சிவ இரவு – கடிதம்

lord-of-dance-chan-siva

சிவஇரவு

அன்புள்ள ஜெ.,

உங்கள் ‘சிவ இரவு’ சிறப்பாக இருந்தது. இதில் திருவாலங்காடு மட்டும் பார்த்திருக்கிறேன். அங்கு என்னை ஆச்சரியப்படுத்தியது கோயில் குளம். கோயிலளவோ அல்லது அதை விடவோ பெரியது. என்றாவது பகலில் போனால் பாருங்கள். காரைக்கால் அம்மையாரைப் பற்றி நீங்கள் எழுதியிருந்தது கோயிலை இன்னொரு முறை பார்க்கத் தூண்டுகிறது. திருவாலங்காட்டுச் செப்பேடுகள் குறித்து எழுதியிருந்தீர்கள். அந்தச் செப்பேடுகள் நெதர்லாந்தில் ஏதோ ஒரு காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதாக எங்கோ படித்த ஞாபகம். அது இந்தத் திருவாலங்காடுதானா? ஏனென்றால் கும்பகோணத்திற்குப் பக்கத்தில் திருவலங்காடு என்று இருக்கிறது. ஒருவேளை அதுவாக இருக்கலாமா? காரைக்காலம்மையார் அவருடைய திருவாலங்காட்டுத் திருப்பதிகத்தில் இறைவனின் ஊழித் தாண்டவத்தை (Cosmic Dance of Lord Shiva)

கீழ்கண்ட வரிகளில் வடிக்கிறார்.

‘அடி பேரின் பாதாளம் பேரும்

முடிபேரின் மாமுகடு பேரும்

கைகள் பேரின் எண்திசைகளும் பேரும்

அறிந்தாடும் அய்யா – ஆற்றாது அரங்கு’

‘எண்தோள் வீசி நின்றாடும் பிரான் தன்னை தலையே நீ வணங்காய்…’.என்கிறார் அப்பர்.

https://www.youtube.com/watch?v=suYEMncv9-M

‘திருச்செந்தூரான் கடலாடான்’ என்பதற்கேற்ப இந்த இடங்களையெல்லாம் சென்னைவாசிகளான நாங்கள் பார்க்கவே போவதில்லை என்று நினைத்தபோது மனதில் தோன்றிய பாடல் ‘காணவேண்டாமோ…..  ‘ அடிக்கடி கேட்கிற பாடல்தான்.  இயற்றியவர் பாபநாசம் சிவன். பாடியவர் எம்.எம்.தண்டபாணி தேசிகர். படம் ‘நந்தனார்’. ஜெமினி வாசனின் 1942ல் வெளிவந்த படம். எண்பதுகளில் ஒரு மழை பெய்கிற ‘ப்ரிண்ட்டில்’ தூர்தர்ஷன் ஒளிபரப்பியதைப் பார்த்த ஞாபகம். சுஜாதா அவருடைய கட்டுரையில் எழுதியிருப்பார் ‘இந்தப்படத்தை இப்படியே இன்று திரையிட்டால் தியேட்டரைக் கொளுத்தி விடுவார்கள்’ என்று. எனக்கு படத்திலிருந்து ஞாபகம் இருக்கிற வசனம் நந்தனிடம் மக்களில் ஒருவர் சொல்வது ” தம்பி இது பாப்பாருங்க தெய்வம்,பறையனுக்குப் பலிக்காது’ என்று. வசனம் எழுதிய கி .ராமச்சந்திரன் புதுமைப்பித்தன் மற்றும் அசோகமித்திரனின் நண்பர்.

தண்டபாணி தேசிகர்தான் நந்தனார். கிட்டத்தட்ட ‘காமெடி’ நடிகர் செந்தில் மாதிரி இருப்பார். நடிப்பு அந்தக்கால நாடகபாணி நடிப்புதான் – இந்த இடத்தில் ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் பாடலான ‘ஆடும்வரை அவர் ஆடட்டும் … ‘ என்ற மகாராஜபுரம் சந்தானத்தின் பாடல் (மனதிலிருந்து அந்த மயக்கும் குரல் பின்னணியில் ஒலிக்கிறது.)  ஞாபகத்திற்கு வருகிறது. தலைவனைப் பற்றி தோழியிடம் குறை சொல்கிறாள் தலைவி. அதில் ஒரு வரி ‘இங்கிதம் என்றாலே என்ன விலை என்று கேட்பாராடி அந்த மன்னன்…..சங்கீதம் அவரிடம் தேனில் கரும்பாக இனிக்குதே என் சொல்ல இன்னும்… ”இங்கிதத்திற்குப் பதிலாக நடிப்பைப் போட்டுக்கொள்ளவும் – ஆனால் பாடல்கள் முத்து முத்தாகக் கொட்டும். அந்தப் படத்திலேயே வேதியராய் நடித்த செருகளத்தூர் சாமா இயல்பான நடிப்பை வழங்கியிருப்பார். கர்நாடக இசையரங்கில் தமிழ்ப் பாடல்கள் ஒலிக்கத்தொடங்கிய பிறகு பல மேடைகளில் பாடப்படுகிற பாடல் காணவேண்டாமோ… (‘ரெண்டு பல்லிருக்கும்போதே பதார்த்தங்கள் ஏதாவதைப் பார்க்க வேண்டாமோ’ என்பது இதன் அடியொட்டிய அடியேனின் சொந்த சாகித்யம். O Lord, forgive me)

ஒவ்வொரு பாடகரும் அவரவர் தன்னியல்பில் சிறப்பாகவே பாடியிருக்கிறார்கள்.

தண்டபாணிதேசிகர்

https://www.youtube.com/watch?v=jcDVrX0g8t4

சஞ்சய் சுப்ரமணியன்

https://www.youtube.com/watch?v=liOtpSMyd80

டி எம் கிருஷ்ணா

https://www.youtube.com/watch?v=-5Gw52nAKLM

காணவேண்டாமோ இரு கண்ணிருக்கும் போதே

விண்ணுயர்க் கோபுரம் காணவேண்டாமோ

வீணில் உலகைச் சுற்றிச்சுற்றி வந்தால்

மேதினி போற்றும் சிதம்பர தேவனைக் காண வேண்டாமோ

வையத்திலே கருப்பையில் கிடந்துள்ளம்

நய்யப்பிறவாமல் அய்யன் திருநடம் காணவேண்டாமோ

ஓட்டைச் சடலம் ஒடுங்க வெற்றெலும்புக் கூட்டை

விட்டுயிர் ஓட்டம் பிடிக்குமுன் காணவேண்டாமோ

என் தந்தையும், மாமனாரும் இரவு முழுவதும் சாளக்கிராமம் வைத்து பூஜை செய்வார்கள். அதை நினைத்துக் கொண்டு, அலுவலகத்திலிருந்து பன்னிரண்டு மணிக்குத் திரும்பியவன் ‘சிவ சிவா’ என்று படுத்துத் தூங்கிவிட்டேன்.

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

***

முந்தைய கட்டுரைஉகவர் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைவானோக்கி ஒரு கால் -1