கட்டணக் கழிப்பறை, பேப்பர்மேன், கர்சீப் விற்பவர்.. ரங்கநாதன் தெருவின் குட்டிக் கதைகள்..! அங்காடித் தெரு சுவாரஸ்யம் – #9YearsOfAngadiTheru
24 ஆம் தேதி வீட்டிலிருந்து கிளம்பி வெவ்வேறு ஊர்களிலாக அலைந்துகொண்டிருந்தேன். தனிமை. எவரிடமும் பேசாமல் வாயின் தசைகள் கிட்டத்தட்ட உறைந்துவிட்டிருந்தன. செல்பேசியை பெரும்பாலும் அணைத்தே வைத்திருந்தேன். நேரம் பார்க்க செல்பேசியை இயக்கியபோது வசந்தபாலனின் குறுஞ்செய்தி வந்தது. #9YearsOfAngadiTheru. விகடன் ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. அது ஓர் விந்தையான சரடால் என்னை மீண்டும் இவ்வுலகுடன் இணைத்தது.
சிலநாட்களுக்கு முன்னர் நான்கடவுள் படத்தின் ஒன்பதாண்டு நிறைவும் இவ்வாறு நினைவுகூரப்பட்டது. சில கட்டுரைகளும் குறிப்புகளும் வந்தன. இவை நினைவுகூரப்படுவதன் அடிப்படை இன்றுள்ள வெவ்வேறு கட்டணத்தளங்களில் இருந்து இந்தப்படங்கள் தரவிறக்கம் செய்ய்ப்படுவதன் எண்ணிக்கையைக் கொண்டே. நான் கடவுளும் அங்காடித்தெருவும் தொடர்ச்சியாக பார்க்கப்படும் படங்கள்.
மலையாளத்தில் ஒழிமுறி பற்றி மாத்யமம் இதழ் இந்த ஆண்டு ஒரு தனி விமர்சன மலர் வெளியிட்டது. இரு கட்டுரைகள் இருந்தன. ஒழிமுறி பற்றி ஐம்பது கட்டுரைகளுக்குமேல் எழுதப்பட்டுள்ளன. நான் இதுவரை தமிழிலும் மலையாளத்திலுமாக 15 படங்களில் பணியாற்றியிருக்கிறேன். காலம் க்டந்து தொடர்ந்து நினைவுகூரப்படும் படங்கள் இம்மூன்றும் மட்டுமே.
ஒரு படம் ஏன் நினைவில் நீடிக்கிறது? அதன் அடிப்படைத் தர்க்கம் என்ன? வாரம்தோறும் படங்கள் வந்து குவிகின்றன. அவற்றில் ஐம்பதுக்கு ஒன்றுதான் வெற்றி பெறுகிறது. வெற்றிபெறும் படைப்புகளிலேயே நூற்றுக்கு ஒன்று மட்டுமே சில் ஆண்டுகள் கடந்தும் நினைவுகூரப்படுகிறது. பார்வையாளர்களால் மட்டும் அல்ல, படத்தை எடுத்தவர்களாலும்கூட. மிகப்பெரும்பாலான படங்கள் மிக இயல்பாகக் கடந்துசெல்லப்படுகின்றன.
சினிமா ஒவ்வொருநாளும் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் துறை. இங்கே திரும்பிப்பார்க்க எவருக்கும் பொழுதில்லை. புதிதாக வரும் படங்களைப் பார்க்கவே இங்கே கண்கள் இல்லை. அதைப்பற்றிப் பேச்வேண்டும் என்றால் பணம் செலவுசெய்ய வேண்டியிருக்கிறது. ஆகவே பழைய படங்கள் எல்லாம் அவ்வப்போது தனிநபர்கள் தங்கள் அரட்டைகளில் சொல்லிக்கொண்டால்தான் உண்டு. அவர்கள் கூட பெரும்பாலும் தங்கள் சொந்த வாழ்க்கை நிகழ்வுகளுடன் இணைத்துக்கொண்டு கடந்தகால ஏக்கமாகவே சினிமாக்களை நினைவுகூர்வார்கள். ‘நான் காலேஜ்லே சேர்ந்த அதே வருசம்தான் மௌனராகம் ரிலீஸ். அப்பல்லாம் படம் பாக்க காசிருக்காது’ என்ற் பாணியில்.
மிக அரிதாகவே ஒரு படம் காலம் கடந்தும் பேசப்படுகிறது. ஏன் பேசப்படுகிறது என்பதற்கான காரணங்களை அறிவுஜீவிகள் ஆராய முடியும், பேசப்பட வைக்கவோ தடுக்கவோ முடியாது. முன்னர் ஊகித்துச் சொல்லவும் இயலாது. விமர்சகர்களின் பேச்சுக்களுக்கும் மக்களின் எண்ணங்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உண்டு. [தமிழ்ச்சூழலில் ஏன் அவ்வாறு ஒரு படம் பேசப்படுகிறது என்று பார்க்கக்கூட சினிமா ஆய்வாளர்கள் இல்லை. இங்கே பெரும்பாலும் அரசியல் நிலைபாடுகள் தனிநபர்க் காழ்ப்புகள் பார்வையை வடிவமைக்கின்றன] ஒரு சினிமா அப்படி காலம்கடந்து நிலைகொள்ளும்போது அதை வைத்து சமூகத்தின் கூட்டு உளவியலை, பொது ரசனையை, உள்ளார்ந்த அரசியலை உய்த்து எழுதுவது ஓரு முக்கியமான அறிவுச்செயல்பாடு.
இதில் தேர்ந்த ரசிகர்களுக்காக எடுக்கப்படும் கலைப்படங்களை நான் கருத்தில்கொள்ளவில்லை. அவை ஒரு சமூகத்தின் சொத்தாக, அப்பண்பாட்டின் மிகச்சிறந்த வெளிப்பாடாக கருதப்படுகின்றன. ஆகவே தொடர்ச்சியாக எழுதியும் பேசியும் அவை நிலைநிறுத்தப்படுகின்றன. உதாரணம் சத்யஜித் ரே படங்கள். அல்லது மலையாளத்தில் ஜி.அரவிந்தனோ அடூர் கோபாலகிருஷ்ணனோ எடுக்கும் படங்கள். நான் இங்கே பேசுவது பெருவாரியான மக்களுடன் நேரடியாகப்பேசும் வணிகத்தன்மைகொண்ட ‘மக்கள்ரசனை’ சார்ந்த படங்களை. சமூகத்தால் தன்னியல்பாக நினைவில் நிறுத்தப்படும் படங்களை…
பல படங்கள் பாடல்களுக்காக நினைவுகூரப்படுகின்றன. சினிமாக்களில் பாடல்கள் மட்டும் ஒருவகையான ‘சாகாவரம்’ கொண்டவை. ஏனென்றால் அது சினிமாவில் இருந்தாலும் சினிமா அல்ல. அது வேறுகலை. பாடல்களுக்காக நினைவுகூரப்படும் சினிமாவை சினிமாவாக கருத்தில்கொள்ளவேண்டியதில்லை.
ஒரு சினிமா பேசப்படுவது அது வெற்றிப்படம் என்பதனால் மட்டும் அல்ல. மாபெரும் வெற்றிப்படங்கள் அப்படியே மறக்கப்படுவதுதான் மிகுதி. பெரும்பாலும் அவை வெறும்தகவலாகவே நினைவுகூரப்படும். நினைவில் நீடிக்கும் படங்கள் கலைப்பெறுமதி கொண்டவையாக இருந்தாகவேண்டும் என்பதும் இல்லை. அவை கலையம்சம் கைகூடியவை என்பதனால்தான் செல்வாக்கைச் செலுத்துகின்றன, ஆனால் அது கட்டாயம் இல்லை என பல படங்களைப் பார்த்தால் தெரிகிறது. அவை பெரும்பாலும் சமூகப்பிரச்சினைகளை பாதிக்கும்படிப் பேசி, தொடர்ச்சியாக விவாதிக்கச்செய்த படங்களாகவே உள்ளன. ஆனால் அப்படி அல்லாத படங்களும் பேசப்படுகின்றன.
ஒரு வணிகப்படம் காலம் கடந்து பேசப்படுகையில் அதை ஒரு பரப்புச் செவ்வியல் [popular classic] என்று வரையறை செய்வதுண்டு. அதைப்போன்ற மேலும் பல படங்களை உருவாக்கும் தொடக்கமாக அமையும் என்றால் அது தனிமரபுச் செவ்வியல் ஆக்கம் [cult classic] எனப்படுகிறது. தில்லானா மோகனாம்பாள் ஒரு பரப்புச்செவ்வியல் படைப்பு. பராசக்தி ஒரு தனிமரபுச் செவ்வியல் ஆக்கம்.
ஒரு படைப்பு பரப்புச்செவ்வியல் ஆக்கமாக ஆவது மெல்லமெல்ல அதன்மேல் நம் சமூகத்தின் கூட்டுநோக்கு திரண்டு வரும்போதுதான். வெளிவந்தபோது அப்படங்கள் மேல் பலவகையான பார்வைகள் உருவாகியிருக்கும். ஆனால் ஒரு காலகட்டம் கடந்தபின்னர் ஒற்றைப்பார்வையாக சமூகநோக்கு திரண்டிருக்கும். கலைப்படங்களுக்கான பார்வை எழுதி விவாதித்து திரட்டப்படுகிறது. பரப்புப்படங்களுக்கான பார்வை மக்களின் அரட்டை வழியாக தன்னிச்சையாக உருவாகி வருகிறது.
பொதுவாகவே கதைக்கரு, வெளிப்பாடு ஆகியவற்றில் வலுவான கட்டமைப்பு கொண்ட படங்கள் மீதே அந்தச் சமூகக் கூட்டுநோக்கு உருவாகிறது. ஆகவே அவை பெரும்பாலும் வணிகவெற்றிப்படங்களே. ஆனால் அரிதாக வெளிவந்த போது வெற்றிபெறாத படங்களும் காலப்போக்கில் அவ்வாறு கூட்டுநோக்கை பெற்று நினைவில் நீடிக்கும் படங்களாகின்றன.
உதாரணமாக, தமிழில் மணி ரத்னத்தின் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ வெளிவந்தபோது ஓடாத படம். ஆனால் அவர் படங்களில் நாயகனும் கன்னத்தில் முத்தமிட்டாலும்தான் நினைவில் நின்றிருக்கின்றன. மலையாளத்தில் வெளிவந்த படங்களில் பி.பத்மராஜனின் ‘தூவானத்தும்பிகள்’ சியாமப்பிரசாத்தின் ‘ரிது’ போன்ற சினிமாக்கள் வெளிவந்தபோது தோல்வியடைந்து ஒரு தலைமுறைக்குப்பின் பரப்புச்செவ்வியல் ஆக்கங்களாக மாறின.
இதன் தர்க்கங்களை மதிப்பிட தொடர்ச்சியான, முறைமைசார்ந்த ஆய்வு தேவை. இங்கே பரப்புகலைகளைப் பற்றிய ஆய்வுகள் கல்விக்கூடங்களில்கூட கற்பிக்கப்படுகின்றன. ஆனால் அப்படி ஒர் ஆய்வு இன்றுவரை என் பார்வைக்கு வந்ததில்லை. ஆய்வாளர்களின் இந்த பர்வைக்குறுகலுக்கு முதன்மைக்காரணம் அவர்கள் தங்கள் அரசியலை படம் மீது மட்டுமல்ல, பார்வையாளர் மீது திணிக்க முயல்வதுதான். அந்த அரசியல் அவர்களை குருடர்களாக ஆக்கிவிடுகிறது.
அரசியல்பற்று ஒருவனை ஒருவகையான மிதப்பு கொண்டவனாக ஆக்கிவிடுகிறது. உலகையே சீர்திருத்தும், வழிகாட்டும் பொறுப்பை அவன் எடுத்துக்கொள்கிறான். அதற்கான தன் தகுதி பற்றி எண்ணிப்பார்ப்பதில்லை படைப்பாளி எப்படி படம் எடுக்கவேண்டும், பார்வையாளர் எப்படிப் பார்க்கவேண்டும் என்று வகுப்பெடுக்கும் எழுத்துக்களை எழுதும் விமர்சகர்கள் உருவாவது இப்படித்தான். மிக எளிய அன்றாட அரசியல்நிலைபாடுகள், அரசியல்சரி சார்ந்த அணுகுமுறைகள் இவர்களிடமிருந்து வெளிப்படுகின்றன. சமூகஏற்பு போன்ற நுண்மையான ஆய்வுகளுக்கு அதன்பின் அவர்களின் மூளை வளைவதில்லை
உதாரணமாக மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் படம் ஈழம் குறித்த அதன் அரசியலுக்காகவே இங்கே விமர்சகர்களால் பேசப்பட்டது, வசைபாடவும்பட்டது. ஆனால் பார்வையாளர்கள் ஈழ அரசியலுடன் உளத்தொடர்பு கொள்ள முடியாததனால் அது தோல்விப்படமாக அமைந்தது. இன்று அது பெண்பார்வையாளர்களால் முழுமையாக அரசியல்நீக்கம் செய்யப்பட்டு குழந்தைக்கும் பெற்றோருக்குமான உறவைச் சொல்லும் படம் மட்டுமாக பார்க்கப்படுகிறது. இன்று அது பிடிவாதமான, புத்திசாலியான, தனிப்போக்கு கொண்ட ஒரு குழந்தைக்கும் பெற்றோருக்குமான உறவைப்பற்றிய படம், அவ்வளவுதான்.
இன்று, திரும்பி நின்று என் பங்களிப்புள்ள மூன்று படங்களையும் பார்க்கையில் நினைவுகள்தான் உள்ளூர கொப்பளிக்கின்றன. அவை எப்படி பார்க்கப்படுகின்றன என பார்வையாளரின் கோணத்தில் நின்று மதிப்பிட இயலவில்லை.எதிர்வினைகளிலிருந்து தெரிவது சில பொதுவான கருத்துக்கள். ஒழிமுறி அதிலுள்ள பெண் கதைமாந்தர்களுக்காகவே பேசப்படுகிறது. நூறாண்டுகளில் கேரளப்பெண்களின் குணச்சித்திரம் எப்படி மாறிவந்துள்ளது என்பதை மூன்று தலைமுறைப் பெண்கள் வழியாக அது காட்டுகிறது. அதையொட்டியே பார்வைகள் அமைகின்றன.
நான்கடவுள் அதன் அழுத்தமான காட்சிக்கோவைகளாகவே நினைவுகூரப்படுகிறது, அதற்காகவே பார்க்கப்படுகிறது. அதன் ‘கதை’ இன்று பெரும்பாலானவர்களின் கவனத்திலேயே இல்லை. அதிலுள்ள சுரண்டல் குறித்த சித்தரிப்புகள் கூட பெரிதாகப் பேசப்படுவதில்லை. காட்சிகள் வழியாக அது இன்னொரு சினிமாவை காட்டுகிறது. தெய்வங்கள் எள்ளி நகையாடப்படுகின்றன. பிச்சைக்காரர்களின் சிரிக்கும் முகங்கள். பாதாளம்போன்ற் இன்னொரு உலகம்.அகோரிகளின் உலகின் சுதந்திரத்திற்கும் பிச்சைக்காரர் உலகின் அடிமைத்தனத்திற்கும் இடையேயான முரண்பாடு. அப்படம் எடுக்கப்பட்டபோது உருவாக்கப்பட்ட உச்சகட்டம் இன்று பெரிதாகப் பொருட்படுத்தப்படவில்லை
அங்காடித்தெரு இன்று அதிலுள்ள சின்னச்சின்னக் கதைமாந்தர்களுக்காகவே பெரிதும் நினைவுகூரப்படுகிறது. அது வெளிவந்தபோது ஒரு காதல்கதையாகவே உத்தேசிக்கப்பட்டது. கூடவே சுரண்டலின் பின்னணியும் அமைக்கப்பட்டது. ஆனால் இன்று அது எளிய மனிதர்கள் தங்கள் வாய்ப்புகள் வழியாக தொற்றி மேலேறுவதன் கதையாக பார்க்கப்படுகிறது. மாதம் ஒருமுறையாவது முன்பின் தெரியாத ஒருவர் என்னை அடையாளம் கண்டுகொண்டு அந்தப்படம் தங்களுக்கு அளித்த நம்பிக்கையையும் ஊக்கத்தையும் பற்றிப் பேசுகிறார்கள். அந்தக் காதலையே கூட ஒரு தங்கிவாழ்தலின் கதையாகவே பார்க்கிறார்கள்.
இவ்வாறு படம் ஏற்பின் வழியாக தனக்கென ஒரு பிரதியை ஈட்டிக்கொள்வதால்தான் அது நினைவில் நீடிக்கிறது. அது வெளிவந்தபோது உருவான விமர்சனங்களை எல்லாம் இப்போது வாசித்தால் வியப்பாகவும் கொஞ்சம் வேடிக்கையாகவும் இருக்கிறது. இந்தக்கூறுகள் எதையுமே அன்றைய விமர்சகர்கள் காணவில்லை. ஆச்சரியம் என்னவென்றால் அங்காடித்தெரு அவர்களால் அழுவாச்சிப்படமாக வசைபாடப்பட்டது. மக்களால் நம்பிக்கையூட்டும் ‘பாஸிட்டிவ்’ படமாக ஏற்கப்பட்டது. விமர்சகர்கல் அவசரகதியில் , அன்றைய பொதுவான உளச்சூழலில் நின்று வழக்கமான டெம்ப்ளேட் விமர்சனங்களையே சொன்னார்கள். ஒழிமுறி விதிவிலக்கு. படம் வெளிவந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே இன்றும் மதிப்பிற்குரியதாக நீடிக்கும் வலுவான விமர்சனங்கள் வந்துவிட்டன.
ஏற்பை மதிப்பிடுகையில் ஒரு படத்தின் வசனங்களில் எது அந்தப்படத்தின் மையவரியாக நீடிக்கிறது என்பதையே கூட படைப்பாளிகள் முடிவுசெய்ய முடியாது என்று தோன்றுகிறது. எப்போதுமே ஒரு கவித்துவமான வரியும் கூடவே போகிறபோக்கில் வரும் ஒரு வரியும் அந்தப்படமாக நிலைகொள்கின்றன. நான்கடவுளின் மையவரியாக ‘நெருப்பிலே என்னட சுத்தமும் அசுத்தமும்” நின்றுள்ளது. ஆனால் ‘கடவுள் புளுத்தினாரு’ என்ற வரி அதேயளவு அப்படத்தை நினைவுகூர்வதாக நிலைகொள்கிறது
அங்காடித்தெருவில் ‘யானை வாழுற காட்டில்தான் எறும்பும் வாழ்கிறது’ மைய வரி. அந்தப்படம் அளிக்கும் நம்பிக்கை அந்த வரியில் வெளிப்படுகிறது. ஆனால் ‘விற்கத்தெரிஞ்சவன் வாழத்தெரிஞ்சவன்’ என்றவரி கூடவே வலுவாக நினைவில் நீடிக்கிறது.
இந்த வசனங்கள் இன்று திரைவசனங்களாக இல்லை என்பதும் வியப்பு. நெருப்பில் என்னடா சுத்தமும் அசுத்தமும் என்பது ஒரு சித்தர் வாக்காக பல ஆன்மிக உரைகளில் சொல்லப்பட்டிருப்பதை நான் கேட்டிருக்கிறேன். யானை வாழுற காட்டில்தான் எறும்பும் வாழ்கிறது’ ‘விற்கத்தெரிஞ்சவன் வாழத்தெரிஞ்சவன்’ ஆகியவற்றை பழமொழிகளாக பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். என்னிடமே சொல்லியிருக்கிறார்கள்.
மக்களின் ஏற்பு ஒரு மிகமிகச் சிக்கலான ஊடாட்டங்கள் கொண்ட ஒரு பெருஞ்செயல்பாடு. அதை எளிய கொள்கைகல் வழியாக வகுத்துக்கொள்ள முடியாது. அக்கறையும் முன்முடிவுகளும் இல்லாத ஆய்வாளர்களால் அது இயலக்கூடும்
அலாவுதீன்
செங்காடு
கதாநாயகன் தேர்வு
வசந்தபாலனின் வெற்றி
அங்காடித்தெருவுக்கு விருது
அங்காடித்தெரு கேரளத்தில் …
அங்காடித்தெரு, நூறாவது நாள்.
அங்காடித்தெரு கடிதங்கள்
அங்காடி தெரு,கடிதங்கள் 3
அங்காடி தெரு கடிதங்கள் 2