மரபைக் கண்டடைதல் – கடிதங்கள்

mom1

மரபைக் கண்டடைதல்

அன்புள்ள ஜெ

எந்த மரபை வரித்துக்கொள்வது என்ற கோணத்தில் நானும் சிந்திக்காத நாள் இல்லை. நான் வாட்டிக்கானின் மாபெரும் கலைக்கூடத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது இந்த மரபு என்னுடையதும் இல்லையா என்று ஏங்கினேன். இன்னொரு மண்ணில் பிறந்திருப்பதனால் நான் இதை என்னுடையது அல்ல என்று நினைக்கவேண்டுமா என எண்ணினேன். அதற்கான பதிலை அளித்திருக்கிறீர்கள். எல்லா மகத்தான மானுட சாதனைகளும் நம்முடையதே என்று எண்ணும் ஒரு மனவிரிவு நமக்குத்தேவை. நமக்குச் சங்கீதம்தான் முக்கியம் என்றால் உலகிலுள்ள எல்லா சங்கீதமும் நம்முடையதே. நாம் அறிந்த, நமக்கு தொடர்புள்ள இசை கொஞ்சம் அணுக்கமானது அவ்வளவுதான். கலை இலக்கியம் எதிலும் மரபை இப்படி ஒரு விரிந்த பார்வையில்தான் உருவாக்கிக்கொள்ளவேண்டும் என நினைக்கிறேன்

சந்திரா நாச்சப்பன்

அன்புள்ள ஜெ

மரபைப்பற்றிய உங்கள் கட்டுரை முக்கியமான ஒன்று. ஒவ்வொன்றிலும் மரபை நாம் அடையாளம் காணலாம், நமக்குத்தேவையான ஒன்றை. டெல்லி செங்கோட்டையைப் பார்க்கும்போது இது தோன்றியிருக்கிறது. அது ஒருவருக்கு ’ஆக்ரமிப்பாளர்’ கட்டியது என்று தோன்றலாம். நேற்றைய அதிகாரத்தின் கொடுமையைக் காட்டுவதாகத்தெரியலாம். இன்னொருவருக்கு  அது இன்றைய அரசின் ஆதிக்கமாகத் தெரியலாம். எனக்கு அது அழகிய கம்பீரமான கட்டிடம். அந்த செந்நிறத்தின் அழகுதான் எனக்குப் பெரிதாகத் தோன்றியது . என்னுடன் வந்த நண்பன் அதை திட்டிக்கொண்டே இருந்தான் . கேட்ட்துக்கு ஒரு காரணம் சொன்னான். ஆனால் அப்படி பார்த்தால் அத்தனைக்கும் ஏதாவது காரணம் சொல்லி வெறுக்கமுடியும். உலகநாகரீகத்தில் கடைசியில் ஒன்றுமே எஞ்சாது . மா சே துங் மாதிரி அத்தனையையும் இடிக்க ஆரம்பிக்கவேண்டியதுதான் என்று நான் பதில் சொன்னேன். நேற்றைய கலை சிந்தனை இலக்கியம் அனைத்திலிருந்தும் நாம் நமக்கான மரபை உருவாக்கிக்கொள்ளவேண்டும்

ஆர். செந்தில்நாதன்

அன்பின் ஜெ,

என்னுடைய முந்தைய கடிதத்தில் நான் கூற வந்தது நான் உணர்ந்து கொண்ட மரபின் தொடர்ச்சியை ‌. அதில் மதத்தை  இணைத்து சொன்னது போன்ற தொனி வந்துள்ளதை  இப்பொழுது படிக்கும்போது எனக்கு தெரிகிறது. ஆனால் நான் அப்படி எண்ணிக்கொண்டு எழுதவில்லை.

பல்லாயிரம் ஆண்டு மானுடத்தின் மரபை அதன் பழமையை உணர்ந்துகொண்ட தருணத்தை எழுதவே எண்ணினேன். இலக்கிய வாசகியாக நான் வாசித்த மொழியை எழுத்தை கல்வெட்டுகளின் தொடர்ச்சியாக  அறிந்து கொண்டதையே அப்படி கூறினேன். கோவில்களும் கற்சிலைகளும் எப்படி சாதாரண கிறிஸ்தவ குடும்பங்களில் பிசாசுகளாக பாவங்களாக கற்பிக்கப்படுகிறது என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். அதன் காரணமாக 20 வயது வரை அதைப்பற்றிய புரிதல்கள் அற்று வளர்ந்து ,வாசிப்பின் மூலம் அவற்றின் உண்மையை உணர்ந்து கொண்டதை எழுத எண்ணினேன். அது மதத்தோடு தொடர்புபடுத்தி நான் எழுதியது போல்  தோன்றிவிட்டது.

சமீபத்தில் டெல்லி சென்றிருந்த போது குதுப்மினார்  சிவந்த மதில் சுவர்களை பார்த்து  அப்படித்தான் மனம் பொங்கியது.

வேலூர் நகரத்தின் மையத்தில் இருக்கும் பழமையான தேவாலயத்தில் நான் உணர்வதையும் அதனையே. அதன் அருகில் இரண்டாம் உலகப்போரில் மரணமடைந்த  ஐரோப்பிய போர் வீரர்களின் கல்லறைகள் இருக்கும். அதில் சிறு குழந்தைகளின் கல்லறைகளும் உண்டு.அந்த இடங்களிலும் என் மனம் கொண்ட உணர்வு அப்படிப்பட்டதே.

சிறிய வட்டத்தில் சுற்றி வரும் சூழலில் அத்தனை தொடர்ச்சிகளும் மனித குலத்தின் வளர்ச்சி தான் என்று உங்கள் எழுத்துகள் வழியாகவே அறிகிறேன் என்பதையே எழுத எண்ணினேன்.

அன்புடன்

மோனிகா மாறன்.

முந்தைய கட்டுரைவெள்ளையானை – கடிதம்
அடுத்த கட்டுரைஉகவர் வாழ்க்கை