புதியவாசகர்கள் – கடிதங்கள்

book

எழுதுக!

வணக்கம் ஐயா,

நான் உங்களது வாசக குழந்தைகளுள் ஒருவன். கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கின்றேன். உங்கள் வலைப்பக்கத்தை ஒரு சில மாதங்களாக வாசித்து வருகின்றேன். பல முறை கடிதம் எழுத மனதால் முயன்று கைவிட்டுருக்கின்றேன். இன்று “எழுதுக!” பதிவை படித்தவுடன் எழுதுகின்றேன்.

எப்படி உங்கள் அறிமுகம் கிடைத்தென்று எனக்கு நினைவில்லை, ஆனால் என் வாழ்வின் சிறந்த தருணங்களுள் அது ஒன்றாக அமைந்தது என்பது மிகையற்ற உண்மை.நான் மிக குறைவான வாசிப்பை உடையவன்,எனக்கு இலக்கியம் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால், உங்கள் மொழியின் ஆளுமை மெய்சிலிர்க்க வைக்கின்றது, குறிப்பாக “அறம்” சிறுகதை தொகுப்பு  என்னுள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

எங்கு ஒரு பாதிரியாரை பார்த்தாலும் “Fr.Dr.Sommervell”ன் ஞாபகமும், உணவு விடுதியில் யாராவது ஒரு பெரியவரை கண்டால் “சாகிப்பு” அவர்களின் ஞாபகமும் தான் வருகிறது.

அதன் பின்னர் உங்கள் “இரவு” நாவலை வாசித்தேன் இருட்டை பற்றிய ஒரு புதிய பார்வையை எனக்கு தந்தது அந்த நாவல்.

தற்போது “நீர்கூடல் நகர்” பதிவை படித்து முடித்து “இந்திய பயணம்” நூலை வாங்கியுள்ளேன். திருட்டுத் தனமாக “PDF” நூல்களை தரவிறக்கம் செய்வது தான் என் வழக்கம் அதைபோல் உங்கள் “விஷ்ணுபுரம்” நாவலையும் தரவிறக்கி வாசித்தேன் அதன் முன்னுரையை படித்தவுடனே அதை “Delete” செய்துவிட்டேன். விஷ்ணுபுரத்திர்கான உங்கள் உழைப்பு எனக்கு புரிந்தது.

எனக்கு ஒரு சந்தேகம் என்னவென்றால், நீங்கள் மிகவும் “conscious”ஆனவர் என்று உங்கள் பதிவுகளை படித்தால் தெரிகிறதுஆனால், உங்கள் சிறுகதைகள்,  நாவல்களை படித்தால் “இதை ஒரு சாதாரண மனிதன்” எழுதியதாக கருதமுடியவில்லை, ஒரு பிறழ்ந்த மனநிலையை என்னால் உணர முடிகின்றது குறிப்பாக உங்கள் “திசைகளின் நடுவே” சிறுகதை தொகுப்பில் இதை நான் உணர்ந்தேன்.

அது எப்படி உங்களால் இரு மனநிலைகளின் இடையே சஞ்சாரம் செய்ய முடிகின்றது?

“விடுப்பு விண்ணப்பங்களை தவிர  இவன் எழுதும் முதல் கடிதம் இது” என்று நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள். ஆம், அது தான் உண்மை.

இன்னும் நிறைய பேசவேண்டும் என்று நினைத்தேன், ஆனால் எழுத முடியவில்லை….

இப்படிக்கு,

கிஷோர் குமார்

அன்புள்ள கிஷோர்குமார்

வாசிப்பில் நுழைவது ஓர் அரிய அனுபவம். அப்போதிருக்கும் பரவசமும் கொந்தளிப்பும் பின்னர் அமைவதே இல்லை. அப்போது சிலசமயம் அதன் அருமை தெரிவதில்லை. பின்னர் நாம் மனநெகிழ்வோடு நினைத்துக்கொள்வோம். வாழ்த்துக்கள்.

இலக்கியப்படைப்புக்கள் ஒருவகை கனவுகள். மொழிவழியாக திட்டமிட்டு உருவாக்கிக்கொள்ளும் கனவுகள் என்று சொல்லலாம். கனவுகளுக்குரிய தன்னிச்சையான கட்டற்ற தன்மை எல்லா நல்ல படைப்புகளுக்கும் இருக்கும். அவை சிலசமயம் ஒழுங்கானவை. சிலசமயம் சிதைந்துகிடப்பவை. எல்லா தருணங்களிலும் எழுதியவனுக்கே புதிதாக இருப்பவை.

நாங்கள் நல்ல நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். வருக. அங்கே பேசிக்கொள்ளலாம்.

ஜெ

அன்புள்ள ஜெ

நான் உங்கள் படைப்புகளுக்கு அறிமுகமானது சமீபமாகத்தான். சர்க்கார் படம் சம்பந்தமாக உங்களை நிறயபேர் திட்டிக்கொண்டிருந்தார்கள். கதைத்திருடன் என்றுதான் என் நண்பர்கள் சொன்னார்கள். நான் அப்படி நினைத்துத்தான் வாசிக்க வந்தேன். ஆனால் இந்த இணையதளத்தில் கொட்டிக்கிடக்கும் படைப்புக்களும் விவாதங்களும் கட்டுரைகளும் என்னைப் பிரமிக்கச் செய்தன. வெளியே இதை உண்மையிலேயே அறியாமல் பேசுபவர்களும் இருக்கிறார்கள். அவர்களை ஒன்றும் செய்யமுடியாது. அவர்கள் எப்போதும் அப்படித்தான் இருப்பார்கள். ஆனால் சில எழுத்தாளர்களும் அதையெல்லாம் எழுதியதை வாசித்திருக்கிறேன். இப்போது நினைத்தால் அவர்களை நினைக்கும்போதே குமட்டிக்கொண்டு வருகிறது

ஒருநாளுக்கு ஆறேழுமணிநேரம் வீதம் இந்தத்தளத்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அற்புதமான படைப்புக்கள் உள்ளன. படைப்புக்கள் பற்றிய விமர்சனக்கட்டுரைகள் பல உள்ளன. சிறுகதை விவாதங்கள் வழியாக இந்த படைப்புக்களில் இருந்து எப்படி வாசிப்பை அடைவது என்பது கற்பிக்கப்பட்டிருக்கிறது. இடைவிடாது இந்த அளவுக்கு இலக்கியவிவாதமும் பண்பாட்டுவிவாதமும் நடந்துகொண்டிருக்கிறது. பிரமிக்கச்செய்கிறது இது. நான் இதை படித்து முடிக்க இன்னும் இரண்டு ஆண்டுகளாவது ஆகும்

அதன்பின்னர்தான் வெண்முரசு வாசிக்கவேண்டும். இவ்வளவு செறிவான அனுபவத்திற்காக நன்றிகள்

ஜெயக்குமார்

அன்புள்ள ஜெயக்குமார்

சர்க்கார் வசையாளர்கள் நல்லவர்கள். அவர்கள் எனக்கு எப்படியும் ஒரு நூறு நல்ல வாசகர்களை அளித்தார்கள்

ஜெ

முந்தைய கட்டுரைஉகவர் வாழ்க்கை
அடுத்த கட்டுரைஅனோஜன்,ஷோபா – ஒரு கடிதம்