம் அதிகம் தெரிந்து கொள்ளும் ஆர்வம்தான். முன்பே தீர்மானித்த படி, ராஞ்சிப் பல்கலைக்கழகத்தில், அவர் அலுவலகத்தில் சந்தித்தோம். பின்னர் அவரது மோட்டார் சைக்கிளில், ராஞ்சியில் இருந்து ஹசாரிபாக் செல்லும் நெடுஞ்சாலையில் பயணித்தோம். அரைமணி நேரப் பயணத்திற்குப் பின்னர், ஒரு மண் சாலையில் திரும்பினோம். சிறிது நேரப் பயணத்திற்குப் பின், வண்டியை ஒரு அரசமர நிழலில் நிறுத்தி விட்டு, ஒரு நீண்ட நடைப்பயணத்தை மேற்கொண்டு, ஒரு குன்றின் மீதிருந்த பாறையில் அமர்ந்தோம். கீழே தெரிந்த நிலைப்பரப்பை அமைதியாகக் கொஞ்ச நேரம் கவனித்துக் கொண்டிருந்தோம். கீழே, சமவெளியில் ஒரு நீரோடை ஓடிக்கொண்டிருந்தது. ஓடையின் மறுபுறத்தில், அழகிய நீல வண்ணம் பூசப் பட்ட சுவர்களைக் கொண்ட முண்டா இனத்தவர்களின் வீடுகள் தெரிந்தன. இந்த இயற்கையான சூழலில், நண்பர் பேசத் துவங்கினார்.
ஜான் ட்ரெஸ், பெல்ஜியத்தில் லூவென் என்னும் ஒரு பழங்கால நகரத்தில் 1959 ஆம் ஆண்டு பிறந்தார். அவர் தந்தை ஜாக் ட்ரெஸ், உலகின் மிக மதிக்கப்பட்ட பொருளியல் அறிஞர்களில் ஒருவர். சிறந்த பேராசிரியரும் கூட. அவரும், அவர் மனைவியும் பொது வாழ்வில் மிக ஈடுபாடு கொண்டவர்கள். கல்வியறிவும், சேவையும் ஒருங்கிணைந்த ஒரு குடும்பச் சூழலில் ஜான் வளர்ந்தார். அவர் சகோதரர்களில் ஒருவர் இடதுசாரி அரசியல்வாதி; இன்னொருவர் மேலாண்மைப் பேராரிரியர்; மூன்றாமவர் மொழிபெயர்ப்பாளர்.
எஸ்ஸெக்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்த ஜான் ட்ரெஸ்ஸுக்கு, வளர்ச்சிப் பொருளியலில் ஆர்வம் ஏற்பட்டது. அந்த ஆர்வம் அவரை, தில்லிப் புள்ளியியல் கழகத்திற்கு கொண்டு வந்தது. அங்கே பேராசிரியர் அமர்த்தியா சென்னைச் சந்தித்த ஜான் ட்ரெஸ், அவருடன் இணைந்து நான்கு புத்தகங்களை எழுதியுள்ளார் (மேலும் இரண்டைத் தொகுத்துள்ளார்). புத்தகங்களுக்கான 90% வேலையை ட்ரெஸ் செய்வதாகவும், ஆனால், 90% புகழ் தனக்குக் கிடைப்பதாகவும் அமர்த்தியா சென் சொல்லியதைக் கேட்டிருக்கிறேன். அது கொஞ்சம் மிகைதான். ஒருவர் பங்களிப்பு இல்லாமல், இன்னொருவர் இல்லை என்னுமளவுக்கு சரியளவு பங்களிப்பில் உருவான அந்தப் புத்தகங்களுக்காக, அவர்களின் வாசகர்கள் என்றும் நன்றிக்கடன் பட்டிருப்பார்கள்.
அமர்த்தியா சென், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கிறார். ஜான் ட்ரெஸ், இந்தியாவில் வாழ முடிவு செய்து, தில்லிப் பொருளாதாரப் பள்ளியில் பணிபுரியத் துவங்கினார். அங்கிருந்து அலஹாபாத் பல்கலைக்கழகம் சென்றார். தற்போது ராஞ்சிப் பல்கலைக்கழகத்தில் பணி. பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்குக் கற்பிப்பதையும், இந்தியாவின் வறுமை நிலவும் பகுதிகளில் பணிபுரிவதையும், ஒரு வளர்ச்சிப் பொருளியல் அறிஞராகத் (Developmental Economist) தன் அறம் எனக் கொண்டவர் ஜான். அது, துறவியைப் போல வாழும் அவரது ஆளுமையுடன் ஒன்றியது. அவர் தன் பணிகளுக்காக ஊதியம் பெற்றுக் கொள்வதில்லை. அவரது தேவைகள் மிகக் குறைவு. அவற்றை, செய்தித்தாள்களுக்கு எழுதும் கட்டுரைகள் மூலம் வரும் வருமானம் மற்றும், தன் புத்தகங்களின் விற்பனையில் கிடைக்கும் ராயல்டி மூலமாகப் பூர்த்தி செய்து கொள்கிறார். பல ஆண்டுகளாக களப்பணியில் ஈடுபட்ட அனுபவத்தில், மிக நன்றாக இந்தி பேசுவார்.
பலமணி நேர உரையாடலுக்குப் பின், குன்றிலிருந்து இறங்கி, ஜானின் மோட்டார் சைக்கிளை நோக்கி நடந்தோம். திரும்பி வரும்வழியில், மனசரோவர் என்னும் அழகிய பெயர் கொண்ட ஒரு சாலையோர உணவகத்தில், மதிய உணவு உண்டோம். பின், என்னை அவர் வீட்டுக்கு அழைத்துச் செல்ல வற்புறுத்தினேன். ராஞ்சி நகரத்தின் எல்லையில் அமைந்துள்ள, ஒரு மலைவாசிக் கிராமத்தில் இருக்கும் தன் குடிசைக்கு அழைத்துச் சென்றார். நகரம் வளரும் வேகத்தில், இன்னும் சில ஆண்டுகளில், இந்தக் கிராமம் விழுங்கப்பட்டு விடும். வீட்டின் ஒரு புறம் மூங்கிற் புதரும், வாசலில் புளிய மரமும் இருந்தது. பேசிக் கொண்டே, ஜான் எனக்கு தேநீர் போட்டுக் கொடுத்தார். மரக்கிளையில் இருந்து, க்ரிம்ஸன் ரெட் பார்பெட் (Crimson Red Barbet) ஒன்றின் அழைப்புக் கேட்டுக் கொண்டிருந்தது.
உரையாடலினூடே, தான் ஒரு ஹிந்திப் பத்திரிகையில் ஒரு கட்டுரைத் தொடர் துவங்க உள்ளதாகத் தெரிவித்தார். அவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகள், ஏற்கனவே, Sense and Solidarity என்னும் பெயரில் தொகுக்கப்பட்டு வெளியாகியுள்ளது. ‘அனைவருக்குமான ஜோல்னாப்பைப் பொருளாதாரம்’ எனச் சுய எள்ளலுடன், உப தலைப்பிடப்பட்ட புத்தகம் அது. உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், குழந்தைகள் உரிமை, அணு ஆயுதப் போர் அபாயம் எனப் பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு அது. அவை உழவர்கள், ஆதிவாசிகள், தொழிலாளிகள், புலம் பெயர்ந்தவர்கள் எனப் பல்வேறு தரப்பு மக்களின் வாழ்க்கையையும், போராட்டங்களையும் பற்றிய உண்மையான அறிதலில் இருந்து எழுந்தவை. எதிர்மறைவாதம் தவிர்த்த தெளிவான நடையும், கூர்மையான அலசல்களும் இவர் கட்டுரைகளின் சிறப்பம்சங்கள். இந்திய மக்களாட்சி மற்றும் முன்னேற்றம் பற்றிய ஆர்வம் கொண்டவர்கள் உடனே வாங்க வேண்டிய புத்தகம் இது.
முன்பே சொன்னது போல, நாங்கள் இருவரும் சம வயதினர். புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதும் தொழிலில் (தொழில் என்னும் வார்த்தையை அவர் அனுமதித்தால்..) இருப்பவர்கள். 2002 ஆம் ஆண்டில் இருந்து ஒரே நாட்டின் சுங்கச் சீட்டை (passport) வைத்திருப்பவர்கள். இவர் என் சம காலத்தவர், சக ஊழியர் என்பது எனக்குப் பெருமை. என் நாட்டின் சக குடிமகன் என்பதில் அதைவிடப் பெருமை!
மறுபிரசுரம் – முதற்பிரசுரம் Apr 7, 2019 at 00:06
——–