நெருப்பு தெய்வம், நீரே வாழ்வு
கடந்த வியாழன் மாலை அன்று நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு புத்தகம் அச்சாகி கைவர பெற்றோம்.அத்தனை உள மகிழ்வுடன் அந்த புத்தகத்தை எடுத்துக்கொண்டு மறுநாள் அதிகாலை கங்கையினை நோக்கிய எங்கள் பயணத்தை துவங்கினோம்.மனதில் இனம் புரியாத பதட்டமும் சந்தோசமும் ஒரு சேர கலந்து இருந்தது.
17 நண்பர்களில் அறுதிப் பெரும்பான்மையோருக்கு இது முதல் வடஇந்திய பயணம் மேலும் இதுவே முதல் விமானப்பயணமும் கூட.காத்திருந்தது எங்களுக்கான பரிசு சென்னை விமான நிலையத்திலே காத்திருந்தது ,அது என்னவெனில் முனைவர் நம்பி நாராயணன் அவர்களை மிக தற்செயலாக விமான நிலையத்திலே அடையாளம் கண்டார் சிவராஜ் அண்ணன், ஒரு காரியத்தின் துவக்கத்தில் கிடைத்த நல்லதிர்வாக அதை எண்ணிக்கொண்டோம். சிவகுரு உங்கள் இணையத்தில் வந்த தேசத்தின் இரு தலைவணங்குதல்கள் கட்டுரையினை செல்போனில் காண்பித்து நம்பி அவர்களிடம் அறிமுகமானோம்,அவருக்கும் அத்தனை சந்தோசம் அந்த கட்டுரையினை கண்டதும்.அவரிடம் தன்மீட்சி புத்தகத்தில் கையெழுத்தை பெற்று கொண்டோம் .பத்மபூஷண் விருதினை பெற்றுக்கொள்ள அவரும் அதே விமானத்தில் புதுடெல்லி வருவதாக கூறினார்.கடும் நிராகரிப்புக்கு பின் அவருக்கு கிடைத்த அங்கிகாரத்தை நினைக்கையில் கண்ணில் நீர்கசிந்தது.
ஆறாம் வகுப்பில் பள்ளிசுற்றுலாவில் மதுரை ஏரோடோம் சென்ற நினைவே முதலில் வந்தது,அத்தனை பாதுகாப்பு பரிசோதனைகளையும் கடந்து விமானத்தில் மிக உற்சாக நாங்கள் அனைவரும் காணப்பட்டோம்.கெளதமியும் பாரதியும் காகித கொக்கு ஒன்று செய்து அதை பைலட்டுக்கு பரிசாக கொடுத்து,அவரின் அறைக்குள் செல்ல அனுமதி கோரியுள்ளனர்,கதவை முழுமையாய் நீக்கி அனைத்தையும் அங்கிருந்தே காணும்படி அவர் சொல்லியிருகிறார்.அதுவே அவர்களுக்கு பூரண மகிழ்ச்சி.டில்லி காலை8 மணிக்கு சென்றோம்,அங்கிருந்து அதிவேக மெட்ரோ ரயிலில் பயணம் செய்து டில்லியினை அரை சுற்று சுற்றி இரயில் நிலையத்தின் அருகில் சென்று சேர்ந்தோம்.மிக பிரபலமான ஆனால் சிறிய ஆந்திரா மெஸ்சில் காரசாரத்துடன் உணவு அருந்தினோம்.அவ்வளவு பேர் காத்திருந்து சாப்பிட்டு செல்வதை மிக ஆச்சர்யமாக வேடிக்கை பரர்த்து கொண்டு இருந்தோம்.
எங்களுடன் வந்துருந்த கட்டிட கலை நண்பர்கள் கெளசிக் மற்றும் அருணிமா எங்களை Cannought எனும் பகுதிக்கு அருகில் உள்ள ஒரு பழைய கட்டிடத்திற்கு அழைத்து சென்றனர். அந்த கட்டிடத்தின் வாயிலில் இருந்து எங்களை கண்களை மூடச் சொல்லி உள்ளே அழைத்து சென்றனர். கண்களை திறந்த போது மிகப்பெரிய கிணற்றின் வாயிலில் நின்று கொண்டு இருந்தோம்.அது
Agrasen’s Baoli (Agrasen ki Baoli) எனும் தண்ணீர் கோயில்,முகலாயர்கள் காலத்தில் கட்டப்பட்ட பின்னர் அந்த மரபில் தோன்றியவர்களால் தொடர்ந்து பராமரிக்கபட்டுள்ளது.வெவாள் மற்றும் புறாக்களினால் சூழப்பட்ட இந்த கிணறு தண்ணீர் சேமிப்பிற்காக பயன்படுத்த பட்டதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.ஒரு மழை நாளில் அந்த கிணற்றுக்குள் இருக்க மனது மிக விரும்பியது.உண்மையில் இது போன்ற எந்த பிரம்மாண்டத்தை நோக்கினாலும் அதற்காக உடல் உழைப்பினை கொடுத்த மக்கள் கூட்டமே நினைவினை வந்து அழுத்துகிறது.
பின்னர் டில்லியில் இருந்து ஹரித்துதுவார் நோக்கி இரயிலில் பயணப்பட்டோம்.வித விதமான ஊர்கள் ஆனாலும் வளர்ச்சியே கண்ணுக்கு தட்டுப்படவில்லை, வயல்கள் தோறும் கரும்பே விளைவிக்கபட்டு இருந்தது.மிக கடினமான துர்நாற்றதுடன் கூடிய கரும்பாலைகள் வரிசையாய் வந்து சென்றது.ஹரித்துதுவார் நோக்கி செல்ல செல்ல மனது மிக பதட்டமும் பயமும் கொண்டது.எதற்காக இந்த பயணம் ஏன் இவ்வளவு தூரம் கடந்து இந்த துறவிகளை சந்திக்க வேண்டும்?உண்மையில் அவர்கள் எப்படி பட்டவர்கள் என உள்ளுக்குள் இனம் புரியாத புதிர் உருவாகி அலைக்கழித்தது.அந்த 6 மணி நேரத்தில் ஒரு நொடி கூட தூங்க முடியவில்லை.வார்த்தைகள் இல்லை அந்த வாதையை சொல்ல, அனைத்தின் மீதும் அவ நம்பிக்கை கொள்ள மனது கங்கணம் கட்டி போராடியது.யார் என்ன சமாதானம் படுத்தினாலும் கேட்கவில்லை.
இரயில் முக்கால் மணி நேரம் தாமதம்,மத்ரி சதன் ஆசிரமத்தில் இருந்து எங்களை அழைத்து செல்ல மூன்று வாகனத்தில் வந்து காத்திருந்தனர்,எங்களில் மூன்று பேருக்கு மட்டுமே ஹிந்தி தெரிந்து இருந்தது.அழைத்து போக வந்தவர்களுடன் ஏதும் பேசாமல் ஏறி சென்றோம் இரவு 8மணிக்கும் கூடுதலா கியிருந்த நேரம் குளிர் பரவியிருந்தது.செல்லும் வழியெல்லம் கங்கை நதியினை கண்களாலும்,மனத்தாலும் தேடிக்கொண்டு இருந்தோம் அனைவரும்.ஹரித்துதுவாரில் இருந்து 20நிமிட பயணத்தில் மத்ரி சதன் வந்து சேர்ந்தோம்.
குரு சிவானந்த் அவர்களும் 141வது நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருக்கும் அவரின் சீடரான சுவாமி.ஆத்மபோனந் அவர்களும் அவர்களின் வழக்கமான இடத்தில் அமர்ந்து இருந்தனர்.எதிரே எங்களுக்காக 20 பிளாஸ்ட்டிக் இருக்கைகள் போடப்பட்டு இருந்தது.மெலிந்து போயிருந்த ஆத்மபோனந் உருவமும் வலி மிகுந்த அவரின் உடல் மொழியும் மனதை இரணப்படுத்தியது.சூடாக டீ அனைவர்க்கும் கொடுக்கப்பட்டது. குரு எங்களை பற்றி கேட்டறிந்தார் ஏதேனும் கேள்விகள் இருப்பின் கேட்க சொன்னார்.எங்கள் மனதின் அடியாளத்தில் இருந்த கேள்விகளெல்லாம் பீறிட்டு எழ அது அவர்கள் எப்படி எடுத்து கொள்வார்கள் என எதுவும் தெரியாமல் தயங்கி தயங்கி கேட்டோம்.
ஆத்மபோனந் அவர்கள் தமிழில் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.நிகமானந்தா விஷம் கொடுத்தே கொல்லப்பட்டார் என குரு திரும்ப திரும்ப கூறினார்.நிகமானந்தாவிற்கு பிறகு குருவே உண்ணா நோன்பினை இருக்க திட்டமிட்டுள்ளார்,ஆனால் ஆத்மபோனந் அவர்கள் தென்னிந்தியர்களுக்கும் கங்கை நதி அன்னைதான் என உறுதிபடுத்தவே தான் உண்ணாவிரதத்தை மேற்கொள்ள முடிவுசெய்தேன்,மேலும் இதை கண்டு யாராவது இங்கு வருவார்கள் என எண்ணினேன் என்றார்.ரமணர் மற்றும் காந்தியின் பாதிப்பில் தான் இந்த பாதைக்கு வர விரும்பியதாக கூறினார்.கங்கையை ஏன் பாதுகாக்க வேண்டும் அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என அறிவியல் பூர்வமான தகவல்கள் மற்றும் ஆய்வு குறித்து பேசினார்.எங்களின் மனமோ அவரின் தனிநபர் வாழ்க்கையினை பற்றி யோசித்து கொண்டு இருந்தது .குரு மீண்டும் மீண்டும் தபஸ் எனும் வார்த்தையை சொல்லி கொண்டே இருந்தார் .
எங்கள் யாராலும் அவர்கள் இருவரின் கங்கை குறித்த பேச்சிலிருந்து மீள முடியவில்லை.ஆனால் அவர்களோ எங்களுக்கு மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பளித்து உணவு கொடுத்தனர். முதலில் ஒரு தட்டில் அனைத்து உணவும் பரிமாறப்பட்டது.அது யாருக்கு எனில் எட்டு வருடங்களுக்கு முன் உயிர் நீத்த நிகமானந்தாவுக்கு.அவர்களின் உரையாடலில் கூட அவருக்கு என இருக்கை அளிக்கப்பட்டுள்ளது.ஆசிரமத்தின் அருகே உள்ள பள்ளியின் விருந்தினர் தங்கும் அறையில் எங்களை இரவு தங்கவைத்தனர்.
எளிய அடிப்படை வசதிகளை மட்டும் கொண்ட மத்ரி சதன் ஆசிரமம் மற்றும் அதன் சாதுக்கள் ,தன்னார்வலர்கள் அவர்களின் பணிவு,நிதானம் உண்மையில் எங்கள் தூக்கத்தை எல்லாம் குழைத்து விட்டது.மறுநாள் அதிகாலையில் கிளம்பி ஆசிரமத்தின் அருகே உள்ள கங்கை கரையில் சென்று குளித்தோம், பேரனுபம் உச்சகட்ட குளிர் ஊசியாய் உடலை துளைக்க எத்தனையோ உயிர்களை கண்ட கங்கை எங்களையும் எங்கள் தவிப்பையும் உள்வாங்கி கொண்டது.
வழக்கமாக அவர்கள் பொது மக்களுடன் உரையாடுவதற்காக கூடும் இடத்தில் குரு எங்களுக்காக காத்திருந்தார், நாங்கள் அனைவரும் அரைவட்டமாக அவரை சுற்றி ஊர்கார்ந்தோம்.மத்ரி சதன் உருவான நாள் முதலாக எதிர் கொண்ட சூழல் கடந்த 20 வருட போராட்ட வாழ்க்கை அதன் விளைவாய் நிகழ்ந்தது என குரு கண்ணீர் மல்க பேசினார்.
கையில் தடிக்குச்சி ஊன்றி கொண்டு வந்து உட்கார்ந்த 26வயதே ஆன ஆத்மபோனந் தன் இளம் வயது மற்றும் துறவறம் மேற்கொள்ள எடுத்து கொண்ட முயற்சிகள்.அதன் வழியே குரு சிவானந்தாவை கண்டு கொண்ட விதம் இன்று தான் கொண்டு இருக்கும் பரிபூரண நம்பிக்கை என கண்கள்மிளிர பேசினார்.தான் இந்த விரதத்தினால் மரணமடைய நேரிட்டாலும் அடுத்து ஒருவர் தன்னை போல் இந்த போராட்டத்தினை முன்னெடுத்து வெற்றி காண்பார்கள் என உறுதிபட கூறினார்.நாங்கள் நிகமானந்தாவை கண்டடைந்த தருணத்தை காத்திருப்பை ஒவ்வொருவரும் பேசினோம் .மிக உணர்வுப்பூர்வமான உரையாடலாக அது அமைந்தது .
பிறகு குக்கு காட்டுப்பள்ளி தன்னறம் பதிப்பகத்தின் “நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு” எனும் புத்தகத்தை குருவின் கைகளில் சமர்பித்தோம்.உண்மையில் இந்த புத்தகத்தின் உருவாக்கத்துக்கு மெனக்கெட்ட(நேசன்,பிரகாஷ்,சங்கர் ,தியாகு,பழனி,ஜோதி அண்ணன்) ஒவ்வொருவரையும் அந்த தருணத்தில் நினைவு கூறினோம்.
அங்கு நிகமானந்தாவினை அந்த ஆசிரமத்திலேயே புதைத்து இருந்தனர்.அந்த இடத்தில் ஒரு கொய்யா மரத்தினை நட்டு இருந்தனர்,அந்த மரத்தின் அடியில் சிறிய தீபம் ஏற்றி இருந்தனர் .அவரின் சமாதியில் கண்ணீர்மல்க சிறிது நேரம் பிரார்த்தனையில் அமர்ந்திருந்தோம்.
உண்மையில் எட்டு வருடங்களுக்கு முன்பு வெறும் செய்தியாக கேள்விப்பட்ட அவரின் இருப்பினை வந்தடைந்த அனுபவத்தை இயற்கையின் பெருங்கருணையை புரிந்து கொண்டோம்.எங்கள் யார் கண்களிலும் படாத ஒரு தருணம் அது, நிகமானந்தாவாவின் செருப்பினை வைத்து அதன் மேல் ஒரு செவ்வந்தி பூவினை வைத்து இருந்தனர்.அதை சிவராஜ் அண்ணன் மட்டும் கண்டு விழுந்து வணங்கினார்.அவர் அவர்களின் தேடுதல் அளவுக்கு அவர்கள் கண்டடைவார்கள் என அத்தருணத்தில் கண்டுகொண்டோம்.
எங்கள் யாராலும் அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை,ஆனால் டேராடூனுக்கு செல்லும் இரயில் புக் பண்ணியிருந்தோம்.சுவாமி.ஆத்மபோனந் அவர்களின் தினசரி உடல் பரிசோதனைக்காக மருத்துவர்கள் வந்து சேர்ந்திருந்தனர்.அவர்கள் பரிசோதனை துவங்கியது,கனத்த இதயத்துடன் விடை பெற்று திரும்பினோம்.கங்கையின் ஓட்டத்தை பகல் வெளிச்சத்தில் ஊற்று நோக்கிகொண்டே மீண்டும் இந்த இடத்திற்கு திரும்புவதற்கான மன சங்கல்பத்தோடு அடுத்த தரிசனத்திற்கு தயாரானோம்.
ஹரித்துவாரில் இருந்து டேராடூனுக்கு சென்ற ரயில் பயணத்தில் உற்சாகமான இளைய முகங்களையும் சந்தித்தோம்,மைவிழி ஒரு நடுத்தர வயது பெண்ணிடம் நிகமானந்தா ஆசிரமத்தில் எங்கள் அனைவருக்கும் அளித்த நிகமானந்தா எழுதிய புத்தகத்தை காண்பித்து ஏதோ பேசிக்கொண்டே வந்தார்,அவரின் முகம் எங்களை கடந்து செல்லும் போது பிரகாசமானது,டேராடூனுக்கு சென்று அங்கிருந்து பேருந்து பிடித்து நகரத்துக்கு வெளியே இருந்த நண்பர்வீட்டில் எங்கள் பொருட்களை எல்லாம் வைத்து விட்டு விரைந்தோம் சுந்தர்லால் பகுணா அவர்களை சந்திக்க… அடர்ந்து உயர்ந்த மரங்கள் எல்லாம் எங்களுடன் பேசுவதாக கற்பனை செய்து கொண்டோம்.
மிகச்சரியாக சுந்தர்லால் பகுணா அவர்களின் பக்கத்து வீட்டின் மாடிபடியேறி சென்றுவிட்டோம்.
பத்து ஆண்கள்..
ஏழு பெண்கள் ..
அனைவரும் வேற்று மாநிலத்தவர்கள் வேறு …
அந்த வீட்டின் பெரியவர் என்ன நினைத்தாரோ…நானே வருகிறேன் என்று சுந்தர்லால் பகுணா அய்யாவின் வீட்டிற்கு கூட்டி வந்து சேர்த்தார்.மாடியில் முகப்பில் காத்திருந்தோம்… அந்த மாடி முழுக்க வண்ண வண்ண பூக்கள் பூத்து தொங்கியது.அத்தனை நிறம்,அய்யா வெள்ளை வண்ண ஆடை உடுத்தி வந்தார்,அறிமுகப்படுத்தி கொண்டோம்.கிட்டதட்ட சிவராஜ் மற்றும் பீட்டர் அண்ணா ஆகியோரின் 15 வருட கனவு இது,வெறும் புகைப்படமாக காந்தி,சுந்தர்லால் பகுணா அவர்களின் புகைப்படங்களை நிகழ்ச்சிக்காக பிரிண்ட் எடுப்பதும் சட்டகத்தில் அடைப்பதும் பின் அவற்றை அறையில் ஒட்டி வைத்து பாதுகாப்பதும் எங்களுக்கு மரபு போல் உள்ளது.தன் சம்பளப்பணம் முழுவதையும் இது போன்ற குக்கூவின் சிறிய சிறிய வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் அடிக்க கொடுத்த கெளதமியும் சுந்தர்லால் அய்யாவினை பார்க்க வந்திருந்தார்கள்.
கண்கள் இடுக்கி இடுக்கி எங்களை உற்று நோக்கினார் அய்யா,என்னை பார்க்கவா இவ்வளவு தூரம் என ஆச்சர்யத்துடனும் பெரிதும் தயக்கத்துடனும் பேசினார்.எங்கள் நண்பர்கள் கெளசிக் மற்றும் அருணிமா இருவரும் நாங்கள் பேசுவதை மொழிபெயர்த்து சொன்னார்கள். தும்பி சிறுவர் மாத இதழில் வந்த அம்மா மற்றும் அய்யாவின் புகைப்படத்தை பார்த்து எங்களை அடையாளம் கண்டுகொண்டார்கள்.ஷெரின் ஏஞ்சலா எனும் எங்கள் உற்ற நண்பரே இந்த பயணத்திற்கும் அய்யாவினை பார்ப்பதற்கான ஏற்பாடுகளை உருவாக்கி கொடுத்தார்கள்.அவர்கள் சென்ற முறை வந்த போது குக்கூ காட்டுப்பள்ளி மற்றும் தும்பியினை பற்றி சொன்னது அவர்கள் மனதில் நன்கு பதிந்து போயிருந்தது.இப்பொழுது இன்னும் தளர்வாக மிக உரிமையுடன் பேசினார்கள் .
சுந்தர்லால் பகுணா அய்யா எங்கள் ஓவ்வொருவரின் துறை மற்றும் ஆசை,கனவு குறித்து மிக ஆர்வமாக கேட்டார்,மதுரை என்ற ஊர் பேர் சொன்னதும் ஜெகந்நாதன் அய்யாவை பற்றி மீண்டும் மீண்டும் கேட்டார்.அவர் தவறிவிட்டதை இவர் அறியவில்லை என்றே எங்களுக்கு பட்டது.அம்மா வந்ததும் தான் உற்சாகம் களை கட்டியது,ஒவ்வொருவரின் முகம் பார்த்தும் அவர்களின் வேலை குறித்தும் கேட்டு பெரும் மகிழ்வு கொண்டார். நீங்கள் எங்களை கண்டு எவ்வளவு மகிழ்ச்சி கொள்கீறீர்களோ அவ்வளவு நாங்களும் உங்களை பார்த்து மகிழ்வதாக கூறியது எங்கள் அனைவரயும் மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.நூற்பு ஆடைகள்,அம்பரம் பரிசுப் பெட்டி, வாணி அக்கா செய்து கொண்டுவந்த பனை ஓலை பொம்மைகள்,தன்னறத்தின் ஒவ்வொரு புத்தகம் என ஒவ்வொன்றை பற்றி சொல்ல,அவர்களின் அனுபவ பதிவேட்டில் இருந்து எங்களுக்காக மிக நல்ல அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.வாணி அக்கா கொண்டு வந்த பனை ஓலை பறவை,எத்தனை தூரம் தாண்டி என்னை சந்திக்க வந்திருக்கிறது என அய்யா மகிழ்ந்து கூறினார் .
அம்மாவிடம் சொல்ல விசயங்களும் பகிர்ந்து கொள்ள அனுபவங்களும் நிறைய இருந்தன.வெடிச் சிரிப்பும் சிறு குழந்தையின் பூரிப்பும் அவர்கள் முகத்தில் கடைசிவரை குறையவில்லை.
பிரேம் அம்மா மற்றும் அய்யாவின் கைகளினை சேர்ர்த்து கொள்ள சொல்லிவிட்டு ஒரு தாலாட்டு பாடினார்,நெக்குருகி போனோம்.அருணிமா தன் பங்கிற்கு ஒரு கபீர் பாடல் பாடினார்.குக்கூ காட்டுப்பள்ளியின் கனவு அதன் செயல்பாடுகள் அவற்றுக்கான பூரண ஆசியும் அவரிடம் கேட்டு பெற்று கொண்டோம்.நாங்கள் எந்த பொருளை கொடுத்தாலும் அதை வணங்கி வாங்கி கொள்ளும் அய்யாவின் அன்பு,காந்தி,வினோபாவின் சொற்கள் மற்றும் இயற்கையை ஒட்டிய எளிய வாழ்வு இவற்றை குறித்தே அவரின் கவனம் இருந்தது.
காந்தியடிகள் காட்டிய பாதையில் செல்கீறீர்கள் உங்கள் வாழ்வு சுபம் தான் மீண்டும் மீண்டும் அம்மா கூறியதே அந்த வார்த்தைகளுக்கு இன்னும் எங்களை தகுதியாக்கி கொள்ள மனசு வைராக்கியம் பூண்டது.அருணிமா இடைவிடாமல் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அம்மாவிற்கு தொலைபேசியில் பேசிவிட முயற்சி செய்தார்,கொஞ்ச நேரத்தில் அருணிமாவை காணோம். சிறிது நேரத்தில் அந்த நடுங்கிய குரலை கேட்டோம் கிருஷ்ணம்மாள் அம்மாவின் குரல் கேட்டு நாங்கள் அனைவரும் பரவச குரல் எழுப்பினோம் . அய்யாவின் மனைவி அலைபேசியை வாங்கியவுடன் ”ஜெய் ஜெகத்” என்றார்.அய்யாவோ ஜெகந்தநாதன் அவர்களின் மரண செய்தியால் ,சற்று நிலைகுலைந்து போய் விட்டார். உங்களின் படைப்புகள் குறித்தும் நாங்கள் பேசினோம் மேலும் தன்மீட்சி புத்தகத்தில் உங்களுக்கான பிரார்த்தனையுடன் அவரின் கையெழுத்தை பெற்று கொண்டோம்,விடை பெற்றோம்.
அனைவரும் அய்யா வீட்டினை விட்டு கொஞ்சம் தூரம் நடந்து போயிருப்போம்,ஒரு குரல் எங்களை அழைத்தது திரும்பி பார்த்தால் அந்த பக்கத்து வீட்டு பெரியவரின் குரல்,எல்லோரும் தங்கள் வீட்டிற்கு வந்து செல்ல அன்புக் கட்டளையிட்டார்.தயங்கி தயங்கி உள்சென்று உட்கார்ந்தோம்,பெரிய வரவேற்பு அறை அனைத்து பொருட்களும் கலை மதிப்பு மிக்கவையாகவும் அதிக விலையானது போல தோன்றியது.அனைவருக்கும் தண்ணீர் கொடுத்தார்கள்,ஒரு குட்டி பாப்பா இருந்தால் எங்களை பார்த்து தயங்கினால்.பெரியவரின் பேத்தி அது ,அப்புறம் பாட்டி வந்தார்.
அந்த குழந்தையின் ஓவிய புத்தகம் எப்படியோ எங்களுக்கு கிடைக்க அது எங்களை வீட்டுடன் இணக்கமாக்கியது .பிரேம் அந்த பாப்பாவுடன் நிமிடத்தில் ஒன்றி விட்டான்.பின்னர் டீ வந்தது,தும்பியின் புத்தகங்களை அவர்களிடம் காட்ட மேலும் சில ஓவிய புத்தகங்கள் உள்ளிருந்து வர,கலை கட்டியது உற்சாகம்.பின்னர் எங்கள் முகம் பார்த்தோ என்னவோ திண்பண்டமும் வந்து சேர்ந்தது.அந்த குட்டி பாப்பாவின் அம்மாவும் வந்து எங்களுடன் கலந்து கொண்டனர்.ஒரு குடும்ப புகைப்படம் எடுத்து கொண்டோம்,முகவரி பரிமாறிக்கொண்டோம்.நெகிழ்வாக முடிந்தது தருணம்.
அன்று இரவு நண்பரின் வீடு திரும்பி ஒரு 5 மணி நேரம் தூங்கினோம்,மீண்டும் டெல்லி நோக்கி ரயில் பயணம்,மனசு எல்லாம் சந்தோச ஊஞ்சலாட யாரை பார்த்தாலும் எங்களுக்கு சந்தோசம்…ஆனால் எல்லோர் கண்களுக்கும் நாங்கள் அன்னியமாக பட்டதாகவே உணர்ந்தோம்.அது குறித்து நாங்கள் கவலைபட வில்லை.இரயில் டோலக் வாசித்து கொண்டு மிக அழகான குரலில் பாடிக்கொண்டு வந்த 20வயது மதிக்கதக்க பையன் அவரை விட மற்றொரு சின்ன பையன் ஜால்ரா தட்ட,அவரின் குரலில் அத்தனை வசீகரம்.நினைவெல்லாம் எங்கோ செல்ல,பயணம் முழுக்க கைகளிலேயே வைத்து இருந்த முகங்களின் தேசம் புத்தகத்தில் வந்த ஆல் கட்டுரை ஞாபத்திற்கு வர நண்பர்களுக்கு தேடி எடுத்து அந்த பக்கத்தை எடுத்து கொடுத்துவிட்டு,வாசித்து முடிக்கும் வரை அவர்களின் முகத்தையே பார்த்து கொண்டு வந்தோம்.
சிவகுரு ஒரு கட்டத்தில் கேவி அழுதது,கெளசிக் அதை வெளிக்காட்டாமல் அடுத்த கட்டுரைக்கு தாவி சென்றார் . அப்படி பல ஞாபங்களை அந்த புத்தகம் தூண்டிவிட்டது.பழைய டெல்லியினை சுற்றி பார்த்தோம் ,சைக்கிள் ரிக்சாவில், எலக்ரிக் வண்டியில் என வித விதமாக அந்த பழைய தெருக்கள் வழியே வலம் வந்தோம்.கழுகு,பட்டம் இந்த இரண்டும் இல்லாத வானத்தை பார்க்கவே இல்லை. நல்ல வித விதமான சாப்பாடு பரோட்டாவில் அத்தனை வகை அன்று தான் சாப்பிட்டோம்.அத்தனை சிறிய இடுக்கான இடத்தில் எப்படி இப்படி சாப்பிட்டு இருக்கிறார்கள் என பார்க்கவே திகைப்பாக இருந்தது.முதல் நாள் சாப்பிட்ட பயர் பீடாவை பற்றி சொல்ல மறந்து போய்விட்டோம்.பெரிய மசூதிக்கு சென்றோம்,சடாகோ கொக்கினை அனைவரும் உர்கார்ந்து செய்து பிரார்த்தனையில் வைத்தோம்.அத்தனை பிராமண்டத்தை விடவும் லாகவகமாக பட்டம் விடும் சிறுவன் வாய்பிளக்க வைத்தான்.ஒவ்வொரு நிகழ்வோ பயணமோ அதில் ஒற்றை பாடல் எங்கள் அனைவரையும் ஈர்த்து இழுத்து வைக்கும்,இந்த பயணம் முழுக்க மேகதூதம் எனும் பாடல் எங்களுடன் தொடர்ந்து வந்தது…
நேரம் செல்ல செல்ல மிக சோர்ந்து போனோம்,டெல்லி விமான நினையத்திற்கு வந்து சேர்ந்தோம் ஒரு வழியாக…
விமானத்தினை விட மெட்ரோ ரயில் மிக கவருவதாக இருந்தது .பெரிய மூட்டை முடுச்சுகள் இல்லை எனினும் திரும்புதல் ஏனோ ஒரு வித தளர்வை உண்டாக்கியது. இரவில் சின்ன வயத்தில் இருந்து பார்த்த அந்த விமான ரெக்கையின் ஒளி மனசை ஒரு நிமிடம் வியப்பில் ஆழ்த்தியது. நடுஇரவில் சென்னை வந்து சேர்ந்தோம்.சென்னை விமான நிலையத்தில் பொருட்களை திரும்ப எடுக்கும் இடத்தில் யாருமே இல்லாமல் காந்தி தன்னந்தனியாக தமிழில் உரையாடி கொண்டீருந்தார்.காந்தியின் புகைபடங்களுடன் கூடிய அந்த சிறிய அரங்கம் எங்களை இளைப்பாற செய்தது.பழைய தொலைபேசி ஒன்று இருந்தது,அதில் காந்தியின் குரல் கேட்கும் என்ற நிமிடத்தில் எல்லோரும் அதை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.
இந்த பயணத்தில் எங்களுடன் பயணித்த கெளதமி,அருணிமா,பாரதி,மைவிழி,ரேணு,வாணி அக்கா,பியாஸம்,கெளசிக், அருண்,முத்து,ராகுல்,பிரேம்,சிவகுரு ,சிவராஜ் அண்ணா,புகைப்பட கலைஞர்கள் ராஜாராம் மற்றும் அய்யலு குமரன் இவர்கள் அனைவருக்கும் பெரும் அன்பும் நன்றியும்… உங்களின் பூரண இருப்பையும் உணர்ந்தோம்…
தன்மீட்சி
இயற்கைக் கடலைமிட்டாய்
நம்பிக்கையின் ஒளி
செயல்படுவோர் அளிக்கும் மீட்பு
நம்பிக்கை, ஸ்டாலின் கடிதம்
தன்மீட்சி
ஆயிரங்கால்களில் ஊர்வது
தன்னறம் நூல்வெளி
குக்கூ – தன்னறம் – ஒரு கடிதம்