படைப்பு முகமும் பாலியல் முகமும்
ஓரினச்சேர்க்கை
ஓரினச்சேர்க்கையும் இந்தியப்பண்பாடும்
ஓரினச்சேர்க்கை – அனிருத்தன் வாசுதேவன்
ஒருபாலுறவின் உலகம்
பாலுணர்வை அறிதலும் எழுதுதலும்
அன்புள்ள ஜெயமோகன் ஐயாவுக்கு வணக்கம்.
“முடியாது என்றானபோதும் நான் முயன்று தான் தோற்கிறேன்.
விடியாது என்றானபோதும் நான் கிழக்கையே பார்க்கிறேன்.
இயற்கையின் தீர்ப்பில் நானே குற்றவாளியா?
அதை திருத்தி எழுதத்தானே யாரும் இல்லையா?”
எனது கைபேசியின் அழைப்பொலி இது. பேரன்பு திரைப்படத்தில் இடம்பெற்ற கருணாகரனின் வரிகள்.
திரு.எஸ்ஸின் கடிதத்தைப் பார்த்த பின்னர் எழுதுகிறேன். உங்கள் இணையத்தளத்தை நீண்ட நாளாகவே வாசிப்பவன் என்றாலும், விக்கி விஜயுடனான உங்கள் பழைய கடிதங்களைப் பார்த்த போதே எழுத நினைத்தவன் என்றாலும், “இலக்கியத்தில் கேட்க எவ்வளவோ இருக்க இதை இவரிடம் எழுத வெட்கமாக இல்லை?” என்ற தயக்கத்தாலும் இதுவரை கடிதம் எதுவும் எழுதவில்லை. ஆனால் எஸ்ஸுக்கான உங்கள் மறுமொழியைப் பார்த்த பின்னர் தெரிந்து கொண்டேன், உங்களைத் தவிர வேறு யாரிடமும் என் மனக்குறையைக் கூறமுடியாதென்று.
என்னைப் பற்றியெல்லாம் அதிகம் கூற விரும்பவில்லை. பிறகொரு முறை உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது இவனாக இருக்குமா என்று நீங்கள் ஊகித்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை தான். அந்த அளவுக்கு எனக்குள் மறைந்திருக்கும் ‘அந்த’ அடையாளத்தை வெறுக்கிறேன்.
சுருக்கமாகச் சொன்னால் முப்பதை அண்மிக்கும் ஒரு இளைஞன். உங்கள் ஊட்டி முகாம், விஷ்ணுபுரம் விழாக்களிலெல்லாம் கலந்து கொள்ள முடியாத இயந்திர உலகில், ஒரு பெருநகரத்தில் வசிப்பவன்.
ஒரு விதத்தில் நான் அதிர்ஷ்டம் செய்தவன். அழகான குக்கிராமத்தில், அருமையான சிறிய குடும்பத்தில் பிறந்தவன் நான். போதும் போதும் என்னும் அளவுக்கு பேரன்பு. அந்த அன்புக்கு முன் பருவ வயதில் என்னுள் நிகழ்ந்துகொண்டிருந்த இந்த உணர்வை பெரிதாக எண்ணவோ, அதற்கு என்னை ஒப்புக்கொடுக்கவோ நான் தயாராக இருக்கவில்லை.
ஆனால் அந்த மாற்றம் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியது உண்மை. ஒரு மஞ்சள் பத்திரிகையின் கேள்வி பதிலில் “இந்த உணர்வு எல்லா ஆண்களுக்கும் ஏற்படுவது தான். கவலைப்படத்தேவையில்லை. கொஞ்ச நாட்களில் மாறிவிடும்” என்று இன்னொருவருக்கு வழங்கப்பட்ட பதில் தான் பதினைந்து வயதில் எனக்கு மிகப்பெரிய ஆறுதல். ஆனால் என் விடயத்தில் அது பொய் என்பதை வளர வளர உணர்ந்துகொண்டேன்.
அது படிப்பு – தொழில் நிமித்தம் குடும்பத்தை விலகி தொலைதூரம் வந்தபிறகு நிகழ்ந்தது. நண்பர்களில் கட்டுமஸ்தான ஒருவனோடு பழகுவதில் எனக்கு நாட்டம் அதிகம். அவனை இன்னொரு தோழியோடு இணைத்து நண்பர்கள் கேலி செய்தபோது, இறுதியில் அவனே அவளுடன் காதலில் விழுந்தபோது, நான் கடும் கோபமும் ஏமாற்றமும் அடைந்தேன். என் வாழ்வின் வலிமிகுந்த நாட்கள் அவை.
அப்போது எனக்குக் கடவுள் நம்பிக்கை அதிகம். விரைவிலேயே மீண்டு விட்டேன். இணையம் இன்னொரு கதவைத் திறந்து நான் யார் என்று காட்டியது. என்னை முழுமையாக உணர்ந்துகொண்டேன். முழுவதுமாக உடைந்து விழுந்தேன்.
உகவர்கள் ஆணை நேசிப்பவர்கள் என்பதால் அவர்களிடம் பெண்மை நிறைந்திருக்கும் என்பது இந்த சமூகம் நிலைநிறுத்தியிருக்கும் அபாண்டமான பொய். நடை, உடை, பாவனை எதிலுமே என் வேற்றுமையை இனங்காண முடியாத அளவுக்குத் தான் என்னையும் இயற்கை படைத்திருக்கிறது. ஒரு உகவனாகவே சொல்கிறேன், நளினம் கொண்ட எந்த ஆண் மீதும் எனக்கு ஈர்ப்பு வந்ததில்லை. நான் காமுறுவது தூய ஆண்மை மீது மாத்திரமே.
நீங்கள் பகிர்ந்த ஒரு மலையாளக் கவிதை நினைவுக்கு வருகிறது.
“நான் உங்களை நேசிக்கிறேன்.”
“மன்னிக்கவும். நான் ஒரு மாயிழை.”
“ஓ. நீங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் போது ஆண் யார்?”
“நான் ஒரு பெண்”
“அதைக் கேட்கவில்லை. நீங்கள் இரு பெண்கள் ஒன்றாக இருக்கும் போது ஆண் பாத்திரத்தை ஏற்பது யார்?”
“ஹஹா. நான் ஒரு பெண்”
நினைவில் இருந்ததை எழுதினேன். சரியா தெரியவில்லை. இந்தக் கவிதையை எழுதிய கைகளை முத்தமிட வேண்டும்.
(விக்சனரியில் உகவன், மாயிழை ஆகிய கலைச்சொற்களை பார்த்தேன். கவித்துவம் நிறைந்தவை. வசை போல தோன்றும் ஏனைய எல்லாச் சொற்களுக்கும் நடுவே இவற்றை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.)
நீங்கள் சொல்லும் அந்த ஐரோப்பியப் பயணத்துக்கு என் வாழ்வில் சாத்தியமே இல்லை. சுற்றுலாவுக்காக அன்றி, இந்த இந்திய மண்ணை, இனிய மண்ணை விடுத்து என்னால் கால்களைத் தூக்கமுடியாது. ஆக நெடுநாளாகவே அந்த இரட்டை வாழ்வுக்காக தான் தயாராகிக்கொண்டிருக்கிறேன்.
ஒன்றும் சொல்லப்போவதில்லை என்று எவ்வளவோ சொல்லி விட்டேன். இத்தனையும் போதும். இன்று எஸ்ஸின் கடிதத்தைப் பார்த்துவிட்டு பரபரப்பாக இக்கடிதத்தை எழுதுகிறேன் என்றாலும், இந்த அவசரத்துக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. இந்த வயதில் எல்லோருக்கும் இனிய கனவுகளையும் குறுகுறுப்பையும் அளிக்கின்ற அந்தச் சொல் என் வாழ்க்கையில் இடியாக விழுந்திருக்கிறது. திருமணம்.
வீட்டில் நச்சரிப்பு கூடிவிட்டது. தேடி வந்த சம்பந்தங்கள் பலவற்றை தவிர்த்து விட்டேன். அம்மாக்களின் மாறாத அதே வசனம். கண் மூட முன் உன் கல்யாணக்காட்சியைக் கண்டு இரண்டு பேரப்பிள்ளைகளை கொஞ்சவேண்டும். என் தவிப்பை எப்படி இவர்களிடம் சொல்லி புரியவைப்பது?
உள்ளே பெருங்காமம் சுழித்தோடினாலும், நான் அதை யாருக்கும் திறந்து காட்டியதில்லை. முதல் நண்பனுக்குப் பிறகு ஓரிரு ஆண்கள் என் வாழ்க்கையில் கடந்து போனாலும், யாரோடும் உடலைப் பகிர்ந்துகொண்டதில்லை. சுருக்கமாகச் சொன்னால் தைரியம் இல்லை, சமூகம் மீதான அச்சம். நினைத்தது போலவே அவர்களும் ‘தூய ஆணா’கவே இருந்தார்கள். தாங்க முடியாத வலியுடன், அவர்களுக்கான பெண்களிடம், அவர்களை வெட்டி எறிந்து விட்டு நானும் நகர வேண்டி இருந்தது. ஆனால் உள்ளே அந்த உகவன் படும் பாட்டையும் என்னால் சகிக்கமுடியவில்லை. பெருங்குரலெடுத்து கதறி அழ முடியாத வேதனைகள் எத்தனை கொடுமையானவை!
சில மாதங்களாக திரைப்படங்களில் நெகிழ்வான காதல் காட்சிகளைக் காணும் போது துடித்துப்போகிறேன். “என்னடா இப்பல்லாம் ரொம்பத்தான் ஃபீல் பண்றே” என்று நண்பர்களே வாய்விட்டுக் கேட்கிறார்கள். “எனக்கு இதெல்லாம் சாத்தியமில்லை, என்றைக்குமே சாத்தியமில்லை என்பதை உணர்ந்து தான் அழுகிறேன்” என்று எப்படி அவர்களிடம் சொல்வது?
அன்றொரு நாள் பேருந்தில் திரைப்படமொன்று. முதலிரவுக்காட்சி. கட்டுப்படுத்த முடியாமல் வெடித்து அழுதேன். பக்கத்தில் அமர்ந்திருந்த பெரியவர் பதறிப்போய் விட்டார். நெருங்கிய ஒருவரின் சாவு என்று கூறி சமாளித்துவிட்டேன். என்னால் இயலாத ஒரு வாழ்க்கையை, ஆனால் எனக்காக காத்திருக்கும் ஒரு வாழ்க்கையை அஞ்சி கணம் கணம் செத்துக்கொண்டிருப்பது யாருமில்லை, நான் தான் என்பதை அவருக்கு எப்படிச் சொல்லி புரியவைப்பது?
நான் பார்க்க ஓரளவு வாட்டசாட்டமானவன். எந்தளவுக்கு என்றால், இரண்டு பெண்களே முன்வந்து தங்கள் காதலைச் சொல்லுமளவு. அவர்களில் இன்று வேறொருவனைத் திருமணம் முடித்து வாழும் ஒரு நண்பியை நினைவுகூர்கிறேன். திருமணத்துக்கு எனக்கு பத்திரிகை அளிக்க வந்தவள் “ஆனால் கடைசிவரை ஏன் என்னை மறுத்தாய் என்பதைத் தான் புரிந்துகொள்ளவே முடியவில்லை” என்று கண்ணீர் சிந்தியபடியே விடைபெற்றதை எண்ணும் போதெல்லாம் இன்றும் வலிக்கிறது.
மனதை மாற்றவேண்டும் என்று பாலுணர்வுத் தளங்களுக்கு போனாலும், அங்கு கூட பெண்ணுடல்கள் அருவருப்பை ஏற்படுத்துகின்றன. அங்கிருந்து உகவர்களுக்கான தளங்களுக்குப் பாய்ந்து மாயத்திரையில் ஆண்மையை, தசைகளை, தோள்களை சுவைப்பதும், காட்டாற்று வெள்ளம் வடிந்த பின்னர், வெட்கி விம்மி அழுவதும் இப்போது வாடிக்கையாகி விட்டது.
என் வாழ்க்கையில் மற்ற எவரும் அனுபவித்திருப்பதை விட நாடகீயத் தருணங்கள் அதிகம். நீங்கள் சொல்வது போலவே எவரும் பார்க்காத பக்கங்கள், சிந்திக்காத கோணங்கள. எழுத்துத்துறையில் முயற்சி செய்ய ஆசை இருக்கிறது. அது முடியாவிட்டாலும் என் தொழில் துறையில் பிரபலமடைவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கைகளைக் கலைப்பவனும் உள்ளே தவித்தபடி அமர்ந்திருக்கும் அந்த உகவன் தான். “இத்தனை தியாகங்களும் போதாதா? வாழ்நாளாலெல்லாம் என்னை ஏங்க வைத்து தினம் தினம் சாகப்போகிறாயா?”
போதும். முடித்து விடுகிறேன்.
மற்றவர்களைப் போல் நானும் இயல்பு வாழ்க்கையே வாழவேண்டும், குழந்தைகளைப் பெற்று கொஞ்சி விளையாடவேண்டும் என்பது என் நப்பாசை. ஆனால் இன்னொரு பெண்ணுடன் வாழ்க்கையைப் பகிர்வதை நினைத்தே பார்க்க முடியவில்லை. ஒருவேளை நம்பி வந்தவள் என்பதற்காக அவளை நான் போலியாக மகிழ்விக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை அது நரகமே தான். முதிய வயதில் தங்கள் வாழ்க்கைத் துணைகளைத் தேடிக்கொண்ட உகவர்களின் கதைகள் அச்சுறுத்துகின்றன. இந்தப்பக்கம் அம்மாவின் ஏக்கம். என் திருமண விடயத்தில் நான் என்ன முடிவை எடுப்பது?
அல்லது ஒரு இலக்கியவாதியிடம் கேட்பதற்குப் பதில் யாரேனும் மனோதத்துவ நிபுணரை நான் நாடவேண்டுமா? என் தொழில், எதிர்காலம் கருதி அப்படி ஒருவரை நாட நான் அஞ்சுகிறேன். உங்களைப் போல் ஒருவர் என் தந்தையாகவோ நெருங்கிய நண்பராகவோ இருந்திருந்தால் மடியில் விழுந்து கதறி அழுதபடி இக்கேள்வியைப் கேட்டிருப்பேன். அதற்கு வாய்ப்பில்லை. தயவுசெய்து ஏதாவது பதில் தாருங்கள் ஐயா.
வி
அன்புள்ள வி
தொடர்ச்சியாக இந்தவகை கடிதங்கள். இது இவ்வளவு எண்ணிக்கையில் அதிகமாக இருக்குமென நான் நினைக்கவில்லை.
முதலில் செய்யவேண்டியது இதை இயல்பாக ஏற்றுக்கொள்ளுதல்.எவரும் தங்கள் பிறவி இயல்பான மூளைக்கூறுடன் போட்டியிட முடியாது. கணக்கு சம்பந்தமான ஒரு வேலையை நான் பிழைப்புக்காகச் செய்தாகவேண்டும் என்றால் உடைந்துவிடுவேன். அதனுடன் மல்லுக்கட்டி, துயரடைந்து வாழ்க்கையை வீணடிக்கவேண்டியதில்லை. இயல்பாக ஏற்றுக்கொள்ளுதல், சமூகத்திற்காக தன்னை இரண்டாகப் பிரித்துக் கொள்ளுதல். அதுவே முதல்தேவை
அதற்கு தேவையென்றால் உளவியலாளரை நாடலாம். ஆனால் பெரும்பாலான உளவியலாளர்களுக்கு இதெல்லாம் தெரியாது, ஏற்றுக்கொள்ளவும் முடியாது. பொதுவாக இங்கே இலக்கியவாசகரிடம் சொல்ல உளவியலாளர்களுக்கு ஒன்றுமே இல்லை.அத்துடன் மனக்கொந்தளிப்பு அல்லது பாலியல்நாட்டம் ஆகியவற்றுக்கு எதிராக ஏதேனும் அமைதிப்படுத்தும் மாத்திரைகளை இயந்திரத்தனமாக தந்துவிட்டார்கள் என்றால் பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள்.
திருமணம் செய்துகொள்ளவே கூடாது. ஏனென்றால் மிகச்சிலநாட்களிலேயே வெளிப்பட்டுவிடும் உடல்ரகசியம் இது. பெண்கள் முதல்நாளிலேயே உணர்ந்துகொள்வார்கள் – சம்பிரதாயமான பழையகாலப் பெண்கள் கூட. அது பெரும்கொந்தளிப்பை, துயரை இருவருக்கும் இருவர் குடும்பத்திற்கும் அளிக்கும். இன்னொருவர் வாழ்க்கையை வைத்து விளையாட எவருக்கும் உரிமை இல்லை. எனக்கு திருமணத்தில் ஆர்வமில்லை என உறுதியாகத் தெரிவித்துவிடவேண்டியதுதான். வேறு வழியே இல்லை.
இரட்டைவாழ்க்கை, அல்லது தனக்கான பாலியல்வாழ்க்கையை தேடிக்கொள்வது இன்று இயல்பானது. இணையம் அதற்கான பல அமைப்புக்கள் கூடுகைகள் இன்றுள்ளன என்றே நினைக்கிறேன். ஒருபால் நாட்டம் கொண்டவருக்கு ஒருபால்நாட்டம் கொண்ட இன்னொருவரே இயல்பான துணையாக இருக்கமுடியும். பிறருக்கு அது பெரும் ஒவ்வாமையைத்தான் அளிக்கும். ஏனென்றால் நான் ஏற்கனவே சொன்னதுபோல இது பெரும்பாலும் மூளையின் இயல்பு சார்ந்த உளநிலை. அத்தகைய குழுமங்களை இணையத்தில் தேடிக் கண்டடையமுடியுமென நினைக்கிறேன்
என்ன கவனிக்கவேண்டும் என்றால் பழையகாலங்களில் இது ஒரு ரகசிய அமைப்பாக இருந்தமையாலேயே குற்றத்துடன் சம்பந்தப்பட்டிருந்தது. சில திரையரங்குகள் பூங்காக்கள் இதற்கான இடமாக இருந்தன. குற்றவுலகுடனான தொடர்பு மேலும் பிரச்சினைகளைக் கொண்டு வரும். அது இப்போது பெரும்பாலும் தவிர்க்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன்
அனைத்திற்கும் மேலாக ஒன்று உண்டு. திரு எஸ் எழுதியபோது அதில் ஒரு கூறு இருந்தது. அவர் தேர்ந்த இலக்கியவாசகராகத் தெரிந்தார். மொழியாளுமை கொண்டவராக இருந்தார். அதாவது அவருடைய வாழ்க்கையின் அர்த்தமும் சாரமும் வேறு. அது பாலியலால் தீர்மானிக்கப்படுவதில்லை. பாலியல் அவருடைய வாழ்க்கையின், ஆளுமையின் மிகச்சிறிய பகுதி மட்டுமே. எவரானாலும் அவ்வாறு வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்ள இன்னொரு தீவிரமான தளம் இருந்தாகவேண்டும். அவர்களே தங்களைப் பற்றி நிறைவாக எண்ணிக்கொள்ள முடியும்.
அவ்வாறு ஒரு புறவாழ்க்கை இல்லாதபோது, அது வெறும் உலகியல்செயல்பாடாக மட்டுமே இருக்கும்போது வாழ்க்கையில் ஒரு வெறுமை தோன்றுகிறது. அந்நிலையில்தான் அதை பாலியலைக்கொண்டு நிரப்ப முயல்கிறார்கள். அதன்பொருட்டே அவர்கள் பாலியலில் மூழ்கிக்கிடக்கிறார்கள் – எண்ணம் என்ற அளவிலாவது. அது மேலும் ஒவ்வாமையை தனிமையை சலிப்பை அளிக்கிறது. உங்கள் நிலைமையில் மேலும் பெரிய வதையாக ஆகிவிடுகிறது
நான் அவருக்குச் சொன்னதே உங்களுக்கும். பாலியல் என்பது வாழ்க்கையின் ஒரு சிறு பகுதி மட்டுமே. குழந்தைகள் பெற்றுக்கொள்வதும், வளர்ப்பதும், குடும்பமும் கூட ஓர் அறிவியக்கவாதியின் வாழ்க்கையில் மிகச்சிறிய பகுதிதான். மிகப்பெரும்பாலான பகுதியை தீவிரமாக்கிக் கொண்டால், பொருளுடையதாக ஆக்கிக்கொண்டால் இதை எளிதாகக் கையாளமுடியும்.
ஜெ