மீண்டும் ஒரு தனிமை

nithyame

வெண்முரசின் ஒவ்வொரு நாவல் முடியும்போதும் வந்து சூழ்ந்துகொள்ளும் தனிமை ஒன்றுண்டு. நாவலை எழுதும்போது அடுத்த நாளைக்கான கதை, அதற்கான அகத்தேடல் மட்டுமே இருக்கும். ஒட்டுமொத்தமாக நான் நாவல்களை பார்ப்பதில்லை. ஆனால் எழுதி முடித்ததும் ஒரே அலையாக வந்து நாவல் நம் மேல் மோதி நிலையழியச் செய்கிறது. இறப்புகள், வாழ்க்கையின் பொருள் அனைத்தையும் பொருளின்மையாக ஆக்கும் காலத்தின் விரிவு.

அதிலிருந்து மீண்டு அடுத்த நாவலுக்கு, அடுத்த காலகட்டத்திற்குச் செல்ல சற்றுநேரமாகும். அது ஒரு பெருந்தத்தளிப்பு. எழுதுவதன் மேலேயே நம்பிக்கை இழக்கும் தருணங்கள் உண்டு. எவரும் எவையும் பொருட்டல்லாமலாகும் தருணங்கள். உளம் உழன்றுகொண்டே இருக்கும். எங்கிருந்தோ எவ்வாறோ ஓர் அழைப்பென முதல் படிமம், முதற்சொற்றொடர், சிலதருணங்களில் முதல்வார்த்தை வந்தணைகிறது. முதலில் எழுதப்படுவது சிலதருணங்களில் முழுமையடைந்த வடிவிலேயே வந்துவிடும். சிலசமயம் என்னவென்று நமக்கே தெரியாத மொழித்துண்டாக கணித்திரையில் கிடக்கும்.

இந்தத் தனிமை மூன்று மாதங்களுக்கொருமுறை வந்து செல்கிறது என்றாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விசையும் கூர்மையும் கொண்டிருக்கிறது. இது விந்தையான ஒரு தத்தளிப்பு. இதை இன்னொருவரிடம் பகிர முடியாதென்று உணர்ந்திருந்தும் பகிர முயல்கிறோம். பகிர முடியாது என்று கண்டு மீண்டு வருகிறோம். இதை பகிர்கையில் இதன் விசை குறைகிறது. அவ்வாறு குறைவது படைப்பியக்கத்தின் சரிவே. ஆனால் பகிரவேண்டும் என்ற மானுடவிழைவும் எப்போதும் உள்ளது.

பிற எழுத்தாளர்கள், குறிப்பாக இளம்படைப்பாளிகள் இத்தருணத்தை பெண்களுடன் பகிர்வதன் பிரச்சினையாக எழுதியிருப்பதை வாசித்திருக்கிறேன்.  ஆண்களின் இத்தகைய ஆன்மிகமான தனிமைகள், கொந்தளிப்புகள் பெண்களால் அணுகப்படக்கூடியவை அல்ல. எங்களுக்கு அதில் ஆர்வமில்லை என பெண்கள் கூர்மையாக, தெளிவாக உணர்த்தியும்விடுவார்கள். அவர்களுக்கு அவர்களின் குழந்தைகள், குழந்தைகளாக மட்டும் எப்போதும் பொருட்படுத்தற்குரியவர்கள். அவர்கள் உலகில் பிறிதொன்றில்லை. அவர்கள் முற்றிலும் வேறொரு தளத்தில் நின்று தங்களைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள்.

ஆனால் அதை உணர்ந்த பின்னரும் ஆண்கள் அதை அவர்களிடம் பகிர முயன்று மீண்டு வருவார்கள். இது என்றுமுள்ள லீலை. அடிப்படையில் ஆணுக்கு பெண் தேவை. ஆண் பெண்ணை எண்ணி கரிசனமும் அன்பும் கொண்டிருக்கிறான். ஆனால் அவன் இலக்கியப் படைப்பாளி என்றால், தத்துவ அறிஞன் என்றால், ஆன்மிகசாதகன் என்றால் பழைய மொழியில் ரிஷி என்றால் அவனுக்கு பெண் அகத்துணை அல்ல. அதை ஆண்களைவிட பெண்கள் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள்.

இந்த அலைக்கழிப்பின்போது இதை ஒருவாறாக கூர்ந்து நோக்கிக்கொண்டும் இருக்கிறேன். இது ஏன் வருகிறது? இதிலுள்ள தற்செயல்தன்மையால்தான். நாம் எண்ணித்தீர்மானித்த ஒன்றை எழுதுவதில்லை. பல இடங்களில் குருட்டாம்போக்கில் தட்டி ஏதோ ஒன்றை திறந்துகொள்கிறோம். மறந்துவைத்த ஒன்றை நினைவுகூர்வதுபோல பதறிக்கொண்டே இருக்கிறோம். காலையில் சாலையோரம் தட்டை வைத்து அமர்ந்திருக்கும் விழியில்லாத பிச்சைக்காரனின் நிலை. தட்டு நிறையாமலிருந்ததில்லை என்று அறிந்தாலும்கூட ஒவ்வொருநாளும் அவன் அந்தப் பதற்றத்தை உணரக்கூடும்.

இதற்கு நிகரான தனிமையை வேறெங்கேனும் உணர்ந்திருக்கிறேனா? நினைவுக்கு வருவது அலைச்சலின் காலகட்டத்தில். கையில் முற்றிலும் பணமில்லாமல் ஆகி முற்றிலும் அறியாத ஊரில் நின்றிருக்கையில் ஒரு அச்சமும் பதற்றமும் வந்து உடலை நடுக்குறச் செய்தபடி மூடிக்கொள்ளும். அடுத்தவேளை உணவு அறியமுடியாத தற்செயல்வெளியிலிருந்து வரவேண்டும். வராமலேயே போகக்கூடும். பட்டினி உயிரை பறித்துவிடக்கூடும். நம் பசியும் துயரும் பிறிதொருவருக்கு புரியாமலேயே போய்விடக்கூடும். உணவு கிடைத்ததுமே நாம் கொண்ட பதற்றம் வெறும் ஆணவவெளிப்பாடு என்று தெரிந்துவிடும். ஆனால் பிறிதொருமுறை அந்தச் சூழ்நிலை உருவாகுமென்றால் மீண்டும் அதே நெஞ்சடைக்கச் செய்யும் பதற்றமும் பெருந்தனிமையும்தான்.

இமையத் தனிமை – 3

இமையத் தனிமை – 2

இமையத் தனிமை -1

முந்தைய கட்டுரைநீர் நெருப்பு – ஒரு பயணம்
அடுத்த கட்டுரைசகடம் – சிறுகதை விவாதம் – 2