உருமாறும் சிவம்

சிவவடிவங்கள்

வணக்கம் ஜெ!

கடலூர் சீனுவின் சிவவடிவங்கள் கடிதம் படித்ததும் உடனே பதில் எழுத ஆசைப்பட்டேன்.

எல்லா சிவன் கோவில்களிலும் வலதுபுற பிரகாரத்தில் இருக்கும் ‘தென்திசை நோக்கிய தட்சிணாமூர்த்தியையே ஜக்கி யோகமார்க்கத்தில் ஆதியோகி என்கிறார். ஆக சாஸ்திர reference இருக்கிறது. ஆனால் மார்பளவு சிலை வைக்க சாஸ்திரம் இடம் தருகிறதா என்றால் இல்லை.

அதுவே மரபுமீறல் அல்லது மரபுமாற்றுதல். பக்தி மார்க்கத்தில் எல்லா கோவில்களிலும் இருக்கும் தட்சிணாமூர்த்தி இடக்காலை மடித்து வலக்காலை தொங்கவிட்டு அமர்ந்திருப்பார். ஜக்கி அதை மார்பளவு சிலையாக்கியிருப்பதால் செய்யவில்லை.

கடலூர் சீனு உருவம், அருவம், அருவுருவம் என்ற சிவவடிவங்களை மட்டும் அறிகிறார். ஆனால் இன்னொரு வகைப்படுத்துதல் உண்டு.

சிவவடிவங்கள் 64 அதை யோகவடிவங்கள்,போகவடிவங்கள்,வேகவடிவங்கள் என்றும் பிரிக்கிறார்கள். இந்த தட்சிணாமூர்த்தி யோகவடிவம். அதாவது எனக்கு அதுவேணும் இதுவேணும் என்றெல்லாம் வேண்ட இதை வழிபடலாகாது.அதற்கு போகவடிவங்கள் உண்டு சுந்தரேசுவரரை வழிபட்டால் திருமணம் நடக்கும்என்பதைப்போல.

என் மனகலக்கங்களை வேரோடு அழித்துவிடு ஈசனே என்று வேண்ட நீங்கள நடராஜர் அதற்கு மேலே பைரவர் போன்ற வேகமூர்த்திகளை வேண்டலாம்.

ஆனால் முக்தி என்ற குறிக்கோளுக்காகவே தட்சிணாமூர்த்தி.

அதனால் அவரை தியானமூர்த்தி, ஆலமர்ச்செல்வன், தென்திசை முதல்வன், மௌனகுரு, சாந்தமூர்த்தி என்றெல்லாம் அழகான பெயர்களில் அழைக்கிறது. Very nice names…அதிலும் ஆலமர்ச்செல்வன் என்பது திருமந்திரத்தில் வருகிறது என்று நினைக்கிறேன்

திரு சந்திரசேகரேந்திரசரஸ்வதி அவர்களின் குறிப்பொன்றை படிக்க நேர்ந்தது. அதில் அவர் சொல்வது 64 வடிவங்களிலும் சிவனுக்கு ஜோடி உண்டு. அதாவது பைரவர் என்றாலும் பைரவி. நடராஜனுக்கு சிவகாமி. சுந்தரேசுவரருக்கு மீனாட்சி. ஆனால் தென்திசைமுதல்வனுக்கு மட்டும் துணை தூலமாக இல்லை. ஆனால் சூட்சுமமாக மனதில் இருப்பிடம் உண்டு என்கிறார். அதனால் இது மட்டுமே சந்நியாசசிவன். அதனால் கோவில்களில் வலது பிரகாரத்தில் தனித்து அமர்ந்திருப்பார்.

பிற சிவ வடிவங்கள் எல்லாமே கலியுகத்தில் வழக்கொழிய வாய்ப்புண்டு. போகவடிவங்களை நீங்கள் வழிபடாமல் material lifeலேயே லௌகீக்தை பெற முயற்சிக்கலாம். அதாவது நாத்திகனாகவே இருக்கலாமே. உழை, சம்பாதி ஏன் அதற்கு கடவுளை கும்பிட்டுக்கிட்டு என்ற வாதம் கலியுகத்தில் பலமாகும்.

கலியுகத்தில் வேகமூர்த்திகளை வழிபடலாம்தான் ஆனால் அதற்கு எதிர்விளைவும் உண்டு. (வெண்முரசில் வாசகம் வருமே நீங்கள் பெற்றது அத்தனையும் சென்ற பிறவிகளில் கொடுத்தது இல்லை வரும்பிறவிகளில் கொடுக்கவேண்டியது)

அதனால் வேகமூர்த்திவடிவங்களை வழிபட மக்கள் கலியுகத்தில் பயப்படலாம். அதனால் சிபாரிசு செய்யப்படுவது இந்த ஒரு அவதாரத்தைதான்.

பேச்சே கிடையாது. மௌனகுரு! குரு கிடைக்கவில்லையென்றாலும் முக்தி கிடைக்க நேரடியாக தியானிக்கலாம்.

கடலூர் சீனுவின் அருமையான ஒப்பீடு வள்ளலாருடன் ஜக்கிவாசுதேவை ஒப்பிட்டது.

அப்போது வள்ளலாரை கேள்விகேட்ட மரபார்ந்த சைவர்களின் பேரன்பேத்திகள் இப்போது ஏன் கேள்விகேட்கவில்லை.?

கேட்டால் ஜக்கி ‘நீங்கள் மரபுப்படி இப்போது வழிபட்டுக்கொண்டு இருக்கிறீர்களா?’ என்று திருப்பிக்கேட்பார். அதனால் அவர் பக்கமே திரும்பவில்லை. உண்மையில் விலகி ஓடவே செய்கிறார்கள். சிவன் விஷ்ணு வழிபாட்டில் சிவ வழிபாடு என்பது ஜாக்கிரதையாக செய்யப்படவேண்டியது என்பதும் இதற்கு காரணம்.

திராவிட இயக்கத்தினருக்கு இதெல்லாம் எதுவுமே தெரியாது பிறகு எப்படி எதிர்க்க. ஜக்கி பிராமணர் இல்லை என்பதால் எதிர்க்காமல் விட்டுவிட்டார்கள். அவர் பிரம்மாண்டாக வளர்ந்தபிறகு கேட்க முடியவில்லை.

ஜக்கி புல்டோசர் கொண்டு பலவீனமான சுவர்களை இடித்து தள்ளி தன் சாலையை அமைத்துக்கொண்டார்.

அடுத்த முறை ஏதாவது ஜக்கி வீடியோ (குறிப்பாக வெளி அமைப்புகளில் பேசும்போது) பார்த்தால் கவனியுங்கள்….இடக்காலை மடித்து வலக்காலை தொங்கவிட்டு அமர்ந்திருப்பார். ஒரு வீடியோவில் இப்படி அமர்ந்தால் சக்தி கிடைக்கிறது என்கிறார். கோவை ஈஷா மையத்திலும் ஆதியோகி 112 அடி சிலை தென்திசையை பார்த்துத்தான் அமைக்கப்பட்டு இருக்கிறது.

ஆகவே, தென்திசைமுதல்வனை பிரபலப்படுத்தியிருக்கிறார்.

சாஸ்திரப்படி கலியுகசிவன் இந்த தட்சிணாமூர்த்தியே. இனிவரும் நூற்றாண்டுகளிலும் இந்த சிவவடிவமே நிலைத்து நிற்கும். ஆனால் இதையே முதல்யோகி(ஆதி யோகி) என்றும் குறிப்பிடுகிறார்கள். ஏனெனில் முழுமௌனமே சிவனாக இருப்பதால் இது சிருஷ்டிக்கு முந்தைய வடிவம் என்பதால்.

ஶ்ரீ ரமணமகரிஷிகளும் தட்சிணாமூர்த்தியைப்பற்றி சொல்லாத நூலே கிடையாது. அவர் வேற எந்த சிவவடிவத்தை பற்றியும் அதிகம் பேசவில்லை. ஆக ஜக்கி செய்தது மரபுதொடர்ச்சிதான். கூடவே மரபு மீறலும்(மார்பளவு சிலை)

ஆனால் ஒரு பெரும்கேலிக்கூத்து ஒன்று நடந்துவிட்டது. யோகமார்க்கத்தில் தட்சிணாமூர்த்தியை ஆதியோகி என்று பிரபலப்படுத்திக்கொண்டிருக்கும்போதே பக்திமார்க்கத்தில் அவரை நவகிரகவழிபாட்டில் சேர்த்து அவருக்கு மஞ்சள்உடை உடுத்தி,கொண்டைக்கடலை மாலை போட்டு வியாழக்கிழமை பெருங்கூட்டம் குருபகவான் (பிரகஸ்பதி-தேவர்களின் தலைவன். லௌகீக விஷயங்களுக்காக வேண்டுவது.எனக்கு இதுவேணும் அது வேணும்னு) என்று தப்பாக வழிபட்டுக்கொண்டிருக்கிறது. அநேகமாக 90% சிவன் கோவில்களில் இது நடக்கிறது.

அய்யர்களுக்கும் இது தெரியவில்லை என்பது அதிர்ச்சி. தெரிந்தாலும் தடுக்கவில்லை. தடுக்கமுடியவில்லை. பெருங்கூட்டம் வியாழகிழமைகளில் வருகிறது.. தட்சணை அதிகம் அந்த சன்னதியில். குருப்பெயர்ச்சி வசூல் அமோகம். எப்படி தடுக்க?

ஶ்ரீ சந்திசேகரேந்திரர் குறிப்பாக சொல்கிறார் வேதங்களில் தென்திசைமுதல்வன் ஸ்வேதாம்பரேஸ்வரர் என்று குறிப்பிடப்படுகிறார் என்று. அதனால் வெள்ளை துணிதான் உடை, மாலை கூட வெள்ளை பூக்களால் மட்டுமே. பூசை என்பது கூட கிடையாதுதான். சிறிதுநேரம் மௌனமாக நிற்பதுதான் வேண்டுதல்,வழிபாடு. ஆனால் மாற்றிவிட்டார்கள். மரபார்ந்த பக்திமார்க்கம் முடிவுக்கு வந்துகொண்டிருக்கிற காலம் இதுவோ?

வள்ளலார் ஜக்கியைப்போல பெரும் அமைப்பை கட்டமைக்கவில்லை. இது யோகமார்க்கம் என்பதாலும் புதியது இதற்கு முன்பு உதாரணம் எதுவுமில்லை இதுபோல என்பதாலும் ஈஷாவில் நடப்பது கொஞ்சம் அதிர்ச்சிதான் .

ஆனால் ஜக்கி குறிவைப்பது இந்த மரபார்ந்த சைவர்கள், ஐயர்களின் அடுத்த தலைமுறை வாரிசுகளையும்தான்.

பொருளியல் மட்டுமே குறிக்கோளாக இயங்குகிற இந்ததலைமுறை மனநெருக்கடிக்குள்ளாகி கேளிக்கைகளெல்லாம் சரிப்பட்டுவராதபோது தென்திசைமுதல்வனை நாடிவரட்டும் என்றே அவர் அசுரவேகத்தில்(!!) இயங்குகிறார். ஈஷாவின் ஆதியோகியின் 112அடி சிலைகள் இப்போது வாரனாசியிலும், மும்பையிலும், டெல்லியிலும் (வடக்கு,மேற்கு,கிழக்கு) கட்டப்பட்டுக்கொண்டு இருப்பதாக கேள்விப்பட்டேன். அமெரிக்காவில் இரண்டாயிரம் ஏக்கர்களுக்கு ஆசிரமம் விரிவாக்கப்பட்டு World;s largest Meditation Hall கட்டுகிறார்கள் என்று அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். சிவ வழிபாடு என்றதுமே தியானத்திற்கு  கொண்டுவந்துவிடுவதே அவரின் குறிக்கோளாக தெரிகிறது.

ஆக இனிவரும் நூற்றாண்டுகளில் சிவன் எனில் தியானத்தில் அமர்ந்திருக்கும் சிவனே என்பதாம்.

கடலூர் சீனு ஆதியோகி சிலைபற்றி பேசுகிறார். நீங்கள் ஈஷா தியானலிங்ககோயிலுக்கு போயிருக்கிறீர்கள். அங்கே வாசல் தூணிலேயே சிலுவை,பிறை எல்லாம் செதுக்கப்பட்டிருக்கும். ஜக்கியின் குறிக்கோள் இதை ஒரு தனியோகப்பாதையாக வடிவமைப்பது. அவருக்கு இங்கே விவரமான எதிர்ப்புகளே இல்லை.

ஆதியோகி சிலையே கவனியுங்களேன். அதில் பிறை இருக்கிறதுவசதியாய்போய்விட்டது. அதை எடுத்துவிட்டு பார்த்தால் அதை இயேசுவின் முகம்போலவே வடிவமைத்திருக்கிறார். நெற்றியில் விபூதியை பட்டையாக இல்லாமல் நாமமாக ஆக்கி வைணவர்களை கவர முயற்சிக்கிறார்.இது யோகத்தின் பாதையில் சமரச சன்மார்க்கம் எனலாம்.

நமக்கு சிவன் என்றாலே உக்கிரதெய்வம்தான். ஆனால் பெண்மை கலந்த முகம் ஆதியோகிக்கு. தட்சிணாமூர்த்தியையும் அப்படியே கோவில்களில் வடிவமைத்திருக்கிறார்கள். தியானமூர்த்தி தியானத்தில் பெண்மைத்தன்மையை அடைவது நடக்கும்போல. சாந்தமூர்த்தி என்ற பேர் வேறு இருக்கிறது.

இஸ்கானின் கிருஷ்ணருக்கு பிறகு பெரிய அளவில் வெளிநாடு போனது இந்த மவுனகுருதான். தியானமூர்த்திதான் இனி உலகுக்கு அதிகம் தேவைப்படும் சிவன். அதனால் இது சரிதானே!

மாயன்

முந்தைய கட்டுரைதிருவிழாவிலே…
அடுத்த கட்டுரைதிராவிட இயக்க இலக்கியம்- முடிவாக…