அறம் [சிறுகதை]

வாசலில் நின்றிருந்தவர் “உள்ள வாங்கோ… இருக்கார்” என்றார். அவர் யாரெனத் தெரியவில்லை. “வணக்கம்” என்றபடி செருப்பைக் கழட்டினேன். அவர் செருப்பைத் தன் கையில் எடுத்துக்கொண்டார். “வெளியே போட்டா நாய் தூக்கிட்டு போய்டுது சார்… உள்ளே போங்கோ.”

அகலமான கல் வேய்ந்த திண்ணைக்கு அப்பால் அங்கணத்தில் முன்மதிய வெயில் வெண்ணிற திரைச்சீலை தொங்கிக் கிடப்பது போல தெரிந்தது. பக்கவாட்டில் நீளமான திண்ணை போன்ற அறையில் தாழ்வான தூளிநாற்காலியில் பெரியவர் அமர்ந்திருந்தார். மடியில் பித்தளை வெற்றிலைச் செல்லத்தை வைத்துக்கொண்டு பாக்குவெட்டியால் கொட்டைப் பாக்கின் தோலை சீவிக் கொண்டிருந்தார். மூக்குக் கண்ணாடி கொஞ்சம் நழுவி அமர்ந்திருக்க முகத்தில் விளையாடும் குழந்தைகளுக்குரிய கவனம்.

வரவேற்றவர் என் பின்னாலேயே வந்தபடி “எழுத்தாளர் ஜெயமோகன் வந்திருக்கார்…” என்றார். என் பெயரை அவர் பலமுறை காற்று அதிர கூவவேண்டியிருந்தது. பெரியவர் என்னை ஏறிட்டுப்பார்த்து “வாங்கோ வாங்கோ” என்றார். அவர் நாற்காலி எடுத்துப் போடும்படி கையை காட்டியதும் வரவேற்றவர் ஒரு தகர நாற்காலியை விரித்து அருகே போட்டார். “இவரு சாமிநாதன்… ரிட்டயர்டு வாத்தியார்” என்றார். நான் அவரை நோக்கி இன்னொரு வணக்கம் சொன்னேன். “ஜானகிராமனுக்கு ரொம்ப வேண்டியவர்” என்றார் பெரியவர். “உக்காருங்கோ” அவர் என்னை இன்னும் அடையாளம் காணவில்லை என சிரிப்பு தெரிவித்தது.

அமர்ந்து கொண்டபோது நாற்காலி தரையின் சிமிட்டித்தளத்தில் இருந்த பள்ளத்தில் ஒரு கால் சிக்கி சற்று திடுக்கிட்டது. அமர்ந்தவாறே நகர்த்தி அமர்ந்தேன். வளையோடு வேய்ந்த கூரைக்கு கீழே பரவியிருந்த மூங்கில் கழிகளில் நிறைய ஓட்டைகள். அவற்றில் ஒன்றில் இருந்து ஒரு கருவண்டு கிளம்பி தம்புரா நாதத்துடன் சுழன்றது. அவரது பாக்குவெட்டி பல்லாண்டுக்கால பழக்கத்தின் சரளத்துடன் பாக்குத்தோலை நீவி நீவிப் போட்டது. அவல்துணுக்குகள் போல உதிர்ந்த பாக்குத்தோலைச் சேர்த்து ஒரு சின்ன டப்பாவுக்குள் போட்டார்.

“ஊர்லதான் இருக்கேளா?” என்று கேட்டபோது அவர் என்ன உத்தேசிக்கிறார் என்று புரிந்து கொண்டு புன்னகையுடன் “நாகர்கோயிலிலேதான் இருக்கேன்…” என்றேன். என் உதடுகளை பார்க்கிறார் என்று புரிந்ததும் சாய்வுநாற்காலி கையில் கிடந்த தினமலரின் விளிம்பில் “நாகர்கோயில், ஜெயமோகன்” என எழுதினேன். சட்டென்று கண்கள் விரிந்து என் கைகளைப் பற்றிக் கொண்டார். “சந்தோஷம்… ரொம்ப சந்தோஷம்… பெரிய கௌரவம்” என்றார். எனக்குத்தான் கௌரவம் என எழுதினேன். அவர் சிரித்து தலையாட்டினார்.

“ரவி சுப்ரமணியத்தை பாத்தேளா?”

நான் “பாக்கணும்” என்றேன்.

“டேய் சாமிநாது, அத எடுடா… அதைத்தாண்டா… பாக்கிறான் பாரு…”

அவர் சொல்வதை அவரே புரிந்துகொண்டு அவரது புதிய சிறுகதைத்தொகுதியை எடுத்துக்கொடுத்தார்.

“பாவைதான் போட்டிருக்கான். நல்ல பையன்… முன்னாடியே ராயல்டி காசு குடுத்துட்டான். ஏகப்பட்ட டாக்டர் செலவு… அவங்களுக்கு கொடுக்க காசு வேணுமே…”

நான் சிரித்து “பேசாம அவங்களுக்கே நேரடியா குடுத்திடலாம்” என்றேன். அவர் வெடித்துச் சிரித்தார். நகைச்சுவைகளை மட்டும் காது இல்லாமல் கண்ணாலேயே புரிந்துகொள்கிறார் போல.

வெற்றிலையை மெல்லும்தோறும் முகத்தில் சிரிப்பு விரிந்து வந்தது. நான் “வெத்திலை ஒரு போதைதான் என்ன?” என்றேன். அவர் தலையாட்டி “வெத்திலையும் சுண்ணாம்பும் பாக்கும் லயிக்கணும். ராகமும் தாளமும் பாவமும் மாதிரி… அதிலே கடவுளுக்குன்னு ஒரு ரோல் இருக்கு. அது வரணும்…” “நல்ல கவிதை மாதிரி” என்றேன். “ஏன் நல்ல போகம் மாதிரின்னு சொல்லப்படாதோ. சொல்லுங்கோ. எனக்கு ஒண்ணும் அவ்ளவு வயசாகலை” என்று சிரித்தார். “அதிலே மூணாவதா என்ன இருக்கு? ராகமும் தாளமும்தானே…” அவர் தலையை ஆட்டி “மூணாவதா ஒண்ணு இருக்கு… அது எடம். எந்த காதல் கவிதையிலேயாவது எடத்தைச் சொல்லாம இருக்காங்களா?” என்றார்.

சாமிநாதன் வெளியே சென்று தெருமுனையிலேயே இருந்த கடையிலிருந்து கூஜாவில் காபி வாங்கிவந்தார். எனக்கு ஒரு டம்ளர் ஊற்றி விட்டு பெரியவருக்கு அரை டம்ளர் ஊற்றினார். “ஆறிப்போச்சா?” என்றார். “கொஞ்சம்” என்றேன். “எனக்கு ஆறிப்போய் குடிச்சாத்தான் நல்லாருக்கு. சூடா குடிச்சா சூடு மட்டும்தான் தெரியுது. இனிப்பும் மணமும் இல்லாம ஆயிடுது… பாய்ஞ்சு ஓடிட்டிருக்கிற பொண்ணை பாத்து ரசிக்கமுடியுமா? என்ன சொல்றேள்?” நான் சிரித்து, “குதிரைய ஓடுறப்ப மட்டும்தானே ரசிக்க முடியும்?” என்றேன்.

சிரித்துக்கொண்டு “போகட்டும். கவிதையிலே மட்டும்தான் எல்லாத்துக்கும் பதிலிருக்கு. நான் சட்டப்படி காபி சாப்பிடப்படாது. ஆனா ஆசைய எங்க விடுறது? அதனால ஒரு பாதிடம்ளர் குடிச்சுக்கிறது.” சாமிநாதன் “பாதிப்பாதியா நாலஞ்சு வாட்டி ஆயிடும்” என்றார். “போடா” என்றார் செல்லமாக. நான் காபி டம்ளரை வைத்துவிட்டு “அந்தக்காலத்திலே ராயல்ட்டியெல்லாம் வராதோ?” என்றேன். “ராயல்ட்டியா? அதெல்லாம் கெட்ட வார்த்தைன்னா அப்ப?”

நான் “நீங்க எழுதியே வாழ்ந்தவருன்னு கேட்டிருக்கேனே” என்றேன். “எங்க வாழ்ந்தேன்? இருந்தேன். எழுதிட்டே இருந்தேன். வாழ்ந்ததெல்லாம் முப்பத்திமூணு வயசு வரை. அப்பல்லாம் கையிலே நூறு ரூபா இல்லாம வெளியே கெளம்பறதில்லை. பத்துபேரு கூடவே இருப்பாங்க. எல்லாம் சங்கீதம் சாகித்யம்னு ஊறின பசங்க. ராப்பகலா பேசுவோம். பாடுவோம். கைப்பக்கத்திலே கும்மோணம் வெத்தலை சீவல். கூஜால எப்பவும் நல்ல டிகிரி காபி. பக்கோடா முறுக்கு சீடைன்னு சம்புடத்திலே தீரத்தீர வச்சிட்டே இருப்பா. சாயங்காலமா ஆத்தண்டை போவோம். மணல்ல உக்காந்துண்டு பாட்டு. நடுநடுவே இலக்கியம். என்னத்தை இலக்கியம், எல்லாம் வம்புப்பேச்சுதான். நெறைய நாள் மௌனி வந்திருக்கார். அவர மாதிரி வம்பு பேச இனிமே ஒரு எழுத்தாளன் பொறந்து வந்தாத்தான் உண்டு… என்ன சாமிநாது?”

சாமிநாதன் “வம்புக்கு பயப்படுறதுக்கு நம்மாளை மாதிரி ஒருத்தர் பொறந்து வரணுமே” என்றார். பெரியவர் தொடையில் அடித்து சிரித்தார். என்னிடம் “ஜானகிராமனோட லவ் அஃபயரெல்லாம் இவனுக்கு தெரியும்… சொல்லமாட்டான்” என்றார். “அந்தக்கால கும்மோணம் வேற மாதிரி ஊரு. சங்கீதமும் இலக்கியமும் பெருக்கெடுத்தோடின ஊரு. பெரியவா பலபேரு இந்தப்பக்கம்தான், தெரியும்ல?” நான் புன்னகை செய்தேன். “…கூடவே இருக்கு, முடிச்சவுக்கித்தனம் மொள்ளமாரித்தனம் எல்லாம். வாய்ல வெத்தலைய வச்சுண்டு, கோணலா உதட்ட இழுத்துண்டு, புரளி பேசினான்னு வை சிவபெருமான் உமைய தள்ளி வச்சிருவாருன்னா பாத்துக்குங்க.”

அவர் இன்னொருதரம் வெற்றிலைக்குத் தயாராகிறார் என தெரிந்தது. இம்முறை சீவல் பொட்டலத்தை விரித்தார்.

“என்ன பாக்கிறேள்? இங்கல்லாம் சீவல்தான். நாலஞ்சுவாட்டி சீவல் போட்டுண்டா ஒருவாட்டி பழுக்கா போட்டுக்கிறது… என்ன சொல்லிண்டிருந்தேன்?”

“ஆத்திலே பேச்சு…”

“ஆமா… அப்டியே கெளம்பிவந்து ராயர் கிளப்பிலே அடை, இல்லாட்டி பூரி. அப்றம் பசும்பால் காபி. காபில்லாம் நடுராத்திரிகூட குடிப்போம். தினம் ஏதாவது ஒரு கோயிலிலே கச்சேரி இருக்கும். நாதஸ்வரம் எங்க நின்னாலும் கேக்கும். அவுத்துவிட்ட கேஸுதான். வீட்டிலே நாலஞ்சு தறி ஓடிட்டிருந்தது. சரிகை. வடக்கே நாக்பூரிலே இருந்து சரிகை வரும். நல்ல நயம் சரிகை. அதெல்லாம் மத்தவங்களுக்கு நெய்ய தெரியாது. நாங்க நெஞ்சா சரிகையிலே மகாலட்சுமி பூத்து வருவா…”

பாக்கை வாயில் அதக்கியபடி பேசாமல் இருந்தார். பெருமூச்சுடன் “எல்லாம் போச்சு. வடக்கே மெஷின் வந்திட்டுது. சரிகையிலேயே டூப்ளிக்கெட்டு. நயம் சரிகைன்னா தங்கமும் வெள்ளியுமா பட்டு நூலிலே சேர்த்து செய்றது. இப்ப எல்லாமே இமிடேஷன் தானே… பந்தல் சரியற மாதிரி ரெண்டே வருசத்திலே எல்லாம் விழுந்திட்டுது. கடனையெல்லாம் அடைச்சுட்டு பாத்தா கையிலே கால்காசு இல்ல. நாலு பிள்ளைங்க வேற. வேற ஒரு தொழில் தெரியாது. வேற எந்த மனுஷங்களையும் தெரியாது. நடுத்தெருன்னு சொல்லலாம்… என்னடா?”

“ஆமாண்ணா” என்றார் சாமிநாதன்.

“இந்தத் தாயளி இல்லேன்னா அன்னைக்கு பட்டினியிலேயே செத்திருப்போம். எனக்கு தெரியாம அரிசியோ கோதுமையோ கொண்டுவந்து போட்டுட்டு போவான் படவா… இந்த நாயிக்கு ஏகப்பட்ட கடன் வச்சிருக்கேன். சரி, அடுத்த சென்மம் இருக்குல்ல… இவன் தொழுவத்தில நல்ல மயிலக்காளையா பொறந்து கழுத்தொடிய இவன் போற வண்டிய இழுத்திருவோம்… என்னடா?” என்றார் பெரியவர். சாமிநாதன் வேறு பக்கம் திரும்பியிருந்தார். அவரது கழுத்தில் குரல்வளை ஏறி இறங்கியது. அழப்போகிறார் என்று பட்டது.

“அப்பதான் எழுத ஆரம்பிச்சது. எல்லாம் எழுத்துதானே? தெரிஞ்சது அது ஒண்ணுதான். பொண்ணாப் பொறந்திருந்தா தாசித்தொழில் செஞ்சிருப்பேன். எழுத்தாளனா பொறந்ததனால இது… அப்பதான் பதிப்புத்தொழில் ஆரம்பிச்சு ஒருமாதிரியா சூடு புடிச்சு போய்ட்டிருக்கு. அதுக்கு முன்னாடி புஸ்தகம்னா தனியா யாராவது வாங்கினாத்தான் உண்டு. சுதந்திரம் கிடைச்சு அம்பதுகளிலேதான் ஊரூரா பள்ளிக்கூடமும் காலேஜும் வந்திச்சு. சர்க்கார் லைப்ரரிகள் வந்திச்சு. பர்மாவிலே இருந்து காசோட திரும்பிவந்த செட்டியாருங்க இதிலே எறங்கினாங்க. எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணுதான்… மாமன் மச்சான் மொறை. நம்ம பதிப்பாளர் திருச்சியிலே இருந்தார். அண்ணந்தம்பி ரெண்டுபேரு… மெய்யப்பன் பிரதர்ஸுன்னு. புதுமைப்பித்தன் கதைகளிலே கூட அவங்களைப் பத்தி லேசா வரும்… அப்ப அவங்க மெட்ராஸிலே சொந்தக்காரங்க கூட சேந்து புக்கு போட்டிட்டிருந்தாங்க… என்னடா கதை அது சாமிநாது?”

சாமிநாதன் சட்டென்று “நிசமும் நினைப்பும்” என்றார். “ஆமா… அதிலே பொஸ்தக ஏவாரம் பண்றதுக்கு பொடலங்கா ஏவாரம் பண்ணலாம்னு சொல்றான். பொடலங்கா அழுகிரும்டா முட்டாள்னு அண்ணன் சொல்றான்… அண்ணன் தம்பிக்குள்ள புஸ்தக விஷயத்திலே என்ன ஆழமான கருத்து வேறுபாடு பாத்தேளா?” அவர் கோளாம்பியை நோக்கித் துப்பிவிட்டு “ஆனா பொதுவா நல்ல மனுஷங்கன்னுதான் சொல்லணும். இங்க திருச்சியிலே கடைய ஆரம்பிச்சு ஒழுங்கா வியாபாரம் பண்ணினாங்க. காசுதவிர வேற நெனைப்பில்லை. சுத்தமான வியாபாரிங்க… அது அப்டித்தானே. அப்டி இருந்தாத்தான் பொழைக்க முடியும். மூடிட்டு அவனும் நம்மள மாதிரி தெருவிலே நிக்கவா? ஒவ்வொரு உயிரையும் ஒரு வேலைக்குன்னு தானே படைச்சிருக்கு? என்னடா?”

“ஆமாண்ணா” என்றார் சாமிநாதன். “சொல்லப்போனா இவந்தான் கூட்டிட்டு போனான். ‘என்னய்யா புக்கு எழுதறீரா? பக்கத்துக்கு இவ்ளவுன்னு குடுத்திருவோம்’னாங்க. காசுகுடுத்து ஊம்பச் சொல்லியிருந்தாலும் அப்டியே உக்காந்திருப்பேன், அந்தமாதிரி நெலைமை. சரீன்னேன். பக்கத்துக்கு இவ்ளவுன்னு பேச்சு. ராயல்ட்டி ஒண்ணும் கெடையாது. எழுதினா மட்டும் போறாது பிரஸ்சிலே போயி ஒக்காந்து அதுக்கு புரூஃப் பாத்துவேற குடுக்கணும். அப்ப தழுவல் கதைகளுக்கு நல்ல விற்பனை இருந்தது. மர்மம், காதல், திகில், எல்லாம் வேணும். மேதாவின்னு ஒருத்தர் அதேமாதிரி நெறைய எழுதுவார். ‘ஓய் மேதாவி மாதிரி எழுதுவீரா’ன்னார் பெரிய செட்டியார். ‘நானே மேதாவிதானே’ன்னேன். அவருக்கு ஒண்ணும் புரியலை. ஆனா எழுத்தாளன்னா கிறுக்குன்னு ஒருமாதிரி புரிஞ்சுகிட்ட ஆத்மா.”

“நீங்க எழுதின பலநாவல்கள நான் சின்ன வயசிலே படிச்சிருக்கேன். லண்டனுக்கு ஒருத்தன் பாரிஸ்டருக்கு படிக்கப்போறான். அங்க ரொம்ப அழகான ஒரு இளைஞனும் ரொம்ப குரூபியான இன்னொரு இளைஞனும் எப்பவும் சேந்தே இருக்காங்க…”

அவர் அலட்சியமாக “எதையாவது வாசிச்சு அப்டியே திருப்பி தட்டிடறதுதான்… என்ன பெரிசா? மாசத்துக்கு ரெண்டு நாவல் எழுதிருவேன்…”

“ரெண்டா?”

“பின்ன. சிலசமயம் மூணும் நாலும் எழுதியிருக்கேன்…”

“என்ன குடுப்பாங்க?”

“பக்கக் கணக்கு உண்டுன்னு பேச்சு. ஆனா நடைமொறையிலே அவங்களுக்கு தோணினத குடுப்பாங்க… பத்துரூபா முதல் முப்பது வரை… அதுவும் சேந்தாப்ல கெடைக்காது. போயி கேட்டா ஒரு ரூபா எட்டணான்னு குடுத்திட்டு பேரேட்டிலே பற்று வச்சுகிடுவாங்க. எட்டணாவுக்கு பற்று எழுதறதை புதுமைப்பித்தனே எழுதியிருக்கார் கதையிலே.”

நான் அதிர்ந்து “முப்பது ரூபான்னா… மொத்த நாவலுக்கும் அவ்ளவுதானா?”

“ஆமாய்யா… அதுக்குமேலே நமக்கு ரைட் இல்ல. எழுதி கையெழுத்துப் போட்டு குடுத்திரணும்…” என்றார்.

“இப்ப நீ சொன்னியே அந்த நாவலுக்கு இருபது ரூவா.”

“அது அப்பக்கூட ரொம்பக் குறைவுதானே?”

“ஆமா. அப்ப ஒரு பியூனுக்கே மாசம் நூறு ரூபா சம்பளம் இருக்கும்… நான் மாசம் முப்பது ரூபாவுக்கே தவுலடி படுவேன்… சரி… எழுதியிருக்கே” என்று நெற்றியில் கோடிழுத்துக் காட்டினார்.

“அந்த புத்தகம்லாம் இப்பவும் மார்க்கெட்டிலே இருக்கே…” என்றேன்.

“முப்பத்தஞ்சு வருஷமா எப்பவுமே மார்க்கெட்டிலே இருக்கு… இருபது பதிப்பு தாண்டியிருக்கும்.”

“உங்களுக்கு ஒரு பைசா தரலையா?”

சாமிநாதன் சிரித்து, “நல்ல கதை… இவருக்கு சோறுபோட்டு வளத்தேன்னுல்ல சொல்லிட்டிருக்காரு…” என்றார். பின்னர் “ஒரு பெரிய கதை இருக்கே அண்ணா… சொல்லுங்கோ” என்றார்.

“அது எதுக்கு?” என்றார் பெரியவர்.

“தோ பாருங்கண்ணா. இவரு இந்தக்கால ரைட்டர்… தெரிஞ்சுக்கட்டுமே இப்ப என்ன? சொல்லுங்கோ.”

பெரியவர் இன்னொரு முறை வெற்றிலை போட ஆரம்பித்தார். கைகள் நடுங்கியதில் பாக்கை சீவ முடியவில்லை. கொட்டைப்பாக்கு கைநழுவி உருண்டு அங்கணத்தில் விழுந்தது. அவர் சீவல் பொட்டலத்தை பிரித்தார். தலைகுனிந்து கொஞ்சநேரம் அமர்ந்திருந்தார். நான் “பரவாயில்லை, பிறகு சொன்னாபோச்சு” என்று சொல்லும் நிலையில் இருந்தேன்.

பெரியவர் பெருமூச்சுடன், “சொன்னேனே, அப்பல்லாம் ஸ்கூலுக்குண்டான புக்ஸுக்குத்தான் ஏக கிராக்கி. காங்கிரஸ் சர்க்காரு வந்திருக்கு. சுதந்திரப் போராட்ட வீரர்கள் தேசத்தலைவர்களைப் பத்தி சின்னச்சின்னதா புக்ஸ் எல்லா ஸ்கூலிலேயும் இருந்தாகணும்னு சொல்லிட்டாங்க. அப்றம் சயன்டிஸ்டுகள், அசோகர் அக்பர் இவங்கள மாதிரி சரித்திர புருஷர்கள் எல்லாரோட வாழ்க்கை வரலாறுகளும் தேவையா இருந்திச்சு… இவங்க ஒரு நூறு புக்ஸ் போடறதா ஒத்துண்டிருக்காங்க… ஆனா எழுதத்தான் ஆள் இல்லை. என்னை வரவழைச்சு என்னய்யா எத்தனை புக்ஸ் எழுதறீர்னாங்க… முந்தினநாள் எங்க வீட்டிலே ஒரு பெரிய சண்டை. மோரும்சாதமும் ஊறுகாயுமா வாழ்ந்திட்டிருந்தேன். ஒட்டுக்குடித்தனம். போத்திக்க துணி இல்லாம அரிசிச்சாக்க பிரிச்சு தைச்சு போத்தற நிலைமை. கிழிஞ்ச வேட்டி, கிழிஞ்ச சட்டை… ஒரு காக்கி கோட்டு வச்சிருந்தேன். அது இருந்ததனாலே கிழிஞ்ச சட்டை மறைஞ்சிட்டுது… மானம் காத்த கிருஷ்ணபரமாத்மா கோட்டு ரூபத்திலே வந்தார்னு வைங்கோ… ராத்திரி சாப்பாட்டுக்குப் பிறகு பேச்சு ஆரம்பிச்சது. இப்டியே போனா பொண்ணுக்கு ஒரு நல்லது எப்டி பண்றதுனு சொல்லி திட்டறா… நான் பாட்டுக்கு எழுதிட்டிருந்தேன். ஆத்திரத்திலே வந்து புடுங்கி தூக்கிப் போட்டுட்டா… அப்டியே வெறி வந்து நான் எந்திரிச்சு செவுளிலே ஒண்ணு போட்டேன். வெளியே எறங்கிப் போயி பூதநாதர் கோயில் முன்னாடி ராமுழுக்க பனியிலே உக்காந்திருந்தேன்… காலம்பற செட்டியாரு அப்டி கேட்டப்ப சட்னு நாக்கிலே வந்திட்டுது… நூறு புக்கையுமே நானே எழுதறேன்னு சொன்னேன்…”

“நூறையுமா?” என்றேன்.

பெரியவர் சிரித்தபடி, “நாய் துரத்தினா ஓடுறதுக்கென்ன… நூறையும்தான். புக்கு ஒண்ணுக்கு அம்பது ரூபா. நூறு புக்குக்கு அய்யாயிரம்… வெளையாடறியான்னாரு. இல்ல நான் எழுதிருவேன்னேன். அவங்களுக்கு என் வேகம் தெரியும். ஒருவருசத்திலே மொத்த புக்ஸையும் குடுத்திருவியான்னாங்க… கண்டிப்பான்னேன்…”

நான் “மூணுநாளிலே ஒரு புக்கா?” என்றேன்.

“எழுதினேன். இப்ப எனக்கே ஆச்சரியமா இருக்கு. பையனுக்கு ஒரு லெட்டர் போடணும்… ஏழுநாளாச்சு. இன்லண்டிலே நாலுவரி எழுதி அப்டியே வச்சிருக்கேன்… ஆனா அப்ப சாமிவந்தவன் மாதிரி எழுதினேன். ராமுழுக்க உக்காந்து எழுதுவேன். ஒரு நாளிலே நூறுபக்கம்வரை கூட எழுதியிருக்கேன். கை சலிச்சு ஓஞ்சிரும். காலம்பற பாத்தா புறங்கை வீங்கி மெதுவடை மாதிரி இருக்கும். அப்ப நான் சொல்லி என் பொண்ணும் பையனும் எழுதுவாங்க. மூணுநாளைக்கு ஒரு புக்கு வீதம் கொண்டுவந்து கொடுப்பேன். காலையிலே பிரஸுக்கு போயி புரூஃப் பாத்துட்டு மத்தியான்னம் பிரஸ்லேயே ஒரு தூக்கம். நேரா நடந்து லைப்ரரி போயி அடுத்த புக்குக்குண்டான மூலப்புத்தகத்த எடுத்துட்டு வீட்டுக்கு போனா ஒரு காபிய சாப்பிட்டுட்டு எழுத உக்காந்திருவேன். படிக்கிறதும் எழுதறதும் எல்லாம் ஒரே சமயம் நடந்திட்டிருக்கும். சிலசமயம் விடிஞ்சாத்தான் எந்திரிக்கிறது…”

“சொல்றதுக்கென்ன. ஒரு வருசத்திலே முடிச்சு குடுத்திட்டேன்னு வைங்க… கடைசி புக்கு வந்தப்ப முதல்புக்கு மூணாம் எடிஷன் வித்திட்டிருக்கு…”

நான் “அந்த புக்ஸ் எல்லாத்தையுமே நான் வாசிச்சிருக்கேன்… இப்பகூட புதிசா போட்டிருக்காங்க…”

“ஆமா… வந்திட்டேதான் இருக்கு…” என்று சிரித்தார்.

“எப்டியோ ஒரு ஆசானா நாம நம்மால முடிஞ்சத பிள்ளைகளுக்கு பண்ணியிருக்கோம்.” பெருமூச்சுடன் “ஆனா நான் கதை எழுதறத விட்டுட்டேன். இலக்கியமெல்லாம் எங்கியோ போயாச்சு. ஒருத்தரையும் பாக்கிறதில்லை. சிலசமயம் கரிச்சான்குஞ்சு ரோட்டில பாத்தா ‘டேய் தாயோளி நில்லுடா பழி’ம்பார். தூரம்னா ‘வேலை கெடக்கு சுவாமி’ன்னு போய்டுவேன். பக்கம்னா அப்டியே சட்டையப் புடிச்சிருவார். பச்சபச்சயா எதாவது வைவார்… அவருக்கென்ன ஆனா ஆவன்னான்னு கத்தினா மாசம் சம்பளம் வீட்டுக்கு வந்திருது… இலக்கியம் பேசலாம். நமக்கு எல்லாமே போச்சே… ரெண்டு நாவல் நாலஞ்சு கதை தேறும். அதை எவனாம் வாசிக்கணும்… வாசிப்பான்…”

சாமிநாதன் “அதான் புதுமைப்பித்தன் சொன்னானே” என்றார். மனப்பாடம் ஒப்பிப்பது போல “இருள் இருந்தால் தானே ஒளி? ஒளி வராமல் போய்விடுமா? அதுவரை காக்கவேண்டியதுதான்.” பெரியவர் புன்னகை பூத்தார். அத்தனை துயரம் நிறைந்த புன்னகையை சமீபத்தில் நான் கண்டதில்லை. சாமிநாதன் “எத்தனை காலமோ? ஒளிவரும்போது நாம் இருக்கவேண்டும் என்ற அவசியமுண்டா?” என்று முடித்தார். அது புதுமைப்பித்தனின் “கடிதம்” கதை என்று நினைத்தேன்.

“சொல்லுங்கோ… மெயின் பாயிண்டுக்கு வரலியே” என்றார் சாமிநாதன்.

“எதுக்குடா அதெல்லாம்? பொணம் சிதையிலே எரியறப்ப எல்லாம்தான் சேர்ந்து எரியறது. காமம் குரோதம் மோகம் எல்லாமே… லைஃபிலே இதுக்கெல்லாம் ஒரு அர்த்தமும் இல்லடா…”

சாமிநாதன் “இல்லண்ணா… அவரு தெரிஞ்சுக்கிடணும்…” என்றார்.

பெரியவர் என்னைப்பார்த்து சிரித்து “இவரு வேற மாதிரி ஆளு. இவருக்குக் கதவெல்லாம் தானா தெறக்கும். இல்லேன்னா மனுஷன் ஒடைச்சிருவார். சில ஜாதகம் அப்டி…” என்றார்.

மீண்டும் கொஞ்ச நேரம் அமைதி. “அப்பப்ப வாங்கினது போக மிச்சபணத்த அவங்க கிட்டயே வச்சிருந்தேன். நம்ம கைக்கு வந்தா தரித்திர லெட்சுமிக்கு பூசை நைவேத்தியம்னு பண்ணவே சரியாப்போயிரும்… வாங்கினது போக மூவாயிரம் ரூபா செட்டியார் கையிலே இருந்தது. அத நம்பிநான் பொண்ணுக்கு கல்யாணம் வச்சிட்டேன். கையிலே தாம்பூலத்தோட போயி செட்டியார் முன்னாடி நின்னேன். இந்தமாதிரி மங்கலம் இருக்குன்னு சொல்லி பணத்த கேட்டேன். ‘மூவாயிரமா… என்னய்யா ஒளறுறீர்? புக்கு எழுதறதுக்கு மூவாயிரமா..?’ அப்டீன்னு சொல்றார். நான் வெளையாடுறார்னுதான் ஆரம்பத்திலே நினைச்சேன். கொஞ்சம் போனப்பதான் புரிஞ்சுது. நெஜம்மாத்தான் சொல்றார். அதுவரைக்கும் அஞ்சு பத்துன்னுதான் அவரு குடுத்திருக்காரு. மூவாயிரத்த தூக்கி ஒரு எழுத்தாளனுக்கு குடுக்கிறத நெனைச்சே பாக்க முடியலை…”

“நூறு புக்கு வித்திருக்காரே…” என்றேன்.

“ஆமா. அதிலே வந்த லாபத்திலே கடையே டபுள் திரிபிளா வளர்ந்தாச்சு. திருச்சியிலே மச்சுவீடு கட்டியாச்சு. ஊரிலே நெலபுலம் வாங்கிப்போட்டாச்சு. ஆனா அதெல்லாம் கண்ணுக்குப் படாதே. எனக்கு லெட்ச ரூபா கடன் இருக்கேங்கிறார். வியாபாரத்த விரிவுபண்ண வாங்கின கடன். கருப்பட்டி சிப்பல் மாதிரி விதவிதமா புக்கு அச்சுபோட்டு குடோன் பூரா கட்டுகட்டா அடுக்கி வச்சிருக்கார். எல்லாம் பணம். ஆனா வியாபாரத்திலே எப்பவும் முதல் கடனாத்தானே இருக்கும்… அவருக்கு அதான் கண்ணுல படுது. அந்தப்பணத்த வச்சு சம்பாரிக்கிறது படலே. ‘மூவாயிரமா பேசவே படாது. எழுநூறுன்னா தர்ரேன்’ங்கிறார். ‘சாமி வயத்திலே அடிக்காதீங்க’ன்னு கெஞ்சினேன். சட்டுன்னு கண்ணிலே தண்ணி கொட்ட ஆரம்பிச்சிட்டுது. ‘என் பொண்ணு வாழ்க்கைய கெடுக்காதீங்க மொதலாளீ’ன்னு சொல்லி மேஜைக்கு அடியிலே குனிஞ்சு செட்டி காலைப் புடிச்சுகிட்டேன். காலை உதறிட்டு எந்திரிச்சு காட்டுக்கத்தலா கத்தினாரு. ‘என்னய்யா என்னை ஏமாளின்னு நெனைச்சீரா? காலைப்புடிச்சா காச குடுத்திருவேனா? நாலணா எட்டணாவா உழைச்சு சேத்த காசுய்யா… நீ என்னய்யா எழுதினே? நாலு புக்கை வாசிச்சுத் திருப்பி எழுதினே. அதுக்கு நாலாயிரமா… எழுதறது என்ன பெரிய மசிரு காரியமா? ஸ்கூல் புள்ளைங்ககூடத்தான் நாள் முச்சூடும் எழுதறதே? இத்தனைநாளு உன் வீட்டிலே அடுப்பெரிஞ்சது என் காசிலே தெரியுமா? நன்னிகெட்ட நாயே. உன்னையெல்லாம் மனுசன்னு நம்பினேனே’ அப்டீன்னு கத்தறார்.”

“கூட்டம் கூடிட்டுது. ‘முதலாளி சொல்றதுதானே நியாயம், என்ன இருந்தாலும் ஏழு வருசமா சோறுபோட்ட தெய்வம்ல அவரு?’ங்கிறாங்க. அப்பதான் தம்பி வந்தான் அவனும் என்னைய திட்டினான். நான் வெறிபுடிச்சு கத்த ஆரம்பிச்சேன். ‘என்னை ஏமாத்தி சொத்து சேக்கிறே நீ உருப்பட மாட்டே’ன்னேன். அவன் சட்டுன்னு என்னை கைநீட்டி அடிச்சிட்டான். நாலுபேரு புடிச்சுகிட்டாங்க. ‘என் உப்ப தின்னிட்டு எனக்கே சாபம் போடுறியா போடா’ன்னு பெரியவரு கத்தறாரு. நான் தெருவிலே நின்னேன். ஒண்ணும் ஓடலை. சாயங்கால நேரம். வேற எங்க போறதுன்னும் தெரியலை. வீட்டுக்கு எப்டி போறது? எல்லா ஏற்பாடும் நடந்திட்டிருக்கு. காசுவேணும். நகை, புடவை எடுக்கணும். பந்தலுக்கு சாப்பாட்டுக்கும் அட்வான்ஸ் குடுக்கணும்… அங்கேயே நின்னேன். இருட்டினதும் மறுபடியும் முதலாளி காலிலே விழுந்து அழுதேன். போடா போடான்னு புடிச்சு வெளியே தள்ளிட்டாங்க.”

“எட்டுமணிக்கு கடைய பூட்டிட்டாங்க. ராத்திரி முழுக்க அங்கியே நின்னேன். எப்டி நின்னேன் எதுக்கு நின்னேன் ஒண்ணுமே தெரியலை. காதுல ஞொய்னு ஒரு சவுண்டு வருது. பின்னாடி அந்தசத்தம் பெரிய சிக்கலா ஆச்சுன்னு வைங்க… ‘சத்தங்கள்’ வாசிச்சிருப்பிங்க..”

நான் “ஆமா” என்றேன். அவர் கொஞ்ச நேரம் ஒன்றும் சொல்லவில்லை. அந்த அமைதி கருங்கல்போல எடையுள்ளதாகத் தோன்றியது. பின்பு பெருமூச்சுடன் மேலும் சொன்னார் “காலையிலே கடை திறக்க அவர் வர்றப்ப நான் திண்ணையிலே உக்காந்திருந்தேன். அவரைப் பாத்ததும் என் கண்ணிலே இருந்து கண்ணீரா கொட்டுது. கையை மட்டும்தான் கூப்ப முடிஞ்சது. ஒரு சொல் வெளியே வரலை. தொண்டைக்குழியிலே மணல் அடைச்சுக்கிட்டது மாதிரி இருந்தது… அவர் என்னை கொஞ்சநேரம் பார்த்தார். பீயப்பாக்கிற மாதிரி ஒரு பார்வை… கடையத் திறந்து உள்ள போனார். கல்லாவிலே கொஞ்ச நேரம் உக்காந்திருந்தார். சட்டுன்னு என்ன தோணிச்சோ வெளியே வந்து ‘தாளி டேய் நீ சோத்த திங்கிறியா பீயத்திங்கிறியா? மனுஷனாய்யா நீ? ஒத்த தகப்பனுக்கு பொறந்தவனாடா’ன்னு வைய ஆரம்பிச்சார். தெரியுமே, அவங்க வஞ்சாங்கன்னா தோலு உரிஞ்சு போயிரும்… நான் கண்ணீரோட ‘எனக்கு கதியில்லே, நான் போயி சாகத்தான் வேணும்’னேன். ‘போய் சாவுடா நாயே… இந்தா வெஷத்த வாங்கு’ன்னு ஒத்த ரூபாய என் மூஞ்சியிலே விட்டெறிஞ்சார்.”

“கொஞ்ச நேரம் பிரமை புடிச்சாப்ல உக்காந்திருந்தேன். என்னமோ ஒரு நெனைப்பு வந்து நேரா விறுவிறுன்னு நடந்தேன். செட்டியார் வீட்டுக்கு போய்ட்டேன். காலம்பற பத்துமணி இருக்கும். பெரிய ஆச்சி, அதான் பெரியவரோட சம்சாரம் திண்ணையிலே உக்காந்து யாரோ பக்கத்துவீட்டுக் கொழந்தைக்கு இட்லி ஊட்டிகிட்டிருக்கா நேரா போய் கைகூப்பிட்டு நின்னேன். ‘என்ன புலவரே’ன்னா. அவளுக்குப் பெரிசா ஒண்ணும் தெரியாது. எழுத்து கூட்டத் தெரியும் அவ்ளவுதான். நான் கைகூப்பிட்டு இந்தமாதிரின்னு சொன்னேன். அவகிட்ட சொல்லி செட்டியார்கிட்ட சொல்ல வைக்கணும்னுதான் போனேன். ஆனா சொல்லச் சொல்ல எங்கேருந்தோ ஒரு வேகம் வந்திச்சு. உடம்பே தீயா எரியறது மாதிரி. கைகால்லாம் அப்டியே தழலா நெளியற மாதிரி… ‘நான் சரஸ்வதி கடாட்சம் உள்ளவன்’ன்னு சொன்னப்ப அப்டியே சன்னதம் வந்திட்டுது. என் குரல் மேலே போயிடுச்சு. அதுக்குமேலே நான் செஞ்சதெல்லாம் எப்டி செஞ்சேன்னு இன்னிக்கும் எனக்கு ஆச்சரியம்தான். ‘என் வயத்திலே அடிச்ச நீயும் உன் பிள்ளகுட்டிகளும் வாழ்ந்திடுமா… வாழ்ந்தா சரஸ்வதி தேவ்டியான்னு அர்த்தம்’னு சொல்லிட்டே சட்டுன்னு பேனாவ எடுத்து ஒரு வெண்பாவை எழுதி அவ தட்டிலே இருந்த இட்டிலிய எடுத்து பூசி அவ வீட்டு கதவிலே ஒட்டிட்டு வந்திட்டேன்.”

“வரவர வேகம் குறைஞ்சுது. நடக்கமுடியாம ஆச்சு. சாப்பிட்டு ஒரு நாள் தாண்டியாச்சு. ஆனா சோத்த நினைச்சாலே கொமட்டல். நேரா போனேன். கையிலே கிடந்த பழைய வாட்ச வித்து மூக்குமுட்ட குடிச்சேன். எப்ப வீட்டுக்கு வந்தேன் எங்க படுத்தேன் ஒண்ணுமே தெரியாது. என் பெஞ்சாதி ஓடிப்போய் கெணத்திலே குதிக்கப் பாத்திருக்கா. பகலிலே வீடு முழுக்க ஆளானதனால புடிச்சுக்கிட்டாங்க. பொணம் மாதிரி படுத்திருக்கேன். யார்யாரோ வந்து உசுப்பறாங்க. வையறாங்க. யாரோ காலாலே எத்தறாங்க. ஆனால் காவேரி மணலிலே புதைஞ்சு கிடந்துட்டு மேலே நடக்கிறத பாக்கிறது மாதிரி இருந்தது. நான் செத்தாச்சுன்னு தோணிச்சு. செத்துட்டேன்னு நினைக்கிறப்ப என்ன ஒரு நிம்மதி. எல்லா எடையும் போச்சு. நாப்பது வருசமா இருந்த லெச்ச ரூபா கடனை ஒரேநாளிலே அடைச்சுட்டா எப்டி இருக்கும். அதேமாதிரி… அப்டி ஒரு நிம்மதி. காத்துமாதிரி, பஞ்சுமாதிரி… அப்பதான் என் காதிலே முதல்முதலா ஒரு கொரலை கேட்டேன். என் பேரையே யாரோ சொல்றது மாதிரி. மென்மையா பெத்த அம்மா கூப்பிடுற மாதிரி… சாவு எவ்ளவு அழகானதுன்னு அப்ப தெரிஞ்சுகிட்டேன். இப்ப சாவ பயமில்லை. சிரிச்சுட்டே காத்திண்டிருக்கேன்.”

“அது என்ன வெண்பா?” என்றேன். நான் ஊகித்திருந்தேன். “அறம்தான்… அப்டி ஒருவழக்கம் இருக்கே. சத்தியமா அதைப்பத்தி எங்கியோ கேட்டதோட சரி. கரிச்சான் குஞ்சுவும் நானும் யாப்பு பத்தி கொஞ்சம் பேசியிருக்கோம். மத்தபடி எனக்கு முறையா தமிழே தெரியாது. நான் எழுதின முதல்செய்யுளும் அதுதான். கடைசிச் செய்யுளும் அதுதான். பாட்டு நினைவில இல்ல. அதை மறக்கணும்னுதான் இருபத்தஞ்சு வருஷமா முயற்சிசெய்றேன். ஆனாலும் கடைசி ரெண்டுவரியும் ஞாபகத்திலே இருக்கு. ‘செட்டி குலமறுத்து செம்மண்ணின் மேடாக்கி எட்டி எழுகவென் றறம்…’”

நான் உத்வேகத்துடன் “அப்றம் என்னாச்சு?” என்றேன்.

“நடந்தது என்னான்னு பின்னாடி சொல்லித்தான் எனக்கு தெரியும். ஆச்சி அப்டியே போட்டது போட்டபடி விரிச்ச தலையும் கலைஞ்ச சேலையுமா நேரா போயி கடைமுன்னாடி நின்னிருக்கா. புலவனோட பணத்த மிச்சம் மீதி இல்லாம இப்பவே குடுக்கணும்னு சொல்லியிருக்கா… நெனைக்கவே சிலுக்குது. எப்டி இருந்திருப்பா. அந்தக்காலத்திலே ஒரு ஆச்சி மதுரய எரிச்சாளே, அவ தானே இவ? எல்லாம் ஒரே வார்ப்பில்ல? செட்டியார் நடுங்கிப்போயி ‘இல்லம்மா குடுத்திடறேன்… சத்தியமா நாளைக்குள்ள குடுத்திடறேன்’னிருக்கார். ‘இன்னிக்கே குடு, இப்பவே குடு. நீ குடுத்த பின்னாடி நான் எந்திரிக்கிறேன்’னு சட்டுன்னு நேராபோயி தார் ரோட்டிலே சப்புன்னு உக்காந்திட்டா. நல்ல கறுத்த நெறம். நெறைஞ்ச உருவம். நாலாளு சைஸ் இருப்பா. முகத்திலே கனமா மஞ்சள். காலணா அகலத்துக்கு எரியறாப்ல குங்குமம். பெருக்கிப்போட்ட தாலி சும்மா வாகைநெத்து குலைகுலையா விளைஞ்சது மாதிரி கழுத்து நெறைஞ்சு… அம்மன் வந்து முச்சந்தியிலே கோவில்கொண்டது மாதிரில்ல அவ இருந்தா? ஒரு வார்த்தை சொல்லமுடியாது. சங்கைக் கடிச்சு ரத்தம் குடிச்சிருவா…. செட்டி எந்திரிச்சு ஓடினான். பேங்கிலே அவ்ளவு பணம் இல்லை… கைமாத்துக்கு ஓடினான். தெரிஞ்சவங்க காலிலே விழுந்தான். பணம் தெரட்ட சாயங்காலமாச்சு. அதுவரை அப்டியே நடுரோட்டிலே கருங்கல்லால செஞ்ச செலை மாதிரி கண்ணமூடி உக்காந்திட்டிருக்கா. தீ மாதிரி சித்திரமாச வெயில். நல்ல அக்கினி நட்சத்திரம்யா அது… தார் ரோடு அப்டியே உருகி வழியுது. செட்டி டாக்ஸிய புடிச்சுகிட்டு நேரா எங்க வீட்டுக்கு வந்தான். நான்தான் பொணமா கெடக்கறேனே. என் பொஞ்சாதி காலிலே பணத்தைக்கொட்டி ‘என் குடும்பத்த அழிச்சிராதேன்னு உன்புருஷன்கிட்ட சொல்லு தாயீ… என் கொலத்துக்கே வெளக்கு இப்ப தெருவிலே உக்காந்திருக்கா… அவன் பணம் முச்சூடும் வட்டியோட இந்தா இருக்கு’ன்னு சொல்லிட்டு அதே காரிலே திரும்பி ஓடினான். நேராப்போயி அவ முன்னாடி துண்ட இடுப்பிலே கட்டிகிட்டு ‘என் கொலதெய்வமே, எந்திரி. நான் செய்யவேண்டியத செஞ்சுட்டேன் தாயீ’னு சொல்லி கதறிட்டான். நாலுபேரு சேந்து அவளத் தூக்கினாங்களாம். சேலை பாவாடையோட தோலும் சதையும் வெந்து தாரோட சேர்ந்து ஒட்டியிருந்துச்சுன்னு சொன்னாங்க.”

நான் அந்தக்காட்சியை பலமடங்கு துல்லியமாக கண்டுவிட்டிருந்தேன். அவர் அந்தக்காலத்துக்கே சென்று அமர்ந்திருந்தார். வெளியே யாரோ “கோலப்டீய்” என்று கூவிக்கொண்டு சென்றார்கள். நான் எங்கே இருக்கிறேன் என்றே கொஞ்ச நேரம் எனக்குத் தெரியவில்லை.

பெரியவர், “கல்யாணம் நல்லா நடந்துது. செட்டியாரும் தம்பியும் ஒருபவுனிலே ஒரு மோதரத்தை குடுத்தனுப்பியிருந்தாங்க. பத்துநாள் கழிச்சு என்னைக் கூட்டிட்டு வரச்சொன்னா ஆச்சி. நானும் போனேன். காலிலே விழுந்திரணும்னு நினைச்சுத்தான் போனேன். எப்ப பொண்ணு கல்யாணம் முடிஞ்சுதோ அப்பவே மனசு மறு திசையிலே போக ஆரம்பிச்சாச்சு. எதுக்காக இவ்ளவு கோவப்பட்டேன்னு நினைச்சுகிட்டேன். கடனை வாங்கித் தொழில் செய்றவன்கிட்ட போயி மொத்தமா பணத்தைக் கேட்டது என் தப்புதானேன்னு நினைப்பு ஓடுது.”

“வீட்டுக்குள்ள நுழைஞ்சதுமே கைய கூப்பிட்டு என் பக்கத்திலே வந்து நின்னா ஆச்சி. ‘புலவரே உங்க வாயாலே என் குலத்த வாழ்த்தி ஒரு பாட்டு பாடிட்டு போகணும். என்ன தப்பு பண்ணியிருந்தாலும் மன்னிக்கணும். லச்சுமி வருவா போவா… சரஸ்வதி ஏழு சென்மம் பாத்துத்தான் கண்ணு பாப்பான்னு சொல்லுவாங்க… நீங்க பெரியவரு. என் வீட்டு முற்றத்திலே நிண்ணு கண்ணீர் விட்டுட்டீங்க… அந்த பாவம் எங்க மேலே ஒட்டாம உங்க சொல்லுதான் காக்கணும்னு’ சொன்னா. என்னா ஒரு சொல்லு. தங்கக்காசுகள எண்ணி எண்ணி வைக்கிறா மாதிரி… முத்துச்சரம் மாதிரி… நாமளும்தான் ஒரு பாரா எழுதறதுக்கு நாலுவாட்டி எழுதி எழுதி பாக்கோம். நிக்க மாட்டேங்குது. சரஸ்வதி கடாட்சம்னா என்ன? மனசிலே தீயிருந்தா அவ வந்து ஒக்காந்தாகணும். அதான் அவளோட விதி… மத்ததெல்லாம் சும்மா… என்ன சொல்லிட்டிருந்தேன்? எனக்கு கைகால் ஓஞ்சுபோச்சு. நாக்கு உள்ள தள்ளியாச்சு. அப்டியே நாக்காலியிலே தலைகுனிஞ்சு ஒக்காந்திருக்கேன். அவளை ஏறிட்டு பாக்க முடியலை. அவ காலையே பாக்கிறேன். காலிலே மெட்டி. அதுக்கு ஒரு ஐஸ்வரியம் இருக்கு… அது வீட்டுக்குள்ள இருக்கிற பெண்டுகளோட ஐஸ்வரியம். நாடாளறதுக்குதான் தர்மம்னு எவன் சொன்னான்? தர்மம் இருக்கிறது வீட்டிலே அய்யா. தர்மபத்தினின்னு சும்மாவா சொன்னாங்க. சட்டுன்னு வெண்பா வந்துட்டுது. சடசடன்னு பேப்பரை எடுத்து எட்டு பாட்டு எழுதிட்டேன். அத ஆச்சி கையிலே குடுத்தேன். ரெண்டு கையாலே வாங்கி கண்ணுலே ஒத்திக்கிட்டா.”

“என்ன ஆச்சரியம்னா அந்த முத வெண்பாவிலே முதல் ரெண்டு வரி மட்டும்தான் ஞாபகமிருக்கு. ‘மெட்டி ஒளிசிதற மெய்யெல்லாம் பொன்விரிய செட்டி குலவிளக்கு செய்ததவம்’ அவ்ளவுதான். மிச்சவரிய பல வாட்டி ஞாபகப்படுத்தி பாத்திருக்கேன். சரி, அவ்ளவுதான் நாம செஞ்சது, மிச்சம் சரஸ்வதி வெளையாட்டுன்னு நினைச்சுகிட்டேன். உள்ள உக்கார வச்சு பட்டுப்பாய் விரிச்சு அவளே முன்னால நின்னு வெள்ளித்தட்டிலே சாப்பாடு போட்டா. ஒரு சின்ன தாம்பாளத்திலே பொன்நாணயம் மூணு வச்சு, கூட ஐநூறு ரூபா பணமும் வச்சு குடுத்தா. புள்ளைங்கள கூப்பிட்டு ஆசீர்வாதம் வாங்கிக்கச் சொன்னா… அன்னிக்கு படி எறங்கினவன் அதுக்கு முன்னாடி இருந்த நான் இல்ல. செத்துப் பொழைச்சேன். அப்ப தெரிஞ்சுது சொல்லுன்னா என்னான்னு. அது அர்ச்சுனன் வில்லு. எடுக்கிறப்ப ஒண்ணு தொடுக்கிறப்ப நூறு. படுறப்ப ஆயிரம்… என்னடா சாமிநாது?”

“அறம்னு சும்மாவா சொன்னாங்க…” என்றார் அவர்.

“அறம் கூற்று ஆகும்னுல்ல இளங்கோவும் சொல்றான்.” பெரியவர் சாமிநாதனை புதிய ஒருவரை பார்ப்பது போலப்பார்த்தார். பின்பு தனக்குள் சொல்வது போல “ஆமா அறம்தான். ஆனா அது அவகிட்ட இல்ல இருந்தது…” என்றார்.

முந்தைய கட்டுரைதிரைப்படங்கள்
அடுத்த கட்டுரைஇசை ஒருகடிதம்