குடவாயில் பாலசுப்ரமணியம்
இனிய ஜெயம்
பயணமொன்றில், நண்பர் அனுப்பி வைத்திருந்த ஈஷா மகா சிவராத்திரி கொண்டாட்டம் கண்டேன். ‘இன்றைய காலத்துக்கான’ மதக் கொண்டாட்டம் இது என நினைக்கிறேன். நடிகையர்கள் ஆட்டம் பாட்டம் பங்களிப்புடன், அந்த சூழலுக்கு சம்பந்தம் அற்ற சினிமா பாடல்கள் [நான் கடவுள் படத்தின் சிவோகம் பாடல் சூழலுக்கு சம்பந்தம் உள்ள பாடல் அந்த வகையில்] உச்ச கதியில் முழங்கிக் கொண்டிருந்தன. அவ்வப்போது பிரபல பாடகர்கள் அல்லாவின் அருள்,கர்த்தரின் கருணை எல்லாம் வேண்டிப் பாடி, சாதகர்கள் பக்தர்கள் இவர்களுடன் இணைந்து நடனமாடினார்கள். பின்னணியில் ஜக்கி அவர்களால் ஆதி சிவன் [அல்லது ஆதி யோகி] என பெயர் சூட்டப்பெற்ற, பிரும்மாண்ட மார்பளவு சிவன் சிலை. கழுத்தில் பாம்பணி. சிரசில் சந்திரன். [ கொஞ்சம் உருவ இலக்கணம் குறைந்தாலும் எனக்கு அவர் சந்திர சேகரர்] நுதலில் வெண் சுடர் வடிவில் நாமம் தரித்து,ஒளி மழை மையத்தில் த்யானத்தில் உறைந்து நின்றிருந்தது.
இந்த உருவம் கொண்டு சிவனை பதிட்டை செய்த வகையில் நிச்சயம் ஜக்கி ‘ஆச்சாரமான’ இந்துத்துவர்களால் கண்டிக்கப்பட்டிருக்கவே வாய்ப்பு அதிகம். [பிரதமரின் வருகை அதை சமாதனம் செய்திருக்கும் :) ] ஆதி சிவன் எனும் கருதுகோளே,மரபார்ந்த சைவ நோக்கிலிருந்து வேறுபட்ட ஒரு ‘கலகக் குரல்’ போலத்தான் ஒலிக்கிறது. சிவன் பிறப்பிலி அல்லவா . திருவிளையாடல் புரிய ‘தோன்றுபவர்’ தானே அவர். எனில் ஆதி சிவன் எனும் கருதுகோள், சிவனை பிறப்பிறப்பிலா யாக்கைப் பெரியோன் எனும் நிலையில் இருந்து இறக்கி,சிவனை மண்ணுடன் தளைக்கிறது.
வெறும் கலகம் என்று இல்லாமல்,ஜக்கி அவர்கள் இதன் பின்னே வளர்த்தெடுக்க ஏதேனும் நெறியை வகுத்திருக்கக் கூடும். இதே போன்றதொரு கலகத்தை வள்ளலார் முன்னெடுத்தார். துவக்கத்தில் தீவிர முருக பக்தராக இருந்த அவர், வளர்ந்தது அல்லது விலகி, சிதம்பரத்துக்கு இணையாக உத்தர சிதம்பரம் உருவாக்கும் நிலைக்கு வருகிறார். லிங்கம் என்பது சைவத்தில் அரு வடிவம். அந்த அரு வடிவத்துக்கு மாற்றாக ஜோதி எனும் அரு வடிவத்தை வைத்தார் வள்ளலார். அந்த ஜோதி எனும் அரு வடிவத்தை மையமாக வைத்து சன்மார்க்கத்தின் நெறிகளை வகுத்தார்.
வல்லாரின் ஜோதி மரபார்ந்த சைவம் பேசும் அரு வடிவை புறக்கணித்தது போலவே, ஜக்கி அவர்களின் ஆதி சிவன் வடிவம் மரபார்ந்த சைவம் பேசும் உரு வடிவை புறக்கணிப்பதாக இருக்கிறது. வடிவங்களை அடையாளம்காணத் துவங்கி இருக்கும் எனது பயணத்தில், மிக மகிழ்ச்சியான தருணம் என நான் உணர்ந்த கணங்கள், விஷ்ணுபுரம் நாவல் வாசிப்புக்குப் பிறகு, கல்வடிவங்களின் குவியலாக இருந்த கோவில் வளாகங்கள் எல்லாம், கலைவடிவங்களின், தத்துவங்களின், மரபுச்செல்வங்கள் என உருமாறத் துவங்கிய பொழுதுகளை சொல்வேன். அங்கே துவங்கி எண்ணிறந்த மூர்த்தங்கள் அவற்றின் பெயர்களுடன் ஒவ்வொன்றாக எனக்கு அறிமுகமாகி, கருங்கடல் மேல்,முழுநிலவின் பித்தொளி தளதளத்துப் பரவுவது போல, என் அறியாமைக் கடல் மேல் முழு நிலவின் ஒளியாக இந்த கலைச் செல்வங்கள் சார்ந்த புரிதல் கொஞ்சம் கொஞ்சமாக பரவிக் கொண்டிருக்கிறது.
அதில் கற்றவனவற்றில்,சிற்ப வடிவங்கள் குறித்து , அடிப்படையில் சிவ வடிவங்கள் மொத்தமாக மூன்று அடிப்படை வடிவங்களில் அடங்கி விடும். அங்கிருந்தே சிவ வடிவங்களை புரிந்து கொள்ள முயலும் பயணத்தை துவங்க வேண்டும் என்பதை நான் அறியவரவே கனகாலம் தேவைப்பட்டது.அடிப்படையில் சிவ வடிவங்கள் மூன்று. ஒன்று அரு வடிவம் அதாவது லிங்கம். இரண்டு உரு வடிவம் அதாவது நடராஜர் போல. மூன்றாவது அரு உரு வடிவம் லிங்கோத்பவர் போல. என் போல தவிக்காமல் சரியான இடத்தில் துவங்கி சிவனின் உருவங்கள் என பாரதம் முழுக்க நிறைந்து செழித்திருக்கும் கலை வெளிக்குள் மூழ்கி மறைய,ஒரு அடிப்படை கையேடு என பரிந்துரைக்கத்தக்க நூல், வித்துவான் சிவகுருநாதப் பிள்ளை எழுதி 91 இல் வெளியான சிவ வடிவங்கள் எனும் நூல்.
அக்காலக் கட்டத்தில் முதல் நூல் எனும் வகையில் இந்த நூலில்,குறைவான விளக்கப்படங்கள் போல, சிறிய போதாமைகள் உண்டு. குறிப்பாக இன்று போல இணையமோ புகைப்பட வசதிகளோ பெருகி நிற்க வில்லை. ஆயினும் கடினமான முயற்சி வழியே [ அந்த சிவ வடிவங்களின் ஓவியங்களை அந்த வடிவம் இடம்பெற்ற மூல நூல் பெயரை குறிப்பிட்டு,பல வடிவங்களை ஓவியமாக வரைந்து இணைத்திருக்கிறார்]. இரண்டாவதாக ஒரு சிவச்செல்வர் எழுதிய நூல் என்பதால் ஆங்காங்கே சில [ஆதி சப்பானியர்கள் வணங்கியது சிவக் குறியே என்பது போல] ஆய்வுக்கு வெளியிலான சில பல விதந்தோதல்களும் நூலில் உண்டு.
இருப்பினும் சிவ வடிவங்கள் எனும் உலகுக்குள் நுழைய அனைத்து அடிப்படைகளையும், வகுத்தளிக்கிறது இந்த நூல். பெரும்பாலான சிவ வடிவங்களை,அதன் உருவ அமைதியை, சிற்ப இலக்கணத்தை, அதை வணங்க வேண்டிய முறைகளை, வணங்க உருவான ஆகம முறைகளை, அப்படி வணங்கினால் அடையும் பலன்களை அவை அமைந்திருக்கும் கோவில் வரை, முழுமையான அடிப்படை அறிமுகத்தை தருகிறது இந்த நூல்.
இணையம் அளிக்காத ஒரு முழுமையான அடிப்படை புரிதலை அளிக்கிறது இந்த நூல். மேலதிகமாக இந்த நூல் பேசும் மூர்த்தங்களின் பெயர்களை,[இந்த நூலில் விடுபட்டிருக்கும் வடிவங்களை] இணையத்தில் தேடி இன்று கண்டடைய முடியும். இவை போக மலைகளை சிவனின் உருவமாக வணங்குவதை நாமறிவோம், இதற்குள்ளும் வண்ண பேதங்கள் உண்டு, சோமாஸ்கந்தர் வடிவமாக [சிவன் பார்வதி பாலமுருகன் இணைந்த கோலம்] மலைகளை காண்பது,நதிகளை காண்பது குறித்த மரபு சார்ந்த நோக்கெல்லாம் இந்த நூலில் சிறு குறிப்பாக வருகிறது. இவற்றுக்கு வெளியே கோவில் வடிவங்களில் இடம்பெறாத சிவ வடிவங்களின் தோற்றங்களை, நூலுக்குள் இலக்கிய வடிவங்கள் எனும் தனிப் பிரிவு தொகுத்தளிக்கிறது. நாம் வேர்கொண்டு நிற்கும் மரபு சார்ந்த அடிப்படைகள் மீது காதல் கொண்டோர் அனைவரும் அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டிய ஒரு பெருவெளி சார்ந்த அடிப்படை அறிமுகத்தை அதன் கலைச் சொற்களுடன் சரியாக தொடர்புர்த்தும் இலகுவான மொழியில் அளிக்கும் சிவ வடிவங்களுக்கான அறிமுக நூல் இது.
கடைவாய் இதழ்கோண அத்வைதத்தை கிண்டலடித்தபடி மேடைகளில் சைவத்தை பேசுவோர் ஒரு புறம், ஆதி சிவனை முன்வைத்து சினிமா பாடல்கள் வழியே சைவத்தை முன்னெடுக்கும் ஜக்கி போன்றோர் மறு புறம். இந்த இரண்டுக்கும் மத்தியில் நின்று, சைவத்தை அறிமுகம் செய்துகொள்ள விரும்பும் மனங்களுக்கான நூல் இது. சிவ வடிவங்களை மட்டுமே மையம் கொண்ட நூல்தான் என்றாலும், அறிமுக வாசிப்பில் இந்த நூலை மையமாகக் கொண்டு சைவப் பெருவெளியின் செல்திசைகள் சார்ந்து ஒரு வரைபடத்தை வாசகர்கள் உருவாக்கிக்கொள்ள இயலும்.
உதாரணமாக நான் எப்போதும் சுட்டும், தஞ்சைப் பெருவுடையார் கோவில் விமானம் தன்னளவில் ஒரு சதாசிவ லிங்கம் எனும் குடவாயில் பாலசுப்ரமண்யம் அவர்களின் குறிப்பினை இந்த நூல் அதன் அடிப்படைகள் என்ன என்று இயம்புகிறது. கிட்டத்தட்ட சிவ வடிவங்களுக்கான ஒரு குட்டி கலைக்களஞ்சியம் என்று இந்த நூலை சொல்லிவிடலாம்.
தரவிறக்கிக்கொள்ள சுட்டி கீழே.
https://archive.org/details/Acc.No.22751SivaVadivangal1991
கடலூர் சீனு