மூன்றாம்பிறை

moondraam-pirai-vaazhvanubavangal_FrontImage_679

மூன்றாம்பிறை மம்மூட்டி சுயசரிதை வாங்க

அன்புள்ள ஜெ சார்,

இன்றைய தினம் ஒரு சிறந்த வாழ்வனுபவப் பதிவுகள் கொண்ட நூலை வாசித்தேன். ரசித்தேன் என்றும் சொல்லலாம். யாரென்று தெரியாத நினைவூட்ட முடியாத முகம் கொண்ட எளிய மனிதனில் மகத்தான தருணங்கள், தரிசனங்கள், திறப்புகள் நிகழ்வது போல் உயர்ந்த இடத்தில்  கோடிக்கணக்கான மனிதர்களின் உள்ளங்களில் பதிந்து சட்டனெ நினைவுகளின் மேலடுக்கில் எளிதில் எழும் முகம் கொண்ட ஒருவருக்குள் எளிமையின் பிரகாசமும் வாழ்வின் தரிசனமும் இந்த அளவு வெளிப்படுமா என வியப்பில் ஆழ்த்துகிறது.

மற்றெல்லா இலக்கிய வாசகனைப் போலவே அவர் சாதாரண நடிகர் தானே என்று மனதில் ஒரு அலட்சியம். என்ன எழுதிவிடப் போகிறார் என்றெண்ணியே அந்த நூலை வாங்கினேன். படிக்கத் துவங்கியதும் ஒரு ரசிக்கத்தக்க கலை படைப்பை திரையில் பார்ப்பது போன்ற ஆர்வம் தொற்றியது. அதன் வீச்சு முழு நூலையும் ஒரே மூச்சில் வாசித்துவிட வைத்தது.

ஒவ்வொரு கட்டுரையின் முடிவும் நின்று திரும்பும் அலையென துவக்கத்தை சென்று தொட்டு மீண்டும் மீண்டும் மனதில் எழுச்சி பெறச் செய்யும் சிறுகதை போல் உள்ளது. நடிகன் என்பவன் ஆளப்பிறந்தவன் ஆழிப் பேரலையால் அழிக்க முடியாதவன் அவன் அடிச்சுவடை பின்பற்றி கடைத்தேற்றம் கொள்வதே சிறந்த வழி என்றும் சினிமாவன்றி வேறேதும் அறியாத,  சினிமாவிலிருந்து மட்டுமே வாழ்வியலை வரித்துக் கொள்ளும்  தமிழர்களுக்கு, சினிமாவுக்கு வெளியே வாழ்வின் ஒவ்வொரு கணமும் தரிசனமும் தத்துவ விசாரணையும் கொண்டதாகப் பார்க்கும் ஒரு நடிகரை வாசிக்கும் போது எழும் வியப்பும் மகிழ்வும் விவரிக்க முடியாதவை.

ராணுவ ஜவான்களின் வாழ்வுக்கும் மரணத்திற்குமான இடைவெளி ஒரு வெடிகுண்டின் அளவுதான் என்ற வரி ஒன்று போதும்.வேகமாக ஓட்டிச் செல்லும் காரை மறித்த முதியவரின் பேத்தியை பிரசவத்துக்கு கொண்டு சென்று மருத்துவமனையில் இறக்கிவிட்ட பின் தன்னை யாரென்று கூட அறியாத முதியவர் அளித்த 2 ரூபாய் கசங்கிய நோட்டில்  தெரியும் அன்பில் நெகிழ்கிறார். முதன் முதலில் தன்னை சினிமாவில் நடிக்கலாமே என்று கூறியவன் பல வருடங்களுக்குப் பின் ஒரு படப்பிடிப்பில் ஏற்பட்ட நிஜ கலவரத்தில் ரத்தம் தோய்ந்த முகத்துடன் எதிர்ப்பட்டு நினைவூட்டும் போது அவனை விட்டு வெகு தொலைவில் வந்துவிட்டதை உணர்ந்து அதிர்கிறார். காலத்தில் பின் செல்லும் வழி இல்லையே.

எளிய குடிசைக் கடைக்குள் சென்று கிழங்கு உண்கிறார். எங்கங்கு என்ன பாரம்பரிய உணவு கிடைக்கும் என்கிறார். ஓட்டு கேட்கவும் படம் ஓட வைக்கவும் ரசிகர்களிடம் வரும் நடிகர்களையே பார்த்து பழகிய மனதிற்கு இவர் புதியவர். படப்பிடிப்பு நடக்கும் வீட்டின் உரிமையாளர் மகன் என்பது தெரியாமல் வெளியே விரட்டிய பின்னும் அவன் தன் புன்னகையால் தன்னை மன்னித்ததை எண்ணி தன் தவறை உணர்கிறார். அடுத்த நொடியின் ஈரத்தை மனதில் பாதுகாத்து வைத்திருக்கச் சொல்லும் ஒரு நடிகரின் உள்ளம் தமிழ் மனங்களுக்குப் புதிது.

தமிழில் தான் எழுதியுள்ளாரோ என ரசிக்க வைக்கும் மொழிபெயர்ப்பு. தனது வாழ்வினூடே சந்தித்த மாறாத் தருணங்களை தனது கவித்துவம் கொண்ட தீரா மொழியில் எழுதியுள்ள மம்முட்டி ஒரு நல்ல நடிகர் மட்டுமல்ல சிறந்த எழுத்தாளரும் தான்.

ரகுநாதன்

நூல்: மூன்றாம் பிறை (வாழ்வனுபவங்கள்)- மம்மூட்டி.

தமிழில்: கே.வி.ஷைலஜா.

***

முந்தைய கட்டுரைதமிழகத்தில் லகுலீச பாசுபதம் – கடிதம்
அடுத்த கட்டுரைஇரவு – திறனாய்வு