வானோக்கி ஒரு கால் – 2

th

தென்காசிக்குச் சென்று ஸ்டேட் வங்கியைத் தேடி கொஞ்சம் அலைந்தேன். ஒருவருக்கு கல்விச்செலவுக்கு வாக்களித்திருந்த பணத்தை அனுப்பவேண்டும் என்பது அப்போதுதான் நினைவுக்கு வந்தது. ஸ்டேட் வங்கியில் தினகரனின் உள்ளூர் நிருபரை சந்தித்தேன். என் தளத்தை வாசிக்கிறார் என்றார். ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

நான் கிளம்பியது முதலே பலர் அடையாளம் கண்டுகொண்டார்கள். நாகர்கோயில் பேருந்துநிலையம் ஆரியபவனில் சாப்பிடச்சென்றால் என் நண்பரும் ஈஷா யோகமையத்தின் உறுப்பினருமான உரிமையாளர் ரமேஷ் வந்து பார்த்தார். பேருந்தில் ஒருவர் நீங்கள் ஜெயமோகன் அல்லவா என்றார். நெல்லையில் ஸ்டேட் வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஒரு வாசகர் அறிமுகம் செய்துகொண்டார்.

thenkasi1

நான் திடீரென பிரபலமாகிவிட்டேனா என்ற ஐயம் ஏற்பட்டது. தென்காசியில் இன்னொருவர் என்னசார் நடந்து வருகிறீர்கள் என்றார்.  டிவியில் நாள்தோறும் வருபவர்கள்  எப்படி சமாளிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. காரில்செல்லுமளவு காசும் தரப்படுவதில்லை, நடந்துசெல்லமுடியாத அளவுக்கு புகழும் இருக்கும்.

தென்காசி கோயிலில் முன்னுச்சிப் பொழுதின் அரைத்தூக்கம் நிறைந்திருந்தது. பிரம்மாண்டமான சிற்பங்கள் முன் நெடுநேரம் நின்றிருந்தேன். காலால் வான்சுட்டி நின்றாடும் சிவன். அந்தக் கொடியபேரழகு என்னை ஆறுதல்படுத்தியது. அலைகள் அனைத்தும் அடங்குவதுபோல. இதைத்தான் தேடி வந்தேனா?

நேர் எதிரில் குழலூதும் கண்ணன். ஆனால் கையில் கரும்புவில். மன்மதனும் ஆனவன். அழகும் இனிமையும் மட்டுமேயான திருவுரு. இரு வடிவங்களும் எதிரெதிரே நின்றிருப்பதன் தீராத விளையாட்டைத்தான் அந்தப் பெருங்கலைஞர்கள் கல்லில் காட்டுகிறார்களா?

ten2

தென்காசி கோயிலின் பின்புறமும் எவருமில்லை. நூறாண்டுகளாகக் கூட அங்கே எவரும் வந்திருக்க மாட்டார்கள் என்பதுபோல. வெளியே அப்போது வெயில் அடிக்கிறதென்று சொன்னால் நம்ப முடியாது. அங்கே இனிய இருள் சூழ்ந்திருந்தது. மிகப்பெரிய சிற்பத்தூண்களின் சாரலில் நடந்துகொண்டே இருந்தேன். சுற்றிச்சுற்றி. பன்னிரண்டு முறை சுற்றி வந்திருப்பேன். அதன்பின் கல்லில் அமர்ந்துகொண்டேன்.

தென்காசி விஸ்வநாதரை வணங்கிவிட்டு வெளியே வந்தேன். வெயில் நிறைந்து கிடந்த நகரம் கண்கூச வைத்தது. பேருந்தில் கூட்டமில்லை. இந்த வெயிலில் பலரும் பகல்பயணங்களை தவிர்ப்பார்கள்போலும். விரைவிலேயே தாமிரவருணிப் பசுமை மறைய இருமருங்கும் காய்ந்து கிடந்தது நிலம். புழுதியும் வெங்காற்றும். செவிகள் எரிந்தன. ஆனால் அந்த வெம்மை எனக்கு எவ்வகையிலோ வேண்டியிருந்தது.

te5
ரதி. தென்காசி

நெல்லைக்கு பின்மதியம் வந்துசேர்ந்தேன். என் வாசகர் சிவமீனாட்சி செல்லையா அவர்களின் விடுதியில் தங்கினேன். சற்றுநேரம் ஓய்வெடுத்தபின் நெல்லையப்பர் ஆலயத்திற்கு சென்றேன். நண்பர் சுகாவின் வீட்டுமுகப்பினூடாக சென்றபோது அவரை நினைத்துக்கொண்டேன். கூப்பிட்டுப் பேசவேண்டும் எனத் தோன்றியது. பேசி நெடுநாட்களாகின்றன. ஆனால் கிளம்பியது முதல் எவரிடமும் பேசவில்லை. செல்பேசியை அணைத்து வைத்திருந்தேன்.

நெல்லையப்பர் கோயில்முன் பெருங்கூட்டம். வண்டிகளும் மனிதர்களும் முட்டி மோதி கூச்சலிட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஆலயத்திற்குள் அமைதி. இருநூறுபேர் அவ்வேளையில் ஆலயத்திற்குள் இருந்திருப்பார்கள். ஆனால் அந்த ஆலயத்தின் மிகப்பெரிய பரப்புக்கு அது ஆளே இல்லாத வெறுமைக்கு நிகர்தான். மதுரை பேராலயத்தைவிட பரப்பில் பெரியது நெல்லையப்பர் ஆலயம்.

nelli3
மன்மதன்

சிற்பங்களின் வழியாக, தன்னந்தனிச் சுடர்கள் நலுங்கிக்கொண்டிருந்த கருவறைகள் வழியாக, ஆளில்லாத சுற்றுப்பாதை வழியாக நடந்தேன். நெல்லையப்பர் ஆலயத்தில்தான் எத்தனை எவருமறியாதவைபோன்ற இடங்கள். நானும் பி.ஏ.கிருஷ்ணனும் சென்று அமர்ந்து பேசும் குளக்கரையில் ஒருவருமே இல்லை.

தூண்களில் நாயக்கர்களின் சிற்பங்கள். துணைவியருடன் எதிர்காலத்தை நோக்கி கைகூப்பி நின்றிருந்தனர். பெருஞ்செயல்களைச் செய்தவர்களுக்குரிய அடக்கமும் பெருமிதமும் கலந்த நோக்கு. காந்திமதி அம்மனின் கருவறைக்குச் செல்லும் வழியில் நின்றிருந்த முழுதணிக்கோலம்கொண்ட மன்மதன். சிறிய அம்புடன் அர்ஜுனன்.சிலைகளின் சொற்கள். ஆனால் கால்தூக்கி நின்றாடும் சிலைதான் கண்களுக்குள் மீண்டும் மீண்டும் எழுந்து வந்தது.

nella1
அர்ஜுனன்

பத்துமணிக்குத்தான் வெளியே வந்தேன். தெரு அடங்கிவிட்டிருந்தது. எதிரே உள்ள சரவணபவனில் சாப்பிட்டேன். பொதுவாக இப்படி தனிமையில் கிளம்பும்போதெல்லாம் இனிப்பு நிறைய சாப்பிடுகிறேன். ஏனென்று தெரியவில்லை. அசைவம் உண்பதில்லை. துயில் மிகமிகக்குறைவு. ஒருநாளில் நான்கு மணிநேரம் இருந்தால் மிகுதி. சாதாரணமாக நான் ஏழு மணிநேரம் ஆழ்ந்து உறங்குபவன்.

வெயிலில் அலைவதைப்போல் இன்று நான் வெறுக்கும் ஒன்று இல்லை. வெப்பத்தில் உடல் மிகவும் களைத்துவிடுகிறது. காரணம் பெரும்பாலான நேரம் குளிரூட்டப்பட்ட அறையிலேயே இருக்கிறேன். ஆனால் இப்போது பெரும்பாலும் பகல் முழுக்க கொதிக்கும் வெயிலில்தான் இருக்கிறேன். வெயிலின் சூடு உவப்பாகவும் இருக்கிறது. நம்மை யாரோ தொடர்வதுபோல. நன்றாகக் களைத்துப் போய் படுக்கவேண்டும் என்று தோன்றுவதனாலும்கூட அப்படி இருக்கலாம்.

nel

இரவு 12 மணி வரை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன். வசதியான குளிரூட்டப்பட்ட அறை. ஆனால் தூங்க முடியவில்லை. தொலைக்காட்சி பார்த்து நெடுநாட்களாகின்றது. ஒருமணிவரை பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது. எல்லாமே செயற்கையான நிகழ்ச்சிகள். எல்லாமே ஒரே போல. எல்லா அறிவிப்பாளர்களுக்கும் ஒரே முகம், ஒரே குரல், ஒரே உடல்மொழி. சற்றேனும் ஆர்வமூட்டும் ஒரே தொலைக்காட்சி நேஷனல் ஜியோகிராஃபிக் மட்டும்தான். இந்த இணைய யுகத்திலும் இதையெல்லாம் மக்கள் பார்க்கிறார்களா என்ன?

காலை ஐந்து மணிக்கே எழுந்து குளித்துவிட்டு கிளம்பிவிட்டேன். பேருந்து நிலையம் சென்றேன். நான்குநேரிக்குச் செல்லுமா என ஒரு ஓட்டுநரிடம் கேட்டேன். ஏறிக்கொள் என்றார். இன்னொருவர் வந்து 67 ரூபாய்க்கு பயணச்சீட்டும் கொடுத்துவிட்டு இறங்கிவிட்டார். பேருந்து கிளம்பியது. நான்குநேரிக்கு 67 ரூ இருக்குமா என ஐயம் வந்தது ஒரு கிலோமீட்டர் கடந்து. அருகிருந்தவரிடம் கேட்டேன். நான்குநேரிக்குச் செல்லாது என்றார் .நேராக நாகர்கோயிலாம், இடைநில்லா பேருந்து. பயணச்சீட்டு கொடுக்கக்கூட ஆளில்லை.

nanku3ஓட்டுநரிடம் கேட்டபோது இங்கேயே இறங்கிக்கொள்ளுங்கள் என்று இறக்கிவிட்டார். நான் இறங்கிக்கொண்டு திரும்ப நடந்து பேருந்துநிலையம் வந்தேன். அங்கிருந்த ஓர் அரசுப் போக்குவரத்து அதிகாரியிடம் சொன்னேன். அவர் பயணச்சீட்டை வாங்கிப்பார்த்தார். நடத்துநர் ஒருவரை அழைத்து விசாரித்தார். சட்டென்று அந்தப்பணத்தை அந்த நடத்துநரிடம் பிடித்துக்கொள்ளப்போகிறாரோ என்ற சந்தேகம் வந்தது. எனக்குத்தான் சரியாக வாயில் குரல் எழவில்லை. நான் பேசியே நெடுநேரமாகிறது. நான் தெளிவாகச் சொல்லவில்லை, அவர் செவியில் நாகர்கோயில் என கேட்டிருக்கும். “சும்மாதான் சொன்னேன்,, பணமெல்லாம் திரும்ப வேண்டாம்” என்றேன்.

”இல்லை, அந்த ஓட்டுநர் ஃபோனில் சொல்லிவிட்டார். யார் தவறாக இருந்தாலும் நீங்கள் போகாத பயணத்துக்கு பணம் கொடுக்கக்கூடாது அல்லவா” என்றார் அதிகாரி.  “அது எவர் கணக்கிலும் பிடித்தம் ஆகாதல்லவா?” என்றேன்.  “இல்லை, சரிசெய்துகொள்கிறோம்” என்றார். அதன்பின் சட்டென்று என்னை அடையாளம் கண்டுகொண்டார். என் அண்ணாவின் கீழ் பணியாற்ற்றியவர்.

nanku2

நான்குநேரிக்குச் சென்று அங்கிருந்த கூரைக்கடையில் காலைச்சிற்றுண்டி உண்டேன். அங்கே இரண்டு உள்ளூர் கான்ஸ்டபிள்கள் அமர்ந்து அரசியல் பேசிக்கொண்டிருந்தார்கள். சீருடை இல்லை, கால்சட்டை மட்டும் காக்கி. உள்ளூர் ஆள் ஒருவனை வரச்சொல்லியிருந்தார்கள் போல. அவன் வந்து கும்பிட்டு நின்றான். கான்ஸ்டபிள் அவன் தன் மனைவியை முந்தையநாள் குடிக்கப் பணம்கேட்டு அடித்தானா என்று கேட்டு அதட்டினார். அவன் தலைகுனிந்து முனகினான். பலமுறை அடிக்கப்போனார். ஆனால் அடிக்கவில்லை.

“தாளி இதான் லாஸ்ட் வானிங். இனிமே பொம்புள மேலே கைய வச்சா குண்டாஸிலே உள்ள போவே” என எச்சரித்து “போடா” என்றார். அவன் எலிபோல வெளியே சென்றான். அதன்பின் இருவரும் மீண்டும் உள்ளூர் அரசியலில் இறங்கினர். ஓட்டல்காரர் இன்னொருவனும் குடித்துவிட்டு மனைவியை அடிப்பதாக சொன்னார். அவனை நாளை வரச்சொல்லுங்கள் என்றார் கான்ஸ்டபிள்.

nanku4

நான்குநேரிக்கு முன்பொருமுறை வந்தபோது இரவு. வானமாமலை சப்பரத்தில் எழுந்தருளிக்கொண்டிருந்தார். உள்சுற்று வழியாகவே ஓர் அணிவலம். அதற்கே ஐம்பதுபேர்தான். எப்போதுமே அங்கே கூட்டம் குறைவு. இப்போது பேருந்துகள் பெருஞ்சாலை வழியாக சென்றுவிடுவதனால் கங்கைகொண்டான், நான்குநேரி எல்லாம் மைய வரலாற்றிலிருந்து ஒதுங்கிவிட்டிருக்கின்றன.

அப்போது காலைநேரம்தான். ஆனால்  கோயில் எங்கும் ஆளே இல்லை. உள்ளூர்காரப் பெண்கள் இருவர் வணங்கிவிட்டு அர்ச்சகரின் தட்டில் இரண்டுரூபாய் நாணயங்களை போட்டனர். ஐந்துரூபாய் கூட இல்லை. இது தமிழகமெங்கும் ஒரு வழக்கமாக உள்ளது. இன்று தமிழர்கள் மிகமிகக் குறைவாக எங்கேனும் காசு போடுகிறார்கள் என்றால் அர்ச்சகரின் தட்டில்தான். பிச்சைக்காரர்களுக்கு இரண்டுரூபாய் போட்டால் மொட்டை வசை கிடைக்கும் என அனைவருக்கும் தெரியும்.

nan

நான் அர்ச்சகரின் முகத்தில் ஏதேனும் தெரிகிறதா என்று பார்த்தேன். அவர் கருத்தில்கொள்ளவே இல்லை. நான் வழக்கமாக அர்ச்சகரின் தட்டில் நூறுரூபாய் போடுவேன். மிகப்பெரிய ஆலயத்தில் பெரும்கூட்டம் என்றால் ஐம்பது ரூபாய். சிறிய ஆலயத்தில் நான் மட்டுமே அன்றைய வழிபாட்டாளன் என்றால் ஐநூறு ரூபாய். இது பெருந்தொகையாகத் தெரியலாம். நான் மாதம்தோறும் ஆலயங்களுக்குச் செல்பவன். ஒட்டுமொத்தமாக கூட்டிப்பார்த்தால்கூட இந்தத் தொகை என் வருமானத்தில் மிகச்சிறிய பங்குதான். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு அப்படித்தான் என நினைக்கிறேன்.

இந்துப் பண்பாடு அழியவேண்டும் என நினைக்கும் கும்பலால் தொடர்ந்து அந்தணர் வசைபாடப்படுகிறார்கள். தட்டில் விழும் பணத்தைப் பற்றி எவ்வளவு கீழ்த்தரக் கிண்டல்கள் இங்கே. ஊர் ஊராக பொதுச்சொத்தைக் கொள்ளையடிக்கும் நாலாந்தரக் கும்பலின் இந்த வசைகளை நாமும் அனுமதிக்கிறோம். அவை எப்படியோ நம் செவிகள் வழியாக உள்ளத்திலும் குடியேறியிருக்கின்றன. அர்ச்சகர்கள் நம் மதத்தின் அடிப்படைத் தூண்கள். நெடுங்காலம் நீடிக்கும் வழக்கத்தால் அதற்கான உளநிலை அந்தணர்களுக்கே அமைகிறது. பிறசாதியினர் பூசனைசெய்து வந்த ஆலயங்களில்கூட ஒரு தலைமுறைக்குள் அவர்கள் கைவிட்டு ஒதுங்க அந்தணர்களை பூசைக்கு தேடிக்கொண்டுவந்து அமைக்கவேண்டிய கட்டாயம் நிகழ்வதை நீங்கள் சற்றே சுற்றிப்பார்த்தால் காணமுடியும்.

nan

இந்துமதம் வேண்டும் என்றால் ஆலயங்கள் வேண்டும். அங்கே சடங்குகள் நிகழவேண்டும் என்றால் பூசகர்களும் வேண்டும். நான் பிற சாதியினர் பூசனைசெய்வதை வரவேற்பவன். உரிய பயிற்சியும் உரிய உளநிலையும் இருந்தால் எவரும் பூசனைசெய்யலாம். ஆனால் அவ்வாறு பூசனை செய்ய வருபவர் தமிழகத்தில் மிகமிக அரிது. அனேகமாக இல்லை என்றே சொல்லலாம். காரணம் கொஞ்சம்கூட வருமானம் இல்லாத தொழில் இது. பிராமணர்களிலேயேகூட இன்று முறையான பயிற்சி இல்லாதவர்களே அதிகமும் இதற்கு செல்கிறார்கள்

வேறெந்த மதத்தின் பூசகர்களுடனும் ஒப்பிட்டுப்பார்க்க இந்து மதத்தின் பூசகர்களே மிகப் பரிதாபநிலையில் இருக்கிறார்கள். இதைப்பற்றி நாம் நாணவேண்டும். இவ்வாறு ஊதியமற்ற, சமூக மதிப்பற்ற பணியாக இது இருப்பதனால் கல்வித்தேர்ச்சியற்றவர்கள் இத்தொழிலுக்கு வருகிறார்கள். காலப்போக்கில் இது இந்துமதத்தின் சடங்குகளை முறைமையில்லாமலாக்கும். கேரள ஆலயங்களின் பூசகர்களின் நிலைமையை, அவர்கள் பூசை செய்வதிலுள்ள ஒழுங்கையும் முறைமையையும் தமிழகத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கலாம். அங்கே பூசகர்கள் அரசூழியர்கள். முறையான ஊதியம் பெறுபவர்கள். இங்கே ஆலயச்சொத்தை அரசியல்வாதிகளும் அரசும் சூறையாடுகின்றன.

nankuneri1
சங்கிலி பிணைக்கப்பட்ட நாயக்கர்கள்

இங்கே ஆலயத்தின் அனைத்து நிர்வாகிகளும் அரசூழியர்கள். அவர்களுக்கு ஊதியம் உண்டு. ஆலயவழிபாட்டின் அச்சாணிகளான பூசகர்கள் தொகுப்பூதியம் பெறுபவர்கள். ஆலயத்தை நடத்தும் காவலர், இசைக்கலைஞர் போன்ற ஊழியர்கள் மேலும் கீழே பேருக்கு சிறு தொகை பெறுபவர்கள். பூசகர்களுக்கும் ஆலயப்பணியாளர்களுக்கும் ஊதியம் அளிக்கவும், ஆலயச்சடங்குகளுக்குச் செலவிடவும்தான் கோயில்களுக்கு அரசர்களாலும் செல்வந்தர்களாலும் மாபெரும் நிலக்கொடைகள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றை கையகப்படுத்திக்கொண்டிருக்கும் அரசு பூசகர்களுக்கும் பூசைக்கும் தவிர பிற அனைத்துக்கும் பணத்தை செலவிடுவதன் அநீதி நமக்கு உறைப்பதே இல்லை.

பூசகர்கள், பிற ஆலயஊழியர்கள் முறையான அரசூழியர்களாக ஆக்கப்படவேண்டும். அது நிகழும் வரை இந்துச்சமூகம்தான் பூசகர்களை பேணவேண்டும்.  என் பார்வையில் ஒரு ஆலயப்பூசகர் மாதம் ஒருலட்சம் ரூபாய் வரை ஊதியம்பெறும் காலம் வருமென்றால் மட்டுமே உண்மையில் ஆலயங்களில் தொன்மையான சடங்குகள் அனைத்தும் முறையாக பிழையின்றி நிகழமுடியும். அது மிக எளிது. ஒருபோதும் உண்டியலில் பணம் செலுத்தாதீர்கள். அது அரசியல்வாதிகளின் கைக்கு செல்கிறது. அடுத்தமுறை ஆலயத்தட்டில் பணம் போட சில்லறையைத் தேடி உங்களை இறைவன்முன் சில்லறையாக ஆக்கிக்கொள்ளாதீர்கள்.Capture2

இந்துசமூகம் செல்வம் அற்றது அல்ல. இங்கே மதத்திற்குச் செலவிடப்படும் தொகை மிகமிகப்பெரியது. அதில் ஒரு சிறுபகுதி அர்ச்சகர்கள், ஆலய ஊழியர்களுக்குச் சென்றாலே போதும். இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்களின் நாலாந்தர சாதிக்காழ்ப்புகளுக்கு செவிகொடுக்கும் இந்துக்களே இந்த மதத்தை முற்றழிக்கும் பழியை கொள்பவர்கள். இவ்வாலயங்களை அமைத்த நம் முன்னோர்களின் தீச்சொல்லுக்கும் உரியவர்கள்.

ஆலயத்தில் ஏதோ திருப்பணி நிகழ்கிறது.முகப்பு மண்டபத்தில் பெரிய சங்கிலியை அங்கே வணங்கியபடி நின்றிருக்கும் நாயக்க அரசர்களின் கைகளில் கட்டி வைத்திருக்கிறார்கள். அங்கே சென்றுகொண்டிருந்த ஒரு பூசகரிடம் “இது என்ன? உடைஞ்சு போயிருமே” என்றேன். “நாம என்ன சொல்றது? நாம அவாளை கும்பிட்டு நிக்கவேண்டியவா” என்றார். எவரிடம் சொல்வதென்று தெரியவில்லை. நம் ஆலயங்கள் முழுக்க அரிய சிற்பங்கள் இப்படித்தான் அழிந்துகொண்டிருக்கின்றன.

சமீபத்தில் அருண்மொழி சிலைத்திருடன் என்னும் நூலை படித்து கொதித்துக்கொண்டிருந்தாள். ”நம்ம சிலையை எல்லாம் எப்டி திருடியிருக்கானுங்க!” என்றாள். ”திருடி பத்திரமா மியூசியத்திலேதானே வைக்கிறான். இங்க இருந்தா நம்மூர் அயோக்கியனுங்க உடைச்சு போட்டிருப்பாங்க. என்னைக்கேட்டால் மிச்சமிருக்கிற நல்ல சிலைகளையும் அவன்கிட்டேயே குடுத்திடலாம். அவனுக்கு மதிப்பு தெரிஞ்சிருக்கு” என்றேன்.nn

நான்குநேரியிலிருந்து மீண்டும் வீட்டுக்குச்சென்று உடனே பெட்டியுடன் மீண்டும் கிளம்பினேன். முப்பது முப்பத்தொன்றாம்தேதிகளில் ஈரோடு நிகழ்ச்சி. ஆகவே எப்படியும் திரும்பியாகவேண்டும். அதுவரை சென்றுகொண்டே இருக்கவேண்டியதுதான்.  ஆனால் இம்முறை அகத்தில் ஓர் உருவம் எஞ்சியிருக்கிறது. கால்தூக்கி நின்றாடும் பைரவம். ஒருகால் இங்கிருந்து எழுந்துவிட்டது.

[நிறைவு]

முந்தைய கட்டுரைஎன்ன அளவுகோல்?
அடுத்த கட்டுரைதிராவிட இயக்க இலக்கியம் – ஒரு வினா