உகவர் வாழ்க்கை
திரு ஜெ அவர்களுக்கு,
உங்கள் இணைய தளத்தில் உகவர் வாழ்க்கை கடிதத்தை வாசித்தேன். மனநல மருத்துவர் என்ற முறையில் என் கருத்துக்களை உங்களுக்கு அனுப்புகிறேன். இது திரு வி அவர்களுக்கோ மற்றும் இது சம்பந்தமாக தெரிந்துகொள்ள விழைபவர்களுக்கோ உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்களும் அப்படி நினைத்தால் ஆர்வமுள்ளவர்களுக்கு இதை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
முரளி சேகர்
உகவர் வாழ்க்கை!
திரு ஜெ,
உகவர் வாழ்க்கை என்ற கடிதத்தில் திரு வி அவர்கள் எழுதி இருந்ததையும் அதற்கான உங்கள் பதிலையும் பார்த்த பின்னர் இதை எழுதுகிறேன். திரு வி அவர்கள் தங்களை தவிர இந்த விஷயத்தை வேறு எவரிடமும் சொல்ல முடியாத தயக்கத்தில் இருப்பதனால் இந்த கடிதத்தை உங்களுக்கே பதிலாக எழுதுகிறேன்.
பொதுவாக மனநல துறையில் மருத்துவர்கள் முதலில் கேள்வியை தான் அதிகம் கேட்ப்பார்கள். இதன் மூலமாக தனக்கு முன் அமர்ந்திருக்கும் நபரின் பிரச்சினையின் முழு பரிமாணத்தை உணர்ந்து கொள்வதற்காகவும் அந்த நபரின் பின்புல வாழ்க்கையை அறிவதற்காகவும் இவ்வாறு இந்த கவுன்சிலிங் முறை கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. மேலும் கேள்வி கேட்கப்படுபவர் அந்த கேள்விகள் வழியாக தன்னுடைய பிரச்சனைகளை மேலும் ஆழமாக உணர்ந்துகொள்வதற்கு இந்த கேள்வி முறை பயன்படும். ஒரு சில நேரங்களில் இது மட்டுமே அந்த நபரின் பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் அமையும். அதாவது கேள்விகள் மூலம் அவர்கள் மனதில் தோன்றும் கேள்விகளே விடையாகலாம். அல்லது அவர்கள் எந்த திசை நோக்கி செல்ல வேண்டும் என்ற தெளிவை அவர்களுக்கு கொடுக்கலாம்.
ஆனால் அனைத்து மனநல மருத்துவர்களும் இவ்விதமாக திரு வீயின் பிரச்சனைகளை அணுக மாட்டார்கள் என்பதும் உண்மை. குறிப்பாக இந்தியா போன்ற நாட்டில் வெளியில் முப்பது பேர் காத்துக்கொண்டிருக்கும்பொழுது ஒரே நபரிடம் 45 நிமிடங்கள் செலவு செய்வது முடியாது அவர்களுக்கு அதற்கான திறமையும் ஆர்வமும் இருந்தாலும் கூட.
இப்பொழுது திரு வீயின் கேள்விகளுக்கு வருவோம். அவர் எழுதியதிலிருந்து நான் புரிந்து கொண்டது இதுதான். நல்ல அன்பான குடும்ப சூழலில் தான் அவரின் சிறு பிராயம் இருந்திருக்கிறது. குக்கிராமம் அன்பான சூழல் என்று அவர் எழுதியதில் இருந்து இவர் மன உளைச்சலினாலோ அல்லது வேறு சில தகாத சம்பவங்களினாலோ உகவர் மனநிலையை வந்தடையவில்லை என்று அனுமானிக்கிறேன். தவறு என்றால் அவர் தான் திருத்த வேண்டும் மேலும் விவரங்கள் அளிப்பது மூலமாக. இவர் வளர்ந்த சூழல் எந்த அளவிற்கு இவருக்கு சாதகமாக இருந்தது என்றால் இந்த மன உளைச்சலை ஒரு பக்கமாக ஒதுக்கி வைத்து தன் வாழ்வை எந்த வித குழப்பமும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட வயது மற்றும் சூழல் நிகழும் வரை வாழ்ந்து விட்டார். ஒரு மஞ்சள் பத்திரிக்கையின் ஒரு வாக்கியம் போதுமாக இருந்தது அவரின் குழப்பங்களை தற்காலிகமாக தள்ளி வைக்க. கவனிக்கவும். தாற்காலிகமாகவே.
வேற்று இடத்து வாழ்க்கை. தன்னுடைய அடையாளத்தை சுலபமாக மறைக்க உதவும் பெரு நகரம் அளிக்கும் முகமூடி , ஹார்மோன்கள் மற்றும் உடலின் பரிணாம வளர்ச்சியும் இதனுடன் இணைந்து இவரை தற்போதைய மனநிலைக்கு அழைத்து வந்துவிட்டதாகவே கருதுகிறேன். முதல் காதல். அதன் தோல்வி. அது தந்த பயம். மேலும் சில சொல்லாக்காதல்கள். அது தரும் வேதனை, நிர்வாண பெண் அங்கங்கள் ஏற்படுத்தும் வெறுப்பு இதெல்லாம் இவரின் உகவர் மனநிலை தற்காலிகமானதோ அல்லது சந்தர்ப்பவசத்தால் மட்டும் ஆனதோ இல்லை என்பதை விளக்குகிறது.
இது ஒரு பக்கம். இதையெல்லாம் தாண்டி இங்கே தன் சுயம் வெளிப்படக்கூடாது எக்காரணத்தை கொண்டும் என்ற ராட்சச தடுப்பு சுவர். இதில் தான் இவர் இப்பொழுது முட்டிக்கொண்டு நிற்கிறார். இது இன்னொரு பக்கம். இதில் தான் மனப்போராட்டம். இங்கே தான் இவருக்கு conflict .
இந்த மனப்போராட்டதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அதை தான் இவர் இப்படி கேள்விகள் எழுப்புவதன் மூலமாக சாதிக்க பார்க்கிறார். காற்று அடைப்பட்ட பந்து. வெளியே வரத்தான் செய்யும். இதை இல்லை என்று இனி மேலும் மறைக்க முடியாது. சரி. இந்த மனப்போராட்டத்தில் இருந்து எப்படி மீள்வது?
பல வழிமுறைகள் உள்ளன. இரண்டு அதி தீவிர extreme end வழிகளை பார்ப்போம். முதலாவது- சமூகம் என்ன சொன்னால் என்ன? என்னுடைய தொழில் முறை வெற்றி எப்படி பாதித்தால் என்ன? என் சொந்தங்கள் என்னை விட்டு சென்றால் என்ன? எனக்கு என் பாலுணர்வு முக்கியம் என்றும் இவர் முடிவெடுக்கலாம். அல்லது இரண்டாவதாக முற்றிலும் மாறுபட்டு என்னால் என் சூழலில் உகவர் வாழ்க்கையை கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது. ஆதலால் அதை துறந்து மற்றவர்களுக்காக என் பாலுணர்வை தியாகம் செய்கிறேன் என்பது இன்னொரு வழிமுறை. இந்த இரண்டு முடிவிற்கும் நடுவே பலவித வழிமுறைகள்- இரட்டை முறை வாழ்க்கை, கொஞ்சம் வயதான பின் தன் உண்மையான விருப்பத்தை தேடி போவது என்று பல. ஜெ சொன்னது போன்று திருமணம் செய்து கொள்ளக்கூடாது இந்த குழப்பத்திற்கு முடிவு கிடைக்கும் வரையில். மேலும் இவர் எடுக்கும் முடிவில் அடுத்தவர் குறிப்பாக அவரின் வருங்கால மனைவி என்று ஒருவர் அதில் இடம் பெறுவார் என்றால் அவர் நிச்சயமாக பாதிப்பு அடைய கூடாது என்பதில் இவர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இவர் வாழ்வில் இந்த கட்டத்தில் இந்த கேள்வி முக்கியமா? பதின் பருவத்தில் செய்ததை போல இந்த கேள்வியை இதை பற்றி முடிவெடுப்பதை தள்ளி வைக்க முடியுமா? இவற்றை பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோம். இவரின் எழுத்தில் மேலோங்கி இருப்பது வலி தான். வெறுப்பு, எதிர்காலத்தை பற்றிய பயம், வெளியே சொல்ல முடியாத காம உணர்வு என்று இவரின் வாழ்க்கை ஒரு ரணமாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது. இவர் எழுதியதிலிருந்து தான் சிக்கி கொண்டுள்ள சக்கர வியூகத்தில் இருந்து வெளியே வர முயற்சியை தொடங்கி விட்டார் என்றுதான் தோன்றுகின்றது. இவர் தொடர்ந்து இந்த பயணத்தை மேற்கொண்டால் திரும்பவும் ஆரம்பித்த புள்ளிக்கு செல்ல முடியாது என்பதை இவர் மனதில் கொள்ள வேண்டும். மேலும் இவர் ஏதோ ஒரு விதத்தில் ஏதோ ஒன்றில் காம்ப்ரமைஸ் செய்து தான் போக வேண்டி இருக்கும். ஆனால் இதற்காகவெல்லாம் மேலும் தள்ளிப்போடாமல் இவர் இதனை எந்த விதத்திலாவது முடிவுக்கு கொண்டு வருவது மிக முக்கியம். இல்லாவிட்டால் மன அழுத்தம் மனப்பதட்டம் போன்ற வேறு பிரச்சனைகளும் தோன்ற ஆரம்பிக்கலாம்.
சரி இதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வாரேயானால் இந்த கீழ்க்கண்ட விஷயங்களில் இருந்து ஆரம்பிக்கலாம்:
– முதலில் இவரின் குழப்பம் பாலுறவு சம்பந்தப்பட்டதா அல்லது தான் ஆண் என்பதில் உள்ள அடிப்படை குழப்பம் பற்றியதா என்பதை தெளிவு படுத்த வேண்டும். அதாவது இது ஒரு sexual preference பற்றிய விஷயமா அல்லது Gender ஐடென்டிட்டி பற்றிய விஷயமா என்று புரிந்துக்கொள்ள வேண்டும். நளினமான ஆண்களைப்பற்றி இவர் எழுதி இருப்பது இந்த விஷயத்தில் இவரின் மனநிலையை காட்டுகிறது. ஆனாலும் மேலும் சில பரிசோதனைகள் தேவைப்படலாம்.
– மற்ற விஷயங்களான Genderqueer , transexual , other LGBT போன்றவையும் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும்.
– அறுவை சிகிச்சை (Gender Reassignment Surgery), Hormone therapy போன்றவற்றுக்கான தேவைகளும் இவரிடம் இருந்து கண்டறியப்பட வேண்டும்.
– அடுத்தபடியாக இவர் உகவர்கள் குழு எதற்காவது சென்று மற்றவர்களுடன் பழக வேண்டும். இந்த அனுபவம் அவருக்கு சில புதிய அனுபவங்களை தோற்றுவிக்கலாம். அவரின் ஆணித்தரமான அடிப்படைகள் கேள்விக்குள்ளாக்கப்படலாம் அல்லது நிரூபிக்கப்படலாம்.
– இவர் கூறியதில் இருந்து இவர் இது வரை எந்த ஒரு ஆணுடனும் உடலுறவு வைத்துக்கொண்டதில்லை என்று தெரிகிறது. அப்படியானால், பாதுகாப்பான முறையில் மனதுக்கு பிடித்தவருடன் ஒரு அனுபவத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம். இது அவருக்கு அவரின் கற்பனைகள் ( fantasy ) உண்மையா என்று பரிசீலிக்க உதவும்.
– இதிலும் அவர் மனம் உறுதியாக இருக்குமானால் அடுத்தபடியாக ஏதாவது நெருங்கிய நண்பருடனோ ( ஆண் அல்லது பெண் நண்பர்) அல்லது உறவிடனருடனோ தன்னை பற்றிய விஷயத்தை கூறி அவர்களின் புரிதலையும் அரவணைப்பையும் பெறலாம். ஒவ்வொரு முறை இவர் இது சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்கும்போது இவர் சாய்வதற்கு ஏதுவான தோள் கட்டாயம் தேவைப்படும். இது மிகவும் முக்கியம்.
– இவருக்கும் இவரின் அம்மாவிற்கும் எந்த அளவுக்கு புரிதல் உள்ளது என்று எனக்கு தெரியவில்லை. இவர் அம்மா புரிந்து கொள்வார் என்றால் தாராளமாக இவர் அம்மாவிடமே இதை பற்றி பேசலாம். அம்மாக்கள் தன் பிள்ளைகளை , பிள்ளைகள் நினைத்துப்பார்ப்பதை விட அதிகம் அறிந்து வைத்திருப்பார்கள். இவர் கூறும் விஷயம் இவரின் அம்மாவிற்கு அதிர்ச்சியாக இல்லாமல் ஏற்கனவே சந்தேகித்த விஷயத்தை மகன் மூலமாக தெரிந்து கொள்ளும் ஒரு சம்பவமாகக்கூட இது அமையலாம். இது திருமணம் செய்துகொள்ள நிர்பந்திக்கப்படுவதை தடுக்கும். இவரும் இவர் குடும்பத்தின் உறுப்பினர்களும் ஏதாவது ஒரு காரணத்தை கேட்பவர்களுக்கு சொல்லி விடலாம்.
மேல் கூறியவற்றிலிருந்து இவர் ஆரம்பிக்கலாம். நான் இங்கே கூறி இருப்பது ஒரு பொதுவான அணுகு முறை தான். ஒரு நல்ல மனநல மருத்துவரோ ஆலோசகரோ இவருக்கு இவர் சம்பந்தப்பட்ட மற்ற விஷயங்களையும் கவனித்து அதற்கு தகுந்தாற் போல ஆலோசனை வழங்க கூடும்.
என்னுடைய வாழ்த்துக்களும் புரிதலும் திரு வி அவர்களுக்கு.
முரளி சேகர்