இலக்கிய விருதுகள்

images

 

இலக்கிய விருதுகள் அளிக்கப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. இன்னார் இன்னும் இலக்கியம் படைத்துக்கொண்டிருக்கிறார் என்று உலகுக்கு அறிவிப்பது, அல்லது இன்னார் படைப்பது இலக்கியமேதான் என்று உலகுக்கு அறிவிப்பது. இலக்கியம் என்பது விருதுபெறுவதற்காகச்செய்யப்படும் ஓர் உழைப்பு என்ற முற்கோள் இவ்விடத்தில் உள்ளுறை என்பதும் இங்கே உலகு என்று சுட்டப்படுவது விருது பெறுவது குறித்த எதிர்பார்ப்புடன் இருக்கும் பிற எழுத்தாளர்கள் என்பதும் அறியற்பாலது.

விருது பெறுபவர்களைப்பற்றிய விவரணைக்கு ஒரு மலையாளப் பழமொழி சாலப்பொருத்தமானது. ‘களத்துக்கு வெளியே அல்லது வாத்தியாரின் நெஞ்சின்மீது’. வாத்தியார்களின் நெஞ்சுக்கு மீது நின்று நர்த்தனமிடும் மையர்கள் தொடர்ந்து விருது வாங்கும்போது ஏற்படும் பொதுவான அலமுறைகளில் இருந்து தப்புவதற்காகக் களத்துக்கு வெளியே வயதேறி வாதபித்த கபங்களில் ஒன்றிரண்டு மேலோங்கி காடால் வரவேற்கப்பட்டு கழிவிரக்கப்பேச்சுடன்  வாழும் ஒரு சேய்மையர் தெரிவுசெய்யப்பட்டு ஆனந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கப்படுகிறார்.

மையர்கள் விருதுபெறும்போது இவருக்கு இருக்கும் திறமைக்கு இப்போதுதான் இவர் விருதுபெறுகிறாரா, என்ன ஒரு தன்னடக்கம் என்ற எண்ணமே பரவலாக எழுகிறது. இவர் அடுத்ததாக என்ன விருது பெறக்கூடும் என்ற கேள்வி பூவுலகோர் உள்ளக்குவைகளில் எழுந்து நடமிடுகிறது. மாறாக சேய்மையர் விருதுபெறும்போது ‘யார்யா இந்தாள்?’ என்ற அதிர்ச்சியும் ‘யோவ், இவரு இன்னும் இருக்காரா?’ என்ற வியப்பும் ஏற்படுகிறது. ஒரு பெண்ணுக்காகப் பலர் மோதும்போது சண்டையைப்பார்த்துக்கொண்டு சுவரில் சாய்ந்து நின்றவன் பெண்ணைக் கொண்டு போனதுபோல என்று சொல்லும்  ‘மண்ணில் சாய்ந்து நின்றவன் பெண்ணையும் கொண்டுபோனான்’ என்ற மலையாளப்பழமொழியை இதைச்சுட்டப் பயன்படுத்துவர் அறிஞர்.

விலங்குகளில் ஆழ்துயில் அல்லது ஹைபர்னேஷன் என்ற இயல்பு இருப்பதுபோல இலக்கியவாதிகளிலும் உண்டு என மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆய்வேடு ஒன்று சொல்கிறது. நீள்துயிலுக்கு ஆளாகியிருக்கும் இலக்கியவாதி சாகித்ய அக்காதமியால் தீண்டப்படும்போது மெல்ல மெல்ல உயிர்பெற்று அவர் கடைசியாக அறிந்தவற்றில் இருந்து மேலே பேச ஆரம்பிக்கிறார். இரண்டாம் உலகப்போரைப்பற்றி ஒருவர் பேச ஆரம்பித்தாரென்றும் சொல்லப்படுகிறது.

இலக்கியவிருதுகள் ஏன் வழங்கப்படுகின்றன? ஏனென்றால் அவை ஒரு நடுவர்குழுவால் தேர்வுசெய்யப்படுகின்றன. ஆகவே வேறு வழியில்லை. ஏன் நடுவர் குழு அமைக்கப்படுகிறது என்றால் விருது வழங்கும் அமைப்பு அவர்களை அதற்காகப் பணிக்கிறது. ஆகவே அவர்களுக்கும் ஒன்றும் செய்வதற்கில்லை. ஏன் அந்த அமைப்பு செயல்படுகிறது என்றால் அந்த அமைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. ஏன் அந்த அமைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது என்றால் சிலருக்கு அவ்வாறு தோன்றுகிறது என்பதனால். ஏன் தோன்றுகிறது என்றால் அதைப்பற்றி ஜெயகாந்தனின் ஒரு கதையின் தலைப்பையே குறிப்பிட வேண்டும். [நான் உத்தேசித்தது ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. வேறுசிலர் ‘சினிமாவுக்குப்போன சித்தாளு’ போன்ற நாவல்களை நினைவுகொண்டிருக்கலாம்.]

இலக்கிய விருதுகளினால் என்ன பயன்? முதல்பெரும்பயன் பணம்தான். பைல்ஸ், காடராக்ட் ஆபரேஷன் செய்துகொள்வது முதல் பல்செட் மாற்றுவது வரை பல இன்றியமையாத செலவுகளுக்கு அது பயன்படுகிறது.  இரண்டாவதாக மனைவிக்கு முன்னால் எழுத்தாளர் தன்னை நிரூபித்துக்கொள்ள முடிகிறது. ஐம்பது வருடங்களுக்கும் மேலாக அந்த ஆசாமி இரவுபகலாக எழுதியதற்கு இப்படி ஒரு விளைவு இருக்கிறது என்ற புரிதலை அந்த அம்மையார் அப்போதேனும் அடைந்தால் மேலே சென்றபிறகாவது நிம்மதியாக இருக்க விடக்கூடும்.

உபரியான விளைவு என்பது விளம்பரம். பத்திரிக்கைகள், தொலைக்காட்சி , வானொலி போன்றவற்றில் எழுத்தாளர்கள் பேட்டிகளுக்கும் செய்திகளுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். இதழ்களைப்பொறுத்தவரை மேற்படி எழுத்தாளர் எழுதுவது தவிர்த்து வேறு என்ன செய்கிறார் என்பதே முக்கியமானது. விவசாயம், பெட்டிக்கடை, கடிகாரப்பழுதுபார்ப்பு போன்றவற்றை அவர் செய்தால் மிக்க நல்லது. ‘கடிகாரக்கடைக்காரருக்கு சாகித்ய அக்காதமி!’ ‘கதை எழுதும் கடுகுவியாபாரி!’. நீங்க எழுத்துக்கு வந்ததுக்கு என்ன காரணம் என்பது போன்ற சாகாவரம் பெற்ற வினாக்களுக்கு கூடவே வாழும் வரம்பெற்ற பதில்களை அளிக்கலாம். வண்ணப்படங்கள் வெளிவரும்.

தொலைக்காட்சிப்பேட்டி என்பது அரசாங்கத்தின் ஆங்கிலக் ‘கதவுதரிசனத்’ தொலைக்காட்சியில் மட்டும்தான். வயதானவரென்றால் வண்ணச்சால்வை ஒன்றைத் தோளில் போட்டுக்கொள்ள அவர்களே தருவார்கள். மெல்லிய முக ஒப்பனையும் போட்டுவிடுவார்கள். ‘ஒப்பனையில்லா கிராமத்துக் கதாபாத்திரங்களை உருவாக்கியவர்’ என்று சொல்லப்படுபவர் ”என்னோட கதபாத்திரங்கள்லாம் ரத்தமும் சதையுமான மனுசங்க…எங்கூர்லே..” என்று பேசலாகும். அங்கும் ‘உங்கள் இலக்கிய ஆர்வம் எப்படி உருவாயிற்று?’ என்ற கேள்வி எழும். உண்மையில் இது ரிக் வேதத்தில் ரிஷி சார்ங்கன் ரிஷி பராசரரிடம் கேட்ட ஆதிக்கேள்வி என்று ஆய்வாளர் சொல்கிறார்கள். மிஞ்சிய கேள்விகளைத் தொலைக்காட்சி நிறுவனத்துக்குள் நுழைந்ததுமே எழுத்தாளரே எழுதிக்கொடுத்துவிடவேண்டும்.

”இந்த விருது பெற்றது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்ற கேள்விக்கு மூன்று வகையான பதில்கள் உண்டு. அ.இந்தவிருது காலதாமதமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது ஆ. விருதுகள் என்பவை சமூகம் அளிக்கும் அங்கீகாரம். இ . என்னைவிட மூத்த பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு இவ்விருதை சமர்ப்பணம் செய்கிறேன். விருதுபெறுபவரின் வயது அ. எழுபதுக்கு மேல் ஆ. அறுபதுக்கு மேல் இ. அறுபதுக்குக் கீழ் என்னும் வரிசையில் அப்பதில்கள் தெரிவுசெய்யப்படவேண்டுமென்பது இலக்கிய நியதியாகும்.

இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டதுமே விமரிசகர்கள் கிளம்பி விருதுக்குரியவரின் படைப்புகளைக் கிழிகிழியெனக் கிழித்து அவை ஆழமற்றவை என்றோ அழுத்தமற்றவை என்றோ இரண்டும் இல்லாதவை என்றோ சொல்லப்புகுவார்கள். விருதுக்குழுவினர் மற்றும் நடுவர்களும் சந்திக்கு இழுக்கப்பெறுவதுண்டு. நாற்பதுவருடம் திராபையான கதைகளை எழுதிய ஒருவர் செய்த ஒரே தவறு அதற்காக விருது ஒன்றைப்பெற்றுக்கொண்டது மட்டுமே என்ற நிலைப்பாடு பொதுவாக விமரிசனச்சூழலில் காணப்படுகிறது. விருது பெற்றவர் ஓய்வுபெற்ற ஆசிரியராகவோ மளிகைக்கடைக்காரராகவோ இருக்கும்போது உருவாகும் எதிர்ப்பின் வீரியம் சம்பந்தப்பட்டவர் முட்டிக்குமுட்டி தட்டும் வாய்ப்புகள் கொண்ட பதவியிலிருப்பவர் என்றால் மழுங்கிவிடுவதை இலக்கிய இயல்பெனக்கொள்க.

இலக்கியவிருதுக்கள் தேடிவரவேண்டும். ஆக்கம் அதர் வினாவி வரவேண்டுமென்பது செந்நாப்போதார் வாக்கு. அதரை நாமே உருவாக்க வேண்டுமென்பதுடன் அதன் திருப்புமுனைகளில் உரியவர்களை நிறுத்தி வைப்பதும் அவசியமென்பது இலக்கிய உலக நியதி. முயற்சி திருவினை ஆக்கும் என்றதும் அதே தாடிக்காரர் அல்லவா? நூல்களைத் தொடர்ச்சியாக ‘அய்யா அவர்களின் மேலான பார்வைக்கு’ [கிட்டப்பார்வை தூரப்பார்வை தவிர பெரியவர்களுக்கு இருக்கும் இன்னொரு பார்வைக்கோளாறு] என அனுப்பிக்கொண்டே இருப்பதில் தொடங்கி அமைப்புக்குழுத்தலைவரை அவ்வப்போது அன்பளிப்புடன் கண்டு அன்னார் எழுதிய ‘சர்ர்ரீகலிச சொட்டுநீலம்’ போன்ற நூல்களைப் படிக்காமலேயே புகழ்வது வரை இதில் பல முறைகள் உள்ளன. பேராசிரியப்பெருமக்களை இல்லம் தேடிச்சென்று வணங்கிக் கையுறையளித்தல் போன்றவை இன்றியமையாதவை.

பெரும்பாலான விருதுக்கள் பேரளவிலான பரிந்துரையாளர்களின் கருத்துக்கள் கேட்டுத் தொகுக்கப்பட்ட பின்னரே முடிவெடுக்கப்படுகின்றன. பரிந்துரைகளில் குறிப்பிடப்படுவரின் பெயர்களைத் தவிர்த்துவிடுவதற்கே அவை கோரப்படுகின்றன என்ற அறிதலை ஏழெட்டு முறை பரிந்துரைகள் செய்தபின்னரே பொதுவாசகர்கள் அறிய முடியும். ஜனநாயகம் என்பதே பெரும்வாரியான மக்களைப் பங்கேற்கச்செய்து அவர்களுக்குப் பிடிக்காதவர்களைத் தேர்வுசெய்யும் நுண்கலை அல்லவா?

குரைக்கும் நாய் கடிக்காது என்ற பழமொழி இங்கே முக்கியமானது. ஒருவருடத்தில் இன்னாருக்கே விருது என்று பேச்சு பரவிற்றென்றால் அவர் பெயர் ஏற்கனவே தவிர்க்கப்பட்டுவிட்டதென்றே பொருள். ஒரு தேர்வுக்குழு உறுப்பினரே தொலைபேசியில் அழைத்து இவ்வருடம் உங்களுக்கே, விரைவில் அறிவிப்பு வரும் என்று சொன்னாரென்றால் அவ்வருடம் அவரது பெயர் மிகுந்த உழைப்புடன் வெளியே தள்ளப்பட்டுவிட்டதென்றும் அதற்கு முன்னணியில் நின்றவரே அவர்தானென்றும் பொருள்.பரிசுபெறப்போகிறவர் இருளுக்குள் கருப்புக்குதிரைபோல இலக்கை நோக்கி மௌனமாக ஓடிக்கொண்டிருப்பார் அந்நேரம்.

இலக்கியவிருதுகள் பலவகை. நல்லகாமன்கருப்பப்பட்டி முத்துவீரப்பனார் நினைவு அறக்கட்டளை விருது முதல் ஞானபீடம் வரை அவை பல இனத்தவை, பல நிறத்தவை. ரூ.இரண்டாயிரமும் கையால் வண்ண அட்டையிலெழுதப்பட்ட பாராட்டுப்பத்திரமும் முதல் மூன்று லட்சமும் வெண்கலச்சிலையும் வரை அவற்றின் எடையும் மாறுபடுகிறது. ‘எல்லாவிருதும் விருதல்ல சான்றோர்க்கு டெல்லி விருதே விருது’ என்ற மூதுரையும் சில பிராந்தியங்களில் காணப்படுகிறது

முந்தைய வகை விருதுகளில் அந்த இரண்டாயிரத்திலேயே பயணப்படி மற்றும் தங்குமிடச்செலவுகளும் அடங்கும் என்ற உபவிதி இருப்பதை முன்னதாகக் கவனிக்க வேண்டும். இத்தகைய விருதுகளில் பல சின்னஞ்சிறு இக்கட்டுகள் எழுத்தாளர்களுக்கு உருவாவதுண்டு. நல்லகாமன்பட்டி முத்துவீரப்பனாரின் அருமைபெருமைகளை அவர்தம் கொள்ளுப்பேரர்கள் அச்சடித்து அளிக்கும் துண்டுப்பிரசுரத்தை வாசித்தறிந்து மேடையில்  ஒப்புவிப்பதைத் தாங்கிக்கொள்ளலாம்.

ஆனால் எழுத்தாளர் முன்னதாகவே மேடைக்குக் கொண்டு சென்று அமரச்செய்யப்பட்டு மொத்தக் கூட்டமும் காத்திருக்க தானும் சடைந்து காத்திருந்து அமைப்பின் தாளாளர் வெண்ணிற உடையும் வெண்ணிற செருப்புகளும் வெண்ணிறச்சிரிப்புமாக  குத்துப்பாட்டில் அறிமுகமாகும் கதாநாயகன் போல மலர்மாரி மற்றும் வாழ்த்துரைகள் நடுவே கும்பிட்டபடியே மென்னடையில் வருகையளிக்கும்போது கும்பலுடன் பதறியெழுந்து மரியாதைசெலுத்தும் நிலைமை சற்றே கடினமானது. தன் பிறந்தநாளைக் கொத்தனார் தினமாக அறிவித்து ஏழைகளுக்கு அன்னதானம் வஸ்திரதானத்துடன் இலக்கியவிருதுகளையும் வழங்கும் கொத்தனார் முனுசாமியின் இல்லத்து விருதைப்பெறப்போகும்போது கொத்தனாரின் சிறப்புகளைப்பற்றிப் பேசும்படி மேடைக்குப்பின்புறம் நின்று அன்னாரின் அடிப்பொடி மென்மையாக வற்புறுத்துவதை எதிர்கொள்வது அதனினும் கடினமானது.

உச்சகட்டக் கொடுமை என்பது நாற்பது வருடங்களாக இலக்கியம் படைத்து நொந்துபோன முன்னோடிக்கும் கூட்டாலுமூடு பாலையா, கொக்கிரக்குளம் குத்தாலிங்கம் பிள்ளை  இலுப்பையடி கருப்பசாமி முதலான இருபதுபேருக்கும் ஒரே மேடையில் ஒரே தருணத்தில் வரிசையாக இலக்கியச் சாதனையாளர் விருது வழங்குவதுதான். திருப்பூரில் ஒரு விருதுக்கு புதுமையான தேர்வுமுறை இருந்ததாகச் சொல்கிறார்கள். கிடைத்த நூல்களை ஒரு பெரிய டென்னிஸ் மேஜையில் பரப்பி வைப்பார்கள். நிரந்தர நடுவரான பெண் காவல் உயரதிகாரி வந்து கையில் லத்திக்கம்புடன் மிடுக்காக நடந்து அவ்வப்போது ஒரு நூலை லத்தியாலேயே சுட்டிக்காட்டுவார். அதை எடுத்து அடுக்கிக்கொள்வார்கள். விருது அளிக்கப்படும். ஒரு பதிப்பகத்தின் விலைப்பட்டியல் நூலுக்கு விருது கிடைத்தது இவ்வாறுதான்

இவ்வகை விருதுகளை ஒருசிலர் மறுக்கமுற்பட்டபின்னர் தற்போது மேற்படி விருதுகளுக்கு எழுத்தாளர்கள் முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவங்களும் சில இடங்களில் அச்சிடப்பட்டிருக்கின்றன. ‘ஐயா நான்…’ என்று ஆரம்பித்து தகவல்களை அளித்து ‘ஆகவே என் குடும்பநலனையும் உடல்நிலையையும் உத்தேசித்து எனக்கு இந்த விருதை அளித்துக் கௌரவிக்கும்படி மெத்த தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்று அதில் எழுதப்பட்டிருக்கும். பெயர், வயது, சிபாரிசு செய்பவர் யார் போன்ற வினாக்களுடன் ‘விருது பெறுவதற்கான காரணம்’ என்ற கட்டத்தில் ‘வயதாகிவிட்டது’ என்று எழுதுபவர்கள் உடனடியாகப் பரிசீலனைசெய்யப்படுவார்கள்.

விருதுகளில் இரண்டு விருதுக்கள் முக்கியமானவை. ஒன்று சாகித்ய அக்காதமி. இரண்டு கலைமாமணி விருது. சாகித்ய அக்காதமி விருது அவற்றைப் பெறுபவர்கள் மேற்கொண்டு ஏதும் எழுதலாகாது என்ற கோரிக்கையுடன் அளிக்கப்படுகிறது– அதைப் பெரும்பாலும் எல்லா எழுத்தாளர்களும் நிறைவேற்றியிருக்கிறார்கள். சாகித்ய அக்காதமி விருது ‘உன்னை நான் தொட்டேன், இனி நீ என்னை நீ தொடு’ என்ற ஆட்டவிதிகளுக்கு இணங்க அளிக்கப்பட்டு வருகிறது. பணத்துடன் அளிக்கப்படும் சான்றிதழில்  தேசியச்செய்தியில் அதைப்பெறுபவர்களின் இறப்புச்செய்தி அறிவிக்கப்படும் என்ற உறுதிமொழியைத்தான் அச்சிட்டிருக்கிறார்கள்.

கலைமாமணி விருது பல்வேறு திறமைகளுக்காக வழங்கப்படுகிறது. திரைப்படம், இலக்கியம், தமிழாய்வு ஆகியவற்றுடன் கரகம், கும்பம், மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் நாக்கால் மூக்கைத் தொடுதல், தலையைச்சுற்றிக் காதைத் தீண்டுதல் போன்ற பல கலைகளுக்கு இது வழங்கப்படுகிறது. விருதுகளை ஒரு குறிப்பிட்ட நாளில் தலைமைச்செயலக வாசலில் உள்ள அட்டைப்பெட்டியிலே போட்டுவிடுவார்கள். அப்போது அங்கே செல்பவர்கள் முண்டியடித்து அவற்றை எடுத்துக்கொள்ளலாம். இங்கே ‘கையூக்கம் உடையவன் காரியக்காரன்’ என்ற மலையாளப்பழமொழி செயல்படுகிறது.

தமிழுக்கான சாகித்ய அக்காதமி விருதுகள் நெடுங்காலமாக இலக்கியப்படைப்பாளிகளை விட அவ்விலக்கியப்படைப்புகளைப் பற்றிக் கட்டுரை எழுதுபவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்தன. நாவல்களை எழுதுபவர்கள் அவற்றைப்படிக்க வேண்டியதில்லை, கட்டுரையாளர் படித்தாகவேண்டுமே என்ற விளக்கம் அதற்கு அளிக்கப்பட்டது. சமீபகாலமாக வெளிநாட்டு இலக்கிய விருதுகள் இலக்கியத்தை மொழிபெயர்ப்பவர்கள், மெய்ப்பு நோக்கியவர்கள் போன்றவர்களுக்கு அதே நியாயப்படி அளிக்கப்படுகின்றன. இலக்கியம் படைக்கும்போது டீ பொறை அளித்து உதவியவர்களுக்கும் விருதுகள் அளிக்கப்படலாமென ஒரு கோரிக்கையும் அடிபடுகிறது.

வரும்தோறும் வரும் பலநூறு நூல்களில் எவற்றையெல்லாம் தவிர்ப்பது என்பதே பொதுவாக இன்றைய இலக்கிய வாசகனின் கவலையாக இருக்கிறது. இலக்கியவிருதுகள் அவ்வேலையை எளிதாக்குகின்றன என்பதே அவை அளிக்கும் இலக்கியத்தொண்டு எனலாம்.
வழி

அச்சுப்பிழை

ஆத்மாவை நிரூபிக்க அரியவழி!

எங்கும் குறள்

ஆலயம் தொழுதல்

பழமொழிகள்

 

மறுபிரசுரம்/,முதற்பிரசுரம் Aug 30, 2008

முந்தைய கட்டுரைநத்தையின் பாதையில்… கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 63