யானை – அனோஜன் பாலகிருஷ்ணன் சிறுகதை
அன்புள்ள ஜெ
அனோஜனின் யானையை வாசித்தேன். அதன்பிறகே அவரையும் அவர் கதையையும் பற்றிய கடிதங்களை வாசித்தேன். பலகோணங்களில் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. முக்கியமான ஒரு அம்சத்தைச் சுட்டிக்காட்டவே இதை எழுதுகிறேன். யானை பௌத்த மரபில் ஒரு முக்கியமான உருவகம். பௌத்தமெய்ஞானமே யானையாக பெரும்பாலான கதைகளில் சொல்லப்பட்டுள்ளது. கருவியிலேயே மாயாதேவியின் வயிற்றுக்குள் புகுந்தது அந்த யானைதான். அதன்பின் கௌதமபுத்தராக சித்தார்த்தன் வந்து நிற்கையில் உலகஞானம் அனைத்தும் யானையாக வந்து அவரைப் பணிகிறது. பௌத்தச் சிற்பக்கலையில் யானை வெவ்வேறுவகையிலே வெளிப்பட்டுள்ளது
இந்தப்பின்னணியில் சுயந்தன் கனவிலே கண்டு ஆசைப்படும் அந்த யானை என்ன? அது ஒரு மெய்ஞானமா? அல்லது பௌத்தமெய்ஞானத்தின் ஒருவடிவமா? அத்தனை வன்முறை, அத்தனை துக்கம் அனைத்தையும் தாண்டி அவனால் அதைக் கண்டுகொள்ள முடியுமா? ஒருபக்கம் வன்முறை. இன்னொரு பக்கம் பௌத்தம். இதிலே எதை அவன் தேர்வுசெய்வான்? அந்த பௌத்தமேகூட எதையும் சுட்டிக்காட்டும் ஆற்றல் அற்றதாக, சுட்டுவிரலிழந்து குறைபட்டதாகவே இருக்கிறது. சுயந்தனின் இழப்புகள் எல்லாம் அந்த யானையை அவன் தேடிச்சென்றுகொண்டே இருப்பதனால்தான். ஆனாலும் அவனுடைய தேடல் அழியவில்லை.
இந்தக்கதையில் பௌத்தப் படிமைகளில் ஒன்றான தாமரையும் குறிப்பிடப்படுகிறது. அவன் கடைசியாக ஒரு பௌத்த விகாரைக்குள் சென்று ஒரு பௌத்த மெய்ஞான வரிகளை கேட்கிறான். அவனுக்கு அவை எப்படிப் பொருள்படுகின்றன? “நிகழ்காலம் என்பது நாம் உணர்ந்து கொள்ளும் ஒரு தருணம் மட்டுமே- அடுத்த கணமே அது இறந்து போன ஒரு கணம். எதிர்காலம் நம்முன்னால் தேய்ந்து செல்வதை உணரும் ஒரு வெளிப்பாட்டுத் தருணமே நிகழ்காலம். அதை ஒரு நிலையின்மையாக மட்டுமே உணரலாம். அடுத்தடுத்த இருகணங்களிலும் மனிதன் ஒருவனாக இருக்க முடிவதில்லை” இதற்கு என்ன பொருள்? அந்தக் குட்டியானையின் குரல்தான் இதுவா? “பின்னால் குட்டி யானையின் பிஞ்சு பிளிறலை ஒரு கணம் உணர்ந்தான். பின்னர் உணரவேயில்லை”.அந்தக் கணம் இறந்தகாலமாக ஆகிவிட்டது.
ஆர்.பிரபாகர்
அன்புள்ள ஜெ
அனோஜனின் கதை ஒரு தீவிரமான மனநிலையிலேயே சென்றுகொண்டிருக்கிறது. போரை வெறும் வன்முறை, இழப்பு, துக்கம் ஆகியவை மட்டுமாகக் காணும் ஒரு தலைமுறை அங்கே வந்துவிட்டது. போரை உருவாக்கி நடத்திய அவர்களுக்கு முந்தைய தலைமுறை உருவாக்கிய கொள்கைகள் எதிலும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை .நாட்டமும் இல்லை. தப்புசரி கண்டுபிடிப்பதும் தர்க்கம்செய்வதும் அவர்களுக்கு அர்த்தமில்லாதது. இத்தகைய ஒரு தலைமுறை முந்தைய தலைமுறைக்கும் அவர்களின் அரசியலை தூக்கிச்சுமப்பவர்களுக்கும் எவ்வளவு பதற்றத்தை அளிக்கும் என்பதை உணரமுடிகிறது. அந்த அர்த்தமில்லாமையை, எல்லாம் கடந்துபோகும் கனவுத்தன்மையை மிக அற்புதமாகச் சொன்ன கதை இது. இந்தக்கதைக்கும் இதற்கு முன்னர் எழுதப்பட்ட ஈழப்போர் கதைகளுக்கும் என்ன வேறுபாடு? அந்தக்கதைகள் எல்லாம் அந்தப்போர் நிகழ்ந்த காலகட்டத்திலேயே நின்றுகொண்டு அதன் தப்புசரிகளை சர்ச்சை செய்பவை. இது அந்தப்போர்காலம் கடந்துசென்றுவிட்டபின் உருவான வெற்றிடத்தில் நின்று பேசும் கதை. ஒட்டுமொத்தமாக அனைத்தையும் பார்க்கும் கதை. ஆகவே இன்னும் ஆழமானதாக உள்ளது.
இந்தக்கதையில் உள்ள பகடி மிகமிக ஆழமானது. போகிறபோக்கில் அது வந்துசெல்கிறது. திடீரென்று ஒன்றை கவனித்தான். அனைத்து பிரார்த்தனைகளும் வந்த பிரச்சினைகளுக்காக அல்ல. வரக்கூடும் என அஞ்சப்படும் பிரச்சினைகளுக்காகவே. ஒரு கசப்பான வரி. அவ்வளவு அழிவுக்குப்பின்னரும் மேலும் ஒன்றும் நிகழாமலிருக்கவே பிரார்த்தனை. “போராட்ட இடத்திலிருந்து வெளியேறி சைக்கிள் நிறுத்தத்துக்கு வந்தான். மஹிந்த ராஜபக்சவின் புகைப்படம் இரும்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டு ‘நீடுழி வாழ்க’ என்ற தமிழ் எழுத்துக்களால் அலங்கரிக்கப்பட்டு நாட்டப்பட்ட பதாகையை கண்ணுற்றான்” என்ற வரியிலிருக்கும் கசப்பு உடனே மறைந்துவிடுகிறது. சைக்கிளை எடுத்துக்கொண்டு நேர் வீதியில் செல்லத் தொடங்கினான்”.
நேர்வழியில் செல்லும் கதை இது.
குமார் முத்துச்சாமி
அன்புள்ள ஜெ
தப்பாக நினைக்கவேண்டாம். அனோஜனின் கதையை வாசித்தபின் ஈழத்தவரின் எதிர்வினைகளை வாசித்தேன். ஒன்று தோன்றியது. எந்த இலக்கிய வாசிப்பும் இல்லாமல், பெரிய அரசியல் அக்கறையும் இல்லாமல், ஆனால் துணிந்து கருத்துச்சொல்லும் ஆஃப் பாயில் பெண்கள் இங்கைவிட ஈழச்சூழலில் ரொம்ப அதிகம். அவர்களின் குரல்தான் கூடி ஒலிக்கிறது. ஈழத்திலிருந்துகொண்டு கதை எழுதுவது ரொம்ப ரொம்ப கஷ்டம்
ஜெயக்குமார்..