நீத்தாரை அறிதல்

neer

நீர்க்கடன்

அன்புள்ள ஜெ.,

‘நீர்க்கட’ னின் தொடர்ச்சியாக……நாமக்கல் வெ ராமலிங்கம்பிள்ளை தன்னுடைய நண்பரும் உறவினருமான மாணிக்க நாயக்கருட(?)னும் ஈ.வே.ரா வுடனுமான உரையாடல்கள் குறித்து தன்னுடைய ‘என் கதை’ யில் எழுதியிருக்கிறார். மாணிக்க நாயக்கர் திருச்சி ஜில்லா எக்சிகியூடிவ் எஞ்சினீயர் . பின்னாளில் பொதுப் பணித்துறையின்   மிக உயர்ந்த பதவியான ‘சூப்பரின்டெண்டிங் ‘ என்ஜினீயராக ஓய்வு பெற்றவர். ஈ.வே ரா வின் நண்பர்(உறவினர் அல்ல) .

இம்மூவரும் மாணிக்க நாயக்கர் வீட்டில் சந்தித்து அளவளாவும் போது  இந்தியாவில் ஆரியர்கள் ஆதிக்கம் குறித்தும், ‘கம்பராமாயணம்’ எப்படி ‘ஆரியனாகிய இராமனை உயர்த்தி திராவிடனாகிய இராவணனைக் கீழிறக்குகிறது’ என்பது குறித்தும் (இராமனே ஷத்ரியன். இராவணன் பிரம்மாவின் பேரன், பிராமணன் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்களா? தெரியவில்லை.)  பலவாறாக விவாதிக்கிறார்கள். தான் இராவணனை உயர்த்தி ‘இராவணாயணம்’ என்றொரு நூல் எழுதப்போவதாகவும் சொல்லி வந்திருக்கிறார் மாணிக்க நாயக்கர்.இத்தனைக்கும் கம்பராமாயணத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ராமலிங்கம்பிள்ளையை அவ்வப்போது அதிலிருந்து பாடச்சொல்லி ரசிப்பவர். ‘இராவணாயணம்’ குறித்த தொடர்ந்த உரையாடல் நடந்திருக்கிறது. ராமலிங்கம்பிள்ளைக்கும் மாணிக்கநாயக்கருக்கும் அபிப்ராய பேதம் உண்டாகும்போதெல்லாம் சாமர்த்தியமாக நடுநிலை(!) வகிப்பாராம் ஈ வே ரா. (இதை எழுதும்போது ஜெயகாந்தனின் பழைய சிறுகதை ஞாபகத்திற்கு வருகிறது. இரு தோழிகள். அதில் ஒருத்தி விபச்சாரி. ‘நல்ல பெண்ணாய்’ இருப்பதன் மேன்மையை இவள் கூற விபச்சாரியாய் இருப்பதன் சாதகங்களை அவள் கூற  கடைசியில் இருவர் மனதிலும் மாற்றம் ஏற்பட்டு ஒருவர் மற்றவராக மாறி விடுகிறார்கள்..)  ” பிற்காலத்தில் சுய மரியாதை இயக்கத்தை ஆரம்பித்து ‘கம்பராமாயணத்தை’ எரித்து விட வேண்டும் என்ற ஈ.வே.ரா, தான் மாணிக்க நாயக்கரிடம் கேட்டுக்கொண்ட பாடத்தைத்தான் செயல்படுத்த முனைந்தாரோ என்பது என் எண்ணம்” என்கிறார் ராமலிங்கம்பிள்ளை.

மாணிக்கநாயக்கர் வீடு திருச்சியில். நாமக்கல் கவிஞருக்கு அப்போது ஓவியத் தொழில் சிறப்பாக நடைபெற்று வந்தது(நாடகங்களுக்குப் பாடல் எழுதுவதும் உண்டு) . அதையொட்டிய ‘போட்டோகிராபி’ யிலும் அவரைப் பயிலச்செய்து அவரை தொழில்முறை புகைப்படக்கலைஞர் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் மாணிக்கநாயக்கர். அவரிடமிருந்து இவரை வரச்சொல்லி ‘தந்தி’ வந்தது. சரி வழக்கமான ஒன்றுதான்.என்று இவரும் போனார். ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் முடிசூட்டு விழா டெல்லியில் (1912 டிசம்பர் 12ஆம் தேதி) நடக்கிறபடியால் அதில் தாம் இருவரும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்போவதாகவும் அதுபற்றிப் பேசவே அழைத்ததாகவும் கூறினார் மாணிக்கநாயக்கர். தர்பாரை ஒட்டி ஒரு கண்காட்சி நடக்கப்போவதாகவும், அதில் பங்கேற்க கவிஞர் மன்னரை ஒரு ஓவியமாக வரைந்து தரவேண்டும் என்றும் மேலும் இதெல்லாம் சென்னை மாகாண சர்க்கார் வழியாகவே போவதாகவும், அதற்கு ஏற்பாடு செய்கிற துரை தனக்குத் தெரிந்தவர்தான் என்றும் கூற, கவிஞரும் இந்தியத்தாய் ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு முடிசூட்டுவது போல் ஒரு ஓவியத்தை சிறப்பான முறையில் தயார் செய்து, ஜாதிக்காய்ப் பெட்டியில்  அடக்கம்செய்து அனுப்புகிறார். முடிசூட்டுவிழா ஒரு காரணம்தான். அதையொட்டி நாலைந்து மாதம்(?!) வட இந்தியாவைச்சுற்றிப் பார்த்து, புகைப்படம் எடுத்துக்கொண்டு வருவதுதான் முக்கியத்திட்டம். இந்தச் சுற்றுலாவிற்காகவே ‘அடிசன்’ கம்பெனியிலிருந்து ‘ட்ரையம்ப்’ மோட்டார்சைக்கிளை ‘சைட் கார்’ உடன் வாங்குகிறார் நாயக்கர். ஒரு சமையல்காரர், ஒரு ‘பியூன்’, மற்றும் தேவையான பொருட்களோடு (உயர்ரக ‘ஸ்பென்சர்ஸ்’ பிராந்தி பாட்டில்கள் ரெண்டு டசன், ஐநூறு உயர்ரக சுருட்டுகளும் அடக்கம்) நாயக்கரும், கவிஞரும் கிளம்பினர்.பெரும் ஜமீன்தார்களுக்கும், குறுநில மன்னர்களுக்குமே இடமில்லாத அவையில், கலைஞராக எளிதாக நுழைகிறார் ராமலிங்கம்பிள்ளை. அவரோடு ஒருவரை அழைத்துச் செல்ல அனுமதி உண்டு. அவர்தான் மாணிக்கநாயக்கர். கவிஞருக்கு தங்கப்பதக்கமும் பரிசு கிடைக்கிறது.

ரயிலில் போகும் பிரயாணங்களில் மோட்டார்சைக்கிளை ‘வேகன்’னிலேயே எடுத்துப்போய் விடுகிறார்கள். (அயர்லாந்தில், டப்ளினில் இருந்து பெல்பாஸ்ட் போகும் வழியில், தன் காரின் பின்னிணைந்த ‘வாகனி’ல் அழகான குதிரையோடு பயணம் செய்த ஒருவரைப் பார்த்திருக்கிறேன். எங்காவது வண்டியை நிறுத்திவிட்டு குதிரையில் போவாராக இருக்கும்)  காரில் போகிற தூரங்களாக இருந்தால் ‘உதவிப் பொறியாளர்’ (பெயருக்கேற்றார்போல) மோட்டார்சைக்கிளை ஓட்டிவந்து கொடுக்க, பின் அங்கிருந்து பயணம் தொடர்கிறது. பொதுப் பணித்துறையில் அப்போது அநேகமாக துரைமார்களே பொறியாளர்கள். பலரும் நாயக்கருக்குப் பரிச்சியமானவர்களே. தங்குமிடமெல்லாம் துரைமார்களின் ‘டாக் அவுஸ்’ எனப்படும் பங்களாக்களிலோ அல்லது அரசாங்க விருந்தினர்களாக குறுநில மன்னர்கள், ஜமீன்தார்களின் அரண்மனையிலோதான். டில்லியில் ஒரு மாதம் தங்கி, அதைச் சுற்றி உள்ள இடமெல்லாம் பார்த்து புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். இதில் பெஷாவரில் ‘கைபர்’ கணவாயில் மூன்று மைலுக்கு மலையைக்குடைந்து ஆற்றிலிருந்து நீர் கொணரும் ‘டன்னல்’ லைப் பார்வையிட்டு வருகையில் எல்லைப்புறத் தீவிரவாதிகளிடம் சிக்கிக் கொள்ளுதல், நாயக்கரின் சமயோசித புத்தியினால் சாமர்த்தியமாகத் தப்பித்தல் (‘திக் திக்’ நிமிடங்களையும் புன்னகை தவழப் படிப்பது போல எழுதியிருப்பார் ராமலிங்கம்பிள்ளை.), கபூர்தலா அரண்மனையில் மகாராஜாவின் ஓவியத்தை – ஒரு ஸ்பெயின் ஓவியரால் மகாராஜா  உட்கார்ந்திருப்பது போல் வரையப்பட்ட பெரிய ஓவியம். தூரத்திலிருந்து பார்த்தால் நேருக்கு நேர் பார்ப்பதுபோல் தத்ரூபமாக இருக்கும் ஓவியம் பக்கத்தில் செல்லச்செல்ல ஒரே வண்ணக்கரைசலாகக் காட்சி தருகிறது. அன்றைய விலை(1912 ல்)  ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் இந்திய ரூபாய்கள். – ராமலிங்கம்பிள்ளை பார்த்து அதிசயிப்பது என்று எத்தனையோ அனுபவங்கள்.

மதுராவில் இருவரும் தங்கியிருந்தபோது மாணிக்கநாயக்கரின் தந்தையாரின் திதி நாள் வந்தது. மாணிக்க நாயக்கருக்கு சந்தோஷம். அவர் நாஸ்திகர் அல்ல. அதே சமயத்தில் சடங்கு, சம்பிரதாயங்களில் நம்பிக்கை கொண்டவரும் அல்ல. ஆனால், தன் தந்தையின் நம்பிக்கையையொட்டி அவருக்கு திவசம் கொடுத்து வருகிறார். அங்கிருக்கும்  திவசம் செய்து வைக்கும் வாத்தியார்கள் ‘பண்டா’ க்கள் என்று அழைக்கப்படுபவர்கள். அழுக்கு வேட்டியும், மேல் கோட்டும் அணிந்திருப்பார்கள். கழுகுக் கண்களோடு ரயில் நிலையங்களில் காத்திருந்து காக்கையைப் போல ‘இரை’ யைக் கொத்தி எடுப்பதில் தேர்ந்தவர்கள். அப்படிப்பட்ட ஒரு ‘பண்டா’ வை அணுகி காலையில் ஆற்றங்கரைக்கு வரும்படி கூற, வேண்டிய பொருட்களோடு வந்து விடுகிறார். பொருட்கள் – ஒரு ‘நாரியல்’ அதாவது மட்டைத்தேங்காய், கொஞ்சம் பூக்கள், எள்ளும், சில வடநாட்டுதானியங்களும். நாயக்கர் குளித்து பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு யமுனாநதிப் படித்துறைக்கு வந்து விடுகிறார். ஒரு விதமாகச் சடங்குகள் முடிந்து பிண்டப் பிரசாதத்தை ஆற்றில் விடுவதற்கு இருவரும் இறங்கி நிற்கிறார்கள். நாயக்கர் கையில் பிண்டப் பிரசாதங்களோடு, பூவோடு மந்திரங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். முடிந்தவுடன் பிண்டப்பிரசாதத்தின் மேல் தட்சிணை வைக்கச் சொல்கிறார் பண்டா. நாயக்கர் ஐந்து ரூபாய் வைக்கும்படி ராமலிங்கத்தைப் பார்த்துச் சொல்ல இவரும் வைக்கிறார். பண்டா போதாதென்கிறார். இன்னொரு ஐந்து ரூபாயும் வைக்கப்படுகிறது.பண்டாவுக்குப் போதவில்லை.நாயக்கர் ‘மூன்று நாட்களாக நம்மைச் சுற்றிச்சுற்றி வருகிறார். இன்னொரு ஐந்து ரூபாய் வையுங்கள்’ என்கிறார். கவிஞர் வைக்க, பண்டா ‘இல்லை பிரபு, எங்கோ தூரதேசத்திலிருந்து க்ஷேத்ர யாத்திரைக்கு வருகிறீர்கள். மதுரா விசேஷமான ஸ்தலம். இங்கு செய்கிற ஸ்ரார்த்தம் காசி, கயா, ராமேஸ்வரம் போன்ற இடங்களில் செய்யும் ஸ்ரார்த்தங்களை விட உயர்ந்தது. பிரமணனுக்கு திருப்தியான தானம் செய்தால்’ என்று பல்லை இளிக்க, நாயக்கர் சலிப்புடன் ‘தொலையுங்கோ, இன்னொரு ஐந்து ரூபாய்’ என்று கவிஞரிடம் கூற கவிஞரும் தொலைக்கிறார்.

Namakalkavi
நாமக்கல் கவிஞர்

“பரித்த செல்வம் ஒழியப் படரும் நாள்

அருத்தி வேதியர்க்கு ஆன்குலம் ஈந்து, அவர்

கருத்தின் ஆசை கரையின்மை கண்டுஇறை

சிரித்த தன்மை  நினைந்தழும் செய்கையாள்”

(காட்டுக்குச் செல்லுமுன் தன்னுடைய சொத்துக்களையெல்லாம் தானம் செய்கிறான் இராமன். அப்போது ஒரு வேதியரிடம் ‘நீங்கள் எவ்வளவு தூரம் கல்லெறிகிறீர்களோ அதற்குள் உள்ளடங்கிய பசுக்களெல்லாம் உங்களைச் சேர்ந்தது’ என்று கூற, வேதியரும் கல்லெறிகிறார். ஆயிரம் பசுக்களுக்கு மேல் தேறும் அவர் எறிந்த தூரத்திற்குள். அதன் பின்னரும் நின்று கொண்டே இருந்தாராம். என்னவென்று கேட்கிறான் இராமன். ‘மீதமிருக்கிற பசுக்களையும் தந்தால் தேவலை’ என்றாராம் வேதியர். இராமனும் கொடுத்து விட்டானாம். ராமனின் அத்தகைய மேலான குணத்தை நினைத்து அசோகவனத்தில் அழுது கொண்டிருக்கிறாள் சீதை.)

என்ற கம்பராமாயணப் பாடலைப் பாடி அந்தச் சூழ்நிலையிலும் நாயக்கரைச் சிரிக்க வைத்து விடுகிறார்  கவிஞர் – அப்படியாவது இராமனைப்போல கொடுத்துத் தொலைப்பாரோ என்று நினைத்தாரோ என்னவோ, நாயக்கர்தான் ‘இராவணனோட’ ஆளாயிற்றே?

பேராசை பிடித்த பண்டாவிற்கு இருபதுரூபாயும் போதுவதில்லை. நாயக்கரை மகாபிரபு என்று பலவாறாகப் புகழ்ந்துரைத்து ‘உங்களுடைய அந்தஸ்திற்குக் குறைந்தது நூறு ரூபாயாவது வைத்தால் தான், இல்லாவிட்டால்  ஸ்ரார்த்தம் பலன் இல்லை’ என்கிறார்.  இந்த கட்டத்தில் ‘பித்ரு’ சாபத்திற்கு பயந்து எல்லோரும் பணிந்து போவதே வழக்கம். நாயக்கர் பயங்கரக் கோபக்காரர். நல்ல ஓங்குதாங்கான ஆள். பிண்டத்தையும் தட்சிணையையும் கையில் ஏந்திக்கொண்டு நிற்பவர் ‘இந்த இருபது ரூபாயை வாங்கிக் கொள்கிறானா கேளுங்கள்’ என்கிறார். அவர் கேட்ட தொனியே கவிஞரை அரட்டுகிறது. ‘பண்டா விற்கு ஏதாவது ஆகி விடக்கூடாதே’ என்று பயந்த வண்ணம் அவருக்குத் தெரிந்த இந்துஸ்தானியில் பண்டாவிடம் இதை ஏற்றுக்கொண்டு திவசத்தை முடிக்கச் சொல்கிறார். பண்டா பழைய பாட்டையே பாட, நாயக்கர் ‘என் கையிலிருக்கும் பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று கவிஞரைப் பார்த்துச் சொல்ல, கவிஞர் எடுத்துக் கொள்கிறார். அணை உடைந்து வெள்ளம் பொங்கி வருவது போல இதுவரை தேக்கி வைத்திருந்த கோபத்தையெல்லாம் ‘பண்டா’வின் தலையில் தன் இரண்டு கைகளாலும் ‘ஒற்ரே அடி’ யாக, கையிலிருந்த பிண்டத்தாலேயே அடித்து இறக்கி விட்டுக் கரையேறி விடுகிறார் மாணிக்க நாயக்கர். பண்டாவோ ‘அரே பாபி! பிராமணத் துரோகி! பித்ருத் துரோகி! தெய்வத் துரோகி! உனக்கு ரௌத்ரவாதி நரகம்தான் கிடைக்கும். உன் பித்ருக்களெல்லாம் தேவலோகத்திலிருந்து உன்னைச் சபிப்பார்கள்’ என்று சபித்துக்கொண்டு இவர்கள் பின்னாலேயே வர, ஒரு இருபது பண்டாக்கள் கூடி விடுகிறார்கள். எல்லோரும் சபித்துக்கொண்டே பின்னால் வர, மக்களும் கூட்டமாகக் கூடி விடுகிறார்கள்.

வைதிக உடைகளைக் களைந்து விட்டு மோட்டாருக்கான உடைகளை அணிந்து கொண்ட  நாயக்கர் ‘பைக்’ கை ‘ஸ்டார்ட்’ செய்கிறார். ஒரு வயதான பண்டா ‘இப்படிப் பித்ரு காரியத்தை பாதியிலேயே விட்டுவிட்டுப் போவது எல்லோருக்குமே பாவம் தரக்கூடியது. அந்த இருபது ரூபாய்யைக் கொடுங்கள். நான் முறைப்படி செய்து வைக்கிறேன்’ என்று பணிவாகக் கேட்டுக் கொண்டார். நாயக்கரின் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. நாயக்கர் ‘பைக்’கை முடுக்க மறித்த பண்டாக்கள் ‘பைக்’கையும் ‘சைடு கார்’ ரையும் பிடித்திழுக்க, எல்லோரையும் விழுத்தாட்டிவிட்டு ‘பைக்’ முன்நகர்ந்தாலும் தடுமாறி ஒரு வீட்டின் மீது மோதத் தெரிந்தது. விழத்தெரிந்த நாயக்கர் ஒரு வழியாக சமாளித்து, ‘பிரேக்’ பிடித்து வண்டிலிருந்து இறங்கியவுடன், கால் சராய் ‘ஜேபி’ யிலிருந்து கைத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தமிழிலும், ஆங்கிலத்திலும் சவால் விட்டுக்கொண்டு கூட்டத்தை நோக்கிப் பாய, துப்பாக்கியைப் பார்த்தவுடன் கூட்டம் பயந்து பின்னகர்ந்துவிடுகிறது. ‘என்ன நீங்களே… ‘ என்று கவிஞர் வேகமாக அவர் கையைப் பிடித்துக்கொண்டு விடுகிறார். ஒரு வழியாக அங்கிருந்து மீண்டு, இருவரும் ‘டாக் ஹவுஸ்’ க்குத் திரும்பி ‘திவசம் கொடுத்த’  களைப்போடு வந்து சாப்பிடத் தொடங்குகிறார்கள். சற்றுநேரத்தில், வாசலில் ‘மோட்டார்’ சத்தம் கேட்டு வெளியே பார்த்தால், பண்டாக்கள் ‘பிராது’ கொடுத்ததன் பேரில் விசாரிக்க ‘போலீஸ்’ வந்திருக்கிறது. நாயக்கர் பொறுமையாகச் சாப்பிட்டு விட்டே வருகிறார். எல்லாவற்றையும் விவரமாகச் சொல்கிறார். நாயக்கர் யார், என்ன என்று தெரிந்த பின், வழக்கு விசாரணை டெல்லி தர்பார், ராமேஸ்வரம், மதுரை, ஸ்ரீரங்கம் என்று முடிகிறது.

ஹரித்துவார், ரிஷிகேஷ், மாஸ்ஸுரி, ரூர்கி, சிம்லா, ஆக்ரா, கான்பூர், காசி, கயா, மதுரா, பிரிந்தாவன், கோவர்தன், கோகுலம், பாட்னா, கல்கத்தா, ஆஜ்மீர், கபூர்தலா, தர்பங்கா என்று – இன்று போல இணையவசதி இல்லாத  மற்றும் வாகன வசதிக்குறைவான காலகட்டத்தில் – ஐந்து மாதங்களுக்கும் மேலாக  நீண்ட ஒரு வீர தீர சாகசப் பயணம் ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது. “மாணிக்க நாயக்கர் பார்ப்பனச் சடங்குகளைப் பழிப்பவர்தான். ஆரிய வழக்கங்கள் என்று தாம் கருத்துபவற்றைப் பழித்துப் பேசுபவர்தான். அவர்தான் மதுராவில் கெட்டுப்போன தன் தகப்பனாரின் ‘திவசத்தை’ காசியில் ஒரு தமிழ்நாட்டுப் புரோகிதரைக் கொண்டு சிறப்பாகப் பூர்த்தி செய்தார். வடநாட்டு ஷேத்ரங்களையெல்லாம் வைதீக முறையிலேயே தரிசனம் செய்தார். ஹரித்துவார், காசி, பிரயாகையில் குடம் குடமாக ‘கங்கா ஜல’த்தை பத்திரம் செய்து கொண்டு, நேரே ராமேஸ்வரத்திற்குப் போய் அபிஷேகம் செய்த பிறகே வீட்டிற்குப் போனார். வீட்டிற்கு வந்தும் விரிவான முறையில் சமாராதனை செய்தார். அத்தனையையும் பார்ப்பனர்களைக் கொண்டே செய்வித்தார்.  இதையெல்லாம் பார்க்கும் பொழுது காசி, கயா, கங்கை, யமுனை போன்ற நம்பிக்கைகள் தமிழனுடைய ரத்தத்தில் எப்படி ஊறிப்போயிருக்கிறதென்பது ஆச்சரியமான ஒன்று. அவர் காசிக் கயிறை நெடுநாள் கையில் கட்டிக்கொண்டிருந்ததை இப்போது நினைத்துப்பார்த்தாலும் அதிசயமாக இருக்கிறது” என்கிறார் ராமலிங்கம்பிள்ளை.

இப்போது கேள்வி. “ஒரு மார்க்சீயருக்கான இறுதிச்சடங்கு எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடந்தது சுந்தர ராமசாமியின் இறுதிச்சடங்கு” என்று எழுதியிருப்பீர்கள் ‘சுந்தர ராமசாமி – நினைவின் நதியில்’. அசோகமித்திரன் கூட ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார் ‘என் பிள்ளைகளிடம் கூடச் சொல்லி இருக்கிறேன், என்னை எரித்து விட்டுத் திரும்பிப்பார்க்காமல் போய்விடுங்கள் என்று’ என்று சொல்லியிருப்பார். ‘அது ஏதோ விரக்தியில் சொல்லியிருப்பார்’ அல்லது ‘பெரியவர் சொல்லிட்டா, விட்றமுடியுமா? கடமைன்னு ஒண்ணு இல்ல?’ என்று அவையெல்லாம் மறக்கப்பட்டு சடங்குகள் தொடரலாம். இறந்தவர்களின் நம்பிக்கை(நம்பிக்கையின்மை) க்கெதிராக வாரிசுகள் சடங்குகள் செய்வது ஒரு விதமான ‘நம்பிக்கைத் துரோகம்’ இல்லையா?

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

evr

அன்புள்ள கிருஷ்ணன் சங்கரன்

இது நேரடியான ஒரு சிக்கல்தான். ஓர் உள்ளுணர்வால் இறந்தவர்கள் ஏன் அப்படிச் சொன்னார்கள் என்பதை மகன்கள்தான் புரிந்துகொள்ளவேண்டும் என நினைக்கிறேன். பல தருணங்களில் அதியதிதீவிர முற்போக்கு நாத்திகர்கள் இறக்கும்போது அவர்களின் குடும்பத்தினர் ‘அவர் ஆயிரம் சொல்லியிருப்பாரு. எங்க குடும்பச்சடங்க நாங்க செஞ்சாகணும்ல?” என்று எல்லாவகையான மரபார்ந்த சடங்குகளையும் செய்வதைக் கண்டிருக்கிறேன். சொல்லப்போனால் அவ்வாறு செய்யப்படாமல் மறைபவர்கள் இங்கே அரிதினும் அரிது.

அப்போதெல்லாம் ஓர் எரிச்சல் எழுவதுண்டு, என்ன இது என. ஆனால் இப்போது தோன்றுகிறது. தமிழர்களுக்கு, ஏன் இந்தியர்களுக்கே ஒரு இரட்டை ஆளுமை உண்டு. பொது ஆளுமை, தனியாளுமை. பொதுஆளுமை என்பது மேடைகளுக்காக, சமூகத்தின் முன்பாக உருவாக்கிக் கொள்வது. அறிவுபூர்வமாக வெளிப்படுத்திக்கொள்வது. முற்போக்கானது. தனியாளுமை தானாகவே வெளிப்படுவது. கட்டுப்படுத்த முடியாதது. அந்தரங்கமானது. வீட்டில் அவர்கள் வெளிப்படுவது தனியாளுமையாகவே. அது வேறுவகையானது. அதை குடும்பத்தினரே அறிவார்கள்.

பெரும்பாலான முற்போக்காளர்கள், நாத்திகர்கள் மரணம், திருமணம், நோயுறுதல் போன்ற இக்கட்டான தருணங்களில் பொது ஆளுமையை உதறி தங்கள் தனியாளுமை நோக்கிச் சென்றுவிட்டிருப்பதைக் காணலாம். அது இயல்பானது. பொது ஆளுமை அந்த அளவுக்கே அழுத்தம் தாங்கும். மனிதன் தன் அடிப்படை விலங்கியல்புகளுக்குத் திரும்பிச் செல்லும் தருணங்கள் உண்டு.

பொது ஆளுமை என்பது கல்வியால், அகப்பயிற்சியால் அடையப்படுவது. அது திரும்பத்திரும்ப அந்த நபரால் சொல்லப்படும். அவர் அதை பிரச்சாரம்செய்துகொண்டே இருப்பார். கவனித்துப்பார்த்தால் அதை அவ்வாறு அவர் தனக்கேதான் சொல்லிக்கொள்கிறார். குழப்பமே இல்லாமல், முழுவெறியுடன் சொல்லப்படும் கருத்தியல்நிலைபாடுகள் பெரும்பாலும் உள்ளூர உறைந்து நிமிண்டிக்கொண்டே இருக்கும் அந்த அவநம்பிக்கை என்னும் சிறு பறவையிடம் சொல்லப்படுவனவே.

மதநம்பிக்கையும் அவ்வாறுதான். கிறிஸ்தவர்கள் ‘நான் விசுவாசிக்கிறேன்’ என்பதை ஒருநாளில் நூறுதடவையாவது சொல்வார்கள். நாத்திகர்கள் ‘கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லை’ என்பதையும் அவ்வாறே சொல்லிக்கொள்வார்கள். அவ்வாறு சொல்லிச்சொல்லித்தான் அவர்கள் அங்கே தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முடியும். ஆல்ஹஹால் அனானிமஸ் அமைப்பில் சேர்பவர்கள் ‘குடிக்கமாட்டேன்’ என்பதை ஒருநாளுக்கு நூறுமுறையேனும் தங்களுக்கே சொல்லிக்கொள்ளவேண்டும். தங்கள் கூட்டங்களிலில் கைநீட்டி உறுதிமொழி எடுத்துக்கொள்ளவேண்டும்.

இதற்கு அப்பாலுள்ளது உணர்வும் கனவும் கலந்து குழம்பிய அகம். மிக இளமையிலேயே வடிவமைந்துவிடுவது. சூழலில் இருந்து மரபிலிருந்து பெற்றுக்கொள்வது. ஆழ்படிமங்களாக அகத்தில் நிலைகொள்வது. இருப்பதே தெரியாதது. இக்கட்டுநிலைகளில் தன்னிச்சையாக எழுந்து வருவது. அதை பிற எவரையும் விட குடும்பத்தினர் அறிவார்கள். ஏனென்றால் அவர்கள் அந்தப் பொது ஆளுமையுடன் வாழ்வதில்லை, தனியாளுமையுடன் சேர்ந்து வாழ்கிறார்கள். சிறுசிறு நடத்தைகள், சொற்கள் வழியாக அவர்கள் அந்த நபரின் ஆளுமையைக் கண்டுகொண்டே இருக்கிறார்கள்.

ஆகவே குடும்பத்தவர் எடுக்கும் முடிவு பெரும்பாலும் சரிதானோ என்ற எண்ணத்தை நான் இப்போது வந்தடைந்திருக்கிறேன். பெண்ணுரிமைபேசுபவரின் ஆணியல்பு என்ன என்று மனைவிக்குத்தெரியும். தனிமனித உரிமை பேசுபவரின் ஆதிக்கத்தை பிள்ளைகள் அறிவார்கள். நாத்திகமும் பொதுவுடைமையும் பேசுபவரின் சாரம் என்ன என்பதை அவருடைய குடும்பம் அறிந்திருக்கும்.

சில நிகழ்வுகள். நான் கடவுள் படப்பிடிப்பின்போது தமிழகம் அறிந்த நாத்திகக் கவிஞர் ஒருவரின் இரு மைந்தர்கள் அங்கே வந்திருந்தனர். மறைந்த தங்கள் அன்னைக்கு நீர்க்கடன்களைக் கழிக்க. அவர்கள் வந்து என்னையும் பாலாவையும் சந்தித்தனர். “அப்பாவுக்குத் தெரியுமா?” என்று நான் கேட்டேன். “அவரும்தான் வந்திருக்கார். ரூம்ல இருக்கா. வர்ரதுக்கு தயங்கிட்டிருக்கார்” என்றார்கள். தன் தந்தைக்கு நீர்க்கடன்கள் செய்ய தயங்கிக்கொண்டிருந்த பாலா அதைக் கடந்துசென்று அனைத்துச் சடங்குகளையும் செய்ய அதுவே தூண்டுதலாக அமைந்தது

என் மாமனார் சற்குணம்பிள்ளை அவர்கள் கனிந்த தி.க காரர். நாத்திகர்தான் இன்றும். ஆனால் ஒரே சடங்கை மட்டும் செய்தார், காசிக்குச் சென்று தன் தந்தைக்கான கடன்களை முடித்தார். தனக்காக அல்ல, தன் தந்தைக்காக அதைச்செய்யவேண்டும் என அவர் எண்ணினார். அவருக்கு தன் தந்தையை தெரிந்திருந்தது. ஆகவே தான் செய்யவேண்டியவற்றில் அவருக்கு ஐயமே இல்லை. இதெல்லாம் நம் மனதில் அல்ல, ஆழ்மனதில் உள்ளவை.

சுந்தர ராமசாமிக்கு அதெல்லாம் தேவையில்லை என கண்ணன் சுந்தரம் முடிவெடுத்தார் என்றால் அவர் தன் தந்தையை நன்கறிந்த மைந்தன் என்பதனால்தான். அவருக்கு தந்தை உண்மையில் என்ன விரும்பினார் என்ற ஐயமே இருக்கவில்லை. ஆகவே பின்னர் ‘தப்பு செஞ்சிட்டோமோ’ என்ற குறுகுறுப்பும் அலைக்கழிக்க வாய்ப்பில்லை. அந்த உறுதிப்பாடு இருந்தால் செய்யவேண்டியதில்லை,

இறந்தவர்களின் நீட்சியே இருப்பவர்கள். குறிப்பாக மைந்தர்கள். அவர்களுக்கு ஆழத்தில் தந்தை எவர் எனத்தெரியும். தந்தையின் அகமும் புறமும் நுணுக்கமாக தெரிந்திருக்கும். சிலரால் தர்க்கபூர்வமாகச் சொல்லமுடியாது. அந்நிலையில் தங்கள் உள்ளுணர்வால் அவர்கள் முடிவெடுப்பதே நல்லது.

ஜெ

முந்தைய கட்டுரைநாமக்கல் புதிய வாசகர் சந்திப்பு – கடிதங்கள்
அடுத்த கட்டுரைசகடம் -சிறுகதை விவாதம் – 4