வானோக்கி ஒரு கால் -1

ku12

சும்மா பாறையடி மலைவரை ஒரு காலைதான் சென்றேன். அங்கிருந்து இருபது கிமீ நடந்து பூதப்பாண்டி வரை சென்றேன். தாடகை மலை அடிவாரத்தில் அமைந்த கோயில். கருவறை குடைவரையாலானது. அங்கே சிற்பங்களை நோக்கி நின்றபோது தோன்றியது, இவ்வாறு நிலையழிந்திருக்கும் ஒவ்வொருமுறையும் கோயில்களுக்குத்தானே செல்கிறேன் என்று. ஒவ்வொரு முறை இந்தப் பெருந்தனிமையை சுமக்கும்போது கிளம்பிச்செல்வது ஆலயங்களுக்கே. தூண்டுதல்களுக்காக. ஆறுதலுக்காக. வெண்முரசின் ஒவ்வொரு நாவலுக்கும் இவ்வாறு சென்ற ஆலயங்களை தனியாக பட்டியலிடவேண்டும்.

ஒவ்வொரு தொடக்கத்தையும் கோயில்களிலிருந்தே பெறுகிறேன். சொல்வளர்காடு கிராதம் கேதார்நாத்திலிருந்து. மாமலர் குடஜாத்ரியில் மூகாம்பிகை அன்னையிடமிருந்து. வெவ்வேறு சிலைகள் கனவிலெழுந்து முதல் படிமத்தை அளித்திருக்கின்றன. வெவ்வேறு நிலங்கள் ஆழ்ந்த பரவசத்தை அளித்து சொல்லெடுத்துத் தந்துள்ளன.

j

மீண்டும் மீண்டும் கோயில்களுக்குச் செல்வதனால் நான் பக்தன் என்று பொருள் அல்ல. அந்த பாவபக்தியை நான் உணர்ந்த்தே இல்லை. ஒருமுறைகூட ஓர் ஆலயமுகப்பில்கூட உளமுருகியதில்லை. வெறுமனே விழிமலைத்து நோக்கி நின்றிருப்பேன். வணங்கி திரும்புவேன். உண்மையிலேயே நான் யார்? இந்த ஆலயங்கள் எனக்கு எதைத்தான் அளிக்கின்றன?

என்னை எப்படி வரையறை செய்துகொள்வது என்பது எப்போதுமே எனக்கு சிக்கலானதுதான். என் வாசகர்கள் மட்டுமல்ல விமர்சகர்களும் நண்பர்களும்கூட அதைத்தான் உண்மையில் கேட்கிறார்கள். எதிரிகள் நான் அவர்களை ஏமாற்றும்பொருட்டு பச்சோந்தி வேடமிடுவதாக எண்ணிக்கொள்கிறார்கள். நண்பர்கள் நான் நிலைமாறிக்கொண்டே இருப்பவன் என்று மதிப்பிடுகிறார்கள்.

ku11என்னை வரையறை செய்துகொள்ள ஆசைதான், அவ்வாறு வரையறை செய்துகொண்ட மறுகணமே அந்த வரையறைக்குள் நின்றாகவேண்டிய பொறுப்பு எனக்கு ஏற்பட்டுவிடுகிறது. அதன்பின் அதை மீறுவது எப்படி என்று மட்டுமே என் மண்டை துருதுருக்கிறது. ஒவ்வொருவரிடமும் “நீங்கள் நினைப்பதுபோல் நான் இல்லை” என்று ரகசியமாக சொல்லிக்கொள்வதன் உற்சாகமே எழுதவைக்கிறது. ஏனென்றால் நான் எழுதும் ஒரு புதிய கதை நான் எழுதக்கூடுவது என எவரும் எண்ணாததாகவே இருக்கவேண்டும். அதுவே எனக்கு ஊக்கத்தை அளிக்கிறது.

மாறாமலிருப்பது என் ரசனையும் தேடலும்தான். என் வழியை முன்னரே வகுத்துக்கொள்ளவில்லை. அதுவே ஒழுகிச்செல்லட்டும் என விட்டுவிடுகிறேன். ஆகவே அவ்வப்போது நின்று ‘அடாடா இங்கே வந்திருக்கிறேனா?” என நானே வியந்துகொள்கிறேன். அதுவே வாழ்க்கையையும் ஆர்வத்திற்குரியதாக்குகிறது.

kur0

நான் எவ்வகையிலும் இறைவழிபாடு செய்பவன் அல்ல. உருவவழிபாட்டில் ஈடுபடாதவர் என் ஆசிரியர். நானும் சடங்குகள் செய்வதில்லை. பூசைகள் வேண்டுதல்கள் வழக்கமில்லை. நானும் அத்வைதியே. நான் கோயில்தோறும் செல்வதைப்பற்றி அவரிடமே கேட்டிருக்கிறேன். ”நீ எழுத்தாளன். கலைஞர்களுக்கு உருவங்களிடமிருந்து மீட்பில்லை” என்று நித்யா சொன்னார். “பசுவை ஒட்டக்கறப்பதுபோல பிரம்மத்தை உருவங்களாக கறந்து வைத்திருப்பவர்கள் உன்னைப்போன்றவர்கள்தான்” என சிரித்தார்.

ஆலயச்சிலைகள் மேல் எனக்கு பெரும் மோகம் உண்டு. இந்த நாற்பதாண்டுகளில் நான் சிலைகளைக்காண பயணம் செய்யாத ஒரு மாதமாவது இருந்திருக்குமா? இந்தியா முழுக்க அலைந்து திரிந்து பார்த்துக்கொண்டே இருக்கிறேன். ஆலயங்களுக்கு நான் செல்வது சிலைகளிலிருந்து கலையின் தொடர்ச்சி ஒன்றை கண்டுகொள்ளவா? என் ஆழுள்ளத்தை அவை திறக்கின்றனவா?

சென்றமுறை அஜ்மீர் செல்ல எண்ணியிருந்தேன். இருமுறை அஜ்மீர் கனவில் வந்தது. நானும் ஷாகுலும் கிளம்ப டிக்கெட் போடுவது வரை சென்றோம். பின்னர் அது ஒத்திப்போடப்பட்டது. இந்தத் தேடல் எப்போதுமே உந்திச்செல்கிறது.  நான் செல்வது சிற்பங்களுக்காக என்றால் ஏன் அஜ்மீர் செல்லத்தோன்றவேண்டும்?

kur3

பூதப்பாண்டியிலிருந்து நேராக குற்றாலம் கிளம்பிச்சென்றேன். ஏன் குற்றாலம் சென்றேன் என்றால் தென்காசி பேருந்து நின்றதனால்தான். உச்சகட்ட வெயில். பேருந்தே தகித்துக்கொண்டிருந்தது. குற்றாலத்தில் எந்த அருவியிலும் தண்ணீர் இல்லை. பேரருவி வெறும் பாறையாக பகீரிடச் செய்தபடி எழுந்து நின்றது. கடைகள் மூடிக்கட்டப்பட்டிருந்தன. டீக்கடைகள் கூட இல்லை. மானுட நடமாட்டமே குறைவு. நான் குற்றாலத்தில் தங்கவிரும்பினேன். ஆனால் வெறும்கையுடன் வந்திருந்தேன். நல்லவேளையாக என் வங்கிஅட்டை கையிலிருந்தது.

விடுதிகளில் தங்கவேண்டும் என்றால் கையில் பை இருக்கவேண்டும். ஆகவே தென்காசியில் ஒரு தோள்பை, ஒரு சாயவேட்டி, ஒரு துண்டு வாங்கிக்கொண்டேன். குற்றாலத்தில் விடுதிகள் ஓய்ந்து கிடந்தன. ஐநூறு ரூபாய்க்கு ஒரு விடுதியை எடுத்துக்கொண்டேன். எந்தக் கேள்வியும் இல்லை. விடுதியில் என்னைத்தவிர எவரும் இல்லை என்று தோன்றியது. ஆனால் ஒர் அறையில் எவரோ இருந்தார்கள். பெண்களும். பேச்சுக்குரல் கேட்டுக்கொண்டே இருந்த்து. எவரையும் வெளியே பார்க்கமுடியவில்லை.

ku6
ஆடை அணிந்த நந்தி

பகல் முழுக்க அலைந்துகொண்டிருந்தேன். பழைய குற்றாலத்தில் மிகக்கொஞ்சமாக நீர். அதில் நாலைந்து குடிகாரர்கள் ஊளையிட்டபடி நனைந்துகொண்டிருந்தார்கள். மாலையில் குற்றாலநாதர் கோயிலை சென்று பார்த்தேன். அதுவும் முற்றாக ஓய்ந்து கிடந்தது.  இருள்பரவத்தொடங்கிய சுற்றுமாளிகை வழியாக சிலைகளை பார்த்தபடி நடந்தேன்.

ஓர் இடத்தில் நாதஸ்வரம் கேட்டது. தாங்கொணா அபஸ்வரம். ஆனால் மண்டப மறைவில். அங்கே சென்று பார்த்தேன். நாலைந்து இளைஞர்கள் அமர்ந்து நாதஸ்வரம் பயின்றனர். ஒருவர் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தார். நாதத்திற்கு கந்தர்வர்கள் வருவதுண்டு போல. அபஸ்வரத்திற்கு வரும் தெய்வங்களும் இருக்குமோ? தேடிச்சென்று எட்டிப்பார்த்த நான் அதுதானா?

நமது பேராலயங்கள் எல்லாம் கோட்டம் என்றும் சொல்லப்படும் ஆலயத்தொகைகள். மையத்தெய்வங்கள் அமைந்த கருவறையைச் சூழ்ந்து ஏராளமான துணைக்கருவறைகள் உண்டு. எல்லா சிவன் கோயில்களிலும் காசிவிஸ்வநாதரின் சிற்றாலயம் ஒன்று இருக்கும். அன்றெல்லாம் அங்கே கங்கைநீர் வைத்திருப்பார்கள். எவரேனும் இறக்கும் தருவாயிலிருந்தால் அங்கிருந்து கொண்டுசென்று உடைத்து நாவில் விடுவார்கள். கங்கை நுண்வடிவில் இந்தியாவெங்கும் பாய்கிறது.

kur6
அம்மனுக்கு ஜிகினா

ஆளொழிந்த ஆலயமண்டபங்களில் சிற்பங்கள் கண்தெறிக்க நோக்கி நின்றிருந்தன. கன்னங்கரிய உருவங்கள். அத்தனை சிற்பங்களும் என்னையே நோக்குவதாக உணர்ந்தேன். எல்லா தெய்வங்களும் தூண்சிலைகளும் கந்தல் அணிந்து பிச்சைக்காரர்கள் போல அமர்ந்தும் நின்றும் இருந்தன. பிச்சைக்காரர்களுக்கு வீசி எறிவதுபோல சில தெய்வங்கள் முன் ஒருரூபாய் நாணயங்களை போட்டிருந்தார்கள். ஒரு ரூபாய்க்குமேல் எங்கும் கண்ணுக்குப் படவில்லை.

முன்பெல்லாம் மூலவர் சிலைகளுக்கும் விழாவர் சிலைகளுக்கும் மட்டும் அணியாடை சுற்றப்பட்டிருக்கும். பின்னர் விழாவர் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்ட ஆடைகளை அப்படியே ஆண்டுமுழுக்க விட்டுவைக்கும் வழக்கம் வந்தது. பின்னர் அத்தனை வழிபாட்டுச் சிலைகளுக்கும் ஆடை அணிவித்தனர். இன்று கோயில்முழுக்க அத்தனை சிலைகளையும் அழுக்குக் கந்தல் சுற்றி வைத்திருக்கிறார்கள்.

kur8

முழுக்கமுழுக்க ஆகம மீறல் இது. தெய்வச்சிலைகளுக்கு வழிபாட்டின் ஒரு பகுதியாக மாலைகளும் ஆடைகளும் அணிவிக்கலாம். அவற்றை உடனடியாக நீக்கிவிடவும் வேண்டும். நிரந்தரமாக தெய்வச்சிலைகளுக்கு கந்தலாடையைச் சுற்றி வைப்பது போல கீழ்மை வேறில்லை. நம் உளச்சிறுமை தெய்வங்களை பிச்சைக்காரர்களாக ஆக்கி வைத்திருக்கிறது.

தமிழகத்திற்கு வெளியே இப்பழக்கம் இல்லை. இங்கே சென்ற பத்தாண்டுகளாகத் தொடங்கிய இப்பழக்கம் இப்போது பெருகி கோயில்களே கந்தலாடைக் குவியலாக கண்ணுக்குபடுகின்றன. பெரும்பாலான ஆடைகள் பலமாதங்களாக அப்படியே விடப்பட்டு எண்ணையும் அழுக்கும் கலந்து செல்லரித்து காணப்படுகின்றன.  மாகாளைக்குக்கூட ஆடை அணிவிக்கிறார்கள். அம்மனுக்கு நாலாந்தர ஜிகினாத்துணியை போர்த்தி வைத்திருக்கிறார்கள்.

kur7

இதிலுள்ள அழகுக்குறைவு எவருக்கும் தெரியவில்லை. குறைந்தது வழிபாட்டு முறைமீறலாவது எவராலாவது எடுத்துச் சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் இன்று ஆலயவழிபாடு உட்பட அனைத்தையுமே ஒன்றும்தெரியாத சவடால் சோதிடர்கள் முடிவெடுக்கிறார்கள்.

தெய்வச்சிலைகள்  நிர்வாணமாக நிற்பதாக இந்தப் பாமரர்களுக்கு நினைப்பு. சிற்பங்களிலேயே ஆடைகள் செதுக்கப்பட்டுள்ளன.அவை உரிய ஆகமமுறைப்படி செதுக்கப்பட்டவை. இன்ன சிலைக்கு இன்ன ஆடை என நெறிகள் உண்டு. ஆகவே சிலைகளுக்கு ஆடைகள் அணிவிக்கக்கூடாது, அது பாவம் என ஸ்தபதிகள் பலர் எழுதிவிட்டனர். வழிபாட்டுக்காக ஆடை அணிவித்தால் அதை நீக்கிவிடவேண்டும். [பட்டும் பருத்தியும் அன்றி வேறு ஆடைகள் அணிவிக்கக்கூடாது. ஆனால் இங்கே கண்ணுக்குப்படுபவை முழுக்க கண்கூசும் நாலாந்தர ஜிகினாத் துணிகள்] மலர்மாலைகள் கருகும் முன்னரே அகற்றிவிடவேண்டும். சில இடங்களில் மட்டும் சில சிலைகளுக்கு சந்தனம் முதலிய காப்புகளை மாறாமல் போடவேண்டும் என தொல்நெறி உள்ளது. அவை கடைபிடிக்கப்படவேண்டும். ஸ்தபதிகள் சொல்லுக்கெல்லாம் எவருக்கும் செவி இல்லை. அறிவுடையோரால் கைவிடப்பட்ட ஆலயங்கள் அறியாமையின் விளைநிலங்கள் இன்று.

kut1

குறும்பலாவீசனை வணங்கி வெளியே வந்தேன். டீக்கடை தேடிச்சென்று ஒரு டீ குடித்தேன். குரங்குகள் ஓய்வாக அமர்ந்திருந்தன. அவற்றுக்கும் இது சீசன் இல்லை என தெரியுமோ என்னவோ. வணிகர்கள் சிலர் கூடி அமர்ந்து “ஏல அவன்தான் முதல்ல அடிச்சான் தெரியுமா?” என்று வம்பளந்துகொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் கூர்ந்து பார்த்தார்கள். நீரில்லா அருவிக்கு வருபவர்கள் இரண்டு வகை. கெட்டகாரியத்திற்காக வருபவர்கள், தற்கொலை செய்ய வருபவர்கள். இரண்டு நோக்கமும் இல்லை என எப்படி அவர்களிடம் சொல்வது?

ஐந்தருவியில் தண்ணீர் இருக்கும் என்றார் ஒருவர். சரிதான் என ஆட்டோ பிடித்து ஐந்தருவிக்குச் சென்றேன். பாறைமேல் மெல்லிய கசிவு. அதை அருவி என்றால் இலக்கணப்பிழை. பாறையைத் தழுவியபடி நின்று  கையால் தடுத்து எழுந்துவிழச்செய்து தலையில் விட்டு நாலைந்துபேர் குளித்துக்கொண்டிருந்தார்கள். நித்யா சொன்னதுபோல பசுவை ஒட்டக்கறக்கிறார்கள். என்னால் குளிக்கமுடியும் என தோன்றவில்லை. இரண்டு முறை பச்சைமாங்காய் கீற்றுக்கள் வாங்கி உப்பு தோய்த்து தின்றேன். ஒரு குரங்கு என்னைப் பார்த்து கண்ணை சுருக்கியது. ஏற்கனவே பச்சை மாங்காயை உப்புடன் தின்று பார்த்த அனுபவம் இருக்கும்போல.

ku

இரவில் மீண்டும் பேரருவிக்குச் சென்றேன். அப்போது கொஞ்சம் நடமாட்டம் இருந்தது. ஏழெட்டு பெண்கள் தட்டுபட்டார்கள். என்னைக் கூர்ந்து பார்த்தனர். ஆனால் ஒன்றும் கேட்கவில்லை. இல்லாத பேரருவியை பார்த்துக்கொண்டிருந்தேன். கரிய பாறையே கருவறைபோலிருந்தது. அருவியில் செதுக்கப்பட்டிருந்த சிவலிங்கங்கள்  தெரிந்ததன. பாறைப்புடைப்புக்களில் சிற்ப உருவங்கள். கிட்டத்தட்ட முழுநிலவு ஒளியுடன் வானில் நின்றது. காடு சூழ்ந்திருந்தாலும் காற்றே இல்லை. ஆகவே எந்த ஓசையும் இல்லை.

இல்லாத அருவி. ஆனால் அதை உடனே பார்க்கவும் கேட்கவும் முடிந்தது. அதனுடன் தனித்திருக்கையில் அருவி பிறிதொன்றாவதை முன்னரே அறிந்திருக்கிறேன். அதன் அறுபடாத ஒற்றைச் சொல்லை கேட்டிருக்கிறேன். இல்லாத அருவியை முதல்முறையாக பார்க்கிறேன். அது பன்மடனக்கு பேருருக் கொண்டது. விண்ணளாவ எழுவது. “போதும் பொன்னும் உந்தி அருவி புடைசூழ, கூதல் மாரி நுண்துளி தூங்கும் குற்றாலம்!”  மலர்ப்பொடியும் பொன்னும் அள்ளி பெருகிப்பொழியும் பேரருவி புடைசூழ கூதல்மாரியின் நுண்துளி புல்நுனியில் ததும்புகிறது. பெருக்கும்பொழிவும் துளிப்பும் சொட்டும்  ஒன்றான ஒரு வெளி.

ilan4
இலஞ்சி

பதினொரு மணிக்கு திரும்பி வந்து படுத்துக்கொண்டேன். சென்ற சில நாட்களாகவே முதுகுவலி. வெறுந்தரையில் படுக்கலாம் என்று மருத்துவர் ஆலோசனை. நான் செல்லும் விடுதிகளில் எல்லாம் இரண்டடி உயரமான உள்ளே சுருள்வில் வைத்த சொகுசு மெத்தை. ஆனால் அதில் படுத்தால் காலையில் எனக்கு முதுகை நிமிர்த்த முடியாது. தரையில் படுத்தால் உண்மையிலேயே முதுகுவலி குறைகிறது என்பதை கவனித்தேன்.

காலை ஐந்தரை மணிக்கு ஆட்டோக்காரரை வரச்சொல்லியிருந்தேன்.நேராக இலஞ்சி சென்றேன். குற்றாலத்தின் ஒரு பகுதியாகவே இலஞ்சியை சொல்லவேண்டும். ஐந்து கிமீதான். ஆனால் குற்றாலத்தின் சுற்றுலாத்தன்மை இல்லை – ஆங்காங்கே பழைய வீடுகள் வாடகைக்கு கிடைக்கும் என்னும் அறிவிப்புகளை தவிர்த்தால். இலஞ்சிக்கு பலமுறை வந்திருக்கிறேன். 2008-இல்  ஒரு சினிமா முயற்சிக்காக அங்கே வந்து ஒரு பழைய இல்லத்தில் சிலநாட்கள் தங்கியுமிருக்கிறேன்.

ilan1

இலஞ்சியும் காலையில் துயிலெழவில்லை. மலைகள் குளிர்ந்து நீலமாகி சூழ்ந்திருந்தன. தென்னைமரங்களை ஓலையசையச் செய்யும் அளவுக்கு காற்று இல்லை. கோயிலைச்சுற்றி காலை உடற்பயிற்சி செய்வோர் நடந்துகொண்டும் ஓடிக்கொண்டும் இருந்தனர். ஒரு 16 வயதுச் சிறுமி ஓடுவதை பார்த்தேன். ஓட்டப்பந்தய வீரர்களின் ஓட்டம் முற்றிலும் வேறுவகையானது, பார்த்ததுமே தெரிந்துவிடுகிறது. அவர்கள் காற்றில் தென்னையோலை அசைவதுபோல இயல்பான விசையுடன் செல்கிறார்கள்.

கோயிலில் சிற்பங்களை பார்த்துக்கொண்டு சுற்றிவந்தேன். அரையிருள் நிறைந்திருந்த மண்டபங்கள். நாதஸ்வரம் மூச்சுவல்லமை இல்லாமல் இருமல் போல எங்கோ ஒலித்துக்கொண்டிருந்தது. தன்னந்தனியாக அமர்ந்திருக்கும் தெய்வங்கள். ஊரிலிருந்து கிளம்பியபின்னர் தன்னந்தனியான தெய்வங்களையே பார்த்துக்கொண்டு வருகிறேன். ஆலயங்களின் சுற்றுவழிகளில் எவருமே இல்லை. காட்டில் இருக்கும் தனிமையும் ஓசையின்மையும். கல்லால் ஆன காடு. தெய்வங்கள் அதற்குள் புலிகள்போல் யானைகள்போல் மான்கள்போல் மறைந்திருக்கின்றன. குரங்குகள்போல தூண்களில் சிற்பங்கள்.

ila

வாசலில் யானை நின்றிருந்தது. காலையிலேயே நீராட்டப்பட்டு நெற்றியில் பொட்டு அணிந்திருந்தது. குற்றாலம் பகுதிகளில் யானைகள் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் எல்லா கோயில்யானைகளும் மிகுஎடை கொண்டவை. வயிறு தாழ்ந்து தொங்கும். சிலநாட்களிலேயே அவற்றுக்கு காலில் வீக்கமும் வலியும் வந்து விரைவில் முடமாகிவிடும். குருவாயூர் போன்ற யானைக்கொட்டில்களில் நிலைமை சற்று மேல். கேரளத்தில் யானைப்பராமரிப்புக்கென்றே மரபான மருத்துவர்கள் உண்டு. பருவகால நெறிகளும் உண்டு.,

இலஞ்சியிலிருந்து பதினைந்து கிமீ தொலைவிலிருந்த திருமலை சென்றேன். அங்கும் நான் மட்டுமே இருந்தேன். காலை ஏழரைக்கு மலையேறவேண்டிய தேவை வேறு எவருக்கும் இல்லை போல. எந்தத் துணையும் இல்லை. தன்னந்தனியாக ஏறி இறங்கினேன். மலை முழுக்க குரங்குகள். தனியாக நான் சென்றதனால் அவை பெரிய ஆர்வம் காட்டவில்லை. எவரும் ஏறியிறங்காதபோது படிகள் கூட வேறு பொருள்கொண்டு விடுகின்றன. பலர் ஏறியிறங்கும்போது ஒவ்வொரு படியும் தனித்தனியாக தெரிவதுபோலவும் எவருமே இல்லாதபோது படிகள் ஒற்றை துணியின் மடிப்புகள் போல தெரிவதாகவும் கற்பனை செய்துகொண்டேன்

il

வெயில்மூத்து வியர்வை கொட்டியது. சுற்றிலும் விரிந்திருந்த  பசுமையை நோக்கிக்கொண்டு நின்றிருந்தேன். அத்தனை உயரம் வரை கீழிருக்கும் ஒரு சொல்லும் வந்தடையவில்லை.  செவியில் ஒரு ரீங்காரம் இருந்துகொண்டிருப்பதுபோலிருந்தது.

குற்றாலம் திரும்பினேன். கடைத்தெரு அப்போதுதான் சோம்பல்முறித்து எழுந்துகொண்டிருந்தது. ஒரே ஒரு கடையில் இட்லிக்குண்டான் நீராவிமூச்சு விட்டது.  காலை உணவுக்குப்பின் அறையை காலிசெய்துவிட்டு தென்காசிக்கு கிளம்பினேன்.

[மேலும்]

முந்தைய கட்டுரைசிவ இரவு – கடிதம்
அடுத்த கட்டுரைஉகவர் வாழ்க்கை – உளவியலாளர் கடிதம்