உகவர், ராமச்சந்திர சிரஸ்

Siras

அன்புள்ள ஜெ,

சமீபத்தில் தன்பால்-ஈர்ப்பு பற்றி தங்கள் தளத்தில் நிகழ்ந்துவரும் பரிமாறல்களை, ஆரோக்கியமான விவாதங்களை, என் நண்பர் ஒருவர் மூலம் அறிந்து, படித்தேன். தமிழ்ச்சூழலில் இதுபோன்ற அரிதான வெளிப்படையான விவாதங்கள் உண்மையிலேயே உவப்பளிக்கிறது. தன்பால்-ஈர்ப்பை மையமாகக் கொண்ட ‘அலிகார்’  என்ற ஹிந்தி திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். ஹன்சல் மெஹ்தா இயக்கத்தில் 2016 ல் இத்திரைப்படம் வெளியானது.

 

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மராத்தி இலக்கிய பேராசிரியராகப் பணியாற்றிய ராமச்சந்திர சிரஸ்-ன் உண்மைக்கதையின் தழுவல் இத்திரைப்படம். ராமச்சந்திர சிரஸ் மராத்தியில் பல சிறுகதைகளை எழுதியிருக்கிறார். “Paya Khalchi Hirawal”   (Grass under my feet) என்ற கவிதைத் தொகுப்பிற்காக 2002 ம் ஆண்டு மஹாராஷ்ட்ர அரசின் சாஹித்ய பரிஷத் இலக்கிய விருது பெற்றவர். 2010ல் இவர் அலிகார் பல்கலையின் ‘நவீன இந்திய மொழிகள்’ துறையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படவிருந்த நிலையில், இவருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்பட்டு, பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வென்றார். 2010 ஏப்ரல் ஒன்றாம் தேதி இவருக்கு ஆதரவாக தீர்ப்பு வருகிறது. ஏப்ரல் ஏழாம் நாள் மரணமடைந்தார். இவரது மரணம் தற்கொலை என்றும் கொலை என்றும் சில முரணான தகவல்களுண்டு. இவரின் கதையை அடிப்படையாகக் கொண்டு நேர்த்தியாக எடுக்கப்பட்ட அற்புதமான திரைப்படம் ‘அலிகார்’. இத்திரைப்படத்தை தங்கள் மூலம் அறிவுலகினரின் கவனத்துக்குக் கொண்டுவருவதற்காக இக்கடித்த்தை எழுதுகிறேன்.

என்றும் அன்புடன்,

ஆனந்த்.

The locked door – The life and death of Dr. Srinivas Ramchandra Siras | Rishi Majumder

 

அன்புள்ள ஜெயமோகன் ஐயாவுக்கு,

மிக்க நன்றி.  உண்மையில் என் கடிதத்தை எழுதி அனுப்பிய பின்னர்  இதை அனுப்பியிருக்க கூடாதோ என்று கூட யோசித்தேன்.

ஆம். எஸ்ஸின் நிலையும் என் நிலையும் வேறுவேறு என்று நன்கு அறிவேன்.  என் சிக்கல் என்னவென்றால் திருமண நச்சரிப்பால் பாலியலை மாத்திரமே சில நாட்களாக வெகுவாக சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்பது தான். வேறு விதத்தில் சொன்னால் அதைத்தவிர வேறெந்த கவலையும் எனக்கு இல்லை.

அதிகம் சடங்கு சம்பிரதாயத்தில் ஊறிய பின்னணியை கொண்டவன் என்பதால் தான் என்னால் இன்னொரு ஆணை நெருங்க முடியவில்லை. அதே காரணத்தால் தான் இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை சிதைப்பதற்கும் அஞ்சினேன்.

அன்றாடத்துக்கு ஒவ்வாத எனது இருமையை வெறுத்ததும் அதனாலேயே.

உங்கள் பதிலை படித்த பின்னர் தெளிவடைந்து விட்டேன்.  கடினமாகத் தான் இருக்கும்.  இருந்தாலும் இயன்ற விரைவில் மீள்வேன். ஏதோ ஒரு விதத்தில் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்வேன். அப்படி அர்த்தப்படுத்திய பின்னர் உங்களை வந்து சந்திக்கிறேன்.

முதல் கடிதத்தில் என்னை நீங்கள் இனங்காணக்கூடாது என்ற தயக்கம் இருப்பதைச் சொன்னேன். இப்போது ஆசையாக இருக்கிறது, சாதித்த பின்னர் உங்களை சந்திக்கும் போது, அந்த வி நான் தான் என்று  நீங்கள் மட்டுமே கேட்கும் மொழியில் உங்களிடம் சொல்லி மகிழ வேண்டுமென்று.

உங்களுக்கு என் முதல் கடிதத்தை எழுதவும், அதன் மூலம் ஒரு தெளிவை பெற்றுக்கொள்ளவும் காரணமான நண்பர் எஸ்ஸிற்கு என் நன்றிகள். அவர் மேலுயர்க.

மிக்க நன்றி ஐயா.

மகிழ்வுடன்,

வி.

படைப்பு முகமும் பாலியல் முகமும்

ஓரினச்சேர்க்கை

ஓரினச்சேர்க்கையும் இந்தியப்பண்பாடும்

ஓரினச்சேர்க்கை – அனிருத்தன் வாசுதேவன்

ஒருபாலுறவின் உலகம்

பாலுணர்வை அறிதலும் எழுதுதலும்

முந்தைய கட்டுரைஈரோடு- விவாதப்பட்டறை – படங்கள் அய்யலு ஆர் குமாரன்
அடுத்த கட்டுரைஈரோடு விவாதப் பயிற்சிப் பட்டறை