குரு நித்யா சந்திப்பு – கடிதங்கள்

ootty

ஊட்டி குரு நித்யா இலக்கிய முகாம் பற்றி

அன்புள்ள ஜெயமோகன்,

2013ம் ஆண்டு என நினைக்கிறேன். அந்தாண்டு மட்டும் காவிய அரங்கு ஏற்காட்டில் நடந்தது. அதில்தான் உங்களுடன் 2 நாட்கள் தொடர்ந்து இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்று திரும்பிப் பார்க்கையில் அதன் மதிப்பு மேலும் மேலும் கூடிக்கொண்டே வருகிறது. அந்தந்த கணங்களில் வாழ்ந்த உங்கள் ஆளுமையை நேரில் உணர்ந்த தருணங்களை எண்ணும் போதெல்லாம் மனம் பெரும் கிளர்ச்சி அடைகிறது. வாசகர்களாகிய எங்களுக்கு அதெல்லாம் பெரும் பேறு. குறிப்பாக இலக்கியத்தில் நுழையும் புதிய வாசகர்களுக்கு. பின்பு ஊட்டி முகாமிலும் ஒரு முறை கலந்து கொண்டுள்ளேன். அந்த கணங்களையெல்லாம் நினைக்காமல் நாட்கள் கடப்பதில்லை.

நடுவில் பணி நிமித்தமாக சில ஆண்டுகள் வெளி நாட்டில் இருந்து விட்டு கடந்த ஜனவரியில் தான் கோவை வந்தேன். வருகிற 30,31 விவாத பயிற்சி பட்டறைக்கு பெயர் கொடுத்துள்ளேன். உங்களை மீண்டும் சந்திக்க மிகுந்த ஆவல். நடுவில் ஒரு முறை உங்களை சந்தித்து மணிக்கனக்கில் உரையாடியதாக கனவும் வந்து விட்டது. :‍) இத்தகைய சந்திப்புகளெல்லாம் வாசகர்களாகிய எங்களுக்கு எவ்வளவு பெரிய கொடை என தெரியப்படுத்தவே இதை எழுதுகிறேன்.

என்னளவில் இச்சந்திப்புகளின் முதன்மையென்பது உங்கள் ஆளுமையை அருகிருந்து உணர்வது தான். தனக்கானவற்றை மட்டும் வாழ்வில் செய்யும் ஒருவரின் அருகிருப்பதும் தன்னுடையதை அவர் அணுகுவதையும் வெளிப்படுத்துவதையும் காண்பதுதான் எனக்கு முக்கியமாது. அக்கணங்கள் தான் என்னிடம் எஞ்சியுள்ளது.

அன்புடன்,

பாலாஜி பிருத்விராஜ்

அன்புள்ள ஜெ

ஊட்டி சந்திப்பு குறித்த கட்டுரையை வாசித்தேன். நான் வெளியூரில் இருப்பதனால் ஊட்டி சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகளை இணையத்தில் வாசிப்பதுடன் சரி. இங்கே பல்கலைகழகங்களில் இதைப்போன்ற நிகழ்ச்சிகள் சிபிர்கள் நிறையவே நடக்கின்றன. தலாய்லாமா வந்திருந்தபோது நான் சென்றிருந்தேன். மிகச்சிறப்பாக சில நிகழ்ச்சிகள் நடக்கும். சில நிகழ்ச்சிகள் சராசரியாகவே இருக்கும். ஏனென்றால் அமைப்புகளைச் சார்ந்து உருவாக்கும்போது இந்தவகையான சிக்கல்கள் இருக்கும் என நினைக்கிறேன். ஆனாலும் நடந்துகொண்டிருக்கிறது

ஒரு சூழலில் உள்ள எழுத்தாளர்கள் சந்திப்பதற்கும் பேசுவதற்கும் ஆண்டுக்கு ஒருமுறையாவது இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பது மிகப்பெரிய ஆச்சரியம். வேறெங்கும் தமிழகத்தில் இப்படி நடப்பதில்லை. தமிழகத்தில் எங்கும் இப்படி இலவசமாக ஓர் ஆசிரமத்தையே விட்டுத்தர மாட்டார்கள். விட்டுத்தந்தாலும் எந்த நிபந்தனையும் இல்லாமல் கண்டிப்பாக இருக்காது. இது ஒரு பெரிய நல்வாய்ப்பு. அதை நீங்கள் திறமையாக நடத்திச்செல்கிறீர்கள் என நினைக்கிறேன்

ஆனால் நீங்கள் பெரிய அமைப்பு என்பதும் எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்கிறீர்கள் என்றும்தான் நான் நினைத்திருந்தேன். இந்தக்குறிப்பு வழியாகத்தான் உங்களுடன் இருக்கும் பழைய நண்பர்கள் எல்லாரும் கொஞ்சம் சலிப்படைந்துவிட்டார்கள், அவர்களுக்குப் பெரிய ஆர்வம் இல்லை என்று தெரிந்தது. அது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் எதிர்பார்க்கக்கூடியதுதான். பத்தாண்டுகளாக இந்நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பத்தாண்டுகளில் கொஞ்சம் வளர்ந்து வேறு மனநிலைகளுக்குச் சென்றிருப்பார்கள். ஆகவே அடுத்த தலைமுறை வந்து பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக நின்றுவிடவே வாய்ப்பு என்று தோன்றுகிறது. நடப்பது வரை நல்லது, தமிழுக்கு இலாபம் என்று நினைக்கவேண்டியதுதான்.

நீங்கள் உங்களுடைய ஊக்கத்தால்தான் இதை நடத்திச் செல்கிறீர்கள். இதில் உண்மையான ஆர்வம் கொண்ட புதியவர்கள் உங்களை தேடிவரவேண்டும் என்று விரும்புகிறேன். பிரார்த்தனைகளுடன்

செல்வி. ஆர்

முந்தைய கட்டுரைகி.ராஜநாராயணனின் உடனடிப் பார்ப்பனிய எதிர்ப்பு
அடுத்த கட்டுரைசிவவடிவங்கள்