ஈரோடு விவாதப் பயிற்சிப் பட்டறை

கண்டபடி வெயிலில் அலைந்து சோர்ந்து சென்னை சென்று அங்கிருந்து ஈரோட்டுக்குச் செல்லும்போது என்னால் விவாதப்பயிற்சிப் பட்டறையை நிகழ்த்த முடியுமா என்று ஐயமாக இருந்தது. உள்ளம் சுருங்கி ஒரு புள்ளியாக எங்கோ தத்தளித்துக்கொண்டிருந்தது. இரவு 10 மணிக்கு ஈரோட்டுக்கு சென்றேன். அந்தியூர் மணி, சந்திரசேகர் ஆகியோர் ரயில்நிலையம் வந்திருந்தார்கள். கிருஷ்ணனும் பின்னர் வந்தார்.

காரில் ஈரோட்டிலிருந்து பத்துகிமீ தொலைவில் இருந்த நண்பர் செந்திலின் திருமண மண்டபத்துக்கு சென்றோம். நவீன வசதிகள் கொண்ட விரிவான மண்டபம். மிகப்பெரிய திருமணங்களுக்கும் உகந்தது. நகருக்கு வெளியே என்பதனால் கார் நிறுத்த வசதிகளும் உண்டு. புதியதாக கட்டப்பட்டது. இந்நிகழ்ச்சிக்காக எங்களுக்கு இலவசமாக அவரால் அளிக்கப்பட்டது.

ராஜகோபாலன் ஜானகிராமன்

இரவே 30 பேர் வந்துவிட்டிருந்தார்கள். சிறிதுநேரம் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு பன்னிரண்டு மணிக்கு தூங்கிவிட்டேன். மறுநாள் காலையில் ஆறுமணிக்கு எழுந்தபோது கல்யாணமண்டபக் கூடம் முழங்கிக்கொண்டிருந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்துவிட்டிருந்தார்கள். மொத்தம் பதிவுசெய்துகொண்டவர்கள் 150 பேர். மேற்கொண்டு நண்பர்களாக பத்துபேர். பெரிய கூட்டம்தான். விஷ்ணுபுரம் விவாத அரங்குகளைப்போலவே நிறைந்திருந்தது. பத்துமணிக்குள் அனைவரும் வந்துவிட்டனர். காலையுணவுக்குப்பின் அரங்குக்குச் சென்றோம்.

இந்த அரங்குக்கான முதல் விதை கிருஷ்ணன் போட்டது. ஏழாண்டுகளுக்கு முன்பு பயணத்தில் நான் ஏன் பெரும்பாலான விவாதங்களை தவிர்க்கிறேன் என்று என்னிடம் கேட்டார். நான் அது நித்யா குருகுலத்தில் பெற்றுக்கொண்ட பயிற்சி என்று மறுமொழி சொன்னேன். எது என் விவாதத்திற்குரிய கருத்து என்பதை நானே முடிவுசெய்வேன். எவருடன் விவாதிப்பது, எப்போது விவாதத்தை தொடங்குவது, எப்படி நிறுத்திக்கொள்வது என்பதை எப்போதுமே தெளிவாக வைத்திருக்கிறேன். தகுதியற்றவர்களுடனான விவாதங்களில் ஒருபோதும் இறங்குவதில்லை. தகுதியற்ற முறையில் ஆற்றப்படும் எதிர்வினைகளை வாசிப்பதோ கேட்பதோ இல்லை. விவாதநெறிகளில் அது முதன்மையானது.

அதேசமயம் நான் தத்துவவாதிகளுக்குரிய நிதானம் கொண்டவன் அல்ல,  கொஞ்சம் நிலையற்ற உணர்ச்சிகொண்ட எழுத்தாளன். ஆகவே இரட்டைக் கவனத்துடன் இருக்கிறேன். அதைக்கடந்தும் அவ்வப்போது செல்வதுண்டு. அப்போது உடனே பின்னெட்டு வைத்துவிடுவேன். இந்தப் பயிற்சியால்தான் இத்தனை வசைமழைகளுக்கு அப்பாலும் என் இயல்பான நேர்நிலை உள்ளம் குன்றாமல் நீடிக்கிறேன்.

ஒரு விவாதம் எப்படி நிகழவேண்டும் என்பதற்கான நித்யா குருகுலத்தின் முறைமைகளைத்தான் பேசிக்கொண்டிருந்தோம். பெரும்பாலான பழைய குருகுல முறைமைகளில் கடைப்பிடிக்கப்படும் வழிகள்தான் அவை. கூடவே ஊட்டி குருகுலத்திற்கு மேலைநாட்டு ஒழுங்கும் உண்டு, அதன் பங்கேற்பாளர்களில் பெரும்பாலானவர்கள் மேலைநாட்டினராக இருந்தனர் என்பதனால்.

ஊட்டி குருகுலத்தில் நிகழ்ந்துவரும் இலக்கியவிவாதங்களிலும் விஷ்ணுபுரம் அரங்குகளிலும் பெரும்பாலும் அந்நெறிகளைத்தான் கடைபிடிக்கிறோம். அவை கற்பிப்பவையாகவே இருக்கும், எந்நிலையிலும் கசப்பூட்டுவனவாக அமையாது. அதை ஒரு வகுப்பாக நிகழ்த்தினாலென்ன என்று கிருஷ்ணன் சொன்னார். இன்று உண்மையில் விவாதங்களே இல்லை. காழ்ப்பு நிறைந்த நக்கல்கள், வசைகள், திரித்தல்கள், உள்நோக்கம் கண்டடைதல்கள் போன்றவையே விவாதங்களாக நிகழ்கின்றன. ஆகவே எளியமுறையிலேனும் ஒரு பயிற்சி தேவைதான்.

ஆனால் ஒரு வகுப்பாக அதை நடத்தமுடியுமா என்னும் ஐயம் இருந்தது. ஆகவே அதை பல்வேறு தயக்கங்களுடன் ஒத்திப்போட்டுவந்தேன். ஏழாண்டுகளுக்குப்பின் இப்போது ஒரு கல்யாணமண்டபம் அகப்பட்டமையால் நடத்திவிடலாமென தீர்மானித்தோம். நிதி எப்போதுமே பெரிய பிரச்சினை. இலவச இடம் கிடைக்காமல் எதையுமே நிகழ்த்தமுடியாது. இங்கே பங்கெடுப்பவர்கள் செல்வந்தர்கள் அல்ல, கணிசமானவர்கள் மாணவர்கள். அத்துடன் அவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாகவேண்டும்.

இந்த நிகழ்ச்சியை ஒரு குறிப்பிட்ட வகையில் வடிவமைத்திருந்தோம். நண்பர் ராஜகோபாலன் சென்னையில் காப்பீட்டு ஊழியர்களுக்கான பயிற்சியாளராக பணியாற்றுபவர். நண்பர் செந்தில்குமார் தொழில்துறைப் பயிற்சியாளர், மற்றும் வினாடிவிடை நடத்துநர். இன்று முறையான விவாதம் ஓரளவேனும் நிகழ்ந்தேயாகவேண்டிய துறை சேவை மற்றும் தொழில்துறைதான். ஏனென்றால் அங்கே விளைவை எட்டியாகவேண்டும். நிதியும் நேரமும் வீணாகக்கூடாது. அந்தப்பயிற்சி வெளியே அறிவுலக விவாதங்களிலும், பொதுவான விவாதங்களிலும்கூட உதவிகரமானது.

முதல் அரங்கில் ராஜகோபாலன் ஒரு கருத்தை எப்படி முன்வைப்பது, எப்படி அதை வளர்த்தெடுப்பது என்னும் தலைப்பில் பேசினார். காணொளிகள், சிறு செய்முறைகள் ஆகியவற்றுடன் கலகலப்பான ஓர் அரங்காக அமைந்திருந்தது அது. செந்தில்குமார் ஒரு விவாதத்தை எப்படி நிகழ்த்துவது, அதில் உருவாகும் இடர்கள் என்னென்ன என்பதை காணொளிகள், செய்முறைகளுடன் விளக்கினார். இருவருமே தொழில்முறையாளர்கள். அதற்கான தெளிவான பேச்சும் உடல்மொழியும் கொண்டவர்கள். அரங்கை முழுக்கட்டுப்பாட்டுடன் வைத்திருந்தார்கள். மிகவிரிவான தயாரிப்பு இருந்தது.

உண்மையில் நான் அவர்கள் இருவரின் வகுப்புகளினால் உளம் தூண்டப்பட்டுதான் என் வகுப்பை நடத்தினேன். இதை விவாதத்திற்கான ஆரம்ப வகுப்பு, தர்க்கவியல் சார்ந்த தொடக்கப் பாடம் என்று வரையறுத்திருந்தோம். ஆகவே பங்குகொண்டவர்களுக்கு பெரும்பாலும் அவர்களுக்கு தெளிவற்று ஏற்கனவே தெரிந்திருப்பவையாகவே சொல்லப்பட்டவை இருக்கும். ஆனால் அவற்றை தெளிவாக வரையறை செய்துகொள்ள முடியும். அவற்றை விவாதங்களில் அடையாளம் கண்டுகொள்ள முடியும். அதேசமயம் சில கருத்துக்கள் மெல்லிய அதிர்வை அளித்து புதிய கோணத்தில் யோசிக்கவும் வைக்கும். அதை பின்னர் பலர் சொன்னார்கள்.

தர்க்கவியல்பற்றிய சுருக்கமான அறிமுகத்தை இன்று இணையத்திலேயே பெற முடியும். [சுட்டிகள் பின்னர் அளிக்கப்பட்டன.] ஆனால் தத்துவத்தின் அடிப்படைகளை நூல்வடிவில் வாசித்து புரிந்துகொள்ள முடியாது என்பது ஓர் நடைமுறை உண்மை. அவற்றை வகுப்பில் உதாரணங்கள் வழியாகக் கற்கவே முடியும். விவாதித்துத் தெளிவுகொள்வது மட்டுமே ஒரே வழி. அதற்கான அமைப்புக்கள் இங்கில்லை. ஆகவே இதை ஒழுங்குசெய்தோம்.

தத்துவத்தைக் கற்பதிலுள்ள இருவழிகளை பலர் உணர்ந்திருப்பதில்லை. தத்துவப்பாடம் என்பது முற்றிலும் வேறு. எந்தெந்த தத்துவமுறைகள் உள்ளன, அவற்றின் துணைப்பிரிவுகள் என்னென்ன, எந்தெந்த தத்துவஞானிகள் என்னென்ன சொல்லியிருக்கிறார்கள் என்பது பற்றிய கல்வி அது. கல்லூரிகளில் அதுவே கற்பிக்கப்படுகிறது. அது தகவலறிவை உருவாக்கும். ஆனால் தத்துவம்பற்றிய அறிவு தத்துவ அறிவு அல்ல.

[செந்தில்குமார் ]

தத்துவக்கல்வி பிரச்சினைகளை  ‘தத்துவப்படுத்துவதன்’ வழியாகவே தொடங்குகிறது. அதற்குரிய கருவியே தர்க்கம். தத்துவப்படுத்தி அதை விவாதித்து விரித்தெடுக்கவேண்டும். அதன் மிக எளியபிழைகள் ஆரம்பத்திலேயே களையப்பட்டாலொழிய தத்துவக்கல்வி வெறும் அறிவுப்பயிற்சியாக காலப்போக்கில் ஆணவச்செயல்பாடாக ஆகும். நித்யா குருகுலத்தின் விதிமுறைகளில் ஒன்று, சிரிக்காமல் கற்கும் தத்துவம் தத்துவமே அல்ல.

நான் பொதுவாக விவாதங்களின் வகைகள், அவற்றிலுள்ளஇடர்கள் எல்லைகள் ஆகியவற்றைப் பற்றி ஒரு வகுப்பை நடத்தினேன். விவாதங்களை வகைபிரித்துக்கொள்வதும் அதன் கூறுகள் என்னென்ன என எளிமையாக அறிந்துகொள்வதுமேகூட நாம் பேசுவதைப்பற்றிய மிகப்பெரிய தெளிவை அளிக்கும்.

அதன் பின்னர் மூன்றரை மணிநேரம் இரு அமர்வுகளாக பங்கேற்பாளர்களே இரு அணிகளாகப் பிரிந்து ஒருவரோடொருவர் விவாதித்தனர். அவ்விவாதத்தில் இருந்த பிழைகள் சுட்டிக்காட்டப்பட்டு அவை முன்னர் அரங்கில் பேசப்பட்டன  என்பது நினைவுறுத்தப்பட்டது. இரண்டாவது அமர்வில் சட்டென்று விவாதம் பெரும்பாலான பிழைகளை கடந்துவிட்டிருந்தது வியப்பளித்தது. ஆனால் அனுபவம் கொண்டவரான செந்தில் மூன்றாவது அரங்கில் அவ்வாறு பெரிய வேறுபாடு தெரியாது. அதற்கு மீண்டும் பல வகுப்புகள் தேவையாகும் என்றார்.

அன்று இரவு பன்னிரண்டு மணிவரை பொதுவாக பேசிக்கொண்டிருந்தோம். மறுநாள் ஆறுமணிக்கு  ஒரு காலைநடை. அதன்பின் ஒன்பதுக்கே முதல் வகுப்பு. மேலைதர்க்கவியலின் அடிப்படைக் கொள்கைகள், பொதுவிவாதத்தில் உருவாகும் பிழைத்தர்க்கங்கள் [fallacies] பற்றி ஓர் அரங்கு. ஒவ்வொரு அரங்குக்குப் பின்னரும் ஒரு கேள்விபதில். பங்கேற்பாளர்களே விடைகளை எழுதி மதிப்பிட்டுக்கொள்ளலாம். இறுதியாக இந்திய நியாயவியல் பற்றிய எளிய அறிமுகம். பெரும்பாலும் முனி.நாராயணப் பிரசாத் அவர்களின் நியாயவியல் சார்ந்த நூலில் இருந்து. ஓர் அறிமுகநூல் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் காணொளிகளை போடலாமே, நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதலாமே என நண்பர்கள் கோரினர். மீண்டும் அந்தப் பிழையான புரிதல்தான் இதில் தெரிகிறது. வகுப்பு-செய்முறை- விவாதம் வழியாக வரும் கல்வி வேறு. அதை வாசித்தோ கேட்டோ பார்த்தோ ‘தெரிந்துகொள்வது’ முற்றிலும் வேறு. தெரிந்துகொள்வது வெறும் செய்திகளையே. தெரிந்துகொள்ள நூல்கள் குவிந்து கிடக்கின்றன. இணையத்திலேயே அறிமுகநூல்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அவற்றில் தெரிந்துகொண்டவற்றையே புரிந்துகொள்ள இத்தகைய அமர்வுகள் தேவையாகின்றன.

நான் ஊட்டி குருகுலத்திற்குச் சென்றபின்னரே அவற்றை கற்றுக்கொண்டேன். அதற்கு முன் மேலைத்தர்க்கவியல் சார்ந்து ஒரு நூலை மலையாளத்திற்கு மொழியாக்கம் செய்திருக்கிறேன். நியாயவியல் சார்ந்து ஒரு நீண்ட கட்டுரையை எழுதியிருக்கிறேன். பின்னர் அதன் தெளிவான வடிவம் என் நூல் ஒன்றில் சேர்க்கப்பட்டது. ஆனால் நான் புரிந்துகொண்டது வகுப்புகளில்தான். நானே ஆற்றியபிழைகளை இன்னொருவர் – அன்புடன் – சுட்டிக்காட்டியபின்னரே அதை என்னால் காணமுடிந்தது.

இந்த அரங்கின் நோக்கம் ஒரு தொடக்கத்தை உருவாக்குவதே. இத்தகைய தத்துவ வகுப்புகள் உடனடியாக உருவாக்குவது சிந்தனைக் குழப்பங்களை. ஏனென்றால் நாம் எண்ணிவைத்தவை குலைந்துவிடுகின்றன. அந்தக்குழப்பம் என்பது ஆக்கபூர்வமானது. அது நம்மை சிந்தனைசெய்ய வைக்கிறது. அந்த வகுப்பிலேயே அதை தெளிவுபடுத்திக்கொண்டு திரும்ப இயலாது. அந்தக்குழப்பத்தை நாமே யோசித்து தெளிவடையும்போதுதான் உண்மையான புரிதல் நிகழ்கிறது. அந்தத் தொடக்கம் நிகழ்ந்திருக்குமென நினைக்கிறேன்.

விவாதங்கள் வீண்விவாதங்களாவது அவற்றில் நம் ஆணவம் கலக்கும்போது. கடைசிச்சொல்லை நாம் சொல்லவேண்டுமென எதிர்பார்க்கும்போது. சொல்லிவிட்டு விலகிவிடமுடியாதபோது. விவாதத்தை ஒரு பயிற்சியாக காண ஆரம்பிக்கும்போதே எங்கே விலகவேண்டும் என்றும் தெரிந்துவிடும். கொஞ்சம் விலகிநின்று நோக்கத்தெரிந்தாலே போதுமானது.

விழாவை ஈரோடு நண்பர்கள் ஒருங்கிணைத்திருந்தார்கள். நண்பர்கள் பாரி, மணவாளன், அந்தியூர் மணி, சந்திரசேகர், சிவா ஆகியோரின் உழைப்பால் இது நிகழ்ந்தது. செந்தில்குமாரின் மண்டபம் கிடைத்தமையால் குறைந்த செலவில் நடத்த முடிந்தது. எல்லாவகையிலும் உற்சாகமான பயனுள்ள சந்திப்பு.

 

நிகழ்ச்சி மதிய உணவுடன் முடிந்தது. நண்பர்கள் ஒவ்வொருவராக விடைபெற்றனர். சும்மா அமர்ந்து வழக்கமான கேலிகிண்டல்களுடன் பேசிக்கொண்டிருந்தோம். மாலை ஐந்து மணிக்குக் கிளம்பி அருகிலிருந்த வெள்ளோடு பறவைச்சரணாலயம் சென்று கதிரணைதலை பார்த்தோம். பின்னர் ஈரோடு. நான் நாகர்கோயில் ரயிலில் எட்டரை மணிக்கு ஊர் திரும்பினேன். விஷ்ணுபுரம் விழா முடிந்து வீடு திரும்பும்போது உருவாகும் இனிய சோர்வு எஞ்சியிருந்தது.

முந்தைய கட்டுரைஉகவர், ராமச்சந்திர சிரஸ்
அடுத்த கட்டுரைகோவை கட்டண உரை