சந்திப்பு, உரையாடல் – கடிதங்கள்

ko2

கொல்லிமலைச் சாரலும் முதல் மாங்காயும்

எழுதுக!

அன்புள்ள ஜெ, வணக்கம். நான் தங்களது புதிய வாசகர் சந்திப்பில் கலந்து கொண்டேன். பள்ளி பருவதிலேஆர்வமாக புத்தங்களை படித்த எனக்கு,நான் படித்த சுசீந்திரம் பள்ளியில் சிறந்த புத்தங்களையாரும் அறிமுகம் செய்து வைக்கவில்லை.எனக்கு கிடைத்த சில நாவல்கள் பொழுதுபோக்குஅம்சம் நிறைந்தவைகளாக மட்டுமே இருந்தன. பள்ளி பருவத்தில் அதன் மீது மிகப் பெரியஈர்ப்பு ஏற்ப்பட்டது.

நன்றி,பள்ளியில் நான் பல பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளிலும் கலந்து கொண்டு பலபரிசுகளைப் பெற்று உள்ளேன். ஆயினும், என்னை முறையாய் வழி நடத்திச் செல்லகுடும்பத்தினரோ ஆசிரியர்களோ முன் வரவில்லை. ஏனெனில், நான் நன்றாய் படிக்கும்மாணவி ஆதலால் படிப்பின் மீதான கவனம் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக.‌ வாசிப்பின்மீதான என்னுடைய ஈர்ப்பை யாரும் ஊக்குவிக்கவில்லை. இது புத்தகங்களுக்கும் எனக்கும்மிக பெரிய இடைவெளியை உருவாக்கியது.

நான் தற்போது பணிபுரியும் அலுவலகத்தின் நிறுவனர் இலக்கிய ஆர்வமுள்ளவர். இலக்கியக் குழு ஒன்றை அமைத்துப் பல புத்த‌கங்களை வாங்கி எங்களிடையே வாசிக்கும் பழக்கத்தைஉருவாக்கியுள்ளார். அதன் வழியே தங்களின் எழுத்துகளை படிக்கும் வாய்ப்பு அமைந்தது. நான் படித்த உங்களின் புத்தகங்கள் எனக்குள் இலக்கிய ஆர்வத்தை ஏற்படுத்தியது. இந்தச் சந்திப்பு எனக்குள் ஒரு தேடலையும் புத்தக வாசிப்பைப் பற்றிய தெளிவையும் ஏற்படுத்தியது. உங்களின் அபரிமிதமான தன்னம்பிக்கையும்,சக்தியும்(Energy) என்னை பிரம்மிப்பில் ஆழ்த்தியது.

மாதவி சிவதாணுபிள்ளை

kolli5

அன்புள்ள ஜெமோ,

மிக்க நன்றி. உங்களுக்கு ஒருக் கடிதம் எழுதி நேரடி தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென்பது நெடுநாள் கனவு. மாதவன் உங்களுக்கு எழுதத் தொடங்கியிருந்த காலத்தில் தங்கள் எதிர்வினையை எதிர்பார்த்து அவரை விட நானே அதிகம் பரபரப்புடன் காத்திருப்பேன். உங்கள் தளத்தில் அவரின் முதல்  கடிதத்தை பார்த்தவுடன் கிடைத்த மகிழ்ச்சியை சொல்லி  மாளாது. இப்பொழுது எனக்காகவே பிரத்யேகமாக வந்துள்ள (அதிலும் 24  மணி நேரத்திற்குள்ளாகவே)  இப்பதில் கடிதம் அளவில்லா மகிழ்ச்சியை கொடுத்தது.

நவம்பர் 13, 2014 –  ல் மறுபிரசுரமான ஒவ்வொருநாளும் அனுபவக் கட்டுரையில் (முதல் பிரசுரம் ஆகஸ்ட் 2008)<<ஒருநாளைக்கு சராசரியாக காலையில் முப்பது மாலையில் ஐம்பது மின்னஞ்சல்கள் இருக்கும். பதில்கள் போடுவேன். அதிகபட்சம் மூன்றுநாட்களுக்குள் பதில்போடுவதென்று ஒரு கணக்கு. >>

என்று கூறியிருந்தீர்கள். இந்த அளவு கணினி மயமாகவும், இணைய சேவையும் இல்லாத நாட்கள் அவை. அப்பொழுதே எண்பது மின்னஞ்சல்கள் என்றால் இப்பொழுது வரும் கடிதங்களின் அளவை நினைக்க பிரமிப்பாய் உள்ளது.

தங்களுக்கு வரும் எல்லாக்  கடிதங்களுக்கும்  எதிர்வினையாற்ற வேண்டுமென்ற கட்டாயம்  உங்களுக்குக்  கிடையாது. இதை நீங்கள் தவிர்த்திருந்தால் கூட யாருக்கும் அதுத்  தெரிய போவதில்லை. ஆனால் தீவிர வாசகர்கள் முதல் என்னை போன்ற கத்துக்குட்டிகள் வரை எல்லோரையும் ஒரு சேர பாவித்து நடத்துகிறீர்கள். இதுதான் உங்களின் மீதான ஈர்ப்பையும் மதிப்பையும் அதிகரிக்கச்  செய்கிறது. மற்றவர்களிடமிருந்து உங்களை தனித்துக்  காட்டுகிறது.

நீங்கள் உங்கள் துறையில் சாதித்து எட்டியிருக்கும் உயரமென்பது அசாதாரணமானது. தங்களின் அயராத உழைப்பைப்  பற்றி நானும் மாதவனும் எண்ணி எண்ணி மாய்வோம். ஒரு மாபெரும் அறிவியக்கம் உங்கள் தளத்தின் மூலம் நிகழ்ந்துக் கொண்டுள்ளது. வேறெங்காவது இந்த அளவு ஆசிரிய-வாசகர்கள் உரையாடல்கள் நடந்துள்ளதா என  தெரியவில்லை.

இது வரை நான் படித்த எந்த எழுத்தும் இந்த அளவு சிந்தனை திறனை தூண்டியதே இல்லை. “நான் யார்?” என்றக் கேள்வியை சர்வ சாதாரணமாக எழுப்பி, அதற்க்குண்டான பதிலை எவ்வாறுக்  கண்டுபிடிப்பதென்பதையும் சொல்லிக் கொடுத்து, வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வதென்ற தெளிவையும் கொடுக்கும் ஒரே எழுத்து உங்கள் எழுத்து. நம்மை சிறந்ததொரு ஆளுமையாக, செயலூக்கம் மிக்கவனாக வடிவமைத்துக் கொள்ள “எழுதலின் விதிகள்” கடிதத்தை படித்தாலே போதுமானது.

நீங்கள் அனுப்பியிருக்கும் பதில் கூட அப்படிப்பட்ட ஒன்றுதான். பல முறை மீண்டும் மீண்டும் வாசித்து அசைப் போட்டு மனதினுள் பதிய வைத்துக்  கொண்டேன். ஒரு வாரக் காலமாக இதை குடும்பத்தாரிடமும், நட்புக்களுடனும் பகிர்ந்து மகிழ்ந்திருந்தேன்.

<<ஆகவே எவருக்காகவும் இல்லாமல் பிரியா பிரியாவாக வெளிப்பட, நிலைகொள்ள எழுதுங்கள்  >> 

இந்த ஊக்கத்திற்கு மிக்க நன்றி ஜெமோ !

ப்ரியா இளங்கோ

kolli9

அன்புள்ள ஜெ

நாமக்கல் மற்றும் ஈரோடு சந்திப்புகளில் கலந்துகொண்ட பெண்கள் எழுதிய குறிப்புக்களைப் பார்த்தேன். நீங்களும் இப்போதெல்லாம் நிறையப் பெண்கள் கலந்துகொள்கிறார்கள் என்று எழுதியிருந்தீர்கள். இங்கே குடிக்கொண்டாட்டம் இல்லை என்பதும் உங்கள் மீதான நம்பிக்கையும்தான் காரணம் என நினைக்கிறேன்

ஆனால் என்னைப்போன்ற ஒருவருக்கு இன்னமும்கூட ஒர் இலக்கியக்கூட்டத்தில் கலந்துகொள்வது கனவுதான். என்ன சிக்கல், வரவேண்டியதுதானே என்று கேட்கலாம். எனக்குத் தோன்றும் பெண்கள் மேல் பேப்பர் வெயிட் போல குழந்தைகள் இருக்கின்றன என்று. குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளவேண்டும். இங்கே குழந்தைகளுக்கு இண்டிப்பெண்டன்ஸியே இல்லை. அவர்கள் அனைவருமே பிறர் பார்த்துக்கொண்டால்தான் வாழ்வார்கள். என் தோழிகள் கூட என் பிள்ளை சோறு ஊட்டிவிட்டால்தான் சாப்பிடுவான் என பெருமையாகச் சொல்வார்கள். அது பெருமை இல்லை. அது பெரிய தளை. அதைச்சொன்னால் அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. என் குடும்பத்திலும் குழந்தைகள் பெரிய சுமைகள். எதையுமே செய்யமாட்டார்கள். தாங்களாக பள்ளிக்குச் செல்லத் தெரியாது

அதேசமயம் எவரும் எதையும் பகிர்ந்து கொள்வதுமில்லை. எவரையும் ஒப்படைத்துவரமுடியாது. அப்பா கூட அப்படித்தான். எல்லாமே பெண்ணின் வேலை. அதைச்செய்யாவிட்டால் குற்றவுணர்ச்சியை அளிக்க ஆயிரம்பேர் வருவார்கள். வாசிப்பு எழுத்து பயணம் எல்லாமே இதனால் ஒடுங்கிவிடுகிறது. அதையெல்லாம் கடந்துசெல்ல நெடுநாட்கள் ஆகிவிடும். அதற்குப்பிறகு பார்த்தால் வாழ்க்கையே கிட்டத்தட்ட முடிந்துவிட்டிருக்கும்

கலந்துகொண்டவர்கள் அதிருஷ்டம் செய்தவர்கள். அந்த வாய்ப்பு எவ்வளவு அரிதானது என அவர்களுக்குத்தெரியவேண்டும். அதை அவர்கள் சரியாகப்பயன்படுத்திக்கொள்ளவேண்டும்

ஆர்

முந்தைய கட்டுரைஅனோஜனின் யானை – கடிதங்கள் – 6
அடுத்த கட்டுரைஈழத்திலிருந்து ஒரு குரல்