யானை – அனோஜன் பாலகிருஷ்ணன் சிறுகதை
ஒரு குழந்தையிடம் கனவுகள் முளைவிடத் தொடங்கும் தருணத்தில் தொடங்கி அவன் மத்திம வயது வருவது வரையான கால கட்டமும் ஈழத்தில் போர் மேகங்கள் சூழ தொடங்கியது முதல் இறுதி போர் வரையிலான காலகட்டமும் பிரமாதமாக முயங்கி வருகிறது இக்கதையில்.சுயந்தன் குழந்தையாய் ,சிறுவனாய் ,வாலிபனாய்,வளர்ந்து வரும் தருணங்களை கதை போக்கிலேயே காட்சிப்படுத்தி இருந்த விதம் அபாரம்.ஒரு குடும்பம் சிதைவதின் குறுக்கு வெட்டு வரலாறு இக்கதை.சுயந்தனின் தமையனோடு கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனோர் மலையகத் தமிழர்கள் என்ற வரி எழுப்பும் கேள்விகள் நிறைய.
ஊடகங்களின் ஈவு இரக்கமற்ற வியாபார வெறி அதிர செய்கிறது.கதை சொல்லியவிதம் படிப்போருக்கு ஒருநிகர் வாழ்வனுபவம்,நானும் ஒரு கதாபாத்திரமாக மாறி போனேன்.வெகு சிலரால் மட்டுமே இதுபோன்று எழுத முடியும்.அறிபவன் ,அறிபடுபொருள், அறிவு போல் வாசகன், கதைசொல்லி ,கதை, என பேதமின்றி ஒரு ஐக்கிய நிலை இயல்பாக கூடியது
ஒரு இள மனதின் கனவுகள் ,கற்பனைகள், ஆசைகள், துள்ளல்கள், நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள், குதூகலம் ,உற்சாகம் இவற்றிற்கெல்லாம் உருவம் கொடுத்தால் யானையைவிட பொருந்தி வருவது வேறு எதுவாகவும் இருக்க இயலாது.நடு வயதிற்கு மேலும் அந்த குட்டி யானையின் பிளிறலை ரசிக்க முடிபவர்கள் ஆயிரத்தில் ஒருவர்தான்.போர்ச் சூழலால், தன் குடும்பம் அழிந்ததற்கு தானே காரணம் என்ற குற்ற உணர்வால் சுயந்தன் இறுகிப் போகிறான், பெரும்பாலானோர் தங்கள் எளிய வாழ்வையே ஒரு போர் போல் சிக்கலாகி தான் வாழ்கின்றனர்.அகத்தில் ஒரு வேள்வி நிகழ்த்தாத யாருக்கும்ஆக்காட்டி விரலை இழந்த வயதான புத்தத் துறவி கூறிய சூத்திரத்தின் பொருள் ஒருபோதும் புரியாது.
இன்றைய எழுத்தாளர்களுக்கு யானையை வர்ணிப்பதும் யானை என்ற உணர்வை வாசகனுக்கு இதுவரை கூறப்படாத சொற்களில் கடத்துவது என்பதும் பெரிய சவால் ஓரிரு வரிகளுக்குள் இக்கதையில் இருள் என்றும் இரண்டு முறை கருமை என்றும் வருகிறது.ராணுவத்தையும் புliகளையும் ஒரு வரி கூட ஆதரித்தோ விமர்சித்தோ தன்னுடைய கருத்தாக எழுதாமை அபாரம்.
எந்த தீவிரமான சிந்தனையும் எனக்கு கீழ்க்கண்ட ஆதார வினாக்களை எழுப்பி விடும்.உண்மையில் மனித வாழ்வென்பது தற்செயல்களின் ஆட்டம் தானா ?இல்லை ஊழின் வழுவாத கோரப்பிடிக்குள் சிக்கிவிட்ட சிறுபறவையா?அறிவும், திறமையும் ,ஆற்றலும்தான், இங்கே அனைத்தையும் முடிவு செய்கிறதா? இவற்றைத் தவிர மற்ற அனைத்தும் தோல்விகளை மறக்க நாம் எழுதிக் கொள்ளும் புனைவுகளா?முதல்முறை சுயந்தன் குடும்பத்தோடு ஆரியகுளம் நாகவிகாரைக்கு சென்ற பொழுதே யானையைப் பார்த்து இருந்தால் தலதா மாளிகைக்கு செல்லவே நேர்ந்திருக்காதோ?காவல் துறைக்கும் ராணுவத்திற்கும் கொடுக்க வேண்டியதை கொடுத்து இருந்தால் தமையன் எப்பொழுதோ விடுதலையாகியிருப்பானோ?இல்லை முன்னதாகவே மேற்கு நாடுகளுக்கு புலம் பெயர்ந்து இருக்கவேண்டுமோ?
உப்புக்குளம் பிள்ளையார் கோவிலுக்கு சென்றாலும், புத்த விகாரைக்குப் சென்றாலும், சுண்டுக்குளி அங்கிலிகன் தேவாலயம் சென்றாலும் சுயந்தன் கண்டுகொள்வது யானையைத்தான். யானையில் இருந்து சுயந்தனுக்கு மீட்பில்லை.
உண்மையில் சுயந்தன் கடைசியில் அடையும் பதட்டம் தனக்கு ஏற்பட்ட இழப்புகளாலோ துயரங்களாலோ அல்ல அந்தக் குட்டி யானையின் மேல் எழுந்த பரிவினால், அந்த குட்டி யானைக்கு வரும் நாட்களில் வாழ்க்கை எவற்றையெல்லாம் தர காத்திருக்கிறதோ என்ற அச்சத்தினால். குட்டி யானையே அவன்தானே…
மு.கதிர்முருகன்
கோவை
யானை கதையை வாசித்தபோது நினைத்துக்கொண்ட ஒன்று உண்டு. பொதுவாக போர்கள், அரசிய இதிலெல்லாம் துன்பமும் அழிவும் அடைபவர்களில் 99 சதவீதம்பேருக்கு எந்த அரசியலும் கிடையாது. போரின் காரணங்களுக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை. இனம் மொழி நாடு என்பதெல்லாம் கூட அவர்களுகு ஒரு தொடர்பும் இல்லை. பேசப்படும் எந்தத்தரப்புடனும் அவர்கள் இல்லை. அரையல்வாதிகள் அவர்களை தங்கள் பீரங்கிப்படையாகவும் பீரங்கித்தீனியாகவும் மாற்றிக்கொள்கிறார்கள். அவர்களை அதற்கேற்ப பிரெயின்வாஷ் செய்துவிடுகிறார்கள். அவர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டவற்றை தாங்களும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
பெரும்பாலும் குழந்தைகள், பெண்கள், ஏழை எளிய அடித்தள மக்கள் ஆகியோர் இந்த வட்டத்திற்குள் வருவார்கள். போர் ஒரு குழந்தையின் வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது. அதன் கனவுகளை அழித்துவிடுகிறது. ஒரு பெண்ணின் எளிமையான வாழ்க்கையைச் சூறையாடிவிடுகிறது. ஆனால் போர் பற்றிப்பேசும் எந்தத்தரப்பிலும் இந்த கூட்டத்தின் குரல் இருக்காது. அங்கெ நம்மளவர், நம் எதிரி, துரோகி ஆகிய மூன்றே தரப்புதான். போரின் அரசியலை இண்டெலிஜெண்ட் ஆக ப்பேசும் எந்த இலக்கியமும் இந்த மக்களின் கதையை, இவர்களின் துக்கத்தைப் பேசிவிடவே முடியாது. ஆகவே அதன் நியாய அநியாயங்கள் பற்றியோ அரசியல் பற்றியோ கட்சியாடும் எவருக்கும் அதை எழுதும் தகுதி இல்லை
ஆகவேதான் உலகம் முழுக்கக் பெரிய கலைஞர்கள் போர் பற்றிப்பேசும்போது திரும்பத்திரும்ப குழந்தைகளைப்பற்றியும் வீட்டுப்பெண்களைப்பற்றியும் எளிய மக்களைப்பற்றியும் பேசுகிறார்கள். இந்த வகையிலே மிகச்சிறந்த படைப்பு என்றால் அது குந்தர் கிராஸின் டின் டிரம் தான். அதிலும்கூட அரசியலை கண்டு எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால் அது இன்னொசென்ஸின் கதை. அரசியலற்ற ஆன்மிகம் ஒன்றின் கதை. டிரம் கொட்டும் குள்ளன் நம் போரிடும் அரசியல்வாதிகளிடம் கொட்டி கொட்டிச் சொல்கிறான். நாங்களும் இங்கே இருக்கிறோம் என்று. எங்களுக்கும் வாழ்க்கை உண்டு என்று
இதைச் சொன்னதுமே ‘அப்படியென்றால் பெண்களுக்கும் எளியவர்களுக்கும் அரசியல் தேவை இல்லை என்றா சொல்கிறாய்’ என்று சண்டைக்கு வருகிறான் பாருங்கள் அவன்தான் இந்தப்போர்களையே உருவாக்கும் அரசியல்வாதி. அவனுக்காகத்தான் அழிவுகளே. அவன் ரெண்டு பக்கமும் இருக்கிறான். அவனுக்கு ஒரு குழந்தையின் நியாயம் புரியவே புரியாது. திரும்பத்திரும்ப அவனுக்குக் கற்பிக்கப்பட்ட அரசியலை மட்டுமே அவன் பேசிக்கொண்டிருப்பான்
இந்தச்சூழலில்தான் அனோஜனின் இந்தக்கதை மிகமிக முக்கியமாகிறது. இதில் அரசியலே கிடையாது. எந்தத்தரப்பும் இல்லை. அதெல்லாம் கதைசொல்லியான சிறுவனுக்குப் புரிவதும் இல்லை. அவன் பேசுவது அவனுடைய கனவைப்பற்றி. அந்த கனவுகள் எப்படி அழிந்தன என்று. அதை மட்டுமே ஓர் எளிய நேர்கோடாகச் சொல்லிச் செல்கிறது இந்தக்கதை. பகடி இல்லை. அரசியல் விவாதங்கள் இல்லை. முடிந்தவரை இன்னொசெண்ட் ஆன கதைசொல்லல். குறியீடு கூட குறியீடாகச் சொல்லப்படவில்லை. ஒரு குழந்தையின் கனவாகவே சொல்லப்படுகிறது. ஆகவே ஒரு கிளாஸிக் கதை
நான் கவனித்தவரை ஈழத்தவரின் மனங்கள் போரால் உருவான பலவகையான கசப்புகளால் நிறைந்திருக்கின்றன. அவர்களுக்கு அவர்களின் தப்புகள் கண்ணுக்குப் படுவதே இல்லை. தங்கள் துன்பங்களுக்கு உலகத்தில் உள்ள அத்தனை பேரையும் குற்றம் சாட்டுவார்கள். தாங்களோ தாங்கள் ஆதரித்த தரப்போ தப்பே செய்யவில்லை என்பார்கள். அரசியல் மட்டும்தான். அதுவும் ரொம்பச்சில்லறையான கட்சி அரசியல். காழ்ப்பு அரசியல். இந்த மாதிரி ஒரு கதை அவர்கள் அனைவரையுமே குற்றம் சாட்டுகிறது. ஆகவே அவர்களால் இந்த இன்னொசெந்ஸை புரிந்துகொள்ள முடியாது. இந்தக்கதை அவர்களுடைய உலகிலேயே இல்லை
நல்லவேளையாக அனோஜன் ஈழத்து சஞ்சிகைகளில் இதை எழுதவில்லை. இணையத்தில் எழுதுகிறார். ஆகவே எல்லாரும் படிக்கிறார்கள். நாம் படிக்கிறோம். நாம் அடையாளம் கண்டுகொள்கிறோம். ஈழத்து அரசியல்காழ்ப்புகளில் இருந்து கடந்து இன்னொரு புதிய தலைமுறை அங்கே உருவாகிறது என்பதற்கான சான்று இந்தக்கதை. ஈழத்து இளைஞர்கள் முதியவர்களின் கடந்தகால அரசியல் காழ்ப்புகளை தாங்களும் கக்கிக்கொண்டிருக்கையில் இந்தக்கதை துணிந்து தன் வழியைக் கண்டுகொள்கிறது. அதுதான் இந்தக்கதையை ஒரு புதிய தொடக்கம் என்று காட்டுகிறது
ஜே. பிரபு