«

»


Print this Post

இலக்கியச் சண்டைகளின் சாரம்


லக்‌ஷ்மி மணிவண்ணன்
லக்‌ஷ்மி மணிவண்ணன்

வணக்கம் ஜெ,

தமிழ்ச்சமூகம் அறிவார்ந்த சமூகமாக வளர்வதற்கான எந்த ஒரு அறிகுறிகளும் எனக்குத் தட்டுப்படவில்லை. பல்வேறு துறைகளில் இதற்கான உதாரணத்தை முன் வைக்கலாம். தற்போதைய இலக்கிய சூழலில் நடைபெறும் சர்ச்சைகளிலிருந்து சில உதாரணங்களை முன் வைக்கிறேன்.

கோவையில் இயங்கி வரும் இலக்கிய அமைப்பு சாகித்ய அகாதெமியுடன் இணைந்து ‘சமகாலத் தமிழ் கவிதைகள்’ எனும் நிகழ்வை நடத்தியிருக்கிறது. இந்நிகழ்வுக்கு நாஞ்சில் நாடன், இசை, சு.வேணுகோபால், எம்.கோபாலகிருஷ்ணன் என முக்கியமான இலக்கியப் படைப்பாளிகள் யாரும் அழைக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டை முன் வைத்தார் கவிஞர் லக்‌ஷ்மி மணிவண்ணன். தனிப்பட்ட அமைப்பு நடத்தும் கூட்டமாக இருந்தால் இந்தக் கேள்வியைத் தான் எழுப்பப் போவதில்லை என்றும், சாகித்ய அகாதெமி நிறுவனத்துடன் இணைந்து நடத்துவதால் மட்டுமே தான் இந்தக் கேள்வியைக் கேட்பதாகத் தெரிவித்திருந்தார்.

இந்தக் கேள்வி மிகவும் நியாயமானது. ஒரு படைப்பாளியாக மட்டுமல்ல உண்மையான இலக்கிய வாசக மனநிலையிலிருந்து இக்கேள்வியை எழுப்பினார் லக்‌ஷ்மி மணிவண்ணன். ஆனால் அதற்கு உரிய பதில் அளிக்கப்படாமல் அவர் மீது வசைகளையே பொழிந்தனர். மட்டுமல்லாமல், லக்‌ஷ்மி உங்களின் எழுத்துகளைத் தொடர்ச்சியாகப் பகிர்ந்து வருகிறவர் என்கிற முறையில் உங்கள் மீதும் சில வசைகள் வந்தன.

லக்‌ஷ்மி மணிவண்ணனின் கேள்வியின் நியாயத்தை உணர்த்தும் விதமாக கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் ஒரு பதிவிட்டார். அங்கும் வந்து குழுமி விட்டார்கள்.

அடுத்ததாக ஒரு பெண் கவிஞரின் பெண்ணியக் கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடக்க இருக்கிறது. அதைப் பகிர்ந்த லக்‌ஷ்மி மணிவண்ணன் மிகவும் வன்மமான ஒரு வார்த்தையை வெளிப்படுத்தியிருந்தார். பிறகு அதை திருத்தியும் விட்டார். அதைக் கண்டித்து அந்தப் பெண் கவிஞர் இட்ட பதிவில் இலக்கிய உலகை மீட்க வந்த ஆபத்பாந்தவன்களெல்லாம் மொய்த்திருந்தார்கள்.

அந்தப் பெண் கவிஞர் இலக்கியத்துக்கு என்ன பங்களிப்பு செய்திருக்கிறார்? இவரிடம் உரையாடுவதன் வாயிலாக மாணவர்கள் எதனைக் கற்க முடியும் என கல்விப்புல ஊழலை விவரித்து மீண்டும் ஒரு பதிவிட்டார் லக்‌ஷ்மி மணிவண்ணன்.

எப்படியான சூழலிலும் அவர் வன்மமான வார்த்தைகளை வெளிப்படுத்தியிருக்கக் கூடாது. ஆதங்கத்தின் வெளிப்பாடாக இருந்தாலும் அது ஏற்றுக் கொள்ள முடியாதது. அது கண்டிக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அவர் வெளிப்படுத்திய விதம் கண்டனத்துக்குரியதாக இருந்தாலும் அவரது நோக்கம் மிக நியாயமானதாகவே படுகிறது.

லக்‌ஷ்மி மணிவண்ணனின் பதிவைக் கண்டித்து அதில் குறிப்பிடப்பட்ட பெண் கவிஞரின்  பதிவில் இடப்பட்டுள்ள கருத்துகளைப் படிக்கையில் மிகப்பெரிய அவ நம்பிக்கை ஏற்பட்டது. ஒருவர் லக்‌ஷ்மி மணிவண்ணனை யார்? என்று கேட்கிறார். அதற்கு இன்னொருவர் ‘சொல்லிக்கிற மாதிரியான ஆள் இல்லை. சர்ச்சையைக் கிளப்பி ஃபேமஸ் ஆகப் பாக்குறான்” என்று பதிலுரைத்திருக்கிறார். அதாவது  குறிப்பிடத்தகுந்த படைப்பு ஏதும் எழுதாத ஒரு பெண் கவிஞரை வசைபாடுவதன் வாயிலாக தனக்கான இடத்தை லக்‌ஷ்மி மணிவண்ணன் தேடிக் கொள்கிறார் என்பது எவ்வளவு அபத்தம். அரைவேக்காட்டு இலக்கியவாதிகளும் வந்து குழுமியிருந்தார்கள். சிலர் பெண்ணிய நோக்கில் ஆணாதிக்க செயல் என்றும், ஒருவர் இந்துத்துவ மனநிலை என்றும் பதிவிட்டிருந்தார்கள்.

பெண் என்கிற அடையாளத்தை முன் நிறுத்தியே படைப்புலகில் அவர்கள் வெளிச்சம் பெறுகிறார்கள் என்பதைத் தொடர்ச்சியாக நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். அது கடுகளவும் பொய்யல்ல என்பதையே மீண்டும் மீண்டும் உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள்.

நான் பள்ளியில் படிக்கையில் இலக்கிய மன்றக் கூட்டத்துக்கு ‘கவிதாசன்’ என்ற ஒருவரை கவிஞர் என அழைத்து வந்து பேச வைத்தார்கள். இன்று யோசிக்கையில் அவருக்கும் கவிதைக்கும் என்ன சம்மந்தம்? என்று விளங்கிக் கொள்ள முடியவில்லை. வாசிப்பின் வழியே முன்னகர்கிறவன் உண்மையான படைப்பாளியை அடையாளம் காண்பான். அதற்கான வாசலைத் திறந்து விடுகிறவர்களாக அங்கு பேசுபவர்கள் இருக்க வேண்டும். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின், தமிழ்த்துறை முன்னெடுக்குமளவுக்கு அப்பெண் கவிஞர் என்ன செய்து விட்டார்? என்பது கேள்விக்குறியே. மேலும் அதற்குத் தகுதியான படைப்பாளிகள் மறுக்கப்படுவது குறித்து ஆதங்கப்படுவதும் கேள்வி கேட்பதும் இலக்கிய உணர்வுள்ளவரின் கடமை என்றே சொல்லலாம்.

லக்‌ஷ்மி மணிவண்ணனின் வன்மமான சொல்லாடலைக் கண்டிப்பதோடு மட்டும் நிற்கிறவர்கள், இக்கேள்வியைப் பொருட்படுத்தவில்லை. முகநூலில் அறிவுத்துறையில் இயங்குவதாக நம்பிக் கொண்டிருக்கும் அரைவேக்காடுகளின் அராஜகம் கொஞ்சநஞ்சமல்ல… ஏதோ தனக்குத் தோன்றியதை கவிதை எனப் பதிவிட்டு, அதற்குக் கிடைக்கும் விருப்பக் குறிகளைக் கண்டு குதூகலிக்கும் பெண்களை தொகுப்பு கொண்டு வாருங்கள் என தூண்டி விடுவது இந்த அரைவேக்காடுகள்தான். இதில் சில மூத்த இலக்கியவாதிகளும் அடக்கம். ஒரு தொகுப்பு வெளியாகி விட்டால் இலக்கிய பீடத்தில் அமர்ந்து விட்ட மிதப்பில் திரிய ஆரம்பித்து விடுவார்கள். ஓர் ஆண் படைப்பாளி பல கட்டப் போராட்டத்துக்குப் பிறகு அடையும் இடத்தை இவர்கள் இரண்டு உதவாக்கரை தொகுப்புகள் மூலமே எட்டி விடுவார்கள்.

இது பற்றி எதிர்க்கேள்வி எழுப்பினால் பெண்கள் முன்னேறுவதைத் தாங்கிக் கொள்ள முடியாத ஆணாதிக்க மனோநிலை என்கிற சப்பைக்கட்டு பதில் வரும். இன்றைக்கு அறிவார்த்தமான விவாதம் எதனையும் முன்னெடுக்க முடியாத சூழலே இருக்கிறது. ஏனென்றால் அரைவேக்காட்டு கருத்தியல் சூழலுக்கு எதிராக மூச்சு விட்டாலே ஆணாதிக்கவாதி, இந்துத்துவா, பார்ப்பான் என எதாவது ஒன்றைத் தூக்கிப் போட்டு சாகடித்து விடுவார்கள்.

அறிவுத்துறையில் தீவிரமாக இயங்கி வருகிறவர்கள் இல்லவே இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இது போன்ற அரைவேக்காடுகளே தங்களை முன் நிறுத்திக் கொள்வதுதான் துயரமாக இருக்கிறது.

– நன்மாறன்  

ela
இளங்கோ கிருஷ்ணன்

அன்புள்ள நன்மாறன்,

சமீபத்தில் கேரளத்தில் நான் கலந்துகொண்ட ஒரு கவிதைவிழாவில் பேச்சாளர்களில் ஒருவர் இரு தமிழ்க்கவிஞர்களை மேற்கோள்காட்டினார். இசை, இளங்கோ கிருஷ்ணன். அவர்களின் நல்ல கவிதைகளை. மகிழ்ச்சியாக இருந்தது. அவரிடம் பேசினேன். [கூடுதல் செய்தி, அவர் விழியிழந்தவர். ஆனால் அரிய வாசகர்]

அவர் இசை, இளங்கோ கிருஷ்ணன் ஆகிய இருவரை எப்படி அறிமுகம் செய்துகொண்டார் என்பது எனக்கு மேலும் மகிழ்ச்சி அளித்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஷொரனூரில் நிகழ்ந்த ஒரு தேசியக் கவிதையரங்குக்கு என்னை பேச அழைத்தனர் அமைப்பாளர்கள். அழைத்தவர் நான் பெரிதும் மதிக்கும் கவிஞர். இருந்தாலும்  மிகக்கடுமையாக எதிர்வினையாற்றினேன். ஏனென்றால் அதில் தமிழின் பிரதிநிதிகளாக கலந்துகொள்வதாக அழைப்பிதழில் கண்ட இரு தமிழ்ப்பெண் கவிஞர்களுக்கும் தமிழ்கவிதையின் மைய அழகியலுக்கும் தொடர்பே இல்லை. வழக்கமான பெண்ணிய அரற்றல்களை எழுதுபவர்கள். அவை கருத்தரங்க உரைகள் போல உலகமெங்கும் ஒரேவகையான சொற்கள் கொண்டவை.

“ஒரு தேசிய அரங்கில் தமிழின் சார்பில் இக்கவிதைகளை முன்வைப்பது தமிழின் இலக்கியச்சூழலையே சிறுமைசெய்வது. கன்னடமும், வங்கமும், மலையாளமும் எத்தகைய கவிதைகளை முன்வைக்குமென அறிவேன். அவற்றின்முன் இந்தக்கவிதைகளை முன்வைப்பது என் மொழியை நானே இழிவுபடுத்துவது, நான் வரமுடியாது” என்றேன். [என்னை மலையாள எழுத்தாளராக அழைத்திருந்தனர்.] கவிஞர் சமாதானம் சொல்ல வந்தார். எனக்கிருந்த வேகத்தில் “இது திட்டமிட்டு தமிழர்களை தேசிய அரங்கில் இழிவுசெய்யும் திட்டம்” என்றேன்.

கவிஞர் புண்பட்டார். “நாங்கள் ஓர் தேசிய அமைப்பு. ஆகவே சாகித்ய அகாதமியிடம் முறையாக கோரினோம். இவர்களை பரிந்துரை செய்தனர். இவர்களை பரிந்துரை செய்தவர் சாகித்ய அகாதமியின் ஒருங்கிணைப்பாளரான சிற்பி” என்றனர். சிற்பி இன்றைய தமிழிலக்கியம் மீது ஊழ் விடுத்த தீச்சொல்,  ஒர் அழிவுசக்தி என்பது என் எண்ணம். தமிழண்ணல், பாலா, சிற்பி இப்போது மாலன் என நமக்கு எப்போதுமே இத்தகைய சிறுமதியாளர்களே வாய்க்கிறார்கள். அவர்களுக்கு இலக்கியம் ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் உருவாக்குவது ஒரு பண்ணையடிமைமுறையை. அதை ஏற்று செருப்புதாங்குபவர்களின் ஒரு படையை இலக்கியவாதிகளாக முன்வைக்கிறார்கள்.

மறுநாள் கவிஞர் என்னை அழைத்தார். “நீங்கள் வேறு இரு கவிஞர்களை பரிந்துரை செய்யுங்கள்” என்றார். “இல்லை, நீங்கள் பட்டியலை முழுமைசெய்துவிட்டீர்களே” என்றேன். “நான் எம்.டி.வாசுதேவன் நாயரிடம் பேசினேன். கூடுதலாக அழைக்க அனுமதி கிடைத்துவிட்டது… அவர் வருத்தம் தெரிவிக்கிறார்” என்றார்.

isai
இசை

நான் இசை, இளங்கோ கிருஷ்ணன் இருவரையும் பரிந்துரை செய்தேன். கூடுதலாக அவர்கள் இருவரும் அழைக்கப்பட்டார்கள். இருவரின் கவிதைகளையும் முகையூர் அசதாவிடம் கொடுத்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து கொண்டுசெல்ல ஏற்பாடு செய்தேன். நான் எண்ணியதுபோலவே அந்தக் கருத்தரங்கிலேயே கொண்டாடப்பட்ட கவிதைகள் அவர்கள் இருவரும் வாசித்தவைதான். இந்தியாவின் பிறமொழிக் கவிதைகள் எவையும் அவற்றின் கூர்மையுடன், நுட்பத்துடன் இருக்கவில்லை. தமிழ் நவீனக்கவிதை இன்று உலகில் எப்பகுதியிலும் எழுதப்படும் நவீனகவிதைகளுடன் இணைநிற்கத்தக்கது என அவர்கள் அங்கே காட்டினார்கள்.

டி.பி.ராஜீவன் அரங்கிலிருந்தே  என்னை அழைத்து “யார் இந்த இசையும், இளங்கோ கிருஷ்ணனும்?  இவர்கள்தானே கவிஞர்கள்! இன்றைக்கு இந்தியாவில் இவர்களுக்குச் சமானமாக வேறு இளம்கவிஞர்கள் இல்லை” என்றார். [அவர்கள் இருவரையும் அவர் சகட்டுமேனிக்கு முத்தமிட்டதாக பின்னர் செய்திகள் வந்தன]. பல ஆண்டுகளுக்குப்பின் கோவைக்கு வந்த எச்.எஸ்.சிவப்பிரகாஷ் “கோவையில் இரண்டு நல்ல கவிஞர்கள் இருப்பதாக என்னிடம் சொன்னார்களே? ஹூ இஸ் இஜை?” என்று கேட்டார். [இசையை அவருக்கு அறிமுகம் செய்ய ஆளனுப்பித் தேடினால் அவர் வண்ணதாசன் அறையில் நண்பர்கள் சூழ நிறைந்த மனநிலையில் இருப்பதாக செய்தி வந்தது].

இதை ஏன் சொல்கிறேன் என்றால் எவர் முன்னிறுத்தப்படுகிறார்கள் என்பதற்காக மட்டுமல்ல, அவர்கள் முன்னிறுத்தப்படுவதன் வழியாக எவர் மறைக்கப்படுகிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டத்தான். எல்லாமே கவிதைதான், நல்லகவிதை என எவர் வரையறுப்பது, இலக்கியம் என்ன உங்களுக்கு பட்டா போடப்பட்டதா, இலக்கியத்தில் ஜனநாயகம் தேவை  என்பதுபோன்ற மொண்ணைக்கேள்விகளைக் கேட்கும் அறிவிலிகள் எப்போதுமுண்டு. இலக்கியம் தீவிரமான விமர்சனம் வழியாகவே எப்போதும் எங்கும் செயல்பட்டு வருகிறது. அவ்விமர்சனத்தால் வெளித்தள்ளப்படும் அறிவிலிகளின் குரல்கள் அவை. வாசகன் ஒருபோதும் அவற்றை பொருட்படுத்தமாட்டான்.

தேசிய அளவில் க.நா.சு., வெங்கட் சாமிநாதன் இருவரும்தான் தொடர்ச்சியாக தமிழின் நல்ல இலக்கியங்களை அறிமுகம் செய்தனர். அமைப்புக்கு வெளியே நின்று தங்கள் தனித்தொடர்புகளால் அவர்கள் இதை செய்தனர். அவர்களால்தான் இங்கே நவீன இலக்கியம் இருக்கிறதென்பதையே இந்தியா அறிந்தது. இல்லையேல் நமக்கு அகிலனும் சிவசங்கரியுமே உச்சங்கள் என அவர்கள் நினைத்திருப்பார்கள். நம் கல்வித்துறையும் அமைப்புக்களும் அவர்களைப் போன்றவர்களையே முன்னிறுத்தினர். இன்று மு.கருணாநிதியும் சி.என்.அண்ணாதுரையும்தான் தமிழிலக்கிய உச்சங்கள் என நிறுவ பலகோடி ரூபாய் செலவில் கூலிப்படையைக்கொண்டு அமைப்புரீதியாக முயன்றுவருகிறார்கள். இச்சூழலில் விமர்சனக்குரல் மேலும் சமரசமற்றதாக எழுந்தாகவேண்டும்.

சாகித்ய அகாதமி ஓர் அரசமைப்பு. அது இப்படி தகுதியற்றவர்களை பிரதிநிதிகளாக முன்னிறுத்துகையில் மிக மோசமான ஒரு முன்னுதாரணத்தை உருவாக்குகிறது. தமிழிலக்கியத்தை இந்தியச்சூழலில் சிறுமைசெய்கிறது. அந்த சராசரிகளைக் கொண்டு தமிழின் இலக்கியச் சாதனைகளை முழுமையாகவே இந்தியச்சூழலில் இருந்து மறைத்துவிடுகிறது. இது ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக நிகழும் ஒரு மோசடி.

இன்னொரு உதாரணம் சொல்கிறேன். ‘இந்திய நவீன இலக்கியங்களில் மகாபாரதத்தின் தாக்கம்’ என ஒரு கருத்தரங்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் சாகித்ய அகாதமியால் நடத்தப்பட்டது. அதன் தலைவர் மாலன். அதில் அவரோ கலந்துகொண்ட பிறரோ ஒரு வார்த்தைகூட வெண்முரசு என்னும் நாவல் இங்கே எழுதப்படுவதைப்பற்றி பேசவில்லை. உண்மையில் பலருக்கு தெரிந்திருக்கவுமில்லை. மாலன் மகாபாரதத்தை அடியொற்றி எழுதப்பட்டதாக குறிப்பிட்ட அ.மாதவையாவின் ‘கண்ணன் பெருந்தூது’ என்னும் சிறுகதை  மகாபாரதம் பற்றியதே அல்ல – அது ஆற்றுக்கு குளிக்கச் செல்லும் பிராமணப்பெண்களை பகடி செய்யும் ஒரு கதை. இந்தக்கும்பல் சொல்லாததனால் எனக்கு எந்த இழப்பும் இல்லை, எக்காலமும் அந்த வட்டத்திற்குள் நான் செல்லப்போவதுமில்லை. ஆனால் அரசின் நிதியுதவியுடன் நடக்கும் ஒரு நிகழ்வில் பங்கெடுக்கும் ஒருவரின் அறிதலுரிமைக்கு நிகழ்த்தப்படும் சிறுமை இது.

இந்த வகைச் செயல்பாடுகள் ஏன் மலையாளத்திலோ கன்னடத்திலோ நிகழ்வதில்லை? நிகழ்ந்ததுண்டு, மிக அரிதாக. பிரபா வர்மா என்ற சுமாரான கவிஞருக்கு 2016-இல் கேந்திர சாகித்ய அக்காதமி விருது வழங்கப்பட்டபோது விமர்சகர்கள் கிழித்த கிழியில் அவர் விருதை துறப்பதாக ஊடகங்களில் அறிவிக்கவேண்டியிருந்தது. [ஆனால் பின்னர் ஏற்றுக்கொண்டார்] நடுவர்கள் ஆறுமாதகாலம் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டார்கள்.

இத்தகைய ‘தரம் மறந்த’ நிகழ்வுகள் நிகழும் என்றால் உருவாகும் சூழலின் கோபமே அமைப்புகளை கட்டுப்படுத்தும் விசை. கன்னடத்திலும் மலையாளத்திலும் வங்கத்திலும் அது மிகத்தீவிரமானது. இங்கே அந்த வகையான எதிர்ப்பே இல்லை. ஒருசிலர் இலக்கிய மதிப்பீடுகளை முன்வைத்து விமர்சனம் செய்தால் உடனே ஒரு கும்பல் கிளம்பி வந்து “சரிதான், அவர் எழுதறது அவருக்கு. எல்லாருமே எழுத்தாளர்தானுங்களே” என சமாதானம் செய்ய முன்வரும்.  “சண்டை புடிக்காம சமாதானமா போங்கப்பூ’ என வாசிக்கும் பழக்கமே இல்லாத தலைக்கட்டுகள் கிளம்பிவரும். இப்போது இது பெண்கள் சம்பந்தமான சர்ச்சை என்பதனால் ‘சூப்பர் டோலி! சாட்டையடி தோளி!’ வகையறா சலங்கை கட்டி ஆடும். இந்தப் பாமரக்கூட்டம்தான் இலக்கியம் சார்ந்த விழுமியங்களை அழிப்பது. இலக்கிய அமைப்புக்களை, கல்விநிறுவனங்களை வெறும் காக்காக்கூட்டங்களாக மாற்றுவது.

tpr
டி பி ராஜீவன்

இலக்கியச் ‘செயல்பாடுகள்’ எங்கும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. குறிப்பாக கவிதை சார்ந்த நிகழ்ச்சிகள். சிறுகதை எழுத அதை எழுதும் உழைப்பாவது தேவை. கவிதைக்கு அதுவும் தேவையில்லை அல்லவா? இத்தகைய ‘செயல்பாடுகளை’ப்போல இலக்கியத்திற்கு எதிரானவை எதுவுமில்லை. இவர்களால்தான் ஒரு கவிஞன்  ‘நான் ஒரு கவிஞன்’ என வெளியில் சொல்லவே நாண வேண்டியிருக்கிறது.

இவர்கள் ஆண்டுக்கணக்கில் எழுதுவார்கள், கூட்டங்கள் கூட்டி பேசுவார்கள். ஆனால் அழகியல்சார்ந்து இம்மிகூட முன்னகர்வு இருக்காது. ஏனென்றால் எதையுமே வாசிக்கமாட்டார்கள். எதையுமே புதிதாக தெரிந்துகொள்ள மாட்டார்கள். சொற்களை வைத்து வழக்கமான கருத்துக்களை சுற்றிச்சுற்றி எழுதி, ஒருவரைப்பற்றி இன்னொருவர் பேசி அப்படியே காலத்தில் உறைந்து அமர்ந்திருப்பார்கள். இத்தகைய ஒரு சின்னக்கூட்டம் தொடர்ச்சியாக செயல்படாத ஊரே இல்லை. இலக்கிய வாசகர் எவராக இருந்தாலும் தங்களூரில் நிகழும் இத்தகைய ‘கவிதை’ நிகழ்வு ‘இலக்கிய நிகழ்வு’ களுக்குச் சென்று நொந்து மீண்ட அனுபவம் இருக்கும். சாகித்ய அகாதமி இவர்களை பேணிப் பராமரிக்கத்தான் என்றால் அந்த அமைப்பின் நோக்கம்தான் என்ன?

அதே சமயம் இவ்வாறு ஊருக்கு ஊர் நிகழும் ‘எல்லா’ இலக்கிய நிகழ்ச்சிகளுக்கும் சாகித்ய அகாதமி சீராக ஒரு தொகையை அளிக்கும் என்றால் அது நல்லதுதான். ஏனென்றால் ஆயிரம் உதவாத நிகழ்ச்சிகள் வழியாக ஒன்றிரண்டு விளைந்து வர வாய்ப்புண்டு. இலக்கியம் என்ற பேரில் எது நடந்தாலும் அதனால் ஒரு சிறு பலன் உண்டு.

அ.ராமசாமி
அ.ராமசாமி

திருமதி நவீனாவின் நூலை வாசித்தேன். அது ஆரம்பநிலை கல்லூரி மாணவர்களுக்காக எழுதப்பட்ட ஓர் எளிய நூல். சாதாரணமான கருத்துக்கள். அவர் சிறப்பு அழைப்பாளராக மாணவர் முன் நிறுத்தப்பட்டால், கவிஞராக காட்டப்பட்டால் அது பிழை. அவர் எழுதி இணையத்தில் கிடைக்கும் ‘கவிதைகள்’ வைரமுத்து  எழுதும் நாட்டார்பாணி சினிமாப்பாடல்களின் நகல்கள். இது ஒரு மாதாந்தர கூட்டம் என நினைக்கிறேன். இந்த நூலைவிட தாழ்ந்த தரத்திலேயே நம் பல்கலை மாணவர்கள் இருப்பார்கள். ஆகவே அவர் அழைக்கப்படுவது விமர்சனத்திற்குரியது அல்ல. லக்ஷ்மி மணிவண்ணன் சற்று அவசரப்பட்டுவிட்டார் என்றே நினைக்கிறேன்

அத்துடன் திரு. அ.ராமசாமி மனோன்மணியம் பல்கலையில் நம் சூழலின் பொதுவான பொருட்படுத்தாமைக்கு எதிராக நின்று பொருதுபவர், அதில் ஓரளவு வெற்றிகளையும் அடைந்தவர் என்பதே என் எண்ணம். மனோன்மணியம் சுந்தரனார் விருதுகள் இதுவரை தகுதியானவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. சோ.தருமன், இமையம், கலாப்ரியா, வண்ணதாசன், என தொடர்ச்சியாக தகுதியான படைப்பாளிகள் அங்கே மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்படுகிறார்கள். எந்த அமைப்புக்குள்ளும் இயங்குபவர் உரிய ஒத்திசைவுகளுடன் மட்டுமே செயல்பட முடியும்.

லக்ஷ்மி மணிவண்ணன் எப்போதும்  மிகையாக எதிர்வினையாற்றுபவர்தான். அவருடைய சொற்கள் கடுமை மிக்கவையாக இருந்திருக்கலாம். அது கண்டிக்கப்படவேண்டியதே. அவர் அச்சொற்களை திரும்பப் பெற்றுக்கொண்டதும் உகந்ததுதான். ஆனால் அவருடைய உணர்ச்சிகள் என்றும் சிற்றிதழ்ச்சூழலில் இருந்து எழுந்துகொண்டிருப்பவை. இலக்கிய அழகியலுக்காக, மதிப்பீடுகளுக்காக எழும் குரல் அது.

உண்மையில் அந்தக்குரலுக்கு எதிராக எழும் சில்லறைகளின் சொற்கள்தான் அருவருப்பானவை. பண்பாடான சொற்கள் தேவைதான். ஆனால் ஒரு பண்பாட்டையே சுரணைகெட்டதனத்தால், கால்கை பிடிக்கும் சிறுமையால் அழிப்பது அதைவிட ஆயிரம் மடங்கு பெரிய வன்முறை.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/119596