திராவிட இயக்கம் மேலிருந்த தீண்டாமைக்குத் தமிழிலக்கியவாதிகளுடைய பிராமணியப் பார்வைதான் காரணம்- கி.ராஜநாராயணன் பேட்டி
கி.ராஜநாராயணனிடம் சமஸ் திறமையாக வார்த்தை பிடுங்கியிருக்கிறார். எப்போதுமே பெரியவர் சாமர்த்தியமாக பேசக் கற்றவர். இப்போதும் கேட்டவருக்கு என்ன தேவை என புரிந்துகொண்டிருக்கிறார். அதை பேட்டி என்பதை விட மனுவை வாசித்துக்காண்பித்து கையெழுத்து வாங்குவது என்று சொல்லலாம். கிரா கொஞ்சம் மழுப்பி, ஊடே கொஞ்சம் தன் கருத்தையும் சொல்லி, கடந்து சென்றிருக்கிறார்.
கி.ரா கூடுமானவரை சி.என்.அண்ணாத்துரை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. கடைசியாக சமஸே ஒரு முன்கருத்துக் கேள்வியைக் கேட்டு பெரியவர் ஆமாம் என்றதும் அதையே பேட்டியின் மையத்தலைப்பாக ஆக்கிவிட்டார். இந்தவகை இதழியலை நாம் காண ஆரம்பித்து நெடுநாட்களாகின்றது
இனி திராவிட ஆதரவாளர்கள் தங்கள் தகர முரசுகளை ஒலிக்க ஆரம்பிக்கலாம். நடுவே கி.ரா திராவிட இயக்கம் பற்றி சுழற்றிச் சுழற்றி சொல்லியிருக்கும் ஒவ்வாமைகளை, அவர்களின் மொழிநுண்ணுணர்வின் மீதான விமர்சனங்களை எல்லாம் அப்படியே சொற்களைக்கொண்டு மூடிவிடலாம். ஆறுமாதம் கழித்து கிரா அண்ணாதுரைதான் தமிழிலக்கியத் தலைமகன் என்றார் என திரித்தும் வரலாறு சமைக்கலாம்.
சென்ற சில ஆண்டுகளாகவே பெரும்பணச் செலவுடன், மிகப்பெரிய நிறுவன ஆதரவுடன் சி.என். அண்ணாதுரை, மு.கருணாநிதி ஆகியோரை தமிழகத்தின் முதன்மைச் சிந்தனையாளர்களாக, முன்னோடி இலக்கியவாதிகளாக நிறுவும் பணி நடந்துவருகிறது. விலைக்கு வாங்கப்படத்தக்க அறிவுஜீவிகள் அதற்காக அமர்த்தப்பட்டு அவர்கள் தீவிரமாக களமாடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அது இத்தனை எளிதாக பணத்தாலும் அமைப்பாலும் நிறுவப்படக்கூடியது என நான் நினைக்கவில்லை. எனக்கு அறிவியக்கத்தின் ஆற்றலில், அதன் உண்மையில் நம்பிக்கை இருக்கிறது. இதைப்போல அமைப்பு வல்லமையுடன் இங்கே மு.வரதராசனாரும் அகிலனும் ஒரு காலகட்டத்தில் நிலைநாட்டப்பட்டார்கள். அவர்களுக்குரிய இடங்களைச் சென்றடைந்தார்கள்.
தெருத்தெருவாக ஈ.வே.ராமசாமி, சி.என்.அண்ணாதுரை மற்றும் மு.கருணாநிதி ஆகியோரின் சிலைகள் நிறுவப்பட்டாயிற்று. பேருந்துநிலையங்கள் விமானநிலையங்கள் இவர்கள் பெயரில்தான். தெருவெல்லாம் இவர்களின் பெயர்கள். நூலகங்களில் இவர்கள்தான் நிறைந்து கிடக்கிறார்கள். இவர்களின் தரப்பே இன்றைக்கு தமிழின் ஊடகங்களில் 90 சதவீதத்தை நிறைத்துள்ளது. சமூகவலைத்தளங்களில் கூச்சலிடும் கும்பல் புதிய வரவு.
மறுபக்கம், தமிழுக்காகவே வாழ்ந்த, பெருஞ்சாதனைகளைச்செய்த் நவீன சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் இன்றும் ஐந்தாண்டுக்கு ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டு நூலக ஆணை பெறாமல் காத்துக்கிடக்கிறார்கள். எந்த அங்கீகாரமும் பெறாமல் செத்தார்கள். எவ்வண்ணமும் பொருட்படுத்தப்படாமல் வாழ்கிறார்கள்.
ஆனால் சி.என்.அண்ணாதுரையும் மு.கருணாநிதியும் ‘இருட்டடிக்கப்படுவதாக’ தி ஹிந்து வகையறா சொல்கிறது. சரி, இருட்டடிப்பது யார்? வெறும் பத்தாயிரம் வாசகர்கள்கூட இல்லாத சிற்றிதழ்சார் இலக்கியச் சூழல்! இப்போது தெரிகிறதல்லவா, எவர் உண்மையான அறிவியக்கம் என? என்னென்ன தாவினாலும் எவரிடம் அறிவியக்க ஒப்புதலுக்காக வந்து நின்றிருக்கவேண்டும் என? [சி.என்.அண்ணாத்துரை மீதான ஆங்கில ஹிந்துவின் இருட்டடிப்புக்கு என்ன காரணம் என ஓர் ஆய்வை ஏன் சமஸ் ஊடே நிகழ்த்தக்கூடாது?]
புதுமைப்பித்தன் மரபினரால் ‘ஒடுக்கப்பட்ட’ சி.என்.அண்ணாதுரையையும் மு.கருணாநிதியையும் இலக்கியத்தில் நிறுவ தி ஹிந்து பணத்தை அள்ளி இறைக்கிறது. திடீரென என்ன ஆகியது, எவர் பணம், என்ன பின்னணிப் புரிதல், என்னென்ன கணக்குகள் என இப்போது எவராலும் சொல்லிவிடமுடியாது — அல்லது மிக எளிதாக சொல்லிவிட முடியும்.
இங்கே புதுமைப்பித்தன் பெயரில் ஒரு சாலைகூட இல்லை. தமிழ் நவீன இலக்கியத்தின் தலைமகனுக்கு ஒரு சிலைகூட இல்லை. அதைப் பற்றி ஒரு கட்டுரை வெளியிட இன்றைக்கும் ஐந்தாயிரம் பிரதிகளுக்குமேல் அச்சிடப்படும் ஒரு இதழும் தமிழில் இல்லை.
ஆனாலும் அவன் ஒரு வாழும் மரபு. பணத்தால் அல்ல. அமைப்புவல்லமையால் அல்ல. அவனை நம்பி ஏற்று அவன் வழிச் செல்லும் நூறுபேர் தலைமுறைக்கு தலைமுறை தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதனால். அவர்களுக்கு உங்கள் எச்சிலிலைகள் தேவையில்லை என்பதனால். அது நாளையும் அவ்வண்ணமே இருக்கும்.
கி.ராஜநாராயணன் சொல்கிறார், சி.என்.அண்ணாதுரை ‘பார்ப்பன’ விமர்சகர்களால், சிற்றிதழ்ச்சூழலில் விளங்கிய பார்ப்பன மனநிலையால் புறக்கணிக்கப்பட்டாராம். தன்னையும் புறக்கணித்துவிடுவார்கள் என ஐயம் கொண்டு அவர் பேசாமலிருந்தாராம்.
கி.ராஜநாராயணன் எழுதவந்து அரைநூற்றாண்டு கடந்துவிட்டது. இக்கணம் வரை அவரை ஓர் இலக்கியவாதியாக கொண்டாடி வருபவர்கள் சிற்றிதழ்சார் வாசகர்களே ஒழிய அவர் இன்று புதிதாக கண்டுகொண்ட திராவிட இயக்க வாசகர்கள் அல்ல. அவர் இன்று எவரை பிராமணிய மதிப்பீடுகள் கொண்டவர்களாக சொல்லவைக்கப்பட்டிருக்கிறாரோ அவர்களால்தான் அவர் இலக்கியவாதியாக நிறுவப்பட்டார். நாளை அவர் பெயரை சொல்லப்போகிறவனும் சிற்றிதழ்சார் வாசகன் மட்டுமே.
அவருக்கு அந்த திராவிட இயக்கம் அளித்த அங்கீகாரம்தான் என்ன? அவரே சொல்கிறாரே, வரிசையில் நிறுத்தி பரிசை தூக்கி போட்டார்கள் என. சி.என்.அண்ணாதுரை இருந்திருந்தால் அப்படி செய்திருக்க மாட்டாராம். ‘தெற்கிலிருந்து வந்த சூரியன்’ நவீனத்தமிழிலக்கிய முன்னோடிகளில் ஒருவராகிய கி.ராவை அப்படி நடத்தினாராம். ஏன், சி.என்.அண்ணாதுரை இருந்தபோது அவரால் அங்கீகரிக்கப்பட்ட நவீன எழுத்தாளர் யார்? அவர் தன் பேச்சில் ஒருமுறையேனும் சுட்டிய அன்றைய இலக்கியவாதியின் பெயர்தான் என்ன?
அவர்கள்தான் ஆட்சியில் இருந்தார்கள். அனைத்து அதிகாரங்களையும் கையாண்டார்கள். கி.ரா சென்று அவர்களிடம் தனக்கு அங்கீகாரம் அளிக்கக் கோரியிருக்கலாமே? அணுகவிடமாட்டார்கள் என அவர் அறிந்தே இருந்தார். தன் எழுத்துக்கு எங்கே இடம் என அவருக்கு நன்றாகவே தெரியும்.சரி இனிமேலாவது ஏதாவது செய்வார்களா? இந்த வரியைச் சொன்னமைக்காவது கிராவுக்கு ஏதாவது அங்கீகாரம் கிடைக்குமா?
சிற்றிதழ்சார் இலக்கியச் சூழலில் அழகியல் அளவுகோல்கள் மிகத்தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளன. மறுத்தும் ஏற்றும் விவாதிக்கப்பட்டுள்ளன. இனியும் விவாதிக்கப்படும். அந்த அளவுகோல்கள் விரிவாக்கப்படக்கூடியவை. நான் அந்த அழகியல் அளவுகோல்களை ஏற்று விவாதித்து முன்னெடுப்பவன்.
என் நோக்கில் முன்னோடிகள் மௌனிக்கும் கு.ப.ராஜகோபாலனுக்கும் லா.ச.ராமாமிருதத்திற்கும் அளித்த இடத்தை ஒரு படி குறைக்கிறேன். கு.அழகிரிசாமிக்கும் ஜெயகாந்தனுக்கும் அளிக்கப்பட்ட இடத்தை மேலே கொண்டுசெல்கிறேன். அவர்களால் பொருட்படுத்தப்படாத ப.சிங்காரத்தையும் எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தையும் அழுத்தமாக மீட்டு முன்வைக்கிறேன்.
அழகியல் அளவுகோல்களுக்கு அரசியல் இல்லை. தனிநபர்களுக்கு சாதிப்பற்று இருக்கலாம், இலக்கிய இயக்கத்தில் அது இயல்வதில்லை. ஆகவேதான் க.நா.சு. முற்போக்காளரான கு.சின்னப்பபாரதியின் தாகம் நாவலை முன்வைத்தார். பூமணியை வெங்கட் சாமிநாதன் கொண்டாடினார். [இதில் திராவிட இயக்கத்தவர் செய்வது மேலும் மலினமான ஒரு செயலை. பிராமண விமர்சகர்கள் ஒருவரை ஏற்றுக்கொண்டார்கள் என்றால் அவரை விலைபோய்விட்டவர் என வசைபாடி, அவருடைய ஆளுமையையும் நேர்மையையும் சிறுமைசெய்வார்கள். சின்னப்பபாரதியும் பூமணியும் இவர்களுக்கு பார்ப்பனியர்கள் ஆகிவிடுவார்கள்]
நான் சி.என.அண்ணாதுரையையோ மு.கருணாநிதியையோ அழகியல்கோணத்தில் பொருட்படுத்துவதில்லை. ஆனால் எஸ்.எஸ்.தென்னரசு பொருட்படுத்தப்படவேண்டியவர் என எழுதுகிறேன். திராவிட இயக்கக் கவிஞர்களில் முடியரசன், வேழவேந்தன் இருவரையும் தெரிவுசெய்து முன்னிறுத்துகிறேன். அவர்கள் பெயரை திராவிட இயக்கத்தவர்கூட மறந்துவிட்டனர் என ஓர் உரையாடலில் என்னிடம் தமிழச்சி தங்கபாண்டியன் சொன்னார். சு.வெங்கடேசனின் காவல்கோட்டத்தை பாராட்டி முன்வைக்க எனக்கு அவருடைய அரசியல் தடையாக இருந்ததில்லை.
நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் பிராமணர்கள் மிகுதி. அது இந்தியா முழுக்க அன்றிருந்த கல்விச்சூழலின் விளைவு. க.நா.சு.வும் சுந்தர ராமசாமியும் பிராமண மதிப்பீடுகளை கொண்டிருந்தனர் என்று சொல்வது ஒட்டுமொத்தமாகவே இந்த இலக்கியமரபை சிறுமைசெய்வது. அவர்களின் ருசிகளில் பிராமணிய அம்சம் இருக்கலாம், அண்ணாதுரையிடம் இருந்த முதலியாரிய அம்சம் போல. அது இயல்பானது, தவிர்க்கமுடியாதது. ஆனால் அதற்கு அப்பால் அவர்கள் தங்கள் அழகியலை தெளிவாக முன்வைத்தனர். அந்த அழகியலை தொடங்கிவைத்தவர்களாகிய புதுமைப்பித்தனோ, மு.தளையசிங்கமோ பிராமணர்கள் அல்ல.
அந்தப் ‘பார்ப்பனிய’ தரப்புதான் திட்டவட்டமான மொழியில் கல்கியை நிராகரித்தது.சுஜாதாவையும் பாலகுமாரனையும் மறுத்தது. ஒரு போதும் அது தன் மதிப்பீடுகளில் சமரசம் செய்துகொள்ளவில்லை. அது தலித் முற்போக்கு இலக்கியத்தின் உண்மையான சாதனைகள் அனைத்தையும் முதன்முதலாக ஓடிச்சென்று அங்கீகரித்திருக்கிறது. சின்னப்ப பாரதி முதல் சு.வெங்கடேசன் வரை. தலித் இலக்கியம் தோன்றியபோது தலைமேல் கொண்டாடியிருக்கிறது. ஆனால் அதன் நிராகரிப்புகளும் கூரியவை. சின்னப்ப பாரதியை ஏற்ற க.நா.சு கே.முத்தையாவை நிராகரித்தார்.
[சந்தடி சாக்கில் பிராமணரும் வேளாளரும் சேர்ந்துகொண்டு முதலியார்களை ஒடுக்கியதே திராவிட இயக்கம் மீதான சிற்றிதழ்தரப்பின் விமர்சனத்தின் அடிப்படை என சொல்லவருகிறார் சமஸ் என்று தோன்றுகிறது. படுபயங்கரமான சாதிஊடாட்டமாக இருக்கிறது. ராஜன்குறைகள் புகுந்து மேற்கொண்டு ஆராய்ச்சிகள் செய்ய பெரிய இடுக்கு இது]
நவீன இலக்கியத்தால் ‘கண்டெடுக்கப்பட்டு’ முன்வைக்கப்பட்ட படைப்பாளிகளின் பட்டியலை ஒரு புதியவாசகன் கவனிக்கவேண்டும். ஓர் உதாரணம், 1967-இல் இலக்கியச்சூழலுடன் எந்தத் தொடர்பும் இல்லாத ஹெப்ஸிபா ஜேசுதாசன் ’புத்தம்வீடு’ என ஒரு நாவல் எழுதினார். நாடார்சாதியின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டு, அச்சாதியின் பண்பாட்டுக்குள் நுட்பமாகச் செல்லும் நாவல் அது. அந்தக் கைப்பிரதியை அவருக்குத் தெரிந்த ஒரு பேராசிரியர் வழியாக சுந்தர ராமசாமியிடம் கொண்டுவந்து காட்டினார். சுரா அதை வெளியிட ஏற்பாடு செய்தார். அதை தமிழ்ச் சூழலுக்கு அறிமுகம் செய்தார். நவீன இலக்கிய உலகமே ஹெப்ஸிபாவை நோக்கி திரும்பியது. அங்கே சாதி அளவீடாக கொள்ளப்படவில்லை.
1985-இல் நான் ஆ.மாதவனை சந்திக்கும்போது தன்னிடம் ஒரு மிளகுவியாபாரி கொண்டுவந்த கைப்பிரதியை வாசித்ததாகவும் நன்றாக இருப்பதாகவும் சொன்னார். அதை எம்.எஸ். அவர்களிடம் காட்டும்படி சொல்லி அனுப்பினார் மாதவன். தோப்பில் முகமது மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை அவ்வாறுதான் வெளியாகியது. அவர் இலக்கிய அங்கீகாரம் பெற்றார். அங்கே மதம் அளவுகோலாக இருக்கவில்லை.
ஆர்.ஷண்முகசுந்தரம், பூமணி முதல் இமையம், சோ.தருமன், ஜோ டி குரூஸ் வரை வெவ்வேறு ஒடுக்கப்பட்ட சாதியப்பின்னணியில் இருந்து புதிய எழுத்தாளர்கள் தோன்றியபோது அவர்களை உடனே சென்று அடையாளம் கண்டு முன்னிறுத்தியது நவீன இலக்கிய இயக்கமே. அதை செய்த இலக்கியவாதிகளில் பெரும்பாலானவர்கள் பிராமணர்களே.
சொல்லப்போனால் ஆர்.ஷண்முகசுந்தரத்தை முன்னுதாரணமாகக் காட்டி ஒடுக்கப்பட்ட சாதியினர் தங்கள் மொழியில் தங்கள் வாழ்க்கையை எழுதவேண்டும் என ஆணித்தரமாக வாதிட்டுக்கொண்டிருந்தவர் க.நா.சுதான். அவரிலிருந்து தொடங்கிய அந்த எண்ணம்தான் இன்று அத்தனை சாதியினரும் தங்கள் வாழ்க்கையை நவீன இலக்கியத்திற்குள் கொண்டுவருவதற்கான முன்வரைவாக ஆகியிருக்கிறது.
கி.ராஜநாராயணன் அணுக்கமாக இருந்தது இடதுசாரி இலக்கியமரபுடன். திராவிட இயக்க எழுத்துக்களை முழுமூச்சாக நிராகரித்தவர்கள் அவர்கள்தான். கி.ரா இப்போது நா.வானமாமலையையும் கைலாசபதியையும் சிவத்தம்பியையும் சி. கனகசபாபதியையும் தி.க.சிவசங்கரனையும் வல்லிக்கண்ணனையும் ஒட்டுமொத்தமாக பிராமணிய/ வேளாள நோக்கு கொண்டவர்கள் என்கிறாரா? பேச்சு நடுவே பிராமணிய நோக்கு இருந்தது என்று சொல்லமுடியாது என்று வேறு சொல்கிறார். அவர் உண்மையில் என்ன சொன்னார் என்பது சமஸுக்கே வெளிச்சம்.
முன்பு அசோகமித்திரனையும் ஞானக்கூத்தனையும் இழுத்துச்சென்று மேடையில் நிற்கவைத்து மொத்த சிற்றிதழ்சார் இலக்கியமரபையே அவர்கள் வாயால் மறுக்கச் செய்தனர். இன்று கி.ராஜநாராயணன் நாவில் அதை நட்டுவிட்டார்கள். இன்னும் பலியாடுகள் வந்தபடியேதான் இருக்கும். முதுமை.
ஆனால் இந்தக் குரல்களினால் சி.என்.அண்ணாதுரை இலக்கிய மதிப்பு பெற்றுவிடுவாரா என்ன? மு.கருணாநிதி இலக்கியவாதி ஆகிவிடுவாரா என்ன? அவர்களுக்கான அரசியல் இடம் உண்டு. அவர்களுக்கான சமூகசீர்திருத்த இடம் உண்டு. அவர்களின் எழுத்துக்கள் எது சீரிய இலக்கியமென நேற்றும் இன்றும் கருதப்படுகிறதோ அதன் அளவுகோல்களின்படி இலக்கியப்பெறுமானம் கொண்டவை அல்ல. அவர்களின் அரசியல் தரப்பிலிருந்து எழுதவந்தவர்கள்கூட அவர்களின் பாணியில், அவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு, எழுதியவர்கள் அல்ல. அவர்கள் புதுமைப்பித்தனையோ ஜெயகாந்தனையோதான் முன்னுதாரணமாக கொண்டார்கள்.
நவீன இலக்கியத்தரப்பு இங்கே ஒரு மாற்று இயக்கமாகவே செயல்பட்டது. அதற்கு இங்கு ஊடகங்கள் இல்லை. சிற்றிதழ்களைச் சார்ந்தே அது இயங்கியது. ஆண்டொன்றுக்கு அது வெளியிட்ட அச்சுப்பக்கம் ஒட்டுமொத்தமாகவே இரண்டாயிரம் தாண்டாது. அதற்குள் புனைவிலக்கியத்திற்கே அது முக்கியத்துவம் அளித்தது. இலக்கியவிமர்சனத்திற்குக் கூட அதற்கு பக்கம் போதவில்லை.
அத்துடன் தொடக்ககால நவீன இலக்கியவாதிகளுக்கு இலக்கியம் ஒரு தூயகலை என்னும் நம்பிக்கை இருந்தது. அவர்கள் ஓவியம், சிற்பம் ஆகியவற்றைப்பற்றிப் பேசுவதைக்கூட ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல.சத்யஜித் ரே பற்றி பேசுவதே எல்லைமீறல் என்னும் நம்பிக்கை இருந்தது. ஒவ்வொரு காலகட்டத்திலும் கடுமையான விவாதம் வழியாகவே அது தன் எல்லைகளை மீறியது.
எழுத்து இதழில் நவீன ஓவியம் பற்றிய கட்டுரை ஒன்றை போடுவதற்காக வெங்கட் சாமிநாதன் பூசலிட்டார். பின்னர் நாட்டாரியல் பற்றிய கட்டுரையை வெளியிட அக்காலச் சிற்றிதழ்கள் மறுத்தமையால் தானே யாத்ரா என்னும் சிற்றிதழ் ஒன்றை தொடங்கினார். ஆனால் அவரே படிகள் இதழ் கே.கே.பிள்ளையின் வலங்கை இடங்கைப்போர் பற்றிய வரலாற்றாய்வுநூலைப்பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டபோது அதை ஏற்கவில்லை.
மேலும் பல ஆண்டுகள் கடந்து 1985ல் எஸ்.வி.ராஜதுரை நடத்திய இனி என்னும் சிற்றிதழில்தான் சினிமாப்பாடல் பற்றி ஒர் ஆய்வுக்கட்டுரை வெளிவந்தது. சிலுவைப்பிச்சை என்னும் புனைபெயரில் தியடோர் பாஸ்கரன் எழுதியிருந்தார். அதைப்பற்றி கடுமையான எதிர்ப்புகள் வந்தன
இது இங்கு நிகழ்ந்த கருத்தியல் – அழகியல் விவாதங்களின் வரலாறு. எல்லாச்சூழலிலும் இப்படித்தான் பண்பாட்டு விவாதங்கள், இலக்கியவிவாதங்கள் நிகழும். அதற்கான காரணங்கள் பண்பாட்டில் வேரோடியவை. ஆகவே சிற்றிதழ்ச் சூழலுக்குள் அரசியல் விவாதங்களுக்கு எப்போதுமே இடமிருந்ததில்லை. ஏனென்றால் வெளியே அரசியலும் சினிமாவும் வணிகக்கேளிக்கை எழுத்தும்தான் நிறைந்திருக்கின்றன. அந்த மையப்பெரும்போக்கால் பேசப்படாமல் விடப்பட்டவற்றைப் பற்றி மட்டுமே சிற்றிதழ்கள் பேசின.
ஆகவேதான் தமிழ்ச்சிற்றிதழ்களில் தமிழகத்தின் மகத்தான சிற்பங்களைப் பற்றி எதுவும் எழுதப்பட்டதில்லை. ஏனென்றால் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் போன்றவர்கள் ஏற்கனவே அவற்றை விகடன்போன்ற இதழ்களில் எழுதிக்கொண்டிருந்தனர். சிற்றிதழ்களின் மையமான பேசுபொருள் இலக்கியம் மட்டுமாகவே இருந்தது. இன்றும் அவ்வாறுதான்.
ஆனால் அந்த எல்லைக்குள் சிற்றிதழ்கள் தமிழக அரசியலைப்பற்றிப் பேசியிருக்கின்றன. அதற்குள் எல்லா தரப்பும் ஒலித்திருக்கிறது. மு.தளையசிங்கமும், பிரமிளும் திராவிட இயக்கம் குறித்தும் சி.என். அண்ணாத்துரையின் அரசியல் இடம் குறித்தும் நல்லெண்ணம் கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். சுந்தர ராமசாமிக்கும் ந.முத்துசாமிக்கும் அவ்வெண்ணம் இருந்தது. அவை பதிவாகியிருக்கின்றன
அதேசமயம் அழகியல் ரீதியாக கடுமையான விமர்சனமும் இருந்தது. ஏனென்றால் சிற்றிதழ்கள் நிலைகொண்டதே திராவிட இயக்கமும் வணிக எழுத்தும் உருவாக்கிய மையப்போக்குக்கு எதிரான மாற்றுச்சிந்தனை, மாற்று அழகியலை உருவாக்கும்பொருட்டுதான். அவற்றின் வரலாற்றுப் பாத்திரமே அதுதான். அந்த வரலாற்றுப் பங்களிப்பைத்தான் சமஸ் போன்ற இலக்கியமென்றால் உப்பா புளியா என்று கேட்கும் இதழியலாளர்கள் பார்ப்பனியம் என முத்திரை குத்துகிறார்கள்.
சி.என்.அண்ணாத்துரையும் மு. கருணாநிதியும் எழுதியது இலக்கியமதிப்பு கொண்டது அல்ல. அதை அவர்கள் எழுதத்தொடங்கிய தொடக்க காலத்திலேயே புதுமைப்பித்தன் சொன்னார். அடுத்த தலைமுறையில் க.நா.சுவும் ஜெயகாந்தனும் சொன்னார்கள். பிரபஞ்சனும் கந்தர்வனும் நாஞ்சில்நாடனும் சொன்னார்கள். [பிரபஞ்சன் மு.கருணாநிதியின் முழுச்சிறுகதைத் தொகுதிக்கு இந்தியா டுடே இதழில் ஒரு மதிப்புரை எழுதினார். மிகச்சரியாக அதுதான் சிற்றிதழ்சார் இலக்கிய மரபின் கருத்து] நானும் இனி வரும் தலைமுறையினரும் சொல்வோம்.அது ஒன்றும் சிறு குழு உருவாக்கிய மதிப்பீடு அல்ல. அது இங்கே நவீன இலக்கியம் என ஒன்று உருவாகி வந்தபோது இயல்பாகவே திரண்டு வந்தது.
சி.என்.அண்ணதுரையையும் மு.கருணாநிதியையும் நிராகரிப்பது எந்த தனிவிமர்சகனும் அல்ல. நவீன இலக்கியம் என்னும் இயக்கம்தான். அவர்களை ஏற்கவேண்டும் என்றால் ஒட்டுமொத்த நவீன இலக்கியத்தையும் நிராகரிக்கவேண்டும். அரசியல்நோக்கு கொண்ட சிலர் அவ்வாறு நவீன இலக்கியத்தையே நிராகரித்து அவர்களை இலக்கியவாதிகளாக ஏற்கிறார்கள். ஒருவாசகர் கி.ராவையே நிராகரித்தால்தான் சி.என்.அண்ணாதுரை இலக்கியவாதி என ஏற்கமுடியும். கி.ரா அவருடைய பேட்டியிலேயே அந்த அழகியல் வேறுபாட்டை சொல்கிறார்.
தமிழ் ஹிந்து உருவாக்கும் போற்றிப்பாட்டுக்கும் அறிவியக்கத்திற்கும் தொடர்பில்லை. இலக்கியம் என்பது எப்போதும் கூரிய விமர்சனங்கள் வழியாக நிலைகொள்வது. நவீன இலக்கியத்தின் முன்னோடிகளையே கடுமையாக, சமரசமே இன்றி விமர்சனம் செய்துகொண்டுதான் இவ்வியக்கம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. நான் மௌனி பற்றி கடுமையான எதிர்மதிப்பிட்டை எழுதியபோது எவரும் வந்து அதில் அரசியலைக் கண்டுபிடிக்கவில்லை. சாதியரசியல் மட்டுமே அறிந்தவர்களுக்கு அதை மட்டுமே எங்கும் காணமுடியும்.
இன்று தமிழ்ஹிந்து உருவாக்கும் பேரோசையுடன் மோத இந்த இணையதளத்தால் முடியாது. சமூக ஊடக வசைகளுக்கு எதிர்நிற்பது என்பது ஒருவகையில் சேற்றுநீராட்டு. அன்று வார இதழ்களுக்கு எதிராக சிற்றிதழ்கள் நிலைகொண்டதுபோல ஒரு தற்கொலைத்தனமான முயற்சிதான் இதுவும். ஆனால் உண்மையிலேயே இலக்கிய வரலாற்றை, இங்கிருந்த இலக்கியச் சூழலை அறிய விரும்பும் ஒரு சிறு வட்டம் இங்கிருக்கிறது என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அது எப்போதுமே சிறுபான்மையானது. எண்ணிக்கையாலோ பரப்பாலோ அன்றி தன் தீவிரத்தாலும் உண்மையாலும் மட்டுமே நிலைகொள்வது. இன்னும் பலதலைமுறைக்காலம் அப்படித்தான் இங்கே சூழல் இருக்கும். ஊர்வலத்தில் கோஷமிடச் செல்பவர்கள் செல்லட்டும். எஞ்சிய சிலருக்காக இச்சொற்கள்.
இந்த அழகியல்மதிப்பீட்டை அழகியல் என்றால் என்னவென்று அறியாத அரசியல் உள்ளங்களுக்கு முன் ‘நிரூபிக்க’ முடியாது. ‘அதெப்படி, எங்களுக்கு அவர்களே பேரிலக்கியவாதிகள்’ என அரசியலுள்ளங்கள் சொன்னால் ‘சரி கொண்டாடுங்கள்’ என்று மட்டுமே பதில் சொல்லமுடியும். அரசியல்நிலைபாடாக ஒருவர் அதை சொல்கிறார் என்றால் அவருடன் பேசுவது இலக்கியவிவாதம் அல்ல. அவர்களின் எழுத்தை உண்மையிலேயே ஒருவர் இலக்கியம் என எண்ணி ரசிக்கிறார் என்றால் அவருடைய அறிவுத்திறனும் ரசனையும் அவ்வளவுதான். அவரிடம் பேசுவதற்கே ஒன்றுமில்லை.
எஞ்சி வரும் சிலருடன் மீண்டும் மீண்டும் சொல்லவேண்டியிருக்கிறது. உண்மையான அறிவியக்கம் என்பது வேறு. அரசியல் பரப்பியக்கங்கள் அறிவியக்கங்கள் அல்ல, அவற்றின் பணியும் இயல்பும் நேர் எதிரான போக்கு கொண்டவை. இலக்கியம் என்பது முற்றிலும் வேறு. அது பரப்புக்கருத்துக்களை சொற்குவியல்களாக ஆக்குவதில்லை. எழுதுபவனின் ஆழுள்ளத்திலிருந்து, அவன் அனுபவ தளத்திலிருந்து வாசிப்பவனின் ஆழுள்ளத்திற்கு அவன் அனுபவ தளத்திற்குச் செல்லும் ஒர் அந்தரங்கமான நிகழ்வு அது. மொழியின் அடுக்குகளினூடாக தொடர்புறுத்துவது. இதை நவீன விமர்சனத்தின் பல்வேறு கலைச்சொற்களுடன் சொல்லமுடியும், ஒற்றைவரிச் சாரம் இவ்வளவே.
இது ஒரு தனிப்பட்ட கருத்து. இதன் மதிப்பு இதை வாசிக்கும் ஒரு நல்ல வாசகர் ‘ஆம், இதை நானும் உணர்ந்துள்ளேன்’ என்று சொல்லும்போதுதான். அவ்வாறு நூறுபேர் உணர்கையில் அது ஒரு வலுவான பொதுக்கருத்தாகிறது. அப்படி சிலர் உள்ளனர் என்பதனால் இது சொல்லப்படுகிறது. அவர்கள் இந்தத் தலைமுறையிலும் சிலர் எழட்டும். ஊரெங்கும் முழங்கும் டமாரங்கள் நடுவே அவர்கள் தங்கள் யாழையும் மீட்டட்டும்.
ஜெ