மரபைக் கண்டடைதல்

emer

மதிப்பிற்குரிய ஜெ,

நலமா.

மரபை விரும்புவதும் வெறுப்பதுவும் எப்படி? சென்னை கட்டண உரையின் தலைப்பிற்காகவே நான் கட்டாயம் வர வேண்டும் என்று முடிவு செய்தேன். மிக அற்புதமான உரை. உங்களையும் அருண்மொழி மேடம் அவர்களையும்  சந்தித்ததில் மகிழ்ச்சி.

மரபினை பற்றி ஒரு ஒட்டுமொத்த பார்வையை   அளித்தது  இவ்வுரை.இரண்டு பகுதிகளாக அமைந்தது மிகவும் நன்றாக இருந்தது.

நம் மரபினை பற்றிய எனது புரிதல்கள் இன்னும் விரிவடைந்தன. நான் இலக்கியக் கூட்டங்களுக்கு வருவது இதுவே முதல் முறை. சிறுவயதிலிருந்து அதிகம் வாசித்திருந்தாலும் இலக்கியவாதிகளின் தொடர்பு எனக்கு இருந்ததில்லை. எங்கள் பகுதியில் அதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருந்ததில்லை. எனவே இந்த உரை எனக்கு மிகுந்த மகிழ்வை அளித்தது. இந்த சென்னை உரைக்காக வேலூரில் இருந்து புறப்பட்டது முதலே மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன்.

அதே ஆர்வம் உங்கள் உரை முழுவதும் எனக்கு இருந்தது. நள்ளிரவு தாண்டி வீடு வந்து சேர்ந்தோம். முழுக்க முழுக்க உங்கள் உரை மட்டுமே என் மனதில் நிறைந்திருந்தது.      நம் மரபில் தந்தையின் இடம் எது ?    சுந்தரராமசாமி பாலகுமாரன் ஜெயமோகன்  போன்றவர்களின் அப்பாக்கள்  எப்படி இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நீங்கள் சொன்ன போது தான் எனக்கு தெரிந்தது.இலக்கியத்தில் தமிழ் சினிமாவில் அம்மாக்கள் தந்தைகளுக்கு மாற்றாக வேறு வடிவில்  இருந்திருக்கிறார்கள்.

பெருங்கற்கால தூண்கள் அத்வைதம் மரபு ,தெய்வ வழிபாடுகள் நாட்டார் மரபுகள் தேர் திருவிழா என்று ஒட்டுமொத்த இந்திய மரபையும் இரண்டரை மணி நேர உரையில் மிக அற்புதமாக கூறினீர்கள்.     இலக்கியத்தில் ..மொழியில் எவ்வாறு நம் மரபு மாறிக் கொண்டே வந்திருக்கிறது.   ஐம்பதாண்டுகளுக்கு முன்பு இருந்த மொழியும், மணிப்பிரவாள நடையையும் திராவிட இயக்கங்களால் உண்டான தூய தமிழும் இலக்கியத்தில் எப்படி மாறிக் கொண்டே வந்தன என்பதையும் நம் மரபுடன் இணைத் தீர்கள்.

kal

இன்றைக்கு நாம் உண்ணும் எந்த உணவையும் நூறாண்டுகளுக்கு முன்பு இங்கு வாழ்ந்த நம் முன்னோர் எவராலும் உண்டு செரிக்க இயலாது .அதைப் போன்றதே நம் உடைகளும்.ஆனால் இவை எல்லாவற்றிலும் ஏதோ ஒரு தொடர்ச்சி இருந்து கொண்டு தான் இருக்கிறது என்றீர்கள்.      இந்திய தேசத்தின் பல்லாயிரம் சிறு தெய்வங்களிலும், ஆலயங்களிலும்  நம் மரபு எப்படி பிணைந்துள்ளது என்று இந்த உரை மூலம் அறிந்து கொண்டேன்.காஞ்சி மடமும் ராமகிருஷ்ணரும் எப்படி நம் மரபில் இருந்து வேறு வடிவங்கள்  என்று புரிந்தது.

இந்த தலைப்பு எனக்கு மிகவும் ஈர்ப்பாக இருந்ததற்கு காரணம் நான் வளர்ந்த சூழலே.எங்கள் குடும்பம் CSI கிறிஸ்தவ குடும்பம். சில தலைமுறைகளாக கிறிஸ்தவர்களாகவும் , தேவ ஊழியர்களாகவும் இருப்பவர்கள். மதுரை அரசரடி இறையியல் கல்லூரியில் என்னுடைய சித்தப்பாக்களும் பெரியப்பாக்களும் மாமாக்களும் முக்கிய பணிகளில்  இருந்தவர்கள் இப்பொழுதும்  சிலர்  இருக்கிறார்கள் .

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சிறிய  மலைப்பகுதியில்.என் தந்தை  திராவிட இயக்கங்கள் மீது பற்று கொண்டவர் அதே நேரத்தில் ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பர். சிறுவயது முதற்கொண்டே இத்தனை கருத்துக்களும் இத்தனை மரபுகளும் என்னை சூழ்ந்தே இருந்தன.           வீட்டிற்குள் விவிலியமும்..கீர்த்தனைகளும் எப்பொழுதும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.  வீட்டை விட்டு வெளியே வந்தால்  பள்ளியிலும் நண்பர்களும் ஜவ்வாது மலையில் உள்ள பழங்குடியினர். அவர்களுடைய பழக்கவழக்கங்களும் தெய்வங்களும் முற்றிலும் மாறுபட்டவை .இத்தகைய சூழலில்  எது என்னுடைய மரபு எது என்ற கேள்வி என்னை எப்பொழுதும் தொடர்ந்திருக்கிறது.

விக்கிரகங்களை வழிபடாதே என்று என்று சர்ச்சில் சொல்வார்கள் . அந்த வளாகத்தை விட்டு வெளியே வந்தால்  சுற்றிலும் பழங்குடியினர் மரங்களையும் புற்றுக்களையும் மலையையும் வழிபடுவார்கள்.இவை போக  திராவிட இயக்க கருத்துகளையும் வாசிப்பேன்.இத்தகைய மாறுபட்ட சிந்தனைகள் என்னைச் சூழ்ந்திருந்தன.

சிறுவயதிலிருந்தே எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள் அந்த மலையில் உள்ள பழங்குடியினர் . அங்கு மாடு மேய்க்கும் கிழவர்களிடமும் வயலில் வேலை செய்யும் அக்காக்களிடமும்  நல்லதங்காள் கதையையும், பாரதக் கதையையும் அர்ஜுனன் தபசும்  கேட்டே நான் வளர்ந்திருக்கிறேன்.  காட்டேரிகளும், ஏழு கன்னிமார்களும்,  முனிகளும், நாகர்களும்  வலம் வரும் கதைகளுடனே வளர்ந்தேன்.

இது தவிர கம்யூனிச சிற்றிதழ்களையும் இலக்கியங்களையும் வாசித்துக் கொண்டே இருப்பேன். எட்டாம் வகுப்பில் நான் வாசித்த   இரண்டாம் உலகப்போரின் நிகழ்வுகளாக   எழுதப்பட்ட ருஷ்ய நாவல் “பரிஸ் வசீலியெவ்  எழுதிய “அதிகாலையின் அமைதியில்” .இது எனக்கு வேறோரு உலகை பனி உறைந்த நதிகளை,நீலக்கண்கள் கொண்ட ரஷ்யப் பெண்களை..வஸ்கோவை அறியச் செய்தது.அதன் பிறகு வெண்ணிற இரவுகள்.நான் தேடும் உலகு வாசிப்பு தான் என்று என்னை உணர வைத்த எழுத்துகள் அவை.அந்த வயதில் நான் கண்ட கற்பனை உலகு ரஷ்யாவும் அதன் பனி பொழியும் இரவுகளும்,சிவந்த இலைகள் கொண்ட உயர்ந்த மரங்களும் தான்.

அந்த வேளையில்  நான் வாசித்த ஜெயகாந்தனின் விழுதுகள் குறுநாவலில் வரும் ஓங்கூர் சாமி யாரும் அவரது ஆலமரமும் எனது சிந்தனையை வேறு வழியில் மாற்றி சென்றது.      நம் மரபினை இந்து தெய்வங்களை இமயமலையை கங்கை நதியை எனக்கு என் மண்ணுடன் இணைத்து அறிமுகப்படுத்தியது யகாந்தனே.ஆண்டாள்.வள்ளலார் சித்தர்கள் என்று ஜேகே வழியாகவே அறிந்தேன்.   அதன் பிறகு. சுஜாதா,பாலகுமாரன், ஜானகிராமன்,புதுமைப்பித்தன், லாசார  நகுலன் என்று வெவ்வேறுவாசிப்புகள். மோகமுள்ளும் அம்மா வந்தாளும் இசையை நதியை பெண்ணை இம்மண்ணின் கோணத்தில் என்னுள் நிறைந்தன.கிரா எனக்களித்த மரபு வேறு.அது ஜனங்களின் கதை. லாசாரா பூஜித்த பெண் வடிவு அம்பாள் இவையெல்லாம்   எனக்கு பல வழிகளைக் காண்பித்தன.

mom1

இப்படி வெவ்வேறு வாசிப்புகள்  வழியாக  விஷ்ணுபுரத்தை வந்தடைந்தேன்.அது எனக்கு மிகப்பெரிய திறப்பாக அமைந்தது. என் எண்ணங்களில் இருந்து எத்தனையோ சிக்கல்களை விவாதித்துக்கொண்டே சென்றது உங்கள் எழுத்து.சில மாதங்கள் தொடர்ந்து வாசித்தேன்.அது வரை நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில்கள் நிறைந்திருந்தன.  அதை வாசித்த சில ஆண்டுகளுக்குப் பிறகே நான் உங்களுக்கு கடிதங்கள் எழுதினேன்.தயக்கம் தான் காரணம்.இவ்வளவு பெரிய எழுத்தாளருக்கு நான் போய் எதை எழுதுவது  ?

இந்த மனநிலை தான் உங்களை நேரில் பார்த்தபிறகும் என்னால் பேச முடியாமல் போனதற்கும் காரணம் என நினைக்கிறேன்.அரங்கத்தில் இருந்த பலரை எனக்கு உங்கள் தளம் வாயிலாகத் தெரிந்தே இருந்தது.ஆனால் எவரிடமும் பேசத் தோன்றவில்லை.    பொதுவாகவே  நான் சற்று குறைவாகவே பேசும் இயல்பு கொண்டவள் தான்.இலக்கிய அரங்குகளில் பேசும் இயல்பு இனும் வரவில்லை.

என்னுடைய கல்லூரி காலத்தில் இணையமும்,இத்தகைய இலக்கிய வட்டமும் இத்தனை விரிவான இலக்கிய அரங்கங்களையும் அறிந்து கொள்ள இயலவில்லை என்று மிகுந்த வருத்தத்துடன் நான் நினைப்பதுண்டு.     கோவை விஷ்ணுபுரம் விழாவிலும் சென்னை கட்டண உரையிலும் அதிக இளைய வாசகர்களைக் கண்டு நான் அதிசயித்துப் போனேன்.இத்தகைய இலக்கிய அறிவு கொண்ட ஒருவரைக்கூட நான் என் கல்லூரிக் காலத்தில் சந்தித்ததில்லை. நான் வாசித்தவற்றைப் பற்றி பேசக்கூட எவரும் இருந்ததில்லை. என் கல்லூரி முதலாம் ஆண்டில் கிராவின் கோபாலபுரத்தை வாசித்துவிட்டு என் தந்தைக்கு பக்கம் பக்கமாக கடிதம் எழுதினேன். ஏனெனில் அப்பொழுது அதை பகிர்ந்து கொள்ள அறிவு தளத்தில் எந்த நண்பர்களும் எனக்கு இல்லை.இலக்கிய அரங்குகள் எங்காவது இருக்குமா என்று தேடி அலைந்திருக்கிறேன்.அப்போது கம்பன் விழா என்றொரு அறிவிப்பை பார்த்துவிட்டு உள்ளே சென்றேன். வேலூர் ஊரிஸ் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. அரங்கில் ஒரு அரைமணி நேரம் அமர்ந்திருந்தேன். அங்கு என்னைத் தவிர அனைவருமே 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

மைக்கைப் பிடித்து ஆற்றிய உரைகளில் என் இலக்கிய உரை ஆர்வமெல்லாம்  கதறித் தெரித்து ஓடியது.தப்பித்து வந்தேன். இதேபோன்றே இன்னும் சில புத்தகக் கண்காட்சி உரைகளும் நூலக அரங்கங்கள் கூட்டங்களும் என்னை சினிமாவுக்காவது போயேன் என்று வெளியில் பிடித்து தள்ளின.    அந்த   வயதில் முடிவு செய்து இனிமேல் இலக்கியம் வெறும் வாசிப்பு மட்டும்தான், இலக்கியக் கூட்டங்களுக்கு போகவே கூடாது என்று இருந்து விட்டேன்.

விஷ்ணுபுரம் விழாவும் சென்னை உரையும் தான் இலக்கிய அரங்கங்கள் உண்மையில் இருக்கின்றன என்று எனக்கு புரிய வைத்தன.  இளையவர்களுடன் பேச தயக்கமாக இருந்தது.இத்தகைய இலக்கிய அரங்கங்களுக்கு வர வேண்டும் என்று எண்ணுகின்றேன்.

கிறித்தவ பிண்ணனியில் வளர்ந்த எனக்கு பைபிள் எப்பொழுதும் இணக்கமான புத்தகமே. ஆனால் அதில்  வரும் ஒலிவ மரங்களும் கேதுரு மரங்களும் பேரிச்சை மரங்களும் முக்காடிட்ட பெண்களும் பாலை நிலங்கள் ஒட்டகங்களும் நீண்ட அங்கிகளும் அப்பமும் மன்னாவும்  திராட்சரசமும்  தோல் உடைகளும்  மனதில் ஒட்டாமல் ஏதோ ஒரு அந்நியத் தன்மையை உணர்ந்து இருக்கிறேன். ஆனால் அதைப்பற்றிய சரியான புரிதல்கள் இல்லை.

அப்படிப்பட்ட நிலையில் பழமையான ஆலயங்களைக் கண்டபோதுதான் என்னுடைய மரபு எது? என் மனதில் நிறைந்திருக்கும் இம் மண்ணின் தன்மை எது என்று உணரத் தொடங்கினேன்.அதற்கு முக்கிய காரணம் ஜெயமோகன் அவர்களின் தளம் தான் என்று நான் எப்பொழுதும் சொல்வதுண்டு. உங்கள் தளத்தில் வாசித்தபிறகு தான்  சிற்பங்களையும் கோவில்களையும் பற்றிய புரிதல்கள் எனக்கு உண்டாயின.    தொண்டை மண்டலத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை மிகுந்த பல்வேறு கோவில்களுக்கு சென்றிருக்கிறேன்.

சோழப் பேரரசின்   வட எல்லையாகிய கருதப்படும் மேல்பாடி எனுமிடத்தில் உள்ள  சோமதீஸ்வரர் ஆலயம். பச்சைக் கல்லால் எழுப்பப்பட்ட அரிஞ்சய சோழன் காலத்து அதிசயமானஆலயம். இக்கோவிலின் ஒவ்வொரு தூணும் ஒரு கலை.அதன் அருகில் பொன்னையாற்றங்கரையில் சோழீஸ்வரம் என்று ராஜராஜன் தன் பாட்டன் அரிஞ்சய சோழன் நினைவாக எழுப்பிய பள்ளிப்படைக் கோவில் உள்ளது.இந்த இடங்களில் உள்ள அத்தனை சிலைகளும் அற்புதமானவை.

mon2

திருவலத்தில் உள்ள விலவநாதீஸ்வரர்  கோவிலில் கல்யாண மண்டபத்தில் உள்ள தூண்கள் அழகான வில்லேந்திய ராமன்,எருதும் யானையும் இணைந்த சிற்பம், அகத்தியர்,நாட்டியப் பெண்கள்,அரசிகள் குரங்குகள் கழைக்கூத்தாடிகள் என்று எண்ணற்ற சிற்பங்கள் கொண்டவை.  தக்கோலத்தில் உள்ள ஜலநாதீஸ்வரர் ஆலயத்தில் நிறைந்திருக்கும் நூற்றக்கணக்கான லிங்கங்கள், திருப்பாற்கடலில் உள்ள இரட்டைவிஷ்ணு ஆலயங்கள் (இங்கு தான் பள்ளி கொண்ட கோலத்தில் கருமையான விஷ்ணு சிலையை முதன் முதலில் பார்த்தேன்.) பள்ளி கொண்டாவில் உள்ள உத்தர ரங்கநாதர்  ஆலயத்தின் சுவர்கள்,திருக்கோவலூர் உலகளந்த பெருமாள் ஆலயத்தின் மரத்தாலான ஒரு காலை உயர்த்திய பெருமாள் சிலை,,நான்கு பனை உயரங்கொண்ட மாபெரும் தூண்கள்,அங்குள்ள சாளக்கிராம கிருஷ்ணன் சிலை என்று வியந்த ஆலயங்கள் ஏராளமானவை.பெரிய மதிள்சுவர்களும்,கற்தூண்களும், சிற்ப மண்டபங்களும்,கொடிப்பெண்கள்,ஆபரணங்கள், தலை அலங்காரங்கள்,நாட்கள்,குறுக்குத் திங்கள்,மிகச்சிறியவை முதல் பெரிய அளவு வரையிலான நந்திகள்,யாளிகள்,எருதுகள் கல்வெட்டுகள்  என்று எனக்கு உவகை தந்த சோழர்கால தந்து ஆலயங்கள் எத்தனை பெரும் மரபு..

பழமைமிக்க ஆலயங்களை கண்டபிறகு என் மனம் அந்த மரபினை உணர்ந்து கொள்கிறது.  பல்வேறு கல்வெட்டுக்களும் கற்களில் செதுக்கப்பட்ட போர் வீரர்களும் யானைகளும் நடன முத்திரைகளும் என்னை ஈர்த்துக் கொண்டன.

மேல்பாடி சிவன் கோயிலில் உள்ள கல்வெட்டில்  “திருமகள் போல பெருநிலச் செல்வியும் ”  என்ற இராஜராஜனின் மெய்க் கீர்த்தியை என்னால்    வாசிக்க இயன்ற போது அத்தனை ஆனந்தம்  அடைந்தேன். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கல்லில்   எழுதிய    எழுத்துக்கள் எனக்கும்  புரிகிறது அதுவே என் மரபு என்று உணர்ந்துகொண்டேன்.அந்த எழுத்துகளைக் தொட்டுணர்ந்து உளம் மலர நீண்ட நேரம் அங்கு நின்று கொண்டிருந்தேன்.அதே மன நிறைவை உங்களது உரையினைக் கேட்டபோது அடைந்தேன்.

நம் மரபு என்பது உருள்பெருந்தேர்.சாலைகளில் நவீன கார்கள் ஓடினாலும் தெருவின் முச்சந்தியில் நம் அலங்காரத்தேர் நிற்க வேண்டும் என்று ஒட்டுமொத்த  உரையையும் ஓர் வரியாக தொகுத்தீர்கள்.     அந்த மரபினை என்றும் என்சிந்தையில் வைத்திருக்க வேண்டும் .

மேலும் பல இலக்கிய உரைகளைக் காணும் நல்லூழ்   எனக்கு வேண்டும்  என்று விரும்புகிறேன்.

அன்புடன்

மோனிகா மாறன்.

vivekananda_statue_bw_midsize

அன்புள்ள மோனிகா,

மரபைக் கண்டடைதல் என்றால் என்ன? நானே அதை தெளிவுறுத்திக்கொண்டது நான் முதல்முறையாக அமெரிக்கா சென்றபோதுதான். முன்பும் இதை எழுதியிருக்கிறேன். பாஸ்டனில் ரால்ஃப் வால்டோ எமர்சனின் வீட்டுக்குச் சென்றபோது மிகப்பெரிய ஓர் உள எழுச்சியை அடைந்தேன். அங்கே நின்றிருக்கவே முடியாத அளவுக்கு.  விழிகளில் நீர்கசிவது எல்லாம் என் இயல்பல்ல, ஆகவேதான் அழவில்லை.  ஆனால் அந்தத் தருணத்தை ஒவ்வொரு கணமும் என என்னால் உணரமுடிகிறது இன்று.

பின்னர் நெடுநாட்கள் அதைப்பற்றி எண்ணிக்கொண்டேன். நான் இந்தியாவில் பல இடங்களில் பெரிய மன எழுச்சியை அடைந்திருக்கிறேன். முதன்முதலாக கங்கையையும் இமையத்தையும் கண்டபோது.  பேலூரில் ராணி கி வாவில். விவேகானந்தரின் கல்கத்தா மடத்திற்குச் சென்றிருந்தபோது. டெல்லி காந்திநினைவிடத்தில்.  பல மனிதர்களிடம் முழுதுறப் பணிந்திருக்கிறேன். வைக்கம் முகமது பஷீர், சிவராம காரந்த், அதீன் பந்த்யோபாத்யாய, குர்ரதுலைன் ஹைதர், கேளுசரண் மகாபாத்ரா, குரு கலாமண்டலம் கோபி. ஆனால் இது என் மண். என் மரபு. ஆகவே நான் ஒரு ஆழ்ந்த அகத்தொடர்ச்சியை உணர்கிறேன். அதே உணர்வு எப்படி அமெரிக்காவில் எமர்சனின் இல்லத்தில் உருவாகிறது?

அந்த உணர்வைத்தான் மரபை உருவாக்கிக்கொள்ளுதல் என நான் சொல்கிறேன். மரபை அறிதல் என்பது உருவாக்கிக் கொள்ளுதல்தான். மதமும், அரசியலும், சமூகச்சூழலும் நமக்கு ஒரு மரபை ‘சமைத்து’ அளிக்கின்றன. அந்த மரபிலிருந்து எழுந்து நமக்கான மேலும் ஆழமான மரபொன்றை உருவாக்கிக் கொள்ளுதல். அது தமிழ் மரபோ இந்திய மரபோ மட்டும் அல்ல. அதற்கப்பால் மானுட மரபும்கூடத்தான். அந்த மரபை நான் உருவாக்கிக்கொள்ள என் ஆன்மிகத்தேடல் மட்டுமே என்னை வழிநடத்தவேண்டும்

உதாரணமாக பஷீரையோ குர்ரதுல்ஐன் ஹைதரையோ சொல்லாமல் நான் என் இலக்கியமரபை சொன்னதே கிடையாது. என்னிடம் அந்தப் பெயர்களை சொல்லவேண்டாம், அவர்கள் இஸ்லாமியர்கள் என ஒருவன் வந்து சொன்னால், அக்கீழ்மகனின் சொற்களை அரைக்கணம் நான் செவிகொண்டேன் என்றால், நான் என் ஆன்மாவை அழித்துக்கொள்கிறேன். அதன்பின் எனக்கு மரபென ஒன்றில்லை. எளிய தன்னிலைகளும், அதையொட்டிய காழ்ப்புகளும் மட்டுமே உள்ளன. மதமும் அரசியலும் மரபை நமக்கு அளிப்பதில்லை, இந்தத் தன்னிலைகளையும் காழ்ப்புகளையுமே பெரும்பாலும் அளிக்கின்றன. நாம் அதை கடப்பது எப்படி என்பதையே நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.

இங்குள்ள பண்பாட்டு மரபு எந்த மதத்திற்கும் சொந்தமானது அல்ல. அதை தன்னுடையதென எண்ணும் எவருக்கும் உரியதுதான். எமர்சன் தங்களவர் என அமெரிக்கர் ஒருவர் சொன்னால் என்னுடையதும் கூடத்தான் என்பதே என் பதிலாக இருக்கும். மரபு என்பது வரையறை செய்யப்பட்ட ஒன்று அல்ல. சிவராம காரந்திலிருந்து உபநிடத ரிஷிகளை நோக்கி செல்ல ஒரு பாதை உள்ளது. உபநிடத ரிஷிகளில் இருந்து எமர்சனுக்குச் செல்ல இன்னொரு பாதை உள்ளது. மரபு என்பது நம் அகம் தாவித்தாவிச்சென்று நாமே உருவாக்கிக் கொள்ளும் ஒரு பெரிய வலை. பல தருணங்களில் எமர்சனுக்கும் ஜெயகாந்தனுக்கும் இடையேயான அணுக்கத்தைக் கண்டு வியந்திருக்கிறேன். ஜெயகாந்தனுக்கு எமர்சனை அனேகமாக தெரியாது. அவர்களை இணைக்கும் வலை ஒன்று உள்ளது. அதையே மரபு என்கிறேன்.

ஏன் மரபை நாம் உருவாக்கிக்கொள்ளவேண்டும்? விழுமியங்களுக்காக. படிமங்களுக்காக. தொடர்ச்சிக்காக. நம்மை நாமே பேருருக்கொள்ளச் செய்வதற்காக. நேற்றைய சிந்தனைகள், நேற்றைய கலைவெற்றிகள்தான் நமக்கான இன்றைய தளம். அவை இன்று பொருள்படா எனில் நாம் இன்று செய்வனவுக்கும் நாளைய பயன் ஏதுமில்லை. அவ்வாறு எண்ணுவது ஒரு பேதைமைதான்.

வரலாறு முழுக்க மரபை நாம் மறுகண்டடைதல் செய்துகொண்டே இருக்கிறோம். ஒரு திரளாக நாம் ஒரு காலகட்டத்திற்கு ஒருமுறை கண்டடைந்து மறுஆக்கம் செய்துகொள்கிறோம். அந்தச் செயல்பாடு ஒவ்வொருவரிலும் அந்தரங்கமாகவும் நிகழ்கிறது. மரபை அப்படி நாம் கட்டமைத்துக்கொள்கையில்தான் ஒரு பெரும் நீட்சியின் உறுப்பாக, ஒரு பேரலையின் துளியாக ஆகிறோம். நான் என்னும் எண்ணமே நம் சிந்தனையின் ஊற்றுமுகம். அது வெற்றாணவமாக ஆகாமல் பேருணர்வாக ஆவது அவ்வாறு நாம் உருவாக்கிக்கொண்ட மாபெரும் மரபின் துளி என நின்றிருக்கையிலேயே.

ஜெ

முந்தைய கட்டுரைஅனோஜனின் யானை – கடிதங்கள் – 3
அடுத்த கட்டுரைசகடம் – சிறுகதை விவாதம் – 3