கி.ராஜநாராயணனின் உடனடிப் பார்ப்பனிய எதிர்ப்பு
கி.ரா உடனான சமஸின் அந்தப் பேட்டி, தமிழ் சிற்றிதழ் சார்ந்த எழுத்தாளர்களால் அண்ணாவும், திராவிட இயக்க கருத்தியலும் புறக்கணிக்கப்பட்டதற்கான காரணத்தை பற்றி பேச முயல்கிறதேத் தவிர தமிழ் இலக்கியத்தில் அண்ணாவிற்கான இடத்தைப் பற்றி பேசுவதாக இல்லை. பிறகு ஏன் சமஸ், தமிழ் சிற்றிதழ் சார்ந்த இலக்கியவாதிகளால் அண்ணா புறக்கணிக்கப்பட்டதைப் பற்றி பேச விரும்புகிறார் என்பது தான் இங்கு அடிப்படைக் கேள்விகளில் ஒன்றாக இருக்க முடியும்.
தமிழ் சிற்றிதழ் சார்ந்த இலக்கிய மரபும் சரி, திராவிட அரசியல் மரபும் சரி மாற்றத்தை நோக்கிய தீவிரமான லட்சியக் கனவுகளை அடிப்படையாகக் கொண்டவைகள். ஒரு அரசியல் இயக்கமாக திராவிட இயக்கத்திற்கு புறவயமான சமூக மாற்றம் தான் அடிப்படை நோக்கமாக இருக்க முடியும். ஆனால் ஒரு சூழலின் இலக்கியத் தரப்பு, சமூக அரசியல் நிகழ்வுகளை புறந்தள்ளிவிட்டு வெறும் பிரதி சார்ந்து மட்டும் தன் எல்லைகளை வகுத்துக் கொள்ள முடியாது. அரசியல் இயக்கத்திற்கு இலக்கியத் தரப்பு என்பது பிரதானமான ஒன்று அல்ல. ஆனால் இலக்கியத்திற்கு சமூக மாற்றம் என்பது பிரதானமானது மட்டுமல்ல அதன் அடிப்படைக் கடமைகளில் ஒன்றும்கூட. அதன் அடிப்படையில் தான் சமஸின் அந்தக் கேள்வி தமிழ் இலக்கியத்தின் பிரதிநிதியான ஒரு மூத்த இலக்கிய ஆளுமையை நோக்கி வைக்கப்படுகிறது.
மட்டுமல்லாமல் அண்ணாவின் காலகட்டம் என்பது வழமையான அரசியல் நிகழ்வுகள் உள்ளடங்கிய ஓரு காலகட்டமாக கடந்து செல்லக்கூடியதும் அன்று. அதன் சாரத்தில் கம்யூனிஸ கருத்தியலுக்கு நிகரான அடர்த்தியை கொண்டது திராவிட இயக்கத்தின் கருத்தியல். ஒரு கருத்தியல் வெகு மக்களால் சுவகரிக்கப்படும் போது அது அதன் நோக்கத்திற்கு மாற்றான விருப்பத்தகாத விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும். அந்த இயங்கு முறைகளைத் தான் இலக்கியம் பேச முயல வேண்டும்.
அக்காலச் சூழ்நிலையில் தமிழ் எழுத்தாளன் சாமானியன், குரலற்றவன். அவனுடைய அடிப்படை நோக்கமாக பொதுப்பார்வைக்கு மாற்றான ஒரு இலக்கியத் தரப்பினை உருவாக்கக் கூடியதாக மட்டுமே இருக்க முடியுமே தவிர அவன் அப்போது அரசியல் சார்ந்து எதிர்வினையாற்றிக் கொண்டிருக்க முடியாது என்றெல்லாம் சொல்வதற்கில்லை. கடந்த ஐம்பது ஆண்டுகலாமாக தமிழ் இலக்கியச் சூழலில் சமூக அரசியல் என்பது பேசா பொருளாகவே இருந்து வருகிறது. இன்னுமும் தமிழ் இலக்கிய உலகம் ஆண் – பெண் பாலியல் சிக்கலைத் தாண்டி சிந்திக்க மறுக்கிறது.
அண்ணா ஏன் இப்போது பேசப்பட வேண்டியவராகிறார் என்பது இங்கு அடுத்த கேள்வி. தற்போதைய இந்தியா அதன் அரசியல் விழுமியங்களில் சீரழிவின் உச்சத்தில் இருக்கிறது. தற்போதைய தமிழக அரசியல் நிலவரமும் அதுவே. சமூக அக்கறை என்பது தற்போதுள்ள எவ்வரசியல் கட்சிகளுக்கும் ஒரு பொருட்டல்ல. இந்நிலையில் இதே தமிழ் நாட்டில் அறைநூற்றண்டிற்கு முன்னால் சமூக மாற்றத்தை அடிப்படையாக கொண்டு ஒரு புரட்சியே நிகழ்ந்தேறியிருக்கிறது.
இந்நிலையில் இன்று அண்ணாவை, திராவிட இயக்க கருத்தியலைப் பேசுவது என்பது அவற்றை மட்டும் பேசுவதாக இல்லாமல் அவற்றை முன்னிறுத்தி சமூக அரசியல் மீதான உரையாடலை நிகழ்த்தச் செய்வதாகவே அமையும். தற்போதைய திராவிட கட்சிகளுக்கே திராவிட இயக்க வரலாற்றை மீள் கூற வேண்டியத் தேவை உருவாகியிருக்கிறது. இன்று அண்ணா காலத்து தன்மையிலான சமூக மைய அரசியல் நோக்கினை தற்போதுள்ள ஸ்டாலினிடமோ, அவருடைய அன்புக் குழந்தை உதயநிதியிடமோ தேடுவதற்கில்லை. அது திருமாவளவனிடம் குடி கொண்டுள்ளது.
அண்ணாவைப் பற்றி ஒரு நூல் உருவாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை நான் கேள்வியுற்றபோது அதில் அண்ணா குறித்தான ஜெயகாந்தனின் கட்டுரை இருந்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். எதிர்த் தரப்பின் வழியேயும் அண்ணா அறியப்பட வேண்டியவராகிறார்.
க. நா.சு
அன்புள்ள ஜெயமோகன் இவையாவையும் நீங்கள் அறியாதவர் அல்ல. நான் இவற்றை மேற்கூறியதற்கு காரணம் இத்தலைமுறையைச் சார்ந்த ஒருவனாக அண்ணாவையும் திராவிட இயக்கத்தின் கருத்தியல் தரப்பையும் நான் இவ்வாறே உள்வாங்கிக்கொள்கிறேன் என்பதை விளக்குவதற்காகத்தான். சமஸ் கட்டுரையையும் நான் இதனடிப்படையில் தான் புரிந்துகொள்கிறேன். சமஸின் அந்தப் பேட்டியில் நான் பிழையெனக் கருதுவது அதன் தலைப்பைத் தான். அந்த தலைப்பு வாசகனுள் ஒரு திணிப்பை நிகழ்த்துகிறது. திராவிட இயக்கத்தின் மீதான தமிழ் இலக்கிய உலகின் விலக்கத்திற்கு தன் நோக்கிலான வண்ணத்தை பூசுவதாக அமைந்து விடுகிறது. தவிர்த்து சமஸின் தரப்பை விமர்சிப்பதற்கில்லை. தன்னளவிலான அடிப்படை நேர்மையே சமஸை முன்னகர்த்தி செல்கிறது.
சமஸின் குரல் ஒரு அறிவுஜீயின் குரலல்ல. அது ஒரு குடிமகனின் தார்மீகக் குரல். அவருடைய எழுத்துக்கள் சூழலின் மீதான விமர்சனத்தை முன்வைத்து விட்டு நகர்ந்து செல்லக் கூடியவைகள் அல்ல. அவைகள் சூழலுடன் உரையாடலை நிகழ்த்த முயல்பவைகள். சமஸ் பத்திரிக்கையாளராக அல்ல, தமிழ் இலக்கியத்தரப்பின் முகமாக அடையாளப்படுத்தப்பட வேண்டியவர். கடந்த இருபது ஆண்டுகளில் தமிழ் இலக்கியம்சார் அறிவுச் சூழலில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்று சமஸின் வருகை.
சமஸ் பேட்டி குறித்து நீங்கள் எழுதிய கட்டுரையை வாசிக்கும்போது, திராவிட இயக்கத்தின் மீதான உங்களது ஒவ்வாமையும்,தமிழ் தி இந்து மீதான எரிச்சலையும் தான் உணர முடிந்தது. ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நூல் வெளிவர இருந்த சமயமும் நீங்கள் இத்தன்மையிலேயே எதிர்வினையாற்றி இருந்தீர்கள். இரண்டிலும் உங்கள் குரல் நியாயமான மாற்றுத் தரப்பின் குரலாக வெளிப்படவில்லை என்பதே வருத்ததிற்குரிய ஒன்று.
அன்புடன்
ரியாஸ்
அன்புள்ள ரியாஸ்,
ஓர் வாசகராக உங்கள் குரலை புரிந்துகொள்கிறேன். ஆனால் தமிழ் நவீன இலக்கியச் செயல்பாட்டாளராக நீங்கள் இதை சொன்னீர்கள் என்றால் எனக்கு மிகப்பெரிய ஏமாற்றமே. இதில் உங்கள் எளிய சார்புநிலைகள் மட்டுமே வெளிப்படுகின்றன. என்னிடம் வெளிப்படுவது திராவிட இயக்க ஒவ்வாமை என நான் நினைக்கவில்லை – அவ்வியக்கத்தின் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளைப் பற்றி சற்றேனும் படித்து பேசிக்கொண்டிருப்பவன் நான் மட்டுமே.
அதன்மேல் கடுமையான விமர்சனம் உண்டு, அவ்வாறு விமர்சனம் கொண்டிருக்க எனக்கு உரிமையும் உண்டு, ஒரு சூழலில் அத்தனைபேரும் ஒன்றை ஆதரித்தாகவேண்டும் என்றில்லை. ஆனால் அதை காழ்ப்பு என நான் நினைக்கவில்லை. அவ்வாறு காழ்ப்பு என முத்திரைகுத்தித்தான் என் எதிர்த்தரப்பை எதிர்கொள்ள அதன் ஆதரவாளர்களால் இயலும் என்றால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.
சமஸ் மீதோ அவருடைய இதழ்மீதோ காழ்ப்பு எனக்கிருப்பதாகவும் நான் எண்ணவில்லை. அவ்விதழில் எழுதியிருக்கிறேன். அவருடைய தொகுதிக்கு முன்னுரை எழுதியிருக்கிறேன். பிணக்கு ஏதும் இதுவரை நிகழவுமில்லை. பகைமையோ காழ்ப்போ ஏன் வரவேண்டும்?
இவ்வண்ணம் தனிப்பட்ட முத்திரை குத்தியபடி வரும் எதிர்வினைகளை முற்றாக தவிர்ப்பதும், அவர்களை கடந்துசெல்வதுமே இதுவரை என் வழி. இந்த மறுமொழி நீங்கள் இப்போதுவரை என் நண்பர் என்பதனால், இளையவாசகர் என்பதனால்.
*
முதலில் சமஸ் பற்றி. சமஸின் வினா ‘திராவிட இயக்கத்தை சிற்றிதழ்சார் நவீன இலக்கியவாதிகள் புறக்கணித்தார்கள் என நினைக்கிறீர்களா? ஆம் என்றால் ஏன்?” என்று இருந்து அதற்கு கி.ரா அப்பதிலை சொல்லியிருந்தால் அதுவேறு. சமஸ்ஸின் வினாவிலேயே திராவிட இயக்கத்தை சிற்றிதழ்சார் இலக்கியவாதிகள் புறக்கணித்தனர் என்னும் முடிவும், அதற்கு பிராமணியநோக்கு காரணம் என்னும் முடிவும் உள்ளது.
அதற்கு கி.ரா சொல்லும் மறுமொழி திட்டவட்டமானது அல்ல. இருக்கலாம் என்னும் அளவிலேயே உள்ளது. அந்த மறுமொழியிலேயே இரண்டு நிலைபாட்டையும் சொல்கிறார். அந்தக் குழப்பமான மறுமொழியை கி.ராஜநாராயணனின் கொள்கைஅறிவிப்பாக மாற்றி அக்கட்டுரைக்கு தலைப்பு அளிக்கிறார் சமஸ். இது கீழ்மையான இதழியல். மிகமிக எளிய உத்தி. கொஞ்சம் தரமான இதழாளர்கள் இதை செய்யமாட்டார்கள். கடும் எதிர்வினை இங்கிருந்தே தொடங்குகிறது.
சமஸ் ஓர் இலக்கியவிமர்சகரோ ஆய்வாளரோ அல்ல. அத்தகுதியை அவர் இன்னமும் நிறுவவில்லை. அவர் இதழாளர். அவருடைய இதழியல்செயல்பாடுகள் மேல் எனக்கு நம்பிக்கையும் மதிப்பும் உண்டு. தமிழகம் வெவ்வேறு வகைகளில் சுரண்டப்படுவதைப் பற்றிய அவருடைய கட்டுரைகள் முக்கியமானவை. மேஜையிலமர்ந்து எழுதுபவர் அல்ல.
ஆனால் இதழாளரின் எல்லைகளை அவர் புரிந்துகொள்ளவேண்டும். இதழாளர் அரசியல் ஆய்வாளராக தன்னை எண்ணிக்கொள்வதே கொஞ்சம் மிகை. ஆனால் இதழாளர் முதிர்ந்து, நீண்ட அனுபவத்தின் அடிப்படையில் அவ்வாறு ஆக முடியும். ஆனால் இலக்கியவிமர்சனம், இலக்கிய வரலாறு என்பது முற்றாகவே வேறு. தனக்கு ஊடகம் இருப்பதனால் தன்னால் எல்லாவற்றிலும் கருத்துருவாக்கம் நிகழ்த்த முடியும், அதற்கான உரிமை உண்டு என இதழாளர் நினைப்பாரென்றால் அது கண்டிக்கப்படவேண்டியது.
சமஸ் கி.ராஜநாராயணனிடம் ‘பேட்டி’ எடுக்கவில்லை. அவர் கி.ராஜநாராயணனை சாக்காகக் கொண்டு தமிழ் நவீன இலக்கிய மரபின்மேல் ஒட்டுமொத்தமாக ஒரு பெரும்பழியை சுமத்துகிறார். அது ஒரு பெரும் திரிபு. அது வெளியாகும் ஊடகம் மிகப்பெரிது. பல்லாயிரம் இளைஞர்களை அது சென்றடையும். தொடக்கநிலையில், இலக்கிய அறிமுகமே இல்லாத வாசகர்களிடம் மிகஎதிர்மறையான உளப்பதிவை உருவாக்கும்.
ஏற்கனவே நவீனத்தமிழிலக்கியம் மீது சூழலால் ஒவ்வாமையும் விலக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்குள் நுழைபவர்களே குறைவு. இத்தகைய பொய்யான முத்திரைகுத்தல்கள் வழியாக அது மேலும் அயன்மைப்படுத்தப்படும். அதை சாதியமுன்முடிவுகளுடன் நோக்கத் தொடங்கும் ஒருவர் அந்தத்தடையைக் கடந்து உள்ளே நுழைவது மிக அரிது.
எனக்கு தமிழ்நவீன இலக்கிய மரபில், சிற்றிதழ்மரபில் நம்பிக்கை உண்டு. இதில் உருவாகிவந்து இங்கே நிலைகொள்பவன் நான். பொய்மொழிகளும் மிகையுணர்ச்சிகளும் இல்லாத சிந்தனைக்கும், கூரிய அளவீடுகளுக்கும், மெய்யான அழகியலுக்கும் இன்றைய தமிழ் அறிவுச்சூழலில் இது ஒன்றே களம் என நான் எண்ணுகிறேன். இதை கூடுமானவரை கொண்டுசெல்ல என் வாழ்க்கையை செலவிட்டுக்கொண்டிருக்கிறேன்.
இந்நிலையில் தகுதியற்ற ஒருவர் ஒரு வகை சதி வழியாக அதை முத்திரைகுத்தி, பெரிய ஊடகத்தின் வாய்ப்பு வழியாக பிரச்சாரம் செய்து இளைய வாசகர்களிடமிருந்து விலக்க முயல்வார் என்றால் அது எனக்கு கடும் எதிர்ப்புக்குரிய செயலே. கூரிய விமர்சனம் வழியாக அச்சதியை, அதிலுள்ள உள்ளீடற்றதன்மையை சுட்டிக்காட்டுவதே என் பணி.
இந்த விவாதம் வழியாக சமஸ் உருவாக்கும் பொய்த்திரையை இலக்கியவாசகரில் ஒருசாரார் உணரக்கூடும். இதன்வழியாக இப்படி ஒரு மறுப்பும் அதற்கு எழுந்தது என்றாவது அவர்கள் அறியக்கூடும். நான் செய்யமுடிவது அதை மட்டுமே. அதைத்தான் செய்திருக்கிறேன். எந்த இலக்கியவாசகனுக்கும் எளிதில் புரியும்.
தமிழ்ச்சூழலில் பொதுவாக எந்த ஊடகவியலாளருக்கும் அவருடைய ஊடகநிறுவனங்களின் அரசியலை, பொருளியல்நலன்களைக் கடந்த அரசியல் நிலைபாடோ செயல்பாடோ கொள்ள உரிமை இல்லை. இதை அறியாதவர்கள் குழந்தைகளாகவே இருக்கக்கூடும். சில ஆண்டுகளுக்கு முன்பு நான் திரு.மு.கருணாநிதி அவர்களின் ஆக்கங்கள் இலக்கியத் தகுதி கொண்டவை அல்ல என எழுதினேன். அப்போது மிகமிகக் கடுமையாக எதிர்வினையாற்றி, என்னை எதிர்த்து கருணாநிதி அவர்களுக்காக வாதிட்டவர் மாலன். அன்று அவர் சன் டிவி ஊழியர்.
சமஸின் இந்தச்செயல் அவருடைய தனிப்பட்ட ஆர்வத்தால் முயற்சியால் நிகழ்கிறது என்றால் அதன்பொருள் வேறு. இதற்குப்பின் உள்ள பெருமுதலீடு, தொடர்புகள், வெளியீட்டு வசதி ஆகியவை அந்நிறுவனத்திற்குரியவை. அதற்கு எதிரான கருத்துச்செயல்பாடுகளை கண்காணாமல் ஆக்கிவிடும் ஆற்றல் அதற்குண்டு. அந்த நிறுவனத்தைத் தவிர்த்து இதை ஆராயவே முடியாது. ஆகவே இது கருத்துத் தரப்பு அல்ல, ஒரு மாபெரும் பரப்புப் பிரச்சாரம் மட்டுமே.
அதாவது நவீனத்தமிழிலக்கியத்தை ஒட்டுமொத்தமாக இழிவுசெய்து முத்திரைகுத்தி ஒரு மாபெரும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. அதை மறுத்து அது பிழை, அதன்பின் ஒரு ஊகக்கேள்வியின் மோசடியே உள்ளது என்று மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. உங்களுக்கு அந்த மறுப்பு காழ்ப்பின் வெளிப்பாடு என தெரிகிறது என்றால் நீங்கள் நின்றிருக்கும் இடம் என்ன? இதற்கு எவர் எதிர்வினையாற்றுகிறார்கள், அவர்களின் மொழித்தரம் என்ன என்று நீங்களே பார்க்கலாம்.
சி.என்.அண்ணாதுரையின் அரசியல் பற்றி அல்ல இங்கே பேச்சு, அவருடைய இலக்கிய இடம் பற்றி மட்டுமே. அது ஓர் எழுத்தாளரிடம் கேட்கப்படுகிறது. அண்ணாதுரையின் அரசியலைப்பற்றி எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான கட்டுரைகளுக்கு நான் இத்தகைய எதிர்வினையை ஆற்றியதிலை. நான் எழுதினால் அவருடைய கலாசாரப் பங்களிப்பைப் பற்றி மட்டுமே எழுதுவேன். அரசியலை முழுமையாக ஆராய்ந்து எழுதும் தரவுகள் என்னிடமில்லை. என் துறை அது அல்ல.
ஏன் அந்த எதிர்ப்பு? ஓர் ஊகக்கேள்வி. புதுமைப்பித்தன் நவீனத் தமிழிலக்கியத்தின் தொடக்கம். ஆனால் ‘நவீனத்தமிழிலக்கியத்தின் மாபெரும் ஞானசூரியன்! விடிவெள்ளி! புதுமைப்பித்தன்!” என தலைப்பிட்டு ஒரு மலர் வருமென்றால் அதை நவீன இலக்கியவாதிகள் எப்படி எதிர்கொள்வார்கள்? அப்படியே கிழித்து குப்பைக்கூடைக்குள் செலுத்துவார்கள்.
சுந்தர ராமசாமி என் ஆசிரியர். அவர் பெயரைச் சொல்லாமல் இந்தத் தளம் ஒருவாரத்தை கடப்பதில்லை. ஆனால் அவருடைய பதிப்பக நிறுவனம் அவருக்குப்பின் ‘பாரதி, புதுமைப்பித்தன், சுந்தர ராம்சாமி’ என ஒரு கருத்தரங்கை நடத்தியபோது கடுமையான கண்டனங்களை நான் எழுதினேன். ஏனென்றால் அமைப்புசார்ந்து அப்படி ஒரு கருத்து நிறுவப்படலாகாது. விமர்சன உரையாடல் வழியாகவே நிறுவப்படவேண்டும்.
புதுமைப்பித்தனையே ஏற்பும் மறுப்புமாகத்தான் க.நா.சு. முதல் நான் வரை சிற்றிதழ்தரப்பில் விமர்சனம் செய்திருக்கிறோம். அதுதான் சிற்றிதழ் மரபு. அந்த மரபிலிருந்துகொண்டு பார்க்கையில் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ ‘மாபெரும் தமிழ்க்கனவு’ தலைப்புக்கள் ஒவ்வாமையையே அளிக்கும். அந்த நுண்ணுணர்வை உருவாக்கி நிலைநிறுத்தவே அவை செயல்பட்டு வருகின்றன. இன்று அந்நூல்கள் மேல் எளிய விமர்சனம் வந்தால்கூட அவற்றின் ஆதரவாளர் எழுதும் மிகையுணர்ச்சிக் கொந்தளிப்புகளை பாருங்கள். அடிப்படையில் அந்த உளநிலைக்கு எதிரான இயக்கம் சிற்றிதழ் சார்ந்த நவீன இலக்கியம்.
தமிழகத்தில் அனைவரும் கருணாநிதியையும் அண்ணாதுரையையும் ‘சூரியநமஸ்காரம்’ செய்யவேண்டியதில்லை, அந்த உளநிலைக்கும் அந்த மிகைச்செயற்கைக்கும் எதிரான தரப்பும் இங்கே இருக்கலாம்,அவர்கள் எதிர்வினை ஆற்றலாம்,அது சாதிக் காழ்ப்பு மட்டுமாக இருக்கவேண்டியதில்லை, அது ஓர் அறிவுத்தரப்பாக இங்கே நீடிக்க முடியும் என்றுகூட இந்தக் கும்பலால் நம்ப முடியவில்லை, நீங்கள் அவர்களின் குரலாக பேசுகிறீர்கள்.
இவ்விரு நூல்களும் சி.என்.அண்ணாதுரை மற்றும் மு.கருணாநிதி இருவரின் அரசியலை திறனாய்வுசெய்து மதிப்பிடுவனவாக இருந்தால் எந்தச் சிக்கலும் இல்லை. அவற்றுக்கு எதிர்வினையாற்றி உரையாடலாம். இந்தியச்சூழலில் அவர்களின் இடத்தை நிறுவ முயல்வதுகூட அறிவியக்கச் செயல்பாடே. ஆனால் இவை மாமனிதர்களாக, மாபெரும் அரசியல்தலைவர்களாக, குறைகளே அற்ற சூரியன்களாக அவர்களை முன்னிறுத்துகின்றன.
நான் இன்றைய காந்தி என ஒரு நூல் எழுதியிருக்கிறேன். நீங்கள் நேரம்கிடைத்தால் ஒப்பிட்டுப்பார்க்கலாம். காந்தியின் அனைத்துக்குறைபாடுகளையும் விரித்துப் பேசி அவரை மதிப்பிடும் நூல் அது. சிற்றிதழ்சார்ந்த அறிவியக்கம் உருவாக்கிய மரபு அது. அந்த மரபுக்கு மேலே சொன்ன நூல்கள் ஒவ்வாமையையே உருவாக்கும். அந்த ஒவ்வாமை பதிவாகவும் செய்யும்.
மேலே சொன்ன நூல்கள் சி.என்.அண்ணாதுரை, மு.கருணாநிதி இருவரையும் மேற்கொண்டு நவீன இலக்கியச் சிற்பிகளாகவும் முன்னிறுத்த முயல்கின்றன. அவர்களை ஏற்காதவர்கள் சாதியநோக்கில்தான் அவ்வாறுசெய்கிறார்கள் என முத்திரைகுத்துகின்றன. அதை நிறுவன வல்லமையால் நிறுவுகின்றன.
சிற்றிதழ்சார்ந்த எழுத்தாளர் எவராயினும் அதைத்தான் கண்டித்தாகவேண்டும். அந்த நிறுவனத்தாக்குதல்களில் இருந்து நவீன இலக்கியம் என்னும் இந்தச்சின்னஞ்சிறு அறிவியக்கத்தை காத்தாகவேண்டும். ஆனால் பெரும்பாலானவர்கள் பேசமாட்டார்கள். ஏனென்றால் இங்கே ஆற்றலற்றவர்களை எதிர்த்து நின்று கலகம், அதிகார எதிர்ப்பு எனப் பேசுபவர்களே மிகுதி. மெய்யான அதிகாரத்துடன் உடனடியாக சமரசம் செய்துகொள்வார்கள்.
ஆனால் புதுமைப்பித்தன் சொன்னதுபோல வாழையடி வாழையாக வந்துகொண்டுதான் இருப்பார்கள். அவர்களை நோக்கியே பேசவேண்டியிருக்கிறது. முன்பு சிற்றிதழ்ச்சூழல் எதிர்கொண்டது நிறுவனங்களின் புறக்கணிப்பை. இது நிறுவன எதிர்ப்பை, திரிபை எதிர்கொள்ளவேண்டிய காலம்போலும். நீங்கள் நின்றிருக்க விரும்பும் இடம் தெரிகிறது. உங்களுக்கு அது வழங்கவிருப்பது நிகழட்டும்.
*
தமிழ் நவீன இலக்கியம் சமூகமாற்றத்தை எழுதவில்லை, ஆகவே திராவிட இயக்கத்தை கண்டுகொள்ளவில்லை, ஆண்பெண் உறவை எழுதியது என்பதெல்லாம் மெய்யான இலக்கியவாசகன் சொல்லும் வரிகள் அல்ல. சமூகவலைத்தளங்களில் எழுதும் வாசிப்பில்லாத நபர்களின் கருத்துக்களின் எதிரொலிகள். அவர்கள் நவீன இலக்கியம் ‘சமூக அக்கறை’ அற்றது என்ற பொய்யை எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்.
அத்தகைய ஒருவர் நவீன இலக்கியம் நெருக்கடி நிலைபற்றி எழுதவே இல்லை என ஒருமுறை சொன்னார். தமிழில் நவீன இலக்கியத்தில் மட்டும்தான் நெருக்கடிநிலை பற்றிய பரந்துபட்ட நுண்ணிய பதிவுகள் உள்ளன என நான் சான்றுகளுடன் விளக்கி எழுதினேன். இவ்வாறு எழுதிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது இன்று.
உண்மையில் திராவிட இயக்க எழுத்துக்களை மெய்யாகவே வாசிக்கும் என்னைப்போன்ற ஒருவர் அறிந்த ஒன்று உண்டு, அவற்றில்தான் மிகப்பெரும்பாலானவை காமத்தை மட்டுமே பேசியவை. அவற்றிலிருந்து அன்றைய சமூகச்சூழலின் உண்மையை வாசிக்கவே முடியாது. அவை கட்டமைக்கப்பட்ட பொய்யான ஒரு நாடகத்தன்மைகொண்ட சூழலில் தங்கள் கருத்துக்களை பேசியவை. அவற்றின் மிகையழகியலுக்கு அந்த செயற்கை சமூகச்சூழலே உகந்ததாக இருந்தது.
மாறாக நவீன இலக்கியச்சூழலிலேயே அழுத்தமான நுட்பமான சமூகமாற்றச் சித்திரம், சமூகத்தின் அகவயச் சித்திரம் உள்ளது. எவரேனும் சென்ற நூறாண்டுக்கால தமிழ்ச்சமூக மாற்றம் பற்றி ஆராயவேண்டும் என்றால் நவீன இலக்கியத்தை மட்டுமே ஆதாரமாகக் கொள்ளமுடியும்.
சென்ற நூறாண்டில் பெரிய மாறுதல்கள் நிகழ்ந்த களங்கள் மூன்று. அ. குடும்பம் மற்றும் தனிநபர் உறவுகள். ஆ. அரசியல் மற்றும் சமூகச்சூழல் இ. ஆன்மீகம் மற்றும் மதச்சூழல். இந்த வரிசைப்படியே நவீன இலக்கியம் பேசியிருக்கிறது.
ஒப்புநோக்க மிகுதியாகப் பேசப்பட்டது குடும்பம் மற்றும் தனிநபர் உறவுகள். ஆனால் சமூக, அரசியல் சூழலை வலுவாகப் பேசும் படைப்புகள் இங்கே ஏராளமானவை. புதுமைப்பித்தனின் துன்பக்கேணி முதல் செல்லப்பாவின் சுதந்திர தாகம், சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதை, பூமணியின் பிறகு என இந்திய-தமிழ்ச் சமூகவரலாற்றின் சித்திரங்கள் என சொல்லத்தக்க ஐம்பது முக்கியமான படைப்புக்களை எவரும் சுட்டிக்காட்டமுடியும். குறைவாகவே ஆன்மிக மாற்றத்தை நவீன இலக்கியம் பேசியிருக்கிறது.
இலக்கியம் எப்போதும் புறவயமான ‘ஆவணப்படுத்தல்’ மற்றும் ‘விவாதித்தல்’களில் ஈடுபடாது. அதற்குரிய மொழிவடிவங்கள் வேறு. இலக்கியம் மானுட அகத்தைப் பேசுவதற்கான மொழிவடிவம். ஆகவே அரசியலையும் சமூகவியலையும்கூட மானுட அகம் எதிர்கொண்ட வகையிலேயே அது பேசியிருக்கும்.
அந்தவகையில் திராவிட இயக்கத்தின் மிகைமொழித்தன்மை, அதன் போலிப்புரட்சிகரம் ஆகியவற்றை அது விமர்சனம் செய்திருக்கிறது. இன்னொரு பக்கம் அது சமூகவியலில் குறிப்பாக சாதியச் சூழலில் உருவாக்கிய மாற்றங்களையும் அங்கீகரித்துள்ளது.
என் கட்டுரையில் நவீன இலக்கியம் சி.என் அண்ணாதுரையையோ திராவிட இயக்கத்தையோ பொருட்படுத்தவில்லை என்பது பொய் என்றும் அவர்களின் அரசியலை கருத்தில்கொண்டிருக்கிறது, அழகியல்சார்ந்து விமர்சன நிராகரிப்பை முன்வைத்தது என்றும் ஆதாரங்களுடன் சொல்லியிருக்கிறேன். ஏனென்றால் அது திராவிட இயக்கத்தின் மிகையழகியலுக்கு எதிரான இயக்கம், அவ்வாறுதான் இருக்கமுடியும். இவர்கள் இன்று உருவாக்கும் போற்றிப்பாடடி பாட்டுக்கு நவீன இலக்கியம் வராது. ஆனால் அதை நீங்கள் கருத்திலேயே கொள்ளாமல் மீண்டும் புறக்கணித்தது நியாயமா என ஆரம்பிக்கிறீர்கள். இதுதான் பெருநிறுவனப் பிரச்சாரத்தின் ஆற்றல்.
வாசித்துப்பாருங்கள். காலப்போக்கில் உங்களுக்கே புரியக்கூடும். எளிய அரசியல்லாப நோக்குக்காக பெருநிறுவனம் ஒன்றால் ஓர் இன்றியமையாத அறிவியக்கம் முத்திரைகுத்தி அழிக்கப்படுவதற்கு துணைநிற்காதீர்கள் என்று மட்டுமே என்னால் கோரமுடியும்.
ஜெ