சகடம் – சிறுகதை விவாதம் – 2

நக

ஒரு சிறுகதை விவாதம்

பிரியத்துக்குரிய நாகப்ரகாஷ் நலம்தானே,

எழுத்தாளனாக உருத்திரள முயலும் இந்த காலம் இருக்கிறதே அதுவொரு   இனிய துயர், உள்ளே இருக்கும் ஊற்றின் அதை மூடி நிற்கும்  இறுதிக் கல்லை அடித்துப் புரட்டும் வரை சோர்வுகள் குழப்பங்கள் எல்லாம் இருக்கவே செய்யும், குறுக்கு வழியே இல்லை, நமது தலையால் நாமே முட்டிப் புரட்டி அகழ்ந்து பறிக்க வேண்டிய பாறை அது. வெற்றி பெற வாழ்த்துக்கள். :)

முதலாவதாக மயிலாடுதுறை பிரபு எழுதிய புள்ளரையன் கோவில் சிறுகதையை வாசித்து விடுங்கள்.

https://solvanam.com/2019/03/20/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/

மற்றொரு புதிய கதை ஒன்றை  உங்கள் கதையுடன் இணைத்து வாசிப்பதன் வழியே, ஒன்றின் ஒளியைக் கொண்டு இன்னொன்றை புரிந்து கொள்ள இயலும் வழிமுறையே அன்றி, ஒன்றை உயர்த்தி ஒன்றை தாழ்த்தும் நோக்கில் அல்ல. மேலும் உங்கள் கதைகளுக்கு  [நீ எழுதி காட்டுவியாம் நான் கிழிச்சு தொங்க விடுவேனாம் வகை விமர்சகனாக] ‘மேலாக’ நான் நிற்காமல், உங்கள் கதையுடன் ஒரு வாசகனாக,அதன் தலைப்பு முதல் முற்றுப்புள்ளி வரை விரிவானதொரு   உரையாடல் நிகழ்த்த இந்த ஒப்பீடு உதவும்.

முதல் பார்வையில் உங்கள் கதை அசோகமித்திரன் கதையுலக்குக்கு நெருங்கி நிற்கிறது.  சகடம் தலைப்பே சொல்லி விடுகிறது, வித விதமான மனிதர்கள் இழுத்துச் செல்லும் ‘லௌகீக வண்டி’ மீது மையம் கொள்ளும் கதை.

பரமேஸ்வரன். நடுத்தர வாழ்வை  வாரக் கூலி ஜீவனம் கொண்டு  நடத்தும் மனிதன். பள்ளி செல்லும் வயதில் அமுதன் எனும் மகன். நோய் படுக்கையில் கிடக்கும் மனைவி, சூழ சூழ கடன்.  நகையை அடமானம் வைக்க நகைக்கடைக்கு செல்கிறார் பரமேஸ்வரன்.

வழியில் ஒருவர் பணத்தை தொலைக்கிறார். கடையில்,யோகா வாத்யார் அவரது லௌகீக சிக்கலுக்கு நகை அடமானம் போட,பரமேஸ்வரன் போலவே காத்துக் கிடக்கிறார்.  லௌகீக துயர் வழியே பரஸ்பரம் இருவரும் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு புன்னகைக்கிறார்கள். [அங்கே சாலையில் அந்த பணத்தை தொலைத்த மனிதன் அவருக்கு அளிக்கும் அதே புன்னகை] .

சாலை விபத்தில் சிக்கும் மனிதர் பணத்துக்கும் மேலாக முதலில் பாதுகாப்பது அட்டைப் பெட்டிகளை . [அவற்றில் இருப்பது அவர் உறவுக்கு தேவையான மருந்து] அவர் இழப்பது பரமேஸ்வரன் போலவே கடன் பெற்ற பணத்தை. அந்த பணத்தை பரமேஸ்வரனுக்கு முன்பாக பொறுக்கிக்கொண்டு ஓடுவது பரமேஸ்வரன் போன்றதொரு ஆள்.

அமுதனுக்கு எஞ்சுவது என்ன ? அம்மா பிழைத்து விடுவாள் எனும் நம்பிக்கை. ஒரு சிறுவனின் நம்பிக்கை போன்றதொரு நம்பிக்கையை பற்றியபடிதான்,அந்த சாலை மனிதர், திருடன், யோகா வாத்தியார், பரமேஸ்வரன் அனைவரும் இந்த சகடத்தை இழுத்துக்கொண்டு செல்கிறார்கள்.

அசோகமித்திரன் கதையுலக்குக்கு நெருங்கி வரும் இந்தக் கதையில் அசோகமித்திரன் கதையில் ‘நிகழும்’ ஒன்று நிகழவில்லை .அது என்ன ? அசோகமிதரன் கதையுலகில் அழகான கதைகளில் ஒன்று. ஒரு நடுத்தரக் குடும்பம். ஒவ்வொரு பைசாவையும் கணக்கு வைத்து செலவு செய்யும் நிலையில் உள்ள குடும்பம். மூத்த மகள் திருமணம், கடன், படிப்பு செலவு என பொருளாதார சிக்கல்களால் கட்டப்பட்டு அதில் இயங்கும் குடும்பம். அந்த குடும்பத்தின் அன்றாடத்தின் ஒரு நாளை, அந்த குடும்பத்தின் அனைத்து உறுப்பினரும், எல்லைகட்டப்பட்ட பொருளாதார வெளிக்குள் நின்று எதிர்கொண்டால் மட்டுமே சமாளிக்க இயலும். அத்தகையதொரு நாளை குலைக்க வருகிறது ஒரு மஞ்சள் அட்டை கடிதம். எங்கெங்கோ சுற்றி தாமதாமாக வந்து சேர்ந்த கடிதம்.

குடும்பத் தலைவன் அந்தக் கடிதத்தை பின்தொடர்ந்து செல்கிறார். பேருந்து கட்டணம் முதல் மதிய உணவு வரை,அவர் அன்றாடத்தின் சக்கரம் அனைத்தும் அன்று குலைந்து போகிறது. அதை ஈடு கட்ட அவருக்கு,அல்லது அந்த குடும்பத்துக்கு  ஒரு வாரம் கூட தேவைப்படும்.  இந்த வாழ்க்கைக்குள் அவர் மிச்சம் கண்டு  சேர்த்து வைத்த பணத்தை போட்டு வைத்திருந்த சிட் பண்டு நிறுவனம் திவால் ஆகிப் போக, தொடர் அலைகழிப்பின் ஒரு பகுதியாக   அங்கிருந்து வந்திருக்கும் கடிதம் அது.

கதை வாசிக்கும் போது வாசகராகிய நாமும் அந்தக் கடிதத்தின் பின்னே, அங்காடித் தெரு நாய் போல, நம்பிக்கையும் நப்பாசையும் கொண்டு ஓடிக்கொண்டிருப்போம். அனைத்தும் நிராசையில் முடிந்து இரவில் அவர் வீடு வருகையில், நாளை எதிர் கொள்ளபோகும் அன்றாடம் இன்றைய இந்த நாளைக் காட்டிலும் மிக மிக இலகுவானது எனும் ஆசுவாசம் ஏற்படும்.

இந்த அம்சம் அதுதான் சகடத்தில் நிகழவில்லை.அதாவது சகடம் ஒரு நிலையை சுட்டிகாட்டி அங்கேயே நின்று விடுகிறது. மாறாக இந்த அமி கதை எதை சுட்டிக் காட்டுகிறதோ அது எத்தகையதொரு துயரமும் ஆசுவாசமும் கொண்டது என்பதை வாசகருக்கு உணர்த்தி விடுகிறது.

இரண்டாவதாக ஒரு கதையை எழுத்தாளர் எதற்க்காக எழுதுகிறார்? ஒரு வாசகன் எதற்க்காக ஒரு கதையை வாசிக்க வேண்டும் ? புள்ளரையன் கோவில் கதையை முன் வைத்து இந்த உரையாடலைத் தொடர்ந்தால், அந்தக் கதை முதல் பார்வையில் சா.கந்தசாமி அவர்களின்  கதை உலகமான ‘கதையிலிருந்து கதையை வெளியேற்றிய கதைகள்’ வகைமையை சேர்ந்தது. அந்த வடிவப் பிரக்ஞ்சையில் சா கந்தசாமி எழுதிய  நல்ல கதைகளில் ஒன்று உயிர்கள் சிறுகதை.

மாறாக சா கந்தசாமி கதைகளுக்கும்,இந்த புள்ளரையன் கோவில் கதைக்கும் பாரிய பேதம் ஒன்று உண்டு. அது. கதையில் இருந்து கதையை வெளியேற்றிய கதை எனும் பிரகடனத்திலேயே அடங்கி இருக்கிறது. சா கந்தசாமி கதைகளில் முதன்மையாக முன் நிற்பது கிராப்ட் எனும் தொழில் நுட்பமே. சகடம் கதையிலும் முன்னால் நிற்பது தொழில் நுட்பமே. முதன்மையாக ஒரு கதைக்குள் சப்டெக்ஸ்ட் என்பது அந்தக் கதை எழுதப்படுவதன் வழியே திரண்டு வரும் ஒன்று. மாறாக இந்த கிராப்ட் விளையாட்டு அந்த சப் டெக்ஸ்ட் என்பது திரண்டு வரும் ஒன்றாக இல்லாமல், ஒளிஞ்சான் கண்டான் விளையாட்டாக பல சமயம் மாற்றி விடும். சகடம் கதையும் அந்த ஆபத்தில் வந்து விழுந்திருக்கிறது.

இந்த புள்ளரையன் கோவில் கதை சமீபத்தில் நிகழ்ந்த அழகிய அதே சமயம் முக்கியமான கதைகளில் ஒன்று. கதை சொல்லி கதையை சொல்லத் துவங்கும் போதே தான் அன்னைப் பாசம் எனும் வளையத்துக்குள் சிக்கி நிற்பதை சொல்லி விடுகிறான். தர்க்கம் எனும் வளையத்தின் எல்லைக்குள் சிக்கி நின்று விடக்கூடாது என அந்த வளையத்தை உடைக்கும் எழுத்து உலகுக்குள், கணக்குகளை உதறி கற்பனையை விரிக்கும் உலகை தனது பயண வழியாக தேர்வு செய்கிறான்.

இப்படி ஒரு வளையத்தை முறித்த கணமே கதை சொல்லி தான் காணும் ஒவ்வொருவரும் தங்களால் மீற முடியாத வெவ்வேறு வளையங்களுக்குள் வாழ்வதைக் காண்கிறான். கதை சொல்லியின் நண்பன் விக்கி தன்னிறைவு எனும் வளையத்துக்குள் நிற்கிறான். அவன் எதற்க்காக வேலை தேடி சென்னை வர வேண்டும்? செத்துப் போகும் அந்த வீ ஐ பி ஒரு போதும் அவரால் மீற முடியாத அன்றாட வளையத்துக்குள் வைத்தே கொல்லப் படுகிறார். கோவில் பெரியவர் ஆறு தலைமுறைகளாக அந்த கோவிலுக்கு சேவகம் செய்தவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர். பதின் வயதில் ராணுவத்தில் சேர்ந்து விட்டவர். இப்போது  ஏன் கால் நூற்றாண்டுக்கும் மேல் இந்த கோவில் எனும் கலாச்சார வளையத்துக்குள் நிற்கிறார் ?

இது என்ன வாழ்வு? நமக்கு லபித்த இந்த வாழ்வு சாபமா வரமா ? இந்த வினாவில் மையம் கொள்ளும் கதை. இந்த வினாவின் மிஸ்டிக் தன்மையை அந்த கருடன் வருகை கொண்டு  அடிக்கோடிடுவதன் வாசகரை அந்த மிஸ்டிக் வினாவில் முட்டி திகைத்து நிற்க செய்கிறது இந்த சிறுகதை. அனைத்துக்கும் மேலாக  ஒருசொல் மிகையின்றி இக் கதைக்குள் கூடி வந்திருக்கும் கவித்துவம் மிக அழகானது.  விரிந்த கைகளில் வானத்தைத் தாங்கி வாகனம் என அமர்ந்திருந்தார் கருடன் எனும் வரி, இறுதியில் வந்தமரும் கருடன் சித்திரத்துடன் இணையும் போது அது அளிக்கும் எழுச்சி அபாரமானது.  இந்த உலகத்தை புள்ளரையன் கோவில் எனக் கொண்டால்,அதில் அந்த பெரியவர் போல காரணமே அறியாமல் அந்த வளையத்துக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம். இந்த வாழ்வு சாபமா? தெரியாது. வரமா அதுவும் நமக்குத் தெரியாது வரமென்றால் அதை சத்தியம் செய்து சொல்லும் அந்தப் பேராற்றலை நாம் அறியவே போவதில்லை. அந்த ஆற்றலை ஒரு கணம் காண நேர்ந்தவன் இந்த வளையத்துக்குள் இல்லை.  எத்தனை மிஸ்டிக்கான கதை.  இதில் மொழிப் போதாமை,வடிவப் போதாமை, கூறுமுறை சிக்கல் என மூத்த எழுத்தாளர்கள் ஏதேனும் கண்டு சொல்ல இயலும். அந்த சிக்கல் எல்லாம் இந்தக் கதை குறி வைக்கும் மிஸ்டிக் அம்சத்தோடு இணைந்து என்பதே இந்தக் கதையின் அழகு.

ஒரு கதை எதற்க்காக எழுதப்படுகிறது என்றால் பொதுவாக பிறர் அகத்தைத் தீண்டாத தனித்தன்மை கொண்டதொரு சிக்கல் அந்த எழுத்தாளின் அகத்தை தீண்டுகிறது என்பதால்தான். ஒரு கதை எதற்க்காக வாசிக்கபடுகிறது என்றால் பொதுவாக பிறரால் சொல்ல இயலாத ஒரு எழுத்தாளன் மட்டுமே கண்டு சொல்லத் தக்க தனித்துவமான சிக்கல் ஒன்று கதைகளில் உண்டு என்பதால் தான்.

சகடம்  எங்கே வந்து நிற்கிறது என என் உரையாடலை பின் தொடர்ந்தால் உங்களுக்கும் பிடி கிடைக்கும்.

என்றும் நட்புடன்

கடலூர் சீனு.

அன்புள்ள ஜெ

நாகப்பிரகாஷின் சகடம் கதையின் சிக்கல்கள் என்ன என்று எனக்குத் தோன்றியதைச் சொல்கிறேன்

ஒன்று: கதையின் தலைப்பில் மட்டுமே க்ளூ வைத்து தொடர்பற்ற நிகழ்ச்சிகளை மட்டுமே வரிசையாக அடுக்கி உருவாக்கும் இத்தகைய கதைகளின் காலம் கடந்துவிட்டது. சுந்தர ராமசாமி அவருடைய பல்லக்குத்தூக்கிகள் தொகுதியில் சில கதைகளை இவ்வாறு எழுதிப்பார்த்திருக்கிறார். அவற்றுக்கு இன்று மதிப்பு ஏதும் இல்லை. அந்தக்கதைகளின் தேர்ச்சி கூட இல்லாமல் இந்தக்கதை முயற்சி செய்யப்பட்டிருக்கிறது

இரண்டு : இந்தக் கதையின் விவரிப்பில் தேவையில்லாத நுண்தகவல்கள் உள்ளன. அதாவது அந்த நாயின் சித்தரிப்பு. அந்த விபத்து சித்தரிப்பு ஆகியவை. இவற்றை இவ்வளவு துல்லியமாகச் சொல்ல இரண்டு காரணங்கள்தான் இலக்கியத்திலே உண்டு. ஒன்று நாச்சுரலிசக் கதை. அதிலே கதை நிகழ்வதே அந்தக் காட்சியிலேதான். அதிலேதான் எல்லா அர்த்தமும் உள்ளது. இரண்டு, ரியாலிசக் கதை. அதிலே அந்தக்கதாபாத்திரத்தின் மனம் அவ்வாறு விட்டேத்தியாக வேடிக்கைபார்க்கிறது. அந்த உணர்ச்சியைச் சொல்ல அந்தச் செய்திகள் உதவுகின்றன. அந்த உணர்ச்சிகளின் குறியீடாகவும் அவை அமைகின்றன

அந்த இரண்டு அம்சங்களும் இல்லாமல் கண்ணில் பட்டிருக்கின்றன என்பதனாலேயே நுணுக்கமான காட்சிகளை அளித்தால் வாசகனின் கவனம் சிதறுண்டு அவன் ஏதேதோ தேவையில்லாமல் கற்பனைசெய்துகொண்டு கதையின் உள்ளொருமையைத் தவறவிடுவதற்கே வாய்ப்பு. அதுதான் இந்தக்கதையிலும் நிகழ்ந்திருக்கிறது

அதோடு கடைசியாக ஒன்று. ஒரு கதைக்குள் ஒரு கருவை ஒளித்துவைத்து அதை வாசகன் சென்றடையமுடியாமல் அலைபாயும்படி நிறைய தகவல்களைச் சொரிந்து வைத்திருந்தால் அது நவீனக்கதை அல்ல. இந்தக்கதையிலே உள்ள அந்த உறவுமுடிச்சு மிகச்சாதாரணமானது. அதை கதைநிகழ்ச்சிகளால் மறைத்திருக்கிறார் ஆசிரியர். ஆனால் நமக்குத்தேவை கதைதரும் செய்திகள் வழியாக வாசகன் சென்று கண்டடையும் ஒரு வாழ்க்கைசார்ந்த உண்மைதான்.

எஸ்.பாஸ்கர்

முந்தைய கட்டுரைமீண்டும் ஒரு தனிமை
அடுத்த கட்டுரைஅனோஜனின் யானை – கடிதங்கள் – 3